11 மார்ச் 2012

கணினியும் நீங்களும் – 132


எஸ்.ரகுநாதன் ragun@streamyx.com
கே: என்னுடைய கணினியில் தமிழில் டைப் செய்வது எப்படி? எங்கே இருந்து தமிழ் நிரலி இலவசமாகக் கிடைக்கும்?





ப: உங்களுடைய தமிழ் ஆர்வத்தைப் பாராட்டுகிறேன். NHM எனும் நிரலி இலவசமாகக் கிடைக்கிறது. அந்த நிரலியைப் பதிவிறக்கம் செய்த பிறகு உங்கள் கணினியில் அதைப் பதிக்க வேண்டும். பதித்தல் என்றால் Install செய்தல். http://software.nhm.in/products/writer எனும் இடத்தில் அந்த நிரலி கிடைக்கும். Download என்பதைச் சொடுக்கி பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

NHM Writer செயலியைப்  பதிவு எனும் Install செய்த பின்னர்  ஒரு மணியின் சின்னம் ஆகக் கீழே உள்ள பணிப்பட்டையில் தோன்றும். அதை  வலது சொடுக்கு செய்யுங்கள். Enable windows Text Services என்பதைச் சொடுக்கி விடுங்கள். அடுத்து, Start automatically When Starting Windows என்பதையும் சொடுக்கி விடுங்கள்.

அந்த வகையில் கணினி தொடங்கும் போதே என்.எச்.எம். செயலியும் தொடங்கும். பணிப்பட்டையில் தோன்றும் மணிச்சின்னத்தை இடது சொடுக்கு செய்யவும். அதில்
Tamil / Phonetic / Unicode என்பதை மட்டும் சரி என்று சொடுக்கி விடுங்கள். மற்றவற்றை நீக்கி விடுங்கள். Alt எனும் பொத்தானையும் 2 எனும் பொத்தானையும் ஒரே சமயத்தில் தட்டி விடுங்கள். மணிச்சின்னம் தங்க நிறத்திற்கு மாறும். அப்ப்டி என்றால் தமிழில் தட்டச்சு செய்யலாம் என்று அர்த்தம். மணிச்சின்னம் வெள்ளி நிறத்தில் இருந்தால் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யலாம் என்று அர்த்தம். ஏதும் பிரச்னை என்றால் எனக்கு அழையுங்கள். மலேசியாவில் உள்ள தமிழர்களின் வீட்டில் இருக்கும் கணினிகளில் தமிழ் தட்டச்சு இருக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசைகள்.



குமாரி. லோகாஷினி நாயுடு, பிரிக்பீல்ட்ஸ், கோலாலம்பூர்
கே: என் தாயாருக்கு வயது 59. அண்மையில்தான் கணினியில் டைப் செய்ய கற்று வருகிறார். நானும் என் தங்கையும் சொல்லித் தருகிறோம். அவருக்கு கண் பார்வை கொஞ்சம் குறைவு. எழுத்துகளை உற்று உற்றுப் பார்க்கிறார். கண் பார்வை மேலும் பாதித்து விடுமோ என்று பயப்படுகிறோம். ஆனால், அவர் கவலைப்படுவதாக இல்லை. கணினியின் முன்னாலேயே உட்கார்ந்து கொள்கிறார். திரையில் உள்ளவற்றை பெரிதுப்படுத்திப் பார்க்க குறுக்கவழி இருக்கிறதா?




ப: உங்கள் அம்மாவுக்கு வயது 59. இந்த வயதில் கணினி பற்றி படிக்க ஆசைப்படுகிறார். அவரைப் பாராட்ட வேண்டும். எதிர்காலத்தில் உலகத்தைக் கணினிதான் கட்டி ஆளப் போகிறது என்று நான் பல ஆண்டுகளாகச் சொல்லி வருகிறேன். கணினியைப் படியுங்கள், படியுங்கள் என்று சந்தனம், ஜவ்வது பூசுகிறேன். சிலர் கேட்கிறார்கள். பலர் முறைக்கிறார்கள்.

அது எல்லாம் அவர்களுக்கு முக்கியம் இல்லை. ஜெயிக்கப் போவது யாரு? அசத்தப் போவது யாரு? அது ஒரு கோடியின் குரல் என்று ஆளாளுக்குச் சொல்லிவிட்டுப் போகிறார்கள்.


50, 60 வயதுகளைத் தாண்டியவர்களுக்கு கண் பார்வையில் தொய்வு நிலை ஏற்படுவது இயற்கை. இதில் என்னைப் போன்றவர்கள் கணினியைத் தொடர்ந்தால் போல பயன்படுத்தினால் கண் பார்வை கண்டிப்பாக பாதிப்படையும். மருத்துவரைப் பார்த்து கண்ணாடியின் பார்வைத் திறனைக் கூட்டிக் கொள்ள வேண்டும்.

கணினியைப் பயன்படுத்துபவர்களுக்கு வேறு ஓர் இலகு முறை உள்ளது. கணினித்திரையில் உள்ளவற்றைப் பெரிதுபடுத்திப் பார்க்க Control பட்டனை அழுத்திக் கொண்டு + பட்டனையும் அழுத்துங்கள். திரையில் உள்ளவை பெரிதாகும். அதே போல  சிறிது படுத்த Control பட்டனை அழுத்திக் கொண்டு - பட்டனை அழுத்துங்கள். அல்லது Control பட்டனை அழுத்திக் கொண்டே சுழலியில் உள்ள சக்கரத்தை முன்பக்கம் நகர்த்தினால் திரை பெரிதாகும். Control பட்டனை அழுத்தியவாறு சுழலியின் சக்கரத்தை பின்பக்கம் நகர்த்தினால் திரை சிறியதாகும். 




இது ஒரு தற்காலிக நிவாரணமே. மருத்துவரைப் பார்த்து அவருடைய கருத்துகளையும் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

19 பிப்ரவரி 2012

கணினியும் நீங்களும் - 127

ஜோ கிம்  jokim69@yahoo.com.my
கே: என்னுடைய கணினியைத் திறக்க முடியவில்லை. கணினியைத் திறந்ததும் எப்போதும் வரும் சின்ன விளக்கு வெளிச்சம் வரவில்லை. என்ன பிரச்னை?

ப: என் கணக்குப் படி உங்களுடைய மின் வழங்கி கெட்டுப் போயிருக்கலாம். மின் வழங்கி வேலை செய்தால் கணினிக்கு கண்டிப்பாக வெளிச்சம் வரும். அந்த வெளிச்சம் வரவில்லை என்பதால் Power Supply எனும் மின் வழங்கியில் பிரச்னை என்பது தெளி வாகிறது. நீங்கள் ஈப்போ பகுதியில் இருந்தால் பரவாயில்லை. கணினியைப் பழுது பார்த்து கொடுத்து விடுவேன். அருகில் உள்ள கணினி பழுது பார்க்கும் கடையில் கேட்டுப் பாருங்கள். விவரம் சொல்வார்கள்.

எம்.வனஜா  vanajahm@gmail.com
கே: என் பெயர் வனஜா. வீட்டில் இருந்து வேலை செய்ய விரும்புகிறேன். சில இடங்களில் விண்ணப்பம் செய்தேன். ஆனால், அவர்களுடைய இணையத்தளம் அல்லது அவர்கள் எனக்கு அனுப்பிய மின்னஞ்சல்கள் உண்மையானதா இல்லை போலியானதா என்று எப்படி கண்டுபிடிப்பது?

மின்னஞ்சல்களின் உண்மைத் தனத்தைக் கண்டுபிடிப்பது சற்று சிரமம்தான். இருந்தாலும் கீழே காணும் இணையத் தளங்களுக்குப் போய்ப் பாருங்கள். தேவையான தகவல்கள் கிடைக்கும். எந்தக் காரணத்தைக் கொண்டும் கட்டணம் எதையும் முதலில் அனுப்ப வேண்டாம்.

இணையத் தளங்களின் அசல் தன்மையை முதலில் உறுதி செய்து கொள்ளுங்கள். வேலைத் தேடி தருகிறேன் ஆளைத் தேடித் தருகிறேன் என்று சொல்லும் ஜெகதாலப் புரட்டர்கள் எல்லாம் இணையத்தில் உள்ளனர். கவனம். கவனம்.

http://www.snopes.com/
http://www.thescambaiter.com/
http://www.hoax-slayer.com/


வெ.கலைப்பித்தன், தாமான் மகாவலி, குவாந்தான்
கே: உம்முடைய கணினி கேள்வி-பதில்களில் நையாண்டியும் நக்கலும் கலந்து ஏன் எழுதித் தொலைக்கிறீர். நிறுத்தித் தொலைக்கவும். ரொம்ப படித்து விட்ட மேனரிஷம் வேண்டாம்?

ப: சொன்னதற்கு நன்றி. அதற்காக ஒரு கதை சொல்கிறேன். சில ஆடுகளும் மாடுகளும் ஒரு தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்தன. அதில் ஓர் ஆடு மட்டும் மேயாமல் விசனமாக இருந்தது. ஏன் என்று பக்கத்தில் உள்ள மாடு கேட்டது.

உலகத்திலேயே மிக மோசமான காய் எதுவாக இருக்கும் என்று ரொம்ப நாளாய் ஆராய்ச்சி செய்கிறேன். சரியான பதில் தெரியவில்லை என்று ஆடு சொன்னது. உடனே மாடு சொன்னது 'அட வீணாப் போன ஆடே... இதுகூடவா தெரியவில்லை. உலகத்திலேயே மிக மோசமான காய் எது தெரியுமா. அதான் அந்த கத்தரிக்காய்' என்றது. ஏன் என்று ஆடு கேட்டது.

'கடவுளுக்கே கத்திரிக்காயைப் பிடிக்கவில்லை. அதனால்தான் அதன் தலையில் ஆணியை அடித்து வைத்து இங்கே அனுப்பி இருக்கிறார்' என்று கத்திரிக்காயின் தலையில் இருந்த காம்பைக் காட்டியதாம் மாடு. தெரியாதைத் தெரிந்த மாதிரி சொல்வது தப்பு. தெரிந்தவற்றை மற்றவர்களுக்கு நகைச்சுவையாகச் சொல்வதில் நன்மை இருக்கிறது. எதார்த்தமாக எழுதுவதை நக்கல் என்று சொல்வது உங்கள் கருத்து. தயிர் சாதத்தில் தொட்டுக் கொள்ள ஊறுகாய் இருப்பது நல்லது என்று சொல்வது என் கருத்து.

எஸ்.பி.பாலக்கிருஷ்னன்,  oum9100@yahoo.com.sg
கே: விண்டோஸ் 7 வந்துவிட்டது. கணினி உலகமே அமர்க்களமாக இருக்கிறது. உங்கள் கருத்து என்ன சார்?

ப: ஆத்துக்கு வந்தவள் சோத்துக்கு சாயம் அடிக்கிறாள் என்பது மாமியார்களின் காலா காலத்துப் பல்லவி. அதனால் அனுபல்லவி என்ன என்று தெரியாது. என் கருத்தைச்   சொல்வதால் சகோதரர் பில் கேட்ஸ் நிச்சயமாகச் சந்தோஷப் பட மாட்டார்.

இதுவரை வந்த விண்டோஸ் செயலிகளில் மிக மிக அருமையானது பழைய விண்டோஸ் XPதான். அந்தச் செயலியை இலகுவாகப் பயன் படுத்தலாம். அதைச் செயல் படுத்த அதிக செலவும் இல்லை. எதையாவது செய்து எப்படியாவது காசைப் பார்க்க வேண்டும் என்பது பில் கேட்ஸன் இரத்தத்தில் ஊறிய இலட்சியம். அதனால் விண்டோஸ் விஸ்த்தாவை உருவாக்கினார். தொட்டதிற்கு எல்லாம் சிணுங்கிக் கொள்ளும் விண்டோஸ் விஸ்த்தாவினால் மைக்ராசாப்ட் நிறுவனத்திற்கு நல்ல பெயரை விட கெட்ட பெயர்தான் அதிகம்.

இப்போது விண்டோஸ் 7ஐ கொண்டு வந்திருக்கிறார். கனடாவில் உள்ள என் நண்பர்கள் பரவாயில்லை என்று சொல்கிறார்கள். கஞ்சி சூடாக இருக்கிறது. ஆற விட்டுப் பார்ப்போம். இருபது முப்பதாயிரம் தமிழர்களை வைத்து விண்டோஸ் 7ஐ சகோதரர் பில் கேட்ஸ் உருவாக்கி இருக்கிறார். 140 தமிழர்களைக் கோடீஸ்வரர்களாக ஆக்கியும் விட்டிருக்கிறார். அதுவரை அவரைப் பாராட்டுவோம்.


மணிக்கண்டன் வேணுகோபால்  manikandan@gmail.com
கே: இணையத்தின் மூலமாக கல்யாணம் செய்து கொள்ள முடியும் என்கிறார்களே. எப்படி? எந்த இடத்தில் தேடினால் சரியான ஜோடி கிடைக்கும்? அதற்கு பணம் கட்ட வேண்டுமா?

ப: நீங்கள் கேட்பதைப் பார்த்தால் ரொம்ப அவசரம் போல தெரிகிறது.  அவசரம் வேண்டாம். இணையம் இருக்கிறதே அது ஒரு பெரிய கடல். அதில் அழகான குட்டி குட்டி மீன்களும் இருக்கின்றன. ஆளை முழுங்கும் அட்டகாசமான சுரா மீன்களும் இருக்கின்றன. அங்கே நல்லதும் இருக்கிறது. கெட்டதும் இருக்கிறது.

அப்பா அம்மாவைத் தவிர எல்லாவற்றையும் இணையத்தில் வாங்கலாம். விற்கலாம். என்ன மாதிரியான மாப்பிள்ளை வேண்டும். என்ன மாதிரியான பெண் வேண்டும்.  கல்யாணத் தரகர் வேலை செய்யும் இணையத் தளங்கள் இலட்சக் கணக்கில் உள்ளன. Google தேடல் இயந்திரத்திற்குப் போய் Indian Matrimony என்று தட்டிப் பாருங்கள். நிறைய இணையத் தளங்கள் வரும். நல்லதாகப் பார்த்து ஒன்றைத் தேர்வு செய்து கொள்ளுங்கள்.

சும்மா உங்கள் பெயர் முகவரியைக் கொடுத்தால் போதும். ஆனால், எல்லாம் உண்மையாக இருக்குமா என்பது தான் கேள்விக்குறி. உங்களைக் கல்யாணம் செய்கிறார்களா இல்லை உங்கள் பணத்தைக் கல்யாணம் செய்கிறார்களா என்பது பிறகு தெரிய வரும்.

இந்த விஷயத்தில் ஏமாந்தவர்களும் இருக்கிறார்கள். ஏமாற்றிய முதலைகளும் இருக்கிறார்கள். இணையம் மூலமாக காதலித்து கல்யாணம் செய்து நன்றாகக் குடும்பம் நடத்துபவர்களும் இருக்கிறார்கள். கல்யாணம் செய்து மூன்றே நாட்களில் விவாகரத்து செய்து கொண்டவர்களும் இருக்கிறார்கள். எதையும் நன்றாக யோசித்துச் செய்யுங்கள். திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர்.

இல.சதாசிவம், கிளன்மேரி, பத்து தீகா
கே: என் வயது 45. நான் கோலாலம்பூர்-சிங்கப்பூர் விரைவு பஸ் ஓட்டுகிறேன். கணினியைப் பயன் படுத்தத் தெரியாது. என் பிள்ளைகளுக்குத் தெரியும். அவர்களிடம் இருந்து கற்றுக் கொள்ள எனக்கு வெட்கமாக இருக்கிறது. நீங்கள் எனக்கு சொல்லித் தர முடியுமா? ஒரு வாரத்திற்கு லீவு போட்டு வருகிறேன். எவ்வளவு சம்பளம் கேட்டாலும் தருகிறேன். அய்யா உதவி செய்யுங்கள். உங்களை மலை போல நினைக்கிறேன்.

ப: இதில் வெட்கப் படுவதற்கு ஒன்றும் இல்லை. உங்கள் பிள்ளைகளிடம் உண்மையைச் சொல்லுங்கள். உங்கள் ஆர்வத்தைச் சொல்லுங்கள். நிச்சயம் அவர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள். ஒரு தகப்பனாரின் நியாயமான ஆசைகளைப் பிள்ளைகள் நிறைவெற்றி வைப்பார்கள். கணினி பயிற்சிகள் எதையும் நான் கொடுப்பது இல்லை. அதனால் உங்களுக்கு உதவி செய்ய முடியவில்லை. மன்னிக்கவும்.

சி.ஜெயபாலன், சுபாங் ஜெயா
கே: Corel Draw X4 எனும் வரைகலை நிரலியை என்ன விலைக்கு விற்கிறார்கள்?

ப: கோரல் டிரா எனும் வரைகலை நிரலி ஓர் அற்புதமான நிரலி. சகல வரைகலை அம்சங்களும் அதில் இருக்கிறது. அதன் விலை RM 1639. ஒரு கணினியை விட இந்த நிரலியின் விலை அதிகம். அதற்கு தகுந்த மாதிரி அதன் சிறப்புகள் அமைகின்றன. தலைநகர் இம்பி பிலாசா, லாவ் யாட் போன்ற இடங்களில் கிடைக்கும்.

12 பிப்ரவரி 2012

ராசம்மா பூபாலன் - ஜான்சி ராணி போராளி

ராசம்மா பூபாலன், (பிறப்பு: 1927) என்பவர் மலேசிய விடுதலைப் போராளி, மலேசியப் பெண்ணுரிமை போராட்டவாதி, ஜான்சி ராணி படைப் போராளி, மலேசிய சமூக சேவகி, கல்வியாளர். 1943-இல் நேதாஜி தொடங்கிய இந்திய தேசிய ராணுவத்தின் ஜான்சி ராணி படையில் இணைந்து இரண்டாம் உலகப் போரின் பர்மா போரில் சேவை செய்தவர்.

ராசம்மா பூபாலன் ‘தி ஸ்டார்’ நாளிதழுக்கு பேட்டி அளிக்கிறார்.

இந்திய-மியான்மார் எல்லையில் பிரித்தானியர்களின் விமானத் தாக்குதல்களில் இருந்து உயிர் பிழைத்து வந்தவர். ராசம்மா பூபாலன் மலேசிய ஆசிரியைகளுக்காக ஒரு தேசிய சங்கத்தை உருவாக்கி, அவர்களின் சம ஊதியத்துக்காக போராட்டம் நடத்தி வெற்றியும் பெற்றவர்.பெற்றோருக்கு அடங்கிய பிள்ளை

ராசம்மா பூபாலன், நடுத்தர வர்க்க இலங்கைத் தமிழர் பாரம்பரியக் குடும்பத்தில் பிறந்தவர். ஓர் அடக்கமான மிதவாதக் குடும்பப் பழக்கவழக்கங்களுக்கு ஏற்ப பெற்றோருக்கு அடங்கிய பிள்ளையாக தன் இளவயதுக் கல்வியைத் தொடர்ந்தார்.


மலேசியாவில் ஆசிரியைகளுக்கு ஒரு சங்கம் தேவை எனும் மேடைப்பேச்சு.

பிற மலேசியர்களைப் போலவே சப்பானியர் காலத்து அடக்கு முறைகளினால் ராசம்மா பூபாலனின் குடும்பமும் பாதிக்கப்பட்டது. 1942இல் இந்திய தேசிய இயக்கம் விடுதலை கோரி எழுந்தபோது, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உலக இந்தியர்கள் அனைவரின் மனங்களிலும் இந்திய விடுதலைப் போராட்ட உணர்வுகளைக் கொந்தளிக்கச் செய்தார்.

ஜான்சி ராணிப் படையில்

அந்த உணர்வுகள் ஈப்போவில் ஒரு சாதாரண நடுத்தரக் குடும்பத்தில் வாழ்ந்து கொண்டிருந்த இரண்டு இளம் சகோதரிகளையும் பாதித்தன. அந்தப் பாதிப்புத் தன்மையைத் தாளமுடியாமல் ராசம்மாவும் அவருடைய சகோதரி பொன்னம்மாவும் ஜான்சி ராணிப் படையில் சேர்ந்தனர். பயிற்சிகளையும் பெற்றனர்.


மலேசிய மைந்தர்கள் புகைப்பட விழாவில் ராசம்மா பூபாலன் தன்னைப் பற்றிய படக்காட்சிக்கு விளக்கம் கொடுக்கிறார்.

அடிப்படைப் பயிற்சியை மலாயாவிலேயே முடித்தனர். பின்னர், இந்திய விடுதலைக்காக பிரித்தானிய இராணுவத்துக்கு எதிராகப் போரிட அவர்கள் ரங்கூனுக்கு தொடருந்து மார்க்கமாக அனுப்பப்பட்டனர். சயாம் மரண ரயில்வேயின் வழியாகப் பிரயாணம் செய்த அனுபவத்தை தனது வாழ்க்கை வரலாற்று நூலில் ராசம்மா பூபாலன் பதிவு செய்து இருக்கிறார்.

அந்தப் பிரயாணத்தின் இறுதியில் ரங்கூனை அடைந்தனர். அங்கு அடர்ந்த காடுகளின் மத்தியில் கூடாரம் அமைத்து இந்திய எல்லைக்குச் செல்ல தயாராக இருந்தனர்.

மியான்மார் காடுகளில் இன்னல்கள்

ஆனால் பிரித்தானியரின் தாக்குதல்களில் இந்திய தேசிய ராணுவம் பல சேதங்களை அடைந்தது. ஜான்சி ராணிப் படையினரால் முன்னேற முடியவில்லை. அதன் பின்னர் ஒரு சில வாரங்கள் அங்கேயே தங்கினர். மியான்மார் காடுகளில் பல வேதனைகளை அவர் எதிர்நோக்கினார். பல இன்னல்களுக்கு பிறகு மலாயாவுக்கே திருப்பி அனுப்பப்பட்டார்.


ராசம்மா பூபாலன் மலேசியக் கோபுரத் தலைவர்களில் ஒருவர்.

ஜான்சி ராணி படையில் கிடைத்த அனுபவங்கள் ராசம்மாவின் பிற்கால வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தன. இரண்டாம் உலகப் போரில் சப்பானியர்கள் தோல்வியுற்றனர். மலாயாவிலிருந்து வெளியேறினர். பிரித்தானிய ஆட்சியில் வழக்கநிலை வந்தது. பிறகு ராசம்மா தனது இடைநிலைக் கல்வியைத் தொடர்ந்தார்.

கல்வி

1955ஆம் ஆண்டு மலாயாப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து வரலாற்றுத் துறையில் பட்டமும் பெற்றார். அப்போது மலாயாப் பல்கலைக்கழகம் சிஙகப்பூரில் இயங்கி வந்தது. பினாங்கு மெதடிஸ்ட் பள்ளியில் ஆசிரியர் பணியில் நியமிக்கப்பட்டார். ஆசிரியர் பணியில் படிப்படியாக வளர்ச்சி அடைந்து கோலாலம்பூர் மெதடிஸ்ட் ஆங்கிலப் பள்ளியின் தலைமை ஆசிரியையாக பதவி உயர்வு பெற்றார்.

பெண்களுக்குச் சம சம்பளப் போராட்டம்

மலேசியக் கல்வித் துறையில் ஆண் ஆசிரியர்களுக்கும் பெண் ஆசிரியைகளுக்கும் ஊதியம் சமமாக இல்லை என்பது குறித்து ராசம்மா ஆசிரியர் சங்கங்களின் மூலமாகக் கேள்விகள் எழுப்பினார். நீண்ட காலமாகியும் அதற்குச் சரியான தீர்வு கிடைக்கவில்லை. ஆகவே ராசம்மா ஆசிரியைகளுக்கான தேசிய சங்கம் ஒன்றினை அமைத்தார்.


மலேசியாவுக்கான இந்தியத் தூதரக நிகழ்ச்சியில் மலேசிய ஆள்பல தொழிலாளர் அமைச்சர் டத்தோ எஸ்.சுப்பிரமணியன் அவர்களுடன்.

நாடு முழுவதும் சுற்றி அதற்கான ஆதரவைத் திரட்டினார். சில ஆண்டுகள் தீவிரமான முயற்சிக்குப் பிறகு ஆசிரியர்களுக்கும் ஆசிரியைகளுக்கும் சரிசமமான சம்பளம் கொடுக்க மலேசிய அரசு ஒப்புக்கொண்டது.

கோலாலம்பூர் மெதடிஸ்ட் ஆங்கிலப் பள்ளி

ராசம்மாவின் பொது வாழ்க்கையில் இதுவே சிகரம் என்றாலும் தமது பிற்கால வாழ்க்கையில் அவர் வேறு பல துறைகளிலும் தம் கவனத்தைச் செலுத்தி சேவைகள் புரிந்து இருக்கிறார். கோலாலும்பூர் மெதடிஸ்ட் ஆங்கிலப் பள்ளியை மலேசியாவிலேயே தலை சிறந்த பள்ளியாக உருவாக்கிக் காட்டியதும் அவருடைய ஆக்ககரமான செயல்முறைகளில் ஒன்றாகும்.

அது மட்டும் அல்ல. கல்விப் பணியாளர்களின் உலக சம்மேளனத்தில் அவர் செயற்குழு உறுப்பினராகவும் இருந்து இருக்கிறார். 1963இல் ராசம்மாவின் முயற்சியில் மகளிர் சங்கங்களின் தேசிய மன்றம் ஒன்றும் அமைந்தது. அதன்அமைப்புக் குழுவில் தலைவராகப் பொறுப்பேற்றார். பின் சங்கம் பதிவு பெற்ற போது அதன் செயலாளராக பணியாற்றினார்.

வாழ்க்கை வரலாற்று நூல்

சாரணியர் இயக்கத்திலும் அவர் தலைமைப் பொறுப்புக்கள் வகித்து இருகிறார். உலகின் ஏராளமான நாடுகளில் அவர் மலேசியாவைப் பிரதிநிதித்து இருக்கிறார்.


மலேசியாவில் தலை சிறந்த ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ‘தோக்கோ குரு’ எனும் உயரிய ஆசிரிய ஞானி விருது.

ராசம்மா பூபாலன், தம்முடைய 85 வயதிலும், அரச மலேசிய போதைப் பொருள் ஒழிப்பு சங்கத்தில் முக்கிய அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார்.

டத்தோ டாக்டர் ராயிஸ் யாத்திம்

ராசம்மா பூபாலனைப் பற்றி Footprints on The Sands of Time, Rasammah Bhupalan: A Life of Purpose எனும் வாழ்க்கை வரலாற்று நூல் 2006 நவம்பர் 21ஆம் தேதி மலேசியக் கலை கலாசார, சுற்றுலாத்துறை அமைச்சர் டத்தோ டாக்டர் ராயிஸ் யாத்திம் வெளியிட்டார்.

அந்த நூலை மலாயாப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறை பேராசிரியர் டாக்டர் அருணா கோபிநாத் என்பவர் எழுதியுள்ளார். இந்த நூல் வெளியிடப்படுவதற்கான செலவுத் தொகையை தேசிய ஆவணக் காப்பகம், மலேசியக் கலை கலாசார, சுற்றுலாத்துறை அமைச்சு, தேசிய இளம் கிறிஸ்த்துவப் பெண்கள் ஆகிய அமைப்புகள் ஏற்றுக் கொண்டன.

சாதனைகள்
  • மலாயாக் கூட்டரசு பெண் ஆசிரியர்கள் சங்கம்: நிறுவனர், தலைவர் (1960).
  • மலாயா ஆசிரியர் தேசிய காங்கிரஸ்: பொதுச் செயலாளர்.
  • கல்விப் பணியாளர்களின் உலகச் சம்மேளனம்: செயற்குழு உறுப்பினர்.
  • மலேசிய மெதடிஸ்ட் கல்லூரி: நிறுவனர், தலைவர் (1983).
  • மலேசிய அரசாங்கத்தின் ‘ஆசிரிய ஞானி’ (Tokoh Guru) விருது (1986).
  • பெண்கள் சங்கங்களின் தேசிய மன்றம் National Council of Women’s Organisations (NCWO): முதல் பொதுச் செயலாளர்.
  • பெண்களுக்கான சட்ட, மனித உரிமை அமைப்புகளின் தேசிய மன்றம் (National Council of Women’s Organisations’ Law and Human Rights Commission): தலைவர்
  • கோலாலம்பூர் இளம் கிறிஸ்த்துவப் பெண்கள் அமைப்பு: தலைவர்
  • மெதடிஸ்ட் கல்வி அறவாரியம்: நிர்வாகி
மலேசிய விடுதலைப் போராட்டவாதி சித்தி ரகிமாவுடன்.

பொது

மலேசிய தேசிய விடுதலைக்காக ராசம்மா ஆற்றிய அரிய சேவைகள் கவனிக்கப்படவில்லை. அவற்றிற்கு முறையான அங்கீகாரங்கள் வழங்கப்படவில்லை எனும் பரவலான கருத்தும் மலேசியர்களிடையே நிலவி வருகிறது. இதைப்பற்றி மலேசிய ஆங்கில நாளேடு ஒரு செய்தியையும் வெளியிட்டுள்ளது.

2009 ஆகஸ்டு 18ஆம் தேதி மலேசியாவுக்கான இந்தியத் தூதரகம் இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட மலேசிய இந்தியர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பு செய்தது. அந்தக் கௌரவிப்பில் ராசம்மா பூபாலனும் ஒருவராகச் சிறப்பிக்கப்பட்டார்.

(இந்தக் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவில் எழுதப்பட்டுள்ளது)

30 ஜனவரி 2012

கணினியும் நீங்களும் - 126


திருமதி. மணிமேகலை, சிங்கப்பூர்.
கே: இது என் வாழ்க்கை சம்பந்தப்பட்ட Facebook கேள்வி. மலேசியாவில் இருந்து வந்து சிங்கப்பூரில் வேலை செய்யும் போது இங்குள்ள ஒருவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டேன். என் கணவர் ஒரு நிறுவனத்தில் நல்ல பதவியில் இருக்கிறார். எனக்கு மூன்று பிள்ளைகள்.

அண்மையில்
என்னுடைய Facebook ஐப் பார்த்த என் கணவர் எனக்கு நிறைய நண்பர்கள் இருப்பதாக பெருமையாகச் சொன்னார். நானும் சந்தோஷப் பட்டேன். அவருக்கும் Facebook கணக்கு இருக்கிறது. ஆனால், அண்மையில் நான் ஏதாவது சின்ன தப்புகள் செய்தாலும், வழக்கத்திற்கு மாறாக என் மேல் எரிந்து விழுகிறார். தொட்டதற்கு எல்லாம் சந்தேகப் படுகிறார்.

Facebook
இல் இருக்கும் யாராவது ஓர் ஆணின் பெயரைச் சொல்லிஅவனுக்கு உனக்கும் என்ன உறவு?’ என்று கேவலமாக, மனசு நோகும்படி பேசி வேதனைப் படுத்துகிறார். தோழிகளிடம் சொன்னேன். அப்படிப்பட்ட கணவர் தேவை இல்லை. அவரை விவாகரத்து பண்ணச் சொல்கிறார்கள். எனக்கு மனம் வரவில்லை. அவர் மிகவும் நல்லவர் என்று என் மனம் சொல்கிறது. அவர் எனக்கு எந்தக் குறையும் வைக்கவில்லை.

தோழி மூலம் கேள்விபட்ட
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் என்னை மறுமணம் செய்து கொள்ளத் தயாராக இருப்பதாகச் சொல்கிறார்.  அவருக்கு வயது 36. என் வயது 44. இருவருக்கும் எட்டு வயது வித்தியாசம். நான் முடியாது என்று சொல்லிவிட்டேன். இந்த Facebook-க்கினால், என் எதிர்காலமே பாழாகிவிடும் போல தெரிகிறது. என் கணவரும் என் பிள்ளைகளும்தான் எனக்கு வேண்டும். எதிர்காலத்தில் அவர்கள்தான் என்னுடைய உலகம்.

அதனால்
, இனிமேல் எனக்கு அப்படிப்பட்ட Facebook கணக்கே வேண்டாம். எப்படி Facebook கணக்கை மூடுவது? Facebook கணக்குகளை மூடவே முடியாது என்று என் தோழிகள் சொல்கிறார்கள். நானும் முயற்சி செய்து பார்த்தேன். முடியவில்லை. தயவு செய்து என் பெயர் விவரங்களை வெளியிட வேண்டாம். எனக்கு தந்தை இல்லை. அதனால் உங்களை ஒரு தந்தையாக நினைத்து உதவி கேட்கிறேன். நான் எடுத்த முடிவு சரியா?



: நீங்கள் எடுத்த முடிவு சரி.  நீங்கள் ஒரு மனைவி, ஒரு தாய், அதையும் தாண்டி ஒரு பொறுப்புள்ள குடும்பத் தலைவி எனும் நிலையில் நின்று ஒரு நல்ல முடிவை எடுத்து, பெண்மைக்கு பட்டை தீட்டி இருக்கிறீர்கள். எந்த ஒரு தகப்பனாக இருந்தாலும் ந்த முடிவைத்தான் சொல்வார். நானும் அந்த முடிவைத்தான் சொல்கிறேன்.

நீங்கள்
எவரிடமும் கள்ளம் கபடம் இல்லாமல் பழகலாம். ஆனால், அந்தப் பழக்க வழக்கங்கள் குடும்ப வாழ்க்கையைப் பாதிக்காமல் இருக்க வேண்டும். கணவனைத் தவிர மற்ற எந்த ஆணிடம் பழகினாலும், பேசினாலும் நாலடி தள்ளி நின்றே பழகுங்கள் பேசுங்கள். தயவு செய்து வரம்பு மீறி போகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பேச்சு பேச்சாகத்தான் இருக்க வேண்டும். கை சரங்கள் வேண்டவே வேண்டாம். எதிலும் ஓர் அளவு, ஒரு வரையறை இருக்க வேண்டும். சில சமயங்களில் சுத்தமான கை சரசங்கள் அசுத்தமான  வாய் விரசங்களுக்கு பாதை போட்டுக் கொடுக்கும்.

ஆகவே,
கணவனின் பலகீனங்களை மூன்றாம் நபரிடம் சொல்வதை முதலில் நிறுத்துங்கள். படுத்துக் கொண்டே துப்பினால் துப்பியவருக்குத் தான் தூர்வாரிய துப்பு. ஆக, குழம்பிய குட்டையில் மீனைப் பிடித்துத் தின்று, ஏப்பம் விட்டுத் திரியும் எமகாதகர்கள் நிறைந்த உலகத்தில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். அதனால், கணவன் - மனைவி குடும்ப ரகசியங்களை அடுத்தவர்களிடம் சொல்லவே கூடாது. அண்மையில் நான் இணையத்தில் படித்த இந்திய நாட்டுச் செய்தி. (பெங்களூரு)

Facebook
கணக்கை மூடச் சொன்ன கணவன் மீது மனைவிக்கு பொல்லாத வெறுப்பு. அந்த வெறுப்பின் காரணமாக, கணவன் கட்டிய தாலியையே அறுத்துக் கட்டும் நிலைக்கு அந்தப் பெண் போயிருக்கிறாள். நினைத்தால் அறுத்துப் போடுவதற்கு தாலி என்ன அருனாக்கயிறா? ஆண்டவன் சாட்சியாகக் கட்டியதை மனசாட்சி இல்லாமல் அறுத்துப் போடும் ஒரு சில மனிதப் பிண்டங்களை எதில் கொண்டு போய்ச் சேர்ப்பது?

Facebook
என்கிற சாதாரண விஷயம் தாலியையும் தாண்டிப் போய் நிற்கிறது. அந்தப் பெண்ணின் வாழ்க்கையில் இடையில் வந்தவன், தான் நினைத்ததைச் சாதித்துவிட்டு ஊமைக்குறவனாக ஊர் சுற்றிக் கொண்டு இருக்கிறான். ஆக, அந்தப் பெண் ஏமாந்து போனது தான் மிச்சம். இப்போது அவளுக்கு தொட்டவனும் இல்லை தொட்டுக் கொண்டவனும் இல்லை. இது கதை இல்லை உண்மையாக நடந்தது. கணவன் மீது வெறுப்புகள் வரலாம். அதற்காக அவன் கட்டிய தாலியை, அடுத்தவனிடம் நீட்டி அறுத்துக் கட்டச் சொல்வது என்பது ரொம்பவும் அசிங்கத்தனமான பாவச் செயல். அதையும் தாண்டிச் சொல்வது என்றால் கொடூரமான வக்கிரச் செயல். பெண்ணுரிமை பேசிய பாரதியார் வாழ்ந்த மண்ணில் இப்படி ஓர் அலங்கோலமா?

உங்கள் கணவர் உங்கள் மீது வெறுப்பாக நடந்து கொள்கிறார் என்றால் அவர் உங்களிடம் ஏதோ ஒரு குறையைக் கண்டிருக்கிறார். அதை அவர் உங்களிடம் நேரடியாகச் சொல்ல முடியாமல் தவிக்கிறார். அதனால், சுற்றி வளைத்து உங்கள் மீது குறைகளைக் காண்கிறார். அவ்வளவுதான். மனைவியிடம் அதிகமாக அன்பு செலுத்தும் போது அவள் தனக்கு மட்டும் தான் சொந்தம்; மற்றவருக்குச் சொந்தமாக் கூடாது என்பதில் எல்லா ஆண்களுமே பிடிவாதமாக இருப்பார்கள். அதற்காக உயிரைக் கொடுக்கவும் எடுக்கவும் தயங்க மாட்டார்கள்.  ஆக, உங்கள் கணவருக்குப் பிடிக்காததை உடனடியாக விட்டுத் தொலையுங்கள். ‘பேஸ்புக்
இல்லை என்றால் உங்களால் வாழ முடியாதா இல்லை உங்கள் வீட்டில் சோறு தான் வேகாதா?

எல்லாம் நல்லபடியாக ஒரு வழக்கமான முறைக்கு திரும்பிய பிறகு அவருடைய சம்மதத்தின் பேரில் மறுபடியும் ஒரு புதிய ‘பேஸ்புக்
கணக்கைத் திறந்து அவர் பார்க்கிற மாதிரி தகவல் பரிமாற்றம் செய்யுங்கள். அவரிடம் எதையும் மறைக்க வேண்டாம். கொஞ்ச நாளைக்குப் பின் உங்கள் மீது அவருக்கு நம்பிக்கை ஏற்பட்டு தன் தவறை உணர்ந்து வேதனைப்படுவார். உங்களிடமே வந்து மன்னிப்பு கேட்பார். இது ஒரு சத்தியமான உண்மையாக மாறும். கொஞ்ச நாளைக்குப் பொறுத்துக் கொள்ளுங்கள்.

இணையத்தில் உலா வரும் போது மிகவும் கவனமாக இருங்கள். தெரியாதவர்களிடம் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டாம். உங்கள் அந்தரங்க விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். கைப்பேசி எண்கள், வீட்டு முகவரி போன்றவற்றைக் கொடுக்க வேண்டாம். கிளிப்பிள்ளைக்கு சொல்கிற மாதிரி சொல்லி வருகிறேன்.
இப்போதைய  இணைய உலகம் வயது, உறவு முறை என்று எதையும் பார்ப்பதில்லை. இச்சைக்கு பிச்சை கேட்கும் ஆண்கள்தான் அதிகமாக ஆடுபுலி ஆட்டம் ஆடிக் கொண்டு இருக்கிறார்கள். பெண்களே பத்திரம்! பத்திரம்!!

உங்களை நீங்களே ஒரு சீதையாக நினைத்துக் கொள்ளுங்கள்.
வாழ முயற்சி செய்து பாருங்கள். முடியாவிட்டால் பரவாயில்லை. அடுத்து ஒரு கண்ணகியாக நினைத்து வாழுங்கள். பெண்மைக்கு அதுவே பெருமை தரும். கற்பு என்பது கழுத்தில் தொங்கும் தாலியில் இல்லை தாயே. அந்தத் தாலியைச் சுமந்து நிற்கும் நெஞ்சக்கூண்டிலே நிற்கிறது

04 ஜனவரி 2012

மலேசிய மைந்தனின் மந்திரப் புன்னகை

(இந்தக் கட்டுரை விக்கிப்பீடியாவில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.)
http://ta.wikipedia.org/wiki/பி.சி.சேகர்

மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய
டான்ஸ்ரீ டாக்டர் பி.சி. சேகர்
பரந்து விரிந்து கிடக்கும் வரலாற்றுச் சுவடுகளில், வையகம் போற்றும் மனுக்குல மைந்தர்கள் வாழ்ந்து மறைகின்றார்கள். இறந்தும் இறவாமல் இறவாப்புகழுடன் உயிர்ப்பு பெற்ற ஆன்ம ஜீவநாடிகளாக உறைகின்றார்கள்.

அவர்களில் சிலர் வரலாற்றுச் சப்த சுவரங்களின் சொர்ண சகாப்தங்களாக மாறுகின்றார்கள். அந்தச் சகாப்த வேதங்களையும் தாண்டி நம்முடன் வாழ்ந்து கொண்டும் இருக்கின்றார்கள். அன்றும் இன்றும் மனித மனச் சங்கமங்களில் மந்திரப் புன்னகைகளை அள்ளித் தெளித்து ஆலாபனையும் செய்கின்றார்கள்.  

அப்படிப்பட்ட அந்த மாபெரும் மனிதப் பொக்கிஷங்களில் ஒருவர் தான் பாலசந்திர சகிங்கல் சேகர். அவர் பி.சி என்று அன்பாக அழைக்கப்பட்ட டான்ஸ்ரீ பி.சி.சேகர்.  இயற்கை அன்னைக்கு தன் அர்ப்பணிப்புகளின் வழியாக ஈடு இணையில்லாத மதிப்பு மரியாதைகளைச் செய்து கொடுத்தவர்.

நவீன இயற்கை ரப்பர் - செம்பனைத் துறைகளின் தந்தை

டான்ஸ்ரீ டாக்டர் பி.சி. சேகர்
இயற்கை ரப்பருக்கு புதிய வடிவத்தைக் கொடுத்தவர். மலேசிய  நாட்டில் ரப்பரை புது வியூகத்திற்கு மாற்றி உலகத்தின் பார்வைக்குக் கொண்டு வந்தவர். நவீன இயற்கை ரப்பர் மற்றும் செம்பனைத் துறைகளின் தந்தை என்று போற்றப்பட்டவர்.

மலேசியாவின் ரப்பர் தொழில்துறையில் மறுமலர்ச்சி ஏற்படுவதற்கு இரு முக்கிய நிகழ்ச்சிகள் அடையாளம் சொல்லப் படுகின்றன.

1873-இல் நடந்தது. அமேசான் காட்டில் இருந்து 12 ரப்பர் விதைகள் லண்டனுக்கு கொண்டு வரப்பட்டன. அங்குள்ள கியூ அரச தாவரவியல் தோட்டத்தில் நடப்பட்டன. அங்கிருந்து அவை இந்தியாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு பயிர் செய்யப்பட்டன. எல்லா கன்றுகளுமே உயிர் பெறவில்லை, மடிந்து விட்டன. 

 70,000 ரப்பர் விதைகள் கள்ளக் கடத்தல்

இரண்டு ஆண்டுகள் கழித்து ஹென்றி விக்ஹாம் என்பவர் 70,000 ரப்பர் விதைகளை பிரேசிலில் இருந்து கள்ளக் கடத்தல் செய்தார். அந்த விதைகளில் 2,800 விதைகள் துளிர்விட்டு கன்றுகள் ஆகின. இவற்றில் 2000 கன்றுகள் இலங்கைக்கு (இப்போதைய ஸ்ரீலங்கா) அனுப்பப் பட்டன.  

அவற்றில் 22 கன்றுகள்  சிங்கப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அங்கிருந்து ‘ரப்பர் ரிட்லிஎனும்  எச்.என்.ரிட்லி, ஒன்பதே ஒன்பது ரப்பர்க் கன்றுகளை 1877-இல் மலாயாவுக்கு கொண்டு வந்தார்.

அந்தக் கன்றுகள் பேராக் மாநிலத்தில் உள்ள கோலாகங்சாரில் நடப்பட்டன. எட்டு கன்றுகள் இறந்துவிட்டன. ஒரே ஒரு கன்றுதான் பிழைத்துக் கொண்டது. அந்தக் கன்று பெரிதாகி மரம் ஆனபிறகு அதன் விதைகளின் மூலமாகத் தான் மற்ற கன்றுகள் உருவாகின.

மலாயாவுக்கு கொண்டு வரப்பட்ட ஒன்பது கன்றுகள்

1898-இல் முதல் ரப்பர் தோட்டம் மலாயாவில் உருவானது. அதன் பின்னர் உலகத்திலேயே அதிகமான ரப்பரை உற்பத்தி செய்த நாடாக மலாயா வாகை சூடியது. மலாயாவுக்கு கொண்டு வரப்பட்ட ஒன்பது கன்றுகளில் ஒரு கன்று வளர்ந்து இன்னும் கோலாகங்சாரில் காட்சிப் பொருளாக நின்று கொண்டு இருக்கிறது.

நீங்கள் கோலாகங்சார் போனால் அந்த மரத்தைப் பார்க்கலாம். கூட்டரசு நிலச் சுரங்கர அலுவலகத்திற்கு முன் இருக்கிறது. அதன் வயது 135. தென் அமெரிக்காவில் பயிர் செய்து பார்த்தார்கள். சரியாக வரவில்லை. கன்றுகளுக்கு கருகல் நோய் வந்து தோல்வியில் முடிந்தது.

சிங்கப்பூரில் நடப்பட்ட 13 கன்றுகளில் இன்னும் இரு மரங்கள் உள்ளன. ஒரு மரம் சுவான் ஹோ ஜப்பானிய நல்லடக்கப் பூங்காவில் இருக்கிறது. இன்னும் ஒன்று சிங்கப்பூர் தாவரவியல் பூங்காவில் இருக்கிறது. அவற்றுக்கும் வயது 135 தான். அது ஒரு வரலாற்று நிகழ்ச்சி.

 உலு பூலு தோட்டத்தில் ஒரு குழந்தை

அடுத்த நிகழ்ச்சி: 1929 நவம்பர் மாதம் 17ஆம் தேதி சுங்கை பூலோவில் இருந்த உலு பூலு தோட்டத்தில் ஒரு குழந்தை பிறந்தது. சேகர் என்று பெற்றோர்கள் பெயர் வைத்தனர். அந்தக் குழந்தைதான் 1960களில் மலேசியாவின் ரப்பர் தொழில்துறையின் தலையெழுத்தையே மாற்றி அமைத்தது. இது இரண்டாவது  நிகழ்ச்சி.

உலக வரைபடத்தில் மலேசிய நாட்டை ஓர் உன்னத இடத்திற்கு உயர்த்திச் சென்ற பி.சி.சேகர், இயற்கை ரப்பரின் பயன்பாடுகளுக்கு எஸ்.எம்.ஆர் எனும் புதியத்தர வழிகாட்டியை அமைத்துக் கொடுத்தார்.

இயற்கை ரப்பர் செயற்கை ரப்பரை மெல்லச் சாகடிக்கும்

Standard Malaysian Rubber என்பதே எஸ்.எம்.ஆர் என்பதின் சுருக்கம். இயற்கை இயற்கைதான். செயற்கை செயற்கைதான் என்று சொன்ன பி.சி.சேகர்  ’இயற்கை ரப்பர் செயற்கை ரப்பரை மெல்லச் சாகடிக்கும் எனும் தத்துவத்திற்குப் புதிய பரிமாணத்தில், ஒரு புதிய வேதியியல் கலையையே எழுதிச் சென்றார்.

மலேசியாவின் ரப்பர், செம்பனைத் தொழில்களின் தந்தையாகப் புகழப்படும் டான்ஸ்ரீ பி.சி.சேகர், இயற்கை ரப்பர் தொழில்துறையில் பெரிய பெரிய புரட்சிகளைச் செய்தார். அந்தத் துறைகளையே ஒட்டு மொத்தமாக நவீனப் படுத்தினார் என்று சொன்னால் அது மிகையாகாது.

மலேசிய ரப்பர் ஆய்வுக் கழகம்

சுங்கை பூலோவில் இருக்கும் Rubber Research Institute of Malaysia எனும் மலேசிய ரப்பர் ஆய்வுக் கழகத்தை உலகத் தரத்திற்கு உயர்த்திக் காட்டிய பெருமை டான்ஸ்ரீ பி.சி.சேகரையே சாரும்.  இன்னும் ஒன்றை இங்கே சொல்ல விரும்புகிறேன்.

அந்தக் காலக்கட்டத்தில் உலகத்தின் பல நாடுகளில் இருந்து ஆராய்ச்சியாளர்கள் அந்தக் கழகத்திற்கு வந்து பல அற்புதமான ஆராய்ச்சிகள் செய்து சரித்திரம் படைத்தனர். அப்போது டான்ஸ்ரீ பி.சி.சேகர் அந்தக் கழகத்தின் தலைவராக இருந்தார். அது ஒரு பொன்னான காலம்.

சுங்கை பூலோ போ, சேகரைப் பார்

அந்த அளவிற்கு உலகம் போற்றும் ஆய்வுத் தரம், ஆய்வுத் திறன்கள், ஆய்வுப் பண்புகள் அக்கழகத்தில் அஸ்திவாரம் போட்டு ஆகாயக் கங்கைகளாக உயர்ந்து போய் உச்சத்தில் பூபாள ராகம் பாடின.

ரப்பரைப் பற்றி படிக்க வேண்டும் என்றால் சுங்கை பூலோ போ, சேகரைப் பார்என்று சொல்லி களைகட்டும் அளவிற்கு, மலேசிய ரப்பர் ஆய்வுக் கழகத்தின் சிறப்புகள் உலகம் முழுமையும் கொடிகட்டி கோபுரக் கலசங்களாகத் திகழ்ந்தன.

மலாயன் கிலாஸ்  தொழில்சாலை

ஆனால், இப்போது நிலைமை அப்படி இல்லை. ஆராய்ச்சியாளர்கள் வருவதும் போவதும் குறைந்து விட்டன. உலகளாவிய ஆராய்ச்சிகளின் தரமும் சற்றே சலனம் காண்கின்றன.   கரும்பு இருக்கிற இடத்தை தேடித் தானே எறும்புகள் போகும். 

கரும்பு இருந்த இடத்தில் இனிப்பு கம்மியாகி விட்டது. அதனால், எறும்புகள் வருவதும் இம்மியாகிவிட்டது. மனதில் பட்டதைச் சொல்ல வருகிறேன். மற்றபடி எந்தவிதமான ஆதங்கமும் இல்லை.  உங்களுக்குப் புரியும் என்று நினைக்கிறேன்.

டான்ஸ்ரீ பி.சி.சேகர், சுங்கை பூலோ உலு பூலு தோட்டத்தில் பிறந்தார். அருகாமையில் 1925-இல் பிரித்தானியர்கள் உருவாக்கிய மலேசிய ரப்பர் ஆய்வுக் கழகமும் இருந்தது. அந்தத் தோட்டம் இப்போது இல்லை. அங்கே மலாயன் கிலாஸ்எனும் தொழில்சாலை உருவாக்கம் பெற்றுள்ளது.

டான்ஸ்ரீ பி.சி.சேகர், தன்னுடைய தொடக்க, உயர்நிலைப் பள்ளிப் படிப்புகளைச் சுங்கை பூலோ, கோலாலம்பூர் நகரங்களில் மேற்கொண்டார். பட்டப் படிப்பிற்காக புதுடில்லி சென்றார்.

ஆழமான ஆய்வுகள்

அங்கு அறிவியல் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றார். 1949-இல் மலேசிய ரப்பர் ஆய்வுக் கழகத்தில் ஒரு சாதாரண வேதியியலாளராகச் சேர்ந்தார். (Chemist)

பின்னர், அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றார்.  அடுத்து சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றார்.

மலேசிய ரப்பர் ஆய்வுக் கழகத்தின் தலைவர்

மலேசிய ரப்பர் ஆய்வுக் கழகத்தில் பணியாற்றிய போது சிறந்த சேவைகளை வழங்கினார். இயற்கை ரப்பர் மூலமாக ரப்பர் குழாய்த் தயாரிப்பு, உருளிப்பட்டைத் தயாரிப்பு,  (tyre) கையுறைத் தயாரிப்பு, நிலநடுக்கப் பேரழிவுத் தடுப்புச் சாதனங்கள் தயாரிப்பு  போன்ற தயாரிப்புகளில் பல ஆழமான ஆய்வுகளைச் செய்து அவற்றில் பல புதுமைகளையும் கண்டார்.

ஏறக்குறைய 50 ஆண்டுகள் இயற்கை ரப்பர் தொழில்துறையில் தன்னை ஐக்கியப் படுத்திக் கொண்ட டான்ஸ்ரீ பி.சி.சேகர், படிப்படியாக முன்னேறி 1966 ஆம் ஆண்டு மலேசிய ரப்பர் ஆய்வுக் கழகத்தின் தலைவர் ஆனார். அவர்தான் அக்கழகத்தின் முதல் மலேசியர், முதல் இந்தியர், முதல் ஆசியர்.

அதுவரை அந்தத் தலைமை பீடத்தை பிரித்தானியர்களே அலங்காரம் செய்து வந்தனர். வேறு யாரையும் அவர்கள் விடவில்லை. விடவில்லை என்று சொல்வதைக் காட்டிலும் வேறு யாருக்கும் தகுதி இல்லை என்று சொல்வது தான் சாலப் பொருத்தம்.

மலேசியத் தர ரப்பர் திட்டம்

டான்ஸ்ரீ பி.சி.சேகரின் பங்களிப்புகளில் மிக முக்கியமானது எஸ்.எம்.ஆர் எனும் மலேசியத் தர ரப்பர் திட்டத்தை உருவாக்கியது தான். எஸ்.எம்.ஆர் திட்டத்தை ஆங்கிலத்தில் Standard Malaysian Rubber (SMR) Scheme என்று அழைப்பார்கள்.

அந்தத் திட்டத்தின் மூலம் மலேசிய ரப்பர், உலக ரப்பர் உற்பத்திச் சந்தையில் முதல் தரமாகக் கருதப் பட்டது. அந்தத் திட்டம் ரப்பர் தொழில்துறையின் மூலப்பொருள் மேம்பாட்டில் ஒரு மைல்கல்லாக அமைந்தது என்று சொல்லலாம்.

சில சமயங்களில் ரப்பர் மரங்களுக்குச் சாயம் அடிப்பதை நீங்கள் பார்த்து இருக்கலாம். பச்சை, சிகப்பு, மஞ்சள் நிறச் சாயங்களாக இருக்கும். அப்படி சாயம் அடிப்பதன் மூலம் ரப்பர் மரங்களின் பால் உற்பத்தியை மூன்று மடங்காகப் பெருக்கிக் காட்ட முடியும் என்பதைக் கண்டுபிடித்தவரும் மதிப்பிற்குரிய டான்ஸ்ரீ பி.சி.சேகர்தான்.

தொழிலாளர்களுக்கு மாதச் சம்பளம்

அனைத்துலக ரப்பர் விலையை ஒருமுகப் படுத்துவதற்கு தீவிரமான செயல்பாடுகளில் இறங்கினார். வெற்றியும் கண்டார். அதனால், மலேசியா, பிரேசில், தாய்லாந்து, இந்தோனேசியா, இந்தியா, இலங்கை போன்ற பல ரப்பர் உற்பத்தி நாடுகள் பலன் அடைந்தன. அதன்வழி பல இலட்சம் சிறு தோட்டக்காரர்களும், மலேசியக் கிராமப்புற ஏழைகளும் நன்மை அடைந்தனர்.  
மலேசிய ரப்பர் ஆய்வுக் கழகத்தின் ரப்பர் தோட்டங்களில் வேலை செய்த தொழிலாளர்களுக்கு மாதச் சம்பளம் வழங்கும் திட்டத்தை 1983 ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்தார். தோட்டத் தொழிலாளர்கள் மூலமாகக் கோடிக்கணக்கான பணத்தைச் சுரண்டிக் கொண்டிருந்த தோட்ட முதலாளிமார்களுக்கு அது பலத்த அடியாக அமைந்தது.

இப்போது மலேசிய ரப்பர் ஆய்வுக் கழகத்தின் ரப்பர் தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு மாதச் சம்பளம் கிடைக்கிறது. ஓய்வூதியம் கிடைக்கிறது. ஓய்வூதியப் பயன்களும் (gratuity benefits) கிடைக்கின்றன.

மரத்தை நான் பார்த்துக் கொள்கிறேன்

மலேசிய அதிகார்களிடம் அவர் அடிக்கடி பயன்படுத்தும் வாசகம் இதுதான். “மரத்தை நான் பார்த்துக் கொள்கிறேன். அந்த மரத்திற்கு கீழே இருக்கும் மனிதனை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள். ஆனால், ஒன்றை மட்டும் மறக்க வேண்டாம். மரம் இல்லை என்றால் மரத்திற்கு கீழே இருக்கும் மனிதனும் இல்லை’.

எப்பேர்ப்பட்ட வாசகம் அது. இருந்தாலும் பாருங்கள், அவர் பதவியில் இருந்த காலத்தில் மரத்தையும் பார்த்துக் கொண்டார்.  மரத்திற்கு கீழே இருக்கும் மனிதனையும் பார்த்துக் கொண்டார். இரண்டையும் மறக்கவில்லை.

2005 ஆம் ஆண்டு  மலேசிய ரப்பர் ஆய்வுக் கழகத்தை மேம்படுத்துவதற்கு மாபெரும் திட்டம் வகுக்கப்பட்ட போது டான்ஸ்ரீ பி.சி.சேகர் அரசாங்கத்தைத் தாழ்மையுடன் கேட்டுக் கொண்டது ஒன்றே ஒன்றுதான். அப்போது அவர் எந்தப் பதவியிலும் இல்லை.

மலேசிய அரசாங்கம் செய்த முதல் மரியாதை

மலேசிய ரப்பர் ஆய்வுக் கழகத்திலும், கழக ரப்பர் தோட்டங்களிலும் வேலை செய்தவர்களின் குடுமபங்களுக்கு தலா ஓர் ஏக்கர் நிலத்தை இலவசமாக வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அந்த நிலத்தை அவர்களின் அடுத்த தலைமுறையினர் பயன்படுத்திக் கொள்ள வழிவகைகள் செய்து கொடுக்கப்பட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

அவருடைய கோரிக்கையைத் தட்டாமல் அரசாங்கம் ஏற்றுக் கொண்டது. அதுவே மலேசிய அரசாங்கம் அவருக்கு செய்த முதல் மரியாதை ஆகும். அவருடைய விருப்பத்தை நிறைவேற்ற அரசாங்கம் பல கோடி பணத்தை ஒதுக்கி வைத்தது என்பது வேறு கதை.

துன் ரசாக் ஆய்வுக் கழகம்

ஆனால், அவரிடம் பதவி இல்லை. அதிகாரம் இல்லை. அதற்காக, அரசாங்கம் அவருடைய சொற்களை அலட்சியம் செய்யவில்லையே. அவருக்குச் சேர வேண்டிய மதிப்பு மரியாதையைக் கொடுத்தது. அதுவே பெரிய விஷயம். சேகர் சொல்லை மீற வேண்டாம் என்று மலேசிய அமைச்சரவையே சம்மதம் தெரிவித்தது.

அவரிடம் அப்போதைக்கு இருந்தது அனைத்துலக செல்வாக்கும் அனைத்துலக அறிவுஜீவிகளின் பக்கபலமும் தான். அதே சமயத்தில் அனைத்துலக ரப்பரின் விலையை ஏற்றவும் இறக்கவும் செய்யக் கூடிய செல்வாக்கு அவரிடம் இருந்தது என்பதையும் நாம் மறந்து விடக் கூடாது.

ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னால், இங்கிலாந்தில் உள்ள பிரிகண்டான்பரி எனும் இடத்தில் இருந்த British Rubber Producers' Research Association எனும் பிரித்தானிய ரப்பர் உற்பத்தியாளர்கள் ஆய்வுக் கழ்கததை ஒரு விளையாட்டரங்கமாக மாற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. அக்கழகத்தின் புதிய பெயர் துன் ரசாக் ஆய்வுக் கழகம் ஆகும்.

‘டான்ஸ்ரீவிருது

அது ஒரு சர்ச்சைக்குரிய விவகாரமாக மாறியது. முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சரும் தொடர்பு படுத்தப் பட்டார் என்பதை வாசகர்கள் அறிவர். அந்தத் திட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டுள்ளது. அத்தகைய மாற்றத்திற்கு முதன்முதலில் முழு எதிர்ப்பு தெரிவித்தவர் டான்ஸ்ரீ பி.சி.சேகர் என்பதை நாம் இந்தக் கட்டத்தில் நினைவு கூர வேண்டும்.

டான்ஸ்ரீ பி.சி.சேகர், மலேசிய நாட்டிற்கு செய்துள்ள அரிய சேவைகளுக்காக பேரரசர் ‘டான்ஸ்ரீவிருதை வழங்கி கௌரவித்துள்ளார். இவர் 1973-இல் பிலிப்பைன்ஸ் நாட்டின் மாக்சாசே விருதையும் மேலும் பல விருதுகளையும் பெற்றுள்ளார். 20 கண்டிபிடிப்புகளின் வழி புனைவுரிமைகளையும் (patent) பெற்று இருக்கிறார்.

சென்னையில் உறவினர் வீட்டில் மாரடைப்பு

டான்ஸ்ரீ பி.சி.சேகருக்கு சுகுமாரி எனும் மனைவியும் ஜெயன், கோபிநாத், சுஜாதா, வினோத் எனும் நான்கு பிள்ளைகளும், எட்டு பேரப்பிள்ளைகளும் உள்ளனர். 2006 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6 ஆம் தேதி சென்னையில் ஓர் உறவினர் வீட்டிற்குச் சென்று இருந்த போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.

மலேசிய மண்ணின் மைந்தன்

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள காளியப்பா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப் பட்டார். இருப்பினும் இயற்கை அவரை அழைத்துக் கொண்டது. அப்போது அவருக்கு வயது 77. அன்னாரின் உடல் கோலாலம்பூருக்கு கொண்டு வரப்பட்டு, செராஸ் மின்சுடலையில் இறுதிச் சடங்குகள் செய்யப் பட்டன.

அவரைப் பற்றியும் அவர் ஆற்றியுள்ள தொண்டுகளைப் பற்றியும் ஆயிரம் ஆயிரம் பக்கங்களாக எழுதலாம். அவருடைய வரலாற்றுச் சாதனைகளைப் பற்றி எழுதி முடிக்கவே முடியாது. அவரைப் பற்றி B.C. Sekhar: Malaysia’s Man For All Seasons எனும் தலைப்பில் ஓர் ஆய்வு நூல் வெளியிடப்பட்டுள்ளது.

டான்ஸ்ரீ பி.சி.சேகர். உண்மையிலேயே அவர் மலேசிய மண்ணின் மைந்தன்! மலேசிய வரலாற்றில் ஓர் அவதாரப் புருஷன்!  அவர் மறைந்து விட்டாலும் மனிதச் சுவடிகளில் இருந்து மறைக்க முடியாத அறிவுக் களஞ்சியமாக நம்முடன் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார். இன்றும் இனி என்றும் வாழ்ந்து கொண்டு இருப்பார். அவர் ஒரு சகாப்தம்!