12 டிசம்பர் 2010

கணினியும் நீங்களும் - பகுதி 81


 
மாலதி சுகுமாறன், சுங்கை பீலேக், சிலாங்கூர்
கே: கணினியில் வேலை செய்து கொண்டு இருக்கும் போது திடீரென்று தொலைபேசி அழைப்புகள் வருகின்றன. அவற்றை எடுத்துப் பேச போய் வருவதற்குள் என் வீட்டு வாண்டுகள் கணினியில் இருக்கும் வேலைகளைக் கெடுத்து வைத்து விடுகிறார்கள். கணினியை அடைத்து வைக்கத் தற்காலிகமாக வழி இருக்கிறதா?

ப:
பிள்ளைகள் இல்லாத வீடுகளும் இல்லை. கைப்பேசிகள் இல்லாத வீடுகளும் இல்லை. கணினியின் சுழலியை அப்படி இப்படி ஆட்டிக் கணினியை ஒரு வழி பண்ணி வைத்து விடுவார்கள். ஆனால், ஒன்றும் தெரியாதது மாதிரி இருப்பார்கள். சில சமயங்களில் என் பேரப் பிள்ளைகளும் அழகு அழகாய்க் கோலங்களும் போட்டு வைத்து இருப்பார்கள்.

கேட்டால் சும்மா செய்தேன் என்பார்கள். என்ன செய்வது. ஏசிவிட்டால் இரண்டு நாட்களுக்குப் பேச மாட்டார்கள். இதற்கு ஒரு வழி இருக்கிறது. Kids Key Lock எனும் ஒரு சின்ன நிரலி இருக்கிறது. அதைப் பதிவிறக்கம் செய்யுங்கள். கணினியில் பதிப்பியுங்கள். அதில் Mouse Lock என்பதில் தேர்வு செய்து சுழலியை இயங்காமல் செய்து விடுங்கள். உங்களுடைய கடவுச் சொல்லைத் தட்டச்சு செய்தால் தான் சுழலி மறுபடி வேலை செய்யும்.

பதிவிறக்கம் செய்ய வேண்டிய இடம்.

http://www.100dof.com/kidkeylock.html


இது ஓர் இலவசமான நிரலி. பதிவிறக்கம் செய்வதில் சிரமம் என்றால் என்னுடைய வலைத் தளத்திற்குச் செல்லுங்கள். சுலபமாக இருக்கும்.

இந்திரன் குமார்   <youngboy@gmail.com>
கே: சார் இது ஒரு முக்கியமான கேள்வி. நான் ஒரு தனியார் கணினி நிறுவனத்தில் வேலை செய்கிறேன். எனக்குத் தேவைப் படும் கணினி மென்பொருள் நிரலிகளை அமெரிக்காவில் இருந்து சிடி மூலமாக அனுப்பி வைப்பார்கள். சின்னச் சின்ன நிரலிகள். அவற்றை நான் மற்றவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைக்க முடியவில்லை. ஏன் என்றால் அவை .exe கோப்புகள். இந்த .exe கோப்புகளை எப்படி மின்னஞ்சலில் அனுப்புவது? தயவு செய்து உதவி செய்யுங்கள்.

ப: File என்றால் கோப்பு. Folder என்றால் கோப்பு உறை. ஒவ்வொரு கோப்பும் ஒவ்வொரு வகையைச் சேர்ந்தது. படங்களுக்கு .gif, .jpg, .jpeg, .png, .bmp எனும் கோப்புத் தொடர்கள் இருக்கும். File extension என்பதைத் தான் கோப்புத் தொடர்கள் என்று சொல்கிறோம். .wmv, .mpeg, .flv, .avi, 3gp போன்றவை ஓடும் படங்களைக் குறிக்கும். .txt என்பது சாதாரண எழுத்துகளைக் குறிக்கும்.

அதைப் போல .exe எனும் கோப்புத் தொடர் ஒரு நிரலி அல்லது ஒரு செயலியைக் குறிக்கும். பொதுவாக .exe கோப்புகளை மின்னஞ்சலில் அனுப்ப

விட மாட்டார்கள். அந்தக் கோப்பு ஒரு கணினி அழிவியாக இருக்கும் என்ற அச்சம் தான் காரணம். இந்த மின்னஞ்சல் சேவையை ஏமாற்ற ஒரு தில்லாலங்காடி வேலை செய்தால் அந்தக் கோப்பை அனுப்பி வைக்கலாம். சரி எப்படி. .exe என்பதை .txt ஆக மாற்ற வேண்டும்.

அப்படி மாற்றும் போது ஓர் எச்சரிக்கை வரும். அதில் 'சரி' எனும் பொத்தானைத் தட்டவும். பின்னர் அந்தக் கோப்பை மின்னஞ்சலில் அனுப்புங்கள். யார் அந்தக் கோப்பைப் பெறுகிறாரோ அவர் அந்தக் கோப்பின் தொடரை .exe என்று மறுபடியும் மாற்ற வேண்டும். அவரிடம் அதைச் சொல்லி விட வேண்டும். அவ்வளவுதான். பிரச்னை தீர்ந்ததா?

யோகேஸ்வரன் விஸ்வலிங்கம் selvam555@hotmail.com

கே: சார், என் மனதை மிகவும் பாதித்த ஒரு சின்னக் கதையை இணையத்தில் படித்தேன். அதை அனுப்புகிறேன். பிரசுரிக்க முடியுமா?

ப:
தம்பி, அந்தக் கதை என்னையும் பாதித்தது. படிப்பவர்கள் அனைவரையும் பாதிக்கும். கண்டிப்பாகப் பிரசுரிக்கிறேன். கதை இதுதான்.

ஒரு பையன் ஒரு பெண்ணை உயிருக்கு உயிராய்க் காதலித்தான். அந்தப் பெண்ணுக்குப் பார்வை கிடையாது. ஆனால், இருவரும் மிகவும் ஆழமாக காதலித்தனர். ஒரு நாள் அந்தப் பெண் அவனிடம் 'என்னை விட்டுப் போய் விட மாட்டாயே' என்று கேட்டாள். அதற்கு அவன் 'என் உயிர் போனாலும் உன்னைக் கைவிட மாட்டேன். கண்டிப்பாய்க் கல்யாணம் செய்து கொள்கிறேன்' என்றான். நாட்கள் நகர்ந்தன.

சில மாதங்களுக்குப் பிறகு அவளுக்குப் பார்வை பெற கண் மாற்று அறுவை சிகிச்சை நடந்தது. அவளுக்குப் பார்வையும் கிடைத்தது. ஆனால், அவளுக்கு ஓர் அதிர்ச்சி. அவளுடைய காதலனுக்கும் கண் பார்வை கிடையாது. ஒரு நாள் அவனிடம் வந்து 'உன்னைக் கல்யாணம் பண்ணிக் கொள்ள இஷ்டம் இல்லை' என்று சொன்னாள். 'ஏன்' என்று காதலன் கேட்டான். 'உனக்கு பார்வை இல்லை' என்று சொல்லி விட்டு நிற்காமல் நடந்தாள்.

அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவள் சிறிது தூரம் சென்ற பிறகு கடைசியாக ஒன்று கூறினான். 'பெண்ணே! எனது கண்களைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்!' என்று. மாறி வரும் உலகில் இந்த மாதிரி மனம் மாறும் சில காதலிகளும் இருக்கிறார்கள்; மாற்றானைத் தேடிப் போகும் சில மனைவிகளும் இருக்கிறார்கள்.


முத்துக்குமரன், கிள்ளான்

கே: நான் விண்டோஸ் எக்ஸ்.பி பாவிக்கிறேன். அதில் உள்ள எழுத்துக்கள் தெளிவாக இல்லை. மங்கலாக இருக்கின்றன. அதனால் அதிக நேரம் பார்த்தால் கண்கள் வலிக்கின்றன. தெளிவாகத் தெரிய வழி எதுவும் இருக்கிறதா?

ப: விண்டோஸ் விஸ்த்தா, விண்டோஸ் 7ல் இந்தப் பிரச்னை இருக்காது. விண்டோஸ் எக்ஸ்.பியில் மட்டும் எழுத்துக்கள் தெளிவு இல்லாமல் போகும் பிரச்னை இருக்கிறது. அது ஒரு சின்ன பிரச்னை. அதற்கு மைக்ராசாப்ட் நிறுவனம் தீர்வு கண்டு பிடித்து விட்டது. Clear Type Tuner Power Toy எனும் ஒரு சின்ன நிரலியைப் பயன் படுத்தினால் பிரச்னை தீரும். இந்த நிரலியைப் பதிவிறக்கம் செய்து உங்கள் கணினியில் பதிப்பு செய் யுங்கள்.

http://download.microsoft.com/download/b/7/0/b7019730-0fa3-47a9-a159-98b80c185aad/setup.exe எனும் இடத்தில் அந்த நிரலி கிடைக்கிறது.

பதிப்பு செய்யும் போது ஒரு வழிகாட்டி தோன்றும். அதில் உங்களுக்கு தேவையான வசதிகளைத் தேர்வு செய்யுங்கள். பதிப்பு செய்த பின்னர் கணினியின் எழுத்துக்கள் அழகாகவும் தெளிவாகவும் இருக்கும். கண்களை உறுத்தும் தோற்றம் இருக்காது. என்னுடைய http://ksmuthukrishnan.blogspot.com எனும் வலைத் தளத்திற்குப் போனால் நேரிடையாகப் பதிவிறக்கம் செய்யலாம்.


திருவாளர் எக்ஸ், கோலா குபு பாரு
கே: Dynamic இணையத் தளங்களை உருவாக்கும் கணினித் திறமைகள் உங்களிடம் நிறைய உள்ளன என்று கேள்விப் பட்டிருக்கிறேன். ஏன் அதையே கொஞ்சம் மாற்றி பாலியல் இணையத் தளங்களாக  உருவாக்கினால் நீங்கள் பெரிய பணக்காரர் ஆகலாமே. நீங்கள் தான் நடத்துகின்றீர்கள் என்று யாருக்கும் தெரியாதே. அரசாங்க அனுமதியும் தேவை இல்லையே. நானும் உதவிக்கு வருகிறேன். எப்படி சார் என் ஐடியா?    

ப:
ரொம்ப சூப்பரான ஐடியா. சும்மா சொல்லக் கூடாது. உங்களுக்கு உடம்பு பூராவும் மூளை. கணினியும் நீங்களும் கேள்வி பதில் அங்கம் ஆரம்பித்த பிறகு இந்த மாதிரி கேள்வி வந்தது இது தான் முதல் தடவை. பெரிய பணக்காரன் ஆக வேண்டும் என்பது நியாயமான ஆசை. ஆனால் ஆபாச இணையத் தளங்களை உருவாக்கித் தான் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பது மனிதத் தன்மையை அடகு வைக்கும் மட்டமான ஆசை அல்லவா.

Dynamic இணையத் தளம் என்றால் கடன் அட்டைகளைப் பயன் படுத்தும் இணையத் தளம் ஆகும். பணப் புழக்கம் கொண்ட இணையத் தளம். இந்த மாதிரியான ஓர் இணையத் தளம் தயாரிக்க எனக்கு மூன்று மாதங்கள் பிடிக்கும்.

இதுவரை 42 இணையத் தளங்களை உருவாக்கி இருக்கிறேன். அத்தனையும் கல்வி, இயற்கை, குடும்பம், சமூகத் துறைகளைச் சார்ந்தவை. நம்மிடம் கணினி அறிவும் இணையச் செல்வாக்கும் உண்டு. அவற்றை மூலதனமாகக் கொண்டு ஆபாச இணையத் தளங்களைத் தயாரிக்க முடியும்.  எப்போதோ இலட்சாதிபதி  ஆகி இருக்க முடியும். அப்படிப் பட்ட ஆசை நமக்கு வந்ததே இல்லை. வரவும் கூடாது.

'எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது. எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்.'



கலைச்செல்வி, ஜாசின், மலாக்கா
கே: மைக்ராசாப்ட் நிறுவனம் விண்டோஸ் 8 இயங்குதளத்தை வெளியிட்டு விட்டார்களாமே. உண்மையா?

ப:
விண்டோஸ் 7 இயங்குதளம் மைக்ராசாப்ட் நிறுவனத்திற்கு வெற்றியைத் தந்த மகிழ்ச்சியில் விண்டோஸ் 8 ஐத் தொடங்கி விட்டார்கள். இன்னும் வெளியிடவில்லை. 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியீடு செய்வார்கள் என்று நினைக்கிறேன். விண்டோஸ் 7 இயங்குதளம் மைக்ராசாப்ட் நிறுவனத்தின் ஏழாவது தயாரிப்பு. விண்டோஸ் 8 இயங்குதளம் அவர்களுடைய எட்டாவது வெளியீடு.

இதுவரை வெளியான இயங்குதளங்களில் விண்டோஸ் 7 மிகச் சிறப்பான ஒன்று. அதைவிட மிகச் சிறப்பான இயங்குதளமாக விண்டோஸ் 8 அமைய வேண்டும் என்று மைக்ராசாப்ட் நிறுவனம் விரும்புகிறது. அதற்காகப் பெரிய பெரிய வேலைகள் எல்லாம் நடந்து கொண்டிருக்கின்றன.

7 கருத்துகள்:

  1. ஐயா, வணக்கம்.

    உங்கள் கேள்வி பதில் மிக அருமையாக உள்ளது.பலவற்றை தெரிந்துகொள்ள உதவியாக இருக்கிறது. தொடர்ந்து தாருங்கள்.நன்றி.

    பதிலளிநீக்கு
  2. ஐயா,வணக்கம். கேள்வி பதில் மிக நல்லாஇருக்கிறது. பல விபரங்களை தெரிந்து கொள்ள முடிகிறது. தொடர்ந்து தாருங்கள.நன்றி.
    -அன்புடன் பல்லவன்.

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா12/12/10, PM 10:47

    ஐயா,வணக்கம். கேள்வி பதில் மிக நல்லாஇருக்கிறது. பல விபரங்களை தெரிந்து கொள்ள முடிகிறது. தொடர்ந்து தாருங்கள.நன்றி.
    -அன்புடன் பல்லவன்.

    பதிலளிநீக்கு
  4. 1st thanks. im never miss ur page at paper.1st i read ur page n than only other page i read.continue your service.

    பதிலளிநீக்கு
  5. 1st thanks. im never miss ur page at paper.1st i read ur page n than only other pege i read.continue your service.

    பதிலளிநீக்கு
  6. மிக அருமை சார்
    நன்றி ....

    பதிலளிநீக்கு
  7. பெயரில்லா14/12/11, PM 4:53

    SIR, NENGA INNUM PALA AANDUGAL SUGAMUDAN IRUKKA IRAIVAN KARUNAI PURIVAARAGA,.....
    UNGGALIN INTHA
    "SEVVAI"--- ENGALUKKU ENDRUM,THEAVAI... SIR. :-)

    பதிலளிநீக்கு