தமிழ் மலர் - 25.10.2020
வால்டோர். மலாயா வரலாற்றில் மிகப் புகழ் பெற்ற பெயர். பெரிய பெரிய தாக்கங்களை ஏற்படுத்திய பெயர். அந்தக் காலத்து ரேடியோ மலாயாவில் அடிக்கடி கேட்கப் பட்ட பெயர். இடைக் காலத்து இந்தியன் மூவி நியூஸ் இதழில் அடிக்கடி வாசிக்கப் பட்ட பெயர். தற்காலத்து தமிழ் முரசு பத்திரிகையில் அடிக்கடி பார்க்கப் பட்ட பெயர். கூட்டிக் கழித்துப் பார்த்தால் மலாயா தமிழர்களின் வரலாற்றில் ஒரு வாழ்வியல் அங்கமாக உயிர்த்துவம் பெற்ற பெயர்.
1842-ஆம் ஆண்டில் மலாயாவில் பிரெஞ்சுக்காரர்கள் அமைத்த முதல் வேளாண்மைத் தோட்டம். வால்டோர் தோட்டம் (Valdor Estate).
மலாயாவில் முதல் முன்னோடிக் கரும்புத் தோட்டம். பின்னர் காபித் தோட்டமாக மாறியது. பின்னர் மரவெள்ளித் தோட்டம். அதன் பின்னர் ரப்பர் தோட்டம். இப்போது செம்பனைத் தோட்டம்.
இன்னும் கொஞ்ச நாட்களில் அந்த வளர்ச்சி இந்த வளர்ச்சி என்று சொல்லி இந்தத் தோட்டத்தையும் ஒரு பண்ணி விடுவார்கள் போலும். ஏன் என்றால் அண்மைய காலங்களில், இந்தத் தோட்டத்தைச் சுற்றிலும் அபரிதமான கட்டுமானங்கள். அமிதமான நவீன வளர்ச்சித் திட்டங்கள். அசுரமான நகர்ப்புற மேம்பாடுகள். சரி.
சமகாலத்தில் என்னதான் வளர்ச்சி என்றாலும் வரலாறு என்றைக்கும் வரலாறு தான். அந்த வகையில் மலாயாவில் தோன்றிய முதன்மைத் தோட்டங்களில் வால்டோர் தோட்டம் மூத்தத் தோட்டமாக விளங்குகின்றது. வரலாறு பேசுகின்றது.
180 ஆண்டுகள் வரலாறு கொண்ட இந்தத் தோட்டம் செபராங் பிறை மாநிலத்தில் சுங்கை பாக்காப் - சிம்பாங் அம்பாட் பகுதியில் இன்றும் வரலாறு பேசிக் கொண்டு வருகிறது.
வால்டோர் (val d'or) ஒரு பிரெஞ்சு சொல். தங்கப் பள்ளத்தாக்கு என்று பொருள். 1840-ஆம் ஆண்டுகளில் மலாயா வந்த பிரெஞ்சு தோட்டக்காரர்களின் முதல் தலைமுறைத் தோட்டம் என்றும் சொல்வார்கள்.
கரும்பு உற்பத்தியில் பிரெஞ்சுக்காரர்கள் காட்டிய ஈடுபாடுகள் அப்போதைய மலாயாவில் ஆழமான தாக்கங்களை ஏற்படுத்திச் சென்று உள்ளன.
1842-ஆம் ஆண்டில் டோனடியூ எனும் பிரெஞ்சுக்காரர் மலாயா பினாங்கு தீவிற்கு வந்தார். அந்தக் காலத்தில் மலாயாவில் மூன்று நான்கு துறைமுகங்கள் தான் இருந்தன.
பினாங்கு, தெலுக்கான்சன், கோலக்கிள்ளான், மலாக்கா, சிங்கப்பூர். இவை தான் அப்போதைக்கு முக்கியமான துறைமுகங்கள். பெரும்பாலும் பினாங்கில் தான் கரை இறகுவார்கள். அதுதான் முதல் எடுப்பில் உள்ளது.
பினாங்கு தீவிற்கு வந்த டோனடியூ பினாங்குத் தீவிலேயே ஒரு கரும்புத் தோட்டத்தை உருவாக்கத் திட்டம் கொண்டு இருந்தார். அதனால் வேலையாட்களைத் தேடி சுங்கை ஜாவி; செபராங் பிறை பகுதிகளுக்கு வந்தார்.
கடைசியில் பார்த்தால், பினாங்குத் தீவை விட வால்டோர் நிலப் பகுதிகள் அவருக்கு ரொம்பவும் பிடித்துப் போனது. கரும்பு பயிரிடுவதற்கு நல்ல மண் வளம். காட்டுப் பகுதியாக இருந்தாலும் நல்ல மணல் பரப்பு. அப்புறம் என்ன. தன் திட்டத்தை மாற்றிக் கொண்டார்.
(In 1841, Joseph Donadieu arrived from France and obtained a concession from the British authorities in Province Wellesley. His intention was to recruit coolies but decided to settle down and he acquired an estate in Jawi.)
செபராங் பிறையில் இருந்த உள்ளூர்வாசிகளையும் சீனர்களையும் சேர்த்துக் கொண்டு ஒரு கரும்புத் தோட்டத்தை உருவாக்கினார். உள்ளூர்வாசிகள் சரிபட்டு வரவில்லை. மீன் பிடிப்பது; காய்கறிகள் பயிர் செய்வது அவர்களின் காலா காலத்து வழக்கம்.
சீனர்கள் பற்றி சொல்ல வேண்டியது இல்லை. சொந்தமாகத் தொழில் நடத்துவது. பணம் சம்பாதிப்பது. இரத்தத்தில் ஊறிப் போன பழக்கம். அந்தக் கட்டத்தில் வட சுமத்திரா பகுதியில் இருந்து காரோ இன மக்கள் 50 பேர் கொண்டு வரப் பட்டார்கள்.
காரோ இன மக்கள் மலாய், தமிழ் மற்றும் ஆச்சே ஆகியவற்றின் கலவை கொண்ட மக்கள். இராஜேந்திர சோழன் இந்தோனேசியாவின் மீது படை எடுத்த வரலாறு தெரியும் தானே.
1025-ஆம் ஆண்டில் அவரின் படைவீரர்களில் ஒரு நூறு பேர் தற்காப்புக்காக வட சுமத்திராவில் விடப்பட்டார்கள். அப்படியே மறக்கப் பட்டார்கள். அது ஒரு சோகமான வரலாற்றுச் சுவடு.
இராஜேந்திர சோழன் அவர்களை மறந்து அவசரத்தில் திரும்பிச் சென்றதும் அந்தப் போர் வீரர்கள் காடுகளில் அப்படியே நிரந்தரமாகத் தங்கி விட்டார்கள். பின்னர் அந்தப் போர் வீரர்கள் உள்ளூர்ப் பெண்களைத் திருமணம் செய்து கொண்டார்கள்.
அதனால் தான் காரோ இன மக்களிடம் தமிழர்க் கலவை உள்ளது; தோற்றத்தில் தமிழர்களைப் போல இருப்பார்கள் என்று சொல்ல வருகிறேன். நம்பவில்லை என்றால் படத்தைப் பாருங்கள்.
காரோ இனமக்கள் வேட்டைக்குப் போவதில் ஆர்வம் கொண்டவர்கள். ஆனால் நல்ல உழைப்பாளிகள். கொஞ்சம் முரட்டுத் தனமான மக்கள். இவர்களும் சரிபட்டு வரவில்லை.
வேறு வழி இல்லாமல் பாண்டிச்சேரியில் இருந்து சொந்தச் செலவில் தமிழர்களைக் கொண்டு வந்தார்கள். கறுப்புக் கங்காணி சிவப்புக் கங்காணி என்று யாரையும் ஆள்பிடிக்க அனுப்பவில்லை. அனுப்பி இருந்தால் நல்லாதான் இருக்கும். பாண்டிச்சேரி தமிழர்கள் இரத்தக் கண்ணீர் வடித்து இருப்பார்கள். இது 1842-ஆம் ஆண்டில் நடந்தது.
அந்தக் கட்டத்தில் பாண்டிச்சேரி, தமிழ்நாட்டில் பிரெஞ்சுக்காரர்களின் அசைக்க முடியாத கோட்டையாக விளங்கியது. ஆங்கிலேயர்களுக்கு எப்படி மெட்ராஸ் முக்கியமோ அந்த மாதிரி பிரெஞ்சுக்காரர்களுக்கு பாண்டிச்சேரி முக்கியம்.
தமிழர்கள் பாண்டிச்சேரியில் இருந்து நாகப்பட்டினம் வந்து அங்கே இருந்து கப்பல் ஏறி இருக்கிறார்கள். முதல் கட்டமாக 50 அல்லது 60 தமிழர்கள் வால்டோர் தோட்டத்திற்கு வந்து இருக்கிறார்கள்.
டோனடியூ ஒரு கரும்பு தோட்டத்தை நிறுவினார். சொல்லி இருக்கிறேன். பின்னர் லியோபோல்ட் சேசெரியாவ் (Léopold Chasseriau) எனும் இரண்டாவது பிரெஞ்சுக்காரர் அவருடன் இணைந்து கொண்டார். இரண்டு பேரும் சேர்ந்து நல்லபடியாக நிர்வாகம் செய்து வந்தார்கள்.
இருப்பினும் 1843-ஆம் ஆண்டு டோனடியூ, கடல் கொள்ளையர்களால் கொலை செய்யப் பட்டார். அதன் பின்னர் அவர்களின் பிள்ளைகள் அந்தத் தோட்டத்தைக் கவனித்துக் கொண்டார்கள். அடுத்து ஒரு வரலாற்றுத் தகவல்.
1844-ஆம் ஆண்டு தமிழகத்தில் இருந்து 1800 தமிழர்கள் மலாயாவுக்கு கொண்டு வரப் பட்டார்கள். எந்த ஆண்டு என்பதைக் கவனியுங்கள். அவர்களில் 50 - 60 பேர் வால்டோர் கரும்புத் தோட்டத்திற்குப் போய் இருக்கிறார்கள். மீண்டும் சொல்கிறேன்.
இரண்டு ஆண்டுகள் கழித்து, 1844-ஆம் ஆண்டு வால்டோர் முதலாளிகள் டோனடியூ; லியோபோல்ட் சேசெரியாவ் ஆகிய இருவரும் சேர்ந்து வால்டோர் தோட்டத்தில் ஓர் அழகான மாளிகையைக் கட்டினார்கள்.
அந்த மாளிகையில் தமிழர்கள் சேவகம் செய்து இருக்கிறார்கள். தமிழர்கள் மீது பிரெஞ்சுக்காரர்களுக்கு எப்போதுமே தனிப்பட்ட நம்பிக்கை இருதந்து.
மலாயாவில் குடியேறிய முதல் பிரெஞ்சு தோட்டக்காரராக ஜோசப் டோனடியூ இருந்து இருக்கலாம். அவர்களின் மகன்கள் இருவரும் தங்கள் தொழிலில் மிகச் சிறப்பாக வெற்றி பெற்று இருக்கலாம்.
ஒரு சிறிய விவசாய வம்சத்தை விட்டுச் சென்று இருக்கலாம். இருப்பினும் மலாயா தமிழர்களின் வரலாற்றில் ஒரு தடயத்தை விட்டுச் சென்று இருக்கிறார்கள். அதுதான் பெரிய விசயம்.
19-ஆம் நூற்றாண்டில் பிரெஞ்சுக்காரர்கள் மலாயாவில் ரப்பர் மரங்களை நடவில்லை. மாறாக்க கரும்பு உற்பத்தியைப் பன்முகப் படுத்துவதில் தான் தீவிரம் காட்டி இருக்கிறார்கள். அவர்கள் வருவதற்கு முன்பு மலாயாவில் மரவள்ளிக் கிழங்கு, தேங்காய், அரிசி, பழம் மரங்கள் பயிரிடப்பட்டு வந்தன.
1843-ஆம் ஆண்டில் வால்டோர் தோட்டத்தை உருவாக்கிய ஜோசப் டோனடியூவை பிரிட்டிஷ் அதிகாரி ஹென்றி கெப்பல் (Henry Keppel) என்பவர் சந்தித்தார். அவர் சுங்கை ஜாவி வால்டோர் தோட்டத்தைப் பற்றி இப்படி எழுதி இருக்கிறார்.
"அடர்த்தியான காடு. பல மைல்களுக்குள் ஊடுருவிச் செல்ல வேண்டும். அங்கே ஒரு கரும்புத் தோட்டம். விவசாயத்தில் ஆர்வம் கொண்ட ஒரு பிரெஞ்சுக்காரர் உருவாக்கியத் தோட்டம்.
அவரைப் பார்க்க நாங்கள் ஒரு சிறிய நீராவி கப்பல் மூலமாகச் சென்றோம். கப்பலின் பெயர் டயானா. ஒரு சிறிய சிற்றோடையின் கரையில் இறங்கினோம். அதன் பின்னர் மேலும் எட்டு மைல் தூரத்திற்குக் காட்டுப் பாதையில் செல்ல வேண்டி இருந்தது.
நாங்கள் முதன்முதலில் கரை இறங்கியதும் அங்கே ஒரு யானை எங்களுக்காக காத்து இருந்தது, இரண்டு தமிழர்கள். யானைப் பாகன்களாக இருந்தார்கள். எங்களை டோனடியூவும் அவருடைய மனைவியும் வரவேற்றார்கள். தரை இறங்கும் இடத்தில் இருந்து 12 அடி அகலத்திற்கு ஒரு குறுகிய சாலை. அதன் பின்னர் எல்லாமே பச்சைக் காடுகள்.
வால்டோர் தோட்டத்தில் காட்டுப் புலிகளின் நடமாட்டம் அதிகம். காட்டுப் புதர்களுக்குள் புலிகள் இருப்பது நமக்குத் தெரியவே தெரியாது. அசையாமல் அப்படியே இருக்கும். அருகில் போனதும் சரி.
நம் மீது பாய்ந்து அடித்துக் கொன்று அப்படியே காட்டுக்குள் இழுத்துச் சென்றுவிடும். இந்த மாதிரி நான்கைந்து தமிழர்களைப் புலிகள் அடித்துக் கொன்று இருக்கின்றன.
வால்டோர் தோட்ட முதலாளி டோனடியூவின் பங்களா உயர்ந்த மேட்டுத் தரையில் அழகாக அமைந்து இருந்தது. சுற்றிலும் அடர்த்தியான காடுகள். கால் மைல் தூரத்திற்கு சுற்றுப்புற காடுகளைச் சுத்தப்படுத்தி இருந்தார்கள். மாளிகையைச் சுற்றிலும் பாதுகாப்பிற்குப் பலமான இரும்பு வேலியைப் போட்டு இருந்தார்கள்.
வால்டோர் மாளிகையில் டோனடியூ ஒன்பது ஆண்டுகள் வாழ்ந்தார். அவர் வாழ்க்கையில் சிக்கல். ஒரு துன்பகரமான முடிவு. காரோ தொழிலாளர் ஒருவரைக் கொலை செய்ததாகக் குற்றச்சாட்டு. பின்னர் விடுவிக்கப் பட்டார்.
இருப்பினும் சில ஆண்டுகளுக்குப் பிறகு 1850-ஆம் ஆண்டில் அவருடைய தோட்டத்திற்கு அருகிலேயே கடல் கொள்ளையர்களால் கொலை செய்யப் பட்டார். காரோ இனத்தவர்களாக இருக்கலாம் என்று சொல்லப் படுகிறது.
1890-ஆம் ஆண்டு ஜூல்ஸ் கிளெய்ன் (Jules Claine) எனும் பிரெஞ்சுக்காரர் அந்த மாளிகைக்குப் போய் இருக்கிறார். இவர் ஒரு புகைப்படக்காரர். மாளிகையில் வேலை செய்த தமிழ்ப் பெண்களைப் படம் எடுத்து இருக்கிறார். அந்தக் காலத்துப் பெண்கள். அழகாக அம்சமாக இருக்கிறார்கள். அழகே அழகு.
(Julies Claine left Paris in May 1890, and arrived in Singapore a month later. Then he went to Penang Island and arranged a trip to Sumatra. He arrived at the Deli. Then he contacted the Dutch authorities at that time to get a picture of the life of the local community.)
அடுத்து ஒரு முக்கியமான விசயம். 1842-ஆம் ஆண்டு மலாயாவில் குடியேறியவர்களை வந்தேறிகள் என்று அழைக்கலாமா. எப்படிங்க அழைக்க முடியும்? வரலாறு பொய் சொல்லுங்களா. எப்படிங்க சொல்லும்.
ரவிக்கையும் சேலையும் தங்களின் பூர்வீகச் சொத்து என்று சொல்பவர்கள் எதை வேண்டும் என்றாலும் சொல்லிவிட்டுப் போகட்டும். ஆனால் வந்தேறிகள் எனும் சொல்லைப் பயன்படுத்தும் போது நன்றாக யோசித்துச் சொல்லட்டும். ஏன் என்றால் தமிழர்களின் ரவிக்கை பொய் சொல்லாது. சேலையும் பொய் சொல்லாது.
(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
25.10.2020
References:
1. Maxime Pilon, Danièle Weiler (2011). The French in Singapore: An Illustrated History (1819). Editions Didier Millet.
2. The New Malaysian Sugar Plantation Industry: P. P. Courtenay, Vol. 69, No. 4 (October 1984), pp. 317.
3. French planter at Bukit Tambun photo by Jules Claine, 1890s. Jacques de Morgan
Bibliothèque Nationale de France / Gallica collection.
4. Fonds Jules Claine: https://mediatheque.epernay.fr/Default/fonds-jules-claine.aspx
பின்குறிப்புகள்:
Meanwhile, in 1852, Kee Lye Huat, an ethnic Chinese, landed in Province Wellesley (now Seberang Perai). Starting out as a coolie, he gradually became a successful sugar planter and the owner of the Val d'Or sugar cane estate; he is now credited as the founder of the town.[2] Kee also played an instrumental role in the development of nearby Sungai Bakap. In 1872, he established the Kee Poh Huat Kongsi in Sungai Bakap, where his descendants still reside to this day.[3]
The person credited to founding Valdor was a Teochew named Kee Lye Huat, who arrived in Seberang Perai in 1852. He was one of the many 19th century stories of rags to riches. Through living a frugal life, Kee managed to become a successful sugar planter.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக