தமிழ் மலர் - 01.11.2020
1873-ஆம் ஆண்டு. ஜுன் மாதம். 5-ஆம் தேதி. லல்லா ரூக் (Lalla Rookh) எனும் பெயரில் ஒரு கப்பல். தென் அமெரிக்காவின் வட பகுதியில் பரமரிபோ (Paramaribo) எனும் துறைமுகத்தில் கரை தட்டுகிறது. அந்தக் கப்பலில் 399 இந்தியர்கள். அவர்களில் 122 பேர் தமிழர்கள். இந்த நூறு தமிழர்களின் வரலாற்றில் இருந்துதான் சுரினாம் தமிழர்களின் வரலாறும் தொடங்குகிறது.
சுரினாம் நாடு. உலகின் எங்கோ ஒரு மூலையில் உள்ளது. தென் அமெரிக்காவின் வடகிழக்குப் பகுதியில் தன்னந்தனியாகக் கடல் காற்றைச் சுவாசிக்கும் அழகிய நாடு.
வடக்கில் அட்லாண்டிக் பெருங்கடல். கிழக்கில் பிரெஞ்சு கயானா (French Guiana). மேற்கில் கயானா (Guyana). தெற்கில் பிரேசில் நாடு (Brazil). பரப்பளவு 165,000 சதுர கி.மீ. (64,000 சதுர மைல்). சுரினாம் ஒரு சின்ன நாடு. பெரிய நாடு என்று சொல்ல முடியாது. மலேசியாவின் சபா மாநிலத்தையும் பகாங் மாநிலத்தையும் இணைத்தால் எவ்வளவு பரப்பு. அந்தப் பரப்புதான் சுரினாம் நாட்டின் பரப்பளவு.
முதலில் டச்சு கயானா (Dutch Guiana) என்று அழைக்கப் பட்டது. தென் அமெரிக்காவின் லத்தீன் அமெரிக்கா நாடுகளில் சற்றே அதிகமாகக் கனி வளம் கொண்ட நாடு. அப்போது அது ஒரு டச்சு காலனி. அழகான தாவரங்கள். அழகான விலங்கினங்கள். ஒரு பெருங்கடலுக்கு அருகில் அமைந்து இருப்பதால் சற்று மாறுபட்ட இயற்கை அமைப்புகள்.
தொடக்கக் காலத்தில் சுரினாம் நாடு ஆங்கிலேயர்களுக்குச் சொந்தமான நிலப் பகுதியாக இருந்தது. இருந்தாலும் டச்சுக்காரர்கள் ஆங்கிலேயருடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டு, தங்கள் காலனியாக மாற்றிக் கொண்டார்கள். 1975ஆம் ஆண்டு இந்த நாடு டச்சுக்காரர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்றது.
4000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சுரினாம் நாட்டில் அராவாக்ஸ் (Arawaks), கரிப்ஸ் (Caribs); வயானா (Wayana) போன்ற பழங்குடி மக்கள் குடியேறி விட்டார்கள். 16-ஆம் நூற்றாண்டில் தான் ஐரோப்பியர்கள் வலது காலை எடுத்து வைத்தார்கள். அப்படியே அந்த நாட்டைச் சுரண்டி எடுத்து விட்டார்கள்.
மன்னிக்கவும். மஞ்சள் தூள், உப்பு, சுண்ணாம்பு மூன்றையும் குழைத்து நெற்றியின் மீது ஒட்டிக் கொண்டார்கள். பணத் தலைவலி போவதற்கு சுரினாம் நாட்டில் ஐரோப்பியர்கள் கண்டுபிடித்த பாட்டி வைத்தியம்.
2012-ஆம் ஆண்டு கணக்கெடுப்பு. சுரினாமின் மக்கள் தொகை 148,443. இவர்களில் இந்தோ - சுரினாமிய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் மொத்த மக்கள் தொகையில் 28 விழுக்காடினர். இவர்கள் அனைவரையும் இந்துஸ்தானியர்கள் என்று அழைக்கிறார்கள்.
சுரினாம் நாடு மலேசியாவில் இருந்து 17,406 கி.மீ. தொலைவில் உள்ளது. சென்னையில் இருந்து 14,824 கி.மீ. எவ்வளவு தூரம். சும்மா ஒரு கற்பனை செய்து பார்த்தாலே மயக்கமே மரி.
இங்கே மலேசியாவில் ’மரி’ என்றால் வருகிறது என்று பொருள். அங்கே சூரினாம் நாட்டில் ’மரி’ என்றால் மாரியம்மன் தெய்வம். சூரினாம் நாட்டிற்குப் போன தமிழர்கள் தங்களுடன் மாரியம்மன் குல தெய்வத்தையும் கூடவே அழைத்துச் சென்று விட்டார்கள்.
’லல்லா ரூக்’ என்றால் சிவப்பு கன்னங்கள் என்று பொருள். ஆனால் அந்தச் சிவப்பு கன்னங்களில் பயணம் செய்தவர்களில் சிலரும் பலரும் கறுப்பு சாக்லேட் கலர் மனிதர்கள். நம்ப தமிழர் இனத்தவர்கள் தான். 147 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த கதையைச் சொல்கிறேன்.
இப்போது அந்த சூரினாம் நாட்டில் தமிழர்களின் ஐந்தாம் தலைமுறையினர் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் (Suriname Tamils).
சுரினாம் கரும்பு தோட்டங்களுக்குச் சென்ற தமிழர்கள் அந்த நாட்டின் கரும்புக் காடுகளில் தங்களின் மொழியில் ஒரு பகுதியைத் தொலைத்து விட்டார்கள். தங்களின் கலைக் கலாசாரங்களில் ஒரு பகுதியை மறந்து விட்டார்கள். தங்களின் பண்பாட்டின் ஒரு பகுதியையும் மறந்து விட்டார்கள். ஆனால் சமயத்தையும் வழிபாடுகளையும் மறக்கவில்லை.
அண்மைய காலங்களில் தமிழ் மொழியின் மீதான விழிப்புணர்வு ஏற்பட்டு உள்ளது. அங்குள்ள கோயில்களிலும் பொது மண்டபங்களிலும் தமிழ் மொழி கற்றுத் தரப் படுகிறது. இந்து சமய வகுப்புகளும் நடைபெறுகின்றன.
இங்கு மலேசியாவில் தமிழர்கள் எப்படி ஒதுக்கப் படுகிறார்களோ; அதே போல அங்கேயும் ஓரம் கட்டப் படுகிறார்கள். உண்மை. இருப்பினும் இன விழிப்புணர்வு ஏற்பட்டு உள்ளது. மாற்றங்களும் மறுமலர்ச்சியும் மலர்ந்து வருகின்றன. சரி.
The Javanese were the third group indentured workers in Suriname and arrived in 1890. Slavery had been abolished in 1863 and the Indian indentured workers (who arrived in 1853) claimed their rights and the government therefore found them difficult to handle. They wanted other "quiet and obedient" workers and decided to bring workers from Java and Indonesia.
சுரினாம் தமிழர்களின் வரலாற்றைப் பார்ப்போம். தமிழர்கள் எப்படி அந்த நாட்டிற்குப் போனார்கள். போகும் வழியில் என்னென்ன நடந்தன. அதையும் பார்ப்போம். பலருக்கும் தெரியாத கதை. படியுங்கள். இந்தக் கதை நாளையும் தொடரும்.
சுரினாம் கரும்புத் தொழிலுக்குப் புகழ்பெற்றது. இப்போது அலுமினா; பாக்சைட் (Alumina; Bauxite) கனிமங்களுக்குப் பிரபலம். தங்கச் சுரங்கங்களும் உள்ளன. இருப்பினும் முதன்முதலில் ஒப்பந்தத் தொழிலாளர்களாகப் புலம்பெயர்ந்த இந்தியர்களின் வரலாறு இல்லாமல் அந்த நாட்டின் வரலாறும் முழுமை அடையாது. இவ்வளவு தூரத்திற்கு முன்னுக்கு வந்து இருக்க முடியாது.
காடாய்க் கிடந்த ஒரு கடலோர நாட்டில் கவிதைகள் பாடி உலகமே திரும்பிப் பார்க்கச் செய்தவர்கள் இந்தியர்கள். அவர்களின் வரலாற்று அலைகள் இல்லாமல் அந்த நாடும் இல்லை. சுகபோக வாழ்க்கை வாழும் மேல் தட்டு அதிகாரங்களும் இல்லை. இந்தப் பக்கம் மலையூர் மலாயாவை நினைத்துக் கொள்ளுங்கள். சரியாக வரும்.
ஒப்பந்தத் தொழிலாளர்கள் எனும் பெயரில் தான் தமிழர்கள் சுரினாம் நாடிற்குக் கொண்டு செல்லப் பட்டார்கள். பல தடவை கப்பல் பயணங்கள். அங்கு சென்ற இந்தியர்களில் தமிழர்கள் ஒரு பகுதியினர் என்பதை நினைவில் கொள்வோம்.
தமிழர்கள் மட்டும் தனியாகச் செல்லவில்லை. 5 ஆண்டுகள் வேலை செய்ய வேண்டும். அப்புறம் ஒப்பந்தம் முடிந்ததும் தமிழ்நாட்டிற்கே திரும்பி வந்து விடலாம்.
