தமிழ் மலர் - 30.10.2020
கொளுந்து விட்டு எரிகிற தீயின் எச்சம். அதைச் சாம்பல் என்கிறோம். அந்தச் சாம்பலில் நீறு பூத்த நெருப்பு. பார்த்தால் தெரியாது. தொட்டால் சுடும். அதே போலத் தான் மலாயாவுக்குக் கப்பலேறி வந்த தமிழர்களின் எச்சங்களும் மிச்சங்களும் இன்றும் வரலாறு பேசுகின்றன.
நம்முடைய பெற்றோர்; நம்முடைய தாத்தா பாட்டிமார்கள்; நம்முடைய முப்பாட்டன்கள் முப்பாட்டிகள்; எல்லோருமே அந்தத் தமிழர்களின் எச்சங்கள் தான். அதாவது கப்பலேறி வந்த சஞ்சிக் கூலிகளின் எச்சங்கள் தான்.
இதை முதலில் நினைவில் கொள்வோம். ஒரு சிலர் அதில் இடம் பெற மாட்டார்கள். இலங்கை, கேரளாவில் இருந்து வந்த கிராணிகள்; டிரசர்கள்.
இருப்பினும், இல்லை என்று சிலரும் பலரும் மறுத்துப் பார்க்கலாம். மறுத்துப் பேசலாம். எப்படிப் பார்த்தாலும், கடைசியில் அங்கேதான் வந்து நிற்க வேண்டும்.
கடைசியில் ரஜுலா கப்பலுக்கு முன்னால் தான் கைகட்டி நிற்க வேண்டி வரும். ரோணா, அண்டோரா, ஜல கோபால், ஜல உஷா, ஸ்டேட் ஆப் மெட்ராஸ் போன்ற கப்பல்களையும் மறந்துவிடக் கூடாது.
அங்கே தான் நம்முடைய பூர்வீகம், சுவர் இல்லாத சித்திரங்களாய்த் தெரிய வரும். ஜல உஷா என்பது 1950-ஆம் ஆண்டுகளில் மலாயாவுக்கு வந்து போன கப்பல்.
அப்படி எல்லாம் இல்லை. நாங்கள் சஞ்சிக்கூலிகளாய் வந்த தமிழர்களின் வாரிசுகள் இல்லை என்று சிலர் சட்டைக் காலரைத் தூக்கிவிட்டு கலர் கலராய்ப் பெருமை பேசிக் கொள்ளலாம். நல்லது. பேசிவிட்டுப் போகட்டும்.
விமானச் சேவைகள் இல்லாத காலத்தில் அவர்களின் மூதாதையர்கள் மலாயாவுக்கு எப்படி வந்தார்களாம். அதைக் கேட்டுப் பாருங்கள். வருத்தப்பட வேண்டாம்.
இமயமலையில் இருந்து இறக்கைக் கட்டிப் பறந்து வந்தார்களா. இல்லை போர்னியோ களிமந்தான் காடுகளில் இருந்து குதித்து வந்தார்களா. இல்லை அந்தமான் தீவில் இருந்து நீச்சல் அடித்து வந்தார்களா. இல்லை பர்மா சயாம் காடுகளில் புலிகளை முறத்தால் மொத்தி விரட்டி அடித்து விட்டு வந்தார்களா.
கட்டுச் சோறு கூட்டாஞ் சோறு ஆக்கிச் சாப்பிட்டக் கதைகளை எல்லாம் மறந்து விட்டு பெருமை பேசக் கூடாது. ஒரு சிலர் வியாபாரம் செய்ய வந்தார்கள். குஜாராத்தியர்களைச் சொல்லலாம். மற்ற சிறு சிறுச் சமூகத்தவர்களையும் சொல்லலாம்.
அவர்களும் சஞ்சிக்கூலிகளின் பட்டியலில் தான் சேர்க்கப் படுகிறார்கள். ஏன் தெரியுமா. நாகப்பட்டினத்தில் கப்பல் ஏறும் போது வியாபாரம் செய்யப் போவதாகச் சொல்லிக் கப்பல் ஏறி இருக்க முடியாது. ஒப்பந்தத் தொழிலாளர்களுக்குத்தான் அப்போது முதலிடம் கொடுத்தார்கள்.
ஒப்பந்தத் தொழிலாளர் ஆவணத்தில் கையெழுத்துப் போடச் சொல்வார்கள். அந்த இடத்தில் மலாயாவில் இருந்து அங்கே போன கங்காணியும் கையெழுத்துப் போட வேண்டும்.
அப்புறம் தான் உங்களைக் கப்பலிலேயே ஏற விடுவார்கள். இந்திய முஸ்லீம் சமூகத்தவர்களில் சிலருக்குச் சிறப்பு சலுகைகள் வழங்கப் பட்டு உள்ளன.
இந்த இடத்தில் தான் இந்தியர்களின் புலம்பெயர்வு வந்து நிற்கிறது. ஆக, சஞ்சிக்கூலிகளின் எச்சங்களில் அப்போது நீறு பூத்தது. இப்போது அந்த எச்சங்களில் போர்வை போர்த்தப் படுகிறது. இருந்தாலும் இன்னமும் தகித்துக் கொண்டு தான் இருக்கிறது. புரியும் என்று நினைக்கிறேன்.
மலாயாவுக்குக் கப்பலேறி வந்த இந்தியர்களில் பெரும்பாலோர் தமிழர்கள் தான். இல்லை என்று யாரும் மறுக்க முடியாது. அப்படி வந்த அந்தத் தமிழர்களை இந்த உலகம் இந்தியர்களாகத் தான் பார்க்கிறது. தமிழர்களாகப் பார்க்கவில்லை.
ஒரு நாட்டில் இருந்து பிற நாடுகளுக்குச் சென்று வாழ்ந்த மனிதர்களின் வம்சாவளியினரை ஆங்கிலத்தில் ’டயஸ்போரா' (Diaspora) என்று அழைப்பார்கள். 2015-ஆம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி வெளிநாடுகளில் 3 கோடி இந்தியர்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
(http://indiandiaspora.nic.in/)
இந்தியன் டையஸ்போரா (Indian Diaspora) எனும் இந்தியர்களின் புலம்பெயர்வை முதலில் தெரிந்து கொள்வோம். 1830-களில் இந்தியாவில் இருந்து இடம்பெயர்ந்த இந்தியர்களில் பெரும்பாலோர் உழைக்கும் வர்க்கத்தைச் சார்ந்தவர்கள். நலிந்த பிரிவினர்.
1834-க்கும் 1937-க்கும் இடையே அதாவது 103 ஆண்டுகளில் 3 கோடி இந்தியர்கள் கடல் கடந்து சென்று உள்ளனர். அவர்களில் ஐந்தில் நான்கு பேர் மட்டுமே மீண்டும் இந்தியாவிற்கே திரும்பி வந்தனர்.
புலம்பெயர் இந்தியர்கள் என்று அழைக்கப் படுகிறவர்கள் இந்தியா மற்றும் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். உலக நாடுகளுக்குப் புலம் பெயர்ந்த இந்தியர்கள். 2016 - 2019-ஆம் ஆண்டு புள்ளிவிவரங்கள்:
அமெரிக்கா (United States) - 4,402,363
சவூதி அரேபியா (Saudi Arabia) - 4,124,000
நேபாளம் (Nepal) - 4,010,000
ஐக்கிய அரபு நாடுகள் (United Arab Emirates) - 3,860,000
மலேசியா (Malaysia) - 2,109,200
கனடா (Canada) - 1,430,000
தென் ஆப்பிரிக்கா (South Africa) - 1,360,000
மியன்மார் (Myanmar) - 1,180,000
பிரிட்டன் (United Kingdom) - 1,051,762
இலங்கை (Sri Lanka) - 850,000
ஓமான் (Oman) - 840,000
மொரீஷியஸ் (Mauritius) - 822,500
குவைத் (Kuwait)- 780,000
சிங்கப்பூர் (Singapore) - 700,028
கத்தார் (Qatar) - 666,000
தாய்லாந்து (Thailand) - 465,000
ஆஸ்திரேலியா (Australia) - 453,000
டிரினிடாட் டொபாகோ (Trinidad Tobago) - 430,300
கயானா (Guyana) - 327,000
பிஜி (Fiji) - 315,198
ரியூனியன் (Réunion) - 273,254
நியூஸிலாந்து (New Zealand) - 170,020
பஹ்ரைன் (Bahrain) - 168,000
பிலிப்பைன்ஸ் (Philippines) - 160,000
சுரிநாம் (Suriname) - 148,000
இந்தோனேசியா (Indonesia) - 128,000
ஜெர்மனி (Germany) - 126,000
இத்தாலி (Italy) - 114,000
தெதர்லாந்து (Netherlands) - 93,000
ஜமாய்க்கா (Jamaica) - 93,000
கென்யா (Kenya) - 90,000
அயர்லாந்து (Ireland) - 81,520
இது ஒரு நீண்ட பதிவு. வாய்ப்பு கிடைக்கும் போது முழுமையாகப் பதிவு செய்யப்படும்.
தொடக்கக் காலங்களில் குடியேறிய தமிழர்களைப் பற்றிய விவரங்கள் சரியான முறையில் ஆவணப் படுத்தப்படவில்லை. இது ஒரு வேதனையான செய்தி. ஆக முறையாக ஆய்வு செய்யப்பட வேண்டும். முறையாகப் பதிவு செய்யப்பட வேண்டும். காலத்தின் கட்டாயம்.
