30 செப்டம்பர் 2020

மலேசியா இ-சென்சஸ் என்றால் என்ன?

இ-சென்சஸ் இணைய தளத்தில் பதிவு செய்யவில்லை என்றால்; அரசாங்கத்திடம் இருந்து மலேசிய இந்தியர்களுக்கு கிடைக்க வேண்டிய பல வாய்ப்புகள் இழக்கப் படலாம் எனும் ஊடகப் பதிவுகள் பரவலாகி வருகின்றன. இது உண்மையா?

இல்லீங்க. இவை தவறான பதிவுகள் ஆகும். இ-சென்சஸ் (e-Census) பற்றி சிலர் சரியாகவே புரிந்து கொள்ளவில்லை. சரியாகவே தெரிந்து கொள்ளவில்லை. தவறான புரிதலுடன் ஊடகங்களில் தவறாகப் பதிவு செய்து வருகிறார்கள்.

இந்தத் தவறான பதிவுகளினால், பொதுவாகவே ஒரு தவறான பார்வையும் ஏற்பட்டு வருகிறது. சுருங்கச் சொன்னால் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைமுறைகள் பற்றி தெரியாத நபர்களின் விவேகமற்ற பார்வை என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. தவறான தகவல் பரிமாற்றம்.

முதலில் இ-சென்சஸ் என்றால் என்ன? முதலில் அதைத் தெரிந்து கொள்வோம்.

உலகில் எல்லா நாடுகளிலுமே இ-சென்சஸ் நடைபெற்று வருகிறது. மலேசியாவில் இ-சென்சஸ் முதன்முறையாக அறிமுகம் செய்கிறார்கள். இ-சென்சஸ் என்றால் மக்கள் தொகை; மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு (Population and Housing Census of Malaysia). அவ்வளவுதான்.

மலேசியா முழுவதும் உள்ள வீடுகள்; குடியிருப்பு பகுதிகள். இவற்றில் இந்தக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுகிறது.

இ-சென்சஸ் (e-Census) 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் ஒரு கணக்கெடுப்பு. அதாவது வழக்கமான மக்கள் தொகை கணக்கெடுப்பு.

நம் நாட்டில் 1963-ஆம் ஆண்டில் முதல் கணக்கெடுப்பு நடந்தது. ஆகக் கடைசியாக 10 ஆண்டுகளுக்கு முன்னர் 2010-ஆம் ஆண்டில் நடந்தது. இப்போது 2020-ஆண்டில் மறுபடியும் நடைபெறுகிறது. இது ஆறாவது கணக்கெடுப்பு.

மக்கள்தொகை கணக்கெடுப்பு நோக்கம் என்ன? மலேசியாவில் மக்கள் தொகை எவ்வளவு? ஒரு குடும்பத்தில் எத்தனை பேர் இருக்கிறார்கள். வீடுகள் எத்தனை? எத்தனை அறைகள்? வாகனங்கள், வருமானம் போன்ற மொத்த விவரங்களைத் தொகுப்பது தான் மக்கள் தொகை கணக்கெடுப்பின் நோக்கம் ஆகும்.

எதிர்காலத்தில் தேசிய அபிவிருத்தி திட்டங்களைத் தயாரிப்பதற்கும் இந்தக் கணக்கெடுப்பு உதவியாக இருக்கும்.

இந்த மக்கள் தொகை கணக்கெடுப்புத் திட்டத்தின் மூலமாகப் புள்ளிவிவரங்கள் மட்டுமே திரட்டப் படுகின்றன. அவை எதிர்காலத்தில் மக்களின் நலனுக்காகவும்; மேம்பாட்டுத் திட்டங்களுக்காகவும் பயன்படுத்தப் படுகின்றன.

முதல் கட்டமாக இ-சென்சஸ் இணைய பக்கம் வாயிலாகக் கணக்கெடுப்பு நடைபெறுகிறது.

(https://www.mycensus.gov.my/).

இந்த இணையத் தளம் வாயிலாக 2020 ஜூலை 7-ஆம் தேதி தொடங்கி; 2020 செப்டம்பர் 30-ஆம் தேதி வரை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறுகிறது. இது இணைய வாயிலான கணக்கெடுப்பு.

அதே சமயத்தில் இணையம் மூலமாகப் பதிவு செய்யவில்லை என்றால் கவலை வேண்டாம். கணக்கெடுப்பு அதிகாரிகள் வீடு தேடி வருவார்கள். அவர்கள் நேரடியாக உங்களை நேர்காணல் செய்வார்கள். கணக்கெடுப்பு செய்வார்கள். இது இரண்டாம் கட்டக் கணக்கெடுப்பு. 2020 அக்டோபர் 7-ஆம் தேதி தொடங்கி 24-ஆம் தேதி வரை நடைபெறும்.

Phase 1 - 7 July - 30 September, 2020 (e-Census)
Phase 2 - 7 October - 24 October , 2020 (face-to-face interviews)

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளில் 115,685 பணியாளர்கள்; 99,356 தணிக்கையாளர்கள்; 14,581 மேற்பார்வையாளர்கள்; 1,385 கமிஷனர்கள், துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள், மாவட்ட கண்காணிப்பாளர்கள் பணியில் ஈடுபடுவார்கள்.

இன்னும் ஒரு விசயம். BSH, PRIHATIN மற்றும் PENJANA போன்ற அரசாங்க உதவித் திட்டங்களுக்கும் இந்த மக்கள் தொகை கணக்கெடுப்புக்கும் சம்பந்தமே இல்லை.

BSH, PRIHATIN, PENJANA போன்றவை; வருமான வரி அலுவலகத்தில் (LHDN) பதிவு செய்யப்பட்ட வருமான தரவுகளுடன் தொடர்பு உடையவை. மக்கள் தொகை கணக்கெடுப்பு மலேசிய புள்ளி விவர இலாகாவுடன் தொடர்பு உடையது. இரண்டும் வேறு வேறு கோணத்தில் பயணிக்கின்றன.

ஆக BSH, PRIHATIN, PENJANA ஆகியவற்றுக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை. புரிந்து கொள்ளுங்கள்.

புள்ளிவிவரத் துறையால் ஆண்டுதோறும் வீட்டு வருமான கணக்கெடுப்பு என்று தனிப்பட்ட வகையில் ஒரு கணக்கெடுப்பு நடைபெறுகிறது. அது வேறு ஒரு கணக்கெடுப்பு. மற்றபடி இப்போது நடக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கும் வீட்டு வருமான கணக்கெடுப்பிற்கும் தொடர்பு இல்லை.

(Government assistance like BSH, PRIHATIN and PENJANA are related to income data recorded with the income tax office (LHDN) and nothing to do with the population census.
Infact population census got nothing to do with income. Its more relevant to Household Income Survey done annually by Department of Statistics.)

இன்னும் ஒரு விசயம். மக்கள் தொகை கணக்கெடுப்பின் மூலமாக அரசாங்கம் பண உதவி எதையும் செய்யப் போவது இல்லை. ஏனெனில் மக்கள் தங்கள் வருமானத்தைக் குறைத்துக் கூறி ஏமாற்றும் வாய்ப்பு உள்ளது. ஆகவே மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது வேறு. வீட்டு வருமான கணக்கெடுப்பு என்பது வேறு. BSH, PRIHATIN, PENJANA நிதி உதவி என்பது வேறு.

(Government don't use the Household Income Survey to provide government assistance because people can cheat on their income.)

முழுமையாக ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் புள்ளிவிவரச் சேகரிப்புத் திட்டம். ஆக இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு மூலமாக அரசாங்கம் மக்களுக்கு நிதியுதவி வழங்கப் போவது இல்லை.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
28.09.2020


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக