22 அக்டோபர் 2020

மலாயா தமிழர்கள் வரலாற்றில் மருது பாண்டியர்கள்

தமிழ் மலர் - 15.10.2020

மலாயா தமிழர்களின் வரலாற்றில் மருது பாண்டியார்களும் ஒரு வரலாற்றுச் சுவட்டைப் பதித்து சென்று இருக்கிறார்கள். 1818-ஆம் ஆண்டு. மருது பாண்டிய வீரர்கள் 72 பேர் பினாங்கிற்கு நாடு கடத்தப் பட்டார்கள். விடுதலை பெற்ற பின்னர், அவர்களில் சிலர், தாயகத்திற்குத் திரும்பிச் செல்லவில்லை.

பினாங்கிலேயே தங்கி விட்டார்கள். உள்ளூர்ப் பெண்களைத் திருமணம் செய்து கொண்டார்கள். அப்படியே மலாயா தீபகற்பத்தில் ஐக்கியமாகிப் போனார்கள். இவர்களின் வாரிசுகள் இன்றும் மலேசியாவின் பல பகுதிகளில் வாழ்கிறார்கள்.  இது ஓர் அரிய வரலாற்றுத் தகவல். தொடர்ந்து படியுங்கள்.


ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தில் ஆதவன் மறைவதே இல்லை. அது அவர்களின் காலா காலத்து வீர வசனம். நாயைச் சுடுவது என்றாலும் நடுத் தெருவில் நடக்க வைத்து தான் சுடுவார்களாம். பாளையங் கோட்டையில் மேஜர் பானர்மேன் (Colonel John Alexander Bannerman) சொன்ன வசனங்கள் நினைவிற்கு வருகின்றன.

அதே சமயத்தில் வீரப்பாண்டிய கட்டபொம்மன் பேசிய வசனங்களையும் நாம் மறந்துவிட முடியாது. நினைவு கூர்கிறேன். எத்தனை முறை வேண்டும் என்றாலும் கேட்கலாம்.

வரி வட்டி கிஸ்தி...

யாரை கேட்கிறாய் வரி...

எதற்கு கேட்கிறாய் வரி...

வானம் பொழிகிறது...

பூமி விளைகிறது...

உனக்கு ஏன் கட்டவேண்டும் வரி...

எங்களோடு வயலுக்கு வந்தாயா?

நாற்று நட்டாயா?

ஏற்றம் இறைத்தாயா? அல்லது

கொஞ்சி விளையாடும்

எம்குல பெண்களுக்கு

மஞ்சள் அரைத்தாயா?

மாமனா? மச்சானா?

மானங் கெட்டவனே?

இந்த வசனத்தைக் கேட்காத தமிழர்கள் இருக்க முடியாது. அந்த அளவிற்குப் புகழ்பெற்ற வசனம். பாஞ்சாலங் குறிச்சியில் கட்டபொம்மனைத் தூக்கில் போட்டவர் மேஜர் பானர்மேன். அவரிடம் கட்டபொம்மன் பேசிய வசனங்கள்.

அதே அந்த மேஜர் பானர்மேன் தான் 1817-ஆம் ஆண்டு பினாங்கு தீவின் கவர்னராகவும் இருந்தவர். பினாங்குத் தீவில் ஒரு மாதாகோயிலைக் கட்டிக் கொண்டு இருந்தார்.

அந்தச் சமயத்தில் அங்கு வேலை செய்து கொண்டு இருந்த ஓர் அறுபது வயது கிழவர் பானர்மேனைப் பார்க்க வருகிறார். உடல் தளர்ந்து உருக்குலைந்து போன அந்தக் கிழவருக்கு வயது வெறும் 33 தான். கற்பனை செய்து கொள்ளுங்கள்.

இருந்தாலும் என்ன செய்வது. சின்ன வயதிலேயே அர்த்தம் இல்லாத ஓர் அடிமை வாழ்க்கை. கிழவராகிப் போய் விட்டார். அந்த இளைஞரின் பெயர் துரைச்சாமி. இவர் வேறு யாரும் அல்ல. அவர்தான் சிவகங்கையில் இருந்து பினாங்கிற்கு நாடு கடத்தப்பட்ட சின்ன மருதுவின் சின்ன மகன் துரைச்சாமி.

மருது பாண்டியர் என்பவர்கள் மருது சகோதரர்கள். வீரம் தோய்ந்த வீரத் தமிழர்கள். மரித்துப் போனாலும் வெள்ளைத் தோல்களிடம் மன்னிப்பு கேட்காத மறத் தமிழர்கள். தமிழ் மண்ணில் இருந்து வெள்ளைக்காரப் பிசுபிசுக்களை விரட்டுவதற்காக 1785-ஆம் ஆண்டில் இருந்து 1801 வரை விடுதலைப் போராட்டம் செய்தவர்கள்.

1801-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24-ஆம் தேதி சிவகங்கைச் சீமையின் திருப்பத்தூர் (Tirupputhur) கோட்டை வளாகத்தில் தூக்கிலிடப் பட்டவர்கள்.

தூக்குக் கயிறுக்கு முன்னால் மருது நிற்கிறார். அப்போது தனக்கு எந்த ஒரு தயவு தாட்சண்யமும் காட்ட வேண்டாம் என்று வெள்ளைக்காரர்களைக் கேட்டுக் கொள்கிறார்.

‘நான் என் நாட்டைக் காப்பாற்றுவதற்குப் போராடினேன். ஆனால் தோற்கடிக்கப் பட்டேன். பரவாயில்லை. அதற்காக என்னுடைய உயிரைப் பறிக்க உங்களுக்கு உரிமை இருக்கிறது என்று நீங்கள் நினைக்கலாம். அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை.

‘இந்தச் சின்னச் சிறுசுகளைப் பாருங்கள். இந்தச் சிறுவர்கள் என்ன தவறு செய்தார்கள். என்ன பாவம் செய்தார்கள். இவர்கள் ஆயுதம் எதையும் எடுத்தார்களா? இல்லை இவர்களால் ஆயுதங்களைத் தான் தூக்க முடியுமா?  

‘தயவு செய்து அவர்களை ஒன்றும் செய்யாதீர்கள். விட்டுவிடுங்கள்’ என்று கெஞ்சினார். சாகும் போதுகூட மருதுச் சகோதரர்கள் தங்கள் உயிர்களைப் பெரிதாக நினைக்கவில்லை.

மருதுவின் அந்தக் கடைசி ஆசை இருக்கிறதே, அதை இப்படியும் சொல்லலாம். கப்பல் கடலில் மூழ்குகிறது. கப்பல் தலைவன் அந்த ஆழ்கடலிடம் போய் மடிப் பிச்சை கேட்க முடியுமா. இங்கேயும் அந்த மாதிரி தான் நடந்தது.

சின்ன மருது; பெரிய மருது மகன்களும்; பத்துப் பன்னிரெண்டு வயது பேரப் பிள்ளைகளும் தூக்கிலிடப் பட்டார்கள். அது ஒரு பெரிய கொடுமை. இந்தச் சடங்குகளை ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியின் 74, 77, 94-ஆம் ரெஜிமெண்ட் துருப்புகள் நடத்தின.

கப்பம் கட்டாத ஒட்டு மொத்த பாளையக்காரர்கள் மீது ஆங்கிலேயருக்குப் பயங்கரமான கோபம். மொத்தப் பாளையத்தையுமே தீ வைத்து அழிக்கத் திட்டம் போட்டார்கள். கண்ணில் தென்படுகின்ற அத்தனை ஆண்களையும் பிடித்தார்கள். மறுபேச்சு இல்லாமல் தூக்கில் போட்டார்கள்.

அதே திருப்பத்தூர் தூக்குக் கயிற்றில், பெரிய மருதுவின் மகன்கள் கருத்தம்பி; முல்லிக்குட்டித் தம்பி; சின்ன மருதுவின் மகன்கள் செவத்த தம்பி, முத்துசாமி உள்பட பலர் தூக்கு மரத்தைப் பார்த்தார்கள்.

சின்ன மருதுவின் கடைசி மகன் துரைச்சாமி. இவர் மதுரையில் ஒரு கிராமத்தில் கைது செய்யப் பட்டார். அப்போது அவருக்கு வயது 15. பினாங்கிற்கு நாடு கடத்தப் பட்டார். அதற்குப் பின் அடுத்து அடுத்து நடந்தவை எல்லாம் வெள்ளைக்காரர்களின் அழித்தொழிப்புகள். நெஞ்சத்தை விம்மச் செய்யும் வரலாற்று வேதனைகள்.

கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட பிறகு தப்பிச் சென்ற ஊமைத் துரைக்கு (Oomaithurai) சின்ன மருது அடைக்கலம் கொடுத்தார் என்பது தான் வெள்ளைக்காரர்களின் உப்புச் சப்பு இல்லாத ஒரு காரணம்.

சரி. மருது சகோதரர்கள் தூக்கிலிடப் பட்டதைப் பற்றி சொல்கிறேன். இரண்டு மூன்று பேர்களாகக் இராணுவக் கூண்டிற்குக் கொண்டு வரப் பட்டார்கள். அவசரம் அவசரமாகத் தீர்ப்பு சொல்லப் பட்டது.

முதலில் சின்ன மருதுவைத் தூக்கில் போட்டார்கள். அடுத்தது சின்ன மருதுவின் மூத்த மகன். அடுத்து சின்ன மருதுவின் உற்றார் உறவினர்கள். அடுத்து போர் வீரர்கள். கடைசியாகத் தான் பெரிய மருது.

இப்படித் தான் மருது பாண்டிய வம்சத்தையே கூண்டோடு தூக்கில் போட்டார்கள். ஆக ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழ்ப் போராளிகளின் சரித்திரங்கள் ஒரு சில நாழிகைகளில் அழிக்கப்பட்டு விட்டன.

அழுவதைத் தவிர சிவகங்கை மக்களுக்கு வேறு எதையும் செய்ய முடியாத நிலை. அந்தச் சமயத்தில் சின்ன மருதுவின் மகன் துரைச்சாமி வேறு இடத்தில் இருந்தார். தன்னைச் சுற்றி என்னதான் நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியாத வயது.

மருது சகோதரர்களைத் தூக்கில் போட்ட பின்னரும் ஆங்கிலேயர்களுக்கு ஆத்திரம் அடங்கவில்லை. மிஞ்சி நிற்கும் கொஞ்ச நஞ்ச தூசித் துகடுகளையும் அழிக்கத் திட்டம் போட்டார்கள்.

துரைச்சாமி போன்ற மண்ணின் மைந்தர்களை மேலைநாட்டு மக்கள் மறந்து போகலாம். ஆனால் நாம் என்றைக்கும் அவர்களை நாம் மறக்க மாட்டோம். துரைச்சாமி என்பவர் மறவர்ச் சீமை மன்னர்களின் மகன். அவர் பினாங்கில் ஒரு கைதியாக இருந்தார். அப்போது தமிழ்நாட்டில் இருந்த தன் சொந்தக்காரர்களுக்கு ஒரு கடிதம் எழுதினார். அவர் எழுதிய அந்தக் கண்ணீர்க் கடிதம் கடைசி வரை போய்ச் சேரவே இல்லை. அதுவே வரலாற்றில் கறை படிந்த ஒரு துயரச் சுவடு.

தமிழ் மண்ணுக்காகப் போராடிய மருது வீரர்களின் வரலாறு என்பது காலத்தை மிஞ்சிய காப்பியங்கள். கொஞ்ச நேரம் அவர்களை நினைத்துப் பார்ப்போம். சின்ன மருது மகன் துரைச்சாமிக்கு நடந்தது மகா பெரிய அநியாயம் என்றுதான் சொல்ல வேண்டும். சகித்துக் கொள்ள முடியாத வரலாற்றுச் சோகம்!

ஆனால் கட்டபொம்மனைத் தூக்கில் போட்ட மேஜர் பேனர்மென் கடைசி கடைசியாக ரொம்பவுமே வேதனைப் பட்டார். நம் நாட்டுப் பினாங்கில்தான் காலரா நோயினால் 60-ஆவது வயதில் 1819 ஆகஸ்டு 8-ஆம் தேதி இறந்தார்.

அது  அவருடைய தலையெழுத்து, தலைவிதி என்றால் அதை யாராலும் மாற்ற முடியாது. மேஜர் பேனர்மெனின் சமாதி பினாங்கில் இருக்கிறது. பார்க்க வேண்டும் என்று நீங்கள் ஆசைப் படலாம். போய்ப் பாருங்கள். தப்பு இல்லை.

1818-ஆம் ஆண்டில் துரைச்சாமி பினாங்கிற்கு நாடு கடத்தப்பட்டார். அவருடன் 70 தமிழர்களும் நாடு கடத்தப் பட்டு இருக்கிறார்கள். அவர்களின் கைகளை விலங்குகளால் பூட்டி இருக்கிறார்கள். கால்களை இரும்புச் சங்கிலியால் பிணைத்து நடக்க முடியாமல் செய்து இருக்கிறார்கள்.

துரைசாமியைப் பற்றி கர்னல் வெல்ஷ் (Colonel Welsh) என்பவர் தன்னுடைய  'இராணுவ நினைவுக் குறிப்புகள்’ (Welsh, James (1830). Military Reminiscences: Journal of Nearly Forty Years' Active Service in the East Indies) எனும் நூலில் விரிவாக எழுதி இருக்கிறார்.

கடலிலே 76 நாட்கள் பயணம். கடைசியாக பினாங்குத் தீவில் கப்பல் கரை தட்டியது. பயணத்தின் போது இருவர் இறந்து விட்டார்கள். மருது பாண்டியரின் மகன் துரைச்சாமி பினாங்கில் சில ஆண்டுகள் சிறைக் கைதியாக வாழ்ந்தார் என்பது மலாயா தமிழர்களின் வரலாற்றிலும் ஓர் அத்தியாயம்.

சில ஆண்டுகள் கழித்து துரைச்சாமி பினாங்கில் விடுதலையாகி சென்னைக்கு போய் இருக்கிறார். அவர் ஏற்கனவே ஆங்கில அரசிடம் பாதுகாப்புக் கோரி மதுரையில் தங்கி இருக்க அனுமதி கேட்டு இருந்தார். ஆனாலும் துரைச்சாமி நோய்வாய்ப் பட்டு சிவகங்கைக்கு கொண்டு போகப்பட்டார். அங்கு அவர் காலமானார் என்று வரலாற்றுக் குறிப்புகள் சொல்கின்றன.

(The Madura District Records letter dated 18-5-1891 volume 4669- pages 99 & 100)

துரைச்சாமி விடுதலையாகி மதுரைக்குப் போனதும் மதுரையைச் சுற்றி இருந்த கிராமங்களில் தன் குடும்பத்தையும் தன் சொந்த பந்தங்களையும் தேடி அலைந்து இருக்கிறார் என்று மற்றும் ஒரு குறிப்பு சொல்கிறது. 25 ஆண்டுகளுக்கு முன்னால் விட்டுப் போன எந்த ஓர் உறவையும் அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. சில ஆண்டுகளில் மனம் உடைந்து போய் ஓர் அனாதையாகவே இறந்து போனார்.

அவருக்காக ஒரு சின்ன நினைவாலயத்தைக் கிராம மக்கள் கட்டி இருக்கிறார்கள். இதை எழுதும் போது என் கண்கள் பனிக்கின்றன.

ஒரு முக்கியமான தகவல். சிவகங்கையில் இருந்து நாடு கடத்தப்பட்ட சிலர், விடுதலை ஆனதும் தமிழ்நாட்டிற்குத் திரும்பிப் போகவில்லை. சொல்லி இருக்கிறேன். பினாங்கிலேயே தங்கி விட்டார்கள். கெடா, பினாங்கு பகுதிகளுக்குப் போய் இருக்கிறார்கள்.

அங்கேயே கொஞ்ச காலம் வாழ்ந்து இருக்கிறார்கள். அங்கே இருந்த உள்ளூர்ப் பெண்களைத் திருமணம் செய்து இருக்கிறார்கள். அப்படியே மலாயா தீபகற்பத்திலும் ஐக்கியமாகிப் போனார்கள். அப்படியே வாரிசுகளையும் உருவாக்கி இருக்கிறார்கள். இவர்களின் வாரிசுகள் இன்றும் மலேசியாவின் பல பகுதிகளில் வாழ்கிறார்கள்.

மலாயா தமிழர்களின் வரலாற்றில் மருது பாண்டியார்களும் ஒரு வரலாற்றுச் சுவட்டைப் பதித்து சென்று இருக்கிறார்கள். நினைவில் கொள்வோம். பெருமை கொள்வோம்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
15.10.2020

சான்றுகள்:

1. K Rajayyan, South Indian Rebellion: The First War of Independence 1800-1801.

2. Govindarajan, Vinita. Remembering the Maruthu Pandiyar brothers, the leaders of the South Indian Rebellion of 1801.

3. Rajarajan, R.K.K. (2019). Linking the ancient with the modern: Rama-Laksmana and the Marutu Brothers analogy.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக