31 ஆகஸ்ட் 2021

மெர்டேகா 2021 நினைவலைகள் - கிள்ளான் தமிழர்கள் (1940)

தமிழ் மலர் - 31.08.2021

இனம், மொழி, சமயம், சடங்கு, சம்பிரதாயம் எதையும் பார்க்காமல் மக்களுக்காகப் போராடியத் தமிழர்கள் அப்போது இருந்தார்கள். இப்போதும் இருக்கிறார்கள். இல்லை என்று சொல்லவில்லை. ஒரு சின்னத் திருத்தம்.

அப்போது இருந்தவர்கள் நாட்டு மக்களுக்காக உழைத்தார்கள். இப்போது உள்ளவர்களில் சிலரும் பலரும் வீட்டுக் கடன்களுக்காக உழைக்கிறார்கள். மன்னிக்கவும்.


பெரிய வேறுபாடு ஒன்றும் இல்லை. இரண்டுமே சேவை மனப்பான்மைதான். ஒன்று நாட்டு மக்கள். இன்னொன்று மனைவி மக்கள்.

ஆக நாட்டைப் பார்ப்பவன் வீட்டைப் பார்ப்பது இல்லை. வீட்டைப் பார்ப்பவன் நாட்டைப் பார்ப்பது  இல்லை. சிலருக்கு வருத்தம் ஏற்படலாம். கவலை இல்லை. எரிமலைகள் நேரம் காலம் பார்த்துச் சீறுவது இல்லை.

விசயத்திற்கு வருகிறேன். அப்போது நல்ல நல்ல மனிதர்கள் வாழ்ந்தார்கள். நம்முடைய நெஞ்சங்களில் இப்போதும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

அவர்கள் எல்லாம் மனித உரிமைகளுக்காகத் தங்களின் உயிர்களைத் தியாகம் செய்தவர்கள். சுருங்கச் சொன்னால் அவதாரப் புருசர்கள்.

அப்படிப்பட்ட மனிதர்கள் சிலர் வரலாற்றில் இருந்து மறைந்து விட்டார்கள். ஒரு சிலர் அரசியல் சுயநலவாதிகளால் மறைக்கப்பட்டு விட்டார்கள். அதனால் இப்போதைய இளைஞர்களும் அவர்களை மறந்தும் விட்டார்கள். 


ஆனாலும் அவர்களை மறக்கலாமா. சொல்லுங்கள். அவர்களை நாம் மறக்கக் கூடாது. மறக்கவே கூடாது. அவர்களைப் பற்றிய சாசனங்களை வருங்காலச் சந்ததியினருக்காக விட்டுச் செல்ல வேண்டும். பெரிய புண்ணியம்.

ஆகஸ்டு 31-ஆம் தேதி. மலேசிய நாட்டின் விடுதலை நாள். மலேசிய மக்களின் நினைவு நாள். அந்த நாளில் மறக்கப்பட்ட மலாயாத் தமிழர்களை நினைவு கூருவோம். அதுவே அவர்களுக்கு நாம் செய்யும் நினைவார்ந்த கடமையாக நினைத்துப் பெருமை கொள்வோம்.

நமக்கு தெரிந்த சுதந்திரம் எது என்றால், அது நம்முடைய மலேசியத் தந்தை துங்கு. அடுத்து நம் மலேசியத் தமிழர்களின் தந்தை துன் சம்பந்தன். மெர்டேகா என்று சொன்னதுமே இவர்கள் இருவர் மட்டுமே நமக்கு நன்றாகத் தெரிகின்றார்கள்.

ஆனால் இவர்களுக்கு முன்னதாகவே மலாயாவில் பிரிட்டிஷ் காலனித்துவத்தை எதிர்த்தவர்கள் இருக்கிறார்கள். போராட்டங்கள் செய்தவர்கள் இருக்கிறார்கள்.


மோட் கூலாவ், தோக்கோ அங்கூட் போன்றவர்கள்; ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடியவர்கள். வெற்றிப் பெற்றார்களா இல்லையா என்பதைப் பற்றி கடந்த காலம் பதில் சொல்லும்.

ஆனால் அவர்களுடைய பெயர்கள் இன்றும் வெளிச்சமாய் பிரகாசிக்கின்றன. வரலாற்று ஏடுகளில் புகழராம் செய்யப் படுகிறார்கள். வாழ்த்துவோம்.

அதே சமயத்தில் மறக்கப்பட்ட தமிழர்கள் பலர் உள்ளனர். கூலிக்கு மாரடிக்கும் கம்பத்து மீன்களையும் வாழ வைக்க தங்களையே அர்ப்பணித்தவர்களை மறக்கலாமா?

ஒரு பட்டியலைத் தருகிறேன். இவர்களில் எத்தனைப் பேர் உங்களுக்குத் தெரியும். நினைவு படுத்திப் பாருங்கள்.

மலாக்கா ராஜா முதலியார்,
தம்புசாமி பிள்ளை,
தம்பிப் பிள்ளை,
காசிப்பிள்ளை,
டாக்டர் லட்சுமியா,
சிபில் கார்த்திகேசு,
பாஸ்தியான் பிள்ளை,
பி.சி. சேகர்,
மேரி சாந்தி தைரியம்,
பி.கே.எம்.மேனன்,
சுவாமி சத்தியானந்தா,
க. குருபாதம்,
ஜும்மாபாய்,
அப்புராமன்,
ஜானகி ஆதிநாகப்பன்,
ஜான் திவி,
தேவாசர்,
தேவகி கிருஷ்ணன்,
சத்யாவதி நாயுடு,
ஆர். ரமணி,
டான்ஸ்ரீ கே. ஆர். சோமசுந்தரம்,
ராசம்மா பூபாலன்,
பரம் குமாரசாமி,
அன்னை மங்களம்,
மகாதேவ் சங்கர்,
கா. அண்ணாமலை,
தனபாலசிங்கம்,
மணி ஜெகதீசன்,
ராஜாமணி,
ராம ஐயர்,
கெங்காதரன் நாயர்,
ஜி. சூசை,
புஷ்பா நாராயணன்,
கே.எஸ். மணியம்,
சங்கீதா கிருஷ்ணசாமி,
முத்தம்மாள் பழனிச்சாமி,
முர்பி பாக்கியம்,
பிரியா விஷ்வலிங்கம்,
ராணி மாணிக்கா,
மணியம் மூர்த்தி,
மோகன்தாஸ்,
மகேந்திரன்,
ஜோசப் ஹரிதாஸ் தம்பு,
டேவிட் ஆறுமுகம்,
அந்தோனி செல்வநாயம்.

பட்டியல் இன்னும் தொடர்கிறது. தொடர்ந்தால் ஏடும் கொள்ளாது. வீடும் கொள்ளாது.

அந்த வகையில் மலாயாத் தொழிலாளர்களின் நலன்களுக்காகப் போராடி உயிர்விட்ட இரு தமிழர்கள் இருக்கிறார்கள். இருவருமே நம் மனதை விட்டு நீங்காத வரலாற்றுக் காவியங்கள்.

ஒருவர் மலாயா கணபதி. இன்னொருவர் வீரசேனன். இவர்களுடைய பெயர்கள் விளங்க வேண்டும். வெளிச்சத்திற்கு வர வேண்டும். அதுதான் நம்முடைய ஆசை ஆதங்கம் எல்லாமே.

தொழிலாளர்ச் சமூகம் வஞ்சிக்கப் படக்கூடாது என்பதுதான் மலாயா கணபதி - வீரசேனன் இருவரின் தலையாய நோக்கமாக இருந்தது. அதற்காக அவர்களுக்கு கிடைத்த பரிசு என்ன தெரியுமா.

ஒருவருக்குத் தூக்குக் கயிறு. மற்றவருக்குத் துப்பாக்கிக் குண்டுகள். இந்தக் கட்டுரையில் மலாயா கணபதி அவர்களை அறிமுகம் செய்கிறேன். இவர்களுடன் போராடிய கிள்ளான் தமிழர்களையும் நினைவில் கொள்வோம்.

மலாயா கணபதி என்பவர் மலாயா கண்டெடுத்த மாபெரும் புரட்சித் தலைவர்களில் ஒருவர். வரலாற்றுச் சுவடுகளில் மறைந்தும் மறையாமல் வாழ்ந்து வரும் ஒரு மாமனிதர்.

அன்றைய மலாயாவில் துகில் உரியப்பட்ட தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் போராடியவர். மூன்று இனங்களுக்காக இரத்தம் சிந்திய ஒரு சமூக நீதியாளர். நல்ல ஒரு சமூகச் சிந்தனையாளர்.

இந்திய தேசிய இராணுவத்தில் துப்பாக்கிகளைத் தூக்கியவர். ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு எதிர்த்துப் போராட்டம் செய்தவர். முப்பது வயதிலேயே தூக்குமேடையை எட்டிப் பார்த்தவர். அவர்தான் எஸ். ஏ. கணபதி என்கிற மலாயா கணபதி. இன்றைய இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு வரலாற்றுச் சகாப்தம்.

தமிழ்நாடு, தஞ்சாவூர், தம்பிக்கோட்டை கிராமத்தில் 1912-ஆம் ஆண்டு பிறந்தவர். தந்தையாரின் பெயர் ஆறுமுகம். தாயாரின் பெயர் வைரம்மாள்.

கணபதிக்குப் பத்து வயதாக இருக்கும் போது சிங்கப்பூருக்கு வந்தார். தொடக்கக் கல்வியைச் சிங்கப்பூரில் பெற்றார். இளம் வயதிலேயே சமூகச் சேவைகளில் தீவிரமாக  ஈடுபாடு காட்டினார்.

ஜப்பானியர் காலம். இந்திய தேசிய விடுதலைக்காக நேதாஜி மலாயாவுக்கு வந்தார். இந்தியத் தேசிய இராணுவத்தை அமைத்தார். அப்போது சிங்கப்பூரில் ஆசாத் ஹிந்த் சர்க்கார் எனும் தற்காலிகச் சுதந்திர அரசாங்கம் அமைக்கப் பட்டது.

அந்த அரசாங்கத்தை இந்தியத் தேசிய இராணுவத்தினர் நடத்தி வந்தனர். அதில் கணபதி ஒரு பயிற்றுநராகச் சேவை செய்தார்.

இந்தச் சமயத்தில் தாப்பா, கம்பார் பகுதிகளில் ஆர்.ஜி.பாலன் என்பவர் பொதுவுடைமைக் கொள்கையின் தீவிரமான ஆதரவாளர். 1948 மே மாதம் 30-ஆம் தேதி பிடிபட்டு ஈப்போ சிறையில் அடைக்கப் பட்டார்.

சிறையில் இருக்கும் போதே மலாயா கம்யூனிஸ்டுக் கட்சி அவரைக் கட்சியின் துணைத் தலைவராகத் தேர்வு செய்தது. இது பலருக்குத் தெரியாத உண்மை. அப்போது சின் பெங் தலைமைச் செயலாளராக இருந்தார். சி.டி.அப்துல்லா என்பவர் மலாய்ச் சமூகப் பிரிவின் தலைவராக இருந்தார்.

மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் ஆகப் பெரிய பதவியை வகித்த ஒரே தமிழர் ஆர்.ஜி.பாலன் அவர்களே. கணபதி இரண்டாம் நிலையில் இருந்தார்.

மலாயா கம்யூனிஸ்டுக் கட்சியின் இந்தியப் பிரிவில் மேலும் இருவர் இருந்தனர். ஒருவர் சி.வி.குப்புசாமி. இவர் மலாயா கம்யூனிஸ்டுக் கட்சியின் தகவல் பிரசாரப் பிரிவுத் தலைவர். இன்னொருவர் குரு தேவன். இவர் கம்யூனிஸ்டுக் கட்சியின் இரகசியப் புலனாய்வுத் துறையின் தலைவர்.

மலாயாத் தொழிற்சங்கங்களின் பின்புலத்தைக் கொஞ்சம் பார்ப்பது நல்லது என்று நினைக்கிறேன். 1900-களில் மலாயா ரப்பர் தோட்டங்களில் வேலை செய்து வந்த தொழிலாளர்களில் 92 விழுக்காட்டினர் தென் இந்தியாவில் இருந்து வந்தவர்கள்.

தமிழர்கள், தெலுங்கர்கள், மலையாளிகள், மலபாரிகள் எல்லாம் ஒரே கப்பலில் வந்தவர்கள் தான். மச்சான் மாப்பிளே என்று ஒரே பாயில் படுத்துப் புரண்டவர்கள் தான்.

பினாங்கு புறமலையில் கரும்பை வெட்டி ஜுஸ் செய்து குடித்தவர்கள் தான். ரசுலா கப்பலில் ரசகுல்லா சாப்பிட்டவர்கள் தான். அவர்களில் சிலர் தோட்டத்து டஸ்மாக் கடைகளில் காஞ்சிப் போன கருவாட்டைச் சுட்டுத் தின்றவர்கள் தான்.

ஆனால் இப்போது என்ன. நான் உளுந்து நீ உளுத்தம் பருப்பு என்று சமூக வேறுபாடுகலுக்குச் சாயம் பூசிச் சந்தோஷப் படுகிறார்கள். என்ன செய்வது. காலம் செய்கிற கொடுமை. வேதனையாக இருக்கிறது. சரி.

அந்தக் கட்டத்தில் மலாயா கம்யூனிஸ்டுக் கட்சி தீவிரமாகச் செயல்பட்டு வந்தது. அந்தக் கட்சி “முன்னணி” எனும் தமிழ்த் தாளிகையை வெளியிட்டு வந்தது.

அதன் ஆசிரியராகவும் மலாயா கணபதி பணி புரிந்தார். இந்தச் சமயத்தில்தான் அகில மலாயா பொதுத் தொழிலாளர் சங்கத்தின் தலைவராக மலாயா கணபதி தேர்ந்தெடுக்கப் பட்டார்.

இந்தியப் பிரதமர் நேருவின் தலைமையில் ஆசிய நட்புறவு மாநாடு புதுடில்லியில் நடைபெற்றது. மலாயாப் பேராளர்களில் ஒருவராக மலாயா கணபதி கலந்து கொண்டார். அதன் பின்னர் 1948-ஆம் ஆண்டு மலாயா விடுதலைப் படையிலும் இணைந்தார்.

மலாயாத் தொழிலாளர்களின் உரிமைகள்; மலாயா மக்களுக்கு விடுதலை; இந்த இரண்டு விசயங்களுக்காகத் தான் அகில மலாயா தொழிற்சங்கச் சம்மேளனம் பெரும் போராட்டங்களை நடத்தியது. அப்போது மலாயா கணபதி அந்தச் சம்மேளனத்தின் தலைவராக இருந்தார்.

1928-ஆம் ஆண்டு முதல் 1937-ஆம் ஆண்டு வரை ரப்பர் தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக 50 காசு தரப் பட்டது. பின்னர் அந்தச் சம்பளம் 40 காசாகக் குறைக்கப் பட்டது. பிரச்னைகள் ஏற்பட்டன. அதனால் பழைய 50 காசு சம்பளத்தைக் கொடுக்க தோட்ட நிர்வாகங்கள் ஒப்புக் கொண்டன.

சீனத் தொழிலாளர்களுக்கு மட்டும் நாள் சம்பளமாக 60 காசில் இருந்து 70 காசு. அந்த வகையில் சீனர்களுக்கும் இந்தியர்களுக்கும் சம்பளத்தில் பாரபட்சம். இந்தியர்களுக்கு 40 காசு சம்பளம் என்றால் சீனர்களுக்கு 60 காசு சம்பளம். ஆனாலும் ஒரே மாதிரியான வேலை.

மஞ்சத் தோல் ஒசத்தியா. கறுப்புத் தோல் ஒசத்தியா. பருப்பு கலரும் மஞ்சள். சாம்பார் கலரும் மஞ்சள். அப்புறம் என்ன. பருப்பா? சாம்பாரா? போராட்டம் தொடங்கியது.

இதைக் கண்டித்து கிள்ளானில் வாழ்ந்த இந்தியர்கள் கிள்ளான் வட்டார இந்தியத் தொழிற்சங்கத்தை உருவாக்கினார்கள். இது 1940-இல் நடந்தது. மலாயாவின் முதல் இந்தியத் தொழிற்சங்கம்.

அதற்கு முழு ஆதரவாளராக விளங்கியவர் ஆர். எச். நாதன். இவர் 1938-இல் ’தமிழ் நேசன்’ நாளிதழின் ஆசிரியர்ப் பகுதியில் பணிபுரிந்தவர்.

அடுத்து கிள்ளான் இந்தியத் தொழிலாளர்கள் களம் இறங்கினார்கள். 10 காசு சம்பள உயர்வு கேட்டுப் போராட்டம். அப்புறம் என்ன. தோட்ட நிர்வாகங்கள் சும்மா இருக்குமா. தொழிலாளர்களுக்கு எதிராகக் கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தன.

முதலாளியின் அனுமதி இல்லாமல் தொழிலாளர்களின் நண்பர்கள், உறவினர்கள் யாரும் தோட்டத்திற்குள் வரக்கூடாது. நிர்வாகி கிராணிகளுக்கு முன்னால் தொழிலாளர்கள் சைக்கிளில் போகக் கூடாது. அப்படியே போனாலும் அவர்களைப் பார்த்ததும் கீழே இறங்கி நடக்க வேண்டும்.

கறுப்புக் கங்காணிகளின் அட்டகாசமும் கொஞ்ச நஞ்சம் அல்ல. அடிமைத் தனமான கட்டுப்பாடுகள். ஆக இந்த மாதிரியான கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டும். சம்பளத்தில் 10 காசு உயர்த்த வேண்டும் என்று கிள்ளான் இந்தியத் தொழிற்சங்கம் முழுமூச்சாகப் போராட்டத்தில் இறங்கியது.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
31.08.2021

சான்றுகள்:

1.  Di sebalik tabir’ sejarah politik Malaysia 1945-1957 (Penerbit USM) - by Azmi Arifin, Abdul Rahman Haji Ismail

2.  From Social Reformist to Independence Fighter - http://sahabatrakyatmy.blogspot.com/2016/03/sa-ganapathy-from-social-reformist-to.html -

3.  A Merdeka salute to martyr S.A. Ganapathy –
http://jameswongwingon-online.blogspot.com/2006/08/merdeka-salute-to-martyr-sa-ganapathy.html

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக