05 ஏப்ரல் 2010

கணினியும் நீங்களும் - பகுதி 35

(மலேசிய நண்பன் - 8.11.2009 ஞாயிறு நாளிதழில் வெளியானது)
மலேசிய நண்பன் ஞாயிறு நாளிதழில் வெளியான கேள்வி பதில் பகுதியைக் கட்டம் கட்டமாகப் பிரசுரித்து வருகிறேன். பழைய எல்லாப் பகுதிகளும் வெளி வந்ததும் பின்னர் மலேசியாவில் ஞாயிற்றுக் கிழமைகளில் பிரசுக்கப் படும் அதே பகுதி , அதே தினத்தில் இந்த வலைப் பதிவிலும் பிரசுரிக்கப் படும். உலகில் உள்ள அனைத்துத் தமிழர்களும் படிக்கலாம்.

மா.தர்மசீலன், ஜெலாப்பாங், ஈப்போ
கே: நான் அண்மையில் Acer மடிக்கணினியை RM2600 கொடுத்து வாங்கினேன். அதில் விண்டோஸ் விஸ்த்தாவைப் பதித்துக் கொடுத்தார்கள். எனக்கு விஸ்த்தா பிடிக்கவில்லை. பழைய எக்ஸ்.பிக்கு போக விரும்புகிறேன். நான் என் கணினியை எடுத்து வந்தால் மாற்றிக் கொடுப்பீர்களா?

ப:
சளி காய்ச்சல் வரும் அளவிற்கு என்னைப்  புகழ்ந்து தள்ளி இருக்கிறீர்கள். இது மழைக்காலம் வேறு. வருவதற்கு முன்னால் என் கைப்பேசி எண்களுக்கு அழைத்துவிட்டு வாருங்கள். இந்த இடத்தில் என் அனுபவத்தைக் கண்டிப்பாகச் சொல்ல வேண்டும்.

எந்தக் கணினியாக இருந்தாலும் சரி.  பழுது பார்த்து விடலாம். அதற்கு என்று பழைய பழைய கணினிகளை எல்லாம் தூக்கிக் கொண்டு வந்தால் என்ன செய்வது.  ரொம்ப ரொம்பப் பழசான, பத்து வருஷத்திற்கு முன்னால் வந்த கணினிகளைத் தூக்கிக் கொண்டு வந்து 'ரிப்பேர்' செய்யுங்கள் என்கிறார்கள். தவிர்க்கப் பார்த்தால் 'வேலைத் தெரியாத வெள்ளைக்கு வெற்றிலை பாக்கு முக்கியம்' என்று மௌன கீதங்கள் வேறு.

1997ல் செய்யப்பட்ட  கணினியைத் தூக்கிக் கொண்டு ஒருவர் என் வீட்டிற்கு வந்தார். 'இது எங்கள் பரம்பரைச் சொத்து. நீங்கள்தான் உயிர் கொடுக்க வேண்டும்' என்றார். கணினியைப் பார்த்ததும் எனக்குத் தெரிந்து விட்டது. காட்டிற்குப் போக வேண்டியது வீட்டிற்கு வந்திருக்கிறது என்று. இருந்தாலும் அவர் மனசு நோகக்கூடாது என்பதற்காகக் கழற்றிப் பார்த்தேன். என்ன செய்வது. சொல்லுங்கள்.

பாவம் அந்தக் கணினி. சாவதற்கு முன்னால் ரொம்ப நாளாய் வாழ்வே மாயம் பாடி இருக்கிறது. யாருக்கும் கேட்கவில்லை. உள்ளே இருந்த கொஞ்ச நஞ்சத்தையும் கரையான் சாப்பிட்டு ஏப்பம் விட்டிருக்கிறது. இது அவருக்கும் தெரியாது. சொன்னாலும் புரியாது. அதற்குப் போய் உயிர் கொடு என்றால் எப்படி அய்யா கொடுப்பது. பார்த்தால் இவரைத் தான் கழற்றி 'ரிப்பேர்' செய்ய வேண்டும் போல இருந்தது.

தாத்தாப் பாட்டிகளைத் தூக்கி வந்து அவர்களை அசின் அர்ஜுன் மாதிரி மாற்றிக் கொடுங்கள் என்றால் முடியுமா. 'மேக்கப்' போட்டு செய்து விடலாம். எத்தனை நாளைக்கு. பழம் பெரும் கணினிகளுக்குப் பொருத்தமான உதிரிப் பாகங்கள் இப்போது கிடைப்பது கஷ்டம். அந்த மாதிரி உதிரிப் பாகங்கள் தயாரிப்பதை நிறுத்தி விட்டார்கள். 

அப்படியே கிடைத்தாலும் அதிகமான விலை. ஒரேயடியாக Mother Board எனும் தாய்ப்பலகை, CPU எனும் மத்திய செயலாக்கி போன்றவற்றை மாற்றிவிட்டால் நல்லது. பிரச்னை தீர்ந்தது. விலையும் குறைவு. புதிதாக வரும் கணினியின் உதிரிச் சாதனங்களுக்கு விலை ரொம்பவும் குறைவு. அதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இரண்டையும் மிஞ்சி மிஞ்சிப் போனால் RM400க்குள் அடக்கிவிடலாம். ஒரு புத்தம் புதிய, மிக மிக நவீனமான கணினியை RM850க்குள் செய்து முடிக்கலாம்.

செம்மதி  chemmathy@gmail.com
கே: கைப்பேசிகளை அதிக நேரம் பயன்படுத்தினால் மூளையைப் பாதிக்கும் என்று  அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்து இருக்கிறார்கள். இது எந்த அளவுக்கு உண்மை?

ப:
உண்மையிலும் உண்மை. காரணம் மின்காந்த அலைகள்தான். கைப்பேசிகள் ஒரு வகையான அலைக் கற்றைகளை வெளியிடுகின்றன. இந்த அலைக் கற்றைகளில் இருந்து கதிர்வீச்சு வெளியாகிறது. அனைத்து வகையான கதிர்வீச்சுகளும் சிறுவர்களையும் இளைஞர்களையும் அதிகம் பாதிக்கும். எக்ஸ்ரே, அணுக்கழிவுகளும் ஆபத்தானவை.

கதிர்வீச்சுகள் ஓர் அளவுக்குள் இருக்க வேண்டும். இந்த கதிர்வீச்சுகளின் அளவை Specific Absorption Rate என்று சொல்வார்கள். இதன் அளவு 0.6 அல்லது அதற்கும் குறைவாக இருக்க வேண்டும். கைப்பேசியின் கதிர்வீச்சுத் தன்மை குறைவுதான். இருந்தாலும் நீண்டகாலம் தொடர்ந்து பயன் படுத்தினால் காதுகளில் உள்ள எட்டாவது 'கிரேனியல்' நரம்பில் புற்று நோய் வர வாய்ப்பு அதிகம்.

அமெரிக்க கண்டுபிடிப்புகள் சொல்கின்றன. சிலர் இடுப்பில் கைப்பேசியை வைத்துக் கொள்வார்கள். அந்த வகையில் அங்கே இருந்து வெளியாகும் கதிர்வீச்சுகள் ஆண்களுக்கு ஆண்மைக் குறைவை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கை செய்கிறார்கள்.

சின்ன அறிவுரை. 24 மணிநேரமும் கைப்பேசியில் தொங்கிக் கொண்டு இருப்பது நன்றாக இல்லை. மற்றவர் பார்த்து மெச்ச வேண்டும் என்று பந்தா காட்டுவதும் நன்றாக இல்லை. முக்கியமான காரணங்களுக்காகக் கைபேசியைப் பயன் படுத்தினால் போதும். என்னையும் பார் என் அழகையும் பார் என்று கைப்பேசியில் தொங்கிக் கொண்டிருந்தால் ஒரு நாளைக்கு அது உங்களைத் தொங்க வைத்து விடும்.

திருமதி.சரவணா பாக்கியம், புக்கிட் மெர்தாஜாம் (குறும் செய்தி 18.11.2009)
கே: குழந்தைகள் கணினியில் விளையாடும் போது அவர்களுக்கு சோறு ஊட்டுவது நல்ல பழக்கமா?

ப:
யார் கெட்டப் பழக்கம் என்று சொன்னது. சில குழந்தை களுக்குச் சோறு சாப்பிடுவது என்றால் விஷத்தைச் சாப்பிடுகிற மாதிரி. அப்போதுதான் இல்லாத சேட்டைகள் எல்லாம் வரும். நிலாவைக் காட்டி ஏமாற்ற முடியாது. அது அந்தக் காலம். இப்போது உள்ள குழந்தைகளுக்கு 'ரிமோட் கண்டரோலர்' இல்லை என்றால் சோறு தொண்டையிலேயே நின்று கொள்ளும். கீழே இறங்காது. 

அந்த மாதிரி குழந்தை களுக்கு கணினிதான் சரியான மருந்து. ஆக, சாப்பிடாமல் இருந்தால் குழந்தைகளுக்குத் தான் அது இது என்று வரும். தூக்கிக் கொண்டு கிளினிக்கிற்கு ஓட வேண்டும். அப்புறம் டாக்டர் கட்டணம் எகிறிக் கொண்டு முறைக்கும். ஏன் அந்த அவஸ்தை. அதற்கு இப்படியாவது சாப்பிட்டு விட்டுப் போகட்டுமே. சந்தோஷப் படுவோம்.

Keyboard எனும் விசைப் பலகையில் உணவு சிந்திப் பழுதாகிப் போகுமே என்ற கவலையா. அதற்கு இப்படிப் பாருங்கள். ஒரு தடவை குழந்தையைத் தூக்கிக் கொண்டு கிளினிக்கிற்குப் போனால் குறைந்து குறைந்து முப்பது வெள்ளி வாங்கி விடுவார்கள். அதோடு விட்டால் பரவாயில்லையே. அடுத்து அடுத்து அலைய வேண்டுமே. அதற்கு ஒரு விசைப் பலைகையைப் பத்து வெள்ளிக்கு வாங்கி விடலாம்.

இந்தா அடிச்சு பிடிச்சு உடைச்சுக்கோ என்று கொடுத்தும் விடலாம். அந்த  ஒரு குழந்தையின் சந்தோஷத்தைப் பத்து வெள்ளிக்கு வாங்கிவிட முடியுமா. அதனால் குழந்தை கள் கணினியில் விளையாடும் போது அவர்களுக்கு சோறு ஊட்டுவது தப்பில்லை என்பது என் கருத்து. அதற்கு என்று வீட்டில் உள்ள சிறிசு பெரிசுகளை எல்லாம் கூப்பிட்டு, உட்கார வைத்து சோறு ஊட்டக் கூடாது. இது ரொம்ப தப்பு.

1 கருத்து:

  1. மிகவும் பயனான பகுதியை தொடங்கி இருக்கிரிர்ர்கள்
    வாழ்த்துக்கள் அய்யா.அதிலும் நல்ல தமிழில் இருக்கிறது
    மகிழ்ச்சியாக இருக்கிறது அய்யா.

    பதிலளிநீக்கு