06 ஜூன் 2010

கணினியும் நீங்களும் - பகுதி 59

(இந்தக் கேள்வி பதில் அங்கம் 06.06.2010 மலேசிய நண்பன்  ஞாயிற்றுக் கிழமை நாளிதழில் பிரசுரம் ஆனது. கணினியும் நீங்களும் பழைய கேள்வி பதில்கள் Archive 2009, 2010 எனும் பிரிவுகளின் கீழ் இருக்கின்றன.)

கார்த்திகேயன், கோம்பாக், சிலாங்கூர்
கே: நாம் வாங்கிய கைப்பேசி அசலானதா அல்லது போலியானதா என்று எப்படி கண்டுபிடிப்பது. ஏன் என்றால் குறைந்த விலைக்கு நிறைய வசதிகளுடன் சீனாவிலிருந்து கைப்பேசிகள் வருகின்றன.

ப:
உலகத்தில் உள்ள எல்லா கைப் பேசிகளுக்கும் IMEI எனும் தனிப்பட்ட அசல் தர இலக்கங்களைக் கொடுத்து இருப்பார்கள். International Mobile Equipment Identification. அதைக் கண்டுபிடிக்க வேண்டும் என்றால் உங்கள் கைப்பேசியில் *#06# என்று தட்டுங்கள். உடனே 15 எண்களைக் கொண்ட IMEI திரையில் வரும். அதைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு http://www.numberingplans.com/?page=analysis&sub=imeinr எனும் இணையத் தளத்திற்குப் போய் அந்த எண்களை உள் புகுத்துங்கள். உங்கள் கைப்பேசி அசலா போலியா என்பது தெரிந்து விடும். தவிர, உங்கள் கைப்பேசியைப் பற்றிய எல்லா தகவல்களும் கிடைத்து விடும்.

குமாரி நளினி  nalini1882@gmail.com

கே: கணினியை அடைக்காமல் நீண்ட நேரம் பயன் படுத்தினால் அதனால் கணினிக்குப் பாதிப்பு ஏற்படுமா? கணினியை அடிக்கடி திறந்து அடிக்கடி அடைப்பதால் அதற்கு பாதிப்பு ஏற்படுமா?

ப:
சில மாதங்களுக்கு முன்னால் இதே மாதிரியாக ஒரு கேள்வி கேட்கப் பட்டிருந்தது. கணினியை அடிக்கடி அடைத்து திறந்து, அதாவது On and Off செய்து  கொண்டிருந்தால் அது ரொம்ப நாளைக்கு நீடிக்காது என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். அது சீக்கிரமாகக் கெட்டுப் போக வாய்ப்பும் இருக்கிறது.  கணினியை On செய்து திறக்கும் போது ஒரு வகையான மின் அதிர்வு  ஏற்படும். அந்த அதிர்வு ஒவ்வொரு முறையும் அதிர்ச்சியை உண்டாகும்.

ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை திறக்கிறீர்கள்-அடைக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு முறையும் அத்தகைய மின் அதிர்வுகளைக் கணினியின் உள்ளே இருக்கும் சாதனங்கள் தாங்கிக் கொள்ள வேண்டி இருக்கும்.

இப்படியே அடைத்துத் திறந்து கொண்டிருந்தால் ஒரு நாளைக்கு கணினி நிரந்தரமாகக் கண்களை மூடிக் கொள்ளும். அதனால், கணினியில் செய்ய வேண்டிய வேலைகளை ஒரே தடவையில் செய்து முடித்து விடுங்கள்.

பின்னர் அதற்கு சில மணி நேரம் ஓய்வு கொடுக்க வேண்டும். சும்மா சும்மா திறப்பதும் சும்மா சும்மா அடைப்பதுமாக இருந்தால், பாவம் அந்தக் கணினிதான் என்ன செய்யும். நீங்களே சொல்லுங்கள். அதற்கு மட்டும் வாய் இருந்தால் உங்களைத் திட்டித் தீர்த்து விடும். கணினியை நீண்ட நேரம் அடைக்காமல் வைத்திருந்தால் அதிகமாகச் சூடு ஏறலாம். அதனால் கணினி சேதம் அடைய வாய்ப்பு இருக்கிறது.

மா.மணிவண்ணன், கம்பார்
கே: இணையம் என்றால் என்ன. இணையப் பக்கம் என்றால் என்ன. ஒரே மாதிரியாகத் தானே இருக்கின்றன.

ப:
இரண்டும் ஒன்றல்ல. இணையம் தான் முதன் முதலில் வந்தது. இணையத்தின் மூலமாகப் பிறந்ததுதான் இணையத் தளம். இணையம் என்பது Internet. அது ஒரு தொழில்நுட்பம். World Wide Web என்று சொல்லப் படும் வையக விரிவு வலையைத்தான் நாம் பொதுவாக இணையம் என்று சொல்கிறோம்.

இணையம் என்பது ஒரு தொழில்நுட்பப் பொருள். இணையத்தின் பயன்பாடுகள்தான் இணையப் பக்கம், இணையத்தளம், மின்னஞ்சல் போன்றவை எல்லாம். இணையத்தின் உள்ளே நுழைந்ததும் நீங்கள் பார்க்கும் அகப் பக்கங்களை இணையப் பக்கங்கள் என்று சொல்கிறோம். ஓர் இணையத் தளத்தில் பல இணையப் பக்கங்கள் இருக்கும். ஆக, எல்லாவற்றையும் ஒட்டு மொத்தமாக இணையம்  என்கிறோம். 

குமாரி. ராஜாத்தி, பெக்கான் பாரு, கோப்பேங்

கே: என்னுடைய கணினி ஆமை போல நகர ஆரம்பிக்கிறது. ரொம்ப வேதனையாகவும் கஷ்டமாகவும் இருக்கிறது. கணினியை On செய்து விட்டு காலைப் பசியாறுதல் முடித்து விட்டு வந்தாலும் திரையில் எதுவும் வராது தெரியாது. நான் பயன் படுத்துவது விண்டோஸ் XP. என்ன செய்யலாம்?

ப:
இதற்கு நிறைய காரணங்களைச் சொல்லலாம். உடனடியாகச் செய்ய வேண்டிய  சில நிவாரணங்களைச் சொல்கிறேன்.

தேவையில்லாத ஆவணங்கள், படங்கள், வீடியோ படங்கள், கோப்புகள், பாடல் கோப்புகள், பாடல் காட்சிகள், நிரலிகள் போன்றவை உங்கள் Hard Disc எனும் தட்டகத்தை அடைத்துக் கொண்டிருக்கலாம்.

கணினியால் மூச்சுவிட முடியாத நிலைமைகூட வந்திருக்கலாம். தேவையில்லாத Programs எனப்படும் நிரலிகளை அகற்றிவிடுங்கள். உங்களுக்குத் தெரியாமல் யாராவது பெரிய விளையாட்டு நிரலிகளைப் போட்டு வைத்திருக்கலாம்.  Control Panelக்குப் போய் அங்கே Add or Remove Programs எனும் பகுதியில் இந்த விளையாட்டுகளை அப்புறப்படுத்தி விடுங்கள். இது மிகவும் முக்கியம். 

முகப்புத் திரையில் My Computer எனும் சின்னத்தில் சுழலியை வையுங்கள். வலது புற சொடுக்கு செய்யுங்கள். அதில் Manage எனும் சொல்லைச் சொடுக்குங்கள். உள்ளே போய் Disk Defragmenter என்பதைத் தட்டிவிடுங்கள். உங்கள் தட்டகத்தின் பிரிவுகள் காட்டப்படும்.

அவற்றை ஒவ்வொன்றாக Defragment எனும் சுத்திகரிப்பு செய்யுங்கள். அதிக நேரம் பிடிக்கலாம். எல்லாம் முடிந்த பிறகு கணினியை Restart எனும் மறு  தொடக்கம் செய்யுங்கள். இப்போது உங்கள் கணினி வேகமாக வேலை செய்யும். 

மேலும் சில தகவல்களைச் சொல்கிறேன்.

1. டிஜிட்டல் காமிரா மூலம் எடுத்த படங்களை நேரடியாக Wallpaper ஆக்க வேண்டாம். ஏன் என்றால் இந்தப் படங்கள் கணினியில் அதிகப் படியான மெமரி எனும் நினைவாற்றலை எடுத்துக் கொள்ளும்.

2. ஒரு நிரலியை மூடிய பிறகு Desktop எனும் மேசைத் திரையில் வைத்து Refresh எனும் புத்தாக்கம் செய்யுங்கள்.

3. கணினி முழுமையாக Boot ஆகி செயல் படுவதற்கு முன்னால் எந்த நிரலியையும் உடனடியாகத் திறக்க வேண்டாம்.

4. AutoCAD, 3D Studio MAX, Corel Draw, Photoshop போன்ற பெரிய நிரலிகளைத் தயவு
செய்து C Drive ல் உள்ள இயங்குதளத்தில் பதிக்க வேண்டாம். வேறு ஒரு Partition எனும் வன் தட்டுப் பிரிவில் பதியுங்கள். கணினி வேகமாக இயங்கும்.

5. மேசை திரையில் அதிகமான Shortcut களை உருவாக்கி வைக்க வேண்டாம். பெரிய அளவிலான கோப்புகளைச் சேர்த்து வைக்க வேண்டாம்.

6. அடிக்கடி Recycle Bin ஐ சுத்தப் படுத்தி விடுங்கள்.

1 கருத்து:

  1. திரு. முத்துக்கிருஷ்ணன்,
    உங்களின் கணினியும் நீங்களும் 56-59 வரை படித்தேன்(தமிலிஷ் அகப்பக்கத்தில்) மலேசியாவில் இருந்துகொண்டு உங்களைப் பற்றி தெரியாமல் இருந்ததற்கு மிகவும் வெட்கப்படுகிறேன். தங்களின் அளப்பரிய பணிக்கு என் உளமார்ந்த பாராட்டுகள்.
    அன்புடன்,
    தணிகாசலம்.

    பதிலளிநீக்கு