21 அக்டோபர் 2020

மலாயா தமிழர்கள்: சுவர்ண பூமியின் சரித்திரப் பூக்கள்

தமிழ் மலர் - 21.10.2020

மரத்தில் மலர்ந்து மண்ணில் உதிரும் சண்பகப் பூக்கள் மண்ணுக்குச் சொந்தம். மண்ணில் மலர்ந்து மண்ணில் உதிரும் சரித்திரப் பூக்கள் மனிதனுக்குச் சொந்தம். சண்பகப் பூக்கள் இதமான சண்பக மணங்களைத் தொடுகின்றன. சரித்திரப் பூக்கள் இனமான சரித்திரங்களைத் தோண்டுகின்றன. அந்தத் தேடல்களில் ஒன்றுதான் சுவர்ண பூமியின் சரித்திரப் பூக்கள். பூஜாங் சமவெளியில் புதைந்து கிடக்கும் சொப்பனப் பூக்கள்.

ஒரு காலக் கட்டத்தில் நுசாந்தாரா தீபகற்பத் தீவுகளை ஒட்டு மொத்தமாகச் சுவர்ண பூமி என்று அழைத்தார்கள். நல்ல ஒரு நெருக்கம். நல்ல ஓர் இறுக்கம்.

கிந்தா பள்ளத்தாக்கில் கண்டெடுக்கப்பட்ட
தமிழர் இனம் சார்ந்த அரும் கலைப் பொருட்கள்

அந்தச் சுவர்ண பூமி என்கிறச் சொல் இருக்கிறதே; அந்தச் சொல் தீபகற்ப மலேசியாவின் பெர்லிஸ், கெடா, வட பேராக் மாநிலப் பகுதிகளைக் குறிப்பிடும் ஒரு சரித்திரச் சொல்லாகவும் விளங்கியது.

Suvarnabhumi refers to the Southeast Asian Peninsula, including lower Burma and the Malay Peninsula. Suvarnadvipa the Golden Island or Peninsula, where dvipa may refer to either a peninsula or an island which may correspond to the Indonesian Archipelago, especially Sumatra.

பற்பல நூறு ஆண்டுகளாகச் சுவர்ண பூமிக்கும் தமிழர்களுக்கும் தொப்புள் கொடி உறவுகள். இன்னும் அறுந்து போகவில்லை. அவை எல்லாம் மறைக்க முடியாத வரலாற்றுப் புதினங்கள்.

மகாபலிபுரத்தைக் கட்டிக் காத்தவர்கள் பல்லவ ராஜாக்கள். அந்த ராஜாக்களின் காலத்திற்கு முன்பு இருந்தே மலாயா தமிழர்களின் உறவுகள் தொடங்கி விட்டன. இன்னும் தொடர்ந்து வருகின்றன. தொடர்ந்தும் போகின்றன.

சுருங்கச் சொன்னால் விஜயாலய சோழன் என்பவர் தான் சோழ சாம்ராஜ்யத்திற்கு அஸ்திவாரம் போட்டவர். ஆனாலும் சோழப் பேரரசு காலத்திற்கு முன்பு இருந்தே உறவுகள் தொடங்கி விட்டன.

புக்கிட் பத்து பகாட் ஆலயம். டாக்டர் குவாரிட்ச் வேல்ஸ் (Dr. Quaritch Wales) எனும் ஆராய்ச்சியாளரால் 1936-ஆம் ஆண்டு கண்டு பிடிக்கப் பட்டது.

அந்த வகையில் மலேசியாவின் கெடா மாநிலத்தில் இருக்கும் பூஜாங் சமவெளியின் வரலாறும் மிகவும் பழைமை வாய்ந்தது. பூஜாங் சமவெளியைக் கெடா மாநிலத்தின் புராதன அதிசயம் என்றும் வரலாற்று அறிஞர்கள் சொல்கிறார்கள்.

பூஜாங் சமவெளி 2500 ஆண்டுகளுக்கு முன்னால் பூஜாங் பள்ளத்தாக்கில் புகழ்பெற்று விளங்கிய மாபெரும் பேரரசு. அந்த வகையில் கடாரத்தை, பூஜாங் பேரரசு என்று தாராளமாக அழைக்கலாம். அது ஒரு தனி நாகரிகம். சுமேரிய நாகரிகம்; சிந்து நாகரிகம்; எகிப்திய நாகரிகம் என்று சொல்கிறார்களே, அந்த மாதிரி பூஜாங்கை பூஜாங் நாகரிகம் என்றும் அழைக்கலாம். தப்பு இல்லை.

அதே சமயத்தில் ஒன்றை மறந்துவிட வேண்டாம். பூஜாங் சமயவெளியின் நாகரிகம் மேற்கு ஆசிய - இந்திய - சீன நாகரீகங்களுடன் தொடர்பு உடையது.

Image of a dancer sculpted in high relief, found at Batu Lintang, south of Kedah.

அது மட்டும் அல்ல. கம்போடியா, அராபியா, எகிப்து போன்ற நாடுகளுடன் வர்த்தகத் தொடர்புகள் இருந்து வந்து உள்ளன. இருபது நூற்றாண்டுகளுக்கும் மேலாக அந்த நாகரீகம் நீண்டு நெடிந்து போகிறது. அந்தக் காலக் கட்டத்தில் கடல் வழி வாணிபம் சிறந்து விளங்கியது. வணிகச் செல்வங்கள்  நிறைந்து வழிந்தன.

தென்னிந்தியாவை ஆட்சி செய்த பாண்டிய, பல்லவ, சோழ மன்னர்களுக்கும் கடாரத்தை ஆட்சி செய்த மன்னர்களுக்கும் நல்ல சுமுகமான உறவுகள் நெடும் காலம் நீடித்து வந்து உள்ளன.

இங்கே குனோங் ஜெராய் எனும் ஓர் உயரமான மலை இருக்கிறது. இதன் உயரம் 1230 மீட்டர். இந்த மலை கடல் கரையில் இருந்து மிகத் தொலைவில் இல்லை. அந்தக் காலங்களில் இந்த மலை, மலாயாவுக்கு வந்த கடலோடிகளுக்கு ஒரு கலங்கரை விளக்கமாக இருந்து வந்து இருக்கிறது.

அந்த மலையின் அடிவாரத்தில் தான் பூஜாங் சமவெளி பரந்து விரிந்து கிடக்கிறது. பூஜாங் பூஜாங் சமவெளியின் பரப்பளவு 224 சதுர கி.மீ. பள்ளத்தாக்கின் வழியாக மெர்போக் நதி நளினம் காட்டுகிறது. பசுமை புரட்சி செய்கிறது. கெடா மாநிலத்தில் குருண் நகருக்கு அருகில் இருப்பது மெர்போக் சிறுநகரம். அதன் அருகாமையில் தான் பூஜாங் சமவெளி.

கி.பி.1025 ஆம் ஆண்டில் இராஜேந்திர சோழன் தென் கிழக்கு ஆசிய நாடுகளின் மீது படை எடுத்த போது பூஜாங் சமவெளியைக் கடாரம் என்று அழைத்து இருக்கிறார்கள். இந்தக் கடாரம் எனும் சொல்தான் காலப் போக்கில் கெடா என்று மருவியது.

Ganesha statue found in Bujang Valley

பூஜாங் சமவெளி ஒரு வியாபார மையமாகவும்; ஆட்சி செய்யும் இடமாகவும் இருந்து இருக்கிறது.

இராஜேந்திர சோழனின் ஆட்சி காலம் கி.பி.1012 - கி.பி.1044. இவருக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயே தென்னிந்தியாவில் கரிகாற் பெருவளத்தான் சோழன் எனும் ஒரு வீரமிகு சோழ அரசர் இருந்தார். இந்தக்  கரிகாற் பெருவளத்தான் சோழன் ஆட்சி காலத்தில் தான் பட்டினப்பாலை எனும் சங்க இலக்கியக் காவியம் எழுதப்பட்டது.

பொருநராற்றுப் படையின் பாட்டுடைத் தலைவன் என்றும் இவருக்கு அடைமொழி உண்டு. பட்டினப்பாலை என்பது பத்துப் பாட்டு இலக்கிய நூல்களில் ஒன்று.

இந்தக் காவியத்தைப் பாடியவர் கடியலூர் உருத்திரங் கண்ணனார். பூம்புகார் நகரில் இருந்த ஏற்றுமதி இறக்குமதி பண்டகசாலையில் என்னென்ன பொருட்கள் வந்து சேர்கின்றன என்பதைப் புலவர் பாடலாகப் பாடுகிறார். அதில் வரும் ஒரு பகுதியின் வரிகளைப் படியுங்கள்.

Cambodia, Myanmar, Thailand, Laos, Vietnam, Malaysia, Indonesia;
unmistakable historical evidence of Hindu-Buddhist influence

தென்கடல் முத்தும் குணகடல் துகிரும்
கங்கை வாரியும் காவிரிப் பயனும்
ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும்

இதில் 'ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும்' எனும் வரிகள் வருகின்றன. கடாரத்தின் பழைய சொல் காழகம். காழகத்தின் ஆக்கம் என்றால் கடார தேசத்தின் பொருட்கள் என்று பொருள்.

அந்தக் காலத்தில் பூம்புகார் பிரசித்தி பெற்ற நகரமாக விளங்கியது. அதே போல கடாரமும் சிறந்து விளங்கியது. தமிழர்களுக்குப் பெருமையைச் சேர்த்தது.

இராஜேந்திர சோழன் தான் அயல் நாடுகளுக்குப் பெரும்படை எடுத்துச் சென்ற முதல் இந்திய மன்னன். கங்கை கொண்ட சோழன் என்றும் இவரை அழைப்பார்கள். கடாரத்தின் மீது சோழ மன்னன் படை எடுத்தான் என்று படித்து இருப்பீர்கள். திருவாலங்காட்டுச் செப்பேடுகளில் கடாரத்தை 'கடாஹ' என்று ஒரு குறிப்பும் சொல்கிறது.

Archaeologists at Sungai Batu. (Right) A Buddha statue at the Lembah Bujang Museum.

இந்தக் காலக் கட்டத்தில் சுமத்திராவைச் சேர்ந்த ஸ்ரீ விஜய பேரரசு; பூஜாங் சமவெளியையும் ஆட்சி செய்து வந்தது. ஸ்ரீ விஜய பேரரசு சுமத்திராவின் பலேம்பாங்கில் தலைமையகம் அமைத்து இருந்தது.

அந்த ஸ்ரீ விஜய பேரரசு சாம்ராஜ்யத்திற்கு சங்கர ராம விஜயோத்துங்க வர்மன் என்பவர் அரசராக இருந்தார். 1025 ஆம் ஆண்டு இராஜேந்திர சோழனின் கடாரப் படையெடுப்பு நடந்தது .

இராஜேந்திர சோழன் கடாரத்தின் மீது படை எடுத்ததற்கு காரணம் என்ன? கடாரத்தின் ஆளுமை ஸ்ரீ விஜய பேரரசின் கீழ் இருந்ததே காரணம்.

தமிழ் நாட்டுச் சோழர்களுக்கும் சுமத்திராவின் ஸ்ரீவிஜயா அரசர்களுக்கும் நல்ல நட்பு முறை உறவுகள் இருந்து வந்து உள்ளதாகக் கல்வெட்டுகளில் சான்றுகள் உள்ளன.

Reconstruction of a candi near the Lembah Bujang Museum.

அப்புறம் ஏன் இராஜேந்திர சோழன் படை எடுக்க வேண்டும். சீன அரசுக்கும் சோழ அரசுக்கும் இடையே இருந்த வணிகத்தைத் தடுக்கும் நோக்கம் ஸ்ரீ விஜய பேரரசிற்கு இருந்து இருக்கலாம்.

இந்தப் படையெடுப்பின் மூலமாக ஸ்ரீ விஜய பேரரசின் எந்த நிலப் பகுதியும் சோழ அரசுடன் சேர்க்கப் படவில்லை. விஜயதுங்கவர்மனே மீண்டும் ஸ்ரீ விஜய பேரரசின் அரசனாகச் சோழர்களால் முடி சூட்டப் பட்டார்.

அதன் பின்னர் முதலாம் குலோத்துங்கச் சோழன் (கி.பி. 1070 - கி.பி.1120 ) காலத்திலும் கடாரத்தின் மீது படையெடுப்பு நடந்து உள்ளது. ஒரு சமரசத் தீர்வு காண்பதற்காக இந்த இரண்டாம் படையெடுப்பு நடந்தது என்று சொல்லப் படுகிறது.

Artist’s impression of a Chinese imperial treasure fleet.

பூஜாங் சமவெளியில் உள்ள கோயில்களின் காலக் கட்டம் முதலாம் நூற்றாண்டில் தொடங்கி 14-ஆம் நூற்றாண்டு வரை செல்கிறது. இந்துக் கோஉஇல்களும் உள்ளன. புத்த விகாரங்களும் உள்ளன. இது வரை ஏறக்குறைய 50 கோயில்களைக் கணக்கிட்டு இருக்கிறார்கள்.

பூஜாங் பள்ளத்தாக்கில் கண்டு எடுக்கப் பட்ட ஆலயங்களில் மிகப் பெரியது புக்கிட் பத்து பகாட் ஆலயம் ஆகும். டாக்டர் குவாரிட்ச் வேல்ஸ் (Dr.Quaritch Wales) எனும் ஆராய்ச்சியாளரால் 1936-ஆம் ஆண்டு கண்டு பிடிக்கப் பட்டது. இவருக்கு அடுத்து அல்ஸ்டார் லேம்ப் (Alastar Lamp) எனும் ஆராய்ச்சியாளர் அகழ் ஆய்வுகளை மேற்கொண்டார்.

சிதலம் அடைந்த ஆலயத்தின் முழுப் பகுதியை வெளியுலகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டினார். இந்த ஆலயத்தில் இருந்து பல பகையான சிலைகள், பல பகையான முத்து மணிகள் கண்டுபிடிக்கப் பட்டன.

இந்த ஆலயம் 7-ஆம் நூற்றாண்டில் கட்டப் பட்டு இருக்கலாம் பூஜாங் நதிக்கு மேற்குப் பகுதியில் மெர்போக் நகரம் இருக்கிறது. இந்த நகரத்தின் அருகில் கம்போங் பெண்டாலாம் டாலாம் (Kampung Bendang Dalam) எனும் ஒரு கிராமம் இருக்கிறது. இந்தக் கிராமத்தில் 1960-ஆம் ஆண்டில் அகழ் ஆய்வின் போது ஓர் ஆலயம் கண்டு பிடிக்கப் பட்டது.

இந்த ஆலயத்தின் சுற்றுப் பகுதிகளில் சிவலிங்கம், சிதைவு அடைந்த சீன நாட்டுக் கற்கலைப் பொருட்கள், சிற்பங்கள் கண்டு எடுக்கப் பட்டன. இந்த ஆலயம் 12-ஆம் நூற்றாண்டு வாக்கில் கட்டப் பட்டு இருக்கலாம்.

சண்டி பெண்டியாட், சண்டி பெங்காலான் பூஜாங் எனும் பல ஆலயங்களும் இங்கே உள்ளன. பூஜாங் பள்ளத்தாக்கில் இந்து சமயமும் புத்த சமயமும் மாறி மாறி வந்து உள்ளன. காலக் கட்டங்களும் மாறி மாறி வருகின்றன.

கடார மண்ணின் இறுகிப் போன பல்லவ இரகசியங்கள் இன்னும் மறைந்து போய் மாயம் காட்டுகின்றன. கடார மண்ணைப் பற்றி நம் நாட்டில் தமிழ் அறிஞர்கள் மிகப் பெரிய அளவில் ஆய்வுகள் செய்து உள்ளனர்.

அந்த ஆய்வுகளை வெளி உலகிற்கு கொண்டு வர வேண்டும். பழம் பெரும் உண்மைகளைச் சொல்ல வேண்டும். அந்த அறிஞர்களை ஊழி ஊழி காலத்திற்கும் ஆராதனை செய்வோம்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
21.10.2020

References:

1. Schafer, Edward H. (1963). The Golden Peaches of Samarkand: A Study of Tang Exotics. University of California Press

2. Gerini, G. E. (1909). "Researches on Ptolemy's geography of Eastern Asia (further India and Indo-Malay archipelago)". Asiatic Society Monographs. 1: 77–111.

3. Paul Wheatley (1961). The Golden Khersonese: Studies in the Historical Geography of the Malay Peninsula before A.D. 1500. Kuala Lumpur: University of Malaya Press. pp. 177–184

4. The Travels of Pedro Teixeira, tr. and annotated by W.F. Sinclair, London, Hakluyt Society, Series 2, Vol.9, 1902, p.10;

5. H. R. Wagner and Pedro de Unamuno, "The Voyage of Pedro de Unamuno to California in 1587", California Historical Society Quarterly, Vol. 2, No. 2 (Jul., 1923), pp. 140-160, p.142.



 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக