23 அக்டோபர் 2011

கணினியும் நீங்களும் – 118

திருமதி.சுபத்திராதேவி, சிக்கிஞ்சான், கோல சிலாங்கூர்
கே: உலகத்தில் 60 கோடி பேர்  இணையத்தைப் பயன் படுத்துகிறார்கள் என்று சொல்கிறார்கள். இவர்கள் ஒரு நாளைக்கு எத்தனை மின்னஞ்சல்களை இணையம் வழியாக  அனுப்புகின்றார்கள் எனும் விவரங்கள் கிடைக்குமா? கணினியில் நீங்கள் கெட்டிக்காரர் என்று நாங்கள் புகழுவது உங்களுக்குப் பிடிக்கலையா?


ப: கேட்கிறது... கேட்கிறது. ரொம்பவே நல்லாவே கேட்கிறது. அதற்கு என்று இப்படியா ஒரு கஷ்டமான கேள்வியைக் கேட்பது. ரொம்ப சுலபமாகக் கேட்டு விட்டீர்கள். ஆனால் அதற்கு பதில் சொல்வதற்குள் எனக்கு என்னவோ இமயமலையை கட்டி இழுப்பது போல இருக்கிறது.  இதே கேள்வியைப் போய் நம்முடைய பில் கேட்ஸிடம் கேட்டு இருந்தால் கூட பாவம் அவர், தன்னுடைய ‘கல்குலேட்டரைத் தேடித் தேடி நொந்து போயிருப்பார்.

சரி, உங்கள் கேள்விக்கு வருகிறேன். நீங்கள் சொல்வது போல இணையத்தைப் பயன் படுத்துபவர்கள் 60 கோடி பேர் இல்லை. போன மாதம் (30.09.2011) வரையில் உலகம் முழுமையும் 1,733,993,742 பேர்  இணையத்தைப் பயன் படுத்தி வருகிறார்கள் என்று தெரிய வருகிறது. அதாவது 173 கோடி. இதைக் கூட சரியாகச் சொல்ல முடியாது. ஏன் என்றால், ஒரு நாளைக்கு பல லட்சம் பேர் இணையச் சேவைகளில் உறுப்பினர் ஆகிக் கொண்டு இருக்கிறார்கள்.  

சரியா. இன்னும் ஒரு சுவராசியமான தகவலைச் சொல்கிறேன். முடிந்தால் எங்கேயாவது எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.

ஒவ்வொரு 60 வினாடிகளுக்கும் அதாவது ஒரே ஒரு நிமிடத்தில் இணைய உலகில் நடைபெறும் அதிசயமான நிகழ்ச்சிகள்.

# 168 மில்லியன் மின்னஞ்சல்கள் அனுப்பப் படுகின்றன. அதாவது 16 கோடி மின்னஞ்சல்கள்.

# 1500 புதிய மின்னஞ்சல் கணக்குகள் திறக்கப் படுகின்றன.

# 60 புதிய வலைப்பதிவுகள் (Blogs) திறக்கப் படுகின்றன.

# 694,445 தேடல்கள் (Search) கூகுள் தேடல் இயந்திரத்தில் தேடப் படுகின்றன.

# 70 புதிய இணையத் தளப் பெயர்கள் பதிவு செய்யப்படுகின்றன. (Domain Names)

# 695,000 புதிய இற்றைப் படுத்துதல் (Updates) பேஸ்புக்கில் செய்யப் படுகின்றன.

#  510,040 புதிய புதிய கருத்துப் பதிவுகள் பேஸ்புக்கில் பதிவு செய்யப்படுகின்றன.

# 98,000 புதிய டிவிட்டர் (Tweeter)  செய்திகள் பகிர்ந்து கொள்ளப்  படுகின்றன.

# 320 புதிய Tweeter  கணக்குகள் திறக்கப் படுகின்றன.

# You Tube-இல் 600 புதிய வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப் படுகின்றன.

# 1700 தடவைகள் பயர்பாக்ஸ் (Fire Fox) உலவி பதிவிறக்கம் செய்யப்படுகின்றன.

#ஸ்கைப் (Skype) இணையத் தொலைபேசியில் 370,000 பேர் பேசுகின்றார்கள்.

என்ன தலை சுற்றுகிறதா? இது எல்லாம் ஒரு நிமிடத்தில் இணையத்தில் நடக்கின்ற சடங்குச் சம்பிரதாயங்கள் தான். இதற்கே இப்படி என்றால் என்ன. ஒரு நாள், ஒரு மாதம், ஒரு வருடம் என்று கணக்குப் போட்டால் எப்படி... வேண்டாம் தாயே ஆளை விடுங்கள்! 

அப்துல் சலாம் rahman1961@yahoo.com

கே: பில் கேட்ஸ் ஒரு கஞ்சன் என்று கேள்விப் பட்டேன். உண்மையா? அவரைப் பற்றி தவறாகச் சொல்லவில்லை.

பில் கேட்ஸும் அவருடைய மனைவி
மெலிண்டாவும் ஆப்ரிக்க குழந்தைகளுடன்
ப: சொல்வதை எல்லாம் சொல்லிவிட்டு தவறாகச் சொல்லவில்லை என்றால் என்ன அர்த்தம். நீங்கள் சொல்வது மிகவும் தப்பு. பார்ப்பதற்குத் தான் அவர் கஞ்சனைப் போலத் தெரியும். ஆனால், அவர் கொடை நெஞ்சங்களில் ஒரு மாபெரும் அவதாரம். பல கோடி ஆப்ரிக்க மக்களின் வறுமைக் கண்ணீரைத் துடைத்த ஓர் உயர்ந்த ஆத்மா. மாறிவரும் உலகில் மாறாதிருப்பது மாற்றம் ஒன்று மட்டுமே என்ற வாசகம் கணினி உலகத்திற்குத் தான் மிகவும் பொருத்தமாக இருக்கும்.

அவருடைய உண்மையான சொத்து மதிப்பு 24,900 கோடி  மலேசிய ரிங்கிட். இதில் 8,100 ஆயிரம் கோடிகளை ஆசிய ஆப்பிரிக்க நாடுகளுக்குத் தானம் செய்து விட்டார். அதனால் உலகப் பணக்காரர் பட்டியலில் இரண்டாவது இடத்திற்குத் தள்ளப் பட்டார்.  இப்போது 16,800 கோடிகளை வைத்து இருக்கிறார். இதில் கூட 95 விழுக்காட்டுப் பணத்தையும் உலக மக்களுக்கே தானம் செய்யப் போவதாகவும் சொல்லி இருக்கிறார். இது தெரியுமா உங்களுக்கு? அவரைப் போய் கஞ்சன் என்று சொல்கிறீர்களே. இது உங்களுக்கே நியாயமாகப் படுகிறதா?  

அந்த வகையில் பில்கேட்ஸும் அவருடைய மனைவியும் இணைந்து பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையை நிறுவி இதுவரை சுமார் 32 பில்லியன் அமெரிக்க டாலரை சமூக நலப் பணிகளுக்காக வழங்கி இருக்கின்றனர். அந்தப் பணத்தைக் கொண்டு உலகப் புகழ் பெட்ரோனாஸ் கோபுரங்களைப் போல பத்து கோபுரங்களைக் கட்டலாம். ஒரு பில்லியன் என்பது 300 கோடி. (இவரைப் பற்றி http://www.billgatesmicrosoft.com/networth.htm எனும் இணையத் தளத்தில் நிறைய தகவல்கள் உள்ளன.)