1853- 1939 ஆம் ஆண்டுகளில் ஒட்டு மொத்தமாக 74,000 இந்தியர்கள் சுரினாமிற்குக் கொண்டு செல்லப் பட்டார்கள்.தமிழர்கள் 22 ஆயிரம் பேர்.
ஆக அப்படி குடியேறிய தமிழர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் இந்தியாவுக்குத் திரும்பி வந்து விட்டார்கள். அதே சமயம் சுமார் 23,000 இந்தியர்கள் (தமிழர்களும் சேர்த்து) சுரினாம் நாட்டிலேயே தங்கி விட்டார்கள். திரும்பி வரவில்லை. தமிழர்கள் ஏறக்குறைய 6.800 பேர்.
சுரினாம் நாட்டிலேயே தங்க விரும்பிய தமிழர்களுக்கு டச்சு அரசாங்கம் குடியேற்ற உரிமை வழங்கியது. தவிர 100 கில்டர் தங்கக் காசுகளையும் போனஸ் சன்மானமாக வழங்கியது.
அந்த வகையில் தமிழர்கள் தங்கள் கலாச்சாரத்தைப் பராமரித்து, சுரினாமியச் சமுதாயத்தில் தங்களைக் கட்டமைத்துக் கொண்டார்கள். அப்படியே சுரினாமிய வாழ்வியலில் ஒன்றாகக் கலந்து விட்டார்கள்.
லல்லா ரூக் கப்பல் சுரினாம் நாட்டிற்குச் சென்ற முதல் டச்சு கப்பல். கல்கத்தா; சென்னையில் இருந்து சுரினாம் நாட்டிற்கு மூன்று மாதப் பயணம். சொல்லி இருக்கிறேன். சுரினாம் ஒரு டச்சு காலனி.
முதன்முதலில் டச்சு அரசாங்கம் கல்கத்தாவில் ஒரு குடிவரவு முகவரை நியமித்தது. அனைத்துத் தொழிலாளர்களும் கல்கத்தாவின் பிரதான டெப்போவிற்கு வரவழைக்கப் பட்டனர். பாண்டிச்சேரி; சென்னையில் இருந்து தமிழர்கள் போய் இருக்கிறார்கள்.
1873 பிப்ரவரி 26-ஆம் தேதி கல்கத்தா துறைமுகத்தில் இருந்து 410 ஒப்பந்த தொழிலாளர்களுடன் கப்பல் புறப்பட்டது. 1873 ஜுன் 4-ஆம் தேதி சுரினாம் வந்து சேரும் போது 399 இந்தியர்கள் மட்டும் இருந்தார்கள். 279 ஆண்கள்; 70 பெண்கள்; 32 சிறுவர்கள்; 18 சிறுமிகள். மாறுபட்ட கடல் காற்று; வாந்திபேதி போன்ற நோய்களினால் 11 பேர் கப்பலிலேயே இறந்து விட்டார்கள்.
அப்படி சுரினாம் நாட்டிற்குக் கப்பல் ஏறியவர்கள் தான் அந்த நாட்டின் மூதாதையர்கள். உத்தர பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, பீகார் மற்றும் தமிழ்நாடு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். ஏற்கனவே ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்ட அடிமைகள் அங்கே இருந்தார்கள்.
ஒரு காலத்தில் அமெரிக்காவிற்குக் கொண்டு செல்லப்பட்ட ஆப்பிரிக்க அடிமைகளில் ஒரு பகுதியினர் சுரினாம் நாட்டிற்கும் கொண்டு செல்லப் பட்டார்கள். 1650-ஆம் ஆண்டுகளிலேயே ஆப்பிரிக்க அடிமைகளின் புலம்பெயர்வு நடந்து உள்ளது.
காபி, கோகோ, பருத்தி, கரும்புத் தோட்டங்கள் உருவாக்கப் பட்டன. பல இலட்சம் ஆப்பிரிக்கர்கள் அங்கு வேலை செய்தார்கள். 1863-ஆம் ஆண்டு டச்சு அரசாங்கம் அடிமைத்தனத்தை அகற்றியது.
கரும்புத் தோட்டங்களில் வேலை செய்ய ஆட்கள் கிடைக்கவில்லை. அதனால் ஒப்பந்தக் கூலிகளாகத் தமிழர்களும்; பஞ்சாபியர்களும்; ஹரியானா பீகார் மக்களும் கொண்டு செல்லப் பட்டார்கள்.
Indians in Suriname are 1,35,000 making 27.4% of its population.
இந்தியத் தொழிலாளர்கள் சுரினாம் துறைமுகத்தில் இறங்குவதைக் கண்டதும் "ஜோபோ டன்பாசி" (Jobo tanbasi) என்று ஆப்பிரிக்க அடிமைகள் சத்தம் போட்டுச் சொன்னார்களாம். அதாவது "வெள்ளை மனிதர்கள் தான் இன்னும் முதலாளிகள்’ என்று பொருள்.
தொடக்கத்தில் சுரினாம் தமிழர்களின் வாழ்க்கை நிலைமை மோசமாக இருந்தது. அடிமைத்தனம் ஒழிப்பதற்கு முன்னர் இருந்ததை விட மோசமான நிலை. அதைப் பார்த்த இந்தியாவின் பிரிட்டிஷ் கவர்னர் "ஒரு புதிய அடிமை முறை" என்று சொன்னாராம். அதிகமான இறப்புகள்.
1870-ஆம் ஆண்டுகளில், இந்தியத் தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்காகப் புதிய சட்டம் இயற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து நிலைமை சீர் அடைந்தது.
தொடக்க காலத்தில், அதாவது 1880-ஆம் ஆண்டுகளில் இங்கிலாந்தின் பிரிட்டிஷ் அரசாங்கமும்; இந்தியாவின் காலனித்துவ பிரிட்டிஷ் அரசாங்கமும் சுரினாம் இந்தியர்களின் நிலைமை குறித்து கலக்கம் அடைந்தன. பிரிட்டிஷாரின் நற்பெயருக்குப் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று அஞ்சின..
Kanhai, a political appointee, is a lawyer and studied in the Netherlands.
அதனால் சுரினாம் இந்தியத் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைமையைப் பாதுகாக்கவும்; வேலை நிலைமைகளை மேம்படுத்தவும் பல சட்டங்களை இயற்றினார்கள்.
தமிழர்கள் குடியேறிய நாடுகளில் எல்லாம் இதே நிலைமை தான்.
தென் ஆப்பிரிக்காவில் கொடுமை. மடகாஸ்கர் மொரீஷியஸ் தீவுகளில் கொடுமை. மொசாம்பிக் நாட்டில் கொடுமை. ரியூனியன்; சீஷெல்ஸ் தீவுகளில் கொடுமை. தான்சானியா; உகாண்டா; சாம்பியா நாடுகளில் கொடுமை. போட்ஸ்வானா; ஜிம்பாப்வே நாடுகளில் கொடுமை.
அடுக்கிக் கொண்டே போகலாம். ஆப்பிரிக்காவில் தமிழர்கள் குடியேறிய நாடுகளைத் தான் சொல்கிறேன்.
சுரினாம் தமிழர்கள். உலகத்தின் எங்கோ ஒரு மூலையில் வாழ்ந்து கொண்டு இருப்பவர்கள். ஒப்பந்தக் கூலிகள் என்று சொல்லி அழைத்துச் செல்லப் பட்டவர்கள். ஆனால் அடிமைகளாக ஆட்டிப் படைக்கப் பட்டார்கள். அவர்களை டச்சுக்காரர்கள் எப்படி எல்லாம் வாட்டி வதைத்து இருக்கிறார்கள். வெள்ளைத் தோல்கள் எல்லாமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான்.
அப்படியே இந்தப் பக்கம் மலையூர் மலாயாவைப் பாருங்கள். ஒன்றும் சொல்கிற மாதிரி இல்லை. மலாயா தமிழர்கள் கித்தா காடுகளிலே ரொம்பவும் வேதனைகளை அனுபவித்து விட்டார்கள். உண்மை. மதிப்புமிகு மகா தலைவர் ஒருவர் நன்றாகவே பட்டர் தடவி விட்டார். அதை வக்கிரமான வெண்ணெய் என்று வேதனையோடு சொல்கிறேன்.
வரலாற்றுக்கு வாய் இருந்தால் கண்டிப்பாக வாய்விட்டு அழும். சுரினாம் தமிழர்களின் சோக வரலாறு நாளைய கட்டுரையிலும் கண்ணீர் சிந்தும். படித்துப் பாருங்கள்.
(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
01.11.2020
சான்றுகள்:
1. Emmer, P. C. (30 January 2006). The Dutch Slave Trade, 1500-1850. Berghahn Books. pp. 138–140.
2. Counter, S. Allen and David L. Evans, I Sought My Brother: An Afro-American Reunion, Cambridge: MIT Press, 1981
3. Dew, Edward M., The Trouble in Suriname, 1975–93, (Greenwood Press, 1994)
4. Gimlette, John, Wild Coast: Travels on South America's Untamed Edge (Profile Books, 2011)
5. McCarthy Sr., Terrence J., A Journey into Another World: Sojourn in Suriname, (Wheatmark Inc., 2010)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக