05 ஏப்ரல் 2010

கணினியும் நீங்களும் - பகுதி 34

(மலேசிய நண்பன் - 15.11.2009 ஞாயிறு நாளிதழில் வெளியானது)

லெ.மதியழகன், தாமான் மாஸ், கம்பார்  mathi038@gmail.com

கே: On Screen Keyboard என்றால் என்ன? அதை இயக்குவதற்குத் தனியாக ஏதாவது நிரலி எனும் Program வேண்டுமா?

ப:
ஒவ்வோர் எழுத்தையும் தட்டித் தட்டி அச்சு செய்வதைத் தட்டச்சு என்கிறோம். அதற்குப் பயன் படுத்தப்படும் சாதனத்தின் பெயர் தட்டச்சுப் பலகை. Key Board என்று ஆங்கிலத்தில் சொல்கிறோம். இதில் A லிருந்து Z வரையிலான எழுத்துகள் இருக்கும். 1 லிருந்து 9 வரையிலான எண்கள் இருக்கும். மற்ற மற்றச் சின்னங்களும் இருக்கும். இந்தத் தட்டச்சுப் பலகை கணினிக்கு வெளியே முன்புறமாக இருக்கும். சரி. இதே மாதிரி ஒரு தட்டச்சுப் பலகை கணினிக்கு உள்ளேயும் இருக்கிறது. அதைப் பலர் பார்த்து இருக்க முடியாது.  அதன் பெயர் On Screen Keyboard.

கணினிக்குள் பதித்து வைக்கப் பட்டிருக்கிறது. அதை இயக்குவதற்குத் தனியாக நிரலிகள் எதுவும் தேவை இல்லை. எப்படி இயக்குவது? Start எனும் பொத்தானைத் தட்டி விடுங்கள். Run எனும் பகுதி ஆகக் கீழே வரும். தெரிகிறதா. அதில் osk என்று தட்டச்சு செய்யுங்கள். அவ்வளவுதான். கணினித் திரையில் ஓர் அழகான தட்டச்சுப் பலகை வந்து உட்கார்ந்து கொள்ளும். On Screen Keyboard என்பதன் சுருக்கம்தான் இந்த osk. தட்டச்சுப் பலகையைச் சுழலியைக் கொண்டு இயக்கிக் கொள்ளலாம். வெளியே இருக்கும் தட்டச்சுப் பலகை திடீரென்று வேலை செய்ய வில்லை என்றால் கவலை பட வேண்டாம். கணினிக்கு உள்ளே இருக்கும் இந்தத் திரை விசைப் பலகையைப் பயன் படுத்திக் கொள்ளுங்கள்.

சுப.வீர பாண்டியன்  subavee@gmail.com

கே: கணினியின் மூலமாகக் கொசுக்களை விரட்டி அடிக்க முடியும் என்று என் நண்பர் சவால் விடுகிறார். இல்லை என்று நான் சொல்கிறேன். முதலில் ஐம்பது ரிங்கிட் பந்தயமாக இருந்தது. கடைசியில் RM200 ரிங்கிட்டிற்கு வந்துவிட்டது. விட்டால் ஏற்றி விடுவார் போல இருக்கிறது. அப்படித்தான் அடித்துச் சொல்கிறார். உங்கள் பதிலில்  RM200 ரிங்கிட் ஊசலாடுகிறது? எனக்கு உதவி செய்யுங்கள் ஐயா.

ப:
உங்கள் நண்பர் பந்தயத் தொகையை ஏற்றி விடுகிறார் என்றால் அவர் பக்கம் நியாயம் இருக்கிறது. இதில் வேறு உங்களுக்கு உதவி செய்யச் சொல்கிறீர்கள்.

நன்றாக யோசித்துப் பார்ப்போம். எப்படி ஒரு கணினியால் கொசுக்களைப் போய் விரட்டி அடிக்க முடியும். கணினியார் அவருக்கு என்ன மனிதனைப் போல கால் கை இருக்கிறதா. இல்லை ஆடு மாடுகளைப் போல வால்தான் இருக்கிறதா. ஒன்றுமே இல்லை. செதுக்கி வைத்தப் சிலையைப் போல ஒரே இடத்தில் உட்கார்ந்திருக்கிறார். சகோதரர் கணினியார் இருக்கிறாரே அவர் ரொம்பவும் நல்லவர்.

ஆக, அப்படி இருக்கும் போது அப்புறம் எப்படி கணினியார் போய் கொசுக்களை எல்லாம் விரட்டி அடிக்க முடியும். நண்பர் சொன்னது தப்பு. நண்பரிடம் இருந்து காசை வாங்கி இரண்டு பேரும் பங்கு போட்டுக் கொள்ளலாம் என்று எதிர்பார்க்கிறீர்கள்.

அங்கே தான் தப்பு நடக்கிறது. உங்கள் நண்பர் சொல்வதுதான் சரி! கணினிக்கு கொசுக்களை விரட்டி அடிக்கும் திறமை உள்ளது. உண்மைதான். ரொம்ப பேருக்கு இந்த விஷயம் தெரியாது. சத்தத்தை Hertz எனும் அளவைக் கொண்டு அளக்கிறார்கள். இந்த ஹெர்ட்ஸ் அளவில் 16,000 Hertz க்குள் மேலே இருந்தால்தான் மனிதர்களின் காதுகளால் கேட்க முடியும்.

அதற்கும் கீழே போனால் நமக்கு கேட்காது. ஆனால் ஈ, எறும்பு, கொசு, வண்ணத்துப் பூச்சி, கரப்பான் போன்ற  சின்ன ஜ“வராசிகளால் மட்டுமே கேட்க முடியும். அந்தச் சத்தம் அவற்றுக்கு காது வலியை உண்டாக்கும். அதனால் அந்த மாதிரியான  சின்னச் சின்ன ஜ“வன்கள் சத்தம் வரும் பக்கம் போவதைத் தவிர்க்கும். ஆக, அப்படிப் பட்ட ஓர் ஒலியை நம்ப வீட்டுக் கணினியால் உருவாக்க முடியும். அதைக் கேட்டதும் கொசுக்கள் ஓடி ஒளிந்து கொள்ளும்.

கொசுக்கள் இல்லையே என்று அந்த நேரத்தில் நிம்மதிதான். இருந்தாலும், கணினியை நிறுத்தியதும் மறுபடி கொசுக்கள் வந்து விடும். சரியா. Sarunyou Punyaratabundhu எனும் தாய்லாந்துகாரர் கண்டுபிடித்திருக்கிறார். பதிவிறக்கம் செய்து சோதனை செய்து பாருங்கள். நான் பயன் படுத்திப் பார்த்தேன். ஒரே ஒரு தைரியமான கொசு மட்டும் பதுங்கிப் பதுங்கி வந்தது. நிஜமாக வந்தது. அப்புறம் கடிக்காமல் போனது.

www.allmosquitos.com/soft/SEA_antimosquitoes_xp_2.zip
www.allmosquitos.com/anti-mosquito-software/anti-mosquito-sound.html

எனும் இடத்தில் இந்த நிரலி கிடைக்கும்.


குமாரி நளினி  nalini1882@gmail.com

கே: நான் என் கணினியை அடைக்காமல் நீண்ட நேரம் பயன் படுத்துவேன். காலையிலிருந்து மாலை வர அணைப்பதில்லை. இது கணினிக்கு நல்லதா? இதனால் கணினிக்கு ஆபத்து உண்டா?

ப:
கணினியை அடிக்கடி அடைத்து திறந்து, அதாவது On and Off செய்து  கொண் டிருந்தால் அது ரொம்ப நாளைக்கு நீடிக்காது. கெட்டுப் போக வாய்ப்பு இருக்கிறது.  கணினியை On செய்து திறக்கும் போது ஒரு வகையான மின் அதிர்வு  ஏற்படும். ஒவ்வொரு முறையும் இந்த அதிர்ச்சி உண்டாகும்.

ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை திறக்கிறீர்கள்-அடைக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு முறையும் அத்தகைய மின் அதிர்வுகளைக் கணினியின் உள்ளே இருக்கும் சாதனங்கள் தாங்கிக் கொள்கின்றன. இப்படியே அடைத்துத் திறந்து கொண்டிருந்தால் ஒரு நாளைக்கு கணினி நிரந்தரமாகக் கண்களை அடைத்துக் கொள்ளும். அதனால், கணினியில் செய்ய வேண்டிய வேலைகளை ஒரே தடவையில் செய்து முடித்துவிட வேண்டும்.

பின்னர் அதற்கு சில மணி நேரம் ஓய்வு கொடுக்க வேண்டும். சும்மா சும்மா திறப்பதும் சும்மா சும்மா அடைப்பதுமாக இருந்தால், பாவம் அந்தக் கணினிதான் என்ன செய்யும். நீங்களே சொல்லுங்கள். கணினியை நீண்ட நேரம் அடைக்காமல் வைத்திருந்தால் அதிகமாகச் சூடு ஏறலாம். அதனால் கணினி சேதம் அடைய வாய்ப்பு இருக்கிறது.

4 கருத்துகள்:

  1. அருமையாக தமிழில் பதில் அளிகிறீர்கள். வாழ்த்துகள்

    உங்கள் பிளாக்கை நான் http://www.filmics.com/tamilshare என்ற இணைய தளத்தில் பார்த்து அறிந்து கொண்டேன். உங்கள் திறமைகள்/உணர்வுகள் மற்றும் உங்களுக்கு தெரிந்த இணையத்தில் நீங்கள் கண்ட பக்கங்களை மற்றவருடன் பகிர்ந்து கொள்ள இந்த தளத்தில் இலவசமாக பகிர்ந்து கொள்ளுங்கள்.

    பதிலளிநீக்கு
  2. மிகவும் நல்ல விஷயம் நீங்கள் செய்து கொண்டிருப்பது.உங்கள் தளத்தை பார்த்து நன் நிறைய தெரிந்து கொண்டேன் நன்றி.என்னுடைய சந்தேகங்களை ,உங்களுக்கு கேள்விகளை எவ்வாறு அனுப்ப வேண்டும்

    பதிலளிநீக்கு
  3. நல்ல தமிழில் கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டிய விடயங்கள்.நன்றி.

    பதிலளிநீக்கு
  4. நிறைய சொல்கிறீர்கள்....பேரறிவாளன் திரு......

    பதிலளிநீக்கு