ஃபில்கேட்ஸ் Business At The Speed of Thought என்ற நூலை எழுதினார்.  25 மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டது. 60 நாடுகளில் விற்பனையாகிறது. அதற்கு முன் அவர் எழுதிய The Road Ahead என்ற நூலும்  அதிகமாக விற்பனையானது. இரு நூல்களின் விற்பனையில் இருந்து கிடைக்கும் முழு தொகையையும் பில்கேட்ஸ் அற நிதிகளுக்கு வழங்கி விட்டார். உலகம் இருக்கும் வரையில் அவருடைய அறப் பணிகளின் ஆலம் விழுதுகள் கலியுகக் கவிதைகளைப் பாடிக் கொண்டே இருக்கும்.


(ஊர் பேர் இல்லாமல் தமிழில் வந்த குறும் செய்தி)

கே: பிள்ளைகளுக்கு இலவசமாக ஒரு புதிய விளையாட்டு வேண்டும். உதவி செய்யுங்கள்?



ப: ஊர் பேர் இல்லாமல் குறும் செய்தி அனுப்பி இருக்கிறீர்கள். பரவாயில்லை. ஹெலிகாப்டர் விளையாட்டு ஒன்று இருக்கிறது. இது ஒரு பெரிய விளையாட்டு. 60 கொண்டது. பதிவிறக்கம் செய்ய நேர ஆகும்.

அதன் முகவரி: http://www.4shared.com/file/Z2iy1Ry0/Helic.html?







21 அக்டோபர் 2011

கணினியும் நீங்களும் – 117

[இந்த வாரக் ‘கணினியும் நீங்களும்’ ஸ்டீவ் ஜாப்ஸ் அவர்களுக்கு காணிக்கை.]

ஸ்டீவ் ஜாப்ஸ். கணினி தொழில்நுட்பத்தில் ஒரு புதிய பரிணாமத்தைக் கொடுத்தவர். கணினியை ஓர் இடத்தில் இருந்து இன்னோர் இடத்திற்கு எடுத்துச் செல்லும் ஒரு நவீனப் பரிமாணத்தைக் கொடுத்தவர்.


ஆப்பிள் கணினி நிறுவனத்தை உருவாக்கி அதனைப் புகழின் உச்சிக்கு கொண்டு சென்றவர். பில் கேட்ஸின் கணினிப் புலமைக்குச் சவால் விட்டவர்.

ஸ்டீவ் ஜாப்பின் மரணத்தை அவர் கண்டுபிடித்த இணையக் கைப்பேசி சாதனத்தின் மூலமாகத் தான் கோடானு கோடி உலக மக்கள் தெரிந்து கொண்டனர். அதைவிட பெரிய அஞ்சலி வேறு எதுவும் அவருக்கு இல்லை. ஸ்டீவ் ஜாப் கணினி உலகில் ஓர் அபூர்வமான அவதாரப் புருஷர்.


ஆப்பிள் கணினி நிறுவனத்தின் தலைவராக இருந்த காலத்தில் ஐபாட், ஐபோன், தட்டைக் கணினி போன்ற நவீனக் கணினி தொழில்நுட்பத்தை உலகிற்கு அறிமுகம் செய்தார்.

2009 ஆம் ஆண்டில் அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடந்தது. அதன் பின்னர் நீண்ட காலமாக அவர் கணையப் புற்று நோயினால் அவதிப் பட்டார். கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி காலமானார். அவருக்கு வயது 56.  அப்போது அவருடைய சொத்து மதிப்பு 2400 கோடி மலேசிய ரிங்கிட்.

இந்த உலகின் தலைசிறந்த கணினி மும்மூர்த்திகளில் முதலிடம் வகிப்பவர் திம் பெர்ணர்ட்ஸ் லீ. இவர் இணையத்தைக் கண்டுபிடித்து அதை இலவசமாக உலக மக்களுக்கு அர்ப்பணிப்பு செய்தார். அடுத்து வருபவர்  பில் கேட்ஸ். இவர் உலகின் மூலை முடுக்கு, பட்டி தொட்டிகளில் எல்லாம் கணினியைக் கொண்டு போய்ச் சேர்த்தவர்.
இளம் வயதில் ஸ்ஈவ் ஜாப்ஸ்
அதற்கு அடுத்து ஸ்டீவ் ஜாப்ஸ். இவர் கைப்பேசிக்குள் இணையத்தையும் அந்த இணையத்திற்குள் உலகத்தையும் கொண்டு வந்தவர். ஸ்டீவ் ஜாப்ஸ் மறைந்து விட்டாலும் அவருடைய கணினிச் சாகசங்கள் சாகாவரம் பெற்றவை. அந்தச் சாகசச் சாதனைகள் ஊழி ஊழி காலத்திற்கும் சிருங்காரம் பாடி கொண்டே இருக்கும் என்பது வெள்ளிடைமலை.

1972 ஆம் ஆண்டு கல்லூரியில் படிக்கும் போது முதல் தவணைச் சோதனையில் தோல்வி கண்டார். அதனால் படிப்புக்கு முழுக்குப் போட்டார்.

அதன் பின்னர், படுக்கப் பாய் கூட இல்லாமல் அவருடைய நண்பரின் அறையில் கீழே வெறும் தரையில் படுத்துத் தூங்கினார். இது நம்ப முடியாத உண்மையாக இருக்கலாம். ஆனால், அது வரலாற்று உண்மை.


அவர் பிறந்தவுடன் அவருடைய பெற்றோர் அவரை  வேறு ஒருவருக்குத் தத்து கொடுத்து விட்டனர். மிகவும் சிரமமான வாழ்க்கை வாழ்ந்து வந்தவர். அவர் தங்கியிருந்த இடங்களில் கிடைக்கும் காலி பாட்டில்களைப் பொறுக்கி எடுத்துக் கொண்டு போய் விற்று தன் வயிற்றைக் கழுவிக் கொண்டு வந்திருக்கிறார்.

ஒரேகான் மாநிலத்தில் போர்ட்லேண்ட் நகரில் ஹரே கிருஷ்ணா ஹரே ராமா ஆசிரமம் இருந்தது. அங்கே இரவு நேர இலவச உணவுகளைப் பெற்று வாழ்ந்து வந்தார். அந்தக் காலக் கட்டத்தில் ஒரு வேளைச் சாப்பிட்டிற்கே அலைமோதி அவதிப பட்டிருக்கிறார் ஸ்டீவ் ஜாப்ஸ்.

அதிர்ஷ்டவசமாக அத்தாரி எனும் நிறுவனத்தில் அவருக்குத் தொழில்நுட்ப உதவியாளராக வேலை கிடைத்தது. அங்கு வேலை செய்து கொஞ்சம் பணத்தைச் சேர்த்து கொண்டு தன் நண்பருடன் இந்தியாவுக்கு வந்தார்.

ஸ்டீவி ஜாப்ஸின் ஆப்பிள் நிறுவனம்
1974ல் தமிழ்நாட்டில் உள்ள காஞ்சிபுர காஞ்சி ஆசிரமத்தில் தங்கி இறை வழிபாடுகளில் ஈடுபட்டார். பின்னர், தலையைச் சுத்தமாக மொட்டை அடித்து, காவி உடை அணிந்து  புத்த மதத்தைத் தழுவி, அமெரிக்கா திரும்பினார்.

மறுபடியும் அத்தாரி நிறுவனத்தில் சேர்ந்து வேலை செய்து கொண்டு கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் சேர்த்தார். 1976ல் இரு நண்பர்களின் துணையுடன் ஆப்பிள் நிறுவனத்தைத் தொடங்கினார்.

உலக கணினி வரலாற்றில் ஒரு புதிய சகாப்தம். 1984ல் மெக்கிந்தோஸ் எனும் கணினி இயங்குதளத்தை உருவாக்கினார். இந்தக் கட்டத்தில் பில் கேட்ஸின் விண்டோஸ் இயங்குதளம் தாயின் வயிற்றுக்குள் தாலாட்டுப் பாடிக் கொண்டு இருந்தது.

ஆனால், 1986ல் ஆப்பிள் நிறுவனத்தில் சில பல பிரச்னைகள். ஸ்டீவ் ஜாப்ஸ் எளிதில் உணர்ச்சி வசப் படக் கூடியவர். தொட்டதற்கு எல்லாம் தொழிலாளர்கள் மீது எரிந்து விழுகிறார் எனும் புகார்கள்.  ஆப்பிள் நிறுவனத்தின் பங்குதாரர்கள்  அவரை அங்கிருந்து வெளியேற்றினர்.
1985ல் ஏழு மில்லியன் டாலரில் நெக்ஸ்ட் எனும் கணினி நிறுவனத்தைத் தோற்றுவித்தார். அங்கு இருந்தவாறு படிப்படியாகக் கணினித் தொழில்நுட்பங்களில் நவீனத் தன்மைகளை அறிமுகம் செய்தார்.  1986ல் பிக்சர் திரைப்பட நிறுவனத்தை 30 மில்லியன் ரிங்கிட்டிற்கு வாங்கினார்.

அந்த நிறுவனம் தான் பின்னர், Toy Story (1995), A Bug’s Life (1998), Toy Story2 (1999), Monsters (2001), Finding Nemo (2003), The Incredibles (2004), Cars (2006), Ratatouille (2007), WALL-E (2008), Up (2009), Toy Story3 (2010) ஆகிய படங்களைத் தயாரித்து வெளியிட்ட நிறுவனம் ஆகும்.

1996ல் ஆப்பிள் நிறுவனம் ஸ்டீவ் ஜாப்சை திரும்ப அழைத்துக் கொண்டது. 2011 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வரை அவர் அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாகப் பணிபுரிந்தார். ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து அவர் விலகும் போது அவருடைய ஆண்டுச் சம்பளம் என்ன தெரியுமா? ஒரே ஓர் அமெரிக்க டாலர்தான். உண்மைதான்.

ஆனால், அப்போது அவருடைய சொத்து மதிப்பு, மலைக்க வேண்டாம்  2400 கோடி மலேசிய ரிங்கிட். அவர் அமெரிக்காவிலேயே 42வது பணக்காரராக விளங்கினார்.

இவருக்கு மனைவியும் நான்கு பிள்ளைகளும் உள்ளனர். அவர் இறந்ததும் ஆப்பிள் நிறுவனம் இப்படி இரங்கல் செய்தியை வெளியிட்ட்து. ‘Apple has lost a visionary and creative genius, and the world has lost an amazing human being.’ (ஆப்பிள் நிறுவனம் ஓர் உருவாக்க பேரறிவாளனை இழந்து விட்டது. ஆனால், இந்த உலகம் ஓர் அற்புதமான மனிதனை இழந்து விட்டது)

’நவீன உலகின் முகத் திரையில் மாற்றங்கள் செய்த மாமனிதர்’ இந்த ஸ்டீவ் ஜாப் என்று உலக நாளிதழ்கள் முதல் பக்கத்தில் புகழாரம் சூட்டியுள்ளன.

படுக்கப் பாய் இல்லாமல் தவித்த ஒரு தனி மனிதன் உலகப் பணக்காரன் ஆனது ஒரு சரித்திரம் தானே!

ஸ்டீவ் ஜாப்ஸ்


16 அக்டோபர் 2011

கசிந்து போகும் கச்சத்தீவு

(இந்தக் கட்டுரை 25.09.2011 மலேசிய நண்பன் ஞாயிற்றுக் கிழமை பதிப்பில் பிரசுரம் ஆனது)

ஊழி ஊழி காலமாகக் கச்சத்தீவு தமிழர்களின் வாழ்வு ஆதாரமாக இருந்தது. இப்போது தமிழர்களைச் சுட்டுப் பொசுக்கும் ஒரு கொலைகளமாக மாறி வருகிறது.

கச்சத்தீவு யாருக்கு?
 இலங்கைக்கு இந்திரா காந்தியால் தாரை வார்த்துக் கொடுக்கப்பட்ட ஒரு குட்டி நிலப்பகுதி.  உலகத்தையே இப்போது திரும்பிப் பார்க்க வைக்கிறது.

கச்சத்தீவு ஒரு முடிந்துபோன கதை. தாரை வார்த்துக் கொடுத்த மகள் மறுபடியும் புது மகள் ஆனதாகச் சரித்திரமே இல்லை. போனது போனது தான். கொடுத்தது கொடுத்ததுதான்.

கச்சத்தீவில் கடந்த சில ஆண்டுகளில் இலங்கையின் கடல் படை 380 தமிழக மீனவர்களைச் சுட்டுப் போட்டு சூடு காட்டித்  தின்று  இருக்கிறது. 2800 க்கும் அதிகமான தமிழர்களைப் படுகாயப் படுத்தி இருக்கிறது.

பலகோடி ரிங்கிட் மதிப்புள்ள மீன்பிடி உபகரணங்கள், வலைகளை நாசம் செய்துள்ளது. நூற்றுக்கணக்கான மீனவர்களைச் சிறை செய்துள்ளது. 

க‌ச்ச‌த்‌தீவு அருகே ‌மீ‌ன்‌பிடி‌யில் ஈடுபட்ட 3500 ‌த‌‌மிழக‌ ‌மீனவ‌ர்கள் விரட்டியடிப்பு
காணாமல் போனவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.  இது மட்டும் இல்லை. இலங்கை அரசு ஆயிரக்கணக்கான கண்ணி வெடிகளைக் கச்சத்தீவு கடல் நீரில் அள்ளித் தெளித்து, அபிஷேகம் செய்து வருகிறது. தமிழக மீனவர்களின் படகுகள் வெடித்துச் சிதறிப் போய்க் கிடக்கின்றன.

ராமேஸ்வரம், மன்னார்க்குடி பகுதிகளில் நூற்றுக்கணக்கான பெண்கள் தாலி அறுக்கப் பட்டதற்கு இலங்கை தான் மூல காரணம். துணை போகிறது சீனா.

என் புருஷனைக் கொன்ற அந்த இனத்தையே அழிப்பேன் என்று கச்சைக் கட்டி நிற்கின்றது ஒரு பத்தினி விரதை.

கச்சத்தீவு ராமேஸ்வரத்தில் இருந்து 15 கி.மீ. தொலைவில் இருக்கிறது. இலங்கையில் இருந்து 20 கி.மீ. தொலைவு. பாக் நீரிணையில் இருக்கும் ஒரு சின்னக் குட்டித் தீவு. இங்கு ‘டார்குயின்எனும் பச்சை ஆமைகள் அதிகம். கச்சம் என்றால் ஆமை. பச்சைத் தீவு என்பது காலப் போக்கில் கச்சைத் தீவு ஆனது. (சான்று: http://ta.wikipedia.org/wiki/ கச்சதீவு)

1605 ஆம் ஆண்டில் மதுரையில் நாயக்க மன்னர்கள் வாழ்ந்தார்கள். அவர்கள் ராமேஸ்வரத்தில் சேதுபதி அரசை தோற்றுவித்தார்கள். சேதுபதி அரசுக்கு குத்துக்கால் தீவு, குருசடித் தீவு, இராமசாமித் தீவு, மண்ணாலித் தீவு, கச்சத் தீவு, நடுத் தீவு, பள்ளித் தீவு ஆகிய தீவுகள் வழங்கப் பட்டன.

அத்துடன் ராமேஸ்வரத்தில் இருந்த 69 கடற்கரைக் கிராமங்களும் சேதுபதி அரசருக்கு உரிமை ஆக்கப்பட்டன. அன்றில் இருந்து 1947 ஆம் ஆண்டு வரை கச்சத் தீவு இராமநாதபுரம் ஜமீனுக்கு சொந்தமாக இருந்து வந்தது.

இந்தியா விடுதலை அடைந்ததும் ஜமீன் முறை அகற்றப் பட்டது. அதன் பின்னர் கச்சத்தீவு இந்தியக் குடியரசிற்குச் சொந்தமானது. 

(சான்று: http://www.mahaveli.com/?p=8891)

கச்சத்தீவில் புனித அந்தோனியார் திருவிழா
ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம் ஆகிய கடலோர மாவட்டங்களில் வாழும் தமிழக மீனவர்கள் தொன்று தொட்டு, கச்சத்தீவின் அருகில் மீன் பிடித்து தங்களின் அன்றாட வாழ்க்கையை நடத்தி வந்தனர். இப்போதும் அப்படித் தான் நடந்து வருகிறது. அதில் மாற்றம் இல்லை.

சரி. இந்தியாவுக்குச் சொந்தமான கச்சத்தீவை ‘இந்தா எடுத்துக்கோஎன்று இந்திரா காந்தி ஏன் இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுத்தார். அதில் ஒரு பெரிய ரகசியமே மறைந்து கிடக்கிறது. சிலருக்குத் தெரியும். பலருக்குத் தெரியாது. அந்த ரகசியத்தைச் சொல்கிறேன்.

1971 ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போர் நடந்தது. அப்போது இந்தியாவின் பிரதமராக இந்திரா காந்தி இருந்தார். கிழக்கு பாகிஸ்தானைத் தாக்கி மூன்றே நாட்களில் ஒரு புதிய நாட்டையே உருவாக்கிக் கொடுத்தார் அந்த இரும்புப் பெண்மணி. அந்தப் பழைய கிழக்கு பாகிஸ்தான் தான் இப்போதைய வங்காள தேசம். 
(சான்று: http://en.wikipedia.org/wiki/Indo-Pakistani_War_of_1971)

இது அமெரிக்காவிற்குப் பிடிக்கவில்லை. ஏன் என்றால், அமெரிக்காவும் பாகிஸ்தானும் கூட்டாளிகள். உடனே ‘எண்டர்பிரைஸ்எனும் அணு ஆயுதக் கப்பலை இந்தியாவைத் தாக்க அமெரிக்கா அனுப்பியது.

அப்போது அமெரிக்காவின் அதிபராக நிக்சன் இருந்தார். கல்கத்தாவின் மீது அணுகுண்டுகளைப் போடுவது தான் அமெரிக்காவின் திட்டம்.

தமிழக மீனவர்கள் தங்களின் மீன்பிடிப்
படகைக் கரைக்கு இழுத்து வருகின்றனர்.
அமெரிக்காவிற்கு உதவியாக இங்கிலாந்து எச்.எம்.எஸ். ஈகள் எனும் ஆணு ஆயுதக் கப்பலையும் அனுப்பியது. வங்காள விரிகுடாவில் அமெரிக்க, இங்கிலாந்து படைகள் குவிக்கப் பட்டன. எல்லாம் இந்தியாவைத் தாக்குவதற்குத் தான்.

இந்தக் கட்டத்தில் இந்தியாவிற்கு ஆதரவாக ரஷ்யா களம் இறங்கியது. இந்தியாவின் மீது கையை வைத்தால் ரஷ்யா சும்மா இருக்காது, பதிலடி கொடுக்கும் என்று உலகத்தையே எச்சரிக்கை செய்தது.

இந்தியாவிற்கு ஆதரவாக கியூபா, அங்கோலா, இஸ்ரேல், பிரான்சு போன்ற நாடுகள் படைகளை அனுப்பத் தயாராக இருந்தன.

90,000 பாகிஸ்தானிய போர் வீரர்களை இந்தியா தடுத்து வைத்தது.
ரஷ்யாவின் 12 அணு நாசகாரிக் கப்பல்கள், ஓர் அணு நீர்மூழ்கிக் கப்பல், மூன்று விமானந்தாங்கிக் கப்பல்கள் இந்தியக் கடல் எல்லைக்குள் வந்து சேர்ந்தன. அவற்றில்  18,000 ரஷ்யப் போர் வீரர்கள் தயார் நிலையில் இருந்தனர்.

இதைத் தவிர 2000 ரஷ்ய எம்.ஐ.ஜி ரகப் போர் விமானங்கள் இந்தியாவின் எல்லைப் பகுதிகளில் நிறுத்தி வைக்கப் பட்டன. மூன்றாவது உலகப் போர் வரக் கூடிய கட்டம். ஆட்டம் கண்டு போனது அமெரிக்கா. அதன் வரலாற்றில் முதல் முறையாக பின வாங்கியது.

இந்தக் கட்டத்தில் இந்தியாவைக் குறி வைத்து ஐ.நா. சபையில் ஒரு தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வந்தது. சும்மா இருக்குமா ரஷ்யா. தனது ரத்து அதிகாரத்தால் அந்தத் தீர்மானத்தைத் தடை செயதது.

இல்லை என்றால் இந்தியா மீது ஐ.நா. படைகள் போர் தொடுத்து இருக்கலாம். உலகச் சரித்திரம் வேறு மாதிரி எழுதப் பட்டிருக்கலாம். அதன் பின்னர் அமெரிக்கா பின் வாங்கியது.

இந்த நிலையில் இந்தியா யோசிக்கத் தொடங்கியது. இந்தியாவின் வடக்கே தரைப்பகுதி. அங்கே பாகிஸ்தானும், சீனாவும் நாக்கைத் தொங்கப் போட்டு நிற்கின்றன. கிழக்கும், மேற்கும் கடல் பகுதிகள். பரவாயில்லை. ஆபத்து இல்லை. தெற்கில் உள்ள ஒரே தரைப்பகுதி இலங்கைதான்.


கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்களை தாக்கி சிங்கள கடற்படை அட்டகாசம்

வங்காள தேசப் போருக்குப் பின் இலங்கையில் விமானத் தளம் அமைக்க பாகிஸ்தான் இடம் கேட்டுக் கொண்டிருந்தது. அதைத் தடுக்க இந்திரா காந்தி திட்டம் போட்டார்.

இலங்கையில் பாகிஸ்தானுக்கு இடம் கிடைத்தால் இந்தியாவுக்கு ஆபத்து. அப்போது இலங்கையின் பிரதமராக ஸ்ரீ மாவோ பண்டாரநாயகா இருந்தார். அவரைச் சமாதானம் செய்ய முயன்றார். 
(சான்று: http://www.alaikal.com/news/?p=17814)

கச்சத் தீவை எங்களுக்குத் தந்து விடுங்கள். இலங்கையில் விமான தளம் அமைக்க பாகிஸ்தானுக்கு நாங்கள் இடம் தர மாட்டோம் என்று ஒரே அடியாக பண்டாரநாயகா கிடுக்குப் பிடி போட்டார்.

இந்திரா காந்தியால் மறுக்க முடியவில்லை. சரி என்று சொல்லிவிட்டார். அந்தச் சமயத்தில் அவருக்கு வேறு வழியும் இல்லை. மறுத்தால் ஆபத்து தலைக்கு மேல் வந்துவிடும்.

கச்சத்தீவு எங்கே இருக்கிறது
1974 இல் கச்சத்தீவு இலங்கைக்குத் தாரை வார்க்கப் பட்டது. பிறகு இரண்டு வருடங்கள் கழித்து 1976 இல் மீண்டும் ஓர் ஒப்பந்தம். தமிழக மீனவர்கள் கச்சத்தீவில் தங்கி ஓய்வு எடுக்கலாம். வலைகளை உலர்த்தலாம். ஆண்டுக்கு ஒருமுறை அங்கே நடக்கும் அந்தோணியார் கோயில் திருவிழாவில் பங்கேற்கலாம்.

ஆனால், யாரும் தங்கக் கூடாது. அவை அந்த ஒப்பந்தத்தின் அடிப்படைகள். ஆனால் அந்த ஒப்பந்தத்தின் படி இலங்கை அரசு நடந்து கொள்கிறதா என்பதுதான் இப்போதைய மில்லியன் டாலர் கேள்வி.
கச்சத்தீவை கண்காணிக்க இந்திய கடற்படை ஆயத்தம்

இலங்கை ஒரு சிறிய நாடுதான். ஆனால் அதை இந்தியா பகைத்துக் கொண்டால் என்ன ஆகும். சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் தளம் அமைக்க இலங்கை இடம் கொடுத்து விடும்.

ஆக, ஒட்டு மொத்த   இந்தியாவின்  பாதுகப்புக்காகத் தமிழக மீனவர்களின் நலன்கள் புறக்கணிக்கப் படுகின்றன என்பது தான் உண்மையிலும் உண்மை.


கச்சத்தீவில் இலங்கை போர் கப்பல்
இலங்கையில் இருக்கும் தமிழ் இனம் அழிக்கப் படும் போது இந்தியா மௌனம் சாதித்து வந்ததற்கு இதுவும் ஒரு காரணம். இப்போது புரிகிறதா!

கச்சத்தீவு மறுபடி இந்தியாவுக்கு கிடைக்கவே கிடைக்காது.  இப்படி நான் சொல்லவில்லை. உலகின் இரண்டாவது போலீஸ்காரர் சீனா சொல்கிறது. சொல்லியும் வருகிறது.

அமெரிக்காவை மிரட்டியும் வருகிறது. இப்போது ரஷ்யா அடங்கிப் போய் கிடக்கிறது. என்ன செய்வது. அங்கேயும் ஆயிரத்து எட்டு பிரச்னைகள்.

கச்சத்தீவில் சீனாவின் கப்பல்கள் வந்து போகின்றன. அவற்றுக்கு உதவியாக இலங்கையின் கப்பல்களும் வருகின்றன. ‘நாங்கள் இருக்கும் போது நீ ஏன் பயப்படுகிறாய்... புகுந்து விளையாடுஎன்று சீனா இலங்கைக்கு நெல்லிக்காய் லேகியம் கொடுத்து வருகிறது.


கச்சத்தீவு அருகே எண்ணெய் கிணறுகள்
அந்த லேகியத்தைச் சாப்பிட்டுக் கொண்டு இலங்கை இப்போது அமெரிக்காவிற்கே சவால் விடுகிறது. என்ன செய்வது. காலம் செய்கிற கோலம்.

கச்சத்தீவின் அருகே, ஆழ்கடலில் எண்ணெய் வளங்கள் உள்ளன. அவை சீனாவின் கண்களை உறுத்துகின்றன. சின்னத் தம்பி இலங்கையைக் கைக்குள் போட்டுக் கொண்டால் சீக்கிரமாக பிரியாணி சாப்பிடலாமே என்று சீனா ஆசைப் படுகிறது. ‘வாங்க அண்ணே... வாங்கஎன்று இலங்கையும் சமையல் சாதம் செய்து போட தயாராக இருக்கிறது.

இப்படி எழுதுவதற்காக தயவு செய்து என்னை மன்னிக்கவும். இந்திய - இலங்கை உடன்பாடு கையெழுத்து ஆகிறது என்று கருணாநிதிக்கு நன்றாகத் தெரியும்.

உண்மையிலேயே தமிழக மீனவர்கள் மீது அக்கறை இருந்து இருந்தால்... உடனடியாக  தமிழகச் சட்டசபையில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி மிகப் பெரிய போராட்டத்தை நடத்தி இருக்கலாம். கச்சத்தீவை விட்டுக் கொடுத்து இருக்கக் கூடாது.

ஆனால், அதைச் செய்யத் தவறிவிட்டார். இப்போது கடிதம் மேல் கடிதம் எழுதி பயன் இல்லை. பாவம் அவர். அவரைக் குறை சொல்லக் கூடாது. பாசத்திற்கு பேரம் பேசவே அவருக்கு நேரம் இல்லாமல் போய்விட்டது.


கச்சத்தீவின் தோற்றம்
தமிழகத்தில் ஆயிரம் ஆயிரம் அரசியல் கட்சிகள் வரலாம். போகலாம். கச்ச தீவை மீட்டுத் தருகிறோம் என்று காட்டுக் கத்தலாய்க் கத்தலாம்.

ஆனால், கச்சத்தீவு கிடைக்கும் என்பதை மறந்து விடுவது தான் நல்லது என்று எனக்குப் படுகின்றது. வெள்ளம் தலைக்கு மேல் போன பிறகு இனிமேல் கத்திப் பிரயோஜனமே இல்லை.

பழகிப் போன ஆடம்பரமான அரசியல் கவிதாஞ்சலிகள் அலை அலையாய் வரலாம். அவை கச்சத் தீவில் செத்துப் போன மீனவ ஜீவன்களுக்கு கேட்கவே கேட்காது. கேட்கவும் கூடாது! அதுவே அவர்களுக்கு பெரும் புண்ணியமாக இருக்கும்!

கணினியும் நீங்களும் – 114

கலை மாறன்  kalai07@live.co.uk
கே: குழந்தைகள், வயதிற்கு வந்த பிள்ளைகள் Facebook, Friendster, Twitter, போன்ற சமூகத் தளங்களில் அவர்கள் பயன்படுத்தும் பாஸ்வோர்ட் சொல்லை நாம் கண்டிப்பாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று நீங்கள் எச்சரிக்கை செய்கிறீர்கள். குழந்தைகள் என்றால் எத்தனை வயது? வயதிற்கு வந்த பிள்ளைகள் என்றால் எத்தனை வயது?


ப: மின்னஞ்சல் வழியாக ஏழு கேள்விகள் கேட்டு இருக்கிறீர்கள். ஆர்வத்திற்குப் பாராட்டுகள். முதல் கேள்விக்கு வருகிறேன். இப்போதைய காலக் கட்டத்தில் குழந்தைகளும் பெண்களும் இணையச் சதிவலைகளில் சிக்கிக் கொள்கிறார்கள் என்று நான் அடிக்கடி எச்சரிக்கை செய்து வருகிறேன்.

நாம் நம்முடைய பிள்ளைகளை முழுக்க முழுக்க நம்பித் தான் அவர்களுக்கு இணையத்தைத் திறந்து விடுகிறோம். ஆனால், Facebook, Friendster, Twitter, Hi5 போன்ற தளங்களின் வசீகரமான அம்சங்கள்; அவற்றின்  கவர்ச்சித் தன்மைகள்; சின்னச் சின்ன பிஞ்சு மனங்களைச் சிதற வைத்து விடும்.

அவர்களின் உணர்வுகளைப் பேதலிக்கச் செய்து விடும். அவர்களுடைய பதின்ம வயது எண்ணங்களைத் தடுமாற வைத்து விடும் என்றுதான் சொல்ல வருகிறேன்.

பேஸ்புக்கில் ஒருவர் கணக்குத் திறக்க வேண்டும் என்றால் அவருக்கு குறைந்தது 13 வயது  முடிந்து இருக்க வேண்டும். சரியா. ஆனால், ஒரு 10 வயதுப் பெண் பிள்ளை, அப்பா அம்மாவுக்குத் தெரியாமல் தனக்கு 14 வயது ஆகிவிட்டது என்று சொல்லி  கணக்குத் திறந்தால் யாருக்கு என்னத் தெரியும். சொல்லுங்கள்.

பேஸ்புக் நடத்துபவர்கள் என்ன... அமெரிக்காவில் இருந்து இங்கே நம்ம மலேசியாவுக்குப் பறந்து வந்து... அந்தப் பிள்ளையின் ஐ.சி. அடையாள கார்டை வாங்கிப் பார்த்து... ஓ.கே. சொல்லப் போகிறார்களா என்ன.

பேஸ்புக்கில் யார் வேண்டும் என்றாலும் கணக்குத் திறந்து கொள்ளட்டும். அப்புறம் சோறு தண்ணி இல்லாமல் அதிலேயே கிடந்து சாகட்டும்.  யாரும் வேண்டாம் என்று சொல்லவில்லை. அதனால் நமக்கு ஒன்றும் பெரிய பேஸ்புக் ராமாயணம் வந்துவிடப் போவது இல்லை.

ஆனால், நான் கவலைப் படுவது எல்லாம் இந்த பி.எம்.ஆர், எஸ்.பி.எம் எழுதும் வயதுகளில் இருக்கும் 15, 16, 17 வயது பிள்ளைகளைப் பற்றித் தான். எஸ்.பி.எம் தாண்டிவிட்டால் எதையாவது செய்து போகட்டும் என்று ஒரு கண்ணை ஒரு பக்கம் மூடிக் கொள்ளலாம்.

அதுவரை இந்த இணைய விஷயத்தில் பெற்றோர்கள் அவர்களிடம் கண்டிப்பாக இருக்க வேண்டும். இது தான் என்னுடைய வேண்டுகோள்.

சரி. அடுத்து என்ன செய்யலாம் என்று பார்ப்போம்.

1.  முதலில் பதின்ம வயது மாணவர்களின் Password எனும் கடவுச் சொல்லைக் கண்டிப்பாகப் பெற்றோர் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இது ரொம்பவும் முக்கியம்.

2.  அந்தக் கடவுச் சொல் மாற்றம் செய்யப் படுகிறதா என்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

3. பிள்ளைகள் பேஸ்புக்கில் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள், யாருடன் பழகுகிறார்கள் என்பதில் எப்போதும் ஒரு கண் வைத்திருக்க வேண்டும்.

4. அவர்களுடைய நண்பர்களில் யார் மீதாவது சந்தேகம் வந்தால், பேஸ்புக்கில் அனைவரும் பார்க்கும்படி ஓர் எச்சரிக்கை செய்ய வேண்டும்.

5. அந்த நண்பரை உடனடியாகப் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்.

6.  பதின்ம வயது பிள்ளைகளே, இனிப்பான வார்த்தைகளுக்கு மயங்கிவிட வேண்டாம். விஷமதாரிகளின் முதல் ஆயுதம் இனிப்பு தான் என்பதை மறக்க வேண்டாம்.

7. உங்களுடைய நண்பர்களை இணையத்திலேயே வைத்திருக்கவும். தயவு செய்து வீட்டுக்கு வரச் சொல்லி அழைக்க வேண்டாம்.

8. அந்தரங்கமான விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

9. உங்களின் உடல் தோற்றத்தைப் பற்றி விசாரிப்பவர்களை உடனடியாக ஒதுக்கி விடுங்கள்.

10. குடும்ப விஷயங்கள், வீட்டு முகவரிகளைத் தெரியப் படுத்த வேண்டாம்.

11.  அப்படியே நம்பகமான பேஸ்புக் நண்பரைச் சந்திக்க வேண்டும் என்றால் பெற்றோர் அல்லது மிகவும் நம்பிக்கையான உறவினர் யாரையாவது அழைத்துச் செல்லுங்கள்.

12. சில சமயங்களில் ஆபாசமான உரையாடல்கள் வரும். அதில் எந்தக் காரணத்தைக் கொண்டும் கலந்து கொள்ள வேண்டாம். முற்றாகத் தவிர்த்து விடுங்கள்.

இணையம் என்பது ஒரு மாயை உலகம். அதில் நமக்கு புதுமையான வாய்ப்புகள், அனுபவங்கள் கிடைக்கின்றன. உண்மைதான்.

ஆனால், அதுவே நமக்கு ஒரு நரக உலகமாக மாறி விடக் கூடாது. குழந்தைகள் என்றால் 15 வயதிற்கும் குறைந்த வயதுடையவர்கள். 16 வயதிற்கு மேல் போனால் வயதிற்கு வந்தவர்கள்.

சேகரன் சுபரத்தினம்  segaran_vasan@gmail.com
கே: பேஸ்புக் போல வேறு இணையத் தளங்கள் உள்ளனவா?
ப: ஒரு முப்பது நாற்பது சமூகத் தளங்கள் உள்ளன. அவற்றில் சில பிரபலமான தளங்களின் பெயர்களைத் தருகிறேன். Bebo, Flickr, Orkut, Mosoto, Wallop, Mashable, Myspace, Linkedin,  Youtube,  Tagged,  Xing,  Living Social போன்றவை நம்பகரமான தளங்கள். இவற்றில் என்னுடைய தேர்வு : ஆர்க்குட், யூ டியுப்.


ராஜ் பாய்  rajboy42@yahoo.com
கே: Microsoft Excel இல் IF  எனும் கட்டளையை எப்படி பயன்படுத்துவது? பலருக்கு சரியாகப் புரியவில்லை. அதைப் பயன்படுத்துவது சிரமம் என்று சிலர் சொல்கிறார்கள்.

ப: பொதுவாக, Microsoft Office இல் Excel என்பது மிகவும்  பயன் தரும் நிரலி ஆகும். ஆனால் இந்த எக்சலில் நூற்றுக்கணக்கான Functions எனும் செயலாற்றிகள் உள்ளன.

இந்தச் செயலாற்றிகளைச் சூத்திரங்கள் என்று அழைக்கலாம். இந்தச் சூத்திரங்களை முழுமையாகப் பயன்படுத்துபவர்கள் மிக மிகக் குறைவு. எக்சலை வைத்துக் கொண்டு ஒரு சின்ன மினிமார்க்கெட்டின் கணக்கு வழக்குகளைச் சரியாகச் செய்து விட முடியும்.

IF
 எனும் கட்டளை எப்படி செயல்படுகிறது என்று பார்ப்போம்.

IF நிபந்தனையின் அமைப்பு : (Syntax of Ifcondition)

=if(condition, value if true, value if false)

Condition என்பதில் நமக்குத் தேவையான கட்டளைகளைக் கொடுக்க வேண்டும்.

நாம் கொடுக்கும் கட்டளை சரியாக இருந்தால் சரியான மதிப்பு வரும். தவறாக இருந்தால் தவறான மதிப்பு வரும்.

ஒரு சின்ன எடுத்துக்காட்டு. ஒருவருடைய வயது 17 க்கும் மேல் இருந்தால் அவர் மலேசியாவில் கார் ஓட்டத் தகுதி பெற்றவர். இல்லை என்றால் கார் ஓட்டத் தகுதி இல்லாதவர். இதை எப்படி எக்சலில் கட்டளை பிறபிப்பது.

=if(age>18,"Eligible to drive","No eligible")
எக்சலில் பயன்படுத்தும் முறை : =if(A1>18,"Eligible to drive", "No eligible")

2. சரி, ஓர் அடகுக் கடையில் வட்டி வசூல் செய்யப் படுவதை எப்படி எக்சலில் குறிப்பிடுவது. பொதுவாக, மலேசியாவில் 100 ரிங்கிட்டிற்கு மேல் இருந்தால் இரண்டு விழுக்காடு வட்டி.

100 ரிங்கிட்டிற்கு கீழ் இருந்தால் 2.5 விழுக்காடு வட்டி. இது ஓர் எடுத்துக்காட்டு தான்.  இதை எப்படி IF கட்டளையில் செயல்படுத்துவது

=if(amount>100, amount*2, amount*2.5)
எக்சலில் பயன்படுத்தும் முறை : =if(A1>100,A1*2,A1*2.5)
அடுத்து அடுத்து வரும் பகுதிகளில் இதைப் பற்றி விளக்கமாகச் சொல்கிறேன். இப்போதைக்கு இது போதும்.

18 செப்டம்பர் 2011

கணினியும் நீங்களும் – 113

கணினி வாசகி, (பெயர் வெளியிடப்படவில்லை)
கே: என் வயது 17. நான் ஐந்தாம் படிவம் படிக்கிறேன். தயவு செய்து என் பெயரை போட வேண்டாம். என் கேள்வி இது தான். வயதிற்கு வந்த பிள்ளை நான். இண்டர்நெட்டைப் பயன் படுத்தும் போது அடிக்கடி என் பெற்றோர் வந்து மோப்பம் பிடிக்கிறார்கள். பள்ளிப் பாடம் சம்பந்தமா தகவல் தேடும் போது பெற்றோர் வந்து எட்டி எட்டிப் பார்க்கிறார்கள். அது சரியா? அது நன்றாக இல்லை. அவர்கள் செய்வது எனக்கு அவமரியாதையாக, அவமானமாக பெரிய தொல்லையாக இருக்கிறது. என் தோழிகளின் பெற்றோர்கள் அப்படி செய்வதில்லை. என்னால் ஒழுங்காகப் பாடம் செய்ய முடியவில்லை. நீங்கள் அந்த மாதிரி நோட்டம் பார்ப்பீர்களா? வயதுக்கு வந்த பிள்ளைகளுக்கு இண்டர்நெட் பார்க்க உரிமை இல்லையா? அவர்களுக்கும் தனிப்பட்ட உரிமை இருக்கிறது என்பது அவர்களுக்கு தெரியாதா?


ப: யாருக்கு உரிமை இருக்கிறதா இல்லையா என்று கேட்கிறீர்கள். உங்களுக்கா இல்லை அப்பா அம்மாவுக்கா. நாம் சோறு தானே சாப்பிடுகிறோம். நன்றாகக் கேளுங்கள். அரிசி மாவையும் ஆட்டா மாவையும் அப்படியே உருட்டி உருட்டி சாப்பிடவில்லையே.

சோறு ஆக்குவதற்கு அரிசியைத் தேடுவது அப்பா. அந்த அரிசியை ஆக்கிப் போடுவது அம்மா. அதைச் சாப்பிடுவதில் கூட ஒரு பெரிய உரிமைப் போராட்டமா?

இப்படிப் பட்ட ஒரு கேள்வியைக் கேட்க உங்களுக்கு  உரிமை இருக்கும் போது, பத்து மாசம் இடுப்பு உடைய சுமந்தாளே அவளுக்கு எப்படி இருக்கும்? நாயா பேயா அலைஞ்சு நாலு காசு கொண்டு வந்து கொடுக்கிறாரே அப்பா, அவருக்கு எப்படி இருக்கும்?

பயப் பட வேண்டாம். உங்கள் பெயரை வெளியிடவில்லை. அதற்கு முன் இந்த மாதிரி ஒரு கேள்வியைக் கேட்பதற்கு எப்படி மனசு வந்தது.   

நீங்கள் கம்பியூட்டரின் முன் உட்கார்ந்து கொண்டு படம் பார்க்கிறீர்களா இல்லை பாடம் செய்கிறீர்களா என்று பெற்றோர் வந்து பார்ப்பதில் என்ன தாயே தப்பு இருக்கிறது.

அது என்ன எட்டி எட்டி பார்க்கிறார்கள். பக்கத்தில் உட்கார்ந்தே பார்க்கட்டுமே. என்ன குறைஞ்சு விடப் போகுது.

கணினியை வாங்கிக் கொடுத்து அதில் இணையத்தையும் போட்டுக் கொடுத்தவர்களும் அவர்கள். அவர்களுக்கு இல்லாத ஒன்றா. நன்றிகூட சொல்ல வேண்டாம். சந்தோஷப் படுங்கள். அதுவே போதும் அதுவே அவர்களுக்கு நீங்கள் செய்யும்  பெரிய மரியாதை.

உங்களுக்கு ஒன்று தெரியுமா. இப்போது எல்லாம் இணையத்தில் ரொம்ப பேய் பிசாசுகள் தலை கால் இல்லாமல் அலைகின்றனவாம். அதைப் பார்த்து நீங்கள் பயந்துவிடக் கூடாது என்பதற்காக அவர்கள் வந்து எட்டி எட்டிப் பார்க்கலாம்.

அதற்காக அவர்களைப் போய் மோப்பம் பிடிக்கிறார்கள் என்று சொல்வதில் நியாயம் இருக்கிறதா? சொல்லுங்கள் தாயே.

நாம் வளர்க்கும் ஒரு விலங்கு இனத்தை வேண்டும் என்றால் மோப்பம் பிடிக்கிறது என்று சொல்லலாம். அதற்காகப்  பெற்ற ஜீவன்களைப் போய் மோப்பம் பிடிக்கிறார்கள் என்று சொல்வது பெரிய பாவம் தாயே.

சரி, அவர்கள் மோப்பம் பிடிக்கிறார்கள் என்றால் நீங்கள் மட்டும் என்னவாம். உங்களை எதில் கொண்டு போய் சேர்ப்பது? தயவு செய்து படுத்துக் கொண்டு துப்ப வேண்டாம். அது உங்களுக்குத் தான் ரொம்ப ரொம்ப அசிங்கம்.

நீங்கள் படித்து முடிக்கும் வரை அப்பா அம்மாவுக்கு உங்களை எந்த நேரத்திலும் கண்டிக்க எல்லா உரிமைகளும் உண்டு. இதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். அவர்களுடைய உரிமைகளைப் பற்றி கேட்பதற்கு நமக்கு முதலில் யோக்கியதை இருக்கிறதா.

படிக்கிற வயதில் படியுங்கள். ஒழுங்காகப் படித்து முடியுங்கள். அதுவரை அப்பா அம்மா பேச்சைக் கேளுங்கள். எந்த அப்பா அம்மாவும் தன் பிள்ளை கெட்டுப் போவதைப் பார்க்க விரும்ப மாட்டார்கள்.  இது சத்தியமான உண்மை.

மோப்பம் பிடிக்கிறார்கள். எட்டி எட்டிப் பார்க்கிறார்கள் என்று சொல்வதே பாவம். அந்தப் பாவத்தைச் சுமக்க வேண்டாம்.

இனிமேல் அவர்கள் கணினி பக்கம் வந்தால் அவர்களைக் கூப்பிட்டு பக்கத்தில் உட்கார வைத்து நாலு வார்த்தை அன்பாகப் பேசுங்கள். இணையத்தில் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை அவர்களிடம் காட்டுங்கள். உங்கள் மீது அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படும். அப்புறம் அந்தப் பக்கம் வரவே மாட்டார்கள்.


செலாயாங் சூரியா  <selayangsuria@gmail.com>
கே: உங்களுடைய புதிய கைப்பேசி எண்களைத் தருவதாகச் சொன்னீர்கள். தயவு செய்து கொடுத்து உதவுங்கள் சார். உங்களிடம் நிறைய விஷயம் இருக்கிறது. பெற்றுக் கொள்ள ஆசைப் படுகிறோம். வாழ்த்துகள்.

ப: செலாயாங் சூரியா  எப்படி இருக்கிறீர்கள். வாரத்திற்கு இரண்டு முறையாவது மறக்காமல் அழைத்து பேசிக் கொண்டு இருப்பீர்கள். கொஞ்ச நாளைக்கு கைப்பேசி தொடர்புகள் இல்லாமல் இருக்கட்டுமே என்று நினைத்தேன். ஆனால், முடியவில்லை. திங்கள் கிழமைகளில் நண்பனில் வெளிவரும் மாணவர் சோலையில் இருந்து  கைப்பேசி எண்களைத் தேடிப் பிடித்து கணினி பிரச்னைகளைத் தீர்க்கச் சொல்கிறீர்கள்.

வேறு வழி இல்லை. சொல்லி விடுகிறேன் செலாயாங். 010-3913225 என்பது தான் புதிய கைப்பேசி எண்கள். அது சரி. நிறைய விஷயம் இருக்கிறது என்று வாழ்த்துகிறீர்கள். என்ன... பண விஷயம் இல்லையே! இல்லை என்றால் ரொம்ப சந்தோஷம்! ஏன் என்றால் இங்கேயும் கொஞ்சம் தட்டுப்பாடு தான்.

ராயப்பன் சவரிமுத்து  robsriaray@yahoo.com.my
கே: நான் Firefox உலவியைப் பயன் படுத்துகிறேன். இணையப் பக்கங்கள் ஆமையை விட மெதுவாக வருகின்றன.  இண்டர்நெட் இணைப்பு நன்றாக இருக்கிறது. இணையப் பக்கங்கள் வேகமாக வரச் செய்வதற்கு வழி இருக்கிறதா அண்ணே?


ப: இருக்கிறது தம்பி. அதாவது ஆமையை முயல் மாதிரி வேகமாக ஓடச் செய்ய வேண்டும். அதற்கு வழி இருக்கிறதா என்று கேட்கிறீர்கள். உங்களுக்கு இல்லாததா தம்பி. பயர் பாக்ஸ் உலவியை வேகப் படுத்த ஒரு சின்ன இலவச நிரலி இருக்கிறது.

இந்த நிரலி, நம்முடைய இணைய இணைப்பிற்கு ஏற்றவாறு மாற்றம் செய்து உலவியின் வேகத்தை அதிகப்படுத்தும். அந்த நிரலியின் பெயர் Firefox Booster.

இதை http://www.softpedia.com/progDownload/Firefox-Booster-Download-169854.html எனும் இடத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கணினியில் பதிப்பு செய்யுங்கள். பதிப்பு செய்யும் போது 512 கே.பிக்கும் மேல் என்பதைச் சொடுக்கி விடவும். இது ஓர் எளிமையான நிரலி. இன்னும் ஒன்று. பதிப்பு செய்யும் போது, அதாவது இண்ஸ்டால் செய்யும் போது, பயர் பாக்ஸ் உலவியை அடைத்து வையுங்கள். உலவியின் வேகம் அதிகரித்து இருந்தால் எனக்கு ஓர் அழைப்பு அல்லது ஒரு எஸ்.எம்.எஸ் செய்து நன்றி சொல்லுங்கள். அது போதும். ஆனால், அதே பழைய ஆமை வேகம் என்றால் தம்பி பிளீஸ்... புரியும் என்று நினைக்கிறேன்.