22 அக்டோபர் 2020

மலாயா தமிழர்கள்: மலையூர் துலாபாரங்கள்

தமிழ் மலர் - 22.10.2020

மலாயா தமிழர்கள் தான் மலையூர் துலாபாரங்கள். அந்த மலையூர் துலாபாரங்கள் வந்தேறிகள் அல்ல. உண்மையிலேயே அப்படிச் சொல்பவர்களில் சிலரும் பலரும் தான் வந்தேறிகள். இது பாலர் பள்ளியில் படிக்கும் பச்சைச் சிசுவிற்குக்கூட தெரிந்த விசயம். வந்தேறிகள் என்று சொல்பவர்களின் வரலாற்றுப் பின்னணி எல்லோருக்கும் நல்லாவே தெரியும்.

வந்தேறிகள் என்று சொல்பவர்களில் சிலர் என்னவோ முதல் நாள் முளைத்த முள்ளங்கி மாதிரியும்; முந்தா நாள் குதித்து வந்த வான்கோழி மாதிரியும்; மற்றவர்களைப் பார்த்து வந்தேறிகள் என்கிறார்கள். திரும்பிப் போ என்கிறார்கள். இது என்ன பசார் மாலாமில் விற்கப்படும் நாசி லெமாக் பொட்டலமா. இல்லை பூத்துப் போன பொங்கல் பொசுங்கலா. வந்தேறிகள் எனும் சொல்லுக்கு மவுசு இல்லாமல் போய் விட்டது.

மலாயா தமிழர்களின் வாரிசுகளும் இப்போதைய மலையூர் துலாபாரங்கள் தான். இன்னமும் உரிமைப் போராட்டங்களை நடத்தி வருகின்றார்கள். நேற்று வந்த அரசியல்வாதிகள் அவர்களை வந்தேறிகள் என்று வாய்கூசாமல் வசைபாடுகிறார்கள்.

ம்ீண்டும் சொல்கிறேன். வந்தேறிகள் எனும் சொல்லுக்கு ஒரு விவஸ்தை இல்லாமலேயே போய் விட்டது. இந்த நாட்டிலே பிறந்து; இந்த நாட்டிலே வளர்ந்து; இந்த நாட்டிலே வாழ்ந்து; இந்த நாட்டிலேயே மரித்துப் போனவர்களை வந்தேறிகள் என்று சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது. என்ன நீதி இருக்கிறது. சத்தியத்திற்கு வாய் இருந்தால் மனிதம் செத்துப் போகிறது என்று சத்தம் போட்டுக் கத்தும்.

பக்கத்து நாடு கறுப்பா சிகப்பா என்று தெரியாமல் வாழ்கின்ற மலாயா தமிழர்கள் வந்தேறிகளா? அல்லது பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் மலாயாவுக்குப் புலம் பெயர்ந்த அப்போதைய மலாயா தமிழர்கள் வந்தேறிகளா? அல்லது பக்கத்து நாடுகளில் இருந்து கொல்லைப் புறமாக நுழைந்தவர்கள் வந்தேறிகளா?

மலாயா தமிழர்களின் வியர்வைத் துளிகள். மலாயா தமிழர்களின் இரத்தக் குமிழ்கள். அத்தனையும் கலந்து கரைந்து உரைந்து உச்சம் பார்க்கும் ஒரு சிகரம் தான் இந்தப் பச்சை மண். அப்படிப்பட்ட ஓர் அழகிய மண்ணிலே வந்தேறி எனும் சொல் அர்த்தம் இல்லாத சொல்லாகி விட்டது. திரும்பிப் போ என்கிற கூப்பாடு நீண்டு நெடிந்து ஒடிந்து விழுகிறது. அதனால் பலருக்கும் வெட்கம். வேதனைகள். விசும்பல்கள்.

வந்தேறிகள் என்று சிலர் சொல்கிறார்களே இவர்கள் மட்டும் என்னவாம். அங்கே மட்டும் என்ன வாழுதாம். அந்தச் சொல்லைச் சொன்னவர்களும்; சொல்லிக் கொண்டு இருப்பவர்களில் சிலரும் பலரும் வந்தேறிகள் என்பதை மறந்துவிட்டு அவர்கள் பாட்டுக்கு பட்டம் பறக்க விட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

1800-ஆம் ஆண்டுகளில் மலாயாவில் காபி கரும்புத் தோட்டங்கள் அருகம் புற்களாய் அருகிப் பெருகிப் பரவின. பிரெஞ்சுக்காரர்களும் பிரிட்டிஷாரும் போட்டிப் போட்டுக் கொண்டு தோட்டங்களைத் தோற்றுவித்தார்கள். பினாங்கு, ஜொகூர் பகுதிகளில் பிரெஞ்சுக்காரர்கள். பேராக், சிலாங்கூர், நெகிரி செம்பிலான், மலாக்கா பகுதிகளில் பிரிட்டிஷ்காரர்கள்.

தோட்டங்களைத் திறந்தாகி விட்டது. வேலை செய்ய ஆட்கள் வேண்டுமே. உள்ளூரில் வாழ்ந்தவர்கள் காபி கரும்புத் தோட்ட வேலைகளுக்குச் சரிபட்டு வரவில்லை. காலம் காலமாக வயல்காடுகளே அவர்களின் வாழ்வாதாரம். ஆர்ப்பாட்டம் இல்லாத அமைதியான வாழ்வியல். அப்படியே வாழ்ந்து விட்டவர்கள். கரடு முரடான காட்டு வேலைகள் பொருந்தி வரவில்லை.

சீனர்களைப் பொறுத்த வரையில் ஈய லம்பங்கள் அவர்களின் சொர்க்கவாசல். பணம் கொட்டியது. தோண்டித் தோண்டி எடுத்தார்கள். பக்கத்து நாட்டில் வாழ்ந்தவர்கள் ஜாவானிய மக்கள். சற்றே உடல் வலிமை. காடு மேடுகளை அழிக்க நல்ல உறுதியான உடல்கட்டு.

ஆயிரக் கணக்கில் அல்ல. நூற்றுக் கணக்கில் இறக்குமதி செய்யப் பட்டார்கள். ஆனாலும் அப்போது இந்தோனேசியாவை ஆட்சி செய்த டச்சுக்காரர்களின் கெடுபிடிகள். அதனால் ஜாவனியர்களை மலாயாவுக்குக் கொண்டு வருவதில் சில பல சிக்கல்கள்.

இந்தக் கட்டத்தில் தான் வெள்ளைக்காரர்களின் பார்வை தென்னிந்தியா பக்கம் திரும்பியது. வெள்ளந்திகளின் வெகுளித்தனங்கள். வெள்ளைக்காரர்களுக்குப் பிடித்துப் போனது. அந்த வெள்ளந்திகளுக்கு இளைச்சவாயத் தனங்கள் இருப்பதையும் ஆராய்ச்சி பண்ணி தெரிந்து கொண்டார்கள். ஆயிரம் ஆயிரமாய் இழுத்து வரப்பட்டார்கள்.

19-ஆம் 20-ஆம் நூற்றாண்டுகளில் மலாயாவுக்கு கூலி வேலைகள் செய்ய ஆயிரக்கணக்கான தென்னிந்தியர்கள் அழைத்து வரப்பட்டார்கள். அந்தத் தென்னியந்தியர்களைக் குறிக்கும் ஒரு வழக்குச்சொல் சஞ்சிக்கூலி.

சஞ்சிக்கூலி எனும் சொல் சஞ்சி (Janji) எனும் மலாய்ச் சொல்லில் இருந்து உருவானது. தமிழில் ஒப்பந்தம் என்று சொல்லலாம். ஒன் மினிட் பிளீஸ்.

மலேசியாவில் இப்போது வாழும் இந்தியர்களில் 85 விழுக்காட்டினரின் மூதாதையர்கள் சஞ்சிக் கூலிகளாய் கப்பல் ஏறி வந்தவர்கள். பினாங்கு புறமலை தொற்றுநோய் ஒதுக்கிடத்தில் தனிமைப் படுத்தப் பட்டவர்கள். அப்புறம் காட்டுப் பாதை கம்பிச் சடக்குகளில் அடிமைகளைப் போல நடக்க வைக்கப் பட்டவர்கள்.

லாரிகளில் ஆடு மாடுகளைப் போல ஏற்றி வரப் பட்டவர்கள். மாட்டு வண்டிகளில் மூட்டை முடிச்சுகளோடு நசுக்கிக் கொண்டு வரப் பட்டவர்கள். ரப்பர் தோட்டங்களில் தகரக் கொட்டகைகளை லயங்கள் என்று சொல்லி அங்கே தங்க வைக்கப் பட்டவர்கள். அப்புறம் சாகும் வரையில் மிருகங்களை விட மோசமாக வேலை வாங்கப் பட்டவர்கள்.
 
கேவலம்! மலாயாவில் நடந்த கொடுமை அப்போதைக்கு ஒரு கதையாக இருந்தது. அதுவே இப்போதைக்கு ஒரு வரலாறாகவும் மாறிப் போகின்றது.

ஐரோப்பியர்களின் ரப்பர் தோட்டங்களில் இரவு பகலாய் ஓய்வு ஒழிச்சலின்றி ஆடு மாடுகளைப் போல வேலைகள் செய்தார்கள். பொதுவாக கொத்தடிமைகளைப் போல நடத்தப் பட்டார்கள் என்று சொன்னால் தான் சரியாக இருக்கும். வரலாற்று ஆவணங்கள் பொய் சொல்வது இல்லை.

மலாயா தமிழர்களின் இப்போதைய நான்காம் ஐந்தாம் தலைமுறையினர் மற்றவர்களுக்குச் சவால்விடும் அளவிற்கு கல்வித் துறைகளில் வளர்ச்சி அடைந்து பெரிய பெரிய சாதனைகளை எல்லாம் படைத்து வருகிறார்கள். ஒரு வீட்டிற்கு ஒரு பட்டதாரி எனும் சொல் வாசகம் மலாயா தமிழர்களின் மலைவாசகமாக மாறி வருகிறது.
 
அது எல்லாம் இல்லை. எங்க தாத்தா இத்தாலியில் பிறந்தவர். அங்கே இட்லி சுட்டு விற்றவர். எங்க பாட்டி இங்கிலாந்தில் பிறந்தவர். அங்கே இஞ்சி சூஸ் விற்றவர். என் மாமா அமெரிக்காவில் பிறந்தவர். ஐஸ் கச்சாங் விற்றவர் என்று சிலர் சொல்லலாம். சொல்லிவிட்டுப் போகட்டுங்க. தவறாக நினைக்க வேண்டாம். சிலருக்கு ரொம்பவே வெள்ளைக்காரன் நினைப்பு. அவ்வளவுதான்.

அந்த மாதிரியான ’கிளேமர்’ கிளியோபாட்ராக்கள்; மார்டன் ரோசா பூக்களைப் பார்த்து பெருமை படுவோம். என்ன இருந்தாலும் அவர்களின் உடல்களிலும் மலாயா தமிழர்களின் இரத்தம் ஓடுகிறது. மறந்து இருக்கலாம். விடுங்கள். அப்படியாவது பேசி பிழைத்துப் போகட்டும்.

 

சஞ்சிக்கூலிகள் எனும் மலையூர் துலாபாரங்களைப் பற்றி உங்கள் பிள்ளைகளிடம் சொல்லிக் கொடுங்கள். இப்போது நாம் ஓரளவிற்குச் சுகமான வாழ்க்கை வாழ்கிறோம். ஆனால் நம்முடைய மூதாதையர்கள் அப்படி வாழவில்லை. வாழ்வதற்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அந்த மூத்தவர்கள் எப்படி எல்லாம் கஷ்டப்பட்டு இருப்பார்கள். நினைத்துப் பார்க்கச் சொல்லுங்கள்.

தண்ணீர்க் கப்பல்களில் வந்து… வியர்வை மழையில் நனைந்து… வெயில் காட்டில் காய்ந்து… காடு மேடுகளில் அலைந்து… தடி எடுத்த தண்டல்களின் ஏச்சு பேச்சுகளை வாங்கி வதங்கி… இடுப்பு எலும்பு உடைந்து…  அரைவயிறும் கால் வயிறுமாய்க் கஷ்டப்பட்டு... இதை எல்லாம் நம் வருங்காலச் சந்ததியினர் அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அதுவே இந்தக் கட்டுரையின் தலையாய நோக்கமாகும்.

1800-ஆம் ஆண்டுகளில் மலாயாவில் இருந்த வெள்ளைக்காரத் துரைமார்கள் நூற்றுக்கணக்கான கங்காணிகளைத் தென் இந்தியாவிற்கு அனுப்பி வைத்தார்கள். இந்தக் கங்காணிகள் வேறு யாரும் இல்லை. அதே கறுப்புத் தோல்கள் தான். அதே சிவப்பு இரத்தம் தான்.

உடலை மறைக்க ஒரு துண்டு வெள்ளை ஜிப்பா. ஒரு துண்டு வெள்ளை வேட்டி. நெற்றியில் பெரிசா ஒரு திருநீறு. ஐம்பது காசு குங்குமம். கொஞ்சம் பன்னீர் சண்பக வாசம். சந்தனக் கலரில் ஓர் இடுப்புத் துண்டு. அம்புட்டுத்தான்.

’ஊருக்கு போங்க. பினாங்குல காசும் பணமும் கித்தா மரத்தில காச்சு காச்சுத் தொங்குதுனு சொல்லுங்க. காற்று அடித்தால் ஒரு பக்கம் ஒத்த வெள்ளியா கொட்டும். இன்னொரு பக்கம் அஞ்சு அஞ்சு வெள்ளியா கொட்டும். ஆசை ஆசையா அவுத்து விடுங்க. மண்டையை நல்லா கழுவுங்க.

முடிஞ்சா லக்ஸ் லைப் பாய் சவுக்காரத்தை போட்டு நல்லா குளிப்பாட்டுங்க. அப்படியே மூட்டை கட்டி இழுத்துட்டு வாங்க’

இந்த மாதிரி தான் மூளைச் சலவை செய்யப்பட்ட கங்காணிகள் தான் அங்கே அனுப்பப் பட்டார்கள். நாகப்பட்டணத்தில் கப்பலை விட்டு இறங்கியதும் அந்தக் கங்காணிகள் தான் அப்போதைக்கு மலாயாவின் மயக்கும் மாலை மன்மதக் குஞ்சுகள். மன்னிக்கவும். இனிக்கும் இன்னிசை வேதாளங்கள்.

ஆக அந்த வகையில் அந்தக் கொஞ்சல் கொசுறுகளின் ஆசை வார்த்தைகளை நம்பி மலாயாவுக்குள வந்தவர்கள் தான் மலையூர் துலாபாரங்கள். தமிழர்கள், தெலுங்கர்கள், மலையாளிகள் என்று பேதம் இல்லை. சகட்டுமேனிக்குச் சஞ்சிக்கூலிகளாய்த் தான் மலாயாவுக்குள் வந்தார்கள்.

இதில் கொஞ்சம் படித்த இலங்கை மலையாளச் சொந்தங்கள் பேனா பிடிக்கும் வேலைக்குப் போனார்கள். கிராணிகளாகவும் டிரசர்களாகவும் பேர் போட்டார்கள்.

இருந்தாலும் கப்பல் ஏறி வந்த கதையில் பெரிசா பெருமை பேச எதுவும் இல்லை. வந்தவர்கள் அனைவருமே சஞ்சிக்கூலி துயர அத்தியாயத்தின் அரிச்சுவடிகள் தான். ஒரே வார்த்தையில் முடித்துக் கொள்கிறேன். மலாயா தமிழர்கள் என்பவர்கள் மலையூர் துலாபாரங்கள். அதில் மாற்றுக் கருத்துகள் இல்லை. சத்தியத்திற்கு வாய் இருந்தால் மலாயா தமிழர்கள் மலையூர் துலாபாரங்கள் என்று சத்தம் போட்டுக் கத்தும்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
22.10.2020

சான்றுகள்:

1. Tragic Orphans: Indians in Malaysia by Carl Vadivella Belle, Publisher: Institute of Southeast Asian Studies.

2. Sandhu, Kernial Singh (30 January 2006). Indian Communities in Southeast Asia ISEAS Publishing.

3. Dr. Martin Richards. "Climate Change and Postglacial Human Dispersals in Southeast Asia". Oxford Journals.

4. The HUGO Pan-Asian SNP Consortium (11 December 2009). "Mapping Human Genetic Diversity in Asia".




 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக