24 அக்டோபர் 2020

போர்னியோ காடுகளில் டயாக் இந்துக்கள்

தமிழ் மலர் - 24.10.2020

மலேசியாவின் களிமந்தான் மழைக் காடுகள். பழைமை பச்சைக் காடுகள். பசுமை பச்சைக் கம்பளங்கள். பச்சைவெளி பழம் குவியல்கள். ஈரம் பாய்ந்த எழில் கோலங்கள்.

கோடிக் கோடியான உயிரினங்கள் கோடிக் கோடியான ஆண்டுகளாய் கூடிக் குலவி வாழ்கின்ற பச்சைக் காடுகளின் பசுங்காட்டு வெளிகள். பரிசுத்தமான இயற்கையின் இனியச் செல்வங்கள். பச்சையில் சங்கமிக்கும் பாரிஜாத உச்சங்கள். அனைத்துமே சொற்களில் வடிக்க முடியாத கானகத்துச் கவிக் காவியங்கள்.

A traditional costume show of Dayak Hindu Kaharinga

இந்தக் களிமந்தான் காடுகள் போர்னியோ தீவில் உள்ளன. மலேசியாவிற்குச் சொந்தமான நீர்நிலைக் காடுகள். இங்கேதான் ஓர் அதிசயம் நடக்கிறது. உலக இந்துக்கள் பலருக்கும் தெரியாத ஓர் அதிசயம். என்ன அதிசயம் தெரியுங்களா?  

இந்தக் காடுகளில் வாழும் டயாக் பூர்வீக மக்கள் ஒரு வகையான இந்து மதத்தைப் பின்பற்றி வருகின்றார்கள். இவர்கள் பின்பற்றும் இந்து மதத்தின் பெயர் காரிங்கான் (Kaharingan) இந்து மதம். உலகளாவிய இந்து மதத்தின் பின்னணியில் உருவான ஓர் இயற்கை மதம். காரிங்கான் இந்து மதம்.

பாலித் தீவில் பல இலட்சம் இந்தோனேசிய இந்துக்கள் வாழ்கிறார்கள். அவர்களும் தங்களுக்கு என ஒரு தனிப்பட்ட இந்து சமயத்தை உருவாக்கிப் பின்பற்றி வருகின்றார்கள் (Agama Hindu Dharma - Tri Hita Karana). அதைப் போலவே களிமந்தான் காடுகளில் (Ketapang Regency, West Kalimantan) வாழும் காஜு எனும் டயாக் (Dayak Ngaju) பிரிவினரும் ஒரு தனித்துவமான இந்து சமயத்தை (Folk Hinduism) உருவாக்கி வழிபட்டு வருகிறார்கள்.

இறைவனே உச்சத்தில் உயர்வானவர்; உயிர்களில் ஒப்புயர்வானவர் (One Supreme God) எனும் கொள்கையில் காரிங்கான் இந்து மதம் செயல்பட்டு வருகிறது.

Dayak Ngaju Native Village, Bukit Rawi, Central Kalimantan
Sandung Dayak ancestral bone houses Tiwah Hindu Kaharingan Kalimantan

போர்னியோவில் பலவகை டயாக் மக்கள் வாழ்கிறார்கள். ஏறக்குறைய 200 வகையான டயாக் மக்கள். அந்த வகையில் மத்திய களிமந்தான் காடுகளில் காஜு எனும் டயாக் பிரிவினர் உள்ளனர். அவர்கள் பின்பற்றும் இந்து மதமே காரிங்கான் இந்து மதம் ஆகும்.

டயாக் என்பவர்கள் போர்னியோ தீவின் பழங்குடி மக்கள் ஆகும். தெரிந்த விசயம். இந்தப் பழங்குடி மக்களில் 250 துணை இனக் குழுக்கள் உள்ளன. அனைவரும் போர்னியோ காடுகளின் உள் பாகங்களில் வாழ்கின்றார்கள்.

இவர்கள் ஆஸ்திரோனேசிய (Austronesian) மொழியைப் பேசுகின்றார்கள். பெரும்பாலும் அனைவரும் ஆன்மவாதிகள் ஆகும். ஏறக்குறைய 40 இலட்சம் டயாக்குகள், களிமந்தான் சரவாக் பகுதிகளில் வாழ்கின்றார்கள்.

(Belford, Audrey (September 25, 2011). "Borneo Tribe Practices Its Own Kind of Hinduism". New York TImes.)

காஜு டயாக் மக்கள் பின்பற்றும் மதம் இந்து மதத்தைச் சார்ந்ததாக இருந்தாலும் அதனை இந்தோனேசிய அரசாங்கம் அங்கீகரிக்கவில்லை.


A child dressed up for a festive Hindu dance in Ubud, Bali

இஸ்லாம்; புரொடெஸ்டனிசம்; கத்தோலிக்கம்; இந்து; புத்தம்; கான்பூசியசம் ஆகிய ஆறு மதங்களை மட்டுமே அதிகாரத்துவ மதங்களாக இந்தோனேசிய அரசாங்கம் அங்கீகரித்து உள்ளது. காரிங்கான் மதம் இன்று வரையில் அங்கீகரிக்கப் படாமல் உள்ளது. இந்தக் காரிங்கான் மதத்தில் இந்து - ஜாவானிய தாக்கங்கள் உள்ளன.
 
தீவா பண்டிகை (Tiwah) என்பது காஜு டயாக் மக்களின் திருவிழாவாகக் கருதப் படுகிறது. இந்த விழா முப்பது நாட்களுக்குத் தொடர்ந்து நடைபெறுகிறது. அந்தக் கட்டத்தில் எருமைகள், ஆடுகள், மாடுகள், கோழிகள் போன்றவை உயிர்ப்பலி கொடுக்கப் படுகின்றன. இந்த உயிர்ப்பலிக்கு யாட்னா (Yadnya) என்று பெயர்.

(Greer, Charles Douglas (2008). Religions of Man: Facts, Fibs, Fears and Fables. Bloomington, IN: AuthorHouse. p. 135. ISBN 1-4389-0831-8.)

Kaharingan is an animistic folk religion professed by many
Dayaks in Kalimantan, Indonesia; particularly Central Kalimantan

காரிங்கான் மதத்த்தின் தலையாய குலதெய்வமாக ரான்யிங் தெய்வம் கருதப் படுகிறது. இவர்களின் வழிபாட்டுப் புனித நூலுக்கு பனாத்தூரான் (Panaturan) என்று பெயர். வழிபாட்டுத் தளத்தின் பெயர் பாலாய் பசாரா அல்லது பாலாய் காரிங்கான் (Balai Basarah - Balai Kaharingan).

காரிங்கான் என்பது பழைய டயாக் சொல் ஆகும். காரிங் எனும் சொல்லில் இருந்து உருவானது. காரிங் என்றால் டயாக் மொழியில் உயிர் அல்லது வாழ்வதாரம் என்று பொருள்.

களிமந்தான் டயாக் மக்களிடம் தனிப்பட்ட ஒரு சிறப்பு இயல்பு உள்ளது. மழைக்காட்டு விசுவாசம் என்று சொல்வார்கள். அது அவர்களின் உயிர்த் தன்மை. அதாவது காட்டின் இயற்கைத் தன்மையைப் பாதுகாக்கும் சிறப்புத் தனமை. மழைக் காடுகளை எப்படி பாதுகாக்க வேண்டும் என்று அவர்களுக்குள் கண்டிப்பான வரைமுறைகள் உள்ளன.

Gayatri Mantram & Doa berbahasa Sangiang
(Dayak Kalimantan) berirama TANDAK – KAHARINGAN

காட்டில் இருந்து எதை எடுத்து வரலாம்; எதை எடுத்து வரக்கூடாது எனும் எழுதப் படாத சாசனங்கள். அந்த வரைமுறைகளை அவர்கள் தாண்டிச் செல்வது இல்லை. டயாக் சமூகங்கள் காட்டை நம்பியே வாழ்கின்றன. அதனால் அவர்களுக்குள் ஒரு கட்டுப்பாட்டை வைத்து இருக்கிறார்கள்.


காஜு டயாக் மக்கள் பெரும்பாலோர் விவசாய வணிகம்; நெல் பயிரிடுதல்; கிராம்பு பயிர் செய்தல்; மிளகு, காபிச் செடி வளர்த்தல்; கொக்கோ பயிர் செய்தல் போன்றவற்றில் ஈடுபட்டு உள்ளனர். மத்திய களிமந்தான் பகுதியில் வாழும் பெரும்பாலான டயாக்குகள் இந்து காரிங்கான் மதத்தைப் பின்பற்றி வருகின்றனர்.

Dayak Kaharingan Hindu Girls Central Kalimantan

இருப்பினும் அண்மைய காலங்களில் இந்தக் களிமந்தான் டயாக் மக்கள் இஸ்லாம், கிறிஸ்த்துவ மதங்களுக்கும் மாறி வருகின்றனர்.

1950-ஆம் ஆண்டுகளில் சுதந்திரம் பெறுவதற்காக டயாக் மக்கள் டச்சுக்காரர்களுக்கு எதிராகப் போராட்டம் செய்து இருக்கிறார்கள்.

அந்த வகையில் காஜு டயாக் மக்களின் சுதந்திரப் போராட்டத்திற்கு மேஜர் ஜிலிக் ரீவுட் (Major Tjilik Riwut) என்பவர் தலைமை தாங்கினார். இவர் ஏற்கனவே காரிங்கான் இந்து மதத்தைப் பின்பற்றி வந்தார். மத்திய களிமந்தான் பகுதியின் கவர்னராக இருந்தவர். அவரின் தலைமைத்துவத் தாக்கம்; சுதந்திரப் போராட்டத்  தாக்கத்தினால் காஜு மக்களும் காரிங்கான் மதத்தைப் பின்பற்றத் தொடங்கினர்கள்.

Dayak Dance at Upau Village Banjarmasin

தலைவர் எவ்வழியோ குடிமக்களும் அவ்வழியே என்று சொல்வார்கள். அந்த மாதிரி தலைவரின் போராட்ட உணர்வுகளினால் கவரப்பட்ட டயாக் மக்கள் தலைவர் பின்பற்றிய காரிங்கான் மதத்தையே தங்களின் வழிபாட்டு மதமாக ஏற்றுக் கொண்டார்கள்.

1945-ஆம் ஆண்டில் இந்தோனேசியாவிற்குச் சுதந்திரம் கிடைத்தது. பஞ்சார்மைசின் மாநிலம் தனிமாநிலமாக அறிவிக்கப்பட்டது. அதற்கு எதிராக காஜு டயாக் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். காரிங்கான் இந்துக்கள் வாழும் பகுதி தனி மாநிலமாக அறிவிக்கப்பட வேண்டும் என்று போராட்டம் செய்தார்கள்.

மேஜர் ஜிலிக் ரீவுட்டின் தலைமையில் ஒரு கொரில்லா படை உருவானது. ஆங்காங்கே எதிர்ப்புச் சம்பவங்கள் நிகழ்ந்தன. ஆக வேறு வழி இல்லாமல் காஜு டயாக் மக்களுக்காக மத்திய களிமந்தான் எனும் தனி மாநிலம் உருவாக்கப் பட்டது. போராட்டத் தலைவராக மேஜர் ஜிலிக் ரீவுட் விளங்கினார்.

Hindu Kaharingan beliefs on Eclipse in Central Kalimantan

அதனால் டயாக் மக்கள் பலரும் மேஜர் ஜிலிக் ரீவுட்டினால் ஈர்க்கப் பட்டார்கள். மேஜர் ஜிலிக் ஓர் இந்து. அதனால் தங்களின் தலைவர் சார்ந்த காரிங்கான் இந்து மதத்தையும் டயாக் மக்களும் பின்பற்றத் தொடங்கினார்கள். இப்படித்தான் இந்த மதம் டயாக் மக்களிடம் பரவலாகிப் போனது.

காரிங்கான் இந்து மதத்தை இந்தோனேசிய அரசாங்கம் ஆரம்பத்தில் ஏற்க மறுத்தது. ஆனாலும் நெருக்குதல் காரணமாக 1980-ஆம் ஆண்டு காரிங்கான் இந்து மதத்தை இந்தோனேசிய அரசாங்கம் ஏற்றுக் கொண்டது. ஆனால் அந்த மதம் இந்து மதத்திற்கு கீழ் இயங்கும் மதமாகவே இயங்க வேண்டும் என்றும் கட்டளை பிறப்பித்தது. அந்த வகையில் காரிங்கான் மதம் இன்று அளவிலும் களிமந்தானில் உயிர் பெற்று வருகிறது.

களிமந்தான் காடுகளில் தற்சமயம் 223,349 காரிங்கான் இந்து சமயத்தவர் வாழ்கின்றார்கள். ஏறக்குறைய 300 இந்துமதப் பூசாரிகள் உள்ளனர். காரிங்கான் இந்து சமயத்தவர்களுக்கு என்று ஓர் இந்து மாமன்றம் தோற்றுவிக்கப்பட்டு உள்ளது.

Dayak Hindu Kaharingan saber cultural dance with traditional clothes.
Photo by Prayudi Nugraha

அந்த மன்றத்தின் கீழ் டயாக் இந்துக்கள் செயல்பட்டு வருகின்றனர். டயாக் இந்து மாமன்றம் என்ன என்ன நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது என்பதை மத்திய அரசாங்கத்திற்கும் தெரிவித்து வருகின்றனர்.

வாரத்திற்கு ஒரு முறை கிராமப்புறக் கோயில்களில் இந்துக்களின் ஒன்று கூடும் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. பெரும்பாலும் வெள்ளிக் கிழமைகளில் அந்த நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இவர்களிடம் ஒரு வித்தியாசமான பழக்கம் உள்ளது. ஒருவர் இறந்து விட்டால் அவரை இரு முறை புதைக்கும் பழக்கம். சற்று வித்தியாசமான பழக்கம்.

முதலாவதாக இறந்த ஒருவரின் உடலை முறைப்படி புதைத்து விடுவார்கள். உடலை இடுகாட்டிற்கு எடுத்துச் செல்லும் போது சகல மரியாதைகளுடன் ஊர்வலம் நடைபெறும். இந்து சாமியார்கள் முன் செல்ல உடன்பிறப்புகள் பின் தொடர்வார்கள். மஞ்சள் அரிசி மஞ்சள் பூக்கள் இடுகாட்டிற்குச் செல்லும் வழி நெடுகிலும் தூவப்படும்.

Dayak Hindu Kaharingan married to an Indian in Kuching

இரண்டாவதாகக் கொஞ்ச காலம் கழித்து புதைக்கப்பட்ட அதே உடல் தோண்டி எடுக்கப்படும். இங்கே கொஞ்ச காலம் என்பது சில மாதங்களாக இருக்கலாம். சில வருடங்களாகவும் இருக்கலாம்.

மீட்டு எடுக்கப்பட்ட அந்த உடலைச் சுத்தம் செய்து தங்களின் இந்து முறைப்படி மறுபடியும் புதைப்பார்கள். அப்படிச் செய்தால் தான் இறந்தவரின் ஆத்மா அமைதி பெறும் என்பது காஜு டயாக் மக்களின் இந்து மத நம்பிக்கை.

சபா, சரவாக் மாநிலங்களில் காரிங்கான் இந்து மதத்தைப் பின்பற்றும் 8,000 டயாக் மக்கள் வாழ்கிறார்கள். ஆனால் இவர்களின் மதத்தை மலேசிய அரசாங்கம் அங்கீகரிக்கவில்லை. காரிங்கான் இந்து மதம் என்பது ஒரு முழுமையான மதம் அல்ல என்று மலேசிய அரசாங்கம் சொல்லி வருகிறது.

Dayak Hindu Kaharingan di Tabalong Ethnik Festival 25 Agustus 2019

காரிங்கான் இந்து மதத்தின் தலைமையகம் (Great Council of Hindu Religion Kaharingan). மத்திய களிமந்தானில் இருக்கும் பாலங்கராயா எனும் இடத்தில் உள்ளது. இங்கே தான் அவர்களின் மதத் தொடர்பான விவகாரங்கள் பரிசீலிக்கப் படுகின்றன.

வரலாற்றின் மூன்று காலக் கட்டங்களில் களிமந்தான் காடுகளில் குடியேற்றம் நடந்து உள்ளது. முதலாவது குடியேற்றம் வரலாற்றுக்கு முந்தைய புரோட்டோ மலாய் காலத்தில் நடந்தது. ஜாவா, களிமந்தான் கரையோரப் பகுதிகளில் இருந்து மக்களின் குடியேற்றம் இடம்பெற்றது.

பின்னர் இந்தோனேசியாவில் சைலேந்திரா; மஜபாகித் ஆட்சிக் காலத்தில் ஜாவாவில் இருந்து பலர் களிமந்தான் வந்து குடியேறினார்கள். அவர்கள் மூலமாக டயாக் மக்களிடம் இந்து மதம் பரவி இருக்கலாம் என்றும் வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றார்கள்.

Dayak Hindu Kaharingan chidren

கி.பி.350-ஆம் ஆண்டில் இருந்து கி.பி.400-ஆம் ஆண்டு வரையில் கூத்தாய் மார்த்தாடிபூரா எனும் இந்தியர் அரசு போர்னியோ களிமந்தானை ஆட்சி செய்து இருக்கிறது. இது ஓர் இந்து சாம்ராஜ்யம்.

அதைப் போல கி.பி.1300-ஆம் ஆண்டுகளில் கூத்தாய் கார்த்தாநகரா எனும் இந்து சாம்ராஜ்யமும் களிமந்தானை ஆட்சி செய்து இருக்கிறது. இந்த இரு அரசுகளின் இந்து மதத் தாக்கம் களிமந்தானில் தேங்கி நின்று இருக்கலாம்.

அந்த வகையில் இந்து மதம் டயாக் மக்களிடையே பரவியும் இருக்கலாம். எது எப்படி இருந்தாலும் களிமந்தான் மழைக் காடுகளில் இந்து மதம் இன்னும் வாழ்ந்து கொண்டு இருக்கிறது.

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்
(24.10.2020)

Notes:

1. Kaharingan is an animistic folk religion professed by many Dayaks in Kalimantan, Indonesia; particularly Central Kalimantan, although many have converted to Christianity or Islam or follow a syncretic religion. It is estimated that most Dayaks follow their ancient animistic religious traditions (Kaharingan), but often claim to belong to one of the recognized religions in Indonesia to prevent discrimination.

2. Hindu - Javanese influence can also be seen in this religion, and the Indonesian government views it as a form of Folk Hinduism because the Indonesian government recognizes only six official religions, and Kaharingan is not one of them.

3. Anthropos, Volume 102, Issue 2, Osterreichische Leo-Gesellschaft, Gorres-Gesellschaft, Anthropos Institute; Zaunrith'sche Buch-, Kunst- und Steindruckerei, 2007, ... It is remarkable to see how positive and self-conscious Kaharingans currently are in their interior villages. "We are Hindus," they proclaim. Likewise, people in Palangla Raya are proud of being part of a Hindu world community...

சான்றுகள்:

1. Vogel, J.Ph. 1918 The yupa inscriptions of King Mulavarman from Koetei (East Borneo). Bijdragen tot de Taal-, Land- en Volkenkunde 74:216–218.

2. Iban Cultural Heritage — The Early Iban Way of Life — by Gregory Nyanggau 26th descendant of Sengalang Burong, the Iban God of War

3. Greer, Charles Douglas (2008). Religions of Man: Facts, Fibs, Fears and Fables. Bloomington, IN: AuthorHouse. p. 135. ISBN 1-4389-0831-8.

4. Jan Gonda, The Indian Religions in Pre-Islamic Indonesia and their survival in Bali, p. 1

5. Baier, Martin (2007). "The Development of the Hindu Kaharingan Religion: A New Dayak Religion in Central Kalimantan". Anthropos. 102 (2)

6. Belford, Aubrey (2011-09-25). "Borneo Tribe Practices Its Own Kind of Hinduism". The New York Times. ISSN 0362-4331.

7. Iban Cultural Heritage — The Early Iban Way of Life — by Gregory Nyanggau 26th descendant of Sengalang Burong, the Iban God of War




 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக