12 நவம்பர் 2020

மொரீஷியஸ் தமிழர்களின் மௌன ராகங்கள்

தமிழ் மலர் - 10.11.2020

மொரீஷியஸ். பார்க்கும் இடம் எல்லாம் பச்சைப் பசேல் பசுமையின் ஜாலங்கள். கோடிக் கோடி ஆண்டு காலமாக மறைந்து கிடந்த மணல் காட்டு மஞ்சள் கோலங்கள். மனித மனங்களைச் சொக்க வைக்கும் மஞ்சக் கரை மேளங்கள். அவை எல்லாமே மொரிசியஸ் தீவின் மௌன ராகங்கள். இல்லை இல்லை. மோகன தாளங்கள்.

சொக்கத் தங்கம் பூட்டிய ஒரு சொர்க்கத் தீவு. கறுப்புக் கலரில் கரும்புத் தங்கம் கதை பேசிய உலகம் என்றும் சொல்லலாம். இயற்கை அன்னை வஞ்சகம் இல்லாமல் அழகுச் சீதனங்களை அள்ளி இறைத்து விட்டுப் போய் இருக்கிறார். அங்கே தமிழர்களின் வரலாறும் பேசப் படுகிறது. மற்றோர் தமிழர் இதிகாசம் அவதானிக்கின்றது. இங்கே எழுத்துக்களால் உயிர்ப்பிக்கப் படுகின்றது.
 
மொரீஷியஸ் ஒரு குட்டி நாடு. ஆப்பிரிக்கா கண்டத்திற்குத் தென் கிழக்கே இந்தியப் பெருங்கடலில் சின்ன ஒரு தீவு. கிழக்கே 900 கி.மீ. தொலைவில் மடகாஸ்கர் தீவு. மலேசியாவில் இருந்து 5500 கி.மீ. தூரம். ஏழு மணி நேர விமானப் பயணம். கோலாலம்பூரில் இருந்து வாரத்திற்கு இரண்டு மூன்று பயணங்கள்.  

உலகின் அழகிய தீவுகளில் மொரீஷியஸுக்கு எப்போதுமே தனி ஓர் இடம். மொரீஷியஸ் அது ஒரு தனிக்காட்டு ராணி. இந்தத் தீவின் மொத்த நீளம் 65 கி.மீ. அகலம் 45 கி.மீ. அவ்வளவு தான். தீவின் மொத்த நிலப்பரப்பு 2045 சதுர கி.மீ. (790 சதுர மைல்கள்).

பெரிய தீவு என்று சொல்ல முடியாது. 2019 கணக்குபடி மொத்த மக்கள் தொகை 1,265,475. இதில் 68 விழுக்காடு இந்திய வம்சாவளியினர்; 27 விழுக்காடு ஆப்பிரிக்கர்கள்; 3 விழுக்காடு சீனர்கள்; 2 விழுக்காடு பிரிட்டீஷ் வெள்ளை ரோசாக்கள்.

மொரீஷியஸ் தீவு நீண்ட காலமாக மனிதவாசம் அறியப் படாமலேயே அனாதையாய் கிடந்த ஒரு பச்சைப் பசுங்காடு. ஏன் என்றால் அந்தத் தீவு ஆப்பிரிக்காவில் இருந்து 2000 கி.மீ. அப்பால் தன்னந்தனியான தனிமைக் குடித்தனம் நடத்திக் கொண்டு இருந்தது. யாரும் அங்கே போக மாட்டார்கள். இருந்தாலும் வெள்ளைத்தோல் ராசாக்களின் கண்ணில் பட்டுச்சு. அம்புடுத்தான். அதன் கதையும் மாறிடுச்சு.

போனீசியர்கள் தான் (Phoenician) அங்கே முதன்முதலாகக் காலடி எடுத்து வைத்தார்கள். பாரசீகம் கிரேக்கப் பகுதிகளில் இருந்து பாய்மரக் கப்பல்களில் வழியாகப் போய் இருக்கிறார்கள். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தது.

ஆனால் அவர்கள் யாரும் அங்கே நிரந்தரமாகத் தங்கவில்லை. அவர்களுக்குப் பின்னால் புலம் பெயர்தவர்கள் தான் மொரீஷியஸ் தீவை ஒரு மோகனத் தீவாக மாற்றி இருக்கிறார்கள்.

உலகளாவிய நிலையில் பச்சைக் கம்பளம் விரித்த சுற்றுலா பூமியாகவும் மாற்றி இருக்கிறார்கள். வேறு யாராக இருக்க முடியும். நம்ப தமிழர்கள் தான்.  கடல், மலைகள், காடுகள், அருவிகள் என அந்தத் தீவுக்குள் ஓர் உல்லாச சொர்க்கமே இருக்கிறது.

உல்லாசக் களிப்பில் இன்றும் நர்த்தனம் ஆடுகிறது. அப்படித்தான் என்னால் வர்ணிக்க முடிகிறது. இப்போதும் இருக்கிறது. போய்ப் பாருங்கள். பார்க்காமல் இருப்பது தான் பெரிய குறை.

தமிழர்கள் இந்த நாட்டின் வளர்ச்சியில் மிக முக்கியமானவர்கள். அவர்களில் பலர் அமைச்சர்களாகவும் நீதிபதிகளாகவும் உயர்க் கல்விமான்களாகவும் கிராமத் தலைவர்களாகவும் சேவை செய்து இருக்கிறார்கள். அங்கே இனவதமும் இல்லை. மதவாதமும் இல்லை.

சில பள்ளிகளில் தமிழ் மொழி பாடமாகக் கற்பிக்கப் படுகிறது. இருந்தாலும் தமிழ் மொழியை வளர்க்க இன்னமும் போராடிக் கொண்டு தான் இருக்கிறார்கள். அங்கே வாழும் தமிழர்கள் நல்ல நிலைக்கு வந்து விட்டார்கள். இருந்தாலும் தங்களின் தாய்மொழியான தமிழைத் தக்க வைக்கத் தான் போராட்டம் செய்ய வேண்டி உள்ளது.

ஆங்கிலம்; பிரெஞ்சு மொழிகளின் ஆதிக்கம் வேரூன்றி விட்டது. அதனால் தமிழ்ப் பிள்ளைகள் ஆங்கிலம்; பிரெஞ்சு மொழிகளில் அதிகமாக அக்கறை காட்டுகிறார்கள். மேல்படிப்பு படிக்க இங்கிலாந்து பிரான்ஸ் நாடுகளுக்குப் போகும் போது அந்த மொழிகள் பெரிய உதவியாக இருக்கின்றன என்று சொல்கிறார்கள்.

அதிகாரப் பூர்வ மொழி ஆங்கில மொழி. அடுத்த நிலையில் பிரெஞ்சு மொழி. கலப்புத் திருமணங்களின் தாக்கத்தினால் தமிழ் மொழியின் பயன்பாடு சன்னம் சன்னமாய்க் குறைந்து வருகிறது. அங்குள்ள தமிழர்கள் பேச்சு வழக்கில் கிரியோல் (Creole) மொழியை அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள்.

19-ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கிலும் மொரீஷியஸ் தீவிற்குச் சீனர்கள் வரத் தொடங்கினார்கள். இவர்கள் பெரும்பாலும் வணிகத் துறையில் ஆர்வம் காட்டினார்கள்.

வந்தவர்கள் அனைவருமே ஆண்கள். சீனப் பெண்களைக் கூட்டி வரவில்லை. சீனப் பெண்களும் பல்லாயிரம் மைலகள் கடந்து வர ஆர்வம் காட்டவில்லை. துணிச்சல் இல்லை என்றும் சொல்லலாம்.

திருமணம் செய்து கொள்ள சீனப் பெண்கள் இல்லை. அதனால் சீன ஆண்கள் இந்தியப் பெண்களைத் திருமணம் செய்து கொண்டார்கள். அப்போது இந்தியப் பெண்கள் நிறையவே மொரீஷியஸ் தீவில் இருந்தார்கள். மாப்பிள்ளை கிடைக்காமல் தான். தெரிந்து இருந்தால் இறக்கை கட்டி பறந்து போய் இருக்கலாம் என்று சொல்ல வருகிறீர்களா. ம்ம்ம். என்ன செய்வது.

அப்படியே அங்கேயே செட்டில் ஆகி இருக்கலாம். இங்கே இந்தப் பக்கம் அரசியல்வாதிகள் பண்ற கூத்து தாங்க முடியலை சாமி. அதனால் தான் இந்த மாதிரி ஆசை எல்லாம் வந்து போகிறது.

மொரீஷியஸ் தீவிற்குச் சீனர்கள் வந்த காலக் கட்டத்தில் இந்தியப் பெண்கள் மீது சீனர்களுக்கு நாட்டம் அதைகம் இல்லை. இனம், மொழி, கலாசாரம், சமயம், பழக்க வழக்கங்கள், நிறம் என பற்பல வேற்றுமைத் தோரணங்கள்.

ஆக வேறு வழி இல்லை. அந்த வகையில் சீனர்கள் இந்தியப் பெண்களைத் திருமணம் செய்து கொண்டார்கள். 1921-ஆம் ஆண்டு மொரிசியஸ் தீவில் ஒரு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தினார்கள். இந்தியப் பெண்களைத் திருமணம் செய்து கொண்ட சீனர்களுக்கு 148 பிள்ளைகள் இருந்ததாகத் தெரிய வருகிறது.

அந்தப் பிள்ளைகளின் ஒருவர் தான் உலக வங்கியின் தலைவராக இருந்து இருக்கிறார். இன்னும் ஒருவர் தலைமை நீதிபதியாகவும் இருந்து இருக்கிறார். இங்கே விடுவார்களா. ஒரு மகா கிழவன் போட்ட சூடம் சாம்பிராணி நல்லாவே பத்திகிட்டு எரியுது. ஒரு தமிழனின் வயிற்றெரிச்சல்.

மொரீஷியஸ் தீவில் இந்துகள் தான் அதிகம். அடுத்து முஸ்லீம்கள், கிறித்துவர்கள், புத்த சமயத்தவர்கள், பஹாய் சமயத்தவர்கள் வருகிறார்கள். மொரீஷியஸ் தீவில் பெரும்பாலான மக்களின் தாய்மொழியாக மொரீஷிய கிரியோல் மொழி விளங்கி வருகிறது.

இந்தியர்களில் பலர் தங்கள் இல்லங்களில் மொரீஷிய கிரியோல் மொழியையும் தங்களின் தாய்மொழிகளையும் பயன்படுத்தி வருகிறார்கள்.

மொரீஷியஸ் குழந்தைகளுக்கு ஆறு வயதானதும் அவர்கள் மூன்றாவது மொழியைக் கண்டிப்பாப் படிக வேண்டும். வயதைக் கவனியுங்கள். இந்தி, உருது, தமிழ், மண்டரின், தெலுங்கு, மராத்தி, ஒடியா மொழிகளில் ஏதாவது ஒரு மொழி. ஆங்கில மொழியும் பிரெஞ்சு மொழியும் கட்டாய மொழிகள். மொரீஷிய கிரியோல் மொழி மூன்றாவது மொழியாக இருக்கலாம். கட்டாயம் இல்லை.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் முதன்முதலில் மொரீஷியஸ் தீவுக்குப் போனீசியர்கள் தான் வந்தார்கள். சொல்லி இருக்கிறேன். அதன் பிற்கு அரபு வணிகர்கள் போய் இருக்கிறார்கள். மொரீஷிய தீவை டினா அரோபி (Dina Arobi) என்று அழைத்து இருக்கிறார்கள்.

1507-ஆம் ஆண்டு டியோகோ பெர்னாண்டஸ் பெரேரா (Diogo Fernandes Pereira) எனும் போர்த்துகீசியர் மொரீஷியஸ் தீவிற்கு வந்தார். அவர் தான் அந்தத் தீவிற்கு வந்த முதல் ஐரோப்பியர். அங்கே ஒரு வசிப்பிடத்தைப் போர்த்துகீசியர்கள் அமைத்தார்கள்.

இருந்தாலும் அவர்கள் அதிக நாட்கள் அங்கே தங்கவில்லை. அந்தத் தீவின் மீது அவர்களுக்கு அவ்வளவாக நாட்டம் இல்லை. போர்த்துகீசியர்களின் நோக்கம் எல்லாம் வியாபாரம்.

மொரீஷியஸ் தீவின் வளப்பத்திலும் அதன் பொருளாதார வளர்ச்சியிலும் தவிர்க்க முடியாத சக்திகளாகப் புலம் பெயர்ந்த தமிழர்கள் விளங்கி இருக்கிறார்கள். எப்படி போனார்கள் என்பதைப் பின்னர் சொல்கிறேன். ஆனாலும் தமிழர்களுக்கு அந்தப் பெருமை அவ்வளவு எளிதாகக் கிடைத்து விடவில்லை. ரொம்பவும் கஷ்டப்பட்டு இருக்கிறார்கள்.

வாழ்வாதாரம் தேடி மொரீஷியஸிற்குச் சென்ற தமிழர்கள் மூன்று நூற்றாண்டுகளாகச் சலைக்காமல் மலைக்காமல் அயரா அர்ப்பணிப்புச் சேவைகளைத் தொடர்ந்து வழங்கி இருக்கிறார்கள். அவர்கள் கொடுத்த விலையை எவராலும் மதிப்பிட்டுச் சொல்ல முடியாது. அந்த அளவிற்கு உழைத்து அந்தத் தீவை ஓர் உச்சத்திற்குக் கொண்டு போய் இருக்கிறார்கள்.

இங்கே மலையூர் மலாயாவில் எப்படி உழைத்தார்களோ அதே மாதிரிதான் அங்கேயும் உழைத்து இருக்கிறார்கள். 1500-ஆம் ஆண்டுகளில் அந்தத் தீவை உலக மக்களுக்கு போர்த்துக்கீசியர்கள் தான் அறிமுகம் செய்தார்கள்.

அதன் பின்னர் நூறு ஆண்டுகள் கழித்து டச்சுக்காரர்கள் அந்தத் தீவைக் கைப்பற்றினார்கள். பிறகு 1715-ஆம் ஆண்டு பிரெஞ்சு கிழக்கிந்தியக் கம்பெனி (French East India Company,) அந்தத் தீவில் கால் பதித்தது.

வணிகம் செய்வதற்கு ஒரு துறைமுகம் அமைக்க வேண்டி வந்தது. வேலையாட்கள் தேவைப் பட்டார்கள். தமிழர்கள் அந்தத் தீவுக்கு கொண்டு போகப் பட்டார்கள். துறைமுகம் சிறப்பாகக் கட்டி முடிக்கப் பட்டது. அந்தத் துறைமுகம் தான் போர்ட் லூயிஸ் (Port Louis) துறைமுகம். கட்டி முடித்தவர்கள் தமிழர்கள்.

உலகக் காலனித்துவ ஆதிக்கத்தில் மூன்றாம் நாட்டு மக்கள் அசல் அடிமைகள் போல நடத்தப் பட்டு இருக்கிறார்கள். அதனால் மனித அடிப்படை உரிமைகளை இழந்தார்கள். காலனித்துவ ஆதிக்கத்தின் இறுக்கத்தில் இருந்து விடுபட முடியாமல் தவித்தார்கள். உழைப்புக்கான ஊதியம் சரியாகக் கிடைக்கவில்லை. அதைக் கேட்க உரிமையும் இல்லை.

வரலாற்றைப் புரட்டிப் பாருங்கள். பஞ்சம் பிழைக்க வந்த நாடுகளில் வெறிபிடித்த காலனித்துவ வாதிகளின் ஆதிக்க வெறி நன்றாகவே தெரிய வரும். அதற்குப் பலியானவர்கள் தமிழர்கள். மிக மிக மோசமாக நடத்தப் பட்டு இருக்கிறார்கள்.

அந்தப் பாவனையில் உலகின் பல்வேறு நாடுகளுக்குத் தமிழர்கள் அடிமைகளாகக் கொண்டு செல்லப் பட்டார்கள். அவ்வாறு தான் மொரீஷியஸ் மண்ணில் தமிழர்கள் முதன்முதலாகக் கால் பதித்தார்கள். மறுபடியும் சொல்கிறேன். தமிழர்கள் கொத்தடிமைகளாகத் தான் மொரீஷியஸ் தீவிற்குப் போய் இருக்கிறார்கள்.

கித்தா மரத்தில் காசு பணம் தொங்குகிறது என்று சொல்லி யாரும் கூட்டிக் கொண்டு போகவில்லை. வாழ்ந்த மண்ணிலே பசி பட்டினி. ஏழ்மையின் அலங்கோலங்கள். அதில் இருந்து தப்பிக்கவே புலம் பெயர்ந்தார்கள். ஒரு வார்த்தையில் சொன்னால் பஞ்சம் பார்த்து தஞ்சம் தேடிப் போனவர்கள்.

1721-ஆம் ஆண்டு மொரிசியஸ் தீவின் முழு கட்டுப்பாடும் பிரெஞ்சு அரசாங்கத்திடம் மாறியது. தீவின் பாதுகாப்புக்கு கோட்டைகளை அமைக்க வேண்டும். மருத்துவமனைகளைக் கட்ட வேண்டும். கரும்பு சாகுபடி செய்ய வேண்டும்.

தமிழர்கள் தொடர்ந்து இறக்குமதி செய்யப் பட்டார்கள். மொரீஷியஸ் தீவின் பொருளாதாரம் கரும்புச் சாகுபடியை நம்பியே தலை நிமிர்ந்து நின்றது. பிறகு 1810-ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்களுக்கும் பிரெஞ்சுக்காரர்களுக்கும் இடையே நீயா நானா போட்டி. அதில் ஆங்கிலேயர்கள் பிரெஞ்சுக்காரர்களைத் தோற்கடித்தார்கள். மொரீஷியஸ் தீவு முழுவதும் ஆங்கிலேயர்களுக்குச் சொந்தமானது.

அதன் பின்னர் கரும்புச் சாகுபடியில் மிகப்பெரும் புரட்சி. கரும்பு ஆலைகளும், தொழில்நுட்பங்களும் ஏகபோகமாக வளர்ந்தன. அதே சமயத்தில் தமிழர்களின் இரத்தமும் கத்தி கப்படா இல்லாமல் நன்றாகவே உறிஞ்சப் பட்டது.

1814-ஆம் ஆண்டில் ஓர் ஒப்பந்தம். பாரிஸ் நகரில் கையெழுத்தானது. மொரீஷியஸ் தீவில் பிரெஞ்சுக்காரர்களால் கொண்டு வரப்பட்ட தமிழர்கள் பிரெஞ்சு மொழியையும் பிரெஞ்சு நாட்டுச் சட்டங்களையும் பின்பற்றலாம் என்று ஆங்கிலேய அரசு அறிவித்தது.

1834-ஆம் ஆண்டில் அது ஒரு மறுமலர்ச்சி அத்தியாயம். ஆங்கிலேய அரசாங்கத்தின் கள ஆய்வு. அதன் பெயர் மகா பரிசோதனை (The Great Experiment). ஒரு செருகல். இந்தப் பக்கமும் ஒரு மகா மனிதர் மலாயா தமிழர்களையும் மகா பரிசோதனை செய்தார். நயவஞ்சகமாக விஷ ஊசியை ஏற்றியும் விட்டார். அதனால் தமிழர்கள் ஒவ்வோரு நாளும் இப்போது உயிருக்குப் போராடிக் கொண்டு இருக்கிறார்கள்.

மொரீஷியஸ் தொழிலாளர்களை அடிமைகள் போல நடத்த வேண்டாம். அவர்களுக்கு குறைந்த பட்ச சம்பளம் கொடுத்தால் போதும். அப்புறம் கொஞ்சம் சுகாதாரமான தங்கும் வசதியைக் கொடுக்க வேண்டும். ஒப்பந்தத் தொழிலாளர்களாக நடத்த வேண்டும் என்கிற ஒரு முடிவு.

இந்த நடைமுறை தான் இந்திய வரலாற்றில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் உருவாவதற்கு அடித்தளமாக ஆணிவேராக அமைந்தது.

மொரீஷியஸ் தீவில் கரும்புச் சாகுபடியில் ஈடுபட்ட நிறுவனங்களுக்கு ஆங்கிலேய அரசாங்கம் கடுமையான சட்டதிட்டங்களைக் கொண்டு வந்தது. தொழிலாளர் நலன் சார்ந்த விசயங்களில் மனித உரிமைகள் மீறப்படக் கூடாது என்று வற்புறுத்தியது.

இருந்தாலும் அவை எல்லாம் பத்தில் பதினொன்றாகிப் போனது. தொழிலாளர் நலன் என்பது ஏட்டுச் சுரைக்காய் கணக்கில் ஏலத்தில் போய் முடிந்தது.

2020 மலேசிய பட்ஜெட்டில் சிறுபான்மை இனத்தவர் ஓரம் கட்டப் பட்டது போல் அங்கே மொரீஷியஸ் தமிழர்களும் மொரீஷியஸ் பட்ஜெட்டில் ஒதுக்கி வைக்கப் பட்டார்கள். மொரீஷியஸ் தமிழர்களைப் பற்றிய மேலும் ஒரு சோகக் கதை நாளையும் வருகிறது.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
10.11.2020





 

கமலா ஹாரிஸ்: மன்னிப்புக் கோரியது டி.வி. தீகா.

தமிழ் மலர் 10.11.2020

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் அமோக வெற்றியைப் பெற்று உள்ளார். இக்கட்சி சார்பில் போட்டியிட்ட இந்திய பூர்வீகத்தைச் சேர்ந்த கமலா ஹாரிஸும் வெற்றி பெற்று சாதனை படைத்து இருக்கிறார்.

இவரது தாயார் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். மேலும் அமெரிக்க வரலாற்றில் துணை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற முதல் பெண்மணியாக கமலா ஹாரிஸ் விளங்குகிறார். இவரின் வெற்றி உலக வரலாற்றில் எழுதப் படுகிறது.

இந்நிலையில் அமெரிக்கத் துணை அதிபராக தேர்ந்து எடுக்கப்பட்ட கமலா ஹாரிஸின் தாயார் இந்தியாவைச் சேர்ந்த சட்டவிரோதக் கள்ளக் குடியேறி என தவறான தகவலை வெளியிட்டதற்காக டி. வி. தீகா நேற்று மன்னிப்பு கேட்டுக் கொண்டது.

நேற்று முன்தினம் பிற்பகல் 1.30 மணி செய்தியில் கமலா ஹாரிஸின் பின்னணி குறித்து குறிப்பிட்ட போது ஜமைக்கா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த சட்டவிரோதக் குடியேறித் தம்பதியரின் மகள் கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் இரண்டாவது முக்கியப் பதவியைப் பெற்றுள்ளார் என டி.வி தீகா குறிப்பிட்டு இருந்தது.

இந்தத் தகவல் தவறானது என்பதால் இது குறித்து மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக நேற்று டி.வி. தீகா செய்தி அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது.


 

10 நவம்பர் 2020

மலாயா தமிழர்கள்: பினாங்கு காடுகள் - 1796

தமிழ் மலர் - 09.11.2020

மலாயா தமிழர்கள். மலையூர் மண்ணின் வளப்பத்திற்கு மந்திரச் சொற்களை வாசித்துக் காட்டியவர்கள். வாசித்த அந்த மந்திரச் சொற்களின் சாரலில் நனைந்து கரைந்து கடைசியில் காணாமல் போனவர்கள். அந்த வாயில்லா ஜீவன்களுக்கு முதல் வணக்கம். முதல் மரியாதை.

மலாயா தமிழர்கள் வாசித்த அந்த மந்திரச் சொற்கள் காலத்தால் மறக்க முடியாத உண்மைகள். அந்த உண்மைகளுக்குள் இன்னும் ஓர் உண்மை மறைந்து உள்ளது. அந்தக் கித்தா தோப்பு ஜீவன்களே இந்த நாட்டின் மறக்க முடியாத ஜீவகாருண்யங்கள். அதுதான் மறைந்து கிடக்கும் உண்மை. உண்மையிலும் உண்மை.

வரலாறு தெரியாதவர்கள்; அல்லது வரலாறு படிக்காதவர்கள்; அல்லது அந்த வரலாற்றையே மறைப்பவர்களின் பார்வையில், வேண்டும் என்றால் அந்த வாயில்லா ஜீவன்களுக்குப் பெயர் வந்தேறிகளாக இருக்கலாம். ஆனால் வரலாறு தெரிந்தவர்களின் பார்வையில் அவர்கள் வந்தேறிகள் அல்ல. சத்தியமான தியாகச் சீலங்கள்.

உண்மையில் பார்க்கப் போனால் அந்தக் கித்தா தோப்பு ஜீவன்கள் தான் அச்சு அசலான மைந்தர்கள். அம்சமான மண்வாசனைகள். வாய் இருந்தும் வாய்விட்டுப் பேச முடியாத அந்த வாயில்லா பூச்சிகளினால் தான் மலைநாட்டு மண்வாசனையை இன்னமும் பலர் சுவாசித்துக் கொண்டு இருக்கிறார்கள். உண்மையைச் சொன்னால் சிலருக்குக் கோபம் வரலாம். சண்டைக்கும் வரலாம். பிரச்சினை இல்லை. சபைக்கு உதவாத சோம்பேறிகளைப் பற்றி பேசுவதினால் யாருக்கும் எவருக்கும் எந்த நன்மையும் இல்லை.

மலேசியாவில் காபி என்று சொன்னதும் ஈப்போ வெள்ளைக் காபி (Ipoh White Coffee) நினைவுக்கு வரும்; காபித்தாம் (Kopitiam); காபி சாம் (Coffee Cham); காபி சி (Kopi-c); காபி ஓ (Kopi-o); காபி மின் தி (Kopi min-tim); இப்படி இன்னும் பல வகையான் காபிகள் நினைவுக்கு வரலாம். சாப்பிட்டால் சாப்பிட்டுக் கொண்டே இருக்கலாம் எனும் டிரெண்டில் குடித்தால் குடித்துக் கொண்டே இருக்கலாம் எனும் டயலாக் சேர்ந்து வரலாம்.

ஆனாலும் மலாயாவுக்குக் காபி வந்த கதை பலருக்குத் தெரியாது. அதோடு   மலாயாவில் காபி பயிர் செய்யப்பட்ட கதையும் தெரியாது. ஒன் மினிட் பிளீஸ். இந்தக் காபி வருவதற்கு முன்னதாகவே தமிழர்கள் மலாயாவுக்கு வந்து விட்டார்கள். மெட்ராஸ் மாநிலம் தான் தமிழர்களை இலட்சக் கணக்கில் அனுப்பி வைத்த முதல் மாநிலம். இதுவும் ரொம்ப பேருக்குத் தெரியாது.

வரலாற்றைப் புரட்டிப் பாருங்கள். 1796-ஆம் ஆண்டில் பினாங்குத் தீவிற்குத் தமிழர்கள் கொண்டு வரப்பட்ட வரலாற்றுச் சுவடுகள் அப்போதைய பதிவுகளில் இருக்கும். இப்போது இருக்குமா தெரியவில்லை. அதிரசம் இடியப்பம் காணாமல் போனது மாதிரி அதுவும் அடிபட்டுப் போய் இருக்கலாம். சொல்ல முடியாது.

ஒரு திருத்தம். காபி பயிர் செய்வதற்காகத் தமிழர்கள் கொண்டு வரப்படவில்லை. முதலில் அதைத் தெரிந்து கொள்ள வேண்டும். காடுகளை வெட்டிச் சமப் படுத்தி மனிதர்களுக்கு ஏற்ற வகையில் குடியிருப்பு பகுதிகளை உருவாக்குவதற்காகத் தான் தமிழர்கள் கொண்டு வரப்பட்டார்கள்.

1786-ஆம் ஆண்டில் கெடா சுல்தானிடம் இருந்து பிரான்சிஸ் லைட் (Francis Light) ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டார். பினாங்குத் தீவைப் பெற்றுக் கொண்டார். இதுவும் ஒரு பெரிய வரலாறு.

பினாங்குத் தீவு ஆங்கிலேயர்களிடம் ஒப்படைக்கப்பட்ட போது அது ஒரு பெரிய காடாக இருந்தது. மனிதர்கள் எளிதாக நுழைந்து போக முடியாத காடுகள். ஓர் ஆள் உயரத்திற்கு நிரம்பி வழிந்த காட்டுப் புதர்கள். அந்தக் காடுகளிலும் அந்தப் புதர்களிலும் பல வகையான விலங்குகள் காட்டு தர்பார் செய்து கொண்டு இருந்தன.

அந்தப் பக்கம் காட்டு யானைகள். இன்னொரு பக்கம் காட்டுப் புலிகள். மற்றொரு பக்கம் மலைப் பாம்புகள். இந்தப் பக்கம் காண்டா கரடிகள். சும்மா சொல்லக் கூடாது. பல ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகப் பேரன் பேத்திகள் எடுத்து பெரிய காட்டு இராஜியமே செய்து இருக்கின்றன. அந்தக் காடுகளை அழிப்பதற்கு ஆட்கள் தேவைப் பட்டார்கள்.

அப்போது பினாங்குத் தீவில் பெரும்பாலும் மீனவர்கள் வாழ்ந்தார்கள். எளிய வாழ்க்கை முறை. எளிமையான வாழ்வியல் அமைப்பு. ஒருபுறம் கடலிலும் ஆற்றிலும் கிடைத்த மீன்கள். இன்னொரு புறம் மணல் மேடுகளில் கிடைத்த மரவெள்ளிக் கிழங்குகள். சுட்டுப் பொசுக்கிச் சாப்பிடுவதில் மனநிறைவு. எளிதான வாழ்க்கை. ஆக அப்படி வாழ்ந்தவர்களுக்கு காடுகளை அழிக்கும் வேலைகள் சரிபட்டு வரவில்லை.

பக்கத்தில் இருந்த இந்தோனேசியா ஜாவா தீவில் இருந்து மக்களைக் கொண்டு வந்தார்கள். இவர்கள் நல்ல உழைப்பாளிகள். ஆனால் ஒரு பலகீனம். சம்பளம் போட்டதும் சில நாட்களுக்கு வேலைக்காட்டுப் பக்கமாய்த் தலை வைத்துப் படுக்க மாட்டார்கள். வேலைகள் அப்படி அப்படியே நின்று போகும்.

அதனால் தமிழர்கள் கொண்டு வரப் பட்டார்கள். ஒப்பந்தக் கூலிகளாக அல்ல. இந்தியாவை ஆட்சி செய்த வெள்ளைக்காரர்களின் அரசியல் கைதிகளாக வந்தார்கள். அதாவது நாடு கடத்தப் பட்டார்கள். அப்படி வந்தவர்கள் எல்லாம் அங்கே இந்தியாவின் விடுதலைக்காகப் போராடியவர்கள்.

ஆக அப்படிக் கொண்டு வரப்பட்ட தமிழர்கள் தான் பினாங்கு மலைக் காடுகளை வெட்டிச் சீர் செய்தார்கள். காண்டா காடுகளை வெட்டித் துப்புரவு செய்தார்கள். குடியிருப்புப் பகுதிகள் உருவாக்கித் தந்தார்கள்.

காடு மேடுகளாய்ப் பரந்து கிடந்த பினாங்கை மக்கள் வாழும் வசிப்பிடமாக மாற்றிக் காட்டினார்கள். அதன் பின்னர் தான் 1800-ஆம் ஆண்டுகளில் பினாங்கில் காபி பயிர் செய்யப் பட்டது.

ஏற்கனவே 1750-ஆம் ஆண்டுகளில் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்குத் தமிழர்கள் நாடு கடத்தப்பட்டு வந்தார்கள். இந்தியாவில் வெள்ளையர்களை எதிர்த்தவர்கள் எல்லாம் அந்தமானுக்கு நாடு கடத்தப் பட்டார்கள். 1786-ஆம் ஆண்டு பினாங்குத் தீவு திறக்கப் பட்டதும் அங்கேயும் தமிழர்கள் நாடு கடத்தப் பட்டார்கள்.

ஆக அப்படி வந்த தமிழர்கள் தான் பினாங்கு தீவின் காடுகளை அழித்தார்கள். ரோடுகளைப் போட்டார்கள். மறுபடியும் சொல்ல வேண்டி வருகிறது. இல்லை என்றால் மறந்து போகும். அப்புறம் என்னாங்க. நேற்று என்ன சாப்பிட்டோம் என்பதையே மறந்து போகும் காலத்தில் ரொம்ப பேர் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். ஆக எல்லாவற்றையுமே இரண்டு மூன்று முறை சொல்ல வேண்டி வருகிறது.

 

மலாயாவுக்கு வந்த தமிழர்கள், மற்றவர்கள் சுகமாய் மகிழ்ச்சியாய் வாழும் அளவிற்கு நல்லது செய்துவிட்டுப் போய் இருக்கிறார்கள். அவர்கள் போட்டுக் கொடுத்த சாலைகளில் தான் பலரும் இப்போது சொகுசாய்க் கார் ஓட்டிக் கொண்டு இருக்கிறார்கள். என்னையும் பாருங்க என் அழகையும் பாருங்க என்று செல்பியும் எடுத்துக் கொள்கிறார்கள்.

அந்தச் சொகுசு ராசா ராசாத்திகளில் சிலர்; காடுகள் அழித்தவர்களைப் பார்த்து வந்தேறிகள் என்கிறார்கள். அந்தச் சொகுசு லூசுகளை நினைத்தால் வெட்கமாக இருக்கிறது. நோ சூடு. நோ சொரணை.

இன்னும் ஒரு விசயம். இங்கிலாந்தில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு நாடு கடத்தப்பட்ட ஆங்கிலேயர்கள் தான் இப்போது ஆஸ்திரேலியாவின் சொந்தக்காரர்களாக இருக்கிறார்கள். அவர்கள் தான் இன்றைக்கும் ஆஸ்திரேலியாவை ஆட்சி செய்கிறார்கள். ஆனால் பினாங்கிற்குக் கொண்டு வரப்பட்ட தமிழர்கள் என்ன ஆனார்கள். எங்கே போனார்கள். நீங்களே ஒரு முடிவு செய்து கொள்ளுங்கள்.

என்னைக் கேட்டால் அட்ரஸ் இல்லாமல் கழற்றிவிடப் பட்டார்கள். அதுவே ஒரு வரலாற்றுக் கொடுமை.

ஆக இப்படியும் சொல்லலாம். 1780-ஆம் ஆண்டுகளில் பினாங்கு தீவு மலாயா கட்டுமானத்தின் முன்வைப்பு. பினாங்கு முன்னோடி பிரான்சிஸ் லைட் அவர்களின் முன்னெடுப்பு. அதுவே தமிழர்களின் முதன்மைப் பங்களிப்பு.

இன்னும் ஒரு விசயம். பினாங்கு தமிழர்கள் தான் பினாங்கு கொடிமலையில் பாதை அமைத்துக் கொடுத்தார்கள். பினாங்கு கொடி மலையில் இருந்து குடி நீரை மாட்டு வண்டிகளில் தோம்பு கட்டிக் கொண்டு வந்தார்கள். ஜார்ஜ் டவுன் நகரத்தில் வாழ்ந்த எல்லா இன மக்களுக்கும் விநியோகம் செய்தார்கள். அவர்கள் கொண்டு வந்து கொடுத்த பச்சைத் தண்ணீரைக் குடித்து அவர்களுக்கே பச்சையாகத் துரோகம் நினைகலாமா?

பினாங்கு வனப்பூங்காவை 150 ஆண்டுகளுக்கும் மேலாக பராமரிப்புச் செய்தார்கள். அது மட்டும் அல்ல. குட்டித் துறைமுகமாக இருந்த பினாங்கு துறைமுகத்தைப் பெரிய பரிமாணத்தில் வார்த்து பெருமை செய்து இருக்கிறார்கள். பினாங்கு சாலைகளின் கட்டுமானத்தை அமைத்துக் கொடுத்தவர்களும் மலாயா தமிழர்கள் தான். ரொம்ப வேண்டாம்.

பாயான் லெப்பாஸ் விமானத் திடலை அமைத்துக் கொடுத்தவர்களும் மலாயா தமிழர்கள் தான். பினாங்கு ஜெட்டி துறைமுகத்தை அமைத்துக் கொடுத்தவர்களும் அவர்கள் தான். கொடிமலைக்கு இரயில் பாதையைப் போட்டுக் கொடுத்தவர்களும் அவர்கள் தான்.

1867-ஆம் ஆண்டு பினாங்கில் வாழ்ந்த தமிழர்கள் பற்றிய ஓர் அபூர்வமான புகைப்படம் உள்ளது. 1800-ஆம் ஆண்டுகளின் தொடக்கத்திலேயே தமிழர்கள் மலாயாவுக்குக் கொண்டு வரப் பட்டதைச் சித்தரிக்கும் படம்.

நமக்கு கிடைத்த சான்றுகளின் படி, 1837-ஆம் ஆண்டு 2000 தமிழர்கள் பினாங்கிற்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறார்கள். இது அதிகாரப்பூர்வமற்ற குடியேற்றம். மெட்ராஸ் அரசாங்கத்திற்குத் தெரியாமல் நடைபெற்றது. முன்னர் காலத்தில் சென்னை மாநிலத்தை மெட்ராஸ் அரசாங்கம் என்று அழைத்தார்கள்.

ஒரு கட்டத்தில் பினாங்கில் சமயப் பரப்புரைகள் செய்யப்பட்டன. அதையும் படம் எடுத்து இருக்கிறார்கள். அந்தப் பரப்புரையை பிரான்சிஸ் ஹப் (Father Francois Habb) என்பவர் செய்து உள்ளார். இவர் பிரான்ஸ் நாட்டில் இருந்து 1857-ஆம் ஆண்டு பினாங்கிற்கு வந்தார். 33 ஆண்டுகள் சேவை செய்தார்.

இந்தப் பரப்புரை நிகழ்ச்சி இல்லை என்றால் இந்தப் புகைப்படங்கள் நமக்குக் கிடைத்து இருக்கா. ஆக மதங்களுக்கு அப்பால்பட்டு ஒரு வரலாற்றுப் பதிவாகப் பார்ப்போம்.

அந்தப் புகைப்படங்களை எடுத்தவர் கிரிஸ்டன் பீல்பர்க் (Kristen Feilberg). இந்தப் புகைப்படங்கள் இந்தியத் தொல்பொருள் ஆய்வுத் தொகுப்பின் ஒரு பகுதியாகும். 1867-ஆம் ஆண்டு பாரிஸ் கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப் பட்டது.

இந்த மாதிரியான வரலாற்றுப் படங்கள் இல்லை என்றால் வந்தேறிகள் என்று சொல்கிறார்களே; அவர்களின் சீண்டல்கள் மேலும் அதிகரிக்கும். அவர்களின் வசைமொழிகளைத் தவிர்ப்பவதற்கு, எதிர்காலத்தில் இந்தப் படங்கள் துருப்புச் சீட்டுகளாக அமையட்டும்.

அந்த வகையில் இந்த மாதிரியான படங்களைச் சமயத்துடன் தொடர்பு படுத்திப் பார்க்காமல் தமிழர்களின் வரலாற்று ஆவணமாகப் பார்க்க வேண்டும். அதுதான் அறிவார்ந்த சிந்தனை. அறிவார்ந்த பார்வை.

இந்தப் படத்தில் உள்ள தமிழர்கள் மதம் மாறினார்களா இல்லையா என்பது வேறு. ஆனால் இப்போது மலேசியாவில் வாழ்ந்து கொண்டு இருக்கும் தமிழர்களுக்கு அபூர்வமான படங்கள் கிடைத்து இருக்கின்றனவே. அதற்காக அந்தப் பாதிரியாருக்கு நன்றி சொல்ல வேண்டும்.

ஒரு கட்டத்தில் மெட்ராஸ் மாநிலத்தில் இருந்த பிரிட்டிஷ் அதிகாரிகளுக்குத் தெரியாமல் தமிழர்கள் பினாங்கில் உள்ள கரும்புத் தோட்டங்களுக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கிறார்கள். இதுவும் ஓர் அரிய தகவல்.

1844-ஆம் ஆண்டில் தான் ஒப்பந்தத் தொழிலாளர்களாகத் தமிழர்கள் மலாயாவுக்கு கொண்டு வரப் பட்டார்கள். நூற்றுக் கணக்கான காபி, மிளகு, கொக்கோ, கரும்பு, ரப்பர் தோட்டங்களில் வேலைக்கு அமர்த்தப் பட்டார்கள்.

மலைக்காட்டு மலையகத்தைப் பொன் விளையும் பூமியாக மாற்றிக் காட்டிய மலாயா தமிழர்களுக்கு நாம் எப்போதும் மரியாதை செய்வோம்.

கொட்டும் மழையிலும் கொக்கரிக்கும் வெயிலிலும் வெறும் வேட்டி முண்டாசு கட்டிக் கொண்டு பினாங்கு தீவின் கட்டுமானத்தில் முதுகெலும்பாய் வாழ்ந்து காட்டியவர்கள். அரசியல் கைதிகளாகவும் அற்றைக் கூலிகளாகவும் பரிணமிததவர்கள். பினாங்குத் தீவின் வளப்பத்திற்கும் ஒட்டு மொத்த மாலாயாவின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருந்தவர்கள்.

இவர்களைப் போய் வந்தேறிகள் என்று சொல்கிறார்களே. என்னங்க சொல்வது. இதில் இப்போது ரவிக்கையும் சேலையும் பாரம்பரிய உடை என்று வேறு சொல்கிறார்கள். எங்கேயாவது மனுசன் இல்லாத காட்டுக்கு ஓடிப் போகலாம் போல இருக்கிறது. அங்கே ஓடினாலும் ரசமும் சாம்பாரும் எங்கள் பரம்பரை சொத்து என்று சொல்லி அங்கேயும் வரலாம். ஒன்றுமே புரியலீங்க.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
09.11.2020

சான்றுகள்:

1.  In 1786, Francis Light established Penang the first British trading post in the Far East. - https://penangport.gov.my/en/public/history-penang-port

2. Penang Then & Now: A Century of Change in Pictures - https://arecabooks.com/product/penang-then-now-a-century-of-change-in-pictures/

3.  Father Francois Hab was a French MEP priest based at St Francis Xavier Church, Penang from 1857 to 1879.

(Photo images published with permission  granted per public interest. No part of this content may be reproduced, republished, or retransmitted by any means without the expressed written consent of author.)




கோவிட்-19 பாதிக்கப்படாத மாநிலங்களுக்கு சி.எம்.சி.ஓ.?

தமிழ் மலர் - 0911.2020

இன்று முதல் பல மாநிலங்களுக்கும் மாவட்டங்களுக்கும் நிபந்தனையுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாடு (சி.எம்.சி.ஓ.) விதிக்கப் படுவதை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று லிம் கிட் சியாங் வலியுறுத்தி உள்ளார்.

சி.எம்.சி.ஓ. கட்டுப்பாடுகள் உயிர்களைக் காப்பாற்றவும் மக்கள் வாழ்க்கையை நடத்தவும் உதவியாக இருக்க வேண்டுமே ஒழிய, துன்பத்தையும் துயரத்தையும் அளிப்பதாக இருக்கக் கூடாது என அவர் கேட்டுக் கொண்டார்.

கடந்த 14 நாள்களாக ஜொகூரில் உள்ள மெர்சிங், சிகாமட், பத்து பகாட் ஆகிய மாவட்டங்களில் கோவிட்-19 தொற்று இல்லை. ஆனால், ஜொகூர் முழுமைக்கும் சி.எம்.சி.ஓ.வை விதிப்பது நியாயம் இல்லை என்று அவர் சுட்டிக் காட்டினார்.

ஜொகூர், மலாக்கா, நெகிரி செம்பிலான், புத்ரா ஜெயா, பேராக், திரெங்கானு மாநிலங்களில் சி.எம்.சி.ஓ. இன்று முதல் அமலுக்கு வருவதாக அரசு நேற்று அறிவித்தது.

நேற்று மதியம் வரை, நெகிரி செம்பிலானில் 389 பேர், பினாங்கில் 127, கெடாவில் 106, பேராக்கில் 87, திரெங்கானுவில் 50, ஜொகூரில் 50, புத்ரா ஜெயாவில் 32, மலாக்காவில் 12 பேர் கோவிட் 19-ஆல் பாதிக்கப் பட்டனர்.

இதனிடையே சிலாங்கூர், கோலாலம்பூர், சபா ஆகிய மாநிலங்களில் சி.எம்.சி.ஓ. டிசம்பர் 6-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப் பட்டது.

எம்.சி.ஓ. காலத்தில் மாநிலங்கள், மாவட்டங்களுக்கு இடையே போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்படும். பள்ளிகள், கல்விக் கழகங்கள், குழந்தை பராமரிப்பு இல்லங்கள், கேளிக்கை விடுதிகள் யாவும் மூடப்படும்.

சமூக, கலாசார நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கப் படுகிறது. தொழில் துறை, உணவு வளாகங்கள், பெட்ரோல் நிலையங்கள் இயங்க நேரக் கட்டுப்பாடு விதிக்கப் படுகிறது.

பெர்லிஸ், பகாங், கிளந்தான் ஆகிய மாநிலங்களுக்கு எம்.சி.ஓ. விதிக்கப் படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
 

09 நவம்பர் 2020

மலாயா தமிழர்கள்: சுங்கை கிரியான் இரயில் பாலம் 1897

தமிழ் மலர் - 08.11.2020

மலையூர் மலாயா நாட்டை மாண்புறச் செய்த முன்னோடித் தலைவர்கள்  மலாயா தமிழர்கள். மறுபேச்சுக்கு இடம் இல்லை. மறுபக்கமாய் நின்று மறுத்துப் பேச வரலாற்றுக்கும் மனசு இல்லை. மலாயா கித்தா மரங்களுக்கும்; மலாயா கம்பிச் சடக்குகளுக்கும் மட்டும் வாய் இருந்தால் வந்தேறிகள் என்று சொல்பவர்களைக் கடித்துக் குதறிச் சாகடித்து விடும்.

ஏன் தெரியுங்களா. மலாயா தமிழர்கள் இந்த நாட்டிற்காக விசுவாசமாய் வாழ்ந்தவர்கள். நாணயமாய் உழைத்தவர்கள். நம்பிக்கையாய்ப் பேர் போட்டவர்கள். காட்டுப் பூமியை நாட்டுப் பூமியாக மாற்றிக் காட்டியவர்கள். மறுபடியும் சொல்கிறேன். மாற்றுக் கருத்துகள் இல்லை.

மலாயாவின் வளர்ச்சி வரலாற்றைத் திருப்பிப் போட்டுப் பாருங்கள். அங்கே முதலில் வந்து நிற்பவர்கள் மலாயா தமிழர்கள் தான். அவர்கள் போட்ட கம்புச் சடக்குகள் போதும். பல ஆயிரம் ஆண்டுகளுக்கும் கதைகள் பேசும். அவர்கள் நட்டு வைத்த கித்தா காடுகள் போதும். காலா காலத்திற்கும் வரலாறுகள் பேசும்.

அந்தக் கம்பிச் சடக்குகளில் சொகுசாய் ஊர்க்கோலம் போகும் சிலர் அந்த விசுவாசிகளைப் பார்த்து வந்தேறிகள் என்று சொல்கிறார்கள். நோ சூடு. நோ சொரணை. நோ நன்றி. சொல்பவர்களுக்குத் தான்.

வெள்ளைக்காரர்களை விடுங்கள். வந்தேண்டா பால்காரன் என்று வந்தார்கள். வக்கணையாகச் சுரண்டினார்கள். வயிறு முட்டத் தின்றார்கள். போய்ச் சேர்ந்தார்கள். முடிஞ்சது கேஸ்.

இதில் ஆற்றில் மீன்பிடித்துக் கொண்டு இருந்த வெள்ளந்திகளைச் சேர்க்க வேண்டாம். சுக்கிரத் திசைச் சுழற்றிச் சுழற்றி அடித்தால் அப்புறம் எப்படி.

Image Courtesy of Kesavan Samu

அந்தக் காலத்தில் மலாயாவில் எல்லோரும் மரவள்ளிக் கிழங்கைச் சுட்டுச் சாப்பிட்டு இருக்கிறார்கள். என்னையும் சேர்த்து தான். இப்போதைய பலருக்கும் தெரியாத விசயம். சொன்னாலும் நம்ப மாட்டார்கள். ஆக அந்த மரவள்ளிக்கிழங்கு வரலாற்றை மட்டும் என்றைக்கும் நாம் மறக்கவே கூடாது. மறந்தால் பெரிய பாவம்.

கடந்த நான்கு நாற்றாண்டுகளில் மலாயாவில் பல நூறு கொக்கோ தோட்டங்கள், பல நூறு காபி தோட்டங்கள், பல நூறு மரவள்ளி தோட்டங்கள், பல ஆயிரம் ரப்பர் தோட்டங்கள் திறக்கப் பட்டன. பல ஆயிரம் மைல்களுக்கு இரயில் பாதைகள் போடப் பட்டன.

அந்தத் தோட்டங்களில் வேலை செய்வதற்காகவும்; இரயில் பாதைகள் போடுவதற்காகவும் தமிழர்கள் அழைத்து வரப்பட்டார்கள். அவர்களை ஆறு பிரிவினராகப் பிரிக்கலாம்.
 
(முதலாவது) 1786 - 1800;
(இரண்டாவது) 1801 - 1843;
(மூன்றாவது) 1844 - 1866;
(நான்காவது) 1867 - 1899;
(ஐந்தாவது) 1900 - 1930;
(ஆறாவது) 1931 - 1957

மலாயா தமிழர்கள் போட்ட கம்பிச் சடக்குகளில் பெரிய பெரிய பாலங்களையும் கட்டி இருக்கிறார்கள். மலாயாவில் நீங்கள் எங்கே போனாலும் அங்கே உள்ள இரயில் பாதைகளில் கறுப்புக் கலரில் இரும்புப் பாலங்களைப் பார்க்கலாம். இன்னும் ஆங்காங்கே ஒட்டி உரசி உறவாடிக் கொண்டு இருக்கின்றன.

அந்தப் பாலங்களை எல்லாம் கட்டியவர்கள் யார் தெரியுங்களா. தமிழர்கள் தான். தமிழர்களின் நிறத்திலேயே பாலங்களும் இருக்கும். அந்தக் காலத்துத் தமிழர்கள் நமக்கு விட்டுச் சென்ற வரலாற்றுச் சீதனங்கள். அவை எல்லாம் மலாயா நாட்டில் முத்திரை பதித்த முதல் முத்துகள். உதிர்ந்து போன மூத்த நிலை முன்னோர்களின் காலச் சுவடுகள்.

அந்த வகையில் இன்றைக்கு கிரியான் ஆற்று இரயில் பாலத்தைப் பற்றி தெரிந்து கொள்வோம். மலாயாவின் முதல் இரயில் பாதை 135 ஆண்டுகளுக்கு முன்னால் போடப் பட்டது. அந்த முதல் இரயில் பாதையைப் பதித்தவர்களும் தமிழர்கள் தான்.

மலாயாவில் அமைக்கப்பட்ட முதலாவது இரயில் பாதை, தைப்பிங் - போர்ட் வெல்ட் இரயில் பாதை (Taiping – Port Weld railway). போர்ட் வெல்ட் என்பது இப்போது கோலா செபாத்தாங் (Kuala Sepetang). இந்தப் பாதை 1885-ஆம் ஆண்டு உருவாக்கப் பட்டது.

1880-ஆம் ஆண்டு சர் பெரடரிக் வெல்ட் (Sir Frederick Weld) என்பவர் தொடுவாய் குடியேற்றப் பகுதிகளின் கவர்னராக மலாயாவுக்கு வந்தார். இவர் ஏற்கனவே 1864-ஆம் ஆண்டில் நியூஸிலாந்து பிரதமராகப் பதவி வகித்தவர். இவரின் பெயரில் தான் போர்ட் வெல்ட் நகருக்கும் பெயர் வைக்கப் பட்டது.

1881-ஆம் ஆண்டில் தைப்பிங் போர்ட் வெல்ட் பகுதியில் நிறையவே ஈய வருமானம். ஆங்கிலேயர்களுக்கு ஆசை இறக்கை கட்டிப் பறந்தது. ரொம்பவே சம்பாதிக்க முடியும் என்பதை உணர்ந்தார்கள். அப்போது பேராக் மாநிலத்தின் ஆங்கிலேய ஆளுநராக சர் ஹியூ லோ (Sir Hugh Low) இருந்தார். இவரின் ஏற்பாடில் தான் கிரியான் பாலம் கட்டப்பட்டது.

1897-ஆம் ஆண்டு சுங்கை கிரியான் இரயில் பாலம் (Sungei Kerian Railway Bridge) கட்டப்பட்டது. இதைக் கட்டியவர்கள் மலாயா தமிழர்கள். தைப்பிங் போர்ட் வெல்ட் இரயில் பாதையை அமைத்த தமிழர்கள் தான் இங்கே சுங்கை கிரியானுக்கும் கொண்டு வரப் பட்டார்கள். பாலத்தைச் சில மாதங்களில் கட்டி முடித்து இருக்கிறார்கள்.

இந்தக் கிரியான் பாலம் செபாராங் பிறை பகுதியில் நிபோங் திபால் நகருக்கு அருகாமையில் கட்டப்பட்டது. பெரும்பாலும் தண்டவாளத் இரும்புத் தூண்கள். பத்து மீட்டர் நீளம். ஏறக்குறைய 40 அடிகள்.

இன்னும் ஒரு விசயம். பேராக், தைப்பிங் பெரிய மார்கெட்டைக் கட்டியவர்களும் இதே தமிழர்கள் தான். 1884-ஆம் ஆண்டு இந்தச் சந்தை கட்டப்பட்டது. பலருக்கும் தெரியாத உண்மை. 1884-ஆம்; 1885-ஆம் ஆண்டுகளில் தைப்பிங் இரயில் பாதை நிர்மாணிக்கப்படும் போதே தைப்பிங் மார்க்கெட்டும் கட்டப்பட்டது.

தைப்பிங் - போர்ட் வெல்ட் இரயில் பாதை நிர்மாணிப்பில் ஈடுபட்டு இருந்த தமிழர்கள் தைப்பிங் மார்கெட் கட்டுமானத்திற்கும் கொண்டு வரப் பட்டார்கள்.  

இரயில் பாதையில் போடுவதற்குப் பயன்படுத்தப் பட்ட பெரிய பெரிய இரும்புத் தண்டவாளங்களும் தைப்பிங் மார்க்கெட்டிற்கு கொண்டு வரப் பட்டன. பெரிய பெரிய தேக்கு மரங்களும் கொண்டு வரப் பட்டன. அந்தத் தண்டவாளக் கம்பிகளை நிமிர்த்தி தூண்களாக நிறுத்தி வைக்கும் பணிகளைச் செய்தவர்கள் மலாயா தமிழர்கள் ஆகும்.

இன்னும் ஒரு முக்கியமான தகவல். அந்தக் காலத்தில் தைப்பிங், கிரியான், செபராங் பிறை பகுதிகளில் நிறையவே காட்டு யானைகள், காட்டுப் புலிகள், காட்டுக் கரடிகள், காட்டுப் பன்றிகள். ஒரு நூறு நூற்றைம்பது வருடங்களுக்கு முன்னால் நடந்த கதை. நிச்சயமாக மலாயா காடுகளில் காட்டு ஜீவன்களின் அல்லி தர்பாருக்கு குறைச்சல் இல்லை.

இந்த காட்டு மிருகங்களின் அட்டகாசங்கள் கொஞ்சம் நஞ்சம் அல்ல. காலம் காலமாகக் காடுகளிலேயே வாழ்ந்த ஜீவன்கள் அல்லவா. அந்தக் காட்டில் போய் மனிதர்கள் போய் சடக்கு போட்டால் அந்த ஜீவன்கள் சும்மா இருக்குமா. அவர்களைப் பின்னிப் பிராண்டி பிய்த்து எடுத்து இருக்கின்றன.

தைப்பிங் - போர்ட் வெல்ட் இரயில் பாதை போடும் போது சில யானை புலிகளைச் சுட்டுக் கொன்று இருக்கிறார்கள். அப்படி என்றால் என்ன. யானை புலிகளின் இராஜியம் கொடிகட்டிப் பறந்து இருக்க வேண்டும். அப்படித்தான் தெரிகிறது.

தமிழகத்துக் கிராமங்களில் பஞ்சாயத்து செய்த நாட்டாமைகள் போல இவையும் நாலு மரங்களுக்கு நடுவில் மேடை போட்டு காட்டாமை செய்து இருக்கலாம். கற்பனை செய்து கொள்ளுங்கள்.

மலாயா தமிழர்கள் கட்டிய இரயில் பாலங்களில் கிரியான் பாலத்திற்கு தனி வரலாறு உண்டு. ஏறக்குறைய 50 தமிழர்கள் அந்தக் கட்டுமானத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள். பாலத்திற்குப் பக்கத்திலேயே குடிசைகளை அமைத்து வேலை செய்து இருக்கிறார்கள். கிரியான் ஆற்று மீன்களைப் பிடித்துச் சமைத்துச் சாப்பிட்டு இருக்கிறார்கள்.

ஓய்வு நேரங்களில் பக்கத்தில் இருந்த கள்ளுத் தோப்புப் போய் மகிழ்ச்சியாக இருந்து இருக்கிறார்கள். எவரும் மனைவி மக்களைக் கொண்டு வரவில்லை.

இவர்கள் தான் மனிதர்கள் நுழைய முடியாத நிபோங் திபால் காடுகளில் இரயில் பாதை போட்டுக் கொடுத்து இருக்கிறார்கள். சுருக்கமாகச் சொன்னால் காட்டுப் புலிகள் கதைகள் பேசிய நிபோங் திபால் காடுகள். இப்போது அந்தக் காடுகள் எல்லாம் இல்லை. பழைய சரித்திரங்கள் எல்லாம் மறைந்து போய் விட்டன.

எங்கே பணத்தைக் கொள்ளை அடிக்கலாம். எப்படி இனங்களைப் பிரித்துப் பார்க்கலாம். எப்படி மதவாதத்தைத் திணிக்கலாம் என்று ரூம் போட்டு டிஸ்கஷன் செய்பவர்கள் இருக்கும் வரையில் சரித்திரங்கள் செத்துப் போகும். மனிதநேயம் மரித்துப் போகும்.

அந்தக் காலக் கட்டத்தில் கிரியான் பகுதியில் பல காபி, கரும்பு, ரப்பர் தோட்டங்கள் இருந்து உள்ளன. பைராம் தோட்டம். ஜாவி தோட்டம். வால்டோர் தோட்டம். கிரியான் தோட்டம். மலாக்கோப் தோட்டம்.

இப்படி நிறைய தோட்டங்கள். அந்தத் தோட்டங்கள் இன்னும் இருக்கின்றன. அங்கேயும் ஆயிரம் பிரச்சினைகள். காலா காலமாக வாழ்ந்த மலாக்கோப் தோட்ட மக்களையே வெளியேற்றி வருகிறார்கள். அப்புறம் என்னங்க.

அந்தக் காலத்தில் அதாவது 1870-களில் செபாராங் பிறை காண்டா காடுகள் நிறைந்த இடம். அங்கே கரும்புத் தோட்டங்களை உருவாக்கியவர்கள் வெள்ளைக்காரர்கள். உருக்குலைந்தவர்கள் தமிழர்கள்.

கிரியான் முழுமைக்கும் காபிச் செடிகளுக்கு களை பிடுங்கியவர்களும் தமிழர்கள் தான். மலைகளும் காடுகளும் நிறைந்த கிரியான் நிலப் பகுதியை இந்த அளவிற்கு வளம் பெறச் செய்வதில் முன்னோடிகளாக விளங்கி இருக்கிறார்கள்.

மலாயா தமிழர்கள் எவ்வளவோ துயரங்களை அனுபவித்து இருக்கிறார்கள். தங்கள் உறவுகளை இழந்து இருக்கிறார்கள். நாட்டின் விடுதலைக்கு எவ்வளவோ போராடி இருக்கிறார்கள். இவை எல்லாம் கற்றுத் தேர்ந்த கலப்பு இரத்தம் இல்லாதவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

நம்மை வந்தேறிகள் என்று சொல்பவர்கள் யார் என்று பார்த்தால் இந்தோனேசியா; இந்தியா; பாகிஸ்தானில் இருந்து இங்கு வந்து கலப்பு திருமணம் செய்து கொண்டவர்களின் வாரிசுகள் தான். மாடாய் உழைத்த மனிதர்களைப் பார்த்து வந்தேறிகள் என்று நாவு கூசாமல் நையாண்டி பண்ணி மகிழ்ச்சி காண்கிறார்கள். ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். நோ சூடு. நோ சொரணை. நோ நன்றி.

அப்போதைய மலாயா தமிழர்களின் இப்போதைய வாரிசுகள் இனவாத மதவாதங்களின் கோபுர வாசல்களில் சிக்கிக் கொண்டு தவிக்கிறார்கள்.

இந்த நாட்டின் உள்கட்டமைப்புகளில் தமிழர்கள் பங்களிப்புகள் நிறையவே உள்ளன. அந்தப் பங்களிப்புகள் மறைக்க படுவது மட்டும் அல்ல; ஒட்டு மொத்தமாக இரட்டடிப்புகளும் செய்யப் படுகின்றன.

மலாயா இரயில் பாதை நிர்மாணிப்புகளில் அந்த இரயில் பாதைச் சிலிப்பர் கட்டைகளுக்கு அடியேலேயே பல ஆயிரம் தமிழர்கள் அடைக்கலம் அடைந்து இருக்கிறார்கள். சமாதியாகிய நிலையில் இன்றைய வரைக்கும் நெடிய உறக்கம் கொள்கிறார்கள். நல்ல தூக்கம். தட்டி எழுப்பினாலும் அந்தச் சடக்கு ஜீவன்கள் எழுந்து வர மாட்டார்கள்.

அவர்கள் வேலை செய்யும் போது பற்பல இன்னல்கள். காட்டுப் புலிகள் வந்தன. காட்டுக்குள் பலரை இழுத்துச் சென்றன. காட்டு யானைகள் வந்தன. கம்பிச் சடக்கிலேயே மிதித்துப் போட்டன.

கரடிகள் வந்தன. வெறி பிடித்துக் கடித்துப் போட்டன. சிறுத்தைகள் வந்தன. சீறிப் பாய்ந்து கிழித்துப் போட்டன. மலைப்பாம்புகள் வந்தன. வயிற்றுக்குள் கரைத்துக் கொண்டன. இதில் கணக்கு வழக்கு இல்லாமல் மலேரியா கொசுக்கள். பலரைக் கொன்று குவித்தன.

அந்த அப்பாவித் தமிழர்கள் அனுபவித்த வேதனைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். இருந்தாலும் அவர்களுக்கு மரியாதை செய்ய வேண்டாம். அஞ்சலி செய்ய வேண்டாம். எட்டடுக்கு மாடியில் ஏற்றி வைத்து புகழாரம் செய்ய வேண்டாம். வந்தேறிகள் என்று மட்டும் சொல்ல வேண்டாம். புண்ணியம்.

இந்த நாட்டுக்குத் தமிழர்கள் 1930-ஆண்டு தான் வந்தார்கள் என்று காமெடி பண்ண வேண்டாம். பெரிய புண்ணியம்.

ஆயிரம் மேகங்கள் வரலாம். ஆயிரம் மேகங்கள் போகலாம். ஆனால் ஆதவனை ஒருக்காலும் மறைக்க முடியாது. அதே போல இந்த நாட்டிற்காக உழைத்த தமிழர்களின் பங்களிப்புகளை எந்தக் கொம்பனாலும் மறைக்க முடியாது; மறுக்கவும் முடியாது.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
08.11.2020

சான்றுகள்:


1.Iron bridge over Sg Kerian has vanished  - https://www.thestar.com.my/news/nation/2009/12/12/iron-bridge-over-sg-kerian-has-vanished

2.Kerian railway bridge was constructed to connect the town to Parit Buntar - https://www.nas.gov.sg/archivesonline/photographs/record-details/d54dae97-1161-11e3-83d5-0050568939ad

3.Rail transport in Malaysia - https://en.wikipedia.org/wiki/Rail_transport_in_Malaysia#Timeline

4.Sg Kerian bridge demolished for rail project - https://www.thestar.com.my/news/nation/2009/12/13/sg-kerian-bridge-demolished-for-rail-project