மலேசியாவைப் பொருறுத்த வரையில் மலேசிய இந்தியர்களில் 81 விழுக்காட்டினர் தமிழர்கள் ஆகும். மலேசிய இந்தியர்களின் பட்டியலில் தமிழர்கள், மலையாளிகள், தெலுங்கர்கள், இலங்கைத் தமிழர்கள், வங்காளிகள், சிந்திகள், குஜராத்திகள் உள்ளனர்.
பாகிஸ்தானியர்களும் மலேசிய இந்தியர்களின் பட்டியலில் சேர்க்கப் படுகிறார்கள். ஒரு வேடிக்கையான செய்தி.
மலேசிய அரசாங்கத்தின் சலுகைகள்; கல்விக் கடன் உதவிகள்; உயர்க் கல்விக்கானத் தேர்வு முறைகள்; ஆகியவை மலேசிய இந்தியர்கள் எனும் அடிப்படையில் தான் பாகிஸ்தானியர்களுக்கும் சேர்த்து ஒதுக்கீடுகள் செய்யப் படுகின்றன. அதே மாதிரி மற்ற அனைத்துச் சமூகங்களுக்கும் பகிர்ந்து அளிக்கப் படுகின்றன.
வங்காளிகள், குஜராத்திகள், மலையாளிகள், தெலுங்கர்கள், இலங்கைத் தமிழர்கள் என தனியாகப் பிரித்துக் கொடுக்கப்படவில்லை. மனுபாரங்களில் இந்தியர்கள் என்றுதான் குறிப்பிட வேண்டும். தனி ஒரு சமூகத்தின் பேரில் விண்ணப்பிக்க முடியாது. மனுச் செய்தாலும் செல்லுபடி ஆகாது.
இந்தப் பக்கம் ஒரு மூத்த அரசியல்வாதியை எடுத்துக் கொள்ளுங்கள். 1947-ஆம் ஆண்டு, சிங்கப்பூரில் இருக்கும் கிங் எட்வர்ட் VII மருத்துவக் கல்லூரியில் படிக்க விண்ணப்பம் செய்தார். மனுபாரத்தில் இந்தியர் என்றுதான் பதிவு செய்து படிக்கப் போனார்.
சான்றுகள் வேண்டாமே. உள்ளங்கை ரேகையைக் கண்ணாடிப் போட்டு பார்க்க வேண்டாமே. இவரும் மலாயா இந்தியர் எனும் பெயரில் தான் பதிந்தார். படித்தும் வந்தார். நல்லபடியாக படித்து நல்ல நிலைக்கு வந்தார்.
இப்போதைக்கு மலேசியத் தமிழர் மனங்களில் சாதனை மனிதராக வாழ்ந்து வருகிறார். சும்மா சொல்லக் கூடாது. மலேசியத் தமிழர்களின் எதிர்காலத்தை நசுக்கிப் போட்ட சாதனை. ஒரு தமிழரின் வேதனை விசும்பல்கள். விரக்தியின் குமுறல்கள்.
மலேசிய இந்தியர்களில் முக்கிய இனங்களாக இருப்பவர்கள் தமிழர்கள்; தெலுங்கர்கள்; மலையாளிகள். மலேசிய இந்தியர்களில் 93 விழுக்காட்டினர். இவர்களுக்கு அரசாங்கத்தின் சலுகைகள்; கல்விக் கடன் உதவிகள்; நிதியுதவிகள் சரியான முறையில் மனநிறைவாகக் கிடைக்கவில்லை.
இது இப்போதைய புலம்பல் அல்ல. மலேசியா சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து மலாயா தமிழர்கள் பார்த்து வரும் பஞ்சபுராணத்தின் நித்தியக் கல்யாணிகள். மற்றும் ஒரு சோகமான பல்லவி நாளைக்கும் வரும். ஆறு சுரங்களில் சாடவ சம்பூர்ணங்களை இசைக்கும்.
(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
3010.2020
சான்றுகள்:
1. Kesavapany, K.; Mani, A; P. Ramasamy (2008). Rising India and Indian Communities in East Asia. Institute of Southeast Asian Studies. p. 234.
2. "Tragic Orphans: Indians in Malaysia" by Carl Vadivella Belle, Publisher: Institute of Southeast Asian Studies, ISBN 978-981-4519-03-8
3. Sandhu, Kernial Singh (30 January 2006). K S Sandhu; A Mani (eds.). Indian Communities in Southeast Asia (First Reprint ed.). ISEAS Publishing. ISBN 978-9812304186.
4. http://www.jstor.org/stable/2644086?seq=1#page_scan_tab_contents
5.http://www.tribuneindia.com/news/nation/india-has-largest-diaspora-population-in-world-un/183731.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக