01 ஜூன் 2010

கணினியும் நீங்களும் - பகுதி 58

(இந்தக் கேள்வி பதில் அங்கம் 31.05.2010 மலேசிய நண்பன்  ஞாயிற்றுக் கிழமை நாளிதழில் பிரசுரம் ஆனது. கணினியும் நீங்களும் பழைய கேள்வி பதில்கள் Archive 2009, 2010 எனும் பிரிவுகளின் கீழ் இருக்கின்றன.)

காஞ்சனா, தம்பின்  
கே: அடுத்த மாதம் கோயம்புத்தூரில் நடைபெற இருக்கும் செம்மொழி நாட்டில் தமிழ் மொழியின் எழுத்துகளைச் சீர்த்திருத்தம் செய்யப் போகிறார்களாம்.  அதன்படி
இ, ஈ, உ, ஊ ஆகிய எழுத்து வரிசைகளில் உள்ள 72 உயிர்மெய் எழுத்துகளை மாற்றி அமைக்கப் போகிறார்களாம்.  உண்மையா? உங்கள் கருத்து என்ன?

ப:
மொத்தத்தில்  தமிழில் உள்ள 246 எழுத்துகளையும்  எடுத்து விட்டு 72 எழுத்து களாக மாற்றப் போகிறார்கள். இது தான் கதை. இ, ஈ, உ, ஊ ஆகிய நான்கு எழுத்து வரிசைகளில் 72 உயிர்மெய் எழுத்துகள் உள்ளன.

அந்த 72 உயிர்மெய் எழுத்துகளையும் அப்படியே மாற்ற வேண்டும் என்று சிலர் திட்டம் தீட்டி செயல் படுத்தி வருகிறார்கள்.

சி, சீ, சு, சூ, தி, தீ, து, தூ, பி, பீ, பு, பூ போன்ற எழுத்துக்கள் எதிர்காலத்தில் உலகளாவிய நிலையில் பெரும் பிரச்னை கொடுக்கப் போகிறதாம். அதனால் அவற்றை மாற்ற வேண்டும் என்கிறார்கள். அதோடு விட்டால் பரவாயில்லை. நான்கு புதிய எழுத்துக்களையும் கொண்டு வருகிறார்கள்.

அவை மத்திய கிழக்கு நாடுகளின் புழக்கத்திற்கு கொண்டு போகின்றன. அந்தப் புதிய எழுத்துகள் ஜிலேபி வடிவத்தில் ரொம்ப அழகாக இனிப்பாகவும்  இருக்கின்றன.

குழந்தைகளுக்கு மிட்டாய் ஜிலேபி என்றால் பிடிக்கும் இல்லையா. அதனால் அந்த எழுத்துகளையும் பார்த்துச் சிரித்துக் கொண்டே படிப்பாரகள் என்று அப்படி  வடிவம் அமைத்து இருக்கிறார்கள்.

சீர்திருத்தம் செய்யப் படும் தமிழின் உகர எழுத்துகளை இடமிருந்து வலது புறமாக அராபிய ஜாவி எழுத்துகளைப் போல எழுத வேண்டி வரும். சொல்லப் போனால் தமிழின் 246 எழுத்துகளை புதிய வடிவத்தில் 72 எழுத்துகளுக்குள் அடக்கி விட வேண்டும் என்று சொல்கிறார்கள்.

இரண்டாயிரம் எழுத்துகளை வைத்து இருக்கும் சீனர்களே அமைதியாக இருக்கிறார்கள். 246 எழுத்துகளை வைத்து இருக்கும் நாம் ஏன் அய்யா இப்படி ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும். புரியவில்லை. தமிழ் எழுத்துகள் செய்த பாவம் என்ன என்றும் தெரியவில்லை.

ஒரே அடியாக 246 எனும் எண்களின்  நடுவில் இருக்கும் 4ஐ பிடுங்கி விட்டால் ரொம்ப நல்லா இருக்கும் என்பது என் தனிப்பட்ட கருத்து. சீர்திருத்தமும் செம்மையாக இருக்கும் இல்லையா.

அதைவிட 26 ஆங்கில எழுத்துகளை அப்படியே தமிழுக்கு கொண்டு வந்து அம்மா என்று எழுதுவதற்குப் பதில் AMMA என்று ரோமானிய வடிவத்தில் எழுதி விடுவதே நல்லது என்பது என்னுடைய கருத்து.  தமிழ் எழுத்துகளே தேவை இல்லை. ரொம்ப சிம்பளாகப் போய் விடும். செத்துப் போன நீரோ திரும்பி வந்து பிடில் வாசிக்கட்டுமே.

ஆக, அந்தத் திட்டத்தை செம்மொழி மாநாட்டில் நிறைவேற்றம் செய்யப் போகிறார்கள். சபாஷ் சரியான போட்டி! மாற்றுங்கள் என்று சொல்லிக் கொண்டு மலேசியாவில் இருந்தும் சிலர் போகிறார்கள். பாவம், அவர்களைக் குறைச் சொல்லக் கூடாது.

அவர்களில் சிலர்  கஷ்டப் பட்டு எழுதிய நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள் எல்லாம் எதிர்காலத்தில் யாராலும் படிக்க முடியாமல் போகப் போகிறது. ஏன் என்றால் புதிய தமிழ் எழுத்துகள்தான் செல்லுபடி ஆகும். அப்புறம் எழுதியதை எல்லாம் புதிதாக மாற்ற வேண்டி இருக்கும்.

புதிய புத்தகங்களை அச்சிடுபவர்களின் இல்லங்களில் குபேர சாமியாரின் சொல் வாக்குதான் செல்வாக்காக இருக்கும். வாழ்க செம்மொழி மாநாட்டின் செம்மலகள்.

குமாரி நளினி  nalini1882@gmail.com

கே: கணினியை அடைக்காமல் நீண்ட நேரம் பயன் படுத்தினால் அதனால் கணினிக்குப் பாதிப்பு ஏற்படுமா? கணினியை அடிக்கடி திறந்து அடிக்கடி அடைப்பதால் அதற்கு பாதிப்பு ஏற்படுமா?

ப:
சில மாதங்களுக்கு முன்னால் இதே மாதிரியாக ஒரு கேள்வி கேட்கப் பட்டிருந்தது. கணினியை அடிக்கடி அடைத்து திறந்து, அதாவது On and Off செய்து  கொண்டிருந்தால் அது ரொம்ப நாளைக்கு நீடிக்காது என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.

அது சீக்கிரமாகக் கெட்டுப் போக வாய்ப்பும் இருக்கிறது.  கணினியை On செய்து திறக்கும் போது ஒரு வகையான மின் அதிர்வு  ஏற்படும். அந்த அதிர்வு ஒவ்வொரு முறையும் அதிர்ச்சியை உண்டாகும்.

ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை திறக்கிறீர்கள்-அடைக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு முறையும் அத்தகைய மின் அதிர்வுகளைக் கணினியின் உள்ளே இருக்கும் சாதனங்கள் தாங்கிக் கொள்ள வேண்டி இருக்கும்.

இப்படியே அடைத்துத் திறந்து கொண்டிருந்தால் ஒரு நாளைக்கு கணினி நிரந்தரமாகக் கண்களை மூடிக் கொள்ளும். அதனால், கணினியில் செய்ய வேண்டிய வேலைகளை ஒரே தடவையில் செய்து முடித்து விடுங்கள்.

பின்னர் அதற்கு சில மணி நேரம் ஓய்வு கொடுக்க வேண்டும். சும்மா சும்மா திறப்பதும் சும்மா சும்மா அடைப்பதுமாக இருந்தால், பாவம் அந்தக் கணினிதான் என்ன செய்யும்.

நீங்களே சொல்லுங்கள். அதற்கு மட்டும் வாய் இருந்தால் உங்களைத் திட்டித் தீர்த்து விடும். கணினியை நீண்ட நேரம் அடைக்காமல் வைத்திருந்தால் அதிகமாகச் சூடு ஏறலாம். அதனால் கணினி சேதம் அடைய வாய்ப்பு இருக்கிறது.

மா.மணிவண்ணன், கம்பார்
கே: இணையம் என்றால் என்ன. இணையப் பக்கம் என்றால் என்ன. ஒரே மாதிரியாகத் தானே இருக்கின்றன.

ப:
இரண்டும் ஒன்றல்ல. இணையம் தான் முதன் முதலில் வந்தது. இணையத்தின் மூலமாகப் பிறந்ததுதான் இணையத் தளம். இணையம் என்பது Internet. அது ஒரு தொழில்நுட்பம். World Wide Web என்று சொல்லப் படும் வையக விரிவு வலையைத்தான் நாம் பொதுவாக இணையம் என்று சொல்கிறோம்.

இணையம் என்பது ஒரு தொழில்நுட்பப் பொருள். இணையத்தின் பயன்பாடுகள்தான் இணையப் பக்கம், இணையத்தளம், மின்னஞ்சல் போன்றவை எல்லாம்.

இணையத்தின் உள்ளே நுழைந்ததும் நீங்கள் பார்க்கும் அகப் பக்கங்களை இணையப் பக்கங்கள் என்று சொல்கிறோம். ஓர் இணையத் தளத்தில் பல இணையப் பக்கங்கள் இருக்கும். ஆக, எல்லாவற்றையும் ஒட்டு மொத்தமாக இணையம்  என்கிறோம். 

குமாரி. ராஜாத்தி, பெக்கான் பாரு, கோப்பேங்

கே: என்னுடைய கணினி ஆமை போல நகர ஆரம்பிக்கிறது. ரொம்ப வேதனையாகவும் கஷ்டமாகவும் இருக்கிறது. கணினியை On செய்து விட்டு காலைப் பசியாறுதல் முடித்து விட்டு வந்தாலும் திரையில் எதுவும் வராது தெரியாது. நான் பயன் படுத்துவது விண்டோஸ் XP. என்ன செய்யலாம்?

ப:
இதற்கு நிறைய காரணங்களைச் சொல்லலாம். நீங்கள் மட்டும் அந்தக் கணினியைப் பயன்படுத்துகிறீர்களா இல்லை வீட்டில் உள்ள மற்றவர்களும் பயன்படுத்துகிறார்களா என்று தெரியவில்லை. சரி, எப்படி இருந்தாலும் உடனடியாகச் செய்ய வேண்டிய  சில நிவாரணங்களைச் சொல்கிறேன்.

தேவையில்லாத ஆவணங்கள், படங்கள், வீடியோ படங்கள், கோப்புகள், பாடல் கோப்புகள், பாடல் காட்சிகள், நிரலிகள் போன்றவை உங்கள் Hard Disc எனும் தட்டகத்தை அடைத்துக் கொண்டிருக்கலாம்.

கணினியால் மூச்சுவிட முடியாத நிலைமைகூட வந்திருக்கலாம். தேவையில்லாத Programs எனப்படும் நிரலிகளை அகற்றிவிடுங்கள். உங்களுக்குத் தெரியாமல் யாராவது பெரிய விளையாட்டு நிரலிகளைப் போட்டு வைத்திருக்கலாம். 

Control Panel க்குப் போய் அங்கே Add or Remove Programs எனும் பகுதியில் இந்த விளையாட்டுகளை அப்புறப்படுத்தி விடுங்கள். இது மிகவும் முக்கியம். 

முகப்புத் திரையில் My Computer எனும் சின்னத்தில் சுழலியை வையுங்கள். வலது புற சொடுக்கு செய்யுங்கள். அதில் Manage எனும் சொல்லைச் சொடுக்குங்கள்.

உள்ளே போய் Disk Defragmenter என்பதைத் தட்டிவிடுங்கள். உங்கள் தட்டகத்தின் பிரிவுகள் காட்டப்படும்.

அவற்றை ஒவ்வொன்றாக Defragment எனும் சுத்திகரிப்பு செய்யுங்கள். அதிக நேரம் பிடிக்கலாம். எல்லாம் முடிந்த பிறகு கணினியை Restart எனும் மறு  தொடக்கம் செய்யுங்கள். இப்போது உங்கள் கணினி வேகமாக வேலை செய்யும். 

2 கருத்துகள்:

  1. வணக்கம் ஐயா.

    எ.சீர்மை பற்றி நகைச்சுவையாகவும் நாசுக்காகவும் பதில் சொல்லி இருக்கிறீர்கள். மகிழ்ச்சி. இது குறித்த கருத்து பரவலை இன்னும் அதிகப்படுத்த வேண்டும்.

    மலேசியாவில் இது குறித்து துளிகூட அறியாமல் இருக்கிறார்கள். நாளிதழ்களும் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை.

    ஆனால், உலக அளவில் மலேசியாவின் எதிர்ப்புக் குரலும் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது.

    //மொத்தத்தில் தமிழில் உள்ள 246 எழுத்துகளையும் எடுத்து விட்டு 72 எழுத்து களாக மாற்றப் போகிறார்கள். இது தான் கதை. இ, ஈ, உ, ஊ ஆகிய நான்கு எழுத்து வரிசைகளில் 72 உயிர்மெய் எழுத்துகள் உள்ளன.//

    இ, ஈ, உ, ஊ வரிசையில் உள்ள 72 எழுத்துகளின் வடிவத்தை மாற்றுவதற்குதான் முயற்சி நடக்கிறது. 246 எழுத்துகளை 72ஆக குறைப்பதற்கு அல்ல.

    தமிழ் எழுத்துகளை மாற்றி அமைத்தால் மொழி வளரும் என்று சிலர் 'கண்டுபிடித்து' இருப்பது நகைப்புக்கு உரியது மட்டுமல்ல; அறிவாண்மைக்கு எதிரானதும்கூட.

    மாற்றம் என்பதுதான் மாறாத விதி என்று சொல்லி வக்காளத்து வாங்கும் வ.செ.கு அணியினர், தமிழை சின்னபின்னப்படுத்த துடிக்கிறார்கள் என்பதே மாறாத உண்மை.

    பதிலளிநீக்கு
  2. நல்ல தகவல்கள் - கேள்வி பதில்கள் அருமை - நன்றி நண்பரே

    நல்வாழ்த்துகள் முத்துகிருஷ்ணன்
    நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு