தமிழ் மலர் - 03.11.2020
இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டுக்கு உதவும் வகையில் 2020 பட்ஜெட்டில் மித்ராவிற்கு ஒதுக்கப்பட்ட 10 கோடி வெள்ளி என்னவானது? இந்தப் பணம் யாருக்கு பகிர்ந்து அளிக்கப் பட்டது என்ற விவரத்தைத் தெரிவிக்கும்படி பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வி. சிவக்குமார் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.
ஒவ்வோர் ஆண்டும் பட்ஜெட்டில் இந்திய சமுதாயத்திற்கு உதவும் வகையில் மித்ராவுக்கு 10 கோடி வெள்ளி ஒதுக்கப் படுகிறது. தே.மு. ஆட்சிக் காலத்தில் ‘செடிக்’ என்ற பெயரில் இது செயல் பட்டது. பக்காத்தான் ஆட்சியில் செடிக், மித்ராவாக பெயர் மாற்றம் கண்டது.
2020-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டிலும் அப்போது நிதியமைச்சராக இருந்த லிம் குவான் எங் 10 கோடி வெள்ளியை அறிவித்தார்.
பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் இவ்வாண்டு பிப்ரவரியில் கவிழ்ந்தது. அப்போது பிரதமர் துறை அமைச்சின் கீழ் ஒற்றுமைத் துறை அமைச்சராக இருந்த பொன். வேதமூர்த்தி தலைமையில் மித்ரா செயல்பட்டது.
இப்போது பெரிக்காத்தான் அரசாங்கத்தின் சார்பில் ஒற்றுமைத் துறை அமைச்சராக டத்தோ ஹலிமா பதவி வகிக்கிறார். அவர் 2020 பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட மித்ராவின் 10 கோடி வெள்ளி என்னவானது?
இந்தப் பணம் யாருக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டது என்ற விவரத்தைத் தெரிவிக்க வேண்டும் என சிவகுமார் கேட்டுக் கொண்டார்.
மேலும் வரும் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்படவிருக்கும் 2021-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் மித்ராவின் தொகை 10 கோடி வெள்ளியில் இருந்து 20 கோடியாக உயர்த்தப்படுமா என்றும் கேள்வி எழுப்பியதாக சிவகுமார் குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் ஹலிமா, பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியில் மித்ராவின் 3 கோடியே 50 லட்சம் வெள்ளி பகிர்ந்தளிக்கப் பட்டிருக்கிறது. நான் பதவியேற்ற போது, 6 கோடியே 50 லட்சம் வெள்ளி மித்ராவில் இருந்தது என்றார்.
மித்ராவின் பணம் யார், யாருக்கு வழங்கப்பட்டது என்று எழுத்துப் பூர்வமான பட்டியலை வழங்குவதாகக் குறிப்பிட்டார்.
அந்தப் பட்டியல் இன்று தமக்குக் கிடைக்கும் என நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் கூட்டத்தில் சிவகுமார் குறிப்பிட்டார்.
புதிய பட்ஜெட்டில் மித்ராவுக்கு கூடுதல் நிதியை ஒதுக்குமாறு பரிந்துரை செய்திருக்கிறேன். பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் போதுதான் எவ்வளவு தொகை ஒதுக்கப் படுகிறது என்பது தெரிய வரும் என அமைச்சர் பதில் அளித்திருப்பதாக சிவகுமார் சுட்டிக் காட்டினார்.
இதனிடையே இந்திய சமுதாயத்திற்கு ஒதுக்கப்பட்ட மித்ராவின் நிதி முழுமையாக சமுதாயத்திற்கு சேர வேண்டும். கடந்த காலங்களில் பணம் மீண்டும் அரசாங்கத்திடமே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது.
இந்த நிலை இனியும் தொடரக் கூடாது. தேவைப்படும் அமைப்புகளுக்கு இந்த நிதி சென்று அடைய வேண்டும் என்றார் அவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக