03 January 2011

கணினியும் நீங்களும் - பகுதி 84

தாமிதாரா, பாங்கி, சிலாங்கூர் (குறும் செய்தி)
கே: நான் பலமுறை குறும் செய்தி அனுப்பியும் என்னுடைய கேள்விகள் இடம் பெற வில்லை. என் நண்பர்களின் கேள்விகள் வருகின்றன. ஏன்?


ப:
அன்புள்ள தாமிதாரா, நீங்கள் ஓர் ஆணா இல்லை பெண்ணா என்று தெரியவில்லை. நீங்கள் ஒரு பெண்ணாக இருந்தால் குமாரி அல்லது திருமதி என்று குறிப்பிடுங்கள். பயப் பட வேண்டாம். நான் உங்களைக் கடத்திக் கொண்டு போய் விட மாட்டேன்.

ஒன்றை இங்கே சொல்ல விரும்புகிறேன். கணினிகளில் அவ்வப்போது ஏற்படும் பிரச்னைகள் தொடர்பாக வாசகர்கள் பலர் கேள்விகளைக் கேட்கிறார்கள்.


என்னால் இயன்றவரை கைப்பேசி வழியாகத் தீர்த்து வைக்கிறேன். இது ஓர் இலவசச் சேவை. இருந்தாலும் முடிந்த வரை குறும் செய்தி மூலமாகக் கேள்வி கேட்பதைத் தவிர்த்து விடுங்கள்.

நீங்கள் ஒருவர் மட்டும் குறும் செய்தி மூலமாகக் கேள்வி கேட்டால் பரவாயில்லை.  ஆனால், ஒரு நாளைக்கு குறைந்தது 15 குறும் செய்திகள், 10 கைப்பேசி அழைப்புகள், 10 மின்னஞ்சல்கள் வருகின்றன.


என் நிலையையும்  கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். அவசரமாக இருந்தால் உதவிகள் செய்யலாம். செய்தும் வருகிறேன்.

அதற்காக இரவு 12 மணிக்கு அழைத்துக் காணாமல் போன கைப்பேசியைக் கண்டுபிடித்து தருமாறு கேட்க வேண்டாம். 'காலையில் கூப்பிடலாம் என்று நினைத்தேன். நேரம் இல்லாமல் போய் விட்டது' என்று தயவு செய்து சமாதானம் சொல்ல வேண்டாம்.

ஒரே குறும்செய்தியைப் பத்து தடவைகள் அனுப்பி ஒருவருடைய பொறுமையைச் சோதிப்பதில் நியாயம் இருக்கிறதா. சொல்லுங்கள். என்னுடைய மின்னஞ்சல் முகவரியைத் தருகிறேன். ksmuthukrishnan@gmail.com கேள்விகளை அங்கே அனுப்பி விடுங்கள்.

ஒரு பல்கலைக்கழக மாணவி, சிலாங்கூர் (குறும் செய்தி)
கே: சார், நான் பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு படிக்கிறேன். அண்மையில் 2G Spectrum என்றால் என்ன என்பதைப் பற்றி வீட்டில் நானும் என் தங்கையும் விவாதித்துக் கொண்டு இருந்தோம். அதைப் பார்த்த எங்கள் அப்பா அதைப் பற்றி விவாதிக்க வேண்டாம். தேவை இல்லை என்று கட்டளை போடுகிறார். அப்படி என்ன பெரிய இடத்து விவகாரம். வர வர அவர் எங்களை அடிக்கடி தேவை இல்லாமல் கட்டுப் படுத்துகிறார். பேசுவதில் கூட சுதந்திரம் இல்லையா. அது எங்களுக்குப் பிடிக்கவில்லை. உங்கள் கருத்தைச் சொல்லவும்.

ப: நல்லது. நீங்கள் பல்கலைக்கழகத்தில் படிக்கும் ஒரு மாணவி. நல்லது கெட்டது எல்லாம் தெரிந்து இருக்க வேண்டிய வயது. இந்த வயதில் எந்தப் பெண் பிள்ளைக்கும் தன் தகப்பனைத் தவிர மற்றவர்கள் கட்டளைகளைப் போடுவது பிடிக்கவே பிடிக்காது. இது நான் அறிந்த உண்மை. உங்கள் வயதில் எனக்கும் ஒரு மகள் இருக்கிறார்.

ஆனால், உங்கள் விஷயத்தில் வேறு மாதிரியாக இருக்கிறது. அவருக்கே சலிப்பு ஏற்படும் வகையில் விவாதம் இருந்து இருக்கலாம் என்று என் உள் மனம் சொல்கின்றது.

தகப்பனாருடைய கைகளைப் பற்றி கூட்டிச் செல்லும் போது மகளுடைய இரத்த பாசம் பேசுகின்றது. மகளுடைய வாழ்க்கை இலக்கணங்கள் தடுமாறும் போது தகப்பனுடைய இதய பாசம்  பேசுகின்றது. 

இந்த நெளிவு சுழிவுகளினால் ஒரு தகப்பன் - மகள் உறவு நலிந்து போய் விடுமா. சொல்லுங்கள்.

தகப்பன் - மகள் உறவு என்பது ஒரு ஜென்மாந்திர உறவு. கட்டியவன் வீட்டுப் படிக்கட்டுகளில் ஏறி  நின்று ஏங்கித் தவிக்கும் ஒரு புனிதமான உறவு.  அப்படிப் பட்ட உறவைக் கொச்சைப் படுத்த நினைப்பது நன்றாக இல்லை. ரொம்பவும் தப்பு மகளே.

உங்களுடைய அப்பாவின் பேச்சைக் கேளுங்கள். அவரை மீறி எதையும் செய்ய வேண்டாம். எந்தத் தகப்பனும் தன் மகள் கெட்டுப் போக வழி சொல்லவே மாட்டான். இது சத்தியமான உண்மை.

நீங்கள் எழுதும் எழுத்து இருக்கிறதே அது உங்களுடைய  வெறும் கையெழுத்து.  ஆனால், உங்கள் தகப்பன் எழுதிய எழுத்து இருக்கிறதே அது உங்கள் தலை எழுத்தையே மாற்றிப் போடும் கையெழுத்து. 

நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஆக, இப்போதைக்கு படிப்பை ஒழுங்காகப் படித்து முடியுங்கள். அடுத்த வரும் கேள்விகள் உங்களுக்காக வருகின்றன.

சங்கேஸ்வரன், ஜாலான் தீமா, ஈப்போ
கே: 4G வரப் போகிறது. அப்படி இருக்கும் போது 2G விவகாரம் பற்றி ஏன் எல்லோரும் மிகவும் அலட்டிக் கொள்கிறார்கள்? எனக்கு ஒன்றும் புரியவில்லை. பழையதைப் பற்றி பேசுவதால் ஒரு நன்மையும் இல்லை என்பது கருத்து.

ப: அது சரி. வீடு பற்றிக் கொண்டு  எரிகிறது. அடுப்பு எரிக்க நெருப்பு கேட்பது போல இருக்கிறது உங்கள் கருத்து. என் கருத்தைச் சொல்லலாம் அல்லவா. அந்தப் பணத்தை எல்லாம் எடுத்து ஆறு கோடி மக்களுக்குப் பிரித்துக் கொடுத்து இருந்தால் ஒவ்வொருவருக்கும் 32,500 கிடைத்து இருக்குமே.

இப்போது சொல்லுங்கள். அலட்டிக் கொள்ளாமல் என்ன செய்யச் சொல்கிறீர்கள். எனக்கு என்னவோ நீங்கள் தான் புரிந்து கொள்ளாமல் அலட்டிக் கொள்வது போல தெரிகிறது.

சண்பகப்பிரியா, தாமான் உத்தாமா, மாசாய்
கே: 0G கைப்பேசிகள் இருந்ததாகச் சொல்கிறார்கள். உண்மையா சார்?
ப:
பேசி வைத்தால் போல இந்த வாரம் கைப்பேசிக் கேள்விகளாக வருகின்றன. கைப்பேசிகளில் 0G, 1G, 2G, 2.5G, 2.75G, 3G, 4G தலைமுறைகள் உள்ளன. G என்றால் Generation. தமிழில் தலைமுறை என்று சொல்கிறோம். 

0G என்பது ஆக மூத்தத் தலைமுறை.
முதன்முதலில் வெளிவந்த கம்பியில்லாத் தந்தி கைப்பேசிகள். இவை 1940-50 ஆம் ஆண்டுகளில் வெளிவந்தன. அதன் எடை 40 - 60 கிலோகிராம். முதுகில் கட்டித் தூக்கிச் செல்ல வேண்டும்.

அதை எரிக்சன் நிறுவனம் கண்டுபிடித்தது. ஆக, கைப்பேசிகளின் தந்தை யார் என்றால் எரிக்சன் கைப்பேசி தான். பின்னர் சோனி நிறுவனத்துடன் கூட்டுச் சேர்ந்ததால் சோனி எரிக்சன் என்று பெயர் வந்தது.

கைப்பேசிகளின் தந்தையையே ஓரம் கட்டி விட்டு நோக்கியா இப்போது முதன் நிலையில் நிற்கிறது. இது வரை உலகம் முழுமையும் 460 கோடி கைப்பேசிகள் தயாரிக்கப் பட்டுள்ளன. இவற்றுள் 120 கோடி நோக்கியா கைப்பேசிகள்.

1G என்றால் முதலாம் தலைமுறைக் கைப்பேசிகள். இவை 1940ஆம் ஆண்டுகளில் வெளி வந்தன. இந்த வகையான கைப்பேசிகளைக் கொண்டு பேச மட்டுமே முடியும். SMS எனும் குறும் செய்தி அனுப்ப முடியாது.

2G கைப்பேசிகள் 1990 ஆண்டுகளின் தொடக்கத்தில் வெளிவந்தன. இவற்றைக் கொண்டு குறும் செய்தி அனுப்பலாம். அழைப்பவர்களின் எண்களைப் பார்க்கலாம்.

2.5G கைப்பேசிகள் மூலம் மின்னஞ்சல், இணையச் சேவைகளைப் பெற முடியும். 3GP படங்களைப் பார்க்க முடியும்.

3G கைப்பேசிகள் 2003ஆம் ஆண்டில் வெளிவந்தன. அகன்ற அலைவரிசையின் (Broadband) வேகம் அதிகரிக்கப் பட்டது.

4G கைப்பேசிகள் இந்த 2010 ஆண்டில் அக்டோபர் மாதம் வெளியானது. இதில் அதி வேக அகன்ற அலை வரிசை இணையச் சேவை இருக்கிறது.

அதிக வரையறை (High Definition) காணொளிப் படங்களைப் பார்க்க முடியும். நேரடி நேரலை (Live Streaming) எனும் முறையும் இருக்கிறது.

4G முறையின் வழியாக உலகத்தின் எந்த மூலையில் உறவினர் நண்பர்கள் இருந்தாலும் நேரலை நிகழ்ச்சியை அவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும். ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே பேச முடியும்.

கையில் உள்ள எலும்புகளை எக்ஸ்ரே எடுக்க முடியும். சந்திர மண்டலத்தில் ஒருவர் இருந்தால் அவருடன் பேச முடியும்.

வீட்டில் நடக்கின்ற விஷயங்களைத் துப்பறியும் காமிரா மூலமாக ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து கைப்பேசியில் பார்க்க முடியும். மனைவி

சீரியஸாக துணி தைக்கிறாளா இல்லை சீரியல் பார்க்கிறாளா என்பது தெரிந்து விடும். ஒவ்வொரு வீட்டிலும் மூன்றாம் உலகப் போர் வர வாய்ப்புகள் வரிசை பிடித்து நிற்கின்றன. பத்திரம்.

4G ஐக் கொண்டு தொலைதூரத்தில் இருந்து கணினியை இயக்க முடியும். சாவி போடாமல் கார்களின் கதவுகளைத் திறக்க முடியும். வீட்டில் நெருப்பு பிடித்து விட்டால், திருடர்கள் நுழைந்து விட்டால் எச்சரிக்கை ஒலிகள் வரும்.

இன்னும் நிறையப் பயன் பாடுகள் உள்ளன. தொழில்நுட்பம் எங்கோ போய்க் கொண்டு இருக்கிறது. விரட்டிப் பிடியுங்கள்.

1 comment:

  1. 4.ஜி பற்றி சொன்னது அருமை ஜி

    ReplyDelete