தமிழ் மலர் - 03.11.2020
மலாயா கித்தா காட்டுத் தமிழர்களின் கண்ணீர் வற்றிப் போய் விட்டது. ஆனால் இலங்கைத் தமிழர்களின் கண்ணீர் இன்னும் வற்றவில்லை. மலைக்காட்டில் சுரந்து வாறுகாலில் வழிந்து இன்றும் கடல் தேடிப் போய்க் கொண்டு இருக்கிறது. அதைப் பார்த்து இந்தியப் பெருங்கடலும் வாய்விட்டு அழுகிறது.
ஒரு பக்கம் சிங்களக் குண்டுகளுக்குப் பலியாகியாகிப் போன ஓர் இனம் இன்றும் அங்கே கண்ணீர் வடிக்கிறது. இன்னொரு பக்கம் ரப்பர் காடுகளில் பலியாகி வரும் இன்னொரு தமிழர் இனம். இடுப்பு உடைந்து கண்ணீர் வடித்துக் கொண்டு இருக்கிறது. அந்த இனம் தான் இலங்கை ரப்பர் தோட்டத்து தமிழர் இனம்.
1870-ஆம் ஆண்டுகளில் தமிழ்நாட்டில் இருந்து பல்லாயிரம் தமிழர்கள் இலங்கையின் பல மாவட்டங்களுக்குக் கொண்டு செல்லப் பட்டார்கள். கொழும்பு, கம்பா (Gampaha), களுத்துறை (Kalutara), கண்டி (Kandy), மாத்தளை (Matale), காலி (Galle), மாதாரா (Matara), குருநாகலா (Kurunegala), ரத்னபுரா (Rathnapura) மற்றும் கெகல்லே (Kegalle) போன்ற மாவட்டங்கள். அங்கே ரப்பர் தோட்டத் தொழிலாளர்களாகப் பிழிந்து எடுக்கப் பட்டார்கள்.
இலங்கை மலையகத் தமிழர்கள் வியர்வை சிந்தி இரத்தம் வடித்துச் சம்பாதித்துக் கொடுத்த காசைக் கொண்டு ஆங்கிலேயர்கள் சொகுசாக வாழ்ந்தார்கள். சிங்களப் பேராண்மைத் தலைகளும் சுகபோகமாக வாழ்ந்தன. இன்றும் வாழ்ந்தும் வருகின்றன.
ஆனாலும் பாருங்கள், இலங்கை ரப்பர் காடுகளில் இடுப்பு உடைந்து போன தமிழர்கள் இன்றும் இன்னும் எழுந்து நிற்க முடியாமல் தள்ளாடிக் கொண்டு நிற்கின்றார்கள். ரப்பர் உளிக் காயங்கள் ஆறவில்லை. இரத்தம் வடிந்து கொண்டு இருக்கிறது.
தமிழர்கள் வாங்கி வந்த வரமா இல்லை சாபக் கேடா தெரியவில்லை. உலகம் முழுமைக்கும் வாழும் தமிழர்களின் நிலைமை ஒரே சாரலில் ஒரே தூரலில் பயணிக்கின்றது. மாற்றம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. வேதனை. வேதனை.
அக்கரை பக்கம் ஒரு நாட்டை எடுத்துக் கொண்டால் உருப்படியாக ஒரு தமிழ்த் தலைவர் இருப்பதாகத் தெரியவில்லை. பக்கத்து மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் தான் சீப் மினிஸ்டராக வாயாங் காட்டிக் கொண்டு வருகிறார்கள். போகிறார்கள்.
இந்தக் கரையைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். அந்த ராசன் வந்தான். இந்த ராசன் வந்தான். கடல் கடந்து வந்தான். கட்டுச் சோறு கட்டி வந்தான். அதை நட்டான். இதைப் பிடுங்கினான் என்று பெருமை பேசுவதிலேயே ஒரு சிலருக்குப் பொழுது போகிறது. காலம் கழிகிறது. பெண்டாட்டி பிள்ளைகளுக்குச் சோறு போட வக்கில்லை. பெருமை பேசுவதில் மட்டும் குறைச்சல் இல்லை. திருத்த முடியாத வெட்டிச் சாம்பிராணிகள். அன்திருத்தபள்ஸ்.
அதிலும் சிலர் சொந்த பாக்கெட்டுகளை நிரப்பிக் கொள்வதிலேயே ரொம்ப தெளிவாய்க் கவனமாய் இருக்கிறார்கள். இந்தச் சூட்சமம் தெரியாமல் அவர்களின் பின்னால் ஒரு சில ஜால்ரா கூட்டங்கள். உண்மையைச் சொன்னால் நமக்கே ஆப்பு வைக்கின்றன சில வாட்ஸ் அப் விளக்கெண்ணெய்கள். வயிற்றெரிச்சலில் மேலும் ஒரு செருகல்.
1903-ஆம் ஆண்டு அக்கரையில் இருந்து இக்கரைக்கு ஒரு குடும்பம் கப்பலேறி பினாங்கிற்கு வந்தது. அந்தக் குடும்பம் சார்ந்த ஒருவருக்கு இந்த நாட்டின் ஆகப் பெரிய பதவி கிடைத்தது. இத்தனைக்கும் அவர், தான் ஓர் இந்தியன் என்று கைநாட்டுப் போட்டுத் தான் மேல்படிப்பு படிக்கப் போனார்.
கடைசியில் என்ன ஆச்சு தெரியுங்களா. என் இனம் சார்ந்தவர்களின் உரிமைகளை எல்லாம் நசுக்கிப் பொசுக்கி நாசம் செய்து விட்டார். இப்போது தன் சுயநலத்துக்காக ஒரு நாட்டின் தலையெழுத்தையே கேள்விக் குறியாக மாற்றியும் வருகிறார். யாராக இருந்தாலும் எவராக இருந்தாலும் கடைசி காலத்தில் நல்ல பெயரோடு போக வேண்டும். நாலு பேர் நாலு வார்த்தை புகழ வேண்டும். பெயர் நாறி வரலாறு சிரிக்கிற மாதிரி போகக் கூடாது.
இலங்கையின் ரப்பர் வரலாறு 1876-ஆம் ஆண்டில் தொடங்குகிறது. முதன்முதலில் கம்பஹா, ஹெனரத்கோடா தாவரவியல் பூங்காவில் (Henerathgoda Botanical Gardens, Gampaha) 1,919 ரப்பர் கன்றுகள் நடப்பட்டன.
அந்தக் கன்றுகள் தான் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியின் ஆணிவேராய் ஆழமாய்ப் பதிந்து நிற்கின்றன. ஐந்தாண்டுகளுக்குப் பின்னர் 1881-ஆம் ஆண்டில் ரப்பர் பால் உற்பத்தி தொடங்கியது. மலேசியாவில் சுங்கை பூலோவில் இருப்பதைப் போல இலங்கையிலும் ஒரு ரப்பர் ஆராய்ச்சி நிறுவனம் உள்ளது. உலகின் மிக மிகப் பழமையான ரப்பர் ஆராய்ச்சி நிறுவனம். நம்முடைய மலேசிய நிறுவனத்தை விட இலங்கையில் உள்ளது மிகப் பழைமையானது.
ரப்பர் மூலமாக இலங்கைக்கு மூன்றாவது பெரிய ஏற்றுமதி வருமானம் கிடைக்கிறது. 300,000 பேருக்கு வேலை வாய்ப்புகள். சரி. அதற்கு முன்னர் இலங்கை மலையகத் தமிழர்கள் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.
இந்தியத் துணைக் கண்டத்தில் சேர சோழ பாண்டிய மன்னர்கள் கோலோச்சிய காலம் ஒன்று இருந்தது. அப்போது உலகத்தில் ஏறக்குறைய கால்வாசி பகுதி தமிழர்களின் ஆதிக்கப் பதிவுகளாக அழகு செய்தன. தமிழர்களின் ஆட்சி தென்பகுதிச் சீனாவில் தொடங்கி இந்தோனேசியாவில் இடைப்பட்டு பாரசீகத்தின் கிழக்குப் பகுதி வரை நீண்டு போய் நின்றது. உலக வரலாற்றில் அது ஒரு கனாக்காலம்.
மகா அலெக்சாண்டர் கி.மு. 326இல் இந்தியாவிற்குள் காலடி வைக்கும் போது சிந்துவெளி நாகரிகம் சிதைந்து கொண்டு இருந்தது.
(சான்று: http://amarnathkk-narean.blogspot.my/2011/12/blog-post.html)
ஆரியர்களின் நெருக்குதல்களினால் நசிந்தே போனது. கீழே இறங்கி வந்த தமிழர்கள், தென்னிந்தியாவில் ஐக்கியமாகிப் போனார்கள். மூலைக்கு ஒன்றாய்ப் பிரிந்து வீடுகள், குடிசைகள், குடில்களைக் கட்டிக் கொண்டார்கள்.
அப்புறம் அவர்களுக்குள் போட்டிப் பொறாமைகள். சண்டைச் சச்சரவுகள். இத்யாதி இத்யாதிகள். தமிழ்ச் சங்கம் சிரிக்கும் படியாகச் சண்டை போட்டு மண்டைகளை உடைத்துக் கொண்டார்கள். தொப்புள் கொடி உறவுகள் கழற்றி வீசப் பட்டன. அப்போது இந்தச் சாதி கீதி எல்லாம் இல்லைலீங்க. ஆரியம் வந்த பிறகு தானே சாதிச் சடங்குகளுக்கு குட முடக்கு; தெப்பக்குள தரிசனங்கள் எல்லாம் வந்தன. ஜெகஜோதியாய் ஜொலித்தன.
இன்றைய வரைக்கும் தொப்புள் கொடி சண்டைகளுக்கு குறைச்சல் இல்லை. தொடர்கிறது. இத்தனைக்கும் இந்தத் தமிழர்கள், தெலுங்கர்கள், மலையாளிகள், கன்னடர்கள், கொடவர்கள், துலுவர்கள், இலங்கைத் தமிழர்கள், இலங்கை மலையகத் தமிழர்கள். இவர்கள் எல்லாம் யாருங்க?
உண்மையிலேயே அண்ணன் தம்பிகள். சத்தியமாகச் சொல்கிறேன். தாமரைக் கொடி உறவுகள். ஆனால் சண்டை போடும் போது மட்டும் பாருங்கள். தொப்புள் கொடியைக் கழற்றித் தோளில் மாட்டிக் கொண்டு சண்டை போடுகிறார்கள். என்னத்தைச் சொல்ல. மனதிற்கு கஷ்டமாக இருக்கிறது.
அக்கரையைப் பாருங்கள். அந்தப் பக்கம் முல்லைப் பெரியாற்றைக் கட்டிக் கொண்டு கேரளா அழுகிறது. இந்தப் பக்கம் காவேரியைப் பிடித்துக் கொண்டு கர்நாடகா ஒப்பாரி வைக்கிறது. இன்னொரு பக்கம் திருப்பதியைக் கட்டிக் கொண்டு ஆந்திரா பட்டாசைக் கொளுத்திப் போடுகிறது.
கீழே ஒரு சிம்பன்சி கூட்டம். ஒன்றும் சொல்கிற மாதிரி இல்லை. டிங்கிரி இல்லாத நேரத்தில் துங்கம். மகிந்தம் இல்லாத நேரத்தில் மைத்திரியம். அந்த மூன்றும் இல்லாத நேரத்தில் கோத்தம் கோதுமை மாவு. அவற்றுக்குள் செம காம்பினேசன்.
இதில் ஏழரை நாட்டுப் பகவானும் அடிக்கடி குசலம் விசாரிக்கப் போய் வருகிறாராம். சும்மா ஒன்றும் சொல்லவில்லை. நம்பிக்கையான சிலோன் சிட்டுக்குருவி சொல்லி விட்டுப்போனது.
உலகத்தின் கால்வாசி பகுதியில் இறக்கை கட்டிப் பறந்த தமிழர்களுக்கு இப்போது சொந்தம் என்று சொல்லிக் கொள்ள ஒன்றுமே இல்லை.
தமிழ்நாட்டைச் சேர்க்க வேண்டாம். கொஞ்ச நாட்களுக்கு முன்னர் வரையில் அது ஒரு தனியார் சொத்து. இப்ப கொஞ்சம் பரவாயில்லை. ஆக தமிழ்நாட்டைத் தமிழர்கள் ஆட்சி செய்த காலம் எல்லாம் மலையேறி விட்டது. தமிழர்கள் யாராவது ஒருவர் முதலமைச்சர் ஆக முடியுமா. என்னைக் கேட்டால் இப்போதைக்கு நோ சான்ஸ்.
150 வருடங்களுக்கு முன்னால் தமிழர்கள் பஞ்சம் பார்க்கப் புறப்பட்டவர்கள். போன இடங்களில் எல்லாம் அந்த இடங்களைப் பொன் களஞ்சியங்களாக மாற்றி அமைத்தார்கள். அவர்களின் எச்சங்கள் இன்னமும் நீறுபூத்த நெருப்பாய்த் தகித்து நிற்கின்றன.
என்னே தமிழர்கள் வாங்கி வந்த வரம். இதற்கு எல்லாம் வரலாற்றுச் சான்றுகள் தேவையா. தேவையே இல்லீங்க. இருக்கிற வயிற்றெரிச்சல் ஒன்றே போதும். எனக்குள் எங்கோ இருந்து நீண்ட ஒரு பெருமூச்சு கேட்கிறது.
நம்முடைய இலங்கை மலையகத் தமிழர்களின் கதைக்கு வருவோம். இலங்கையில் வாழும் தமிழர்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். இலங்கைத் தமிழர்கள் ஒரு வகை. இந்தியத் தமிழர்கள் மற்றொரு வகை.
இந்தியத் தமிழர்கள் என்பவர்கள் இலங்கை மலையகத் தமிழர்கள். இவர்கள் ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்தில் இலங்கையில் இருந்த காபி, தேயிலை தோட்டங்களில் வேலை செய்யத் தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்டவர்கள். இவர்கள் தான் சஞ்சிக் கூலிகளின் விஷ்ணு பிரம்மாக்கள். அதனால் அவர்களைப் பற்றி கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
மலாயாத் தமிழர்களைவிட இலங்கையின் மலையகத் தமிழர்கள் மிக மிக மோசமாக நடத்தப் பட்டவர்கள். பெரும் அவதிக்கு உள்ளானவர்கள். அந்தக் கொத்தடிமைக் கொடுமை இன்னும் அங்கே தொடர்கின்றது. அவர்களும் உரிமைப் போராட்டங்கள் செய்து வருகிறார்கள்.
இலங்கை மலையகத் தமிழர்களும் தமிழ்நாட்டில் இருந்து கப்பல் ஏறிப் போனவர்கள் தான். அதாவது தூத்துக்குடியில் இருந்து போனவர்கள்.
(http://tamil.thehindu.com/opinion/columns/நம்முடைய-மறதியின்-வரலாறு/)
இலங்கைத் தமிழர் (Sri Lankan Tamils) என்பவர்கள் இலங்கையைத் தங்களின் மரபுவழிப் பிறப்பிடமாகக் கொண்டு வாழும் தமிழர்கள். இவர்களை இலங்கையின் வம்சாவளித் தமிழர் என அழைப்பதும் உண்டு.
இவர்கள் சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் சுய விருப்பத்தின் பேரில் இலங்கைக்குச் சென்றவர்கள். இலங்கையின் வடக்கு கிழக்கு மாநிலங்களில் பெரும்பான்மையினராக வாழ்ந்து வருகிறார்கள். பிற பகுதிகளில் சிறுபான்மை.
(https://en.wikipedia.org/wiki/Sri_Lankan_Tamils)
19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இலங்கையை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்தனர். அப்போது அங்கே நிறைய தேயிலை, ரப்பர், காப்பி தோட்டங்கள். அந்தத் தோட்டங்களில் வேலை செய்வதற்கு ஆட்கள் தேவைப் பட்டார்கள்.
அதனால் தமிழ்நாட்டில் இருந்து தமிழ்த் தொழிலாளர்கள் அழைத்து வரப்பட்டார்கள். இவர்களைத் தான் மலையகத் தமிழர் என்று அழைக்கிறோம். இருந்தாலும் இவர்களில் தெலுங்கர், மலையாளி இனத்தவரும் இருந்தார்கள். இன்னும் இருக்கின்றார்கள்.
தமிழர்களுடன் இணைந்து வாழ்ந்த தெலுங்கர், மலையாளிகளும் இப்போது தமிழ் பேசுபவர்களாகவே மாறி விட்டார்கள். இவர்களுக்குள் கொடுக்கல் வாங்கல் சாதாரணமாகி விட்டது. அதனால் ஒரு புதியத் தமிழர்ச் சமூகமே அங்கே உருவாகி இருக்கிறது. இலங்கை ரப்பர் தோட்டங்களில் தமிழர்களின் வாழ்வியல் அமைப்பு எப்படி என்பதை நாளைய கட்டுரையில் பார்ப்போம்.
Maana Mackeen : சில திருத்தங்கள்:
Gampaha - கம்பஹா.
Matara - மாத்தறை.
Kurunegala - குருணாக்கல்.
Ratnapura - இரத்தினபுரி.
Kegalle - கேகாலை.
கப்பலேறிய இடம் தூத்துக்குடி அல்ல. தனுஷ்கோடி, ராமேஸ்வரம்.
"ராமானுஜம்" கப்பல் பெயர்.
(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
03.11.2020
சான்றுகள்:
1. Dean, Warren. (1997) Struggle for Rubber: A Study in Environmental History. Cambridge University Press.
2. Gampaha Botanical Garden - BGCI". Botanic Gardens Conservation International.
3. Trading rubber for over 100 years - http://www.ft.lk/ft-lite/Trading-rubber-for-over-100-years/6-668921
4. The History of Rubber in Ceylon - http://www.paofceylon.org/default.htm
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக