04 ஏப்ரல் 2010

கணினியும் நீங்களும் - பகுதி 31

(மலேசிய நண்பன் - 27.09.2009 ஞாயிறு நாளிதழில் வெளியானது)


ஜோ கிம்  jokim69@yahoo.com.my

கே: என்னுடைய கணினியைத் திறக்க முடியவில்லை. கணினியைத் திறந்ததும் எப்போதும் வரும் சின்ன விளக்கு வெளிச்சம் வரவில்லை. என்ன பிரச்னை?


ப: என் கணக்குப் படி உங்களுடைய மின் வழங்கி கெட்டுப் போயிருக்கலாம். மின் வழங்கி வேலை செய்தால் கணினிக்கு கண்டிப்பாக வெளிச்சம் வரும். அந்த வெளிச்சம் வரவில்லை என்பதால் Power Supply எனும் மின் வழங்கியில் பிரச்னை என்பது தெளி வாகிறது. நீங்கள் ஈப்போ பகுதியில் இருந்தால் பரவாயில்லை. கணினியைப் பழுது பார்த்து கொடுத்து விடுவேன். அருகில் உள்ள கணினி பழுது பார்க்கும் கடையில் கேட்டுப் பாருங்கள். விவரம் சொல்வார்கள்.

எம்.வனஜா  vanajahm@gmail.com

கே: என் பெயர் வனஜா. வீட்டில் இருந்து வேலை செய்ய விரும்புகிறேன். சில இடங்களில் விண்ணப்பம் செய்தேன். ஆனால், அவர்களுடைய இணையத்தளம் அல்லது அவர்கள் எனக்கு அனுப்பிய மின்னஞ்சல்கள் உண்மையானதா இல்லை போலியானதா என்று எப்படி கண்டுபிடிப்பது?

ப: மின்னஞ்சல்களின் உண்மைத் தனத்தைக் கண்டுபிடிப்பது சற்று சிரமம்தான். இருந்தாலும் கீழே காணும் இணையத் தளங்களுக்குப் போய்ப் பாருங்கள். தேவையான தகவல்கள் கிடைக்கும். எந்தக் காரணத்தைக் கொண்டும் கட்டணம் எதையும் முதலில் அனுப்ப வேண்டாம்.

இணையத் தளங்களின் அசல் தன்மையை முதலில் உறுதி செய்து கொள்ளுங்கள். வேலைத் தேடி தருகிறேன் ஆளைத் தேடித் தருகிறேன் என்று சொல்லும் ஜெகதாலப் புரட்டர்கள் எல்லாம் இணையத்தில் உள்ளனர். கவனம். கவனம்.

http://www.snopes.com/
http://www.thescambaiter.com/
http://www.hoax-slayer.com/


வெ.கலைப்பித்தன், தாமான் மகாவலி, குவாந்தான்

கே: உம்முடைய கணினி கேள்வி-பதில்களில் நையாண்டியும் நக்கலும் கலந்து ஏன் எழுதித் தொலைக்கிறீர். நிறுத்தித் தொலைக்கவும். ரொம்ப படித்து விட்ட மேனரிஷம் வேண்டாம்?

ப: சொன்னதற்கு நன்றி. அதற்காக ஒரு கதை சொல்கிறேன். சில ஆடுகளும் மாடுகளும் ஒரு தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்தன. அதில் ஓர் ஆடு மட்டும் மேயாமல் விசனமாக இருந்தது. ஏன் என்று பக்கத்தில் உள்ள மாடு கேட்டது.

உலகத்திலேயே மிக மோசமான காய் எதுவாக இருக்கும் என்று ரொம்ப நாளாய் ஆராய்ச்சி செய்கிறேன். சரியான பதில் தெரியவில்லை என்று ஆடு சொன்னது. உடனே மாடு சொன்னது 'அட வீணாப் போன ஆடே... இதுகூடவா தெரியவில்லை. உலகத்திலேயே மிக மோசமான காய் எது தெரியுமா. அதான் அந்த கத்தரிக்காய்' என்றது. ஏன் என்று ஆடு கேட்டது.

'கடவுளுக்கே கத்திரிக்காயைப் பிடிக்கவில்லை. அதனால்தான் அதன் தலையில் ஆணியை அடித்து வைத்து இங்கே அனுப்பி இருக்கிறார்' என்று கத்திரிக்காயின் தலையில் இருந்த காம்பைக் காட்டியதாம் மாடு. தெரியாதைத் தெரிந்த மாதிரி சொல்வது தப்பு. தெரிந்தவற்றை மற்றவர்களுக்கு நகைச்சுவையாகச் சொல்வதில் நன்மை இருக்கிறது. எதார்த்தமாக எழுதுவதை நக்கல் என்று சொல்வது உங்கள் கருத்து. தயிர் சாதத்தில் தொட்டுக் கொள்ள ஊறுகாய் இருப்பது நல்லது என்று சொல்வது என் கருத்து.

எஸ்.பி.பாலக்கிருஷ்னன்,  oum9100@yahoo.com.sg

கே: விண்டோஸ் 7 வந்துவிட்டது. கணினி உலகமே அமர்க்களமாக இருக்கிறது. உங்கள் கருத்து என்ன சார்?


ப: ஆத்துக்கு வந்தவள் சோத்துக்கு சாயம் அடிக்கிறாள் என்பது மாமியார்களின் காலா காலத்துப் பல்லவி. அதனால் அனுபல்லவி என்ன என்று தெரியாது. என் கருத்தைச்   சொல்வதால் சகோதரர் பில் கேட்ஸ் நிச்சயமாகச் சந்தோஷப் பட மாட்டார்.

இதுவரை வந்த விண்டோஸ் செயலிகளில் மிக மிக அருமையானது பழைய விண்டோஸ் XPதான். அந்தச் செயலியை இலகுவாகப் பயன் படுத்தலாம். அதைச் செயல் படுத்த அதிக செலவும் இல்லை. எதையாவது செய்து எப்படியாவது காசைப் பார்க்க வேண்டும் என்பது பில் கேட்ஸ’ன் இரத்தத்தில் ஊறிய இலட்சியம். அதனால் விண்டோஸ் விஸ்த்தாவை உருவாக்கினார். தொட்டதிற்கு எல்லாம் சிணுங்கிக் கொள்ளும் விண்டோஸ் விஸ்த்தாவினால் மைக்ராசாப்ட் நிறுவனத்திற்கு நல்ல பெயரை விட கெட்ட பெயர்தான் அதிகம்.

இப்போது விண்டோஸ் 7ஐ கொண்டு வந்திருக்கிறார். கனடாவில் உள்ள என் நண்பர்கள் பரவாயில்லை என்று சொல்கிறார்கள். கஞ்சி சூடாக இருக்கிறது. ஆற விட்டுப் பார்ப்போம். இருபது முப்பதாயிரம் தமிழர்களை வைத்து விண்டோஸ் 7ஐ சகோதரர் பில் கேட்ஸ் உருவாக்கி இருக்கிறார். 140 தமிழர்களைக் கோடீஸ்வரர்களாக ஆக்கியும் விட்டிருக்கிறார். அதுவரை அவரைப் பாராட்டுவோம்.


மணிக்கண்டன் வேணுகோபால்  manikandan@gmail.com

கே: இணையத்தின் மூலமாக கல்யாணம் செய்து கொள்ள முடியும் என்கிறார்களே. எப்படி? எந்த இடத்தில் தேடினால் சரியான ஜோடி கிடைக்கும்? அதற்கு பணம் கட்ட வேண்டுமா?


ப: நீங்கள் கேட்பதைப் பார்த்தால் ரொம்ப அவசரம் போல தெரிகிறது.  அவசரம் வேண்டாம். இணையம் இருக்கிறதே அது ஒரு பெரிய கடல். அதில் அழகான குட்டி குட்டி மீன்களும் இருக்கின்றன. ஆளை முழுங்கும் அட்டகாசமான சுரா மீன்களும் இருக்கின்றன. அங்கே நல்லதும் இருக்கிறது. கெட்டதும் இருக்கிறது.

அப்பா அம்மாவைத் தவிர எல்லாவற்றையும் இணையத்தில் வாங்கலாம். விற்கலாம். என்ன மாதிரியான மாப்பிள்ளை வேண்டும். என்ன மாதிரியான பெண் வேண்டும்.  கல்யாணத் தரகர் வேலை செய்யும் இணையத் தளங்கள் இலட்சக் கணக்கில் உள்ளன. Google தேடல் இயந்த்திற்குப் போய் Indian Matrimony என்று தட்டிப் பாருங்கள். நிறைய இணையத் தளங்கள் வரும். நல்லதாகப் பார்த்து ஒன்றைத் தேர்வு செய்து கொள்ளுங்கள்.

சும்மா உங்கள் பெயர் முகவரியைக் கொடுத்தால் போதும். ஆனால், எல்லாம் உண்மையாக இருக்குமா என்பது தான் கேள்விக்குறி. உங்களைக் கல்யாணம் செய்கிறார்களா இல்லை உங்கள் பணத்தைக் கல்யாணம் செய்கிறார்களா என்பது பிறகு தெரிய வரும்.

இந்த விஷயத்தில் ஏமாந்தவர்களும் இருக்கிறார்கள். ஏமாற்றிய முதலைகளும் இருக்கிறார்கள். இணையம் மூலமாக காதலித்து கல்யாணம் செய்து நன்றாகக் குடும்பம் நடத்துபவர்களும் இருக்கிறார்கள். கல்யாணம் செய்து மூன்றே நாட்களில் விவாகரத்து செய்து கொண்டவர்களும் இருக்கிறார்கள். எதையும் நன்றாக யோசித்துச் செய்யுங்கள். திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர்.

இல.சதாசிவம், கிளன்மேரி, பத்து தீகா

கே: என் வயது 45. நான் கோலாலம்பூர்-சிங்கப்பூர் விரைவு பஸ் ஓட்டுகிறேன். கணினியைப் பயன் படுத்தத் தெரியாது. என் பிள்ளைகளுக்குத் தெரியும். அவர்களிடம் இருந்து கற்றுக் கொள்ள எனக்கு வெட்கமாக இருக்கிறது. நீங்கள் எனக்கு சொல்லித் தர முடியுமா? ஒரு வாரத்திற்கு லீவு போட்டு வருகிறேன். எவ்வளவு சம்பளம் கேட்டாலும் தருகிறேன். அய்யா உதவி செய்யுங்கள். உங்களை மலை போல நினைக்கிறேன்.


ப: இதில் வெட்கப் படுவதற்கு ஒன்றும் இல்லை. உங்கள் பிள்ளைகளிடம் உண்மையைச் சொல்லுங்கள். உங்கள் ஆர்வத்தைச் சொல்லுங்கள். நிச்சயம் அவர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள். ஒரு தகப்பனாரின் நியாயமான ஆசைகளைப் பிள்ளைகள் நிறைவெற்றி வைப்பார்கள். கணினி பயிற்சிகள் எதையும் நான் கொடுப்பது இல்லை. அதனால் உங்களுக்கு உதவி செய்ய முடியவில்லை. மன்னிக்கவும்.

சி.ஜெயபாலன், சுபாங் ஜெயா

கே: Corel Draw X4 எனும் வரைகலை நிரலியை என்ன விலைக்கு விற்கிறார்கள்?


ப: கோரல் டிரா எனும் வரைகலை நிரலி ஓர் அற்புதமான நிரலி. சகல வரைகலை அம்சங்களும் அதில் இருக்கிறது. அதன் விலை RM 1639. ஒரு கணினியை விட இந்த நிரலியின் விலை அதிகம். அதற்கு தகுந்த மாதிரி அதன் சிறப்புகள் அமைகின்றன. தலைநகர் இம்பி பிலாசா, லாவ் யாட் போன்ற இடங்களில் கிடைக்கும்.

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்
மின்னஞ்சல் முகவரி:
ksmuthukrishnan@gmail.com
கைப்பேசி: 012-5838 171

1 கருத்து:

  1. நண்பரே..நீங்கள் எப்படி எழத நினைக்கிறீர்களோ அப்படி எழுதுங்கள்..நான் எழுத்தாளன்.உங்களை ரசிப்பேன்..

    பதிலளிநீக்கு