11 ஏப்ரல் 2010

கணினியும் நீங்களும் - பகுதி 42

மலேசிய நண்பன் ஞாயிறு நாளிதழில் வெளியான கணினியும் நீங்களும் கேள்வி பதில் பகுதியைக் கட்டம் கட்டமாக இந்த வலைப் பூவில் பிரசுரித்து வருகிறேன். பழைய எல்லாப் பகுதிகளும் வெளி வந்த பின்னர், ஞாயிற்றுக் கிழமைகளில் பிரசுக்கப் படும் அதே பகுதி அதே தினத்தில் இந்த வலைப் பதிவிலும் பிரசுரிக்கப் படும். உலகில் உள்ள அனைத்துத் தமிழர்களும் படிக்க வேண்டும். பயன் அடைய வேண்டும். நீங்கள் மின்னஞ்சல் வழியாகக் கேள்விகள் கேட்கலாம். உங்கள் கேள்விகள் நாளிதழிலும் வெளிவரும். இணையத்திலும் வரும்.

(மலேசிய நண்பன் - 20.12.2009 ஞாயிறு நாளிதழில் வெளியானது)

சின் ஆறுமுகம், பாரிட் ஜாவா, பத்து பகாட், ஜொகூர்

கே: சென்ற வாரம் ஒரு வாசகர்
'This copy of Windows is not genuine. You may be a victim of software counterfeiting' என்பதைப் பற்றி ஒரு கேள்வி கேட்டு இருந்தார். WGA என்பதை எப்படி கணினியில் இருந்து நீக்குவது என்று நீங்கள் பதில் கொடுத்தீர்கள். காப்புரிமைச் சட்டத்தை மீறுவது போலத் தெரிகிறது? அந்த மாதிரி செய்யலாமா.

ப: நல்ல கேள்வி. காப்புரிமைச் சட்டத்தை மீறவில்லை என்பதை முதலில் சொல்லி விடுகிறேன். மைக்ராசாப்ட் நிறுவனத்தின் அசல் விண்டோஸ் செயலியை வாங்கி அதை நகல் எடுப்பது குற்றம். விற்பது குற்றம். வைத்து இருப்பதும் குற்றம்.

ஆனால், சாந்தரூபணி என்பவர்  மருத்துவம் படிக்கும் மாணவி. காசு கொடுத்து விண்டோஸ் அசல் செயலியை வாங்கி இருக்கிறார். அதைத் தன் கணினியில் பதித்த பிறகு அது போலியானது என்று தவறுதலாக எச்சரிக்கை செய்யப் பட்டு இருக்கிறார். இந்த இடத்தில் தொழில் நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. அதை நிவர்த்தி செய்யத் தான் வழி சொன்னேன் ஒழிய எலியைப் புலியாக்கும் ரகசியம் எதையும் சொல்ல வில்லையே.

இருந்தாலும் பாருங்கள். எலியைப் பிடிக்கப் போய் உங்களைத் தான் பிலி அடித்து விட்டது. எதற்கும் சகோதரர் பில் கேட்ஸ் அவர்களின் மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்து இருக்கிறேன். bgates@microsoft.com. பாராட்டுப் பத்திரமும் பண முடிச்சும் கிடைத்தாலும் கிடைக்கலாம்.

குமரன், பீடோர், பேராக்  (குறும் செய்தி 23.10.2009)
கே: சார், வணக்கம். Maxis Broadband பயன் படுத்துகிறேன். Dlm pc x blh guna. Sum pc cn sum cant. Y its hppn. Help pls. 10q?

ப:
தாங்கள் Maxis Broadband எனும் 'மாக்சிஸ் விரிவு அலை' இணையச் சேவையைப் பயன் படுத்துகிறீர்கள் என்பது மட்டும் தெரிகிறது. மற்றவை எனக்குத் தெரியாத வேறு உலகத்து மொழியில் எழுதி இருக்கிறீர்கள். எந்த மொழி என்று சொல்லுங்கள். அந்த மொழியை முதலில் படித்து முடித்து விடுகிறேன். அப்புறம் பதில் கொடுக்கிறேன்.

சின்னக்கண்ணன்   sanjay_dila@yahoo.com
கே: என்னுடைய கைப்பேசியில் தமிழ் எழுத்துகளை வரவழைக்க முடியுமா? முடியாதா?

ப:
அது என்ன முடியுமா? முடியாதா? தம்பி சின்னக்கண்ணன், முடியாது என்று சொல்லவே கூடாது. அது எனக்குப் பிடிக்காத விஷயம். முடியும் ஆனால் முடியாது என்றுதான் சொல்ல வேண்டும். சரியா. கைப்பேசியை எடுங்கள். Settings >> Phone Settings >> Language >> Select >> தமிழ் என்பதைத் தேர்வு செய்யுங்கள். அவ்வளவுதான். இப்போது வெளியே வாருங்கள். எல்லாம் தமிழிலேயே இருக்கும். மறுபடியும் மாற்ற வேண்டும் என்றால் அதே இடத்திற்குப் போய் ஆங்கிலத்திற்கு மாற்றிக் கொள்ளுங்கள். எனக்கு ஒரு நன்றி சொல்லுங்களேன்.


ஊர் பேர் இல்லை.   (குறும் செய்தி 1.11.2009)
கே: கணினியின் CPU வில் GHz என்று வருகிறது. அப்படி என்றால் அதன் வேகமா?

ப:
ஒரு வீட்டுக்கு சும்மா விருந்தாளியாகப் போகிறீர்கள். வீட்டுக்காரர் கதவைத் திறந்ததும் நேராக வீட்டுக்குள் நுழைகிறீர்கள்.சோபாவில் உட்காருகிறீர்கள். தொலைக் காட்சியைத் திறக்கிறீர்கள். ரிமோட் வேலை செய்ய வில்லை என்று புகார் செய் கிறீர்கள். இந்த மாதிரி நடந்து கொள்ளலாமா. உங்கள் பெயர் என்ன. எந்த ஊரில் இருக்கிறீர்கள். இதைச் சொல்லிவிட்டு தானே கேள்வி கேட்க வேண்டும். அது தானே முறை.

CPU  என்றால் Central Processing Unit. தமிழில் மையச் செயலகம் என்கிறோம். GHz என்றால் Giga Hertz. மையச் செயலகம் எவ்வளவு வேகத்தில் தகவலைப் பரிமாறுகிறது என்பதை Hertz அளவில் கணக்கு எடுக்கிறார்கள். சில கணினிகள் 1.6 GHz வேகத்தில் தகவலைப் பரிமாறிக் கொள்ளும். சில 3.5 GHz வரை போகும். விலையும் அதிகம்.


இரா.தர்மசீலன், கோப்பிசான், கோப்பேங், பேராக்
கே: SUNFOS என்றால் என்ன? அது ஒரு செயலியா?

ப:
SUN JAVAதான் நிரலி. நீங்கள் சொல்லும் SUNFOS இருக்கிறதே அது ஒரு தனியார் நிறுவனம். SUNFOS ENTERPRISE என்பது முழுப் பெயர். ஈப்போ, புந்தோங்கில் இருக்கிறது. இவர்கள் தொலைக்காட்சி, வானொலி, CD Player எனும் குறுவட்டு இயக்கி, Amplifier எனும் இடையகப் பெருக்கி போன்றவற்றைப் பழுது பார்க்கிறார்கள். ஆர்.பிரகாஷ் எனும் இளைஞர் நடத்தி வருகிறார். உதவி தேவைப் படுபவர்கள் 012-3502653 எனும் எண்களுக்கு அழைக்கலாம். நம்முடைய இளைஞர்களை நாம் தான் ஆதரிக்க வேண்டும்.


மஞ்சள் வெயில்   manja_veyil14@gmail.com
கே: சார், நீங்கள் தமிழ்ப் பள்ளிக்கூடங்களுக்கு இலவசமாக இணையத் தளம் செய்து கொடுக்கிறீர்களாமே. உண்மையா?

ப:
ஆமாம். நம்முடைய பொழுது போக்கே இணையத் தளங்கள் தயாரிப்பது. போன வருடம் மட்டும் ஐந்து பள்ளிக்கூடங்களுக்கு இலவசமாகச் செய்து கொடுத்தேன். எந்தக் கட்டணத்தையும் கேட்கவில்லை. இருந்தாலும் சில கசப்பான அனுபவங்கள். அந்த இலவசச் சேவையை மாற்றிக் கொண்டேன். எல்லாமே இலவசமாகப் போனால் அதில் ஒரு பிடிப்பு இல்லாமல் போய்விடுகிறது இல்லையா.

தமிழ்ப் பள்ளிக்கூடங்களுக்கு இணையத் தளங்கள் தயாரிக்க விரும்புகிறவர்கள் 012-5838171 எனும் எண்களுக்கு அழைத்துப் பேசலாம். அது எல்லாம் சரி. உங்கள் பெயர் என்ன உண்மையிலேயே மஞ்சள் வெயில் தானா. நல்ல அழகான பெயர். அந்தக் காலத்து 'மஞ்சள் வெயில் மாலையிலே' பாட்டு ஞாபகம் வருகிறது.

அன்பரசன், செங்காட் ஆசா, தஞ்சோங் மாலிம், பேராக்
கே: சார், என் கைப்பேசியில் ஆங்கில அகராதியை வைத்துக் கொள்ள ஆசைப் படுகிறேன். முடியுமா?

ப:
மறுபடியும் முடியுமா முடியாதா வந்து இருக்கிறது. முதலில் http://www.getjar.com/products/10603/Dictionary எனும் இணைய முகவரிக்குச் செல்லுங்கள். அடுத்து உங்கள் கைப் பேசியின் வகையைத் தேர்வு செய்யுங்கள். வகை என்றால் Model. பதிவிறக்கம் செய்வதற்கான தொடர்பு கிடைக்கும். Download என்பதைச் சொடுக்கி கணினிக்குள் சேமித்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு உங்கள் கைப்பேசிக்கு மாற்றிக் கொள்ளுங்கள்.

(Do you like this article. Please press the Thamilish and Ulavu voting buttons. Thanks.)

1 கருத்து:

  1. கணினி பற்றி உங்கள் தொடர் அருமை சார்
    தொடரட்டும் உங்கள் சேவை

    எனக்கும் பதிவு பின்னுட்டம் போடுவதில் ஒரு பிரச்சினை அதை பற்றி என் பதிவில் எழுதி உள்ளேன் .
    முடிந்தால் இதற்க்கு ஒரு தீர்வு சொல்லவும்
    பதிவு
    http://arumbavur.blogspot.com/2010/04/blog-post_10.html

    பதிலளிநீக்கு