05 April 2010

கணினியும் நீங்களும் - பகுதி 36

(மலேசிய நண்பன் - 15.11.2009 ஞாயிறு நாளிதழில் வெளியானது)
மலேசிய நண்பன் ஞாயிறு நாளிதழில் வெளியான கேள்வி பதில் பகுதியைக் கட்டம் கட்டமாகப் பிரசுரித்து வருகிறேன். பழைய எல்லாப் பகுதிகளும் வெளி வந்ததும் பின்னர் மலேசியாவில் ஞாயிற்றுக் கிழமைகளில் பிரசுக்கப் படும் அதே பகுதி அதே தினத்தில் இந்த வலைப் பதிவிலும் பிரசுரிக்கப் படும். உலகில் உள்ள அனைத்துத் தமிழர்களும் படிக்க வேண்டும். பயன் அடைய வேண்டும். இந்தக் கேள்வி பதில் அங்கத்தை நான் மலேசியாவில் நடத்தி வருகிறேன்.

விஜயா சுப்பிரமணியம்  svijiya@yahoo.com


கே: சார், ஒருவர் எனக்கு அடிக்கடி தேவை இல்லாத மின்னஞ்சல்கள் அனுப்பி வருகிறார். யார் எவர் என்று தெரியவில்லை. தப்பாக எழுதுவது இல்லை. இருந்தாலும் சில சமயங்களில் அளவுக்கு அதிகமாகப் போய் விடுவதும் உண்டு. அமெரிக்காவில் இருப்பதாகச் சொல்கிறார். அவருடைய மின்னஞ்சல் முகவரியை அனுப்பி இருக்கிறேன். உண்மையிலேயே அமெரிக்காவில் தான் இருக்கிறாரா என்று கண்டுபிடித்துச் சொல்ல முடியுமா? உதவி செய்யுங்கள் அய்யா.

ப: தொல்லைகள் காலை வணக்கம் சொல்லுவதும் இல்லை. தொந்தரவுகள் மாலை வணக்கம் சொல்லுவதும் இல்லை. இரண்டுமே ஒரே குட்டையில் ஊறிய ஜடாமுனிகள். நமக்கு வரும் மின்னஞ்சல்களினால் தொல்லைகள் தொந்தரவுகள் வருகின்றன என்றால் ஆரம்பத்திலேயே அவற்றைக் கிள்ளி வீசி விடுவது நல்லது. ஆறப் போட்டால் ஆழமான காயங்கள்தான் மிஞ்சும்.

உங்கள் கேள்விக்கு வருகிறேன். ஏன் அவரைப் பற்றிய பெரிய பெரிய ஆராய்ச்சி எல்லாம் நடத்த வேண்டும். தலை போகிற விஷயம் எதுவும் இல்லையே. மின்னஞ்சல் அனுப்புவர்கள் எல்லாரும் நல்லவர்களாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கக் கூடாது. நல்ல எண்ணங்களும் உண்டு. நாசம் நினைக்கும் வக்கிர புத்திகளும் உண்டு. அவருடைய மின்னஞ்சல் இனி தொடர்ந்து வருவதும் போவதும் உங்கள் கைகளில்தான் இருக்கிறது. பார்த்துப் பழகுங்கள். வேண்டாம் என்றால் நிறுத்தி விடுங்கள். உங்கள் மின்னஞ்சல் பகுதியில் Settings >> Filter என்ற இடத்திற்குப் போகவும். அவருடைய மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்து தடுத்து விடலாம்.

நீங்கள் கொடுத்த மின்னஞ்சல் முகவரியைப் பாதுகாப்புக் காரணங்களுக்காக இங்கே இடம் பெறவில்லை. சரி. அவர் இருக்கும் இடத்தைத் தெரிந்து கொண்டு என்ன செய்யப் போகிறீர்கள் என்றுதான் தெரியவில்லை. இருந்தாலும் சொல்கிறேன். IP Locator எனும் நிரலியைப் பயன் படுத்தி அவர் எங்கே இருக்கிறார் என்பது கண்டுபிடித்தாகி விட்டது.

இவர் அந்த மின்னஞ்சல் முகவரியைப் பாகிஸ்தான் நாட்டில் பதிவு செய்திருக்கிறார். கடைசியாக தமிழ்நாட்டில் உள்ள கோயம்புத்தூரிலிருந்து மின்னஞ்சல் அனுப்பி இருக்கிறார். NASA வின் துணைக் கோள நிரலியைப் பயன்படுத்தி அவர் வீட்டு முகவரியையும் கண்டுபிடிக்க முடியும். அவர் வீட்டின் கூரை என்ன நிறம் என்பதையும் சொல்ல முடியும். மின்னஞ்சல் விஷயங்களில் எச்சரிக்கையாக இருங்கள்.

அசோக் முகிலன்  ashok_mugilan@gmail.com

கே:விண்டோஸ் 7 வந்துவிட்டது. இதைப் பற்றிய உங்கள் கருத்து என்ன? விண்டோஸ் 7ஐப் பயன் படுத்துவதால் பிரச்னை இல்லையே?

ப: மைக்ராசாப்ட் நிறுவனம் கடந்த அக்டோபர் மாதம் 22ஆம் தேதி உலகம் முழுமையும் விண்டோஸ் 7ஐ அறிமுகம் செய்தது. புதிய வேடிக்கை அம்சங்கள், எளிமையான இயக்கம், கூடுதல் பாதுகாப்பு போன்றவை இணைக்கப்பட்டுள்ளன. கணினியைத் திறக்கும் நேரம் மிகவும் குறைவு என்பது விண்டோஸ் 7 ன் சிறப்பு அம்சம்.

உலகில் 80 இலட்சம் பேர் சோதனை செய்து அவர்களின் கருத்துகளுக்கு ஏற்ப வெளியீடு செய்யப்பட்டது. பழைய விஸ்தாவின் தொண தொணப்பு முணுமுணுப்பு இல்லை. இந்தியாவில் பெங்களூர் அனைத்துலக விமான நிலையத்தில்தான் முதன்முதலில் சோதனை செய்து பார்த்தார்கள். விண்டோஸ் 7ல் மொத்தம் ஆறு வகைகள் உள்ளன. அவையாவன: 1. Starter  2. Home Premium  3. Home Basic  4. Professional  5. Enterprise  6. Utimate.

இதில் Home Premium விலை 463 ரிங்கிட். Professional விலை 500 ரிங்கிட். Ultimate விலை 760 ரிங்கிட். இவற்றில் முதல் மூன்று Starter, Home Premium, Home Basic வகைகளில் சில சிறப்பான அம்சங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன. விலை கூடுதலாக உள்ள மற்ற மூன்று Professional, Enterprise, Utimate வகைகளில் எல்லா சிறப்பு அம்சங்களும் உள்ளன.

பில் கேட்ஸ் நன்றாகவே தன் வியாபார தந்திரத்தைக் கையாண்டுள்ளார். அவருக்குப் பாராட்டுகள். விண்டோஸ் விஸ்தாவின் குளறுபடிகளினால் ஏமாந்து போன வாடிக்கையாளர்கள் விண்டோஸ் 7ஐ வரவேற்பார்கள். பொறுத்து இருந்து பார்ப்போம்.


லஹ்சிமி சாந்தி lakshmi_shanthi2003@yahoo.com

கே: நான் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறேன். என்னுடைய வேலைகள்
பெரும்பாலும் கணினி மூலமாக நடைபெறுகிறது. Mouse எனும் சுழலியை அதிக நேரம் பயன்படுத்துவதால் கைகளில் வலி ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க உங்கள் ஆலோசனை என்ன?

ப: நல்ல கேள்வி. Mouse எனும் சுழலி மனித வாழ்வில் கலந்துவிட்ட ஒரு சாதனம். கணினி இன்றியமையாத ஒரு பொருளாகி விட்டது. தொடர்ந்து பல மணி நேரம் சுழலியைப் பயன் படுத்தக் கூடாது. கைகளில் உள்ள மணிக்கட்டுகளில் எலும்பு தேய்மானம் ஏற்படுவதாக மருத்துவர்கள் சொல்கிறார்கள். இதை ஆங்கிலத்தில் Musculo Skeletal Injury என்று அழைக்கிறார்கள். சுழலியைப் பிடித்துப் பயன் படுத்துவதில் சில வழிகள் உள்ளன.

1. சுழலியைப் பிடித்திருக்கும் முறையில் பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

2. சுழலியை இறுக்கிப் பிடிக்க வேண்டாம். மெதுவாகப் பிடித்துப் பழகுங்கள்.

3. சுழலியைப் பிடிக்கும் போது மணிக்கட்டுத் தசையை அதிகமாக அசைக்க வேண்டாம். முழங்கை தசைதான் மையமாக இருக்க வேண்டும். மணிக்கட்டை நேராக நடுவாக வைத்துக் கொள்ளுங்கள்.

4. நாற்காலியில் நன்றாகச் சாய்ந்து உட்கார்ந்து கொள்ளுங்கள். கைகள் தளர்வாக இருக்க வேண்டும். சுழலி இரண்டு அங்குலம் தட்டச்சுப் பலகைக்கு கீழாக இருக்க வேண்டும்.

5. சிறிய அளவிலான சுழலிகளைப் பயன் படுத்த வேண்டாம். சுழலி கொஞ்சம் பெரிதாக இருக்க வேண்டும்.

6. நாகரிகம் என்ற பெயரில் விதம் விதமான சுழலிகள் எல்லாம் வருகின்றன. அவை பிரச்னைகளைத் தான் கொடுக்கும். சில நிறுவனங்கள் மருத்துவ ரீதியாக ஆராய்ச்சி செய்து பெரிய அளவிலான சுழலிகளைத் தயாரிக்கிறார்கள். இவை மணிக் கட்டிற்கு வேலையை குறைத்து நன்மை செய்கின்றன.

No comments:

Post a Comment