29 செப்டம்பர் 2020

மலாயா தமிழர்களின் அடையாளம்: மலேசியத் தமிழ்ப் பள்ளிகள்

தமிழ் மலர் - 29.09.2020

1800-ஆம் ஆண்டுகளில் தென்னிந்தியாவில் இருந்து மலாயாவுக்குத் தமிழர்கள்  அலை அலையாய்க் கொண்டு வரப்பட்டார்கள். அப்படிக் கொண்டு வரப்பட்ட தமிழர்களுக்குக் கல்வி அறிவைக் கொடுக்க வேண்டும்; தமிழர்களை அறிவாளிகளாக மாற்ற வேண்டும்; அறிவு ஜீவிகளாக உயர்த்த வேண்டும்; அப்படிப்பட்ட மண்ணாங்கட்டி ஆசை எல்லாம் ஆங்கிலேயர்களிடம் அறவே இல்லை.

வெள்ளைத் தோலுக்கு மலாயா கறுப்புத் தோலின் மீது ஆசா பாசம் எதுவும் கிடையாதுங்க. கறுப்புத் தோலை வைத்து நல்லா நாலு காசு பார்க்கணும். கறுப்புதான் எனக்குப் புடிச்ச கலர்னு சொல்லி கல்லா கட்டணும். நல்லபடியா வீடு போய்ச் சேரணும். கிடைக்கிற கமிசன் கொமிசனில் பொஞ்சாதி புள்ளைங்க கூட சொகுசா சுகபோகமா வாழணும். எவன் செத்தா எனக்கு என்ன. அம்புட்டுத்தான்.

அதுதான் அப்போதைக்கு அவர்களின் எழுதப்படாத மலாயா சாஸ்திரம். அதாவது அல்லாக்கா தூக்கி மல்லாக்கா போடும் அப்போதைய ஆங்கிலேயத் தத்துவம். ஆங்கிலேயப் பிசாசம் என்றுகூட சொல்லலாம். தப்பு இல்லை. சண்டைக்கு வர மாட்டார்கள்.

தமிழர்கள் கொஞ்சம் படித்து இருந்தால் போதும். கைநாட்டுப் போடுபவர்களுக்குக் கொஞ்சம் எழுதப் படிக்கத் தெரிந்தால் போதும். அதுவே பெரிய விசயம். அப்புறம் அவர்களைக் கட்டி மேய்க்க முடியாது. ரொம்பவும் சிரமம். ரொம்பவும் சிக்கல். அப்படித்தான் வெள்ளைக்காரர்கள் நினைத்தார்கள். தமிழர்களை அடக்கி வைத்து அழகு பார்த்தார்கள்.


ஆக தமிழர்கள் தோட்டத்திற்குள் அடங்கி வாழ வேண்டும். வெளியே போகக் கூடாது. அவர்களின் பிள்ளைகளும் தோட்டத்தை விட்டு வெளியே போகக் கூடாது.

வெளியே போனால் கறுப்புத் தோலின் பட்டறிவும் பகுத்தறிவும் வளர்ச்சி பெறும். அப்புறம் போர்க் கொடி தூக்குவார்கள். இந்த நான்சென்ஸ் நியூசன்ஸ் எல்லாம் வேண்டாம். எகதாளக் காலனித்துவக் கரிகாலன்களுக்குத் தெரியாமலா இருக்கும்.

ஆக தோட்டத்திலேயே பள்ளிக்கூடங்களைக் கட்டிப் போட்டால் சரி. அவர்களும் வெளியே போகாமல் இருந்தால் சரி. ஆறாம் வகுப்பு வரை படிப்பு அறிவு இருந்தால் சரி. அப்புறம் அதற்கு மேல் படிப்பு தேவை இல்லை. கறுப்புத் தோல் அதிகம் படித்து இருந்தால் ஆபத்து. ஆபத்து. தோட்டத்துக் கல்லாக; தோட்டத்து ஓரமாக வெறும் வேட்டியை விரித்துப் படுத்தால் போதும். அப்படித்தான் வெள்ளைக்காரர்கள் நினைத்தார்கள். அழகாகக் காய்களை நகர்த்தி இருக்கிறார்கள்.


வெள்ளைக்காரர்களின் நோக்கம் எல்லாம் மலாயாவில் ரப்பர் உற்பத்தியைப் பெருக்க வேண்டும். அதுவே அவர்களின் தலையாய நோக்கம். முதலில் சொன்ன மாதிரி நாலு காசு பார்க்க வேண்டும். அதை நாற்பது காசாக மாற்ற வேண்டும். கை வலிக்காமல் கல்லா கட்ட வேண்டும்.

நரியை நனையாமல் குளிப்பாட்டும் கலை. தெரியும் தானே. அதைக் கரைத்துக் குடித்தவர்களுக்குச் சொல்லியா தர வேண்டும். வெள்ளைக்காரர்களுக்கு அவர்கள் போட்டு இருக்கும் சட்டைதாங்க வெள்ளை. மற்றபடி மனசு எல்லாம் சொக்கத் தங்கமாய்க் கறுப்பு கலருங்க. அப்போது அவர்களுக்கு பிடித்தமான பாடல் என்ன தெரியுங்களா. கறுப்புதான் எனக்கு புடிச்ச கலரு. அது அப்போது.

அதே அந்தக் கலரை வைத்துக் கொண்டு இப்போது மலேசியாவில் சின்னச் சின்ன சில்மிசங்கள். மதிப்பு மிக்க நாடாளுமன்றத்தில் முட்டிக்க மோதிக்க சீண்டல்கள். ஒரு கறுப்பு ஆட்டுக்குக் கண்ணாடி போட்டும் பார்வைக் கோளாறு போலும். தன் இனத்தையே கேவலப் படுத்தி இருக்கிறது.

இடையில் சிவப் பிரகாசம் என்கிற ஓர் இட்லி சாம்பாரின் குண்டக்க மண்டக்க சொதப்பல். அடிப்பது பட்டை. இடிப்பது கோயில். நித்தியானந்தா டயலாக்கில் நோ சூடு. நோ சொரணை.

மனித உரிமை என்பது ஒவ்வொரு மனிதருக்கும் கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமை. அடித்தளமான உரிமை. விட்டுக் கொடுக்க இயலாத உரிமை. மறுக்க முடியாத உரிமை. இனம், மதம், சாதி, சமயம்; உயர்வு தாழ்வு; கறுப்புத் தோல் சாக்லெட் தோல்; மஞ்சள் தோல் சிகப்புத் தோல்; இப்படி இவை எல்லாவற்றையும் தாண்டிய ஓர் அடிப்படை உரிமை


அந்த வகையில் அவர்களுக்கும் பிறப்பு உரிமை உள்ளது. அந்தப் பிறப்பு உரிமைதான் அவர்களின் தாய்மொழி. ஆக தமிழர்களின் உயிர் உரிமை என்பது அவர்களின் தாய்மொழி தமிழ்மொழி. அந்த வகையில் தமிழர்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் அதுவே அவர்களின் தனிச் சிறப்பு உரிமை.

அந்தச் சிறப்பு உரிமைக்கு உயிர் கொடுக்க இன்று வரை உலகத் தமிழர்கள் போராடிக் கொண்டு தான் இருக்கிறார்கள். இங்கேயும் எங்கேயும் அந்த உரிமைப் போராட்டம் தொடர்கிறது.

ஒரு மொழி அழிந்தால் அந்த மொழி சார்ந்த இனம் அழிந்து விடும். தெரிந்த விசயம். ஓர் இனத்தை அழிக்க வேண்டும் என்றால் அவர்களின் மொழியை அழித்தால் போதும். அந்த இனம் சன்னம் சன்னமாய் அழிந்துவிடும்.

வரலாற்றைப் புரட்டிப் பாருங்கள். இந்த உலகில் எத்தனையோ மொழிகள் அழிந்து விட்டன. அந்த மொழியைச் சார்ந்த இனங்களும் அழிந்து விட்டன. மற்ற பிரதான பெரிய மொழிகளின் ஆதிக்க வலிமையினால் பல ஆயிரம் சிறுபான்மை இனத்தவர்களின் மொழிகள் அழிக்கப்பட்டு விட்டன.

2020-ஆம் ஆண்டு கணக்குப்படி இந்த உலகில் 251 நாடுகள் இருக்கின்றன. ஆனால் 165 நாடுகள் மட்டுமே ஐ.நா. சபையில் இடம்பெற்று உள்ளன. அந்த 165நாடுகளில் 2000-ஆம் ஆண்டு வரையில் 7000 மொழிகள் இருந்தன. 2020-ஆம் ஆண்டு இறுதி வாக்கில் 6500 மொழிகள் மட்டுமே இருக்கின்றன.

https://blog.busuu.com/most-spoken-languages-in-the-world/

ஆனால் இந்த 2020-ஆம் ஆண்டு மார்ச் மாதம் அந்த எண்ணிக்கை 6485 மொழிகளாகக் குறைந்து விட்டது. அதாவது ஒரே வருடத்தில் பதினைந்து மொழிகள் காணாமல் போய் விட்டன. 2050-ஆம் ஆண்டுக்குள் ஏறக்குறைய 6000 மொழிகள் தான் இருக்கும் என்று சொல்கிறார்கள். இன்னும் சுருக்கமாகச் சொன்னால் இரண்டு வாரங்களில் ஒரு மொழி அழிகிறது.

கிரேக்க மொழியை எடுத்துக் கொள்ளுங்கள். உலகிலேயே மிகப் பழைமையான மொழி. ஆனால் அந்த மொழியைப் பேச ஓர் இனம் இல்லாது போனதால் தான் அந்த மொழி இப்போது இருந்தும் இல்லாமல் மறைந்து போய் கிடக்கிறது. அதே போலத் தான் சமஸ்கிருத மொழி. ஓர் இறந்த மொழியாக மாறிப் போய் இருக்கிறது. ஆக ஒரு மொழி வாழ வேண்டும் என்றால் அதற்கு ஓர் இனம் தேவை.

உலகில் 6485 மொழிகள் இருந்தும் பெரும்பான்மையான மொழிகள் சிறுபான்மை இனத்தவரின் மொழிகள். 2010-ஆம் ஆண்டில் அந்தமான் தீவில் மட்டும் மூன்று மொழிகள் அழிந்து போயின. அக்கா போ (Aka-Bo); அக்கா கோரா (Aka-Kora); ஆ பூசிக்கார் (A-Pucikwar) மொழிகள். இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.


அசுர வேகத்தில் மொழிகள் அழிந்து கொண்டு போகின்றன. ஒரு மொழியைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை குறையும் போது, அந்த மொழியின் உயிர்த் தன்மைக்குச் சாவுமணி அடிக்கப் படுகிறது. அதை நினைவில் கொள்வோம். சரி. மலாயா தமிழர்களின் கதைக்கு வருவோம்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே தமிழர்கள் மலாயாவில் தடம் பதித்து விட்டார்கள். வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் நன்றாகவே தெரிய வரும். பெரும்பாலும் வணிகம் செய்யவே மலாயாவிற்கு வந்தார்கள்.

திரைகடல் ஓடி திரவியம் தேடு எனும் வாசகமே அந்தக் காலத்துத் தமிழர்களுக்குப் பொன் வாசகமாக விளங்கி இருக்கிறது. அப்படி மலையூர் மலாயாவிற்கு வந்தவர்கள் பலர் பினாங்கு, கிள்ளான், மலாக்கா போன்ற துறைமுக நகரங்களில் நிரந்தரமாகத் தங்கி இருக்கிறார்கள். அங்கு வாழ்ந்த உள்ளூர்ப் பெண்களைத் திருமணம் செய்து இருக்கிறார்கள். அவர்களுக்குப் பிறந்த பிள்ளைகளுக்குத் தமிழ் மொழியைக் கற்றுத் தந்து இருக்கிறார்கள்.

ஆங்கில நூலாசிரியர் ரோலன் பிராடல் (Dato Sir Roland St. John Braddell) என்பவர் ஒரு வாசகம் சொல்லிவிட்டுச் சென்றார். அதை நினைவு படுத்துகிறேன். மலாயா எனும் பச்சை மண்ணுக்கு முதல் நாகரிகத்தைக் கொண்டு வந்தவர்கள் இந்தியர்கள். அவர்களின் மொழியால் தான் இந்த மண் ஏற்றம் பெற்றது.

Comments on Sir Roland Braddell's Studies of Ancient Times in the Malay Peninsula.
Journal of the Malayan Branch of the Royal Asiatic Society. Vol. 28, No. 1 (169) (March, 1955), pp. 78-98

இந்தக் கட்டத்தில் முன்ஷி அப்துல்லா (Munshi Abdullah) எனும் இலக்கியவாதி வருகிறார். இவர் 1796-ஆம் ஆண்டு மலாக்காவில் பிறந்தவர். 1843-ஆம் ஆண்டு தன் சுயசரிதையை எழுதினார். அதன் பெயர் ஹிக்காயாட் அப்துல்லா (Hikayat Abdullah). தன்னுடைய ஆறாவது வயதில் விரல்களால் தமிழ்மொழியை மணலில் எழுதிப் படித்ததாக அவரே எழுதி இருக்கிறார்.

தன்னுடைய பால்ய வயதில் அவருடன் பலர் தமிழ் படித்ததாகவும் சொல்கிறார். இதையும் அவர் தன் சரிதையில் குறிப்பிட்டு இருக்கிறார். இவரைப் போல நிறைய பேர் அந்தக் காலத்திலேயே தமிழ் படித்து இருக்கிறார்கள்.

200 ஆண்டுகளுக்கு முன்னர் மலாயா நாடு பிரிட்டிஷ் காலனியாக மாறியது. அப்போது மலாயாவில் நிறைய காபி, தேயிலை, கரும்புத் தோட்டங்கள். முதலில் தோன்றியவை காபித் தோட்டங்கள். அதன் பின்னர் தேயிலை, கரும்புத் தோட்டங்கள். அதன் பின்னர் அந்தி மந்தாரைக் காளான்களாக நூற்றுக் கணக்கான ரப்பர் தோட்டங்கள் உருவாகின.

அந்தத் தோட்டங்களில் வேலை செய்வதற்குத் தென்னிந்தியாவில் இருந்து ஆயிரக் கணக்கான தமிழர்கள் கொண்டு வரப் பட்டார்கள். அப்படி வந்தவர்கள் தங்களுடன் கூடவே தங்களின் தாய் மொழியான தமிழ் மொழியையும் கொண்டு வந்தார்கள். உயிராக நினைத்துப் போற்றி போற்றி வளர்த்தார்கள்.

மலாயாவில் முதன்முதலாகப் பினாங்கில் 1816-ஆம் ஆண்டில் ஒரு பள்ளி தொடங்கப் பட்டது. ஆது ஓர் ஆங்கிலப் பள்ளி. அதன் பெயர் பினாங்கு பிரீ ஸ்கூல் (Penang Free School). அதே பள்ளியில் ஐந்து ஆண்டுகள் கழித்து 1821-ஆம் ஆண்டில் ஒரு தமிழ் வகுப்பு தொடங்கப் பட்டது. அதுவே இந்த நாட்டில் முதல் தமிழ்ப்பள்ளி ஆகும்.

அந்தக் கட்டத்தில் பினாங்குத் துறைமுகத்தில் நிறைய தமிழர்கள் வேலை செய்து வந்தார்கள். அவர்களின் பிள்ளைகளுக்காக அந்தத் தமிழ் வகுப்பு தொடங்கப் பட்டது. இருப்பினும் ஆதரவு குறைந்து குன்றிப் போனதால் அந்தத் தமிழ் வகுப்பு மூடப் பட்டது.

அதன் பின்னர் 1834-ஆம் ஆண்டு சிங்கப்பூரில் ஒரு தமிழ் வகுப்பு தொடங்கப் பட்டது. சிங்கப்பூர் பிரீ ஸ்கூல் (Singapore Free School) எனும் பள்ளியில் அந்த வகுப்பு. அதற்கும் ஆதரவு கிடைக்கவில்லை. 1839-ஆம் ஆண்டு மூடப் பட்டது.

1850-ஆம் ஆண்டில் பினாங்கு; மலாக்கா; சிங்கப்பூரில் தமிழ்ப் பள்ளிகள் தொடங்கப் பட்டன. 1859-ஆம் ஆண்டில் சிங்கப்பூர் மலபார் பள்ளி (St Francis Xavier Malabar School) தொடங்கப் பட்டது. 1870-ஆம் ஆண்டுகளில் ஜொகூர், சிங்கப்பூர் போன்ற இடங்களில் தமிழ்ப் பள்ளிகள் தோன்றின.

அதன் பின்னர் 1895-ஆம் ஆண்டில் கோலாலம்பூரில் ஆங்கிலோ தமிழ்ப்பள்ளி (Anglo-Tamil School Kuala Lumpur) உருவானது. பின்னர் அந்தப் பள்ளி மெதடிஸ்ட் ஆங்கிலப்பள்ளி என்று பெயர் மாற்றம் கண்டது.

1900-ஆம் ஆண்டில் பேராக் பகான் செராய் நகரில் ஆங்கிலேய அரசாங்கம் முதல் தமிழ்ப்பள்ளியைக் கட்டிக் கொடுத்தது.

1912-ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தார்கள். தோட்டத் தொழிலாளர்களின் நலத்தைப் பாதுகாக்கும் சட்டம்.

ஒரு தோட்டத்தில் பத்துக் குழந்தைகள் இருந்தால் போதும். ஒரு தமிழ்ப் பள்ளியை உருவாக்கலாம் எனும் சட்டம். மறுபடியும் சொல்கிறேன். ஒரு தோட்டத்தில் 7 முதல் 14 வயது வரை பத்து குழந்தைகள் இருந்தால் போதும்; ஒரு தமிழ்ப்பள்ளியை உருவாக்கலாம் என்கிற ஒரு சட்டம்.

அந்தக் கட்டத்தில் ஒவ்வொரு தோட்டத்திலும் பல பிரிவுகள் இருந்தன. அதாவது டிவிசன்கள். ஒவ்வொரு டிவிசனுக்கும் தனித்தனியாகப் ஒவ்வொரு பள்ளிக்கூடம் அமைக்கப் பட்டது. 1920-ஆம் ஆண்டில் மலாயாவில் 122 தமிழ்ப்பள்ளிகள் இருந்தன.

தொழிலாளர் சட்டம் அப்போது அந்தக் காலத்தில் உருவாக்கப்பட்ட சட்டம். ஆங்கிலேயர்கள் உருவாக்கிய சட்டம். இன்னும் அமலில் உள்ளது.

காலனித்துவ ஆட்சியில் இருந்து மலாயா சுதந்திரம் அடைந்த போது பற்பல சட்டத் திருத்தங்களைச் செய்தார்கள். ஆனால் மேலே சொன்ன அந்தச் சட்டத்தை மட்டும் மாற்றம் செய்யவில்லை. அதை அப்படியே விட்டு விட்டார்கள்.

பத்துக் குழந்தைகள் இருந்தால் ஒரு தமிழ்ப் பள்ளி எனும் அந்தச் சட்டம் 1912-ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட போது பள்ளிகளை எந்த இடத்தில் தொடங்குவது; எப்படி நடத்துவது என்பது ஒரு பெரிய பிரச்சினையாக இருந்தது.

தோட்டத்தில் இருந்த ஆயாக் கொட்டகைகள்; நாடக மண்டபங்கள்; பலசரக்குக் கடைகள்; கோயில்கள்; தொழிலாளர் வீடுகள் போன்றவற்றில் வகுப்புகளை நடத்தினார்கள்.

படித்துக் கொடுக்க ஆசிரியர்கள் வேண்டுமே. என்ன செய்வது. பார்த்தார்கள். வேறுவழி இல்லாமல் கோயில் பூசாரிகளைக் கொண்டு வந்து அவர்களை வாத்தியார்களாக மாற்றி விட்டார்கள்.

கோயில் பூசாரிகள் இல்லாத தோட்டங்களில் கங்காணிகளே வாத்தியார் வேலையைச் செய்தார்கள். கங்காணிகளுக்குப் பதிலாக சில இடங்களில் தோட்டத்துக் கிராணிமார்களும் வாத்தியார் வேலையைச் செய்து இருக்கிறார்கள். வாழ்த்த வேண்டிய விசயம்.

இப்படி கோயில் பூசாரிகளும் கங்காணிகளும் ஆசிரியர் வேலை செய்ததால் மாணவர்களின் கல்வித்தரம் எப்படி இருந்து இருக்கும். ஒரு தேக்க நிலை. இதையும் நாம் மறந்துவிடக் கூடாது.

ஆக மலேசியத் தமிழர்களின் அடையாளம் என்பது மலேசியத் தமிழ்ப் பள்ளிகள். உயிரே போனாலும் தங்களின் அடையாளத்தை விட்டுக் கொடுக்க மாட்டார்கள். இழக்கவிட மாட்டார்கள். இது சத்தியம்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
29.09.2020



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக