16 May 2010

கணினியும் நீங்களும் - பகுதி 57

(கடந்த மலேசிய நண்பன் 16.05.2010 ஞாயிற்றுக் கிழமை நாளிதழில் பிரசுரம் ஆனது. கணினியும் நீங்களும் பழைய கேள்வி பதில்கள் Archive 2009, 2010 எனும் பிரிவுகளின் கீழ் இருக்கின்றன.)

Second Hand Computers and various Computer accessories can be purchased from
Mr.Ravi, Bahau, NS.
The sales office is based in Seremban. 
(HP:0193525278)
Pentium3 Full Set with Monitor, Windows XP -
Price
RM399

Pentium4 Full Set with Monitor, Windows XP -
Price RM499 to RM899

New and used Laptops -
Prices range from RM600++

All second hand PCs are valid with 3months warranty.

ஈஸ்வரன்    eswaran1818@yahoo.com
கே: நம்முடைய தட்டச்சுப் பலகையில் இருக்கும் பொத்தான்களில் Alt என்று ஒரு பொத்தான் இருக்கிறது. இது எதற்காகப் பயன் படுகிறது? சிலர் 'அல்ட்டர்' என்று அழைக்கிறார்கள். சிலர் 'அல்ட்' என்று அழைக்கிறார்கள். எது சரி?

ப:
Alternate எனும் சொல்லின் சுருக்கமே Alt என்பதாகும். 'இரண்டில் ஒன்று ' எனும் பொருளைக் குறிக்கிறது. அதை  'அல்ட்டர்னெட்' என்று அழைப்பதே சரி. இந்தப் பொத்தான் தனியாக வேலை செய்யாது. இதனுடன் வேறு பொத்தானையும்  சேர்த்து அழுத்தினால் பல வேலைகளைச் செய்ய முடியும்.

சில சமயங்களில் கணினி நிலை குத்திச் செயல் படாமல் போகும் நிலைமை ஏற்படும். அப்போது Alt - Ctrl - Del ஆகிய மூன்று பொத்தான்களையும் ஒரே சமயத்தில் சேர்த்து அழுத்த வேண்டும். அப்படி அழுத்தும் போது Windows Task Manager எனும் விண்டோஸ்

செயல் நிர்வாகி என்பவர் ஒருவர் வருவார். அவரை உதவியாக வைத்துக் கொண்டு கணினியை அடைத்து விட்டு மறுபடியும் பாது காப்பான முறையில் தொடக்கி விட முடியும்.

தனபால் மணி    danabalmani@yahoo.com
கே: முரசு அஞ்சல் 10 ஆம் பதிப்பில் உள்ள புதுமைகள் சிறப்புகள் என்ன? கணினி உலகில் நீங்கள் முக்கியமானவர். அதனால் உங்களிடம் கேட்கிறோம்.

ப:
யூனிகோடு குறியீட்டு முறைதான் இதில் உள்ள தலையாய சிறப்புத் தன்மை. இதில் பழைய TSCII, TAB, TAM, AA  குறியீட்டு முறைகள் இல்லை. லிப்கோ தமிழ்ப் பேரகராதி சேர்க்கப் பட்டுள்ளது. நீங்கள் தட்டச்சு செய்யும் போதே தமிழ்ச் சொற்களின் பொருளையும் தேடிப் பார்க்கலாம்.  விண்டோஸ் இயங்கு தளத்தில் உள்ள பழைய ஆவணங்களை யூனிகோடு முறைக்கு எளிதாக மாற்றிக் கொள்ள முடிகிறது.

விலையும் மலிவு. RM 99 ரிங்கிட்டுக்கு விற்பனை செய்கிறார்கள். இன்னும் ஒரு விஷயம். பள்ளி மாணவர்கள் முரசு அஞ்சலில் தட்டச்சு செய்யும் போது எழுத்துக் கூட்டி வாசிக்கின்ற புதிய அமைப்பும் உள்ளது. பொதுவாகச் சொல்ல வேண்டும் என்றால் முரசு அஞ்சல் மலேசியத் தமிழர்கள் உருவாக்கியது. ஆதரவு தர வேண்டியது நம் அனைவரின் கடமை.

அப்புறம் கணினி என்கிற கடலில் அடியேன் ஒரு சின்னப் பொடி. பெரிய பெரிய வார்த்தைகளைப் பயன் படுத்தி மூழ்கடிக்க வேண்டாம்.

பரமேஸ்வரி    premi_santhy@hotmail.com
கே: Unicode என்று ஆங்கிலத்தில் சொல்வதைத் தமிழில் எப்படி சொல்லலாம்? தமிழ் மொழிக்கு இந்த 'யுனிகோட்' அவசியமா?

ப:
கணினிகள் எண்களைக் கொண்டு செயல் படுகின்றன. அவை எழுத்து களையும் மற்ற வரி உருவங்களையும் எண் வடிவத்திலேயே

பார்க்கின்றன. சேமிப்பும் செய்கின்றன. யூனிக்கோடு கண்டு அறியப் படுவதற்கு முன்னர் எழுத்து களுக்கு எண்களை வழங்க நூற்றுக் கணக்கான குறியீட்டு முறைகள் இருந்தன. ஒன்றுக்கு ஒன்று முரண்பாடாக இருந்தன.

அந்த முறைகளைத் தவிர்த்து விட்டு ஒரு எழுத்துக்கு ஓர் எண்ணைக் கொடுக்கிற முயற்சியில் இறங்கி வெற்றியும் பெற்று விட்டார்கள். Fonts எனும் எழுத்துருகள் இல்லாமலே செயல் படும் முறைதான் இந்த யூனிகோடு முறை. எழுத்துரு என்றால் Font. உலகத்தில் உள்ள

எல்லா மொழிகளுக்கும் ஒரே ஒரு குறியீட்டு முறைதான் இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அமைக்கப் பட்டதுதான் இந்த யூனிகோடு முறை.Unicode என்பதைத் தமிழில் ஒருங்குறி என்று அழைப்பதே சரி.  கணினி வந்த புதிதில் ஆளாளுக்கு எழுத்துருகளை உருவாக்கினார்கள்.

அதனால், பெரும் பிரச்னைகள் வந்தன. ஒருவர் 'நித்தியா' என்று ஒரு தமிழ் எழுத்துரு வடிவத்தை உருவாக்குகிறார் என்று வைத்துக்
கொள்வோம்.

அவர் தயாரித்த நித்தியா எழுத்துருகள் நம்மிடம் இருந்தால் தான் அவர் எழுதியதை நாம் படிக்க முடியும். இல்லை என்றால் பதிவு இறக்கம் செய்ய வேண்டும். பதிவு இறக்கம் செய்ய முடியவில்லை என்றால் அவர் எழுதியது எதையும் படிக்க முடியாது. இப்படி தடி எடுத்தவன் எல்லாம் தண்டல் ஆனால் நிலைமை என்ன ஆவது. வேளாண்மை வீடு வந்து சேராது.

அதனால், அமெரிக்காவில் கலிபோர்னியா எனும் இடத்தில் கணினி ஒருங்குறி ஒன்றியத்தை உருவாக்கினார்கள். அதற்கு World Unicode Consortium என்றும் பெயர் வைத்தார்கள். உலக நாடுகள் எல்லாம் உறுப்பியம் வகிக்கின்றன. தமிழ் மொழிக்கும் ஒருங்குறி கொடுத்து விட்டார்கள். இனி எதிர்காலத்தில் அவரவர் இஷ்டத்திற்கு எழுத்துருகளை உருவாக்க முடியாது.

யூனிகோடு முறை நமக்கு கிடைத்த வரப்பிரசாதம் என்று சொல்ல வேண்டும். கூகிள் தேடல் இயந்திரத்தில் போய் தமிழிலேயே  'மலாக்கா முத்துக்கிருஷ்ணன்' என்று தட்டிப் பாருங்கள். பெருமைக்காக சொல்கிறான் என்று நினைக்க வேண்டாம். 13 ஆயிரம் பக்கங்களைக் கொடுக்கிறது. யூனிகோடு எனும் ஒருங்குறி என்கிற முறை இல்லை என்றால் அந்தத் தேடல் இயந்திரம் தமிழில் தேடி இருக்காது. தமிழில் ஆவணஙளைச் சேர்த்தும் வைத்து  இருக்காது. முரசு அஞ்சல் வாங்க வசதி இல்லாதவர்கள்  http://software.nhm.in/products/writer எனும் இடத்திற்குப் போய் நிரலியைப் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.


காயத்ரி    gayatry@wohhup.com
கே: சார், நான் அசல் விண்டோஸ் இயங்கு தளத்தை பணம் கொடுத்து பயன் படுத்தி வந்தேன். திடீரென்று You may be a victim of software counterfeiting எனும் அறிவிப்பும் எச்சரிக்கையும் வருகின்றன. என்ன செய்வது என்று புரியவில்லை. பணம் கொடுத்து வாங்கி இருக்கிறேன். அதனால் அந்த அறிவிப்பைத் தவிர்ப்பதற்கு எனக்கு உரிமை இருக்கிறது. உதவி செய்யுங்கள்.

ப:
உங்கள் வேதனை எனக்கு புரிகிறது. நீங்கள் அசல் இயங்கு தளத்தை வாங்கி இருக்கிறீர்கள். இருந்தும் போலியானது என்று எச்சரிக்கை வருகிறது. இந்த மாதிரியான பிரச்னை இருப்பது மைக்ராசாப்ட் நிறுவனத்திற்கும் தெரியும். அதற்காக அதை நீக்க ஒரு சின்ன மென்பொருள் இருக்கிறது. http://download11.com/get/RemoveWGA.exe எனும் இடத்தில் கிடைக்கும். நாம் காப்புரிமை சட்டத்தை மீறி எதையும் செய்யவில்லை.

எப்படி இயக்குவது என்று சொல்கிறேன். முதலில் Start பொத்தானுக்கு பக்கத்தில் காலியான இடத்தில் வலது சொடுக்கு செய்யுங்கள்.

Task Manager வரும். அதைச் சொடுக்குங்கள். அதில் Processes என்பதைத் தேர்வு செய்யவும். உள்ளே wgatray.exe எனும் கோப்பு இருக்கும். அதை வலது சொடுக்கு செய்து End Process Tree என்பதைத் தட்டி விடவும். அடுத்து கணினியை அடைத்து விட்டு மறுபடியும் திறக்க வேண்டும்.

அதாவது Restart. கணினி தொடக்கம் ஆனதும் தட்டச்சுப் பலகையில் ஆக மேலே இருக்கும் F8 பொத்தானைத் தட்டி விடுங்கள்.  அப்படி

திறக்கும் போது Safe Mode என்பதைத் தேர்வு செய்யுங்கள். உள்ளே போனதும் RemoveWGA.exe ஐ இயக்கி விடுங்கள். அந்த நிரலியை

பதிப்பு எனும் Install செய்ய வேண்டியது இல்லை. அவ்வளவு தான். உங்கள் பிரச்னை தீர்ந்தது. பிரச்னை தொடர்ந்தால் மின்னஞ்சல் அனுப்புங்கள்.

கணினி வாசகன், தஞ்சோங் மாலிம்
கே: Adobe Photoshop நிரலியின் விலை RM 1200 என்று போன வாரம் எழுதி இருந்தீர்கள். ஆனால், நான் RM 10 கொடுத்து வாங்கி இருக்கிறேனே. அது எப்படி?

ப:
ஆமாம். பத்து பேரைக் கூப்பிட்டு கல்யாணம் செய்தால் பத்தாயிரம் செல்வு ஆகும். அப்பா அம்மாவுக்குத் தெரியாமல் தாலி கட்டினால் பத்து வெள்ளியோடு முடிந்து விடும். அது அப்படி தான்.


பச்சையப்பன் ராஜு, தாமான் ஸ்ரீ மூடா, ஷா ஆலம்

கே: உளவு பார்க்கும் Spy Camera மூலம் பெண்களைப் படம் பிடித்து இணையத்தில் வர வைக்கிறார்களே அவர்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

ப:
பெரிசா நினைக்க என்ன இருக்கிறது. அஞ்சு வயசு அச்சு பிச்சுகள் எல்லாம் ஆள் ஆளுக்கு காமரா கைப்பேசிகளோடு அலைகிற

காலத்தில் வாழ்கிறோம். அதனால் நாம் தான் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். தகவல் தொழில்நுட்பம் அந்த அளவுக்கு வளர்ந்து விட்டது. அந்த மாதிரியான அவல நிலைமை வராமல் இருக்க பெண்கள் என்ன செய்ய வேண்டும். சில பாது காப்பு முறைகளைச் சொல்கிறேன்.

1. Cyber Cafe என்று சொல்லப் படும் இணைய மையங்களுக்குப் போகும் பெண்களே! கணினிக்கு மேலே வைக்கப் பட்டிருக்கும் புகைப்படக்

கருவி உங்களுக்குத் தெரியாமல் உங்களைப் படம் பிடித்துக் கொண்டிருக்கலாம். அதனால் போய் உட்கார்ந்த உடன் அதை வேறு பக்கம் திருப்பி விடுங்கள். சந்தேகமாக இருந்தால் அந்த மாதிரியான இடங்களுக்குப் போவதைத் தவிர்க்கலாமே.

2. வெளியூர்களுக்குப் போய் ஓட்டல்களில் தங்க வேண்டி வரலாம். அந்த மாதிரியான நேரங்களில் படுக்கைக்கு அருகில் காமரா இருக்கிறதா என்பதை உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள். இது முக்கியம். குளியல் அறைகள், துணி மாற்றும் அறைகளில் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும்.

3. மிக நெருக்கமாக இருக்கும் போது உங்கள் கணவரே விளையாட்டுத் தனமாய்  உங்களைப் படம் பிடிப்பதாய் இருந்தால் கூட அனுமதிக்கக் கூடாது. கைப்பேசி காமராவில் படம் பிடிக்கலாம். பிடித்ததைப் பார்த்து விட்டு பிறகு அழித்து விடலாம் என்பார். கணவர்தானே என்று நீங்களும் பேசாமல் இருந்து விடுவீர்கள். சொன்ன மாதிரி அதை உங்கள் கணவர் முற்றாக அழித்தும் இருப்பார். ஆனால், கைப்பேசியில் இருந்து அழித்த படங்களை மீட்டு எடுக்க மென்பொருள்கள் உள்ளன. அதே கைப்பேசியை உங்கள் கணவர்  ஏதோ ஒரு கைப்பேசி விற்பனைக் கடைக்கு கொண்டு போய் பழுது பார்க்கக் கொடுக்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.

மேற்சொன்ன மென்பொருளைப் பயன் படுத்தி கைப்பேசியில் இருந்து அழித்த படங்கள், வீடியோக்களை மீட்க முடியும். அதை அப்படியே இணையத்தில் உலா வர வைக்கவும் முடியும். அந்த மாதிரியான கில்லாடித் தனமான மென்பொருள்கள் என்னிடமும் உள்ளன. ஆனால், இதுவரை பயன் படுத்தியது இல்லை. அதனால், ஜாக்கிரதை! ஜாக்கிரதை!

4. காதலுக்கு கண் இல்லை என்பார்கள். காதல் இனிக்கும் போது இமய மலையை இழுத்து வந்து காலடியில் போடுவார்கள். அதே காதல் கசக்கும் போது வில்லனாக மாறிப் போவார்கள். அதனால் காதலிக்கும் போது காதலனிடம் கவனமாய் இருங்கள். படம் பிடிக்க அனுமதிக்கவே வேண்டாம். இந்தக் காலத்து காதலர்களில் பணத்துக்காக எதையும் செய்யும் சில பஞ்சமா பாதகர்களும் இருக்கிறார்கள்.

எல்லோரையும் சொல்லவில்லை. பத்திரம். பத்திரம். சேலை கட்டிப் பிடித்த படத்தை நிர்வாணப் படமாக மாற்றிக் கொடுக்கும் வரைகலை நிரலிகள் வந்துவிட்டன. அதை வைத்து அவர்கள் என்ன என்னவோ செய்ய முடியும்.

5. படிக்கிற பிள்ளைகள் அதிக நேரம் அரட்டையாடல் Chatting செய்கிறார்கள் என்றால் பெற்றோர்கள் அறிவுரை சொல்ல வேண்டும். தயவு செய்து அதிகாரத்தைப் பயன் படுத்த வேண்டாம். கைப் பேசியில் தொங்கிக் கொண்டு கம்ப ராமாயணம் படிக்கிறவர்களும் இருக்கிறார்கள்.

அப்படிப் பட்டவர்களிடம் நாசுக்காகச் சொல்லி திசையைத் திருப்ப வேண்டும். இறுக்கிப் பிடித்தால் வேறு வினையே வேண்டாம்.

6. கடைசியாக ஒன்று. இளம்  பெண்களே! பொது இடங்களுக்கு போகும் போது கொஞ்சம் நாகரிகமாக உடை அணிந்து போங்கள். என்னையும் பார் என் அழகையும் பார் கிழிஞ்சு போன என் சிலுவாரையும் பார் என்று பாடிக் கொண்டு போக வேண்டாம். அது சும்மா இருக்கிற காமரா கைப்பேசிகளுக்கு வேலை கொடுப்பது மாதிரி.

கலைப் பித்தன், குவாந்தான், பகாங்
கே: சார், சென்ற வாரம் சுங்கை சிப்புட் மாலினி என்பவருக்கு பதில் கொடுத்தீர்கள். நல்ல கேள்வி நல்ல பதில். உங்களுடைய பதிலில் இலக்கணப் பிழை இருந்தது. பழசான கணினிகள் 400 ரிங்கிட் வரை கிடைக்கிறது என்று பதில் கொடுத்தீர்கள். கணினிகள் என்பது பன்மை. கிடைக்கிறது என்பது ஒருமை. பன்மையில் தொடங்கி ஒருமையில் முடிக்கக் கூடாது. இனிமேல்  இலக்கணப் பிழைகளைகள் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

ப:
தவறைச் சுட்டிக் காட்டியதற்கு நன்றி. மனதிற்குச் சந்தோஷமாகவும் அதே சமயத்தில் கொஞ்சம் நெருடலாகவும் இருக்கிறது. பரவாயில்லை.  பிழைகள் வராமல் பார்த்துக் கொள்கிறோம்.

அஜேந்திரா செல்வம்   
கே: Adobe Page Maker என்பது பழைய செயலி என்கிறார்கள். உண்மையா?

ப:
உண்மைதான். புத்தகங்கள், திருமண அழைப்பிதழ்கள், விளம்பரங்கள், அறிவிப்பு அறிக்கைகள் தயாரித்து வெளியிடுபவர்கள் இந்தப் பேஜ் மேக்கர் செயலியைப் பயன் படுத்தி வருகிறார்கள். இந்தச் செயலி யூனிகோடு குறியீட்டு முறையைச் சரியாக ஏற்றுக் கொள் வதில்லை என்பது ஒரு கசப்பான உணர்வு. உலகமே யூனிகோடு ஒருங்குறி முறைக்கு மாறி விட்டது. ஆகவே நாமும் மாற வேண்டும்.

இந்தச் செயலியைத் தயாரித்த அடோபி நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன்னால் அதன் தயாரிப்பை நிறுத்திக் கொண்டது. In Design எனும் புதிய செயலியை அறிமுகம் செய்தது. மேற்கத்திய நாடுகளில் பேஜ் மேக்கரை விட்டு விட்டு இன் டிசைன் செயலிக்குப் போய் விட்டார்கள்.  இன் டிசைன் இலகுவாகவும் எளிமையாகவும் இருக்கிறது.
மொஹாய்தீன் ஜாபார், லாபு செண்டாயான்
கே:செம்மொழி மாநாட்டில் தமிழ் எழுத்துகளைச் சீர்திருத்தம் செய்யப் போகிறார்களாம். இணையத்தில் பெரிய வாதங்கள் நடக்கின்றன. மலேசியத் தமிழைப் பற்றிய ஒரு தவறான கருத்தை உருவாக்கி வருகிறார்கள். உங்கள் கருத்து என்ன சார்?

ப:
நானும் படித்தேன். சரி. உலகத்திலேயே மலேசியாவிலும் சிங்கையிலும் தான் தமிழ் நன்றாக மூச்சு விட்டு வாழ்கின்றது. இந்த இடத்தில் ஒன்றைச் சொல்ல ஆசைப் படுகிறேன். தமிழ் மொழியின் உரிமைகளுக்காக 1970களில் ஒரு போராட்டம் நடந்தது. நானும் அந்தப் போராட்டத்தில் போர்க் கொடியைத் தூக்கினேன். ஆர்ப்பாட்டத்தில் இறங்கினேன். அப்புறம் என்ன. உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்டேன். என்னோடு ஒன்பது பேர். அவர்களில் ஒருவர்தான் அமரர் கண்ணனாத்து.

மலேசியாவின் கெமுந்திங் சிறையில் பல மாதங்கள் வேதனைகளை அனுபவிக்க வேண்டிய நிலைமை. தாய் மொழிக்காக அந்த மாதிரியான வேதனைகளை எல்லாம் அனுபவித்து இருக்கிறோம்.. ஒரு மொழிக்கான உரிமையின் வேதனையை அதன் விளிம்பில் இருந்து ரசித்தவன் நான். ஆக, இதை எழுதுவதற்கு எனக்கு உரிமை இருக்கிறது. முறையாக ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் படித்தும் அரசாங்கம்  அங்கீகரிக்காமல் போனதும் மற்றொரு விஷயம். 

தமிழ் மொழி உயிர் வாழ வேண்டும் என்பதற்காக இங்கே அரசாங்கத்துடன் மோதி போராட வேண்டிய நிலைமை. ஆனால், அங்கே செம்மொழி எனும் பெயரில் இருக்கின்ற தமிழ் எழுத்துகளைக் சீர்திருத்தம் செய்யது இருப்பதையும் இல்லாமல் ஆக்குவது. ஒன்று சொல்வேன்.  சொந்த பந்தங்கள் இல்லாமல் வாழலாம். ஆனால், சூடு சொரணை இல்லாமல் வாழக் கூடாது.

1 comment:

  1. மொழிக்காக சிறை சென்ற உங்களை நான் வணங்குகிறேன் வாழ்க...

    ReplyDelete