தமிழ் மலர் - 12.02.2021
உலகின் முதலாவது மூத்தக் குடிமக்கள் என்று எவரும் இல்லை. இரண்டாவது மூத்தக் குடிமக்கள் என்று எவரும் இல்லை. மூன்றாவது மூத்தக் குடிமக்கள் என்று எவரும் இல்லை. ஒரே ஒரு மனித இனம் தான் ஒரே ஒரு சமயத்தில் தோன்றி இருக்கிறது.
அதுவும் குரங்கில் இருந்து தான் தோன்றி இருக்கிறது. அதுவும் ஆப்பிரிக்கா நாடான கென்யாவின் ரிப்ட் பள்ளத்தாக்கில் தோன்றி இருக்கிறது.
அந்த இனம் அங்கிருந்து புறப்பட்டு உலகம் பூராவும் பரவி இருக்கிறது. அப்படிப் பரவிச் செல்லும் போது எந்த எந்த இடங்களில் அந்த மூத்தக் குடிமக்கள் தங்கினார்களோ அங்கே அவர்களின் வாழ்வியல் தடங்களை விட்டுச் சென்று உள்ளார்கள்.
அவர்களின் உடல் எலும்புத் தடங்களை விட்டுச் சென்று உள்ளார்கள். அவர்களின் கலைக் கலாசாரத் தடயங்களையும் விட்டுச் சென்று உள்ளார்கள். ஒரு செருகல்.
வரலாற்றை ஆழமாகப் படிக்க வேண்டும். அறிஞர்களின் ஆய்வுகளை ஆழ்ந்துப் படிக்க வேண்டும். அவர்களின் கள ஆய்வுகளைப் பற்றி நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும். அப்புறம் தான் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லித் தர வேண்டும்.
எங்கள் இனம் தான் உலகில் இரண்டாவது மூத்த இனம் என்று சொல்வதற்கு முன்னால் மனிதவியல் வரலாற்றை ஆழமாகத் தெரிந்து வைத்து இருக்க வேண்டும். இனத்தின் மீது உள்ள அதீத அன்பினால்; அதீதப் பற்றினால் தவறான கருத்துகளைப் புகுத்தி விடக் கூடாது.
மற்ற இனத்தவர்கள் முகம் சுழிக்கிற மாதிரி நடந்து கொள்ளவும் கூடாது. இனப்பற்று வேண்டும் தான். அதற்காக வரலாற்றுப் பிறழ்வுகள் ஏற்பட்டு விடக் கூடாது.
நுனிப் புல்லை மேய்ந்து விட்டு அதே நுனிப் புல்லில் கயிறு திரித்து நூறு கதைகள் சொல்லும் மனிதர்கள் வாழும் காலத்தில் நாமும் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.
காடுகளிலும்; குகைகளிலும்; மரக் கிளைகளிலும்; வாழ்ந்து வந்த மனித இனத்தின் கடந்த காலப் பாதை உண்மையிலேயே அதிசயமானது. அற்புதமானது. வியக்கத் தக்கது.
ஒரு காலக் கட்டத்தில் மனிதன், குரங்குகள், ஓராங் ஊத்தான், கொரிலாக்கள் எல்லாமே ஆஸ்திராலோபித்தகஸ் (Australopithecus) எனும் ஒரே வகை பூர்வாங்க மனித இனமாகத்தான் இருந்தன.
60 லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாலில்லாக் குரங்கு இனம் தோன்றி உள்ளது. அந்த இனத்தில் இருந்து ‘ஹோமோ’ எனும் ஒரு துணை இனமாக ஓர் இனம் பிரிந்தது. அதில் இருந்துதான் இன்றைய மனித இனம் பரிணமித்தது. 30 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த கதை.
அப்போது தோன்றிய மனித இனம் வாலில்லாக் குரங்கு இனத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. அந்தக் காலகட்டத்தில் பூமியில் ஆறு விதமான மனித இனங்கள் தோன்றின. அவை எல்லாமே இன்றைய மனிதர்களுடன் பல வகைகளில் ஒற்றுப் படுகின்றன.
ஆனாலும் அந்த இனங்களுக்குள் உருவத்திலும் மதிநுட்பத்திலும் வேறுபாடுகள் இருந்தன. அந்த இனங்களில் ‘நிமிர்நிலை’ (Homo Erectus) மனித இனம் மட்டுமே இன்று வரை 20 லட்சம் ஆண்டுகளாகத் தப்பிப் பிழைத்து இருக்கிறது.
மற்ற மனித இனங்கள் யாவும் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் முற்றாக அழிந்து விட்டன. அவை ஏன் அழிந்தன; என்ன காரணம் என்பதை இன்று வரை உறுதியாகச் சொல்ல முடியவில்லை. இதற்கும் காரணங்களைச் சொல்கிறார்கள்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த மனிதவியல் ஆய்வாளர் கே.என்.ராமசந்திரன், இந்து தமிழ்த் திசை எனும் இணையத் தளத்தில் இப்படிச் சொல்கிறார். அவருடைய கருத்தைப் பதிவு செய்கிறேன்.
பூமியின் கால நிலையிலும் மேற்பரப்பிலும் ஏற்பட்ட மாற்றங்கள்; சூழ்நிலைகளைத் தாக்குப் பிடிக்க முடியாமல், மனித இனங்கள் அழிந்து இருக்கலாம்.
அல்லது மனித இனங்கள் தங்களுக்குள் சண்டை போட்டு அழிந்து இருக்கலாம். அந்தக் காலத்தில் குழுச் சண்டைகள் அதிகம். நூற்றுக் கணக்கான மனிதர்கள் மட்டுமே பங்கு கொண்ட சண்டைகள். அமெரிக்கா சிவப்பு இந்தியர்களிடம் இத்தகைய குழுச் சண்டைகள் அமெரிக்க வரலாறு முழுமைக்கும் பரவி நின்றன.
ஆண், பெண், குழந்தைகள் என்று எல்லாருமே குழுச் சண்டைகளில் ஈடுபட்டு இருக்கிறார்கள். வெற்றி பெற்ற குழுவினர் தோற்ற குழுவில் இருந்த ஆண்கள் எல்லாரையும் கொன்று விடுவார்கள். பெண்களையும் குழந்தைகளையும் மட்டும் தங்களுடன் கொண்டு சென்று விடுவார்கள்.
அதனால் அந்தக் காலக் கட்டங்களில் ஆண்களின் எண்ணிக்கை குறைவாக இருந்து உள்ளது. ஓர் ஆணுக்குப் பல பெண்கள் மனைவிகளாய் இருந்து உள்ளார்கள். அத்துடன் இனக் கலப்பும் பரவலாக ஏற்பட்டு இருக்கலாம். சரி.
60 லட்சம் ஆண்டுகளுக்கு முன் கண்டங்கள் பிரிந்தன. மனித இனங்களும் பிரிந்தன. இதில் ஹோமோ எரெக்டஸ் (Homo Erectus) எனும் ஓராங் ஊத்தான் இனம் மட்டும் தனித்துப் போனது.
மிக அண்மையில் அதாவது இரண்டு இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் தான் ஹோமோ செப்பியன்ஸ் (Homo Sapiens) எனும் மதிநிறை மனித இனம் தனித்துப் போனது. அதில் இருந்த கொரிலாக்களும் குரங்குகளும் தனித்துப் போயின.
60 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் மனிதனும் சரி; போர்னியோ ஓராங் ஊத்தான் சகலபாடியும் சரி; ஒரே இனமாகத்தான் இருந்தன. பிரிந்து செல்லும் கட்டத்தில் மனிதன் ஆப்பிரிக்காவைப் புகலிடமாகக் கொண்டான். அப்போது அவன் மனித உருவத்தைக் பெற்று இருக்கவில்லை. நினைவு படுத்துகிறேன். குரங்கு நிலையில்தான் இருந்தான்.
இந்த மூலக் குரங்கு இனத்தில் தப்பித்த ஒரு பகுதி குரங்குகள் மறுபடியும் ஆப்பிரிக்காவை நோக்கி நகர்ந்தன. அதில் ஒரு பகுதி குரங்குகள் ஆஸ்திரேலியாவிலேயே அடைக்கலம் அடைந்தன.
அவற்றில் சில போர்னியோவை நோக்கி நகர்ந்தன. வேறு சில குரங்குகள் இந்தியா, ஐரோப்பாவை நோக்கி நகர்ந்தன. கடைசி கடைசியாகச் சில குரங்குகள் சீனாவை நோக்கி நகர்ந்தன. சீனாவுக்குப் போன குரங்குகளின் வாரிசுகள் எவையும் இப்போது இல்லை. ஏதோ ஒரு காரணத்தினால் எல்லாமே அழிந்து விட்டன.
இருந்தாலும் ஆஸ்திரேலியாவில் இருந்த குரங்கு இனம் ஆஸ்திராலோபித்தகஸ் (Australopithecus) மட்டும் தப்பித்துக் கொண்டது. 30 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தது. இவை மீண்டும் ஆப்பிரிக்காவிற்கு வந்து இருக்கின்றன.
ஆப்பிரிக்காவிற்குத் திரும்பிய அந்த ஆஸ்திராலோபித்தகஸ் குரங்கு இனம்தான் இப்போதைய மனித இனத்தின் ஜீவநாடி. இந்த இனம் பல்வேறு உடல் மாற்றங்களைப் பெற்று முழுமையான மனிதச் சாயலைப் பெற்று உள்ளது.
பின்னர் இந்த குரங்கினம் ஆசியா, ஐரோப்பா கண்டங்களுக்குத் தொகுதி தொகுதிகளாகப் பிரிந்து சென்றது. பின்னர் உலகம் முழுமையும் பரவிச் சென்றது. இது ஓர் இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தது. இதன் கடைசிக் கட்டத்தில் தான் மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிந்தன.
1. நீக்ராய்டுகள் (Negroids) எனும் ஆப்பிரிக்க மனிதர்கள்.
2. காகசாய்டுகள் (Caucasoids) எனும் ஆசிய ஐரோப்பிய மனிதர்கள்.
3. மங்கோலாய்டுகள் (Mongoloids) எனும் மங்கோலிய மனிதர்கள்.
சார்ல்ஸ் டார்வீன் எனும் அறிஞர் தியரி ஆப் இவலுஷன் (Theory of Evolution) என்கிற பரிணாமக் கொள்கையை உருவாக்கினார். இதற்கு மேலும் என்னால் சுருக்கிச் சொல்ல முடியவில்லை.
இந்தியாவில் சிவாலிக் குன்றுகள் உள்ளன. அங்கு பதினான்கு மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதனின் தாடை எலும்புகள் கிடைத்து உள்ளன. அதே போல வடமேற்கு கென்யா நாட்டிலும் கிடைத்து உள்ளன.
ஜாவா தீவில் உள்ள சோலோ (Solo) நதிக் கரையில் சுமார் 4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனித இனத்தின் சான்றுகள் கிடைத்து உள்ளன.
ஏறக்குறைய மூன்று மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ருடால்ப் மனிதன் (Rudolph man) என்பவன் ஆப்பிரிக்காவில் வாழ்ந்ததாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆப்பிரிக்காவின் டிரான்ஸ்வால் (Transval) நாட்டில் கற்களால் ஆன ஆயுதங்களைப் பயன்படுத்திய மனித இனத்தின் சான்றுகள் கிடைத்து உள்ளன.
இந்தோனேசியா ஜாவா தீவில் நன்கு நிமிர்ந்து நடந்த ஹோமோ எரெக்டஸ் (Homoerectus) எனும் மனித இனச் சான்றுகள் கிடைத்து உள்ளன.
ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, பெல்ஜியம் ஆகிய நாடுகளில் நியான்டர்தால் (Neanderthal) மனிதனின் பழுதடைந்த உடல் பாகங்கள் கிடைத்து உள்ளன.
அந்த வகையில் நியான்டர்தால் மனித இனம் குகைகளில் வாழ்ந்து உள்ளது. தோல் ஆடைகளை உடுத்தி உள்ளது. நெருப்பு மூட்டிச் சமைக்கத் தெரிந்து இருக்கிறது.
நியான்டர்தால் மனித இனம் அழிந்த பின் தோன்றிய இனம் தான் இன்றைய மனிதனின் மூதாதையர்கள். இவர்களை குரோமன்யான் மனிதன் என்று அழைக்கிறார்கள்.
கல்லால் செய்யப்பட்ட கருவிகளைப் பயன்படுத்திய குரோமன்யான் மனிதன் தான் கற்கால மனிதன் ஆவான். வேட்டையாடக் கற்றுக் கொண்டவன்.
குரோமன்யான் மனிதனுக்குப் பின் தோன்றியவனே புதிய கற்கால (Neolithic) மனிதன். மனித நாகரிகத்தின் தொடக்கம் எனக் கருதப் படுகிறவன்.
ஐரோப்பாவில் செக்கோஸ்லேவாகியா நாடு. அங்கே லார்ச் எனும் நகரம். இந்த நகருக்கு அருகில் உள்ள ஒரு குகையில் 35,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த இன்றைய மனிதத் தோற்றத்தைக் கொண்ட மனித எலும்புக் கூட்டைக் கண்டு எடுத்து இருக்கிறார்கள்.
ஆக இதில் இருந்து நாம் ஒரு முடிவிற்கு வரலாம். ஏறக்குறைய 40,000 ஆண்டுகளுக்கு முன் முழுமையான நாகரிகம் அடைந்த மனிதன் பூமியில் தோன்றி வாழ்ந்து இருக்கிறான் எனும் முடிவு. மறுபடியும் சொல்கிறேன். 40,000 ஆண்டுகள்.
உண்மை இப்படி இருக்கும் போது உலகின் இரண்டாவது மூத்த இனம் 72,000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகத் தோன்றியதாகச் சொல்லுவது எல்லாம் சுத்தமான அபத்தம். கேப்பையில் நெய் வடிகிற கப்சா கதையில் சிக்கிக் கொள்ள வேண்டாம்.
சார்ல்ஸ் டார்வீன் எனும் அறிஞர் தியரி ஆப் இவலுஷன் (Theory of Evolution) என்கிற பரிணாமக் கொள்கையை உருவாக்கினார். ஆனால் மூத்த இனம் இரண்டாவது இனம் என்று எதையும் சொல்லவில்லை. அவர் அசல் ஆய்வாளர்.
ஏறக்குறைய 40,000 ஆண்டுகளுக்கு முன்னர் தான் முழுமையான நாகரிகம் அடைந்த மனிதன் பூமியில் தோன்றி வாழ்ந்து இருக்கிறான் என்று உலகில் உள்ள எல்லா மனிதவியல் அறிஞர்களும் ஏற்றுக் கொள்கின்றனர்.
உங்களால் ஏற்றுக் கொள்ள முடிகிறதா. இல்லை என்றால் பரவாயில்லை. புதிதாக ஒரு கொள்கையை உருவாக்குங்கள். மற்றவர்கள் ஏற்றுக் கொள்கிறார்களோ இல்லையோ பிரச்னையே இல்லை.
அதற்கு உலகின் மூன்றாவது குடி இனம் என்று பெயரை வைத்துக் கொள்ளுங்கள். வீடியோ தயாரித்து பார்ப்பவர்கள் எல்லோரும் இளிச்சவாயர்கள் என்று நினைத்துக் கொண்டு கப்சா விடுங்கள். காசா பணமா. அள்ளி விடுங்கள்.
உருப்படியாக ஆங்கிலத்தில் ஒரு வரி எழுதத் தெரியாத சங்கி மங்கிகள் எல்லாம் முனைவர்கள் பேராசிரியர்கள். சில நூறு வெள்ளிக்கு டாக்டர் பட்டங்களை வாங்கிப் போட்டுக் கொண்டு ஊர்க்கோலம் போகின்றார்கள். எங்க இனம் ஒசத்தி உங்க இனம் பிறத்தி என்று கப்சா விட்டுக் கொண்டு கல்லா கட்டி அழகு பார்க்கின்றார்கள்.
சில இடங்களில் நூறு வெள்ளிக்கு டாக்டர் பட்டம் தயாரித்துக் கொடுக்கிறார்கள். ஆயிரம் வெள்ளி கொடுத்தால் போதும். பத்து பேரை அழைத்து ஒரு விருந்து வைத்து உங்களுக்கும் ஒரு கௌரவ டாக்டர் பட்டம் கொடுத்து விடுவார்கள். நீங்களும் விசிட்டிங் கார்ட் அடித்து பேரானந்தம் அடையலாம். அட்ரஸ் வேண்டும் என்றால் சொல்லுங்கள். இலவசம்.
இனவாதம், மதவாதம் என்கிற பேராண்மைகளின் வெறித்தனங்கள் மேலோங்கி இல்லாத ஆட்டங்கள் ஆடுகின்றன. அதற்கு அரைகுறை அரை வேக்காடுகள் எங்க இனம்தான் உலகத்திலேயே ஒசத்தியான இனம் என்று பக்க வாத்தியம் வாசிக்கின்றன.
என்ன நடக்கிறது என்று தெரியாமல் இளையச் சமுதாயத்தினர் இலக்குத் தெரியாமல் தவிக்கின்றனர். அரைகுறைக் குடுக்கைகளின் அரை வேக்காட்டு அறிவினால் எதிர்காலத்து அறிவார்ந்த சிந்தனைகள் மங்கி மழுங்கிப் போகின்றன.
(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
12.02.2021
சான்றுகள்:
1. http://en.wikipedia.org/wiki/Race_and_genetics
2. http://www.britannica.com/EBchecked/topic/44115/Australopithecus
3. Boyd, Robert; Silk, Joan B. (2003). How Humans Evolved (3rd ed.). New York: W.W. Norton & Company.
4. Johanson, Donald; Edey, Maitland (1981). Lucy, the Beginnings of Humankind. St Albans: Granada.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக