24 நவம்பர் 2020

தாகித்தி தீவில் தவித்த கன்னிகள் - 1

தமிழ் மலர் - 24.11.2020

கரும்புக் கொல்லையில் காய்ந்த மாடுகள். ஒரு காலத்துக் கரிசல் காட்டுக் கிராமத்துச் சிலேடை. பலருக்குத் தெரியும். சிலருக்குத் தெரியாது. பரவாயில்லை. அந்தச் சிலேடை இந்தக் கதையிலும் உங்கள் மனதைச் சின்னதாய்ச் சலசலக்கச் செய்யலாம். சன்னமாய்க் கலகலக்கச் செய்யலாம். மென்மையான நளினங்கள் மெலிதாய் உரசிச் செல்லலாம். நவரச நயங்கள் லேசாய் உராய்ந்தும் பார்க்கலாம். பார்த்துக் கொள்ளுங்கள்.

எத்தனையோ வரலாற்றுக் கலகங்கள்; எத்தனையோ புரட்சிகள். படித்து இருப்பீர்கள். கேள்விப் பட்டும் இருப்பீர்கள். ஆனால் இப்போது நீங்கள் படிக்கப் போகிற புரட்சி இருக்கிறதே, சும்மா சொல்லக் கூடாது. ஒரு மாதிரியான புரட்சி. ஏறக்குறைய 200 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தது. கன்னிப் பெண்களைக் கடத்திக் கொண்டு போன புரட்சியில் ஒரு கதை.

ஆழமான பசிபிக் பெருங்கடல். பிஜி தீவுக்கு அருகில் கப்பல் போய்க் கொண்டு இருக்கிறது. கப்பலில் வேலை செய்தவர்களில் ஒரு கும்பல். புரட்சி என்று சொல்லி கலகம் செய்கிறது. அப்படியே கப்பலையும் கைப்பற்றுகிறது.

கப்பல் தலைவனையும் அந்தத் தலைவனின் உதவியாளர்களையும் பிடித்து ஒரு சின்னப் படகில் ஏற்றி 'செத்தாலும் பிழைத்தாலும் போய்த் தொலையுங்கள்' என்று நடுக்கடலில் அனாதையாக விட்டு விட்டுச் செல்கிறது.

கப்பலைக் கைப்பற்றிய புரட்சிக் கும்பல் நேராக ஒரு தீவிற்குப் போகிறது. அங்கே இருந்த பூர்வீகக் கன்னிப் பெண்கள் சிலரை வளைத்துப் பிடிக்கிறது. கைகளையும் கால்களையும் கட்டிப் போட்டு ஒரு கண்காணா தீவிற்குக் கடத்திக் கொண்டு போகிறது.

அவர்கள் போனது மனித வாடையே இல்லாத மாசில்லாக் கன்னித்தீவு. அதிலே இந்தச் சின்னச் சின்னப் பெண்கள் ஓரம் கட்டப் படுகிறார்கள்.

புரட்சிக் கும்பலில் பலர் பல ஆண்டுகள் பெண்களைப் பார்க்காமல் கருகிப் போன சருகுகள். சொர்க்கத்தின் வாசல்படிகள் திறந்துவிடப் படுவதாக கும்பலின் தலைவன் சொல்கிறான். அப்புறம் என்ன.

அந்தக் காஞ்சிப் போன கருவாடுகள் பெண்களைத் தேர்ந்து எடுத்துக் கொள்வதில் போட்டி போடுகிறார்கள். இதில் பெண்கள் பற்றாக்குறை. அடிபிடி; வெட்டுக்குத்து; கொலை தவறிய கொலைகள்.


அதன் பின்னர் அவர்கள் ஏறி வந்த கப்பலை அப்படியே சுவடு தெரியாமல் எரித்தும் விடுகிறார்கள். அப்புறம் அந்தக் குட்டித் தீவில் ஒரு சகாப்தம் உருவாகியது.

மறுபடியும் சொல்கிறேன். கரும்புக் கொல்லையில் காய்ந்த மாடுகளின் கதை. நினைவு படுத்துவதில் தப்பு இல்லை. அந்தக் கதையில் இதையும் போட்டுச் சமாளித்துக் கொள்ளுங்கள். பரிதாபத்திற்குரிய சில புத்திசாலிகளின் அரிச்சுவடியில் அவதரித்த ஒரு வரலாற்றுக் கதை.

இதில் ஒரு முக்கிய விசயம். அதிலும் ஓர் அதி சுவராசியமான விசயம் இருக்கிறது. கடத்தல் கும்பலைச் சேர்ந்த ஆண்கள் எல்லோரும் ஆங்கிலேயர்கள். சிலர் கிரிமினல் குற்றவாளிகள்.

இங்கிலாந்து நாட்டுத் தலைநகர் லண்டனில் இருந்த சிறைகளில் திருடு, கொள்ளை, கடத்தல் குற்றங்களுக்காகத் கம்பி எண்ணியவர்கள். அவர்களின் வயது 20-இல் இருந்து 50 வரையில் இருக்கும்.

கப்பல் பயணத்திற்காக அவர்களின் சிறைத் தணடனை பேரம் பேசப் பட்டது. ’ ஒழுங்காக நடந்து கொண்டால் உங்களுடைய தண்டனைகள் ரத்துச் செய்யப்படும்’ என்று சொல்லித் தான் அந்தக் கைதிகளை அனுப்பி வைத்தார்கள்.

ஆனால் நடந்த கதையே வேறு. முதலுக்கே மோசமாகிப் போனது. கடத்தப்பட்ட பெண்கள் எல்லோரும் தாகித்தி (Tahiti) தீவில் வாழ்ந்த பாலினேசிய சுதேசிப் பெண்கள். அனைவரும் பதின்ம வயது பெண்கள். 13 லிருந்து 18 வயது வரை.

கடத்தல் கும்பலின் அந்தக் குடியேற்றம்தான் உலக வரலாற்றில் பிட்காய்னர்கள் (Pitcairners) எனும் ஒரு புதிய சந்ததியையே உருவாக்கிக் கொடுத்தது. வெகு நாட்களுக்கு அந்தப் புதிய சந்ததியினர் பற்றி வெளி உலகத்தில் யாருக்கும் எவருக்கும் தெரியாமலேயே இருந்தது.

கடத்தல் நிகழ்ச்சிக்குப் பின்னர் அங்கே அந்தத் தீவில் பல வெட்டுக் குத்துகள். பல வெட்டுக் காயங்கள். பல கொலைகள். அதன் பிறகுதான் அங்கே ஒரு புதிய சமுதாயம் தோன்றியது. கப்பல் புரட்சியில் தோன்றிய ஒரு சமுதாயம்.

புரட்சி என்ற சொல் இன்றைய காலத்தில் ஓர் இறுக்கத்தைக் கொடுக்கலாம். வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் அந்தச் சொல் பல இடங்களில் புரையோடிப் போய்க் கிடப்பதையும் பார்க்கலாம்.

பிரெஞ்சுப் புரட்சி; சீனக் கலாசாரப் புரட்சி (Cultural Revolution); போல்ஸ்விக் புரட்சி (Bolshevik Revolution); அதிபர் மார்க்கோஸ் புரட்சி; வெற்றிப் புரட்சி (Glorious Revolution);  பர்மியப் புரட்சி; பெனாசிர் புட்டோ காலத்து இராணுவப் புரட்சி என்று ஏகப்பட்ட புரட்சிகள்; அவற்றால் ஏகப்பட்ட தழும்புகள்.

புரட்சி என்ற சொல்லுக்கு பூசை புனர்ப்பவம் செய்தவர்கள் கிரேக்கர்கள். அரிஸ்டாட்டில், பிளாட்டோ போன்றவர்கள் தான் மூத்த முன்னோடிகள். இந்தப் புரட்சிகள் எல்லாவற்றுக்கும் மணி கட்டும் கன்னிகா புரட்சியைச் செய்தவர்கள் தாகித்தி கடத்தல்கார்கள். சரி.

வெஸ்ட் இண்டீஸ் என்று சொல்லப்படும் மேற்கு இந்தியத் தீவுகளில் ஒன்று ஜமாய்க்கா. 1700-ஆம் ஆண்டுகளில் கறுப்பர்கள் நிறைய பேர் அங்கு உள்ள கரும்புத் தோட்டங்களில் அடிமைகளாக வேலை செய்து வந்தார்கள்.


முதலாளிகள் எல்லாம் வெள்ளைத் தோல் வெள்ளைக்காரர்கள் தான். இந்த அடிமைகளுக்குச் சாப்பாடு போடுவது என்பது ஒரு பெரிய பிரச்னை. மெட்ராஸ் சைனா பஜார் மொழியில் சொன்னால் படா பேஜார்.

கடுமையான உடல் உழைப்பு. அதனால் அவர்கள் ரொம்பவும் சாப்பிட்டார்கள். இந்தச் சாப்பாட்டுத் தகராற்றுத் தாண்டவத்தில் பல அடிமைகள் சுட்டுக் கொல்லப் பட்டார்கள். பதிலுக்கு முதலாளிகளில் சிலரும் சாகடிக்கப் பட்டார்கள்.

அடிமைகளுக்கு எவ்வளவுதான் சாப்பாடு போட்டாலும் உஹூம்... கட்டுபடி ஆகவில்லை. கொடுக்கக் கொடுக்க இறங்கிக் கொண்டே இருந்தது. எல்லாரும் சாப்பாட்டு ராமன்களாக இருக்கிறார்களே என்று பயந்து போய் மாற்றுவழி தேடினார்கள்.


ஒரு சின்னச் செருகல். மாடு மாதிரி ஒருவன் உழைக்க வேண்டும். தசைகளைப் பிழியும் வியர்வை கடலாக மாற வேண்டும். இரத்தம் ஆவியாக மாற வேண்டும். எலும்புகளின் சுண்ணாம்பு எரிந்து போக வேண்டும். உடல் ஊன்கள் செல்லரித்துப் போக வேண்டும். ஆனால் சாப்பாடு மட்டும் கொஞ்சம் கூடுதலாகக் கேட்கக் கூடாது. என்னங்க இது. ரொம்ப அநியாயம் இல்லை.

பணமா கேட்டார்கள். சாப்பாடு தானே கேட்டார்கள். கொடுத்தால் என்னவாம். கொறைஞ்சா போவுது. கொத்தடிமை சஞ்சிக் கூலிகளாக மலாயாவுக்கு வந்த நம்முடைய தாத்தா பாட்டிகளும் இப்படித் தானே கஷ்டப் பட்டு இருக்க வேண்டும். நினைக்கையில் மனம் வலிக்கிறது.

நம்ப கதைக்கு வருவோம். அந்தச் சமயத்தில் ஜேம்ஸ் குக் (James Cook) எனும் கடலோடி இருந்தார். உலகம் சுற்றி வந்த முதல் கடலோடி. கடல் பயணங்களின் முன்னோடி.


பசிபிக் தீவுகளில் ஈர பலாக்காய் (Bread Fruit) இருப்பதாகச் சொன்னார். அந்தக் காய் கறுப்பர்களின் சாப்பாட்டுத் தட்டுப்பாட்டைக் குறைக்கலாம் என்றும் பரிந்துரை செய்தார்.

இந்த ஈர பலாக்காய் நம் மலேசியாவிலும் இருக்கிறது. மலேசிய மொழியில் சுக்குன் என்று அழைக்கிறார்கள். தெரியும் தானே. துண்டு துண்டுகளாக வெட்டி கோதுமை மாவில் போட்டு பலகாரம் செய்வார்கள். இதன் அறிவியல் பெயர் Artocarpus Communis.

என் வீட்டிலும் ஒரு மரம் இருக்கிறது. காய்களைப் பலர் அறுத்துக் கொண்டு போவார்கள். காசு கேட்பது இல்லை. ஆனாலும் கேட்காமல் சிலர் பறித்துக் கொண்டு போவதும் உண்டு. விடுங்கள்.

இந்த ஈரப் பலாக்காயின் கன்றுகளைக் கொண்டு வருவதற்கு இங்கிலாந்து அரசாங்கம், வில்லியம் பிளை (William Bligh) என்பவரைப் பசிபிக் கடலுக்கு அனுப்பியது.

இந்த ஆய்வுப் பயணத்திற்கு பவுண்டி (Bounty) எனும் பாய்மரக் கப்பல் சிறப்பாகக் கட்டப் பட்டது. 215 டன் எடை கொண்ட கப்பல். 1787-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23-ஆம் தேதி கப்பல் பயணமானது.

பசிபிக் பெரும் கடலில் இருக்கும் தாகித்தி (Tahiti) தீவை நோக்கிப் பயணம். 46 பேர் கொண்ட குழுவிற்கு வில்லியம் பிளை என்பவர் தலைமை வகித்தார். வருடத்தைக் கவனியுங்கள். 1787.

துணைத் தளபதியாக பிளெட்சர் கிரிஸ்டியன் (Fletcher Christian) என்பவர் இருந்தார். இவர் தான் நடுக்கடலில் நடந்த நவரச நாடகத்திற்கு உண்மையிலேயே சூப்பர் ஸ்டார். சின்னச் சின்னக் கன்னியர்களைக் கடத்திக் கொண்டு போனதற்கு காரணமாய் இருந்தவர். பக்கா கில்லாடி. மன்மத ராசா என்று தாராளமாகச் சொல்லாம்.

அண்மையக் காலத்து மன்மத ராசா பட்டியலில் இவருக்கு முதலிடம் கொடுக்கலாம். ’நான் அவனில்லை’ படத்தில் வரும் மன்மத ராசா ஜீவன் இருக்கிறாரே, அவர் எல்லாம் இந்த ராசாவிடம் பிச்சை எடுக்க வேண்டும். பிளெட்சர் கிரிஸ்டியன் பக்கா கில்லாடி அல்ல. பலே மன்மதக் கில்லாடி.

இந்தக் கப்பல் கலகத்தைப் பற்றி இரண்டு திரைப் படங்கள் வெளியாகி உள்ளன. அதில் ஒன்று மியூட்டனி ஆன் தி பவுண்டி (Mutiny on the Bounty). 1962-இல் தயாரிக்கப் பட்டது. டிரெவர் ஹாவர்ட் நடித்து இருந்தார். இவர்தான் 1982-இல் வெளியான காந்தி படத்திலும் நடித்தவர். நினைவுப் படுத்துகிறேன்.

கடல் பயணம் 306 நாட்கள் பிடித்தது. இங்கிலாந்தில் புறப்பட்டு தென் அமெரிக்கா வந்தனர். அப்படியே மேற்குத் திசையில் பசிபிக் மாக்கடல் வழியாகப் போகத் திட்டம். இருந்தாலும் புயல் காற்று பலமாக வீசியதால் பயணத்தைத் திசை திருப்பினார்கள்.

தென் ஆப்ரிக்கா வந்து நன்னம்பிக்கை முனை வழியாகத் திரும்பி, அப்படியே இந்தியப் பெரும் கடலுக்குள் சென்றார்கள். பின்னர் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து வழியாகத் தாகித்தி தீவை அடைந்தார்கள்.

பயணம் செய்த தூரம் 27,086 மைல்கள். ஒரு நாளைக்கு 108 மைல்கள். பயணம் செய்த வழியில் அவர்கள் பார்த்த தீவுகளில் ஏறக்குறைய 50 நாட்கள் தங்கி இளைப்பாறி ஓய்வு எடுத்து இருக்கிறார்கள்.

தாகித்தி தீவுக்குச் சற்றுத் தொலைவில் கப்பல் நங்கூரம் போட்டது. கிராமத்துக்காரன் மிட்டாய் கடையை முறைத்துப் பார்த்த கதை தெரியும் தானே. அந்த மாதிரி உள்ளூர் சுதேசி மக்கள் சின்னச் சின்னப் படகுகளில் வந்து கப்பலைச் சூழ்ந்து கொண்டார்கள்.

அப்புறம் கப்பலில் வந்த வெள்ளைக்காரர்களுக்கு கோலாகலமான வரவேற்பு. கேப்டன் ஜேம்ஸ் குக்கைப் பற்றி சுதேசி மக்கள் கேட்டு இருக்கிறார்கள். ஏற்கனவே ஜேம்ஸ் குக் அந்தத் தீவிற்கு வந்து இருக்கிறார். இருந்தாலும் அவர் இறந்துவிட்ட செய்தி அவர்களுக்குத் தெரியவில்லை.

தெரிந்து இருக்க நியாயமும் இல்லை. பேஸ்புக், வாட்ஸப், டுவிட்டர், இன்ஸ்டகிராம் லொட்டு லொசுக்கு பிஸ்கட் எதுவும் இல்லாத காலம். அதையும் மறந்து விடாதீர்கள். இருந்து இருந்தால்... வேண்டாங்க. அதைப் பற்றி பேச வேண்டாம். உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன்.

அதற்கு முன் சில ஆண்டுகளுக்கு முன்னால் கேப்டன் ஜேம்ஸ் குக், ஹவாய் தீவில் வாழ்ந்த பூர்வீகக் குடியின மக்களால் கொல்லப் பட்டார். பாதுகாப்பு கருதி அந்தச் செய்தி சுதேசி மக்களிடம் மறைக்கப் பட்டது. அது வேறு விசயம்.

அதன் பின்னர் பூர்வீகக் குடிமக்கள் அதாவது தாகித்தி மக்கள் கப்பலுக்கு வருவதும் போவதுமாக இருந்தார்கள்.

பல வகையான பரிசுகள் பரிமாறிக் கொள்ளப் பட்டன. கப்பல் சிப்பந்திகளும் தீவுக்குள் போய் இருக்கிறார்கள். சந்தோசமாய் ஜிங்கு ஜிக்கான் பிரேக் டான்ஸ் எல்லாம் ஆடி இருக்கிறார்கள். ஆனால் ஒரே ஒரு கண்டிசன்.

'நீங்கள் என்ன வேண்டுமானாலும் பண்ணுங்க... சாப்பிடுங்க... போங்க வாங்க... பழகுங்க... உருளுங்க... புரளுங்க... ஆனால் தயவு செஞ்சு… தயவு செஞ்சு பெண்களின் பக்கம் மட்டும் தலை வச்சு படுத்துடாதீங்கடா பிளீஸ்.

அப்புறம் கொலையில்தான் போய் முடியும் என்று கிளிப்பிள்ளைக்குச் சொல்வது போல படித்துப் படித்துச் சொன்னார்கள். கேட்டார்களா. உம்! கேட்டார்கள். பதுவுசாகப் பழகினார்கள். பெண்களைப் பார்த்தும் பார்க்காத மாதிரி போனார்கள். வந்தார்கள்.

ஆனாலும் ஒரு சிலர் ஓரக் கண்ணால் ஓரம் கட்டினார்கள். அப்புறம் என்ன. கருவாட்டைப் பார்த்து கருவாட்டுப் பூனை கண்ணடிக்காமல் போகுமா.

ஆனால் பாருங்கள். அதில் ஒரே ஒரு மனமத ராசா மட்டும் கேட்கவில்லை. அந்த ராசாவுக்கு 18 வயசு. சின்ன வயசு. ஆக அங்கே இருந்த 16 வயசு கடைக்கண் கன்னிப் பெண்ணைத் தன் கம்பீரப் பார்வையால் வளைத்துப் போட்டது. இருவரும் நெருக்கமானார்கள்.  

ஆக நம்ப மன்மத ராசா அவளைப் பார்த்துப் பல்லைக் காட்ட... இரண்டு காந்தங்களும் ஒன்றை ஒன்று இழுக்க...  கண்ணும் கண்ணும் கலக்க... அவளும் கிட்ட வர... ராசாவும் மயங்கிப் போக...

அவளுடைய கையைப் பிடிக்க... அன்பாய் ஆதரவாய்த் தடவிக் கொடுக்க... பஞ்சும் நெருப்பும் பற்றிக் கொள்ள... அவளும் கொஞ்சலாய் சிணுங்க... அதைப் பெண்ணின் சொந்தக்காரன் பார்க்க... விசயத்தைப் போய் வெளியே சொல்ல... அப்புறம் என்ன...

மிச்சத்தை நாளைய கட்டுரையில் தெரிந்து கொள்வோம்.

(தொடரும்)

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
24.11.2020



 

இந்திய வெங்காயத்தின் விலை மலேசியாவில் திடீர் உயர்வு

தமிழ் மலர் - 24.11.2020

மலேசியாவில் இந்திய வெங்காயத்திற்கு மிகப் பெரிய கிராக்கி ஏற்பட்டு உள்ளது. வெங்காய ஏற்றுமதியை இந்தியா தடை செய்து இருப்பதே இதற்கு காரணம். உள்நாட்டு வர்த்தக, பயனிட்டாளர் அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்ஸாண்டர் நந்தா லிங்கி தெரிவித்தார்.

கடந்த ஜுலை மாதம் இந்தியாவில் ஏற்பட்ட மோசமான வெள்ளத்தினால் வெங்காயத்தின் உற்பத்தி பெரும அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. அதனால் மலேசியா உட்பட பல நாடுகளுக்கு வெங்காய ஏற்றுமதியை இந்தியா தடை செய்து உள்ளது.

கடந்த செப்டம்பர் 14-ஆம் தேதி இந்திய அரசாங்கம் இந்தத் தடை உத்தரவை அமலுக்குக் கொண்டு வந்தது. பெங்களூர் ரோஸ் வெங்காயமும்; காஞ்சிபுரம் வெங்காயமும் இதில் அடங்கும்.

மலேசியர்கள் அதிக அளவில் விரும்ச்பி சாப்பிடும் வெங்காயமாகப் பெங்களூர் ரோஸ் மற்றும் காஞ்சிபுரம் வெங்காயம் விளங்குகின்றன. இந்திய அரசாங்கம் வெங்காய ஏற்றுமதிக்குத் தடை விதித்ததால் தற்போது பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்தைப் பயன்படுத்துமாறு உள்நாட்டு பயனீட்டாளர்களை மலேசிய அரசு கேட்டுக் கொண்டு உள்ளது.

தற்போது தாய்லாந்து, பாகிஸ்தான், சீனா, நெதர்லாந்து, ஆகிய நாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப் படுகிறது என்று அமைச்சர் அலெக்ஸாண்டர் நந்தா தெரிவித்தார்.

 


23 நவம்பர் 2020

கயானா தமிழர்கள்

தமிழ் மலர் - 22.11.2020

அழகு அழகான மக்கள். அழகு அழகான கலாசாரங்கள். அழகு அழகான கலைப் பண்பாடுகள். அழகு அழகான இயற்கை வளங்கள். நீண்டு நெடிந்து பாயும் கடல் மந்திரங்கள். நீண்டு நெடிந்து ஓடும் வரலாற்றுச் சுவடுகள்.

அந்த மந்திரங்களில் புலம் பெயர்ந்த தமிழர்களும் புன்னகை செய்கிறார்கள். பொன்மனச் செம்மல்களாய் வரலாறும் படைக்கிறார்கள். அந்த நாட்டின் பெயர் கயானா. அழகிய நாடு. கண்பட்டு விடும் கவின்மிகு நாடு.

கயானா நாட்டின் மொத்த மக்கள் தொகையில் நான்கே நான்கு விழுக்காடு தமிழர்கள். இருந்தாலும் பாருங்கள். அவர்களில் ஒருவர் அந்த நாட்டின் பிரதமர். 

அந்த நாட்டின் உயர்ப் பதவி. அந்தப் பதவிக்கு அழகு செய்து அழகு பார்க்கிறார். அம்சமான இனவாத மறுப்பிற்கு ஓர் உண்மையைச் சொல்கிறார்.

மனிதர்களில் யாரும் ஒசத்தி இல்லை. எல்லோருமே ஒரே குட்டையில் ஊறிய மனித உயிர்கள் தான். மனுசனை மனுசனாய் நெனைச்சாலே பெரிய விசயம் என்று அசத்தலாக ஒரு மனுக்குல உண்மையையும் சொல்லிவிட்டுச் செல்கிறார்.

கயானா நாட்டை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த போது, தமிழ் நாட்டில் இருந்து பல நூறு பல ஆயிரம் தமிழர்கள் அங்கே அழைத்துச் செல்லப் பட்டார்கள். கணக்குப் பிள்ளை வேலைக்கு ஒன்றும் இல்லைங்க.

கரும்புத் தோட்டங்களில் களை பிடுங்கும் வேலைக்குத் தான். மண்ணைக் கொத்தி மரங்களை நடும் வேலைக்குத் தான். மனித முதுகு எலும்புகளில் இரத்தப் பிலாஸ்டர்கள் போடும் வேலைக்குத் தான்.

கயானாவில் தமிழர்கள் இன்றைக்கும் சிறுபான்மை. அன்றைக்கும் சிறுபான்மை. நாம் இருவர் நமக்கு இருவர் என்பது அப்போதே பரிந்துரை செய்யப்பட்டு இருக்கலாம். இருந்தாலும் அவர்களில் ஒருவர் அங்கு பிரதமராகப் பதவிக்கு வந்து இருக்கிறாரே. பெரிய ஆச்சரியமான விசயம்.

அவருடைய பெயர் மோசஸ் நாகமுத்து (Moses Nagamootoo). வயது 72. இவர் 2015 மே மாதம் முதல் 2020 ஆகஸ்டு வரையில் கயானா நாட்டின் பிரதமர் பதவியில் இருந்தார். இப்போது மார்க்ஸ் பிலிப்ஸ் (Mark Phillips) எனும் கயானா பூர்வீக இனத்தவர் பிரதமராக உள்ளார்.

ஒரு தமிழர் பிரதமர் பதவிக்கு வந்தது ஒரு பெரிய சாதனை என்று சொல்லலாம். பெரிய புலம்பெயர்வு அடைவுநிலை என்றுகூட சொல்லலாம். கயானா தமிழர்களுக்கு முதல் மரியாதை செய்வோம். சரி.

தென் அமெரிக்காவின் வட பகுதியில் கயானா உள்ளது. மேற்கே வெனிசூலா நாடு. கிழக்கே சுரிநாம். தெற்கே பிரேசில். வடக்கே அட்லாண்டிக் பெரும் கடல். கயானாவின் பரப்பளவு 215,000 சதுர கிமீ (83,000 சதுர மைல்).

மலேசியாவில் மூன்றில் இரண்டு மடங்கு. ஆங்கிலம் அதிகாரப்பூர்வ மொழி. மக்கள் தொகை 735,554. (2014 கணக்கெடுப்பு). தென் அமெரிக்கா கண்டத்தில் ஆக வடக்கே உள்ளது. மறந்துவிட வேண்டாம். மலேசியாவில் இருந்து 17,655 கி.மீ. தொலைவில் உள்ளது. சென்னையில் இருந்து 15,078 கி.மீ.

1667-ஆம் ஆண்டில் இருந்து 1814-ஆம் ஆண்டு வரை டச்சுக்காரர்களின் ஆதிக்கம். பின்னர் பிரிட்டிஷாரின் 150 ஆண்டு கால ஆட்சி. 1966 மே 26-ஆம் தேதி சுதந்திரம். 1970 பிப்ரவரி 23-ஆம் தேதி குடியரசு தகுதி.

அங்கே நீண்ட நெடிய மீசைகளுடன் தமிழர்கள் வரலாறு படைத்துக் கொண்டு இருக்கிறார்கள். கயானாவில் இப்போது கலப்பின மக்களே அதிகம். தனிப் பெரும்பான்மை இனத்தவர் இல்லை.

கயானா தமிழர்களும் கயானா பூர்வீக பெண்களைத் திருமணம் செய்து கொண்டு ஒரு கலப்பு தமிழர்களாகவே வாழ்கின்றார்கள். அவர்களுக்கு அங்கே மதம் ஒரு தடையாக அமையவில்லை.

ஒரு மதத்தைச் சார்ந்தவர் இன்னொரு மதத்தைச் சார்ந்தவரைத் திருமணம் செய்து கொள்ளலாம். மதம் மாற வேண்டிய அவசியம் இல்லை. மதவாதம் உள்ளது. அருகம்புல் மாதிரி ஆங்காங்கே தலைகாட்டினாலும் இங்கே மாதிரி தீவிரம் இல்லை. மதத்தை வைத்து அரசியல் நடத்தவும் இல்லை. இனவாதம் பேசவும் இல்லை. விடுங்கள்.

கயானா நாட்டைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் இந்தியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, சீனா நாடுகளைச் சேர்ந்தவர்கள். பழங்குடி மக்களும் இருக்கிறார்கள். பல்லின மக்களாய் வாழ்ந்தாலும் இவர்கள் ஆங்கிலம்; கயானிய கிரியோல் (Guyanese Creole) ஆகிய இரு மொழிகளை மட்டுமே அதிகமாகப் பேசுகிறார்கள்.  

கயானாவில் முக்கிய இனம் இந்தோ - கயானிய இனம் (Indo-Guyanese). இவர்களைக் கிழக்கு இந்தியர்கள் என்று அழைக்கிறார்கள். இந்தியாவில் இருந்து அழைத்து வரப் பட்டவர்கள். ஒப்பந்தக் கூலிகளின் வாரிசுகள். இவர்கள் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 43.5 விழுக்காடு.

இவர்களுக்கு அடுத்த படியாக ஆப்பிரிக்க – கயானி மக்கள் (Afro-Guyanese). அதாவது கரிபியன் பகுதியில் வாழ்ந்த ஆப்பிரிக்க மக்கள். ஆப்பிரிக்காவில் இருந்து நேரடியாகக் கொண்டு வரப் பட்டவர்கள்.

இவர்கள் முன்பு காலத்தில் அடிமைகளாகக் கொண்டு வரப் பட்டார்கள். ஆப்பிரிக்காவில் இருந்து தருவிக்கப்பட்ட அடிமைகளின் வம்சாவளியினர் என்பதை நினைவில் கொள்வோம். பல நூறு ஆண்டுகளாக அந்தப் பகுதியில் வாழ்ந்து விட்டார்கள்.

நாட்டின் மொத்த மக்கள் தொகையில் ஆப்பிரிக்க - கயானிகள் 30.2 விழுக்காடு. மற்ற மற்ற கலப்பு இனமக்கள் 16.7 விழுக்காடு. 9.1 விழுக்காடு பழங்குடியினர்.

இந்தோ - கயானியர்கள்; ஆப்பிரிக்க - கயானியர்கள். இரு பெரும் இனக் குழுக்கள். இந்த இரு இனத்தவர்களுக்கு இடையில் இனக் கலவரங்கள் நடந்து உள்ளன. இப்போது இல்லை. விட்டுக் கொடுத்துப் போக பழகிக் கொண்டு விட்டார்கள்.

இந்தோ - கயானியர்களில் பெரும்பான்மை மக்கள் இந்தியாவின் பீகார்; உத்தரப் பிரதேச மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். அடுத்த நிலையில் தென்னிந்தியாவில் இருந்து குடியேறிய தமிழர்கள்; தெலுங்கர்கள். இவர்களுக்கும் உத்தரப் பிரதேச மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கும்  அடிக்கடி இனப் பிணக்குகள்.

கயானாவில் தமிழர்களும் தெலுங்கர்களும் ஒரு கட்சி. இருவரும் சேர்ந்து கொண்டு வட இந்தியர்களை எதிர்த்து வந்தார்கள். இப்போது நிலைமை பரவாயில்லை.

இங்குள்ள தமிழர்களும் தெலுங்கர்களும் மாமன் மச்சான் போல நன்றாக நெருக்கமாகப் பழகுகிறார்கள். பெண் எடுப்பது பெண் கொடுப்பது எல்லாம் சகஜம் என்றும் சொல்கிறார்கள். காதல் திருமணங்களும் அதிகம். மக்கள் எண்ணிக்கை குறைவு. அதனால் ஓர் இனத்தைச் சேர்ந்த பெண்கள் குறைவாக இருக்கலாம்.

அதோடு ஒரே கிராமத்தில் நீண்ட காலமாக வாழ்ந்து விட்டார்கள். 18 ஆயிரம் கி.மீ. அப்பால் வாழும் போது இன உணர்வுகள் சற்றே அடிபட்டுப் போய் இருக்கலாம். அதனால் நெருக்கம் அதிகமாகிப் போனது. ஆக தமிழ் தெலுங்கு கலப்பு இரத்தம் கூடுதலாகவே ஓடுகிறது.

கயானாவில் 57 விழுக்காடு கிறிஸ்துவர்கள்; 28 விழுக்காடு இந்துக்கள்; 7 விழுக்காடு முஸ்லிம்கள். 4 விழுக்காடு மக்கள் எந்த மதத்திலும் சேரவில்லை. ஆளை விடுங்கடா சாமி; எந்த மதமும் வேண்டாம்; இருக்கிற சம்மதமே பெரிசு. அதுவே போதும் என்று மதம் சாராமல் இருக்கிறார்களாம்.

கயானாவில் இருந்து ஒரு கழுகார் இறக்கை கட்டி பறந்து வந்து சொல்லி விட்டுப் போனார். அப்புறம் என்னங்க. இந்த மதங்களினால் தானே இவ்வளவு பிரச்சினைகள்.

நீ ஒசத்தி நான் ஜாஸ்தி என்று ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் ஒப்பாரிகள். அந்தக் கழுகார் அட்ரஸ் வேணுங்களா. வாட்ஸ் அப் பண்ணுங்கள். அனுப்பி வைக்கிறேன். சரி.

நம்ப தமிழர்கள் அப்போது இருந்தே; காலம் காலமாகத் தொட்டுக்க விட்டுக்க இஞ்சிப்புலி ஊறுகாய்களாக நினைக்கப் பட்டார்கள். தப்பாக நினைக்க வேண்டாம்.

அப்போதைய தமிழர்களுக்கு படிப்பு அறிவு கொஞ்சம் குறைச்சல். அதனால் எடுப்பார் கைப்பிள்ளை ஆனார்கள். அம்புட்டுத்தான். ஆனாலும் நல்லது நடந்து இருக்கிறது.

கயானா தமிழர்கள் தங்களைக் கயானாத் தமிழர்கள் என்று அடையாளப் படுத்திக் கொள்ள தயக்கம் காட்டுகின்றனர். தங்களை "மதராசி" என்றும் இந்தோ - கயனீஸ் என்றும் பெரும்பாலும் அடையாளப் படுத்தி கொள்கிறார்கள்.

இவர்களில் பெரும்பாலானவர்கள் ஆங்கிலேயர்களால் கயானாத் தோட்டங்களில் வேலை செய்ய வரவழைக்கப்பட்ட தொழிலாளிகளின் வழித்தோன்றிகள். ஏற்கனவே சொல்லி இருக்கிறேன்.  

கயானா தமிழர்கள் பெரும்பாலோருக்குப் பொதுவான தமிழ்மொழி அறிவு குறைவு என்றுதான் சொல்ல வேண்டும். ஆனாலும் பல தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகள் இன்றும் நிலைத்து நிற்கின்றன. கயானா நாட்டுத் தமிழ்ப் பெண்கள்; தமிழ் மொழி பற்றி நாளைய கட்டுரையில் பார்ப்போம்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
22.11.2020

சான்றுகள்:

1. T R Janarthanam. Tamils in Guyana.

2. Indian Diaspora (PDF). Indiandiaspora.nic.in. Archived from the original (PDF).

3. Brock, Stanley E. (1999). All the Cowboys Were Indians (Commemorative, illustrated (reprint of Jungle Cowboy) ed.). Lenoir City, TN: Synergy South, Inc.

4. D. Graham Burnett, Masters of All They Surveyed: Exploration, Geography and a British El Dorado
Ovid Abrams, Metegee: The History and Culture of Guyana.

5. Waugh, Evelyn (1934). Ninety-two days: The account of a tropical journey through British Guiana and part of Brazil. New York: Farrar & Rinehart.

(No part of this content may be reproduced, republished, or re transmitted by any means without the expressed written consent of author. Please email: ksmuthukrishnan@gmail.com for permission.)







 

டத்தோ சசிகலா மலேசியப் போலீஸ் துணை இயக்குநராக நியமனம்

கோலாலம்பூர், நவ.21-

மலேசியத் தலைமைப் போலீஸ் அதிகாரிகளில் ஒருவராக டத்தோ சசிகலா பதவி உயர்வு பெற்றுள்ளார். மலேசியப் போலீஸ் தலைமையகம் இன்று அறிவித்தது. அரச மலேசிய போலீஸ் படையில் பல அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.

மலேசியப் போலீஸ் தலைமையகமான புக்கிட் அமான் வர்த்தகக் குற்றப் புலனாய்வுத் துறை துணை இயக்குநராக டத்தோ சசிகலாதேவி சுப்பிரமணியம் நியமிக்கப்பட்டு உள்ளார். அரச மலேசிய போலீஸ் படையில் மொத்தம் 9 அதிகாரிகள் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

போலீஸ்ப்படை கல்லூரியின் விசாரணை அறிவியல் ஆய்வுத் துறைத் தலைவராக இருந்த டத்தோ எஸ். ஏ. சி. முனுசாமி ரெங்கசாமி தற்போது போலீஸ்ப்படை கல்லூரி நிர்வாகப் பிரிவுக்குப் பொறுப்பேற்றுள்ளார்.

இதற்கு முன்னர் புக்கிட் அமான் வர்த்தகக் குற்றப் புலனாய்வுத் துறையின் நிதி மற்றும் தொழில் பிரிவுக்கு உதவி இயக்குநராக இருந்த டத்தோ சசிகலா தற்போது குற்றப் புலனாய்வுத் துறை துணை இயக்குநராகப் பொறுப்பேற்று இருப்பது மிகப் பெரிய சாதனை என வர்ணிக்கப் படுகிறது.
 

22 நவம்பர் 2020

பசிபிக் பெருங்கடலில் தாகித்தி தமிழர்கள்

தமிழ் மலர் - 20.11.2020

தாகித்தி. பலரும் அறியாத பெயர். பலரும் கேள்விப்படாத பெயர். பசிபிக் பெருங்கடலில் தன்னந்தனியாக தனித்து நிற்கும் ஓர் அற்புதமான தீவு. உலகின் அழகிய பத்து தீவுகளில் தாகித்தி தீவையையும் ஒன்றாகத் தேர்வு செய்து இருக்கிறார்கள். அழகிலும் அழகான அதிசயமான தீவு. பிரான்ஸ் நாட்டிற்குச் சொந்தமான தீவு.

மனித நடமாட்டம் என்பது மிக மிகக் குறைவு. மக்கள் போவதும் குறைவு. ஹவாய் தீவு. தெரியும் தானே. அந்தத் தீவில் இருந்து தெற்கே 4,400 கி.மீ (2,376 மைல்கள்); தென் அமெரிக்கா சிலி நாட்டில் இருந்து கிழக்கே 7,900 கி.மீ (4,266 மைல்கள்); ஆஸ்திரேலியா நாட்டில் இருந்து வட மேற்கே 5,700 கி.மீ. (3,078 மைல்கள்).

அதாவது அமெரிக்கா கண்டத்திற்கும் ஆசியா கண்டத்திற்கும் நடுவில் மாபெரும் பசிபிக் கடலில் பச்சைப் பிள்ளை போல விரல் சூப்பிக் கொண்டு இருக்கிறது.

இந்தத் தீவில் 20 தமிழர்க் குடும்பங்கள் உள்ளனர். இப்படி ஒரு தமிழ்ச் சமுதாயம் வாழ்வது உலக அதிசயம் தான். பலருக்கும் தெரியாத அதிசயம் தான். இந்தத் தீவில் 20 தமிழர்க் குடும்பங்களைத் தவிர்த்து, உள்ளூர் பூர்வீக மக்களும்; பிற இனத்தவர்களும் 1,89,000 பேர் வாழ்கிறார்கள்.

இந்தத் தாகித்தி தீவின் பரப்பளவு 1044 ச.கி.மீ. முதன்முதலாக கி.பி. 300-ஆண்டுகளில் பாலினேசியர்கள் குடியேறி இருக்கிறார்கள். தீவின் மக்கள் தொகையில் 70 விழுக்காடு. முன்பு காலத்தில் போமாரே (Pomare dynasty) எனும் வம்சாவளியினர் 1500 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்து இருக்கிறார்கள்.

அங்கே போன ஸ்பெயின் நாட்டுக்காரர்கள் தாகித்தியைக் கைப்பற்றிக் கொண்டார்கள். பின்னர் டச்சுக்காரர்கள்; போர்த்துகீசியர்கள்; ஆங்கிலேயர்கள்; பிரெஞ்சுக்காரர்கள் என மாறி மாறி ஆட்சி செய்தார்கள். இப்போது பிரெஞ்சு அரசாங்கத்தின் ஆட்சியில் உள்ளது. அங்கு உள்ள மக்கள் அனைவரும் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள். சரி.

தமிழர்கள் எப்படி அங்கே போனார்கள். அதுதான் பெரிய இரகசியமாக இருக்கிறது. அதைப் பற்றித்தான் தெரிந்து கொள்ளப் போகிறோம். அதிகமான தகவல்கள் கிடைக்கவில்லை.

1967-ஆம் ஆண்டில் அந்தத் தமிழர்க் குடும்பங்களைக் கண்டுபிடித்தார்கள். தாகித்தி தீவைச் சுற்றிப் பார்க்கப் போன தமிழ்நாட்டுத் தமிழர்கள் தான் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

பெயர்கள் என்னவோ ஆச்சியமா வள்ளியம்மா சாமிநாதன் சரஸ்வதி என்று இருக்கிறதே என்று ஆச்சரியப்பட்டுப் போய் ஆராய்ச்சியில் இறங்கி இருக்கிறார்கள். இரகசியங்கள் கசியத் தொடங்கின.

ஏறக்குறைய 20 தமிழர்க் குடும்பங்கள். இவர்களின் குடும்பத் தலைவர்களுக்கும்; குழந்தைகளுக்கும் தங்கள் வம்சாவளியைப் பற்றி எதுவுமே தெரியவில்லை. காட்டில் கண்ணைக் கட்டி விட்ட கதை மாதிரி தான் இருக்கிறது.

அவர்களுக்குத் தமிழ் பேசத் தெரியவில்லை. அங்குள்ள உணவு விடுதிகளில்; கடைகளில் சாதாரண வேலைகள் செய்கிறார்கள்.

தாகித்தி தலைநகரம் பாபிட்டி (Papeete). இந்த நகரத்தின் ஓர் ஒதுக்குப் புறத்தில் தமிழர்களின் வீடுகள் உள்ளன. இவர்களுக்கு என்று தனியாக ஒரு பொது மண்டபம் உள்ளது. பிள்ளைகள் பிரெஞ்சு; கிரியோல் மொழி படிக்கிறார்கள். பெரிதாகச் சொல்வதற்கு எதுவும் இல்லை. இவர்கள் தமிழர்கள் தான்.

ஆனாலும் அவர்களின் தாத்தா பாட்டிகளின் பெயர்களை நினைவு வைத்து இருக்கிறார்கள். தங்களைத் தமிழர்கள் என்று சொல்கிறார்கள். பெரும்பாலோர் கிறிஸ்துவ சமயத்தைச் சேர்ந்தவர்கள்.

ஒரு சிலருக்கு சமயமே இல்லை. இவர்கள் 'லா லாங்கு' (la langue) எனும் மொழியைப் பேசுகிறார்கள். அடிக்கடி அந்த மொழியிலேயே பாடுகிறார்கள்.

சமயங்களில் தங்களின் பூர்வீகத்தை நினைத்துப் பாடி அழுகிறார்கள். அவர்களின் பூர்வீகம் என்னவென்று அவர்களுக்கே தெரியவில்லை. அவர்களின் இந்திய வம்சாவளியைப் பற்றிய ஒரே ஒரு பின்னணிப் பிடிமானம் அவர்களின் பெயர்கள் மட்டுமே. வேறு எந்தத் தகவலும் எந்தச் சுவடுகளும் கிடைக்கவில்லை.

பவளக் கொடி (Pavalacoddy); மரியசூசை (Mariasoosay); ராயப்பன் (Rayappan); சாமிநாதன்; திவி; வீராசாமி; பார்வதி; லெட்சுமி; மாரியம்மா, ராசம்மா எனும் பெயர்கள். இருப்பினும் பெண்கள் நெற்றியில் குங்குமப் பொட்டு வைத்துக் கொள்ளும் பழக்கத்தைக் கடைப்பிடிக்கிறார்கள்.

தாகித்தி தீவில் இருந்து வெகு தொலைவில் பிஜி தீவுகள் உள்ளன. இங்கே தான் 1870-ஆம் ஆண்டுகளில் தமிழர்கள் குடியேற்றம் செய்யப் பட்டார்கள். ஒப்பந்தக் கூலிகளாகக்  கொண்டு செல்லப் பட்டார்கள்.

பிஜி தீவுக்கும் சென்னைக்கும் உள்ள தூரம் பதினோராயிரத்து இருநூற்று நாற்பத்து ஒன்பது கிலோ மீட்டர்கள் (11,249). நம் மலேசியாவில் இருந்து 8,680 கி.மீ. கொஞ்ச நஞ்ச தூரம் அல்ல.

உலகத்தை ஒரு முறை சுற்றிவர எவ்வளவு தூரம் தெரியுங்களா 40,075 கி.மீ. அப்படிப் பார்த்தால் பிஜி தீவிற்குப் போவதற்கும் உலகத்தில் கால்வாசி தூரத்தைச் சுற்றி வருவதற்கும் சமமாகி விடுகிறது.

1874-ஆம் ஆண்டு பிஜித் தீவு ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. பிஜித் தீவில் நிறைய கரும்புத் தோட்டங்கள். அந்தக் கரும்புத் தோட்டங்களுக்குத் தமிழகத்தில் இருந்து கங்காணி முறையில் ஆள் பிடித்துக் கொண்டு வந்தார்கள்.

1879-ஆம் ஆண்டில் இருந்து 1916-ஆம் ஆண்டுக்கும் இடையில் 65,800 இந்தியத் தொழிலாளர்கள் பிஜி தீவிற்குக் கொண்டு வரப் பட்டனர். இவர்களில் பெரும்பாலோர் தமிழர்கள் ஆகும்.

இந்தப் பிஜி தீவில் இருந்து தான் தாகித்தி தீவிற்கு அந்த 20 தமிழர்கள் குடும்பம் போய் இருக்கலாம் என்பதே பொதுவான கருத்து. ஆனால் எவ்வளவு தூரம் என்பதையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

தாகித்தி தீவிற்கும் பிஜி தீவிற்கும் இடைப்பட்ட தூரம் 3336 கி.மீ. சும்மா ஒரு கற்பனை பண்ணினாலே மயக்கமே வருகிறது. அதுவும் இந்தக் காலத்தில் விமானத்தில் பயணம் செய்தாலும் நான்கரை மணி நேரம் பிடிக்கும்.

இன்னும் ஒரு விசயம். 1870-ஆம் ஆண்டுகளில் தாகித்தி தீவிற்கும் பிஜி தீவிற்கும் கப்பல் பயணங்கள் எதுவும் இல்லை. சரக்குக் கப்பல்களின் நடமாட்டம் இருந்து இருக்கிறது. ஆனால் அந்தச் சரக்குக் கப்பல்களில் இந்தத் தாகித்தி தமிழர்கள் ‘தும்பாங்’ பண்ணிப் போய் இருக்க முடியாது. வெள்ளைக்காரர்கள் விட்டு இருக்க மாட்டார்கள்.

அப்படியே கப்பலில் யாருக்கும் தெரியாமல் தலைமறைவாகப் போய் இருந்தாலும் ஒருவர் அல்லது இருவர் அல்லது மூவர் போய் இருக்கலாம். ஆனால் 20 குடும்பங்கள் போய் இருக்க முடியாது.

அப்படியே கப்பலில் போய் இருந்தாலும் இரண்டு வாரத்திற்குச் சோறு தண்ணி இல்லாமல் போய் இருக்க முடியாது. ஆக அவர்கள் கப்பலேறிப் போய் இருக்கவும் முடியாது

ஒரு தற்காலிகக் காரணத்தைச் சொல்லலாம். முன்பு காலத்தில் பாலினேசியர்கள் பசிபிக் பெருங்கடல் முழுமைக்கும் கட்டுமரம் கட்டிப் பயணம் செய்து இருக்கிறார்கள். அவர்கள் கால் பதிக்காத இடம் என்று எதுவுமே இல்லை.

ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, ஹவாய், குவாம், பிஜி, சாலமன் தீவுகள், போர்னியோ, மலாயா என்று எல்லா நாடுகளுக்கும் போய் இருக்கிறார்கள்.

மலாயாவை எடுத்துக் கொண்டால் 20 - 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயே பாலினேசியர்கள் கால் பதித்து விட்டார்கள். அவர்கள் தான் மலாயாவின் பூர்வீகக் குடிமக்கள். ஆனால் இவர்களுக்கு மண்ணின் மைந்தர்கள் தகுதி கிடைத்ததா என்று தெரியவில்லை. அதுவும் ஒன் பில்லியன் டாலர் கேள்வி.

இப்போது எல்லாம் மில்லியனுக்கு மவுசு இல்லைங்க. ரோசாப்பூ ரோசம்மா ஒரு மில்லியன் டாலருக்கு கைப்பை வாங்கியதில் இருந்து இப்போது கிண்டர்கார்டன் சிசுக்கள்கூட பில்லியன் என்று கணக்குப் போட்டுச் சொல்கிறார்கள். விடுங்கள். ஊர் பொல்லாப்பு வேண்டாம். நம்ப கதைக்கு வருவோம்.

இந்தப் பாலினேசியர்கள் அண்மைய காலங்களில்கூட தீவுகளுத் தீவு கட்டுமரம் கட்டிப் போவது வழக்கம். அப்படிப் போகும் போது பிஜியில் இருந்த தமிழர்களும் அவர்களுடன் தாகித்தி தீவிற்குப் போய் இருக்கலாம். சொல்ல முடியாது.

ஏன் என்றால் கடல் பயணங்கள் பற்றி அதிகம் தெரிந்து இருக்காத அந்தத் பிஜி தொழிலாளர்கள் 3336 கி.மீ. தூரம் கட்டுமரங்களில் போய் இருக்க முடியுமா. பெரிய கேள்விக் குறி.

அதே போல பசிபிக் பெருங்கடலில் இன்னும் ஒரு தீவு உள்ளது. ஆஸ்திரேலியாவில் இருந்து 1200 கி.மீ. அதன் பெயர் நியூ கலிடோனியா. இந்தத் தீவிலும் 500 தமிழர்கள் வாழ்கிறார்கள்.      

தாகித்தி தமிழர்களைப் பற்றி ஒரு முழுமையான ஆய்வு செய்யப்பட வேண்டும். நிதியுதவி செய்ய ஆர்வலர்கள் இருந்தால் ஆய்வுகள் செய்யலாம்.

தமிழன் இல்லாத நாடு இல்லை. ஆனால் அந்தத் தமிழனுக்குச் சொந்தமாக ஒரு நாடும் இல்லை. அதுவே தமிழர்களுக்கு வரலாறு எழுதிக் கொடுத்த ஒரு வரப்பிரசாதம். அந்தக் காலத்தில் உலகத்தின் கால்வாசியைத் தமிழர்கள் கட்டி ஆண்டார்கள்.

உண்மை தான். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் இப்போது என்ன. தமிழ்நாட்டைத் தமிழர்களா ஆட்சி செய்கிறார்கள். சண்டைக்கு வர வேண்டாம்.

புலம் பெயர்ந்த தமிழர்கள் உலகம் முழுவதும் பரவி நிற்கிறார்கள். பல நாடுகளில் தமிழை வளர்த்துக் கொண்டு வருகிறார்கள். சில நாடுகளில் தமிழை மறந்து கொண்டு வருகிறார்கள். சில நாடுகளில் தமிழர் அடையாளமே தெரியாமல் வாழ்ந்து கொண்டு வருகிறார்கள். அவர்களில் தாகித்தி தமிழர்களின் கதை ஒரு சோகமான கதை. கண்கள் பனிக்கின்றன.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
19.11.2020

சான்றுகள்:

1. https://en.wikipedia.org/wiki/Indians_in_New_Caledonia

2. Xavier S.Thaninayagam, published by the International Association of Tamil Research, 1968 - https://tamilnation.org/diaspora/newcaledonia.htm

3. Lal, Brij Vilash; Fortune, Kate (2000). The Pacific Islands: An Encyclopedia. University of Hawaii Press. pp. 27

4. Robert C. Schmitt (1962). "Urbanization in French Polynesia". Land Economics. 38 (1): 71–75.