05 அக்டோபர் 2020

மலாயா தமிழர்கள்: டமன்சாரா தோட்டம் பத்து தீகா - 1896

1860 - 1870-ஆம் ஆண்டுகளில் சிலாங்கூர் மாநிலத்தில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் குடியேறி விட்டார்கள். பெரும்பாலும் கிள்ளான், காப்பார், பந்திங், கேரித்தீவு, ரவாங், பத்துமலை பகுதிகளில் அதிகமான தமிழர்களின் குடியேற்றம்.

பத்து தீகா பகுதியில் நிறையவே ரப்பர் தோட்டங்கள் உருவாக்கப் பட்டன. முன்னர் காபி தோட்டங்களாக இருந்தவை. கிளன்மேரி தோட்டம்; நார்த்தமோக் தோட்டம்; ராசா தோட்டம்; சுங்கை ரெங்கம் தோட்டம்; டமன்சாரா தோட்டம்; ஈபோர் தோட்டம்; சீபீல்டு தோட்டம்; லாபுவான் பாடாங் தோட்டம்; மேர்ட்டன் தோட்டம்; புக்கிட் கமுனிங் தோட்டம்.

இவற்றுள் டமன்சாரா தோட்டம் (Damansara Estate) 1896-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. பத்து தீகா இரயில் நிலையத்தில் (Batu Tiga Railway Station) மூன்று மைல் தொலைவு. மாட்டு வண்டிச் சாலை. தார் சாலைகள் எதுவும் இல்லாத காலம். அவர்கள் பய்ன்படுத்திய மாட்டு வண்டிகளைப் படத்தில் காணலாம்.

டமன்சாரா தோட்டம்; மொத்தப் பரப்பளவு 2107 ஏக்கர். 1906-ஆம் ஆண்டு 12,564 பவுண்டுகள் ரப்பர் பயிர் செய்யப்பட்டது.

1860-ஆம் ஆண்டுகளிலேயே பத்து தீகா பகுதிகளில் காபி பயிர் செய்யப் பட்டது. ஏற்கனவே டமன்சாரா தோட்டம் ஒரு காபித் தோட்டம். அப்போது அதன் பரப்பளவு 514 ஏக்கர். ஓர் ஆண்டிற்கு 850 பீக்கள் காபி உற்பத்தி.

டமன்சாரா தோட்டத்தில் 1906-ஆம் ஆண்டில் 600 தமிழர்கள் 150 ஜாவானியர்கள் வேலை செய்தார்கள். பிரோவெல் (H. F. Browell) எனும் ஆங்கிலேயர் நிர்வாகியாக இருந்தார். பின்னர் இவர் கிள்ளான் கோல்டன் ஹோப் தோட்டத்திற்கு மாற்றலாகிச் சென்றார்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
05.10.2020

Notes: Damansara Estate, Batu Tiga 1896. 3 miles from Batu Tiga railway station. cart road. owned by Teluk Batu Estate. 2107 acres. coffee and 514 acres. para  62 acres. 1906 - 12,564 ibs of para. 850 piculs coffee. 750 workers Tamils and Javanese. H. F. Browell, the local manager, then to Golden Hope Estate.



சான்றுகள்:

1. The British and rubber in Malaya, c1890-1940; James Hagan. University of Wollongong.

2. Twentieth century impressions of British Malaya - its history, people, commerce, industries, and resources. ARNOLD WRIGHT (London). LLOYD'S GREATER BRITAIN PUBLISHING COMPANY, LTD.,
1908.



04 அக்டோபர் 2020

இலங்கை மலாயா தமிழர்களின் கண்ணீர்க் கதைகள்

தமிழ் மலர் - 03.10.2020

மலாயா கித்தா காடுகள்; இலங்கை தேயிலைக் காடுகள்; இந்தோனேசியா காண்டா காடுகள்; பசிபிக் பவளத் காடுகள்; கரிபியன் கரும்புக் காடுகள்; இந்தக் காடுகளிலும் இந்தத் தீவுகளிலும் ஆங்கிலேயர்கள் ஏகபோகமான வாழ்க்கை வாழ்ந்தார்கள். அவர்களின் அந்தச் சொகுசு வாழ்க்கைக்குத் தீபம் ஏற்றி தூபம் காட்டியவர்கள் யார் தெரியுங்களா. சாட்சாத் கறுப்புத் தோல் கங்காணிகள்.

அலைகடல் தாண்டி ஆள் பிடித்து வருவதற்கு மலாயாவில் கங்காணி முறை என்று பெயர். அங்கே இலங்கையில் ஒப்பந்தக் கூலி முறை என்று பெயர். இரண்டுமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். இரண்டுமே ஆள்கடத்தும் ஜீபூம்பா சதிராட்டங்கள்.

எருமை மாட்டின் மீது கொக்கு உட்கார்ந்தால் எருமைக்கு லாபம். கொக்கின் மீது எருமை மாடு உட்கார்ந்தாலும் எருமைக்குத் தான் லாபம். பாவம் கொக்கு!

ஒரு கட்டத்தில் ஒப்பந்தக் கூலி முறையால் இலங்கைக்குத் தேவையான ஆட்களைத் திரட்ட முடியாத நிலை. அதனால் மலாயாவில் பயன்படுத்தப்பட்ட கங்காணி முறையை இலங்கையிலும் கொண்டு வந்தார்கள்.

முதலில் மலாயாவில் கங்காணி முறையை ஆங்கிலேயர்கள் பயன்படுத்திப் பார்த்தார்கள். பக்குவமாக இருந்தது. பர்ஸ்ட் கிலாஸ் என்று டிக்கெட் கொடுத்தார்கள். அதன் பின்னர் இலங்கையிலும் அந்த முறையை அமலுக்கு கொண்டு வந்தார்கள்.

இலங்கையில் கங்காணி முறை அமல்படுத்தப் பட்டாலும் அதனை ஒப்பந்தக் கூலி முறை என்றே அங்கே தொடர்ந்து அழைத்தார்கள். பின்னர் காலத்தில் அது ஒரு வழக்குச் சொல்லாகவும் மாறிப் போனது. ஆனால் உண்மையாகப் பார்த்தால் அது மலாயாவின் கங்காணி முறை தான்.

ஒரு முக்கியச் செய்தி. மறுபடியும் வாசிப்பது மலாயா சஞ்சிக்கூலிகள். ஒப்பந்தக் கூலி முறை என்பது வேறு. கங்காணி முறை என்பது வேறு. சரிங்களா.

ஒப்பந்தக் கூலி முறை என்றால் ஒரு தொழிலாளியும் ஒரு முதலாளியும் நேரடியாகச் செய்து கொள்ளும் ஓர் ஒப்பந்தம். கங்காணி முறை அப்படி இல்லை. கங்காணி முறையில் கங்காணியே நேரடியாகக் களம் இறங்கி பட்டை தீட்டுவார். ஆசை ஆசையாய் ஆயிரம் வார்த்தைகளை அவிழ்த்து விடுவார். அப்படியே ஆட்களை அள்ளிக் கொண்டு வருவார். அது ஒரு வழக்கம்.

இருப்பினும் சஞ்சிக்கூலிகள் விசயத்தில் மூலகர்த்தாவாக இருந்தவர்கள் இலங்கையின் மலையகத் தமிழர்கள் தான். அதை நாம் மறந்துவிடக் கூடாது.  தமிழர்களை முதன்முதலாக இலங்கைக்குத் தான் கொண்டு போய்ச் சேர்த்தார்கள்.

ஆனால் அலிபாபா குகைகளில் இருந்து தங்கப் பேழைகள் கிடைக்கும் என்று ஆங்கிலேயர்கள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. 100 விழுக்காட்டு வெற்றி.

ருசி கண்ட பூனை சும்மா இருக்குமா. சுரண்டும் கலைக்கு ஒரு பெரிய கலைக் களஞ்சியத்தையே எழுதியவர்கள் ஆங்கிலேயர்கள். சும்மா இருப்பார்களா. ஆக சஞ்சிக்கூலிகளின் முன்னோடிகள் யார் என்றால் அவர்கள் இலங்கையின் மலையகத் தமிழர்கள் தான். மலாயாத் தமிழர்கள் அல்ல.

தமிழ்நாட்டின் கிராமப் புறங்களில் வாழ்ந்த ஏழைக் குடியானவர்கள், இலங்கைக்குப் போய் வேலை செய்ய விரும்பினால் ஓர் ஒப்பந்தப் பத்திரத்தில் ஒரு கையெழுத்துப் போட்டால் போதும். அதாவது ஒரே ஒரு கைநாட்டு.

ஒப்பந்தக் காலம் முடியும் வரையில் எந்தக் காரணத்தைக் கொண்டும் தோட்டங்களை விட்டு வெளியேறக் கூடாது. சத்தியம் செய்ய வேண்டும். மீறினால் முதலாளி தண்டனை கொடுப்பார். ஏற்றுக் கொள்ள வேண்டும்.

ஒரு கைநாட்டு. ஒரு தலையாட்டு. அதுவே ஓர் ஒப்பந்தம். சொல்வதற்கு எல்லாம் சரிங்க சாமி என்று தலையை ஆட்ட வேண்டும். ஒரு வாரத்தில் கப்பல் பங்க் டிக்கெட் கிடைத்துவிடும்.

இருந்தாலும் பாருங்கள். வேலைக்குப் போன இடங்களில் நிறைய அநியாயங்கள். நிறைய அக்கிரமங்கள். சகிக்க முடியாமல் சிலர் திருட்டுத் தனமாகத் தாயகத்திற்குத் திரும்பி ஓடிப் போய் இருக்கிறார்கள். இலங்கை தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்த மலையகத் தமிழர்களிடம் அது ஒரு வழக்கமாகின் போனது.

இரவோடு இரவாகத் தப்பித்துக் காட்டுப் பாதைகளில் நடந்தே போய் இருக்கிறார்கள். போகும் வழியில் யானைகளைப் பார்த்து இருப்பார்கள். புலிகளைப் பார்த்து இருப்பார்கள். ஆனால் நிச்சயமாக பயந்து இருக்க மாட்டார்கள். ஏன் தெரியுங்களா.

கங்காணி, சின்ன துரை, பெரிய துரை என்று பெரிய பெரிய கொடிய மிருகங்களை எல்லாம் பார்த்தவர்கள். பசுத் தோல் போர்த்திய புலிகளைப் பார்த்துப் பார்த்துப் பழகிப் போன அவர்களுக்கு நிஜப் புலிகள் எல்லாம் என்ன. பூனை மாதிரி தெரிந்து இருக்கலாம்.

காட்டு மிருகங்களைப் பொருத்த வரையில் அவை எல்லாம் அவர்களுக்கு திருநெல்வேலி அல்வாக்கள்! புலியும் அடித்து இருக்காது. கிலியும் அடித்து இருக்காது. செத்தால் இப்படியே செத்துப் போகலாம் எனும் விரக்தியில் அவர்கள் ஓடிப் போய் இருக்கலாம்.

ஆனால் இந்தப் பக்கம் மலாயாத் தமிழர்களால் அப்படி எல்லாம் ஒன்றும் தலைகாட்ட முடியவில்லை.தப்பித்து ஓட முடியவில்லை. மீண்டும் கப்பலேறி ஊருக்குத் திரும்பிப் போவது என்பது எல்லாம் என்ன லேசு பட்ட காரியமா. நடக்கிற காரியமா. சொல்லுங்கள்.

கஷ்டமோ நஷ்டமோ, வாங்கி வந்த வரம் என்று எஞ்சிய நாட்களை எண்ணிப் பொருமி அழுது தொலைத்து ஆர்ப்பரித்து இருக்க வேண்டும். 2000 மைல்களுக்கு அப்பால் இருக்கும் வயல் காட்டு மண்ணையும்; மணல் வீட்டுத் திண்ணை மேட்டையும் நினைத்து நினைத்துப் புலம்பி இருக்க வேண்டும். ஆக வேதனைப் பட்டது தான் மிச்சம்.

இலங்கையில் இருந்து தமிழ்நாட்டுக்குத் தப்பி ஓடி வந்த மலையகத் தொழிலாளர்களின் கதை வேறு. தோட்ட முதலாளி போலீஸில் புகார் செய்வார். தமிழ்நாட்டுக் கிராமத்தில் இருக்கும் காவல் துறையினர், தப்பி வந்த தொழிலாளர்களைத் தேடிப் பிடித்துக் கைது செய்வார்கள். மீண்டும் அதே பழைய ராகம். அதே பல்லவி. பழைய பாசறைக்கே திருப்பி அனுப்பி வைக்கப் படுவார்கள்.

தப்பித்து வந்தாலும் வெள்ளைக்காரர்களின் குரங்குப் பிடி கழுகுப் பார்வையில் இருந்து தப்பிக்கவே முடியாது. அந்த மாதிரி தப்பிப் போய் பிடிபட்டவர்களுக்கு கன்னா பின்னா கசையடிகள் காத்து நின்று ஆரத்தி எடுக்கும். காட்டு மரத்தில் இரண்டு மூன்று நாட்களுக்குக் கட்டிப் போடுவார்கள். எறும்பு முசுடுகளைப் பிடித்து வந்து கடிக்க வைப்பார்கள். கஞ்சித் தண்ணி கொடுக்காமல் பட்டினி போடுவார்கள். கால்களில் பாதங்களில் சூடு போடுவார்கள்.

அதுதான் ஏற்கனவே கைநாட்டு போட்டுக் கொடுத்தாச்சே. அப்புறம் எப்படி தண்டனையில் இருந்து தப்பிக்க முடியும். சொல்லுங்கள். தண்டனையை ஏற்றுக் கொள்ளத் தயார் என்று கைநாட்டு போட்டுக் கொடுத்தாச்சு. வெள்ளைக்காரன் சும்மா விடுவானா.

ரொட்டியில் பட்டர் தடவ கத்தியைத் தேடுகிறவன்; இந்த மாதிரி குற்றம் செய்தர்வர்களுக்குப் பட்டர் தடவாமல் சும்மா விடுவானா. அந்த மாத்ரி பட்டர் தடவும் வேலைகளை வெள்ளைக்காரர்கள் செய்ய வேண்டிய அவசியமே இல்லை.

செய்து கொடுக்கத் தான் கறுப்புக் கங்காணிகள் தயாராக இருந்தார்களே. அது போதுமே? எள் என்றதும் எண்ணெயாய் வடிந்து உருக ஆள் இருந்த வரையில் வெள்ளைக்காரர்களின் வேலைகள் நன்றாகவே நடந்து முடிந்தன.

இங்கிலாந்தில் ஆதவன் மறைவதே இல்லை என்று வீரவசனம் பேசியவர்கள் ஆங்கிலேயர்கள். நாயைச் சுடுவது என்றாலும் தடவிக் கொடுத்து விட்டுத் தான் சுடுவோம் என்று பாளையங் கோட்டையில் மேஜர் பேனர்மேன் சொன்ன வசனங்கள் நினைவிற்கு வருகின்றன.

தமிழ்ப் பாட்டாளிகளுக்கு பரங்கியர் இழைத்தக் கொடுமைகள் கொஞ்ச நஞ்சம் அல்ல. கண்ணீர் விட்டு அழுத பாரதியார் தன்னுடைய பாடல்களில் இப்படி எழுதி இருக்கிறார்.

"கரும்புத் தோட்டத்திலே - அவர்
கால்களும் கைகளும் சோர்ந்து விழும்படி
தெய்வமே! நினது எண்ணம் இறங்காதோ- அந்த
ஏழைகள் சொரியும் கண்ணீர்!"

"நாட்டை நினைப்பாரோ? - எந்த
நாளினிப் போயதைக் காண்பது என்றே? அன்னை
வீட்டை நினைப்பாரோ? - அவர்
விம்மி விம்மி அழுங்குரல்
கேட்டிருப்பாய் காற்றே!"


சரி. இங்கே இந்தப் பக்கம் பார்த்தால், மலாயா நாட்டில் தமிழர்களின் கண்ணீர்க் கதை இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு தொடர்கதையாய் நீண்டு போகின்றது. அந்த நீண்ட அத்தியாயத்தில் மலாயா தமிழர்கள் சிந்திய இரத்தம்; துடைத்த வியர்வை; இரைத்த தியாகம்; தூவிய அர்ப்பணிப்புகள் சொல்லில் மாளா.

இன்றைய இந்த மலையூர் மலாயா என்கிற நவீன உலகம் கம்பீரமாய் எழுந்து நிற்கின்றது. வானத்தை முட்டிப் பார்க்கும் கோபுரங்களைக் கட்டிப் பிடித்து அழகு பார்க்கின்றது. இவை வரலாறு சொல்லும் உண்மைகள். மலாயா தமிழர்களின் கட்டுமானத்தில் உருவான தோற்றங்கள். ஆக மலாயா தமிழர்களின் உண்மைகளும் உரிமைகளும் என்றைக்கும் பாதுகாக்கப்பட வேண்டும்.

இன்னும் ஒரு விசயம். நாம் என்ன எழுதினாலும் அவற்றின் படிவங்கள் தேசிய பழஞ்சுவடிக் காப்பகத்தில் டிஜிட்டல் முறையில் பாதுகாக்கப் படுகின்றன. தவிர இணையத்திலும் உடனுக்குடன் பதிந்து விடுகிறோம். எதிர்காலத்தில் இன்னும் சில பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் நம்முடைய வாரிசுகள் அந்தப் படிவங்களை நிச்சயம் படிப்பார்கள். படிக்க வேண்டும்.

மலையும் மடுவும் பாறைகளும் நிறைந்த மலாயா மண்ணைத் தமிழர்கள் செம்மைப் படுத்தினார்கள். சாலைகளை அமைத்துக் கொடுத்தார்கள். கம்பிச் சடக்குகளில் ரயில் வண்டிகளை ஓட வைத்தார்கள் என்று நம்முடைய வாரிசுகள் பேசிக் கொள்வார்கள். பேசிக் கொள்ள வேண்டும்.

மலாயா தமிழர்களின் வரலாற்றுப் படிவங்கள் எதிர்காலத்தில் வலுவான சான்றுகளாக தடம் பிடிக்க வேண்டும். அதனால் நம் மூதாதையர்களைப் பற்றி இப்போதே எழுதி வைக்க வேண்டும். எழுதியவற்றை ஆவணப் படுத்தி வைக்க  வேண்டும்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
03.10.2020


 

03 அக்டோபர் 2020

மலாயா தமிழர்கள்: பினாங்கு கரும்பு ரப்பர் தோட்டங்களில் தப்பித்தவர்கள் - 1897

1900-ஆம் ஆண்டுகளில் மலாயா ரப்பர் தோட்டங்களில் நிர்வாகத்தினரின் கெடுபிடிகள். காலையில் இருந்து மாலை வரை நீண்ட நேரம் உழைப்பு. இதில் கங்காணிகளின் துன்புறுத்தல்கள். சாதியத்தின் செருக்கு மினுக்குகள். மோசமான தகர டப்பா குடியிருப்புகள். எல்லாம் கலந்த வேதனைகள். எல்லாம் கடந்த சோதனைகள்.

பினாங்கு பத்து காவான் தோட்டம் 1899

அதனால் தமிழர்கள் பலர் தோட்டங்களை விட்டு, கள்ளத் தனமாய் வெளியேற வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப் பட்டனர். தோட்டங்களில் இருந்து தலைமறைவாகும் தமிழர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. இரவோடு இரவாகக் குடியிருப்புகளில் இருந்து காணாமல் போனவர்கள் அதிகம்.

ஒரு தோட்டத் தொழிலாளிக்கு ஞாயிற்றுக் கிழமை மட்டும் விடுமுறை. அந்த நாளைத் தவிர மற்ற நாட்களில் அவர் குடியிருக்கும் வீட்டில் 24 மணி நேரம் தொடர்ந்து காணப்பட வேண்டும்.

1900-ஆம் ஆண்டில், பினாங்கு மாநிலத்தில் இருந்து வெளியேறியவர்கள் 728 பேர். இவர்களில் 335 பேர் மீண்டும் கைது செய்யப் பட்டனர்.

பினாங்கு பத்து காவான் (Batu Kawan) தோட்டத்தில் தலைமறைவான தமிழர்கள் 183 பேர். இவர்களில் 112 பேர் கைது செய்யப் பட்டனர். எஞ்சிய 60 பேர் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை.

பெரும்பாலும் உள்ளூர் மலாய்க்காரர் மக்கள் வாழும் கிராமங்களில் குடியேறி இருக்கலாம். அல்லது தொலைதூரத் தோட்டங்களுக்குத் தப்பித்துப் போய் இருக்கலாம். அல்லது பினாங்கு துறைமுகத்தில் மூட்டை தூக்கும் வேலைகளுக்குப் போய் இருக்கலாம். [#1]

[#1]. Marilyn Gracey Augustine, In Search of a better destiny – Emigration of Tamils to Malayan Peninsula (1786-1910), 2008, p.97

FMS 1895  Penang Tamil

1902-ஆம் ஆண்டில் புரோவின்ஸ் வெல்லஸ்லி (Province Wellesley) மாநிலத்தில் (செபராங் பிறை) உள்ள தோட்டங்களில் இருந்து வெளியேறியவர்களின் எண்ணிக்கை 343. இவர்களில் 130 பேர் கைது செய்யப் பட்டனர். எஞ்சிய 210 பேர் என்ன ஆனார்கள். கேள்விக்குறி? [#1]

[#1]. Ibid., p.97

அதே 1902-ஆம் ஆண்டு மலாக்கோப் தோட்டத்தில் இருந்து வெளியேறியவர்கள் 71 பேர். கைது செய்யப் பட்டவர்கள் 27 பேர். அந்த ஆண்டு அது தான் மிக உயர்ந்தது ஆகும்.

ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன், மலாயா தோட்டங்களில் வேலைக்கு தமிழர்கள் குடிபெயர்ந்தார்கள். ஆனால் நிலைமை மோசமாக  இருப்பதை உணர்ந்ததும் தோட்டங்களில் இருந்து தப்பித்து ஓடி விடும் நிலைமை.

பொதுவாகவே இவர்கள் பிடிபட்டனர். அப்படித் தப்பித்துப் போவதில் வெற்றி பெற்றால் வேறு தோட்டங்களில் அடைக்கலம் ஆனார்கள். ஆனால் இந்தியாவுக்குத் திரும்பிச் செல்வது என்பது நடக்காத காரியம். ஐலசா பாடிச் செல்லப் படகும் இல்லை. கப்பலும் இல்லை.

1900-ஆம் ஆண்டு பினாங்கு தோட்டங்களில் இருந்து தப்பித்துப் போன தமிழர்கள்
(TAMIL COOLIE DESERTERS IN THE ESTATES OF MALAYA IN THE YEAR 1900)

பத்து காவான் தோட்டம் (Batu Kawan) தப்பித்தவர்கள் 183 - பிடிபட்டவர்கள் 112 - விழுக்காடு 5.72

பினாங்கு கரும்புத் தோட்டங்கள் (Penang Sugar Estates)

கலிடோனியா தோட்டம் (Caledonia) தப்பித்தவர்கள் 64 - பிடிபட்டவர்கள் 28 - விழுக்காடு 8.92

விக்டோரியா தோட்டம் (Victoria) தப்பித்தவர்கள் 49 - பிடிபட்டவர்கள் 7 - விழுக்காடு 10.38

பைராம் தோட்டம் (Byram) தப்பித்தவர்கள் 37 - பிடிபட்டவர்கள் 16 - விழுக்காடு 4.18

பெர்மாக் தோட்டம் (Permaking) தப்பித்தவர்கள் 5 - பிடிபட்டவர்கள் 2 - விழுக்காடு 4.14

மலாக்கோப் தோட்டம் (Malakoff) தப்பித்தவர்கள் 129 - பிடிபட்டவர்கள் 68 - விழுக்காடு 10.41  

பிறை கரும்புத் தோட்டங்கள் (Prai Sugar Estates)

ஜாலான் பாரு தோட்டம் (Jalan Bahru) தப்பித்தவர்கள் 153 - பிடிபட்டவர்கள் 56 - விழுக்காடு 16.95

பெர்மாத்தாங் தோட்டம் (Permatang) தப்பித்தவர்கள் 22 - பிடிபட்டவர்கள் 20 - விழுக்காடு 0.85

டிரான்ஸ் கிரியான் தோட்டம்
(Trans Krian) தப்பித்தவர்கள் 47 - பிடிபட்டவர்கள் 14 - விழுக்காடு 29.46

வால்டோர் தோட்டம் (Val Dor) தப்பித்தவர்கள் 39 - பிடிபட்டவர்கள் 14 - விழுக்காடு 9.76

மொத்தம்: தப்பித்தவர்கள் 728 - பிடிபட்டவர்கள் 335 - விழுக்காடு 8.91

இந்தப் புள்ளி விவரங்களில் இருந்து ஒரு முடிவிற்கு வரலாம். தப்பித்தவர்களில் பாதி பேர் தலைமறைவாகி விட்டார்கள். இவர்கள் எங்கே போனார்கள்; என்ன ஆனார்கள் என்பது இறைவனுக்கு மட்டுமே தெரியும். நம் தமிழர்கள் எப்படி எப்படி எல்லாம் சிரமப்பட்டு இருக்கிறார்கள். வந்தேறிகள் என்று வந்தேறிகலுக்குக்குத் தெரியுமா? மேலும் சில புள்ளி விவரங்களுடன் மீண்டும் சந்திக்கிறேன். நன்றி.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
03.10.2020

சான்றுகள்:

1. Report of the Committee on Emigration from India to the Crown Colonies and Protectorates, Part–III 1909, (Papers laid before the Committee No. 1), p 111

2. N.Gangulee,Indians in the Empire Overseas–A Survey The New India Publishing House Ltd, London,1947, p 175 26Ibid., p 199

3. Tinker,Hugh. The New System of Slavery–the Export of Indian Labour Overseas(1830–1920) Oxford University Press, London 1974, p 208



 

02 அக்டோபர் 2020

மலாயா தமிழர்கள்: பினாங்கு 1867

1867-ஆம் ஆண்டு பினாங்கில் வாழ்ந்த தமிழர்கள். இதுவும் ஓர் அபூர்வமான புகைப்படம். 1800-ஆம் ஆண்டுகளின் தொடக்கத்திலேயே தமிழர்கள் மலாயாவுக்குக் கொண்டு வரப் பட்டார்கள். சொல்லி இருக்கிறேன். பாய்மரக் கப்பல்களில் தான் வந்து இருக்கிறார்கள்.

நமக்கு கிடைத்த சான்றுகளின் படி, 1837-ஆம் ஆண்டு 2000 தமிழர்கள் பினாங்கிற்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறார்கள். இது அதிகாரப்பூர்வமற்ற குடியேற்றம். மெட்ராஸ் அரசாங்கத்திற்குத் தெரியாமல் நடைபெற்றது. முன்னர் காலத்தில் சென்னை மாநிலத்தை மெட்ராஸ் அரசாங்கம் என்று அழைத்தார்கள்.


கிறிஸ்தவப் பரப்புரைகள் செய்யப்பட்டு உள்ளன. அந்தப் பரப்புரையை பிரான்சிஸ் ஹப் (Father Francois Habb) என்பவர் செய்து உள்ளார். இவர் பிரான்ஸ் நாட்டில் இருந்து 1857-ஆம் ஆண்டு பினாங்கிற்கு வந்தார். 33 ஆண்டுகள் சேவை செய்தார். இவர் திறந்த வெளியில் பரப்புரை செய்வதைக் காணலாம்.

இந்தப் பரப்புரை நிகழ்ச்சி இல்லை என்றால் இந்தப் புகைப்படம் நமக்குக் கிடைத்து இருக்காது. ஆக மதங்களுக்கு அப்பால்பட்டு ஒரு வரலாற்றுப் பதிவாகப் பார்ப்போம்.

(View of Rev. Habb conducting an open-air sermon to a large group of Indian settlers in Pinang, Malaysia.Father Francois Hab was a French MEP priest based at St Francis Xavier Church, Penang from 1857 to 1879. He died in Penang in 1890.)

இந்தப் புகைப்படத்தை எடுத்தவர் கிரிஸ்டன் பீல்பர்க் (Kristen Feilberg). இந்தப் புகைப்படம் இந்தியத் தொல்பொருள் ஆய்வுத் தொகுப்பின் ஒரு பகுதியாகும். 1867-ஆம் ஆண்டு பாரிஸ் கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப் பட்டது.

This Photograph is part of the Archaeological Survey of India Collection and was exhibited in the 1867 Paris Exhibition. Kristen Feilberg Born in Denmark, on 26 August 1839, is best known for his images captured in Sumatra, Singapore, and Penang.

After giving up his dream of becoming a painter, Feilberg followed his sister to Singapore in 1862 where he worked partly as a tobacco agent and partly as a photographer. In 1867, he set up his own studio in Penang and, the same year, exhibited 15 views of Penang and Ceylon at the Paris World Exposition.

The earliest photographs of eastern Sumatra were taken by Feilberg in 1869. Considered to be of excellent quality, they include integrated group portraits of workers on tobacco plantations. They are presented in three albums entitled "Views" at the Royal Tropical Institute.

இந்த மாதிரியான வரலாற்றுப் படங்கள் இல்லை என்றால் வந்தேறிகள் என்று சொல்கிறார்களே; அவர்களின் சீண்டல்கள் மேலும் அதிகரிக்கும். அவர்களின் வசைமொழிகளைத் தவிர்ப்பவதற்கு, எதிர்காலத்தில் இந்தப் படங்கள் துருப்புச் சீட்டுகளாக அமையும்.

அந்த வகையில் இந்த மாதிரியான படங்களைச் சமயத்துடன் தொடர்பு படுத்திப் பார்க்காமல் தமிழர்களின் வரலாற்று ஆவணமாகப் பார்க்க வேண்டும். அதுதான் அறிவார்ந்த சிந்தனை. அறிவார்ந்த பார்வை.

இந்தப் படத்தில் உள்ள தமிழர்கள் மதம் மாறினார்களா இல்லையா என்பது வேறு. ஆனால் இப்போது மலேசியாவில் வாழ்ந்து கொண்டு இருக்கும் தமிழர்களுக்கு இது ஓர் அபூர்வமான படம் கிடைத்து இருக்கிறதே. அதற்காக அந்தப் பாதிரியாருக்கு நன்றி சொல்ல வேண்டும்.

மெட்ராஸ் மாநிலத்தில் இருந்த பிரிட்டிஷ் அதிகாரிகளுக்குத் தெரியாமல் தமிழர்கள் பினாங்கில் உள்ள கரும்புத் தோட்டங்களுக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கிறார்கள். 1844-ஆம் ஆண்டில் தான் முதன்முதலில் ஒப்பந்தத் தொழிலாளர்களாகத் தமிழர்கள் மலாயாவுக்கு கொண்டு வரப் பட்டார்கள்.

மலைக்காட்டு மலையகத்தைப் பொன் விளையும் பூமியாக மாற்றிக் காட்டிய மலாயா தமிழர்களுக்கு மரியாதை செய்வோம்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
02.10.2020

சான்றுகள்:

1. Asia Pacific Journal of Social Sciences, Vol.5(2), July-Dec 2013, pp.205-229

2. Indian Labour Immigration to Malaysia 1844 - 1941

3. Sandhu, K.S (2010), Indian in Malaya: Some Aspects of Their Immigration and Settlement (1786-1957)

4. http://www.bl.uk/onlinegallery/onlineex/apac/photocoll/t/019pho001000s42u04336000.html

5. https://www.unitedphotopressworld.org/2012/08/remembering-danish-photographer-kristen.html?m=0
 

01 அக்டோபர் 2020

தமிழ் வளர்த்த ஆங்கிலேயர் எல்லீசன்

தமிழ் மலர் - 01.10.2020

தமிழ் பார்த்த தமிழ் அறிஞர்கள் பலர். தமிழ் வளர்த்த தமிழ் அறிஞர்கள் பலர். தமிழோடு வாழ்ந்த தமிழ் அறிஞர்கள் பலர். அவர்களில் தமிழர் இனம் சார்ந்த அறிஞர்கள் பலர். தமிழர் அல்லாதவர்கள் சிலர். இவர்கள் தமிழை வளர்க்க தங்களின் வாழ்க்கையையே அர்ப்பணிப்பு செய்த மாபெரும் தமிழ்த் தொண்டர்கள். தமிழ் அடியார்கள். தமிழ்த் தூதர்கள். தமிழ் தமிழ் என்று சொல்லி தமிழுக்காகவே உயிர் வாழ்ந்தவர்கள். தமிழுக்காகவே உயிர் துறந்தவர்கள்.

தமிழ் வளர்த்த பிற மொழியாளர்களில் சிலர்:

வீரமாமுனிவர் (Constantine Joseph Beschi);

கால்டுவெல் புலவர் (Robert Caldwell);

ஜி. யு. போப் (George Uglow Pope);

பீட்டர் பெர்சிவல் (Peter Percival);

ராபின் மெக்கிலாசன் (Alastair Robin McGlashan);

கமில் சுவெலபில் (Kamil Vaclav Zvelebil);

யாரொசுலாவ் வாச்செக் (Jaroslav Vacek);

ஹரால்டு ஷிப்மன் (Harold. F. Schiffman);

அலெக்சாண்டர் துபியான்சுகி (Alexander Dubyanskiy);

இரோசி யமாசிடா (Hiroshi Yamashita)

இவர்கள் உலகத் தமிழர்கள் பலருக்கும் தெரிந்தவர்கள். அறிமுகம் தேவை இல்லை. இறந்தும் இறவாமல் இன்றும் தமிழ் முகவரிகளுடன் தமிழோடு வாழ்ந்து கொண்டு இருப்பவர்கள்.

இந்தத் தமிழ் அறிஞர்களில் ஓர் ஆங்கிலேயத் தமிழறிஞரைப் பலருக்கும் தெரியாமல் உள்ளது. அவருக்கு அதிக விளம்பரம் இல்லாமல் போய் விட்டது. முகவரியைத் தொலைக்காமல் இன்றும் நம்முடன் வாழ்ந்து கொண்டு இருக்கும் ஓர் அற்புதமான ஆங்கிலேய மகனார்.

அன்னைத் தமிழுக்காக வாழ்ந்தவர். அன்னைத் தமிழுக்கு அரும் பெரும் சேவைகள் செய்தவர். இவரைப் பற்றி தமிழர்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். இவரைப் பற்றி நம்முடைய பிள்ளைகளிடம் சொல்லிக் கொடுக்க வேண்டும். உலகத் தமிழர்கள் இவரை என்றும் மறக்கவே கூடாது.

பிரான்சிஸ் வைட் எல்லிஸ் (Francis Whyte Ellis). தமிழ் மீது இவருக்கு இருந்த பற்று காரணமாகத் தன் பெயரை தமிழ் உச்சரிப்புக்கு ஏற்றவாறு எல்லீசன் என மாற்றிக் கொண்டவர். எப்பேர்ப்பட்ட தமிழ் ஆர்வலர். பிறப்பு: 1777 இறப்பு: 1819. வயது 42.

1809-ஆம் ஆண்டில் சென்னை மாநிலத்தின் நிலச் சுங்க அதிகாரியாகப் பதவி. 1810-ஆம் ஆண்டில் சென்னையின் கலெக்டர் பதவி. இவர் ஓர் ஆங்கிலேய அதிகாரி தான். பெரிய பதவிகள் தான். காலனித்துவ ஆட்சியில் ஓர் உறுப்பினர் தான்.

இருப்பினும் திராவிட மொழிகள் தொடர்பாக இவர் நிறைய ஆய்வுகள் செய்து இருக்கிறாரே. ஆங்கிலேயராக இருந்தாலும் தமிழுக்காக நிறைய சேவைகள் செய்து இருக்கிறாரே. எப்படி மறக்க முடியும்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகியவை தென்னிந்திய மொழிகள். இவை பிற இந்திய மொழிகளில் இருந்து வேறுபட்டு இருப்பதை உணர்ந்து, "திராவிட மொழிக் குடும்பம்" என்னும் ஒரு கருத்தாக்கத்தை 1816-ஆம் ஆண்டில் வெளிப்படுத்தியவர் பிரான்சிஸ் வைட் எல்லிஸ். இவர் பல இந்திய மொழிகளை கற்றார். அந்த மொழிகளில் அவருக்குத் தமிழே மிகவும் பிடித்து இருந்தது.

கால்டுவெல் புலவர். கேள்விப்பட்டு இருப்பீர்கள். இவர் 1856-ஆம் ஆண்டில் "திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்" (A Comparative Grammar of the Dravidian or South-Indian family of languages) எனும் நூலை எழுதினார்.

தமிழ் உலகில் மிகவும் புகழ் பெற்ற நூல். அவர் அந்த நூலை எழுதுவதற்கு 40 ஆண்டுகள் முன்னரே எல்லீசன் தமிழ் மொழி ஆய்வுகள் செய்யத் தொடங்கி விட்டார்.  

எல்லீசன் அவர்கள் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த மூத்த முதல் முன்னோடி. திருக்குறளுக்கு ஒரு விளக்கவுரையையும் எழுதினார். தமிழின் யாப்பு இயலைப் பற்றியும் இவர் நூல் எழுதி இருக்கிறார். தமிழ் மொழியின் செம்மையையும் தொன்மையையும் குறித்துப் பல ஆராய்ச்சிக் குறிப்புகள் எழுதி வைத்து இருந்தார்.

தமிழ் யாப்பியல் கொண்ட நான்கு ஆய்வுரைகளை எல்லீசன் எழுதி இருக்கிறார். அவை:

1. தமிழ் பேசும் நாடுகளின் வரலாறு,

2. தமிழ்மொழி, அதன் பழைய, புதிய கிளை மொழிகள்,

3. தமிழ் யாப்பியல்,

4. தமிழ் இலக்கியம்


இந்த நான்கு ஆய்வுரைகளும் வெளியிடப்படவில்லை. அதற்கு முன்னரே அவர் இறந்து விட்டார். வெளிவந்து இருந்தால் எல்லீசன் அவர்களுக்குப் பெரும் புகழை வழங்கி இருக்கலாம். இருந்தாலும் அவரின் பெயரும் புகழும் தமிழ் அறிஞர்களிடம் இன்றும் தனி ஓர் இடத்தில் உள்ளது.

தமிழ் மொழியைக் கற்று; அந்தத் தமிழ் மொழியிலேயே கவிதை எழுதும் அளவுக்குப் புலமை பெற்று இருந்தார். அவருடைய பதவிக் காலத்தில் சென்னை நகரில் குடிநீர்த் தட்டுப்பாடுகள். அவற்றைப் போக்குவதற்காகப் பல இடங்களில் கிணறுகளை வெட்டி பொது மக்களுக்கு உதவி செய்து இருக்கிறார்.

இன்னும் ஒரு ஆச்சரியமான தகவல். இந்துக்கள் சமய நம்பிக்கைக்கு ஏற்றபடி, இருபத்து ஏழு நட்சத்திரங்களின் பெயர்களைக் கொண்ட இருபத்து ஏழு கிணறுகளை வெட்டி இருக்கிறார். இந்துக்களின் சமய நம்பிக்கைகளுக்கு உடந்தையாக இருந்து இருக்கிறார். ஆக அவர் இந்து சமயத்திற்குத் துணை போனார் என்பது சிலரின் எதிர்மறைக் கருத்துகள்.

இதில் என்ன எதிர்மறைக் கருத்துகளோ தெரியவில்லை. தமிழ்நாட்டில் அப்போது வாழ்ந்த தமிழர்கள் பெரும்பாலோர் இந்துக்கள். அவர்களின் சமய நம்பிக்கைக்கு ஆதரவாக இருந்து இருக்கிறார். அதனால் பாருங்கள். அவருக்குப் பின்னர் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்த சில பல அரசியல் கழகங்கள் அவரை மறந்து விட்டன. மறக்கச் செய்து விட்டன.

தமிழ் மீது தணியாத தாகம். பண்டைய இலக்கியங்களைச் சேகரித்துப் பாதுகாத்து வந்தார். குறிப்பாக வீரமாமுனிவர் எழுதிய நூல்களை சேகரிப்பதற்காகத் தன் சொத்துக்களின் பெரும் பகுதியை விற்று இருக்கிறார். அப்படி கிடைத்து தான் ‘தேம்பாவணி’. இவர் மட்டும் முயற்சி செய்யவில்லை என்றால் இந்தக் காப்பியம் தமிழர்களுக்குக் கிடைக்காமலேயே போய் இருக்கும்.

அவர் வெட்டிய கிணறுகளுக்கு அருகில் தமிழில் கல்வெட்டுக்களையும் நட்டு வைத்தார். இராயப்பேட்டையில் ஒரு கோயில். பெரிய பாளையத்தம்மன் கோயில். அங்கே ஒரு கிணறு. அதன் கைப்பிடிச் சுவரில் ஒரு கல்வெட்டு. அதில் ஒரு குறளைப் பதித்து வைத்து இருக்கிறார் எல்லீஸ்.

’இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும் வல்லரணும் நாட்டிற் குறுப்பு’ எனும் திருக்குறள். இதில் இருந்து அவரின் தமிழ்க் காதலை நன்றாகவே உணர்ந்து கொள்ள முடிகிறது. இப்போது அந்தக் கல்வெட்டு தமிழ்நாடு தொல்லியல் துறையின் மதுரை அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக உள்ளது.

மற்றொரு கல்வெட்டு திண்டுக்கல் நகரில் உள்ள எல்லிஸ் கல்லறையின் மீது பொறிக்கப்பட்டு உள்ளது. அதில் கீழ்க்கண்டவாறு வாசகம் உள்ளது.

'எல்லீசன் என்னும் இயற்பெயர் உடையோன். திருவள்ளுவப் பெயர்த் தெய்வஞ் செப்பி; அருள் குறள் நூலுள் அறப் பாலினுக்குத் தங்கு பல நூல் உதாரணக் கடலைப் பெய்(து); இங்கிலீசு தனில் இணங்க மொழி பெயர்த்தோன்.’

என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்தக் கல்வெட்டுகளில் இருந்து எல்லீசன் அவர்களின் ஆழ்ந்த தமிழ்ப் புலமையும்; அவருக்குத் திருவள்ளுவர் மீதும்; திருக்குறள் மீதும் இருந்த ஈடுபாடுகளும் தெளிவாகத் தெரிகின்றன.

ஒரு காலக் கட்டத்தில் சென்னையின் நாணயச் சாலை இவரின் பொறுப்பில் தான் இருந்தது. அப்போது திருவள்ளுவரின் உருவம் பொறித்த இரண்டு நாணயங்களை வெளியிட்டு இருக்கிறார். பிரிட்டிஷ் மகாராணிகள் விக்டோரியா; எலிசபெத் ஆகியோர் உருவங்கள் மட்டுமே பதித்து வரும் அந்தக் காலக் கட்டத்தில் பெரும் புரட்சி செய்து இருக்கிறார்.

அது மட்டும் அல்ல. தமிழ்ச் சங்கம் ஒன்றையும் உருவாக்கினார். தனக்குக் கிடைத்த தமிழ்ச் சுவடிகளை எல்லாம் தொகுத்து நூல் வடிவில் அச்சிட்டு வெளியிட்டார். 1812-ஆம் ஆண்டில் சென்னைக் கல்விச் சங்கம் என்று ஒரு கல்லூரியை  நிறுவினார். மொழியியல் ஆய்வுகளுக்கு இந்தக் கல்லூரியே அடித்தளமாக விளங்கியது.

இவர் பல நூல்களை எழுதி இருக்கிறார். இருந்த போதும் 40 வயது வரையிலும் இவர் எந்த நூலையும் வெளியிடவில்லை. என்ன துரதிர்ஷ்டம். 41-ஆவது வயதில் காலமானார். இன்னும் பல தமிழ்ச் சேவைகள் செய்வதற்கு முன்பு எல்லீஸ் இறந்தது தமிழ் மொழிக்குப் பெரும் இழப்பு.

இவரின் தமிழ் ஆய்வுப் பணிகளுக்காகச் சென்னையில் ஒரு சாலைக்கு அவரின் பெயர் வைக்கப்பட்டது. ஒரு தமிழ் முன்னோடியைப் பெருமைப் படுத்தும் வகையில் ஒரே ஓர் அடையாளம். அந்தச் சாலை மட்டுமே உள்ளது. அண்ணா சாலைக்கு அருகில் உள்ளது. இந்தச் சாலைக்கு அருகில் எல்லீஸ்புரம் எனும் கிராம நகர்ப்பகுதி உள்ளது.

2008-ஆம் ஆண்டு. சென்னையில் ஆங்கிலேயப் பெயர்களைக் கொண்ட சாலைகளின் பெயரை மாற்றுவதற்கு சென்னை மாநகராட்சி முடிவு செய்தது. ஆனால் எல்லீஸ் சாலையின் பெயரை மட்டும் அவர்கள் மாற்றவில்லை.

அதற்குக் காரணம், எல்லீசன் ஒரு தமிழ் அறிஞர். திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த முன்னோடி. புறநானூறு, நாலடியார், சீவக சிந்தாமணி, பாரதம், பிரபுலிங்க லீலை போன்ற நூல்களுக்கு விளக்கம் கொடுத்தவர். அத்துடன் திருக்குறளுக்கு விளக்கவுரை எழுதியவர். அதனால் அவருக்கு மரியாதை வழங்கி இருக்கிறார்கள்.

இவர் பெயரில் ஒரு சத்திரம் உள்ளது. பெயர் எல்லீஸ் சத்திரம். விழுப்புரத்தின் மேற்கே உள்ள ஒரு பகுதியின் பெயர். விழுப்புரத்தில் இருந்து இந்தப் பகுதிக்குப் போகும் சாலைக்கும் எல்லீஸ் சத்திரம் சாலை என்று பெயர் வைத்து இருக்கிறார்கள்.

இதன் பெயருக்கும் புகழுக்கும் அதற்குக் காரணம் என்ன தெரியுங்களா. அங்கே  அமைந்து இருக்கும் அணைக்கட்டு. தமிழ் நாட்டில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு உள்ள 6-ஆவது அணைக் கட்டு. எல்லீஸ் சத்திரம் அணைக்கட்டு.

ஏற்கனவே ஐந்து அணைக்கட்டுகள் உள்ளன. அனியாளம் அணைக்கட்டு; கிருஷ்ணகிரி அணைக்கட்டு; நடுங்கல் அணைக்கட்டு; சாத்தனூர் அணைக்கட்டு; திருக்கோவலூர் அணைக்கட்டு. ஏழாவது புதுவை மாநிலம் அருகே உள்ள சொர்ணாவூர் அணைக்கட்டு.

எல்லீஸ் சத்திரம் அணைக்கட்டு 1949-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு 1950-ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப் பெற்றது. அவருக்கு 40 வயதாக இருக்கும் போது மதுரை மாநகரை பார்க்க ஆசைப் பட்டார். சென்னையில் இருந்து மதுரை வந்தார்.

வருடத்தைக் கவனியுங்கள். 1819. பல இடங்களைப் பார்த்தார். ஏராளமான சுவடிகளைச் சேகரித்தார். அதன்பின் ராமநாதபுரம் சென்றார். அங்கே
அவர் சாப்பிட்ட உணவில் விஷம் கலந்து இருந்தது.

மருத்துவ வசதி இல்லாத அந்த காலத்தில் மதுரைக்கு வரும் முன்னே மரணம் அடைந்தார். மதுரையைப் பார்க்க வந்த எல்லீசன் மீண்டும் சென்னை திரும்பவே இல்லை. எல்லீசன் 1819-ஆம் ஆண்டில், தன் 41-ஆவது வயதில் இறந்து போனார்.

சென்னையிலும் மதுரையிலும் அவர் சேகரித்து வைத்த ஓலைச் சுவடிகள் அனைத்தும் பெரிய பெரிய அறைகளில் மலை போல் குவிந்து கிடந்தன. அவற்றை ஆங்கிலேய அரசு ஏலம் விடுவதற்கு முடிவு செய்தது.

அந்த ஓலைச் சுவடிகளின் மகத்துவத்தைத் தமிழர்கள் யாரும் அறியவில்லை போலும். எவரும் விலை கொடுத்து வாங்க முன்வரவில்லை. அந்த ஓலைச் சுவடிகள் சும்மா கிடந்தன. அதனால் சில மாதங்களில் செல்லரித்து விட்டன.

தமிழ் வளர்த்த எல்லீசன் எனும் ஓர் ஆங்கிலேயரின் கனவு அந்தச் சுவடிகளோடு ஒரு சுவடியாய் எரிந்து சாம்பலாகி விட்டது. இருந்தாலும் தமிழக அரசு அவரை மறக்கவில்லை. அவரின் நினைவாக அண்ணாசாலைக்கு அருகில் எல்லீஸ் நகர் என்று ஒரு குடியிருப்புப் பகுதிக்கு பெயர் வைத்து இருக்கிறது.

திராவிட மொழிகளுக்கு எல்லாம் மூலமொழி; மூத்த மொழி தமிழ் என்பதை எல்லிஸ் கண்டு அறிந்தார். வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தார். மேடை போட்டுப் பேசினார். இருந்தாலும் சில அரசியல் கட்சிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. திராவிடத்தை முன்நிலைப் படுத்தின. புரியும் என்று நினைக்கிறேன்.

அதனால் தமிழ் ஆய்வு அறிஞர் எல்லீசன் இரட்டடிப்பு செய்யப் பட்டார். வரலாற்றில் இருந்து மறைக்கப் பட்டார். யார் அந்த எல்லீஸ் என்று கேட்கும் அளவிற்குத் தமிழர்கள் பலரும் மறந்து போய் விட்டார்கள். ஆனால் தமிழ் மொழி அவரை என்றைக்கும் மறக்காது. தமிழ் இருக்கும் வரையில் அவர் பெயரும் நிலைத்து நிற்கும்.

சான்றுகள்:

1. https://ta.wikipedia.org/s/us6

2. https://www.hindutamil.in/news/supplements/sontha-veedu/167522-.html

3. https://groups.google.com/g/mintamil/c/NZ1U8ZpUjqY?pli=1