09 May 2010

கணினியும் நீங்களும் - பகுதி 56

மலேசிய நண்பன் ஞாயிறு நாளிதழ் பிரசுரப்பதில் தவிர்க்க முடியாத சில தொழில் நுட்பப் பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. மன்னிக்கவும். இந்தக் கேள்வி பதில் அங்கம் வேறொரு நாளிதழில்  வெளி வர ஏற்பாடுகள் நடப்பதாக வரும் வதந்திகளை நம்ப வேண்டாம். கணினி உலகத்திற்கு என்னை அடையாளம் காட்டியதே நண்பன். அந்த மலேசிய நண்பனுக்கு நான் துரோகம் செய்ய மாட்டேன். மற்ற நாளிதழ்களுக்கு வரலாற்றுக் கட்டுரைகள்  எழுதுவேன். நன்றி

(மலேசிய நண்பன்  09.05.2010 ஞாயிற்றுக் கிழமை நாளிதழில் பிரசுரம் ஆனது. கணினியும் நீங்களும் பழைய கேள்வி பதில்கள் Archive 2009, 2010 எனும் பிரிவுகளின் கீழ் இருக்கின்றன.)

மாலினி, சுங்கை சிப்புட், பேராக்
கே: சிலர் தங்கள் பிள்ளைகளுக்கு கணினி வாங்கிக் கொடுக்க மறுக்கிறார்கள். கேட்டால் விலை அதிகம், பணம் இல்லை என்கிறார்கள். இது சரியா?

ப:
கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று அவ்வையார் சொன்னார். இப்போது அவர் இருந்திருந்தால் 'கணினி இல்லா வீட்டில் கை நனைக்க வேண்டாம்' என்று பாடி இருப்பார். இரண்டு மூன்று வருடங்கள் பழசான கணினிகள் RM300 லிருந்து  RM450 வரை கிடைக்கிறது. ஈப்போ இக்பூங், கோலாலம்பூர் புக்கிட் பிந்தாங், இம்பி, லோயாட் பேரங்காடிகளில்  Second Hand மறு விற்பனைக் கணினிகள் RM250 க்கு கூட விற்கப் படுகின்றன.

நன்றாக வேலை செய்யக் கூடிய கணினிகள். நான் பார்த்து ஆச்சரியப் பட்டுப் போய் இருக்கிறேன். அதைக் கூட மாதம் நூறு ரிங்கிட் என்று கட்டலாம். லோயாட் பேரங்காடியில் நூற்றுக் கணக்கான கணினிக் கடைகள் உள்ளன. அதில் ஒரே ஒரு தமிழரின் கடை. மிக மிக மலிவாக விற்கிறார். விலை ஐந்து காசு கூட இருந்தாலும் பரவாயில்லை. நான் அவரிடம்தான் வாங்குவேன். நீங்கள் போனால் அவருக்கு ஆதரவு கொடுங்கள். நான் சொல்வது உங்களுக்குப் புரியும் என்று நினைக்கிறேன். 

சந்தையில் கணினிகள் மலை மலையாய்க் குவிந்து விட்டன. விலையும்  குறைந்து விட்டது. உலகத்திலேயே மிகக் குறைவான விலையில் கணினிகள் கிடைக்கும் நாடு மலேசியா. அதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

சொந்தக்காரர் ஒருவரிடம் கணினியைக் கற்றுக் கொள்ளுமாறு சொன்னேன். அதற்கு அவர்  'கணினியைக் கற்றுக் கொள்வதால் எனக்கு என்ன நன்மை. மாசம் முடிஞ்சதும் பத்து காசு பாக்கெட்டுக்கு வருமா' என்று கேட்டு அம்மிக் கல்லைத் தூக்கி அடி வயிற்றில் போடுகிறார். நிமிர்த்த முடியாத நிதர்சனங்கள். 

நம் சமுதாயத்தில் பலர், சீரியல்களுக்கு மாலை போட்டு மரியாதை செய்கிறார்கள். அந்த மாதிரியான ஆலாபனைகள் வேண்டாம். தயவு செய்து குழந்தைகளுக்கு ஒரு கணினியை வாங்கிக் கொடுத்து புண்ணியம் சேருங்கள். கணினி மூலமாகத் தமிழ் மொழியைக் கற்றுக் கொடுங்கள். தமிழ் மொழியில் பேச வையுங்கள். ஒரு மொழி மறைந்தால் ஓர் இனம் மறைகிறது என்று சொல்லுங்கள். அடுத்த பிறப்பிலும் அவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும்.


மலர்விழி பார்த்திபன், பண்டார் மேரு ராயா, ஈப்போ
கே: ஒவ்வொரு கணினிக்கும் ஒவ்வொரு IP Address இருக்கும் என்கிறார்களே. அப்படி என்றால் என்ன?

ப:
IP Address என்றால் இணைய விதிமுறை இலக்கம். உலகில் கோடிக் கணக்கான கணினிகள் இருக்கின்றன. இவற்றில் ஒவ்வொன்றையும் தனித் தனியாக வேறு படுத்துவதற்கு இந்த இணைய விதிமுறை இலக்கம் தேவை. உலகில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் தனித் தனி பெயர் இருக்கிறதே அந்த மாதிரிதான். இணையத்தில் இணைந்ததும் ஒவ்வொரு கணினிக்கும் ஓர் இணைய விதிமுறை இலக்கம் கிடைக்கும்.

அந்த இலக்கத்தைக் கொண்டு தான் நமக்கு இணையச் சேவை வழங்கப் படுகிறது. உங்கள் கணினியின் ஐ.பி முகவரி என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் http://www.ip2location.com/ எனும் இணையத் தளத்திற்குப் போய்ப் பாருங்கள். இல்லை என்றால் Start >> Run >> ipconfig என்று தட்டுங்கள். பதில் கிடைக்கும். இந்த இலக்கத்தை வைத்துக் கொண்டு உங்கள் வீட்டு முகவரியைக் கூட தெரிந்து கொள்ள முடியும். அதற்கும் ஒரு நிரலி உள்ளது. காவல் துறையினருக்குப் பெரிதும் பயன் படுகிறது.


ஜெகதீசன் பெருமாள், ஊத்தான் மெலிந்தாங், பேராக் 
கே: கணினி வித்துவான் பில் கேட்ஸ் தமிழராய்ப் பிறந்து இருந்தால் Windows என்பதை ஜன்னல் என்று சொல்லி இருப்பார். அதே போல Anti Virus என்பதை Anty Virus என்று மாற்றி அழைத்திருப்பார் என்று என் நண்பர் சொல்கிறார். நச்சு நிரல் கொல்லி என்பதை Anti Virus என்கிறோம். அப்படி என்றால் Anty Virus என்பதை எப்படி அழைத்திருப்பார்?

ப:
பிரமாதமான கேள்வி. இப்படி எல்லாம் இடக்கு முடக்காய் யோசிக்கிற தன்மை மற்ற எவருக்கு கிடைக்கும்.  உங்கள் நண்பருக்கு அபாரமான மூளை என்று  நான் சொன்னதாகச் சொல்லுங்கள். பாவம் பில் கேட்ஸ். சிவனே என்று அவர் அங்கே சும்மா கிடக்கிறார். அவரைப் போய் வம்புக்கு இழுக்கிறீர்களே நியாயமா! சரி. உங்கள் ஸ்டைலில் Anty என்றால் மாமியார். Virus என்றால் கொல்லி. ஆக, அதைக் கச்சிதமாக 'மாமியார் கொல்லி' என்று அழைக்கச் சொல்லி நமக்கு  கெட்ட பெயர் வாங்கிக் கொடுக்கலாம் என்று நினைக்கிறீர்கள்.


மகேஸ்வரி முத்தையா 
கே: Thumb Drive, Pen Drive என்பதற்குத் தமிழ்ச் சொல் கிடைத்து விட்டதா?
ப:
வாசகர்களில் பலர் அழைத்து புதுப் புதுச் சொற்களைச் சொன்னார்கள். சித்தியவானைச் சேர்ந்த பாஸ்கர் என்பவர் கடவுச் செயலினி எனும் சொல் சரியாக இருக்கும் என்றார்.

கெர்லிங்கைச் சேர்ந்த வீரமாமுனிவர் என்பவர் மின்னல் செருகி என்றார். இன்னொருவர் கட்டை விரல் ஓட்டி என்றார். செருகி, விரல் இடுக்கி, இடைத் தரகி, கணினிக் கடவி, விரல் வில்லை, மினிக் கடவி என்று நிறையச் சொற்கள் வந்தன. இடைத் தாரகை எனும் சொல்லும் நன்றாக இருந்தது.

அவற்றை எல்லாம் வடி கட்டி ஒரே ஒரு சொல்லைத் தனியாக எடுத்து வைத்தேன். மலையரசு என்பவர் சொன்னார். 'விரலி'. Mouse என்பதைச் சுழலி என்று அழைக்கும் போது Thumb Drive என்பதை ஏன் விரலி என்று அழைக்கக் கூடாது.

இந்தச்சொல் ஏற்கனவே புழக்கத்தில் இருப்பதை அறிவேன். அறிஞர் ஜெயபாரதி தமிழாக்கம் செய்து இருக்கிறார். இருந்தாலும் உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும் அல்லவா. ஆக, ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். விரலி. சிரமம் பாராமல் அழைத்து கருத்து கள் கூறிய அனைவருக்கும் நன்றி.


லோகேஸ்வரி  
கே: கணினியில் நாம் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்வதை வாசித்துக் காட்டும் மென்பொருள் இருப்பதை அறிவோம். அதே மாதிரி தமிழில் தட்டச்சு செய்வதைக் கணினி அதையே தமிழில் வாசிக்குமா? அப்படி ஒரு மென் பொருள் இருக்கிறதா?

ப:
தமிழில் பேசும் கணினி வந்து விட்டது. ஆனால் இன்னும் வெள்ளோட்ட வடிவத்தில் இருக்கிறது. வெள்ளோட்டம் என்றால் சோதனை முறை. ஆங்கிலத்தில் Beta Version என்பார்கள். அனேகமாக இந்த வருடத்திற்குள் முழுமை படுத்தி விடுவார்கள் என்று நினைக்கிறேன். பெங்களூரில் இருக்கும் இந்திய அறிவியல் கழகத்தில் பணிபுரியும் பேராசிரியர் ஏ.ஜி.இராமக்கிருஷ்ணன் என்பவர் உருவாக்கி இருக்கிறார். விவரங்களை 
http://mile.ee.iisc.ernet.in:8080/tts_demo எனும் இணையத் தளத்தில் பார்க்கலாம்.

அந்த நிரலி நன்றாக வேலை செய்கிறது. இருந்தாலும் மாற்றங்கள் செய்ய வேண்டி இருக்கிறது. சோதனை முறையில் தானே இருக்கிறது. தமிழில் பேசும் கணினியை உருவாக்கி விட்டார்களே. சந்தோஷப் படுவோம்!

தினேஸ்வரன்  
கே: சார், உங்கள் மூலமாக எனக்கு பெரிய உதவி தேவைப் படுகிறது. Adobe Photoshop எனும் வரைபட நிரலியை இலவசமாகப் பதிவிறக்கம் செய்யும் தளம் எங்கே இருக்கிறது?

ப:
'அடோபே போட்டோஷாப் ' என்பது ஒரு பெரும் வரைபட நிரலி. இது இலவசமாகக் கிடைக்கும் இடத்தைக் கேட்கிறீர்கள். உங்களுக்கே நியாயமாகப் படுகிறதா. கோடிக் கணக்கில் செலவு செய்து நியாயமான விலையில் விற்கப் படும் ஒரு நிரலியை இலவசமாகக் கேட்கிறீர்கள்.  அதன் விலை RM 1200 ரிங்கிட். காசு கொடுத்து வாங்கிப் பயன் படுத்துங்கள். அப்போதுதான் இலவசம் எனும் சொல்லின் மகிமை தெரியும் புரியும்.

அப்துல் சலிகான் 
கே: குறும் செய்திகள் வரும் போது LOL என்றும் ASAP என்றும் சொற்களைப் பயன் படுத்துகிறார்கள். மலேசியத் தன்மையில் இருந்து பார்த்தால் சற்றுக் குழப்பமாகத் தெரிகின்றது. உங்கள் கருத்து?

ப:
குறும் செய்தி என்றால் சொற்களைக் குறுக்கிக் குறைத்து அனுப்பும் முறை. LOL எனும் சொல் சுருக்கத்தைப் பாருங்கள். ஒரு நாய் குரைக்கும் ஒலிச் சொல் மாதிரி இருக்கிறது. ஆனால், அதைப் பிரித்துப் பார்த்தால் Lots of Love அல்லது Laughing Out Loud என்று பிரியும். அதே மாதிரிதான் ASAP என்பதுவும். படித்ததும் புகைச்சல் தான் முதலில் நினைவில் தட்டுப் படுகிறது. As Soon As Possible என்பதன் சுருக்கம். எவ்வளவு žக்கிரமாக முடியுமோ அவ்வளவு žக்கிரம் என்று அர்த்தம்.

ஆக, குறும் செய்தி நடைமுறைக்கு வந்த காலத்தில் இருந்து இந்தச் சொற்கள் பயன் பாட்டில் இருந்து வருகின்றன. மலேசியத் தன்மைக்கு ஒரு மாதிரியாக இருக்கலாம். ஆனால், உலகத் தன்மைக்கு ஒத்து வருகிறதே. இன்னும் சில சொற்களைப் பாருங்கள். hbtu என்றால் happy birthday to you. அடுத்து hand என்றால் have a nice day என்று அர்த்தம். myob என்றால் mind your own business. இப்படி நிறைய உள்ளன. காலத்திற்கு ஏற்றவாறு நாமும் சிலவற்றை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டி இருக்கிறது.

மனோ ரஞ்சன்  
கே: சில சமயங்களில் என்னுடைய கணினி திறக்க வெகு நேரம் எடுத்துக் கொள்கிறது. நான் விண்டோஸ் எக்ஸ்.பி பயன் படுத்துகிறேன். My Computer என்பதைச் சொடுக்கி அதிக நேரம் காத்திருக்க வேண்டி இருக்கிறது. இதற்கு ஏதாவது வழி இருக்கிறதா?

ப:
இதற்கு ஒரு வழி இருக்கிறது. My Computer என்பதைத் திறந்து Tools >> Folder Options எனும் இடத்திற்குப் போங்கள். அங்கே View என்பது இருக்கும் Files and Folders எனும் பகுதிக்கு கீழே Automatically search for network folders and printers என்பது இருக்கும். சரியா. அதற்கு பக்கத்தில் ஒரு சின்ன கட்டம் இருக்கும். அதில் உள்ள ' சரி ' சின்னத்தைச் சொடுக்கி அது இல்லாமல் ஆக்கி விடுங்கள். அவ்வளவுதான். அப்புறம் பாருங்கள். உங்கள் கணினி வேகமாகத் திறக்கும். மனசுக்கும் சந்தோஷமாக இருக்கும்.

வெங்கடாசலம் 
கே: அறிஞர் டாக்டர் ஜெயபாரதியின் முகவரி கிடைக்குமா அல்லது அவருடைய இணையத் தளங்களைச் சொல்ல முடியுமா?

ப:
பல்கலைச் செம்மல், கடாரத் தமிழ் பேரறிஞர் டாக்டர் ஜெயபாரதி மலேசிய இந்தியர்களுக்கு கிடைத்த ஒர் அரிய பொக்கிஷம். உண்மைலேயே இவர்தான் சகல கலா வல்லவர். இவர் தொட்டுப் பேசாத துறையே இருக்க முடியாது. இவர் ஒரு பெரிய ஆழி. Tsunami எனும் சொல்லை ஆழிப் பேரலை என்று தமிழ்ப் படுத்திக் கொடுத்தவர். World Wide Web என்பதை வையக விரிவு வலை என்று தமிழ் படுத்தினார்.

இரண்டு மாதங்களுக்கு முன்னால் நான் சுங்கை பட்டாணி போய் இருந்தேன். அவரைப் பார்க்க முடியவில்லை. அவர் வீடு தெரியும். ஆனால் முகவரி தெரியவில்லை. இருந்தாலும் அவருடைய இணையத் தள முகவரியைத் தருகிறேன். http://www.visvacomplex.com/ இவர் நம்பிக்கை எனும் தைப்பில் தன் முனைப்பு உரை நிகழ்த்தி இருக்கிறார். யூடியுப்பில் இருக்கிறது. போய்ப் பருங்கள். http://www.youtube.com/watch?v=GDUnmxaKmKE. 

(கணினியின் மூலமாக ஜாதக ஏடுகளை தருவிக்க விரும்புகிறவர்கள், அவர்களின் முழுப் பெயர், தகப்பனார் பெயர், பிறந்த தேதி, நேரம், பிறந்த இடம் ஆகியவற்றை மேலே காணும் மின்னஞ்சல் வழியாக அனுப்பி வைக்கவும். SMS மூலமாகவும் கேட்கலாம். ஆனால், பதில் மின்னஞ்சல் வழியாகத் தான் கிடைக்கும். PDF முறைமையில் 45 பக்கங்களுக்குத் தயாரித்துக் கொடுக்கப் படுகிறது. சேவைக் கட்டணம் உண்டு.)

5 comments:

 1. வணக்கம்
  நண்பர்களே

  உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
  உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
  நன்றி
  தலைவன் குழுமம்

  http://www.thalaivan.com

  ReplyDelete
 2. //சில சமயங்களில் என்னுடைய கணினி திறக்க வெகு நேரம் எடுத்துக் கொள்கிறது. நான் விண்டோஸ் எக்ஸ்.பி பயன் படுத்துகிறேன். My Computer என்பதைச் சொடுக்கி அதிக நேரம் காத்திருக்க வேண்டி இருக்கிறது. இதற்கு ஏதாவது வழி இருக்கிறதா?//

  டெஸ்டாப்பில் அதிக கோப்புகளை வாத்தாலும் அல்லது RAM குறைவாக இருந்தாலும் இப்பிரச்சனைகளுக்கு வாய்ப்பு இருக்கிறது. நினைவக செயலி இருக்கும் இடத்தில் அதிக கோப்புகளை வைப்பதை தவிர்த்தல் நலம். பொதுவாக C drive நினைவக செயலியாக இருக்கும் பட்சத்தில் கோப்புகளை D driveவில் சேமித்தல் நலம்.

  ReplyDelete
 3. உங்களின் கட்டுரை மிகவும் பயனாக இருக்கிறது
  உங்கள் சேவை எங்களுக்கு மிகவும் தேவை

  ReplyDelete
 4. என்னால் விரைவாக தட்டசு செய்ய முடியவில்லை
  நான் விரைவாக தடைசு செய்ய எதாவது வழி உண்டா

  ReplyDelete
 5. தங்கள் தளம் மிக்க உதவியாக இருக்கிறது.... என் தள வருகைக்கு மிக்க நன்றி...

  ReplyDelete