08 அக்டோபர் 2020

மலாயா தமிழ்ப் பள்ளிகள்: 1912-ஆம் ஆண்டு ஆங்கிலேயர் சட்டம்

தமிழ் மலர் - 07.10.2020

தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும் தமிழ்ப் பள்ளிகளைக் காப்பாற்ற வேண்டியது அவர்களின் கடப்பாடு. தமிழ்ப் பள்ளிகளின் உரிமைகளைக் காப்பாற்ற வேண்டியது அவர்களின் கடன்பாடு. இது தமிழின் நியதி அல்ல. தமிழர் இனத்தின் உரிமை நிலைப்பாடு.

தமிழ் பள்ளிகளின் உரிமைகளைக் காப்பாற்றினால் தான்; தமிழ் மொழியைக் காப்பாற்ற முடியும். தமிழ் பள்ளிகள் இல்லை என்றால் தமிழ் மொழி இல்லை. தமிழ் மொழி இல்லை என்றால் தமிழர்கள் இல்லை. முதலில் இதை உள்வாங்கிக் கொள்ள வேண்டும்.

இந்த நாட்டில் தமிழ் மொழி மேலே எழுந்து வர முடியாமல் செய்வதற்குப் பற்பல திட்டங்கள் தீட்டப் பட்டன. அந்தத் திட்டங்களை அப்போது யார் கொண்டு வந்தார்கள்; இப்போது யார் கொண்டு வருகிறார்கள் என்பதற்கு விளக்கம் சொல்ல வேண்டியது காலத்தின் கட்டாயம். ஒரு செருகல்.

அண்மையில் ஒரு பேராசிரியரின் தமிழ் மொழிச் சாடல். அவருக்குச் சிவமயத்தில் பிரகாசமான தெய்வப் பெயர். தமிழராய்ப் பிறந்தவர். தமிழராய் வளர்ந்தவர். தமிழராய் வாழ்ந்து கொண்டு இருப்பவர். தமிழர் இனத்தின் பெயரைச் சொல்லிச் சம்பாதிக்கும் கல்வியாளர். தமிழ்ப்பள்ளிகள் வேண்டாம் என்று பட்டாசு கொளுத்திப் போட்டு இருக்கிறார். வெட்கம்.

 

மலேசியாவில் கடந்த 204 ஆண்டுகளாகத் தமிழ் மொழி கட்டிக் காக்கப்பட்டு வருகிறது. அந்தக் கால இடைவெளியில் பற்பல இடையூறுகள்; பற்பல சவால்கள்; பற்பல போராட்டங்கள். இப்படி படிப்படியாக வளர்ந்து வந்த மலாயா தமிழ்ப் பள்ளிகள் 1900-ஆம் ஆண்டுகளில் சில இடர்பாடுகளையும் சந்திக்க வேண்டி வந்தது.

அப்போது கொஞ்சம் பரவாயில்லை. விடாக்கண்டன் கொடாக் கண்டன்களின் பிரித்தாளும் கோசங்கள். இப்போது ஒன்னும் சொல்கிற மாதிரி இல்லை. குண்டக்க மண்டக்க அரசியல்வாதிகளின் வெளிவேசங்கள்.

1901-ஆம் ஆண்டில் கூட்டரசு மலாய் மாநிலங்களின் (Federated Malay States) கல்விக் கண்காணிப்பாளராகப் பதவி வகித்தவர் ஜே. டிரைவர் (Inspector of Schools, J. Driver). அப்போது மலாயாவில் பல்வேறு தாய் மொழிக் கல்வி முறை இருப்பதை அவர் விரும்பவில்லை.

தமிழர், சீனர் பிள்ளைகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கின்றன. அதனால் அவர்களுக்கு என்று தனியாகப் பள்ளிகள் தேவை இல்லை என்கிற ஒரு கருத்தை வெளியிட்டார்.
 
இந்தக் கட்டத்தில் சிலாங்கூர் மாநில ரெசிடெண்டாக டிரேச்சர் (W.H. Treacher) என்பவர் இருந்தார். இவர் தான் 1893-ஆம் ஆண்டு கிள்ளானில் இருக்கும் ஆங்கிலோ சைனீஸ் பள்ளியைத் தோற்றுவித்தவர் (ACS - Anglo Chinese School KLANG).

இவரும் தடாலடியாக ஒரு கட்டளை போட்டார். மலாய்ப் பள்ளிகளுக்கான கல்விச் செலவை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளும். அதைத் தவிர்த்து மற்றபடி மற்ற இனங்களின் தாய் மொழிக் கல்விச் செலவுக்கு அரசு பொறுப்பு ஏற்காது என்று கண்டிப்பாகச் சொன்னார். தமிழர்கள் தடுமாறிப் போனார்கள்.

இருந்தாலும் இந்தக் கட்டத்தில் தான் தமிழ்ப் பள்ளிகளைத் தற்காக்க ஒரு சட்டம் உதவிக்கு வந்தது. ஆங்கிலேயர்கள் உருக்கிய சட்டமே அவர்களுக்கு எதிராகத் திசை திரும்பியது. அதனால் ஆங்கிலேய ஆளுநர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

மலாயா ஆங்கிலேய அரசால் அமல்படுத்தப்பட்ட சட்டம். 1912-ஆம் ஆண்டு தொழிலாளர் சட்டம் (Labour ordinance). இந்தச் சட்டம் தான் தக்க தருணத்தில் தமிழ்ப் பள்ளிகளின் ஆபத்து அவசரத்திற்கு உதவி செய்தது.

1912-ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் ஒரு சட்டத்தை இயற்றி இருந்தார்கள். மலாயா தோட்டத் தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாக்கும் சட்டம். அந்தச் சட்டத்தில் ஒரு பிரிவு: ஒரு தோட்டத்தில் 7 வயதில் இருந்து 14 வயது வரையிலான பிள்ளைகள் 10 பேர் இருந்தால் போதும்; ஒரு பள்ளிக்கூடத்தைக் கட்ட வேண்டும் என்கிற சட்டப் பிரிவு.

ஆக இந்த 1912-ஆம் ஆண்டுத் தொழிலாளர் சட்டத்தின் வழி மலாயாவில் இருந்த ஒவ்வொரு தோட்ட நிர்வாகமும் கண்டிப்பாகத்  தமிழ்ப் பள்ளிகளை நிறுவ வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப் பட்டு இருந்தன.

அந்தக் கட்டத்தில் ஒவ்வொரு தோட்டத்திலும் பல பிரிவுகள் இருந்தன. அதாவது டிவிசன்கள். ஒவ்வொரு டிவிசனுக்கும் தனித்தனியாகப் ஒவ்வொரு பள்ளிக்கூடம் அமைக்கப் பட்டது. இந்தச் சட்டத்தினால் நிறைய பள்ளிகள் தோன்றின. 1920-ஆம் ஆண்டில் மலாயாவில் 122 தமிழ்ப்பள்ளிகள் உருவாகி விட்டன.

தொழிலாளர் சட்டம் அப்போது அந்தக் காலத்தில் உருவாக்கப்பட்ட சட்டம். ஆங்கிலேயர்கள் உருவாக்கிய சட்டம். இன்னும் அமலில் உள்ளது. அந்தத் தொழிலாளர் சட்டம் உதவிக்கு வந்ததால், 1925-ஆம் ஆண்டு வரை மலாயா நாட்டுத் தோட்டங்களில் 235 தமிழ்ப் பள்ளிகள் நிறுவப்பட்டன.

தோட்டப் புறங்களில் தோட்ட நிர்வாகங்களே தமிழ்ப் பள்ளிகளை நிறுவின. பட்டணங்களில் தனியார் நபர்கள்; பொது இயக்கங்கள் ஆகியோர் தமிழ்ப் பள்ளிகளை நிறுவினார்கள். சரி.

காலனித்துவ ஆட்சியில் இருந்து மலாயா சுதந்திரம் அடைந்த போது பற்பல சட்டத் திருத்தங்களைச் செய்தார்கள். ஆனால் மேலே சொன்ன அந்தத் தொழிலாளர்  சட்டத்தில் மட்டும் மாற்றம் செய்யவில்லை. அதை அப்படியே விட்டு விட்டார்கள்.

1930-ஆம் ஆண்டு முதல் முறையாக தமிழ்ப் பள்ளிகளைக் கண்காணிக்க ஆய்நர் (Inspectorate of Tamil School) ஒருவர் நியமிக்கப் பட்டார். ஜி.ஆர். பில்வர்  என்பவர் பொறுப்பு வகித்தார்.

1937-ஆம் ஆண்டில் சில குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்தன. ஆங்கிலேய அரசாங்கம் தமிழ்ப் பள்ளிகளுக்குச் சிறப்பு செயற்குழு ஒன்றை நிறுவியது.

இந்தச் செயற் குழுவின் பரிந்துரையின் கீழ் வருடத்திற்கு ஒரு மாணவருக்கு ஆறு டாலராக இருந்த நிதி ஒதுக்கீடு எட்டு டாலராக உயர்த்தப் பட்டது. அத்துடன் 1938-ஆம் ஆண்டு வரை 535 தமிழ்ப் பள்ளிகள் நாடு முழுவதும் நிறுவப்பட்டன. பெரிய ஒரு முன்னேற்றம்.

இப்படி வேகமாக வளர்ந்து வந்த தமிழ்ப் பள்ளிகளின் வளர்ச்சி இரண்டாம் உலக போரினால் தடைப் பட்டது. 1942-ஆம் ஆண்டு ஜப்பானியரின் ஆட்சிக் காலம். பெரும் பாதிப்புகள். பல தமிழ்ப் பள்ளிகள் மூடப் பட்டன. 644-ஆக இருந்த தமிழ்ப் பள்ளிகள் 1943-ஆம் ஆண்டில் 292-ஆக குறைந்து போயின.

இதனிடையே 1951-ஆம் ஆண்டில் ஓக்ஸ்பர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த எஸ்.ஜே. பர்னஸ் (Sydney Francis Barnes) என்பவரின் தலைமையில் மலாயாவில் கல்வி ஆய்வு செய்யப் பட்டது. (Report of the Committee on Malay Education, Federation of Malaya).

அதன்படி ஓர் அறிக்கை வெளியிடப் பட்டது. அதன் பெயர் பார்ன்ஸ் அறிக்கை (Barnes Report). அந்த அறிக்கையில் மலாய் மொழி அல்லாத தாய் மொழிப் பள்ளிகளுக்கு முக்கியத்துவம் தரவேண்டிய அவசியம் இல்லை என கூறப்பட்டது. இதனைச் சீனச் சமூகமும் இந்தியச் சமூகமும் கடுமையாக எதிர்த்தன.

பார்ன்ஸ் அறிக்கைக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் தமிழர்ச் சமூகத்தின் சார்பில் ஒரு கல்விக்குழு அமைக்கப் பட்டது. அந்தக் குழுவில் ம.இ.கா. தலைவர் தேவாசர்; சைவப் பெரியார் இராமநாதன் செட்டியார்; ஆதி நாகப்பன்; தவத்திரு சுவாமி சத்தியானந்தா ஆகியோர் இடம் பெற்று இருந்தனர். இந்தக் கல்விக் குழுவினர் பார்ன்ஸ் கல்வி அறிக்கைக்கு எதிராக தமிழர்களின் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

பெர்னஸ் அறிக்கையில் இருக்கும் சிக்கல்களைக் களைய அப்போதைய கல்வி அமைச்சர் ரசாக் தலைமையில் மேலும் ஒரு கல்வி குழு நியமிக்கப்பட்டது. அதுவே இப்போது பலராலும் அறியப்படும் ரசாக் திட்டம்.

இதை ரசாக் அறிக்கை (Razak Report) என்றும் அழைக்கலாம். மலாயா சுதந்திரம் அடைந்த போது கல்வி அமைச்சராக இருந்தவர் துன் அப்துல் ரசாக். பிரதமர் நஜீப் அவர்களின் தந்தையார்.

மலாயா கல்விக் கொள்கைத் தயாரிப்புக் குழுவிற்குத் தலைவராக இருந்தவர்.
மலாயா கல்விக் கொள்கையில் ஒரு சீர்த்திருத்தைக் கொண்டு வர வேண்டும் எனும் நோக்கத்தின் அடிப்படையில் ரசாக் அறிக்கை தயாரிக்கப் பட்டது.

1957-ஆம் ஆண்டு கல்வி அரசாணை பிரிவு 3-க்குள் ரசாக் அறிக்கை ஒருங்கிணைக்கப் பட்டது. மலாயா கல்விக் கட்டமைப்பின் அடிப்படையாக அந்த ரசாக் அறிக்கை விளங்குகிறது. அதன் மூலம் சீன, தமிழ்ப் பள்ளிகள் தொடர்ந்து இயங்குவதற்கு அனுமதி வழங்கப் பட்டது.

மறுபடியும் சொல்கிறேன். சீன, தமிழ்ப் பள்ளிகள் தொடர்ந்து இயங்கும் விதி; 1957-ஆம் ஆண்டு கல்வி அரசாணை பிரிவு 3-க்குள் அடங்குகிறது. அதற்கு ரசாக் அறிக்கை வழிவகுத்துக் கொடுக்கிறது.

ரசாக் அறிக்கை வருவதற்கு முன்னர் இரு வேறு அறிக்கைகள் இருந்தன. முதலாவது பார்ன்ஸ் அறிக்கை (Barnes Report). இரண்டாவது பென் பூ அறிக்கை (Fenn-Wu Report).

இந்த இரு அறிக்கைகளில் பார்ன்ஸ் அறிக்கையைப் பெருவாரியான மலாய்க்காரர்கள் ஆதரித்தார்கள். பென் பூ அறிக்கையைச் சீனர்களும் தமிழர்களும் ஆதரித்தார்கள். இனங்களுக்கு இடையில் இணக்கப் பிணக்குகள் தோன்றின. அதைச் சரி கட்டவே ரசாக் அறிக்கை தயாரிக்கப் பட்டது.

சுருக்கமாகச் சொன்னால் ரசாக் அறிக்கை என்பது ஒரு சமரசக் கல்வி அறிக்கை ஆகும். இரு தரப்புகளையும் சமரசப் படுத்தும் ஒரு திட்டம்.

ரசாக் அறிக்கை வழியாக மலாய், ஆங்கில, சீனம், தமிழ்ப் பள்ளிகள் தொடக்க நிலைப் பள்ளிகளாக இயங்க முடியும். மலாய், ஆங்கிலப் பள்ளிகள் இடைநிலைப் பள்ளிகளாக இயங்க முடியும். மலாய் மொழியைப் பயிற்று மொழியாகக் கொண்ட பள்ளிகள் தேசியப் பள்ளிகளாக அழைக்கப் பட்டன.

ஆங்கிலம், சீனம், தமிழ்ப் பள்ளிகள் தேசிய மாதிரி பள்ளிகளாக அழைக்கப் பட்டன. அதுவே இன்னும் இந்த நாட்டின் கல்வி அமைவு முறையின் அடித்தளமாக விளங்கி வருகிறது

எல்லாப் பள்ளிகளுக்கும் அரசாங்கத்தின் நிதியுதவி கிடைக்கப் பெறும். எந்தப் பள்ளியாக இருந்தாலும் ஒரே ஒரு பொதுவான தேசியக் கல்வித் திட்டத்தின் கீழ் இயங்க வேண்டும்.

ஆக அந்த வகையில் 1996-ஆம் ஆண்டு கல்விச் சட்டம் 550-இன் கீழ் தேசிய மாதிரி பள்ளிகள் இயங்குவதற்கு உரிமை வழங்கப் பட்டது. தேசிய மாதிரி பள்ளிகள் என்றால் ஆங்கில, சீனம், தமிழ்ப் பள்ளிகள் ஆகும். இந்த விளக்கம் போதும் என்று நினைக்கிறேன்.

தமிழ் பள்ளிகளின் உரிமைகளைக் காப்பாற்றினால் மட்டுமே தமிழ் மொழியின் உரிமைகளைக் காப்பாற்ற முடியும். இல்லை என்றால் தமிழ் மொழி மெல்ல மெல்லக் கரைந்து போகும்.

அந்த வகையில் மொழியும் இனமும் எப்போதுமே ஒன்றை ஒன்று சார்ந்து நிற்பவை. ஒன்று இல்லாமல் மற்றொன்று இல்லை.

தமிழ் பள்ளிகளின் உரிமைகளை எந்தச் சூழ்நிலையிலும் அடகு வைக்க வேண்டாமே. அதே போல ஒரு மொழியை அழித்து விட்டு; இனம் என்கிற ஓர் அடையாளத்தை எந்த இனமும் தக்க வைத்துக் கொள்ள முடியாது. முடியவே முடியாது. ஆக மொழியை இழந்தவர்கள் என்றைக்கும் ஓர் இனமாக கருதப் படுவது இல்லை.

உலகம் முழுவதும் தமிழர்கள் பரந்து விரிந்து வாழ்கின்றார்கள். எங்கே வாழ்ந்தாலும் அவர்கள் தங்களின் தாய் மொழியைக் கட்டி காக்கும் மரபை மட்டும் விட்டுக் கொடுக்கக் கூடாது. அப்படி விட்டுக் கொடுத்தால் அங்கே தமிழர் இனத்தின் விந்துயிர்கள் வேர் அறுக்கப் படுகின்றன. 

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்
07.10.2020
 




மலாயா தமிழர்கள்: மூன்றாவது அலை 1786

மலாயாவில் தமிழர்களின் மூன்றாவது இடம்பெயர்வு 1786-ஆம் ஆண்டில் பினாங்கில் தொடங்கியது. காடுகள் துப்புரவு. சாலைகள், வடிகால்கள், பொது கட்டிடங்கள்; பொது உள்கட்டமைப்புப் பணிகளுக்கு முன்னோடிகளாக விளங்கினர்.

Third wave migration of Tamils to Malaya started in 1786 Penang. They provided the necessary labour for public infrastructure works as clearing jungles, construction of roads, drains and public buildings.

கரும்பு, காபி, கொக்கோ, கித்தா மரங்கள் பயிர் செய்வதற்காகத் தமிழர்கள் கொண்டு வரப்படவில்லை. காடுகளை வெட்டிச் சமப்படுத்தி மனிதர்களுக்கு ஏற்ற வகையில் குடியிருப்பு பகுதிகளை உருவாக்குவதற்காகக் கொண்டு வரப்பdடார்கள்.

அப்படி வந்த தமிழர்கள் தான் பினாங்கு தீவின் காடுகளை அழித்தார்கள். ரோடுகளைப் போட்டார்கள். மனிதர்கள் நடமாடும் அளவிற்கு நல்லது செய்துவிட்டுப் போய் இருக்கிறார்கள். அவர்கள் அமைத்துக் கொடுத்த சாலைகளில் தான், இப்போது பலரும் சொகுசாய்க் கார் ஓட்டி சொகுசாய் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.  

ஒரு நாட்டின் காடுகளை அழித்து அந்த நாட்டை ஒரு சொர்க்க பூமியாக மாற்றிய அந்த தமிழர்களைப் பார்த்து வந்தேறிகள் என்று சிலர் சொல்கிறார்கள். வெட்கமாக இருக்கிறது. அப்படிச் சொல்பவர்களுக்கு கைலாஷ் நாட்டின் அதிபர் நித்தியானந்தா மொழியில் சொன்னால் நோ சூடு. நோ சொரணை. நோ நன்றி.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
08.10.2020

1. Ooi, Keat Gin. Disparate Identities: Penang from a Historical Perspective, 1780–1941. Universiti Sains Malaysia.

2. Souza, George Bryan (2014). Hinterlands and Commodities: Place, Space, Time and the Political Economic Development of Asia over the Long Eighteenth Century.


07 அக்டோபர் 2020

மலேசிய அரசியலமைப்பு: தமிழ்ப்பள்ளிகளின் உரிமைகள்

தமிழ் மலர் - 06.10.2020

1940 - 1950-ஆம் ஆண்டுகளில் மலாயாவில் 850 தமிழ்ப்பள்ளிகள் இருந்தன. இந்தப் பள்ளிகள் பெரும்பாலும் தமிழ் ஆசிரியர்களை உருவாக்கும் கல்விச் சாலைகளாக இயங்கி வந்தன. தப்பாக நினைக்க வேண்டாம். ஏன் என்றால் அப்போதைய காலக் கட்டத்தில் ஆறாம் வகுப்பு வரை படித்த மாணவர்கள் மேல்படிப்பு படிக்க ஆங்கிலப் பள்ளிகளுக்குச் செல்வது அரிது. வாய்ப்புகள் குறைவு. பெற்றோர் வருமானம் குறைவு; போக்குவரத்து வசதிகள் குறைவு. இவை இரண்டும் மூல காரணங்கள்.

World Invention Innovation Contest (WIC) 2015 held on June 5 and June 6 in Seoul. SJK (T) Yahya Awal, Johor Bahru pupils (from left) K. Praveena, S. Sharumathi, S. Nilavarasen, Mohammad Basharullah, Dhinakharan, R. Kabilan, Pratiksha and M. Jaysrina showing off the medals and certificates they won in South Korea.

ஆறாம் பகுப்பு முடிந்ததும் அப்போதைக்கு தமிழாசிரியர் வேலைதான் அவர்களுக்கு கிடைத்த ஓர் அரிய வாய்ப்பு. அவர்களை ஆசிரியர் வேலைக்கு நியமிக்கும் அதிகாரம் தோட்ட துரைமார்களுக்கு மட்டுமே இருந்தது. அந்த வகையில் பெரும்பாலான தமிழாசிரியர்கள் வெள்ளைக்காரர்களுக்கு விசுவாசமாய்ச் சேவை செய்ய வேண்டிய இக்கட்டான நிலையில் இருந்தனர்.

உண்மையைத் தான் எழுதுகிறோம். அப்போதைய காலத்தில் பெரும்பாலான தமிழ் ஆசிரியர்களுக்கு ஆங்கிலம் சரிவரத் தெரியாது. அதனால் மாணவர்களுக்கும் முறையாக ஆங்கிலம் சொல்லித்தர இயலாமல் போய் விட்டது. கூட்டிக் கழித்துப் பார்த்தால் தமிழ் மாணவர்களுக்கு ஆங்கில அறிவு இல்லாமலே போனது.

தோட்டப் புறங்களில் தமிழ்ப்பள்ளிகள் தொடங்கப்பட்ட காலக் கட்டத்தில் நகர்ப் புறங்களிலும் தமிழ்ப் பள்ளிகள் தொடங்கப் பட்டன. பெரும்பாலானவை தனியார் தமிழ்ப் பள்ளிகள் ஆகும்.

1850-ஆம் ஆண்டு மலாக்காவில் முதல் ஆங்கிலேயத் தமிழ்ப்பள்ளி (St. Xaviour Malabar School, Malacca) நிறுவப்பட்டது. அதுவே நமது மலேசிய நாட்டின் முதல் முழுநேரத் தமிழ்ப்பள்ளி ஆகும். ஏற்கனவே 1816-ஆம் ஆண்டு பினாங்கில் தமிழ் வகுப்பு தொடங்கப் பட்டது. பாதிரியார் ஆர்.எஸ். ஹட்ச்சிங்ஸ் என்பவரின் முதல் முயற்சி.

ஒரு செருகல். தமிழ்ப்பள்ளி என்பது வேறு. தமிழ் வகுப்பு என்பது வேறு. நினைவில் கொள்வோம்.

(First Tamil class in 1816 at the Penang Free School. Founded by Reverend R.S. Hutchings, Colonial Chaplain of the Anglican Church)

Vivekanada Tamil School, Petaling Jaya, Selangor 1981

1900-ஆம் ஆண்டில் பேராக், பாகான் செராயில் முதல் அரசினர் தமிழ்ப்பள்ளி நிறுவப்பட்டது. இதற்கு பிரேங்க் சுவெட்டன்ஹாம் பொறுப்பு வகித்தார். ஆங்கிலேய அரசின் முதல் முயற்சி.

1905-ஆம் ஆண்டில் கோலாலம்பூர் செந்தூல் பகுதியில் தம்புசாமிப் பிள்ளை தமிழ்ப் பள்ளி (Thambhoosamy Tamil School) தொடங்கப் பட்டது. இந்தப் பள்ளியை ராஜசூரியா என்பவர் தோற்றுவித்தார்.

1906-ஆம் ஆண்டில் மலாயாவில் 13 அரசாங்கத் தமிழ்ப் பள்ளிகளும் ஒரு கிறிஸ்துவத் தமிழ்ப் பள்ளியும் இயங்கி வந்தன. 1908-ஆம் ஆண்டு நிபோங் திபாலில் ஒரு தமிழ்ப்பள்ளி தொடங்கப் பட்டது. அதன் பெயர் சங்காட் தோட்டத் தமிழ்ப்பள்ளி. பினாங்கு மாநிலத்தைப் பொறுத்த வரையில் அதுதான் முதல் தமிழ்ப்பள்ளி.

SJK (TAMIL) CONVENT, Seremban, Negeri Sembilan STATE LEVEL SCIENCE FAIR 2012

1914-ஆம் ஆண்டு கோலாலம்பூர் பிரிக்பீல்ட்ஸ் சாலையில் விவேகானந்தா தமிழ்ப்பள்ளி தோற்றுவிக்கப் பட்டது. நிறுவியர் தம்புசாமி பிள்ளை. 1924-ஆம் ஆண்டு செந்தூல் கத்தோலிக்க திருச்சபை, செயிண்ட் ஜோசப் பெண்கள் தமிழ்ப் பள்ளியை நிறுவியது. 1925-ஆம் ஆண்டில் மலாயாவில் 235 தமிழ்ப் பள்ளிகள் இருந்தன.

1930-ஆம் ஆண்டு செந்தூல் இந்திய வாலிபர் சங்கத்தின் சார்பில் சரோஜினி தேவி தமிழ்ப் பள்ளி தோற்றுவிக்கப் பட்டது. இருந்தாலும் இந்தப் பள்ளி 1958-ஆம் ஆண்டு மூடப்பட்டது.  

1937-ஆம் ஆண்டு கோலாலம்பூர் பத்து சாலையில் சுவாமி ஆத்மராம் அவர்களின் முயற்சியில் அப்பர் தமிழ்ப்பள்ளி தோற்றுவிக்கப் பட்டது. அதே காலக் கட்டத்தில் அரசாங்கமும் சில தமிழ்ப் பள்ளிகளைக் கட்டிக் கொடுத்தது.

SJK (TAMIL) Rawang, Selangor, 2019

1913-ஆம் ஆண்டில் கிள்ளான் சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி; 1919-ஆம் ஆண்டில் செந்தூல் தமிழ்ப்பள்ளி; 1924-ஆம் ஆண்டில் கோலாலம்பூர் சான் பெங் தமிழ்ப்பள்ளி; 1937-ஆம் ஆண்டில் பங்சார் தமிழ்ப்பள்ளி போன்றவை குறிப்பிடத் தக்கவை. 1938-ஆம் ஆண்டில் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் தேவையை நிவர்த்தி செய்ய தமிழ்ப் போதானா முறை வகுப்புகள் தொடங்கப் பட்டன.

Three SJKT Ramakrishna Tamil school students do Malaysia proud. (From left) Kumuthasshri, Durrgashini and Sugheson showing their medals and their eco-friendly thermo container in Georgetown April 1, 2015

மலாயா - மலேசியாவில் தமிழ்ப்பள்ளிகளின் எண்ணிக்கை:

1920-ஆம் ஆண்டில் 122;

1925-ஆம் ஆண்டில் 235;

1930-ஆம் ஆண்டில் 333;

1938-ஆம் ஆண்டில் 547;

1942-ஆம் ஆண்டில் 644;

1943-ஆம் ஆண்டில் 292;

1947-ஆம் ஆண்டில் 741;

1957-ஆம் ஆண்டில் 888;

1967-ஆம் ஆண்டில் 686;

1977-ஆம் ஆண்டில் 606;

1987-ஆம் ஆண்டில் 553;

1997-ஆம் ஆண்டில் 530;

2007-ஆம் ஆண்டில் 523;

2008-ஆம் ஆண்டில் 523;

2009-ஆம் ஆண்டில் 523;

2010-ஆம் ஆண்டில் 523;

2011-ஆம் ஆண்டில் 523;

2018-ஆம் ஆண்டில் 525

1942-ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போர். மலாயாவில் பல தமிழ்ப் பள்ளிகள் மூடப் பட்டன. 644-ஆக இருந்த தமிழ்ப் பள்ளிகள் 1943-ஆம் ஆண்டில் 292-ஆக குறைந்து போயின.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் 1946-ஆம் ஆண்டு தமிழ் ஏழாம் வகுப்பு தொடங்கப் பட்டது. ஈராண்டுகளுக்கு ஒரு முறை தேர்வு. ஏழாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் தமிழாசிரியர்களாகச் சேர்த்துக் கொள்ளப் பட்டார்கள். 1957-ஆம் ஆண்டு நாடு சுதந்திரம் அடைந்ததும் ஏழாம் வகுப்பு நிறுத்தப் பட்டது.

2018-ஆம் ஆண்டு புள்ளி விவரங்களின்படி மலேசியாவில் 525 தமிழ்ப்பள்ளிகள்; 10,000 தமிழாசிரியர்கள். 108,000 மாணவர்கள். 4500 வகுப்பு அறைகள். 1957-ஆம் ஆண்டு நாடு சுதந்திரம் அடைந்த போது புதிய கல்விச் சட்டம் கொண்டு வரப்பட்டது. அதில் சட்டவிதி 3-இன் படி எல்லா இனங்களின் மொழியும் பண்பாடும் காக்கப்பட வேண்டும் என்று வரையறுக்கப்பட்டது.

ஆனால் அதன்படி நடைமுறையில் உள்ளதா என்பது ஒரு கேள்விக் குறியே. மலாய்ப் பள்ளிகள் மட்டுமே இந்த நாட்டில் தேசிய ஒற்றுமையைக் கொண்டு வர முடியும் என்பது அரசாங்கத்தின் எண்ணமாகும்.

1961-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சட்டவிதி. ஒரு வகையில் இந்தச் சட்டவிதி தமிழ் சீனப் பள்ளிகளுக்கு ஒரு மருட்டலாக இருந்தது. மன்னிக்கவும். உண்மையே அதுதான். கொஞ்ச காலம் அப்படி ஒரு நிலைமை இருந்தது.

அதாவது அந்தச் சட்டவிதி 21 (2)-யின் கீழ் கல்வியமைச்சருக்குச் சில கூடுதலான அதிகாரங்கள் வழங்கப் பட்டன. அவர் விரும்பினால் ஒரு சீன அல்லது தமிழ்த் தாய்மொழிப் பள்ளியைத் தேசிய மொழிப் பள்ளியாக மாற்றம் செய்ய முடியும்.

இந்தச் சட்டவிதி சற்றே சலசலப்பை ஏற்படுத்தியது. இருந்தாலும் 1996-ஆம் ஆண்டு அந்தச் சட்டவிதியில் திருத்தம் செய்யப் பட்டது.

இந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாத வாக்கில் சிமினி இடைத் தேர்தல் பிரசாரத்தின் போது ஓர் அரசியல்வாதி அந்தச் சட்டவிதியைப் பற்றி பேசி இருக்கிறார். டத்தோ நஸ்ரி அஜீஸ். சொல்லி இரண்டே நாட்களில் நான் அப்படி சொல்லவே இல்லை என்று மறுப்பு தெரிவித்தார்.

Sekolah Jenis Kebangsaan (Tamil) Ladang Bukit Bertam,
Bandar Sri Sendayan, Negeri Sembilan 26 FEBRUARI 2018


இந்த நாட்டில் உள்ள தமிழ் சீனப் பள்ளிகளைச் சட்டவிதி 21 (2)-இன் படி மூடிவிட வேண்டும் என பேசி இருக்கிறார். பெரும் சர்ச்சையை உருவாக்கிய செய்தி. ஏன் தெரியுங்களா?

டத்தோ நஜீப் ரசாக் பிரதமர் பதவியில் இருந்த போது கல்விச் சட்டம் 1961- எனும் சட்டம் திருத்தம் செய்யப் பட்டது. அதன்படி கல்விச் சட்டத்தின் சட்டவிதி 21 (2)-லும் திருத்தம் செய்யப் பட்டது.

அந்த வகையில் கல்விச் சட்டம் 1966-இன் கீழ் சீன தமிழ்ப் பள்ளிகளின் நிகழ்நிலை உறுதி செய்யப்பட்டது. அதாவது அப்பள்ளிகளின் தகுதி மறு உறுதி செய்யப் பட்டது.

(Education Act 1961 amended during the era of Datuk Seri Najib Razak, whereby Section 21 (2) was abolished and the status of SJKC and SJKT were guaranteed under the Education Act 1996)

அப்படி இருக்கும் போது தமிழ் சீனப் பள்ளிகளை மூட வேண்டும் என அந்த அரசியல்வாதி பேசியது சரியன்று. அரசியல் பிரசாரத்தில் தமிழ் சீனப் பள்ளிகளைப் பகடைக் காய்களாகப் பயன்படுத்தியது தவறு.

அதாவது சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்ட பின்னரும்  தமிழ் சீனப் பள்ளிகளைப் பிரசார ஆயுதமாகப் பயன்படுத்தியது தவறு என்பதே பொதுவான கருத்து.

சான்று: https://www.thestar.com.my/news/nation/2019/03/03/barisans-fate-to-be-discussed-this-week/

நம் நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின்படி தேசியக் கல்வி அமைப்பின் கீழ் இயங்கும் எல்லாப் பள்ளிகளும் சமமாக நடத்தப்பட வேண்டும். அவற்றின் மேம்பாட்டிற்கும் வளர்ச்சிக்கும் வழங்கப்படும் அரசாங்க நிதி ஒதுக்கீட்டில் வேறுபாடுகள் இருக்கக் கூடாது.  

Timbalan Menteri Pendidikan II Datuk Chong Sin Woon di Sekolah Jenis Kebangsaan Tamil (SJKT) Nilai 26 January 2018

ஆனால் நடைமுறையில் அப்படி இல்லை என்பதே வேதனையான செய்தி. வேறுபாடுகள் நிலவுகின்றன. அதனால் தமிழ் சீனப் பள்ளிகள் பாதிக்கப் படுகின்றன.

இதில் தமிழ்ப்பள்ளிகள் அனுபவிக்கும் வேதனைகள் சொல்லில் வடிக்க முடியா. சீனப் பள்ளிகள் பரவாயில்லை. வசதிமிக்க சீனர்கள் நிதியுதவி செய்து வருகின்றார்கள்.

தமிழ்ப்பள்ளிகளின் இந்த வேதனையான நிலையைச் சீர் செய்வதற்கு 2010-ஆம் ஆண்டுகளில் தமிழ் அறவாரியம் களம் இறங்கியது. தேசியக் கல்வி ஆலோசனை மன்றத்தின் கவனத்திற்கு சில முன்மொழிதல்களைக் கொண்டு போனது.

அந்த முன்மொழிதல்கள் வருமாறு:

(1) தேசியக் கல்விக் கொள்கையில் உட்பட்ட சீன தமிழ்ப் பள்ளிகள் எல்லாம் சமமாக நடத்தப்பட வேண்டும்.

(2) அரசாங்கம் தாய்மொழிப் பள்ளிகளுக்கு வழங்கும் நிதி ஒதுக்கீட்டில் வேறுபாடுகள் இருக்கக் கூடாது.

(3) தாய்மொழிப் பள்ளிகளுக்குத் தேவைப்படும் தகுதி பெற்ற ஆசிரியர்கள்; கட்டடங்கள்; ஆய்வுக்கூடங்கள்; நூலகங்கள்; வசதியான வகுப்பறைகள்; திடல்கள்; போன்றவை உடனடியாக வழங்கப்பட வேண்டும்.

(4) எல்லா தமிழ்ப் பள்ளிகளிலும் பாலர் பள்ளிகள் அமைக்கப்பட வேண்டும்.

(5) தாய்மொழிப் பள்ளிகள் கட்டுவதற்கான நிலம்; கட்டடம் தொடர்பான பிரச்சினைகளுக்கு அரசாங்கம் பொறுப்பு ஏற்க வேண்டும்.

(6) இடைநிலைப் படிப்பை முடித்த பின்னர் பட்டப்படிப்பு செல்வதற்கான மெட்ரிகுலேசன், எஸ்.டி.பி.எம். தொடர்பான பிரச்சினைகள் நீக்கப்பட வேண்டும்.

(7) தகுதி பெற்ற மாணவர்களுக்கு வேறுபாடு இல்லாமல் அரசாங்கப் பல்கலைக்கழகங்களில் இடம் அளிக்க வேண்டும்.

(8) உபகாரச் சம்பளம் வழங்குவதில் வேறுபாடு இருக்கக் கூடாது. அனைத்தும் வெளிப்படையாக இருக்க வேண்டும்.

(9) மாணவர்களைச் சிறுமைப் படுத்தும் நோக்கம் இருக்கக் கூடாது. இனவாதத்தைத் தூண்டி விடுவதாக அமையக் கூடாது.

(10) ஆரம்பத் தமிழ்ப் பள்ளிகள் தேசிய மாதிரி பள்ளிகள் என்று இருப்பதை தேசியப் பள்ளிகள் என மாற்றம் செய்ய வேண்டும்.

Midland Tamil School, Klang, Selangor 15 April 2012

இந்தப் பரிந்துரைகள் ஏட்டளவில் அப்படியே நிலுவையில் உள்ளன. எனக்கு வந்தால் இரத்தம். உனக்கு வந்தால் தக்காளி சூஸ் எனும் சிலேடை வாசகம் நினைவிற்கு வருகிறது.

எப்போது இந்தப் பரிந்துரைகளுக்கு தீர்வு கிடைக்கப் போகிறது. இதுவும் ஒரு மில்லியன் டாலர் கேள்வியே. மலேசிய நாடு பல்லினப் பண்பாட்டைக் கொண்டது. ஆகவே தமிழ்க் கல்வி வழியாகத் தமிழரின் பண்பாடு பேணப் படுவது அவசியமாகும். இது நியாயமான கோரிக்கை.

பெரும்பாலும் வசதி குறைந்த தமிழ்த் தொழிலாளர்களின் பிள்ளைகளே தமிழ்ப் பள்ளிகளில் கல்வி கற்கின்றனர். இந்தப் பள்ளிகளுக்கு அரசாங்கத்தின் முழுமையான உதவி கிடைப்பது இல்லை. இந்தக் குறையை அரசாங்கம் தீர்க்க வேண்டும்.

மலேசிய அரசியலமைப்புச் சட்டத்தின் வழி மலேசியத் தமிழர்கள் மலேசிய நாட்டின் அனைத்து உரிமைகளையும் பெற்ற குடிமக்கள் ஆவார்கள். மலேசியாவைப் பொறுத்த வரையில் ஒரு மலேசியத் தமிழ்க் குழந்தை தமிழ்க் கல்வி பெறச் சட்டபூர்வமான தடை எதுவும்  இல்லை என்பதே நியாயமான கருத்து.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
06.10.2020

References:

1. Arasaratnam, S. (1970). Indians in Malaysia and Singapore. London: Oxford University Press.

2. Elanjelian. (2011). Future of Tamil Schools in Malaysia. Retrieved August 31, 2020, from https://www.scribd.com/document/58799035/Future-of-Tamil-Schools-in-Malaysia

3. Omar, A. H. (2016). Language in the Malaysian Education System: Monolingual Strands in Multilingual Settings. New York: Routledge.

4. Ministry of Education Malaysia. (2017). Malaysia Educational Statistics 2017.

5. Crotty, M. (1998). The Foundations of Social Research. Thousand Oaks: Sage.

6. Paraman, V. (2011). Tamil Schools In Malaysia Denied Fully Financial Aided Status. Retrieved August 31, 2020, from www.malaysia-today.net/2011/11/05/tamil-schools-in-malaysia-denied-fully-financial-aided-status-is-unconstitutional-a-illegal/

7. Scotland, J. (2012). Exploring the philosophical underpinnings of research: Relating ontology and epistemology to the methodology and methods of the scientific, interpretive, and critical research paradigms. English Language Teaching, 5(9), 9–16.


 

06 அக்டோபர் 2020

மலாயா தமிழர்கள்: சுங்கை சிப்புட் பிளாங் தோட்டம் 1846

1840-ஆம் ஆண்டுகளிலேயே தமிழர்கள் சுங்கை சிப்புட் பகுதியில் குடியேறி விட்டார்கள். மலாயா பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ஏஜண்டுகள் அவர்களை அழைத்து வந்து இருக்கிறார்கள். ஏஜண்டுகள் என்றால் மலாயா ஆங்கிலேயத் தோட்ட நிர்வாகத்தினர் அனுப்பி வைத்த முகவர்கள். பெரும்பாலும் கங்காணிகள். 1846-ஆம் ஆண்டில் சுங்கை சிப்புட்டில் 150 - 200 தமிழர்கள் குடியேறி இருக்கிறார்கள். [1]; [2]

[1]. Twentieth century impressions of British Malaya: its history, people, commerce, industries, and resources. Cornell University Library. Arnold Wright (London). H. A. Cartwright (Singapore). Lloyd's Greater Britain Publishing Co. Ltd. (Page: 419; 422; 423)

[2]. Stenson, Maichel R, Class, Race and Colonialism in West Malaysia, St. Lucia

இன்னும் ஒரு செய்தி. அதே 1846-ஆம் ஆண்டில் மலாயாவுக்கு 1800 தமிழர்கள் கொண்டு வரப்பட்டு இருக்கிறார்கள். சுங்கை சிப்புட்டிற்கு அழைத்து வரப்பட்ட 150 - 200 தொழிலாளர்களில் சிலர் பிளாங் தோட்டத்திற்குச் சென்றார்கள். எண்ணிக்கை தெரியவில்லை. (Plang Estate) [3].

[3]. Sandhu, K.S (2010), Indian in Malaya: Some Aspects of Their Immigration and Settlement (1786-1957); Indian Labour Immigration to Malaysia 1844 - 1941.

அந்த வகையில் சுங்கை சிப்புட் முன்னோடி கரும்பு ரப்பர் தோட்டங்களில் பிளாங் தோட்டம் முன்னிலை வகிக்கிறது. முதன்முதலில் இங்கே  எலுமிச்சைப் புல் (lemon-grass) பயிர் செய்யப்பட்டது. பின்னர் காபி பயிர் செய்யப்பட்டது. அதன் பின்னர் கரும்பு; அதற்கும் பின்னர்தான் ரப்பர். இந்த தோட்டத்திற்கு 1900-ஆம் ஆண்டுகளில் தாம்சன் (J. W. Thompson) என்பவர் நிர்வாகியாக இருந்தார்.

(Mr. J. W. Thompson, the manager, a planter of wide experience, is working up the estate with characteristic energy. Whilst the rubber trees are young he hopes to produce catch crops of lemon-grass and coffee, from which good returns are anticipated.)

(Twentieth century impressions of British Malaya. Page: 423)

1840-ஆம் ஆண்டுகளில் லைபீரியா காபி மலாயாவில் பயிர் செய்யப்பட்டு நல்ல விளைச்சலைக் கொடுத்தது. மலாயாவில் முதன்முதலில் லைபீரியா காபி தான் பயிர் செய்யப்பட்டது.

இந்தத் தோட்டம் சுங்கே சிப்புட் இரயில் நிலையத்தில் இருந்து மூன்று மைல் தொலைவில் அமைந்து உள்ளது. இலங்கையின் ஆசியடிக் ரப்பர் நிறுவனத்திற்கு (Asiatic Rubber and Produce Company, Ltd.. of Ceylon) சொந்தமான ஐந்து ரப்பர் தோட்டங்களில் இந்தத் தோட்டம் இரண்டாவது பெரிய தோட்டமாக இருந்தது.

இன்றும் அந்தத் தோட்டம் உள்ளது. இப்போது 20- 30 தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இந்த பிளாங் தோட்டத்தைப் போல அதே காலக் கட்டத்தில் சுங்கை சிப்புட்டில் பல தோட்டங்கள் இருந்தன.

1898-ஆம் ஆண்டில் எடுத்த படங்களை இங்கே பதிவு செய்கிறேன். படங்கள் தெளிவாக இல்லை. இருப்பினும் நமக்குச் சான்றுகள் கிடைத்து உள்ளன. 122 ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்ட படங்கள். மலாயா தமிழர்களின் படங்கள்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
06.10.2020

ஆய்வுத் துணை நூல்கள்:

1. The lost race in British Malaya: revisiting the problems of south Indian labourers Sivachandralingam Sundara Raja & Shivalinggam Raymond Pages 115-134

2. New Towns on the Malayan Frontier from Part I - The Nineteenth Century, Lynn Hollen Lees, University of Pennsylvania, Publisher: Cambridge University Press


05 அக்டோபர் 2020

மலாயா தமிழர்கள்: புக்கிட் மெர்தாஜாம் அல்மா தோட்டம் 1853

தமிழ் மலர் - 05.10.2020

புக்கிட் மெர்தாஜாம் அல்மா தோட்டம். மலாயாவின் மிகப் பழைமையான தோட்டங்களில் முதன்மையானது. மூத்த வரலாற்றைக் கொண்டது. அது ஒரு சகாப்தம். ஒரு வரலாறு. பினாங்கு, புரோவின்ஸ் வெல்லஸ்லி பகுதியில் அல்மா தோட்டம் தான் அந்தக் காலத்தில் ஒரு முன்னோடித் தோட்டம்.

தொடக்கத்தில் அது ஒரு கரும்புத் தோட்டம். 1900-ஆம் ஆண்டுகளில் ரப்பர் தோட்டமாக மாற்றம் கண்டது. அதற்கு முன்னர் மலாயா கரும்பு, ரப்பர் தோட்டங்களைப் பற்றி ஒரு சின்ன பார்வை.

1850-ஆம் ஆண்டுகளில் மலாயாவில் நூற்றுக் கணக்கான கரும்பு, காபி, மிளகு தோட்டங்கள் தோற்றுவிக்கப் பட்டன. பெரும்பாலான தோட்டங்கள் பினாங்கு; செபராங் பிறை; பேராக் கிரியான், நெகிரி செம்பிலான் பகுதிகளில் இருந்தன. கரும்பு தோட்டங்கள் தான் மிகுதி. இந்தத் தோட்டங்கள் மலாயாவிலேயே மிக மிகப் பழமையான தோட்டங்கள்.

ரப்பர் தோட்டங்கள் தோன்றுவதற்கு முன்னர் கரும்புத் தோட்டங்கள் தான் மலாயாவில் பிரதான தோட்டங்களாக இருந்தன. 1896-ஆம் ஆண்டிற்குப் பின்னர் தான் ரப்பர் தோட்டங்கள் உருவாகின. ஆயிரக்கணக்கான, இலட்சக் கணக்கான தமிழர்கள் வேலை செய்து இருக்கிறார்கள்.

அந்தக் கரும்பு, காபி, மிளகு தோட்டங்களில் தமிழர்கள் சேவைகள் செய்து வரலாறு படைத்து இருப்பதையும் அந்த வரலாறே மறக்கவில்லை.

பினாங்கு (புரோவின்ஸ் வெல்லஸ்லி);

பேராக் (கிரியான்);

சிலாங்கூர் (கிள்ளான்; காப்பார்; கோலாலம்பூர்);

நெகிரி செம்பிலான் (லிங்கி; லுக்குட்; சிலியாவ்);

மலாக்கா (அசகான்);

ஜொகூர் (பொந்தியான்; சாஆ; கூலாய்; ஸ்கூடாய்);


போன்ற பகுதிகள் எடுத்துக்காட்டு. இவற்றுக்குப் பின்னர் நிறைய தோட்டங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. பெரும்பாலும் கரும்பு, காபி, மரவெள்ளி, கொக்கோ, மிளகு, அன்னாசி தோட்டங்கள்.

1850-ஆம் ஆண்டுகளில் கரும்புத் தோட்டங்கள் பிரபலம்.

1860-ஆம் ஆண்டுகளில் காபி தோட்டங்கள் பிரபலம்.

1870-ஆம் ஆண்டுகளில் கொக்கோ தோட்டங்கள் பிரபலம்.

1880-ஆம் ஆண்டுகளில் மரவெள்ளி; மிளகு தோட்டங்கள் பிரபலம்.

1890-ஆம் ஆண்டுகளில் ரப்பர் தோட்டங்கள் பிரபலம்.

சரி, அல்மா தோட்டத்திற்கு வருவோம். புக்கிட் மெர்தாஜாம் அல்மா தோட்டம், மலாயாவின் மிகப் பழைமையான தோட்டங்களில் ஒன்றாகும். சொல்லி இருக்கிறேன்.

இந்தத் தோட்டம் உருவான காலக் கட்டத்தில் மேலும் சில தோட்டங்கள் பினாங்கில் உருவாகி உள்ளன. பத்து காவான் தோட்டம்; மலாக்கோப் தோட்டம்; பினாங்கு தோட்டம் போன்றவை. இவை 1850-ஆண்டுகளில் உருவான தோட்டங்கள்.

அல்மா தோட்டம் 1853-ஆம் ஆண்டு வில்சன் (Wilson) எனும் ஆங்கிலேயரால் உருவாக்கப் பட்டது. 500 ஏக்கர் பரப்பளவு. அந்தத் தோட்டத்தை 1854-ஆம் ஆண்டு அல்மா லியோபோல்ட் சேசெரியாவ் (Alma Leopold Es. Chasseriau) எனும் பிரெஞ்சுக்காரர் வாங்கிக் கொண்டார். இவருடைய அல்மா எனும் பெயர்தான் அந்தத் தோட்டத்திற்கு வைக்கப் பட்டது.

இவர் பிரான்ஸ் நாட்டில் 1825-ஆம் ஆண்டு போர்டியாக்ஸ் (Bordeaux) எனும் இடத்தில் பிறந்தவர். ஆப்பிரிக்கா மவுரித்தியஸ் நாட்டில் இருந்த கரும்புத் தோட்டங்களில் பயிற்சி பெற்றவர்.

இவர் தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் சில ஆண்டுகள் வாழ்ந்தவர். தமிழ்நாடு பாண்டிசேரியில் இருந்து தமிழர்களைப் பினாங்கிற்குக் கொண்டு வந்தார். 1852-ஆம் ஆண்டு ஜாவி தோட்டத்தை (Jawee Estate) தோற்றுவித்தார்.

அந்தக் கட்டத்தில் வால்டோர் தோட்டம் (Val Dor Estate) எனும் கரும்புத் தோட்டம் இருந்தது. அந்தத் தோட்டத்தை டோனாடியூ (Donadieu) என்பவர் நிர்வாகம் செய்து வந்தார். 1853-ஆம் ஆண்டு அவருடன் சேசெரியாவ் இணைந்து வால்டோர் தோட்டத்தின் நிர்வாகியாகப் பணிபுரிந்தார்.

சேசெரியாவ் பணி புரிந்த சில மாதங்களில் பங்காளி டோனாடியூ கொலை செய்யப் பட்டார். பத்து காவான் (Batu Kawan) ஆற்றில் பயணம் செய்யும் போது கடல் கொள்ளையர்கள் அவரைத் தாக்கிக் கொடூரமாகக் கொலை செய்து விட்டனர்.

1854-ஆம் ஆண்டு. கிரிமியன் போர் உருவானக் காலக்கட்டம். அந்தச் சமயத்தில் சேசெரியாவ் இன்னொரு தோட்டத்தை வாங்கினார். அதன் பெயர் ஆயர் ரெண்டாங் தோட்டம் (Ayer Rendang). பின்னர் கொஞ்ச காலம் சென்று அதன் பெயரை மலாக்கோப் (Malakoff) என்று மாற்றினார்.

இப்போது பினாங்கில் பிரச்சினையில் போய்க் கொண்டு இருக்கிறதே ஒரு தோட்டம். மலாக்கோப் தோட்டம். காலா காலமாக வாழ்ந்து வந்த தமிழர்களை வெளியேறச் சொல்லி அலைகழித்துக் கொண்டு இருக்கிறார்களே; அந்தத் தோட்டத்திற்கு இப்படித்தான் பெயர் வந்தது.

மலாக்கோப் தோட்டத்தில் கரும்பு; மரவள்ளிக் கிழங்குகளை சேசெரியாவ் பயிரிட்டார். தமிழகத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட தமிழர்கள் தான் காடுகளை அழித்து மரவெள்ளித் தோட்டத்தை உருவாக்கினார்கள்.

அதன் பின்னர் பெர்மந்தாங் பாவ் (Permantang Pau) பகுதியில் இருந்த ஒரு நிறுவனத்திற்கு மலாக்கோப் தோட்டம் விற்கப்பட்டது. மரவெள்ளிக்குப் பதிலாகக் காபி சாகுபடி செய்யப் பட்டது.

அல்மா தோட்டத்தில் 1891-ஆம் ஆண்டு வரை சேசெரியாவ் நிர்வாகம் செய்தார். பின்னர் எஸ். எஸ். நாட்டல் (ss. Natal) எனும் கப்பல் மூலமாக பிரான்ஸ் சென்றார்.

ஆனால் தாய்நாட்டைச் சென்று அடையவில்லை. போகும் வழியில் கப்பலில் சின்ன ஒரு விபத்து. இத்தாலி ஏதான்ஸ் நகரில் காலமானார். அல்மா தோட்டத்தை உருவாக்கியவர் இப்படித்தான் அனாதையாகக் கரை தெரியாத ஒரு நாட்டில் கரைந்து போனார்.

அதன் பின்னர் அவருடைய மகன்கள் எமிலி (Emile); லியோபோல்ட் (Leopold); இருவரும் 1900-ஆம் ஆண்டில் அல்மா தோட்டத்தின் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார்கள்.

1900 நவம்பர் 28-ஆம் தேதி பதிவேட்டுச் சான்றுகளின்படி அல்மா தோட்டத்தில் 1000 தமிழர்கள் வேலை செய்து இருக்கிறார்கள். பெரும்பாலும் கரும்பு; மரவெள்ளிக் கிழங்கு பயிர் செய்யப்பட்டு உள்ளது.

அல்மா தோட்டத்திற்கு வந்த தமிழர்கள் பெரும்பாலும் பாண்டிச்சேரி; நாகப்பட்டினம் துறைமுகங்களில் இருந்து கப்பலேறி வந்தவர்கள். 1854-ஆம் ஆண்டிலேயே 120 தமிழர்க் குடும்பங்கள் அந்தத் தோட்டத்தில் வேலை செய்வதற்கு வந்து விட்டார்கள். எந்த ஆண்டு என்பதைக் கவனியுங்கள்.

1908-ஆம் ஆண்டில் அல்மா தோட்டத்தின் பரப்பளவு 3,000 ஏக்கர். 500 டன் மரவெள்ளிக் கிழங்கு சாகுபடி செய்யப் பட்டது. தவிர 30,000 தென்னை மரங்களும் இருந்து உள்ளன. 1000 ஏக்கரில் அன்னாசியும் பயிர் செய்யப்பட்டு உள்ளது. பின்னர் ரப்பர் தோட்டமாக மாற்றம் கண்டது.

மலேசியாவில் மிகவும் புகழ்பெற்ற தோட்டங்களில் அல்மா தோட்டமும் ஒன்றாகும். அல்மா தோட்டத்தின் வரலாறு மிகவும் நீண்டது. ஆனால் இப்போது இருப்பது அல்மா ரப்பர் தோட்டம் (ALMA RUBBER ESTATES SDN. BHD). வேறு பெயர். பழைய அறுவடையில் புதிய சாகுபடி.

இப்போது சீனர்கள் வைத்து நடத்திக் கொண்டு இருக்கிறார்கள். முன்பு காலத்தில் பிரெஞ்சுக்காரர்களுக்குச் சொந்தமாக இருந்தது. ஒரு செருகல்.

மலேசியாவின் மூத்த அரசியல்வாதி ராயிஸ் யாத்தீம். சில மாதங்களுக்கு முன்னர் மலாயா தமிழர்களைப் பற்றி ஒரு தப்பான வியாக்கியானம் செய்து இருந்தார். 1930-ஆம் ஆண்டில் தான் மலாயாவுக்குத் தமிழர்கள் கொண்டு வரப் பட்டார்கள் என்று கூறி இருந்தார்.

ஆசியா பசிபிக் சமூக அறிவியல் சஞ்சிகை (Asia Pacific Journal of Social Sciences, Vol.5(2) July-Dec 2013, pp.205-229); 2013-ஆம் ஆண்டு ஜுலை - டிசம்பர் இதழில் பக்கம்: 225-இல் புள்ளி விவரங்கள் உள்ளன. அதை அவர் பார்த்து இருந்தால் அப்படி ஒரு தப்பான தகவலைச் சொல்லி இருக்க மாட்டார்.

FMS 1895  Penang Tamil

1844-ஆம் ஆண்டு; அந்த ஆண்டில் தான் முதன்முதலில் ஒப்பந்தத் தொழிலாளர்களாகத் தமிழர்கள் மலாயாவுக்கு கொண்டு வரப் பட்டார்கள்.

இதற்கும் முன்னதாக 1837-ஆம் ஆண்டு 2000 தமிழர்கள் பினாங்கிற்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறார்கள்.

Asia Pacific Journal of Social Sciences, Vol.5 (2), July-Dec 2013, pp.205-229

ஆனால் அது அதிகாரப்பூர்வமற்ற குடியேற்றம். மெட்ராஸ் மாநிலத்தில் இருந்த பிரிட்டிஷ் அதிகாரிகளுக்குத் தெரியாமல் தமிழர்கள் பினாங்கில் உள்ள கரும்புத் தோட்டங்களுக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கிறார்கள்.

ஆக மலாயாவுக்குத் தமிழர்கள் தொழிலாளர்களாக முதன்முதலில் வந்தது 1837-ஆம் ஆண்டு. இதை மூத்தவர் ராயிஸ் யாத்தீம் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்கிறோம்.

1930-ஆம் ஆண்டில் தான் மலாயாவுக்குத் தமிழர்கள் கொண்டு வரப் பட்டார்கள் என்று சொன்னது உண்மையிலேயே ஒரு வரலாற்றுச் சிதைவு. மலாயா தமிழர்களின் உண்மையான வரலாற்றைத் தெரிந்து வைத்து இருக்க வேண்டும். வயதிலும் அரசியல் கலையிலும் மூத்த ஒருவருக்கு அதுவே அறிவார்ந்த அழகு.

மலேசியாவில் எத்தனையோ ரப்பர் தோட்டங்கள் தமிழர்களின் வரலாற்றைச் சொல்லிக் கொண்டு இருக்கின்றன. அவற்றுள் அல்மா தோட்டம் பல்லாயிரம் தமிழர்களுக்கு வாழ்வு அளித்த ஓர் அட்சயப் பாத்திரம்.

அதையும் தாண்டிய நிலையில் மலாயா தமிழர்களின் வாழ்வியலில் மறக்க முடியாத ஒரு வரலாற்றுச் சாசனம். 180 ஆண்டுகளுக்கு முன்னர் அல்மா தோட்டத்தில் வாழ்ந்த பழம் பெரும் தமிழர்களுக்குச் சிரம் தாழ்த்துகிறோம்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
05.10.2020

சான்றுகள்:

1. Twentieth century impressions of British Malaya: its history, people, commerce, industries, and resources: Page 373

2. http://seasiavisions.library.cornell.edu/catalog/

3. Indian Labour Immigration to Malaysia 1844 - 1941

4. Sandhu, K.S (2010), Indian in Malaya: Some Aspects of Their Immigration and Settlement (1786-1957)