தமிழ் மலர் - 19.10.2020
மலாயா தமிழர்களின் வரலாறு நீண்டது. நெடியது. வரலாற்று வேதங்களால் வாசிக்க முடியாதது. வாய்ச் சொல் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதது. துயரமான வரலாற்றுச் சோகங்களால் விவரிக்க முடியாதது. அந்தச் சோகங்கள் காலத்தால் மறுக்க முடியாதது. ஞாலத்தால் மறைக்க முடியாதது.
ஒரே வார்த்தையில் சொல்லலாம். மலையூர்த் தமிழர்களின் வரலாறு இன்றைக்கும் இனி என்றைக்கும் சாகாவரம் பெற்ற சாசனம். மலாயா வரலாற்றுச் சாசனத்தில் தலையாயச் சாசனம். மறுக்க முடியுமா?
சோதனைகள் கடந்த மலாயாத் தமிழர்களின் சாதனைகளை உலக வரலாறு என்றைக்குமே மறக்காது. ஒன்று மட்டும் உண்மை. மற்றவர்கள் மலையூர் மண்ணில் கால் பதிப்பதற்கு முன்னரே தமிழர்கள் முத்திரை பதித்து விட்டார்கள்.
உண்மையிலேயே இது ஒரு வரலாற்று உண்மை. யார் வேண்டுமானாலும் தமிழர்களின் வரலாற்றுப் படிவங்களைச் சிதைக்கலாம். வரலாற்றுப் படிமங்களை மறைக்கலாம். வரலாற்றுச் சான்றுகளைச் சட்டியில் போட்டு வறுத்தும் எடுக்கலாம். பிரச்சினை இல்லை.
ஆனால்… ஆனால்… மலாயாத் தமிழர்களின் வரலாற்றை மட்டும் எந்தக் காலத்திலும் அழிக்கவே முடியாது. மலாயாத் தமிழர்களின் வரலாற்றுப் பின்னணி வேர்களை என்றைக்கும் எவராலும் அறுத்துப் போடவே முடியாது.
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் திரைகடல் தாண்டி திரவியம் தேடி மலையகத்திற்கு வந்து விட்டார்கள். வணிகர்களாக வந்தார்கள். வணிகம் பார்த்தார்கள். வயல்காட்டு மன்னர்களுக்கு வாழ்வியலைக் கற்றுக் கொடுத்தார்கள். வாழ்ந்தும் காட்டினார்கள்.
புகுந்த இடத்தில் வாழ்க்கையைச் செம்மைப் படுத்தினார்கள். பொன்னையும் பொருளையும் தேடிக் கொண்டார்கள். வந்த வழியாகப் பலரும் திரும்பிச் சென்றார்கள்.
விரல்விட்டு எண்ணக்கூடிய சிலர் மட்டும் வந்த இடத்தில் உள்ளூர்ப் பெண்களைப் பார்த்து மயங்கினார்கள். கிரங்கினார்கள். கழுத்தை நீட்டச் சொன்னார்கள். கயிறைக் கட்டி விட்டார்கள்.
அப்புறம் என்ன. வழமையான வழுக்கல் தானே. அவர்களும் வயல்காட்டில் மீன் பிடித்தார்கள். சுட்டுத் தின்ன ருசியில் அப்படியே நிரந்தரமாய்த் தங்கி விட்டார்கள். அப்படியே புதிய வாரிசுகளைத் தோற்றுவித்தார்கள். ஒன் மினிட் பிளீஸ். தமிழகம் பக்கம் போய் கொஞ்சம் பார்ப்போமே.
கரிகால் சோழன். கேள்விப்பட்டு இருப்பீர்கள். சங்க காலத்தைச் சேர்ந்த அழகான அற்புதமான சோழ மன்னன். கி.பி 200-ஆம் ஆண்டுகளில் காஞ்சி முதல் காவிரி வரை ஆட்சி செய்தவர்.
அவர் காலத்தில் ஒரு பெண் புலவர். பெயர் வெண்ணிக் குயத்தியார். புறநானுற்றில் அவரின் ஒரு பாடல்.
நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி
வளிதொழில் ஆண்ட உரவோன் மருக!
களி இயல் யானைக் கரிகால் வளவ!
(பாடல் 66)
அதன் பொருள் என்ன தெரியுங்களா. காற்றைப் பயன்படுத்திக் கப்பல் செலுத்தும் தொழில் நுட்பத்தைக் கற்றவன். நடுக்கடலில் கப்பலோட்டிச் சென்றவன். அப்படிப்பட்ட புகழ் பெற்ற பரம்பரையில் வந்தவன் என்று கரிகாலனைப் புகழ்ந்து பாடுகிறார்.
காற்றின் தொழில் நுட்பம் அறிந்து நடுக்கடலில் கப்பல் செலுத்துவதில் தமிழர்கள் திறமையும் வல்லமையும் உடையவர்களாக இருந்து இருக்கிறார்கள் என்பதை அந்தப் பாடல் சான்று கூறுகிறது.
இந்தப் பாடல் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் எழுதப் பட்டது. ஆக 2000 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் கடல் பயணத்தில் சிறந்து விளங்கி இருக்கிறார்கள் என்பதற்கு இதுவும் நல்ல ஒரு சான்று.
சங்க காலத் தமிழகத்தில் வசவச முத்திரம், அரிக்கமேடு, மரக்காணம், காரைக்காடு, குடிகாடு, காவிரிப் பூம்பட்டினம், அழகன்குளம், கொற்கை போன்ற துறைமுகங்கள் புகழ்பெற்று விளங்கி இருக்கின்றன. நான் சொல்வது சங்கக் காலத்தில்.
இடைக் காலத்தில் பெரியபட்டினம், நாகப்பட்டினம், பரங்கிப்பேட்டை போன்ற துறைமுகங்கள் இருந்து இருக்கின்றன.
1912-ஆம் ஆண்டு நாகப்பட்டினம் மாவட்டம் பூம்புகார் கடற்கரையில் ஒரு சிதைந்த கப்பல் கண்டு எடுக்கப் பட்டது. ஆய்வு செய்து பார்த்தார்கள். அது ஏறக்குறைய 2500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று தெரிய வந்தது.
எத்தனை வருடம் பார்த்தீர்களா. 2500 வருடங்கள். அந்தக் கப்பலில் பொறிக்கப்பட்டு இருந்த எழுத்துக்கள் எல்லாமே சங்கத் தமிழ் எழுத்துக்களுடன் ஒத்துப் போகும் எழுத்துகளாக இருந்தன.
இதே மாதிரி ஆஸ்திரேலியா பசிபிக் கடல்பகுதியில் 1811-ஆம் ஆண்டு ஒரு பெரிய சரக்கு கப்பல் கண்டுபிடிக்கப் பட்டது. ஆராய்ந்து பார்த்ததில் 2,500 ஆண்டுகளுக்கு மேல் பழமையான தமிழர்களின் கப்பல் என்றும் கண்டுபிடிக்கப் பட்டது.
அந்தக் காலத்தில் மகதம், கலிங்கம் போன்ற இந்திய அரசுகளிடம் பெரும் பெரும் கடற்படைகள் இல்லை. மகதம் என்பது மகத நாடு. அசோகர் ஆட்சி செய்த நாடு. மகதத்திற்கு அருகில் இருந்தது கலிங்க நாடு.
கங்கை முகத்துவாரத்தில் தாமரலிபதா (Tamaralipta) எனும் துறைமுக நகரம். அது கலிங்க அரசின் துறைமுகம். தமிழகத்தில் உள்ள தாமிரபரணி ஆற்றின் பெயர் வருகிறது. கவனியுங்கள். அந்தக் காலக் கட்டத்தில் இந்தத் தாமிரலிபதா நகரம் மிகவும் புகழ் பெற்றது.
(சான்று: இலங்கையில் தமிழர், கா. இந்திரபாலா; பக்: 126-127)
வரலாற்றைப் புரட்டிப் பாருங்கள். தமிழர்களின் கடல் பயணங்களின் வீர தீரச் செயல்கள் சரம் சரமாய் வந்து கொட்டும். அந்தக் காலத்துத் தமிழர்களுக்குப் புலம்பெயர வேண்டும். புதுக் குடித்தனம் செய்ய வேண்டும் என்கிற எண்ணம் அறவே இல்லை.
ஆக மறுபடியும் சொல்கிறேன். மலாயா தமிழர்கள் வந்தேறிகள் அல்ல. அதற்குச் சான்றுகள் தேவை இல்லை. வரலாறே அவர்களுக்கு ஒரு சான்றாக அமைந்து போகின்றது. அசோகர் காலத்தில் தான் தமிழர்களின் முதல் புலம்பெயர்வு நடந்து இருக்கிறது.
கலிங்கப் போரைப் பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள். மண்ணாசை வெறியில் மகா அசோகர் கலிங்கத்தின் மீது படை எடுத்தார். ஓர் இலட்சம் பேரைக் கொன்று போட்டார். ஒன்றரை இலட்சம் பேரை நாடு கடத்தினார்.
கலிங்கப் போரில் தப்பித்த கலிங்கர்களும் நாடு கடத்தப் பட்ட கலிங்கர்களும் தென்கிழக்காசிய நாடுகளுக்குள் அடைக்கலம் அடைந்தனர். கடல் வழியாகக் கலிங்கர்கள் ஆயிரக் கணக்கில் மலாயாவுக்குள் புலம் பெயர்ந்தனர். இந்த இடத்தில் இருந்துதான் மலாயாவில் தமிழர்களின் வரலாறும் தொடங்குகிறது. கலிங்கர்களும் தமிழர்களும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள்.
இது ஒன்றும் கட்டுக் கதை இல்லை. கம்பருக்குப் பின் வந்த கட்டுக் காவியமும் இல்லை. உண்மைக் கதை.
கலிங்கப் போர் என்பது சிலருக்குத் தெரிந்த ஒரு வரலாற்றுப் பதிவு. பலருக்குத் தெரியாத ஒரு காலச் சுவடு. உலக மாவீரர்களில் ஒருவர் அசோகர். கலிங்கப் போருக்குப் பின்னர் அவர் மனமாற்றம் அடைந்தார். அகிம்சைக்கு மாறினார். ஆனால் அவருடைய அகிம்சா மனமாற்றம் என்பது கலிங்கப் போருக்குப் பின்னர் நடந்த கதை. அதை மட்டும் நாம் மறந்துவிடக் கூடாது.
உலக வரலாற்றில் ஆயிரம் ஆயிரம் மன்னர்கள் வந்தார்கள். வாழ்ந்தார்கள். வென்றார்கள். வீழ்ந்தார்கள். அவர்களில் சிலர் தங்களைத் தாங்களே மாட்சிமை நிறைந்த மாமன்னர்கள் என்றும் அழைத்துக் கொண்டார்கள்.
ஆனாலும் அவர்களில் பலர் வந்ததும் தெரியவில்லை. போனதும் தெரியவில்லை. இருக்கை இழந்து வாழ்க்கை இழந்து இடம் தெரியாமல் வரலாற்றில் இருந்து மறைந்து போய் விட்டார்கள்.
ஆனால் ஒருவர் மட்டும் வரலாறு நிலைக்கும் வரை வாழ்கின்றார் என்று ஹெச். டி. வெல்ஸ் எனும் ஓர் ஆங்கில இலக்கிய மேதை சொல்லி இருக்கிறார். அந்த இந்திய மன்னர் தான் அசோகர்.
அசோகர் கலிங்கத்தின் மீது படை எடுத்ததால் அங்கு இருந்து ஒன்றரை இலட்சம் கலிங்கர்கள் வெளிநாடுகளுக்குப் புலம் பெயர்ந்தார்கள். அதுதான் கலிங்கர்களின் முதல் புலம்பெயர்வு.
மலாயா, பர்மா, இந்தோனேசியா, வியட்நாம், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளுக்குக் கலிங்கர்கள் புலம் பெயர்ந்தார்கள். அந்தக் கலிங்க வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் தான் மலாயா தமிழர்கள்.
எழுதி வைத்துக் கொள்ளுங்கள். இனி யாராவது மலாயா தமிழர்களை வந்தேறிகள் என்று சொன்னால் இந்த உண்மையைத் தூக்கிப் போடுங்கள். எல்லாம் சரியாக வரும். வந்ததை மறந்த சுயநல அரசியல்வாதிகள் சிலர் வாய்க் கூசாமல் பேசுவதையும் சற்றே நிறுத்தி வைப்பார்கள்.
மலாக்கா முத்துக்கிருஷ்ணன்
(19.10.2020)
சான்றுகள்:
1. R. C. Majumdar (1996). Outline of the History of Kalinga. Asian Educational Services. ISBN 978-81-206-1194-8.
2. Walter Smith (1994). The Mukteśvara Temple in Bhubaneswar. Motilal Banarsidass. ISBN 978-81-208-0793-8.
3. Umakanta Subuddhi (1997). "Economic Life of Orissa under the Bhauma-Karas". In Nihar Ranjan Patnaik. Economic History of Orissa. Indus. ISBN 978-81-7387-075-0.
4. K. A. Nilakanta Sastri, ed. (1988) [1967]. Age of the Nandas and Mauryas (Second ed.). Delhi: Motilal Banarsidass. ISBN 81-208-0465-1.
5. 1.A. P. Patnaik, "Kalingan Link with Countriesof South-East Asia,"Orissa Review,vol. XLVIll, No.9, 1992. p. 25.
6. G. Coedes,The Indianized States of South- East Asia,Honolulu. 1967, p.19.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக