01 டிசம்பர் 2020

மலாக்கா ஜாசின் டைமண்ட் ஜூப்ளி தோட்டம் - 1886

ஜாசின் டைமண்ட் ஜூப்ளி தோட்டம் (Diamond Jublee Estate Jasin Malacca) மலாக்காவில் இருந்து 24 மைல் தொலைவில் உள்ளது. மிக அருகாமையில் ஜாசின் நகரம். இந்தத் தோட்டம் 1886-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப் பட்டது.

The Diamond Jublee Estate is located 24 miles from Malacca. The nearest town is Jasin. The estate was established in 1886.

ஆசியாடிக் ரப்பர் உற்பத்தி நிறுவனத்திற்குச் சொந்தமான தோட்டம் (Asiatic Rubber and Produce Company, Ltd). தற்சமயம் சைம் டார்பி நிறுவனத்திற்குச் சொந்தாமானது.

This estate owned by Asiatic Rubber and Produce Company, Ltd. Currently owned by Sime Darby.

1897-ஆம் ஆண்டு ஜூன் 22-ஆம் தேதி இங்கிலாந்தின் விக்டோரியா மகாராணியாருக்கு வைர விழா கொண்டாடப் பட்டது. அதன் நினைவாக இந்தத் தோட்டத்திற்கு டைமண்ட் ஜூப்ளி என்று பெயரும் வைக்கப் பட்டது.

Diamond Jubilee of Queen Victoria of England was celebrated on June 22, 1897. Thus this estate was named Diamond Jubilee in its memory.

தொடக்கத்தில் அது ஒரு தேயிலைத் தோட்டம். பின்னர் கொக்கோ பயிர் செய்யப்பட்டது. பின்னர் மரவள்ளிக் கிழங்குத் தோட்டமாக உருமாற்றம். இறுதியாக ரப்பர் பயிர் செய்யப்பட்டது. 1980-களில் எண்ணெய்ப்பனை. தோட்டத்தில் இரு ஆறுகள் ஊடுருவிச் செல்கின்றன. தோட்டத்திற்குத் தேவையான நீர் அந்த ஆறுகளில் இருந்து பெறப்படுகிறது.

In the beginning it was a tea plantation. Then cocoa was planted. Later transformed into a cassava plantation. Finally the rubber crop introduced. Oil palm in the 1980s. Two rivers flow through the estate. The water required for the esate is obtained from those rivers.

1900-ஆம் ஆண்டில் டைமண்ட் ஜூப்ளி தோட்டத்தில் 600 தொழிலாளர்கள் வேலை செய்தார்கள். 400 சீனர்கள். 200 தமிழர்கள். ஒரு சில மலாய்க்காரர்கள். 1886-ஆம் ஆண்டு தமிழர்கள் கொண்டு வரப்பட்டார்கள். சீனர்கள் ஜொகூர் பகுதியில் இருந்து வந்தார்கள்.

In 1900 Diamond Jubilee estate employed 600 workers. 400 Chinese. 200 Tamils. A few Malays. In 1886 the Tamils were brought to this estate. The Chinese came from the Johor region.

1900-ஆம் ஆண்டுகளில் அந்தத் தோட்டத்தின் பரப்பளவு 3,706 ஏக்கர். முதன்முதலில் 1,262 ஏக்கர் அளவில் மரவள்ளி பயிர் செய்யப் பட்டது. பின்னர் 2,444 ஏக்கரில் ரப்பர் பயிர் செய்யப் பட்டது. மொத்தம் 365,000 ரப்பர் மரங்கள்.

In the 1900s the area of the estate was 3,706 acres. Cassava was first cultivated on 1,262 acres. Later rubber was planted on 2,444 acres. Total 365,000 rubber trees.

1886-ஆம் ஆண்டில் 2,200 பீக்கள் மரவள்ளிக் கிழங்கு அறுவடை செய்யப் பட்டது. 1906-ஆம் ஆண்டு 11,103 பீக்கள் மரவள்ளிக் கிழங்கு. அப்போது ஒரு பீக்கள் மரவள்ளிக் கிழங்கின் விலை 9 மலாயா டாலர்.

2,200 piculs of cassava were harvested in 1886. 11,103 piculs of cassava in 1906. Then the price of a picul of cassava was 9 Malayan dollars.

ஆசியாடிக் ரப்பர் நிறுவனம் 140,000 ஸ்டெர்லிங் மூலதனத்தில் அந்தத் தோட்டத்தைத் தோற்றுவித்தது. தோட்டத்தின் இயக்குநர்களாக ஈ. எம். ஷால்டோக்; எப். எல். கிளெமென்ட்ஸ்; ஆர்.எப். எஸ். ஹார்டி; ஜி. எச். ஆல்ஸ்டன்; இலங்கை கொழும்பு லீ, ஹெட்ஜஸ் நிறுவனத்தினர் (Messrs. E. M. Shaltoch, F. L. Clements, R. F. S. Hardy, and G. H. Alston. Messrs. Lee, Hedges & Co., Colombo) பதவி வகித்தனர்.

Asiatic Rubber Company started the estate with a capital of 140,000 sterling. The directors of the estate: Messrs. E. M. Shaltoch, F. L. Clements, R. F. S. Hardy, and G. H. Alston. Messrs. Lee, Hedges & Co., Colombo.

அதன் தலைமையகம் இலண்டனில் இருந்தது. 1886-ஆம் ஆண்டு தோட்டத்தின் நிர்வாகியாக சிட்னி மூர்ஹவுஸ் (Sydney W. Moorhouse) என்பவர் பணியாற்றினார்.

Its headquarters were in London. In 1886 Sydney W. Moorhouse became the manager of the estate.

1880-ஆம் ஆண்டுகளிலேயே தமிழர்கள் மலாக்கா தோட்டப் பகுதிகளில் குடியேறி விட்டார்கள். ஏறக்குறைய 140 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த நிகழ்ச்சிகள்.  தமிழர்களுக்குப் பின்னர்; 50 ஆண்டுகளுக்குப் பின்னர் வந்தவர்கள் சிலர் இவர்களைப் பார்த்து வந்தேறிகள் என்று சொல்கிறார்கள். அப்படிச் சொல்வதில் ஓர் இங்கிதம் இல்லாமல் போகிறது. உண்மையையும் மறைக்க முடியாது. வரலாற்றையும் மறைக்க முடியாது.

Tamils settled in the state of Malacca as early as of 1880s. The migration that took place almost 140 years ago. Some people who came after 50 years later called these Tamil as pendatang. There is no basis in saying so. The truth cannot be hidden; and history cannot be hidden either.

மலாயா தமிழர்களின் புலம்பெயர்வுத் தேடல்கள் தொடரும். தொடர்ந்து பயணிப்போம்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
01.12.2020

References:

1. Messrs. Harrison and Lampard, of London Archives. (LONDON METROPOLITAN ARCHIVES
HARRISONS AND CROSFIELD LIMITED AND ASSOCIATED COMPANIES)

2. Twentieth century impressions of British Malaya: its history, people, commerce, industries, and resources Page 487. http://reader.library.cornell.edu/docviewer/digital

3.http://reader.library.cornell.edu/docviewer/digital?id=sea:233#page/493/mode/1up


 

30 நவம்பர் 2020

ஜொகூர் மூவார் பஞ்சூர் லனாட்ரோன் தோட்டம்: படங்கள்

1840 - 1880-ஆம் ஆண்டுகளிலேயே தமிழர்கள் இந்த நாட்டில் குடியேறி விட்டார்கள். இந்த நாட்டின் உள்கட்டமைப்புகளுக்கு முன்னோடிகளாக விளங்கி உள்ளார்கள். இந்த வரலாற்று உண்மை ஆவணச் சான்றுகளுடன் முன் வைக்கப்படுகின்றது.

நீங்கள் பார்க்கும் படங்கள் 1881-ஆம் ஆண்டில் இருந்து 1903-ஆம் ஆண்டு வரை ஜொகூர், மூவார், பஞ்சூர், லனாட்ரோன் தோட்டத்தில் எடுக்கப்பட்ட கறுப்பு வெள்ளைப் படங்கள். ஆர்னால்ட் ரைட் (Arnold Wright) என்பவர் எடுத்த படங்கள்.

லனாட்ரோன்  நீண்ட லயன் வீடுகள். 1881-ஆம் ஆண்டில் கட்டப்பட்டவை.
Line houses built in 1881 for Lanadron plantation workers.

Tamils ​​migrated to this country since 1840's. They are one of the forerunners for the infrastructures in this country. This historical fact is put forward with documentary evidences.

ரப்பர் பால் உறைய வைத்து கிரீப் பாலாக வெட்டப் படுவதற்கு 1903-ஆம் ஆண்டில் கட்டப்பட்ட தொழிற்சாலை.
Factory built in 1903 to make crepe rubber sheets.


ஜொகூர் லனாட்ரோன் காபி தோட்டம். 1881-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அந்தக் காபி தோட்டம் தான் பின்னர் காலங்களில் லனாட்ரோன் ரப்பர் தோட்டம் (Lanadron Estate, Panchor, Muar, Johore) என மாற்றம் கண்டது.

லனாட்ரோன் தோட்டத் தொழிற்சாலையின் முகப்புத் தோற்றம்.
1903-ஆம் ஆண்டில் கட்டப்பட்டது.
Facade view of the Lana
dron plantation factory. Factory built in 1903.


லனாட்ரோன் தோட்டத் தொழிலாளர்கள். முதன்முதலில் அழைத்து வரப்பட்ட தமிழர்களுடன் ஜாவானிய தொழிலாளர்களும் தமிழர் கங்காணிகளும்
Lana
dron plantation workers. The first batch of Tamils who were brought here. They are accompanied by Javanese workers and Tamil Kanganis.


The pictures here are black and white pictures taken from 1881 to 1903 in Johor, Muar, Panchur, Lanadron estate. Pictures taken by Arnold Wright.


லனாட்ரோன் தோட்ட நிர்வாகியின் பங்களா வீடு.
Lana
dron Estate Manager's Bungalow.


லனாட்ரோன் தோட்ட இரயில் பாதையில் ரப்பர் தொட்டிகள்.
Rubber tanks on the Lanadron plantation railway track.

இந்த நாட்டில் தமிழர்களுக்குப் பின்னர் வந்து குடியேறியவர்கள் சிலர்; தமிழர்களைப் பார்த்து வந்தேறிகள் என்று சொல்வது தவறு. நியாயம் நிலைக்க வேண்டும் என்பதற்காக வரலாற்று ஆவணங்கள் முன்வைக்கப் படுகின்றன.

பல மாதத் தேடல்களுக்குப் பின்னர் இந்தப் படங்கள் மீட்கப் பட்டன. மலாயா தமிழர்களைக் குறி வைக்கும் இனவாதத்திற்கு எதிரான நம்முடைய போராட்டம் தொடரும். 

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
30.11.2020



29 நவம்பர் 2020

ஜொகூர் மூவார் பஞ்சூர் லனாட்ரோன் தோட்டம் - 1881

மலாயாவில் மிக மிகப் பழைமையான வரலாறு கொண்ட தோட்டங்கள் பல உள்ளன. அவற்றுள் ஜொகூர், மூவார், பஞ்சூர், லனாட்ரோன் தோட்டமும் ஒரு வரலாறு படைக்கின்றது (Malaya Indians Johore Muar Panchor Lanadron Estate 1881).

லனாட்ரோன் தோட்டத்திற்கு 1881-ஆம் ஆண்டில் 22 தமிழர்கள் கொண்டு வரப் பட்டார்கள். அதே அந்த ஆண்டில் மலாயாவுக்கு 3670 தமிழர்கள் கொண்டு வரப்பட்டார்கள்.

The Johor, Muar, Panchor, Lanadron Estate is one of the oldest estates in Malaya. In 1881, 22 Tamils ​​were brought to the Lanatron estate. In the same year 3670 Tamils ​​were brought to Malaya.

ஜொகூர் மாநிலத்திலேயே முதல் தமிழ்ப்பள்ளி இந்தத் தோட்டத்தில் தான் 1903-ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப் பட்டது. 1881-ஆம் ஆண்டில் காபித் தோட்டமாக உருவெடுத்த லனாட்ரோன் தோட்டம் 1897-ஆம் ஆண்டு ரப்பர் தோட்டமாக மாற்றம் கண்டது. இதற்கு பியர்ஸ் தோட்டம் (Pears estate) என்று பெயர் வைக்கப்பட்டது.

The first Tamil school in the state of Johor was established in this estate in 1903. The Lanatron Estate, which was a coffee plantation in 1881, was transformed into a rubber plantation in 1897. It was named Pears estate.

முதலில் 1500 ஏக்கரில் பயிர் நடவு. பின்னர் 1903-ஆம் ஆண்டு மேலும் 500 ஏக்கருக்கு விரிவு செய்யப்பட்டது. தோட்டத்தில் 732 தொழிலாளர்கள். 450 தமிழர்கள்; 60 சீனர்கள்; 100 மலாய்க்காரர்கள்; 150 ஜாவானியர்கள். லனாட்ரோன் தோட்டத்தின் முன்னோடித் தமிழர்களுக்குச் சிரம் தாழ்த்துகிறோம். கைகூப்புகிறோம்.

First crop planting on 1500 acres. Later in 1903 it was expanded to a further 500 acres. 732 workers in the plantation. 450 Tamils; 60 Chinese; 100 Malays; 150 Javanese. We salute the pioneer Tamils of the Lanatron Estate.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
29.11.2020

1. Twentieth century impressions of British Malaya: its history, people, commerce, industries, and resources Page 363. Wright, Arnold; Lloyd's Greater Britain Publishing Company, limited, 1908, pg 363

2. Sandhu. K.S (2010). Indian in Malaya: Some Aspects of Their Immigration and Settlement (1786 - 1957), Mexico City: Cambridge University Press.

3. Table - 3.2 Indian Labour Immigration to Malaysia (1844-1941)

4. http://sekolah-tamil-lanadron.blogspot.com/2013/12/sejarah-sekolah.html







உகாண்டா தமிழர்கள்

தமிழ் மலர் - 28.11.2020

ஆப்பிரிக்காவை உருண்டை உலகத்தின் இருண்ட கண்டம் என்று சொல்வார்கள். உண்மையில் அப்படி ஒன்றும் அது இருண்டு போய்க் கிடக்கவில்லை. இங்கே அடித்த வெயில் தான் அங்கேயும் அடித்தது. இங்கே பெய்த மழைதான் அங்கேயும் பெய்தது. இங்கே மேய்ந்த மாடுகள் தான் அங்கேயும் மேய்ந்தன. இங்கே வாழ்ந்த மக்கள் தான் அங்கேயும் வாழ்ந்தார்கள். இவற்றை எல்லாம் தாண்டிப் போய்ப் பார்த்தால் மனித இனமே அங்கே தான் தோன்றி இருக்கிறது.

ஆக ஆப்பிரிக்கா என்கிற கண்டம் இல்லை என்றால் மனித இனம் என்கிற ஓர் இனம் தோன்றி இருக்குமா. தெரியவில்லை. ஹோமோ செபியன்ஸ் எனும் மனித இனம் முதன்முதலில் ஆப்பிரிக்காவில் தான் தோன்றியது.

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் அந்த மனித இனம் கால் நடையாக பொடி நடையாக நடந்து உலகம் பூராவும் பரவி இருக்கிறது. அந்த வகையில் இப்படி இந்தப் பக்கம் வந்தவர்கள் தான் மலாயா பூர்வீக மக்கள். பாவம். இப்போது மத வாதம் இனவாதத்தில் மாட்டிக் கொண்டு மூச்சுவிட முடியாமல் தவிக்கிறார்கள்.

நேற்று படகு ஏறி வந்தவர்கள் சிலரும் பலரும் அவர்களைப் பார்த்து வந்தேறிகள் என்கிறார்கள். யார் யாரைப் பார்த்து வந்தேறிகள் என்று சொல்வது. வந்தேறி எனும் சொல்லுக்கே விவஸ்தை இல்லாமல் போய் விட்டது. மன்னிக்கவும். கட்டுரை பாதை மாறி போகிறது. எல்லாம் வயிற்றெரிச்சலின் குமுறல்கள் தான்.

ஆப்பிரிக்கா கண்டத்திற்கு உள்ளே ஆயிரம் ஆயிரம் மர்மங்கள். ஆயிரம் ஆயிரம் கதைகள். அவற்றில் ஒரு கதை தான் உகாண்டா தமிழர்களின் கதை.

உகாண்டா நாட்டில் கம்பிச் சடக்குகள் போடுவதற்காக அழைத்துச் செல்லப்பட்ட தமிழர்களின் வாரிசுகளில் ஒரு பகுதியினர் தான் இப்போதைய உகாண்டா தமிழர்கள்.

உகாண்டாவில் இரயில் பாதை வேலை முடிந்து வீடு திரும்பிய தமிழர்கள் பலர். வீடு திரும்பாமல் அங்கே உகாண்டாவிலேயே தங்கி விட்டவர்கள் சிலர். அவர்களைப் பற்றித்தான் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

தவிர இடைப்பட்ட காலத்தில் அதாவது 1950; 1960-ஆம் ஆண்டுகளில் உகாண்டாவிற்குப் புலம் பெயர்ந்த தமிழர்களையும் நினைவில் கொள்ள வேண்டும். அவர்களின் இன்றைய இரண்டாம் மூன்றாம் தலைமுறை வாரிசுகளையும் கணக்கில் சேர்க்க வேண்டும்.

1895-ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா - உகாண்டா இரயில் பாதை (South Africa-Uganda Railway) போடப் பட்டது. அதற்கு உகாண்டா இரயில்வே என்று பெயர். 1,060 கி.மீ (660 மைல்) நீளம். அந்தப் பாதையில் வேலை செய்வதற்காக இந்தியாவில் இருந்து ஆயிரக் கணக்கான இந்தியர்கள் அழைத்துச் செல்லப் பட்டார்கள். மொத்தம் 35,729 தொழிலாளர்கள். பெரும்பாலும் பஞ்சாப் மாநிலத்தின் கராச்சி, லாகூர் பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.

தமிழ்நாட்டில் இருந்து 6,445 தமிழர்கள் போய் இருக்கிறார்கள். ஒவ்வொரு தமிழரும் மூன்று ஆண்டுகளுக்கு வேலை செய்ய வேண்டும். ஒரு மாதத்திற்கு பன்னிரண்டு ரூபாய் சம்பளம். இலவசமாக உணவுப் பங்கீடுகள் (ரேசன்கள்). உடம்புக்கு முடியாமல் மருத்துவமனையில் போய் தங்கினால் அரை நாள் ஊதியம். இலவச மருத்துவச் சேவை.

1895 டிசம்பர் மாதம் தொடங்கி 1901 மார்ச் மாதம் வரையில் இந்தியாவில் ஆள்சேர்ப்பு நடந்தது. 1899-ஆம் ஆண்டில் அவர்களின் ஒப்பந்தங்கள் முடிவு அடைந்தன.

முதன்முதலாகப் போன தமிழர்கள் பலர் இந்தியா திரும்பினார்கள். ஒப்பந்தத்தில் கையொப்பம் போட்டதால், ஒப்பந்தக் காலம் முடியும் முன்னர் திரும்பி வர முடியாத நிலை. மலாயாவை விட உகாண்டாவில் நிலைமை மேலும் மோசம்.

1900-ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் உகாண்டா உள்ளூர் பூர்வீக மக்கள் (Nandi people) இரயில் பாதை போடும் தொழிலாளர்களுக்குத் தொல்லைகள் கொடுத்து வந்தார்கள். அவர்களின் நிலத்தில் இரயில் பாதை ஊடுருவிச் செல்வதால் அவர்களுக்கு ஆதங்கம்.

அவர்களுக்கு கொய்தலெல் அராப் சமோய் (Koitalel Arap Samoei) என்பவர் தலைவராக இருந்தார். அவரை வெள்ளைக்காரர்கள் சுட்டுக் கொன்றர்கள். அதன் பிற்கு தான் தொல்லைகள் அடங்கின.

இரயில் பாதை போடும் போது இறந்த இந்தியர்கள்; தமிழர்களின் எண்ணிக்கையையும் கணக்கில் சேர்க்க வேண்டும். 1895-ஆம் ஆண்டு தொடங்கி 1903-ஆம் ஆண்டு வரையில் ஓர் ஆண்டுக்குச் சராசரியாக 357 பேர் இறந்து இருக்கிறார்கள். இதில் 30 விழுக்காடு தமிழர்கள்.

உகாண்டா இரயில் பாதை கட்டுமானத்தில் 2,493 தொழிலாளர்கள் இறந்து இருக்கிறார்கள். தப்பிப் பிழைத்த பெரும்பாலான இந்தியர்கள் தாயகம் திரும்பினார்கள். இருப்பினும் 6,724 பேர் உகாண்டாவிலேயே தங்கி விட்டார்கள்.

தாயகம் திரும்பாமல் உகாண்டாவில் தங்கிய தமிழர்கள் 845 பேர். இவர்கள் தான் உகாண்டாவில் தமிழர்கள் சமூகத்தை உருவாக்கியவர்கள். சிரம் தாழ்த்துவோம்.

இரயில் பாதை கட்டுமானத்தில் தமிழர்கள் பலரைச் சிங்கங்கள் அடித்துக் கொன்று இருக்கின்றன. ஒரு செருகல். மலாயா இரயில் பாதை கட்டுமானத்தில் தமிழர்களைப் புலிகள் அடித்துக் கொன்றன. யானைகள் மிதித்துக் கொன்றன. கரடிகள் கரண்டி விட்டுப் போயின. அங்கே உகாண்டாவில் சிங்கங்கள் கடித்துக் குதறிவிட்டுப் போய் இருக்கின்றன.

உலகின் பல நாடுகளின் உள்கட்டமைப்புகளில் தமிழர்கள் பெரும் பங்காற்றி உள்ளார்கள். மலாயாவை எடுத்துக் கொள்ளுங்கள். அலோர் ஸ்டாரில் இருந்து ஜொகூர் பாரு வரையில் இரயில் பாதை போட்டுக் கொடுத்தவர்கள் தமிழர்கள்.

ஜொகூர் பாரு நகரில் இருந்து சிங்கப்பூருக்கு இரயில் பாதை போட்டுக் கொடுத்தவர்கள் தமிழர்கள். அடுத்து கிம்மாஸ் நகரில் இருந்து கோத்தா பாரு வரையில் இரயில் பாதை போட்டுக் கொடுத்தவர்கள் தமிழர்கள்.  

மலாயாவின் முதல் இரயில் பாதை 135 ஆண்டுகளுக்கு முன்னால் தோற்றுவிக்கப் பட்டது. அந்த முதல் இரயில் பாதையை உருவாக்கிக் கொடுத்தவர்களும் தமிழர்கள் தான்.

கடைசியில் அவர்களுக்கு என்ன பெயர். வந்தேறிகள். ஆடாய் மாடாய் உழைத்த அந்த வாயில்லா ஜீவன்களுக்கு வந்தேறிகள் எனும் பட்டப் பெயர். அப்படி அழைப்பதற்கு வெட்கமாக இல்லை. இதுவா நன்றிக்கடன். இதுவா மனித நேயம்.

உகாண்டா இரயில் பாதை போடும் போது இரண்டு சிங்கங்களின் அராஜகம் தலைவிரித்தாடி இருக்கிறது. அந்தச் சிங்கங்களுக்கு சாவோ சாப்பாட்டு ராமன்கள் (Tsavo Man-Eaters) என்று பெயர். குறைந்தது 58 இந்தியர் தொழிலாளர்களைக் கொன்று இருக்கின்றன.

தமிழர்கள் சிலரும் இறந்து இருக்கிறார்கள். தொழிலாளர்கள் தங்கி இருக்கும் முகாமிற்குள் நுழைந்து அட்டகாசங்கள் செய்து இருக்கின்ரன. கடைசியில் ஒரு வழியாக அவற்றைச் சுட்டுக் கொன்று விட்டார்கள்.

உகாண்டா நாட்டைப் பற்றி சின்னத் தகவல். உகாண்டா நாடு, கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ளது. இதன் எல்லைகளாக்க கிழக்கே கென்யா. வடக்கே சூடான். மேற்கே காங்கோ. தென்மேற்கே ருவாண்டா. தெற்கே தான்சானியா. உகாண்டாவின் தலைநகரம் கம்பாலா. மொத்த பரப்பளவு 2,36,040 சதுர கிலோ மீட்டர். மலேசியாவில் மூன்றில் இரு பகுதி.

உகாண்டாவில் தற்சமயம் 15,000 இந்தியர்கள் வாழ்கிறார்கள். இவர்களில் தமிழர்கள் 3,200 பேர். 130 ஆண்டுகளுக்கு முன்னால் இரயில் பாதை போட போன தமிழர்களின் வாரிசுகள். நல்லபடியாக வாழ்கிறார்கள்.

ஒரு கட்டத்தில், 1972-ஆம் ஆண்டில் இராணுவ சர்வாதிகார அதிபர் இடி அமீன் (காட்டுமிராண்டித் தலைவர்) ஆசிய நாட்டு மக்களை அந்த நாட்டில் இருந்து விரட்டி அடித்தார். 80,000 இந்தியர்கள் நிர்கதி ஆனார்கள். பெரும்பான்மையினர் குசராத்தி வம்சாவளியினர்.

உகாண்டா மக்களுக்கு இந்திய வணிகர்கள் மீது எப்போதுமே வெறுப்புணர்ச்சி. அவர்களின் பணம் காசு எல்லாவற்றையும் இந்தியர்கள் பிடுங்கிக் கொள்கிறார்கள் எனும் குற்றச்சாட்டு. அதனால் இடி அமீன் ஆசியர்களை நாட்டை விட்டு வெளியேற்ற முடிவு செய்தார்.

பலர் பக்கத்து நாடுகளுக்குத் தப்பிச் சென்றார்கள். சிலர் அங்கேயே இருந்தார்கள். ஏறக்குறைய 20 ஆயிரம் பேர். அவர்களில் தமிழர்களும் அடங்குவார்கள். 1980-ஆம் ஆண்டுகளில் இடி அமீன் ஆட்சி முடிவுக்கு வந்ததும், பலர் மீண்டும் திரும்பி வந்தார்கள்.

உகாண்டா நாட்டின் மக்கள் தொகையில் இந்தியர்கள் ஒரே ஒரு விழுக்காட்டிற்கும் குறைவு தான். இருந்த போதிலும், அவர்கள் தான் அந்த நாட்டின் வரி வருவாயில் 65 விழுக்காடு வரை பங்களிப்புச் செய்கிறார்கள். இது எப்படி இருக்கு என்று கேட்க வேண்டாம். இங்கே இந்தப் பக்கமும் அதே கேஸ் தானே. அப்புறம் எப்படி.

உகாண்டாவில் ஆகப் பெரிய பணக்காரர் ஓர் இந்தியர். பெயர் சுதீர் ரூபரேலியா (Sudhir Ruparelia). 1 பில்லியன் டாலர் சொத்துகளுக்கு உரிமையாளர். இதை வேண்டும் என்றால் இது எப்படி இருக்கு என்று கேட்கலாம். தப்பு இல்லை.

இப்போதைய உகாண்டா தமிழர்கள் சிறு வியாபாரங்கள்; தொழில்நுட்பத் துறைகள்; ஆசிரியர்கள்; குத்தகை வேலைகள்; கடை கண்ணிகள் வைத்துக் கொண்டு ஓரளவிற்கு நல்லபடியாக இருக்கிறார்கள். அவர்களுக்கு என ஒரு சங்கம் உள்ளது. அதன் பெயர் உகாண்டா தமிழர் சங்கம். தமிழர் விழக்ககளைச் சிறப்பாகக் கொண்டாடி வருகிறார்கள். அண்மையில்கூட பொங்கல் நிகழ்ச்சியைக் கொண்டாடி இருக்கிறார்கள்.

தமிழர்கள் உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் அவர்கள் நல்லபடியாக வாழ வேண்டும் என்று வேண்டிக் கொள்வோம். உகாண்டா தமிழர்களுக்கு மரியாதை செய்வோம்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
28.11.2020

சான்றுகள்:

1. Patel, Hasu H. (1972), "General Amin and the Indian Exodus from Uganda", Issue: A Journal of Opinion, 2 (4): 12–22

2. Cohen, Ronald Lee, 1944- (1997). Global diasporas: an introduction. University of Washington Press.

3. http://ugandatamilan.blogspot.com/2018/01/uga-tamil-sangam-pongal-function-2018.html

4. https://en.wikipedia.org/wiki/Uganda_Railway

5. Ember, Melvin (30 November 2004). Encyclopedia of Diasporas: Immigrant and Refugee Cultures Around the World. Volume II: Diaspora Communities.

 

28 நவம்பர் 2020

கரு கொலை சிசு கொலை

தமிழ் மலர்  - 27.11.2020

குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே. இது பழைய பழமொழி. குழந்தையும் குண்டுமணியும் குப்பைத் தொட்டியிலே. இது புதிய இழிமொழி. படிக்கப் போகிற பதின்ம வயசுகள் குழந்தையைப் பெற்று கழிவறையில் கடாசிவிட்டுப் போகும் கலாசாரம். இழிநிலை பார்க்கும் இழிவுக் கலாசாரம். சாதாரணமாகி வருகிறது.

உடல் ஆசைகளில் உயிர்களை உருவாக்குவது மனித மரபு. மனித இயல்பு. காலம் காலமாக தொடரும் பிறப்பியல்பு. ஆனால் அந்த ஆசைகள் இப்போது அப்படி இல்லீங்க. வக்கிரமான கொடூரமான ஆசைகளாக மாறி வருகின்றன.

மலேசியாவில் சில பல இடங்களில் அந்த மாதிரியான வக்கிரங்கள் தலை விரித்து ஆறு தலையாய் ஆடி இருக்கின்றன. ஏழு தலையாய் ஆடியும் வருகின்றன. அடிக்கடி சத்தம் கேட்கின்றன. செய்திகளில் பார்க்கிறோம். கேட்கிறோம்.

அண்மையில்கூட பிறந்து கண் திறக்காத ஒரு பச்சைக் குழந்தை. பத்தாவது மாடியில் இருந்து தூக்கி வீசப்பட்டது. எப்படி மனசு வருகிறதோ. என்ன ஜென்மங்களோ. மனிதமா மிருகமா. தெரியவில்லை.

சாலை ஓரங்களில், பாழ் அடைந்த குடிசைகளில், அடுக்குமாடி அறைகளில் துடிதுடிக்கும் பச்சைச் சிசுகளை மீட்டு எடுத்து இருக்கிறார்கள். ஈச்சமரக் காடுகளில் எறும்பு முசுடுக் கடிகளில் எலும்புக் கூடுகளாய்ப் பால் சிசுக்களைக் கண்டு எடுத்து இருக்கிறார்கள். வேதனை. வேதனை.

இந்தியாவில் சில மாநிலங்களில்; சில கிராமங்களில் பெண் குழந்தைகள் பிறந்தவுடன், அந்தப் பச்சை சிசுக்களின் தொப்புள் கொடி ஈரம் காய்வதற்கு முன்னரே கள்ளிப் பால் விசம் கொடுத்துக் கொன்று விடுகிறார்கள்.

முன்புதான் அப்படி என்றால் இப்போதும் அதே மாதிரி சனி பகவானுக்குச் சங்கு ஊதுகிறார்கள். நல்லாதான் போகிறார்கள். வருகிறார்கள். நாண்டுகிட்டு சாகாமல் நாத்திகம் பேசுகிறார்கள்.

ஒரு சில கிராமத்து எல்லைகளில் மாட்டுச் சாணம் போட்டு கள்ளிச் செடிகளை வளர்த்து வருகிறார்களாம். பத்திரிகைச் செய்தியில் படித்த நினைவு. கள்ளிப் பாலைக் கொடுத்து சிசுக்களைக் கொல்வது ஒருபுறம் இருக்கட்டும். என்னைக் கேட்டால் அவர்களைத்தான் முதலில் விசம் வைத்துக் கொல்ல வேண்டும்.

பிறந்த மறுநாளே கழுத்தை நெரித்துக் கொள்ளும் அளவுக்கு மனித மனம் மிருகமாகிப் போகிறதே! ஈவு இரக்கத்தில் ஈரப் பசை இல்லாத சில தாய்ப் பேய்மைகளை என்னவென்று சொல்வது. மனசிற்கு ரொம்பவும் சங்கடமாக இருக்கிறது!

சிசுவைப் புதைத்த இடத்தில்
கண்ணீர் வடிக்கிறது பனித்துளி
பாலூட்ட வழி தெரியாமல்
பதறித் துடிக்கிறது கள்ளிச் செடி


கவிதையைப் பாருங்கள். எழுதிய கவிஞரின் மனக் குமுறலைப் பாருங்கள். ஆக எப்படி மனம் வருகிறது என்று யோசித்துப் பார்க்கின்ற விசயம் இல்லை. எப்படி எல்லாம் குறுக்கு புத்தி கோணலாகிப் போகிறது என்று யோசிக்கின்ற விசயம்.

இப்படியே பெண் பிள்ளைகளை அழித்துக் கொண்டு போனால் அப்புறம் பெண்களே இல்லாமல் போய் விடுவார்களே. அழகிற்கும் வேண்டும் ஆசைக்கும் வேண்டும். ஆனால் பெண் குழந்தைகள் என்றால் அது மட்டும் வேண்டாமாம்.

என்னய்யா அக்கிரமம். எல்லா இடங்களிலும் அல்ல. உலகில் ஒரு சில இடங்களில் தான். பெண்கள் இல்லாமல் ஆண்களால் ஓர் அணு அளவுகூட அசைய முடியாது. ஓர் அறிஞர் சொல்லி இருக்கிறார். சத்தியமான உண்மை.

ஆக பெண் சிசுக் கொலைகளைப் பார்த்து பார்த்து பூமாதேவிக்கே பொறுக்காமல் போய்விட்டது போலும். அதனால் தானோ என்னவோ அடிக்கடி காட்டு வெள்ளப் பிரளயங்கள். கடல் சுனாமிச் சூறாவளிகள் ஆர்ப்பரித்துப் போகின்றன.

பெண் பிள்ளைகளை ஈவு இரக்கம் இல்லாமல் கொன்றுவிடும் பாவச் செயல்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அந்த நோக்கத்தில் தான் தமிழ்நாட்டில் தொட்டில் குழந்தை திட்டம் எனும் திட்டத்தைக் கொண்டு வந்தார்கள். நல்ல ஒரு மனிதநேயத் திட்டம்.

இந்தத் திட்டம் 1992-ஆம் ஆண்டு இந்தியாவிலேயே முதல் முறையாகத் தமிழ்நாட்டில்தான் அறிமுகம் செய்யப்பட்டது. தொட்டில் குழந்தை திட்டத்தை உருவாக்கிய பெருமை முதல்வர் ஜெயலலிதா அவர்களைச் சாரும். நன்றி சொல்வோம்.

சேலம் மாவட்டத்தில் இந்தத் திட்டம் முதன்முறையாக நடைமுறைக்கு வந்தது. நல்ல மனுசி. அவரும் போய்ச் சேர்ந்து விட்டார்.

பின்னர் அந்தத் திட்டம் மதுரை, தேனி, திண்டுக்கல், ஈரோடு, நாமக்கல் மற்றும் தருமபுரி மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப் பட்டது. அதன் பின்னர் குடலூர், அரியலூர், பெரம்பலூர், வில்லிபுரம் போன்ற இடங்களுக்கும் விரிவாக்கம் செய்யப் பட்டது.

தமிழ்நாடு முழுமையும் ஏறக்குறைய 200-க்கும் மேற்பட்ட தொட்டில் குழந்தை மையங்கள் உள்ளன. ஒவ்வொரு மையத்திற்கும் ஆண்டுக்கு 60 - 80 இலட்சம் ரூபாய் செலவாகிறது.

இதுவரை 3,800 பெண் குழந்தைகள் 662 ஆண் குழந்தைகள் காப்பாற்றப் பட்டு உள்ளனர். இவர்களில் 3,200 குழந்தைகள் தத்து கொடுக்கப் பட்டு உள்ளனர். தவிர 260 பெண் குழந்தைகள் 44 ஆண்குழந்தைகளை வெளிநாட்டவர் தத்து எடுத்து உள்ளனர்.

தமிழ்நாட்டில் பத்தாண்டுகளுக்கு முன் அதாவது 2001-இல் 1000 ஆண்களுக்கு 942 பெண்களாக இருந்த நிலைப்பாடு 2011-இல் 1000 க்கு 946 ஆக உயர்ந்து உள்ளது. மகிழ்ச்சியான செய்தி. 2019-இல் 965-ஆக உயர்வு கண்டு உள்ளது. மகிழ்ச்சி.

தமிழ்நாட்டில் மட்டும் அல்ல. இந்தியாவின் பல மாநிலங்களிலும் பெண் குழந்தைகளை ஒரு பெரிய சுமையாக நினைக்கும் வழக்கம் உள்ளது. அதாவது பரவாயில்லை.

அதையும் தாண்டிய நிலையில் ஐரோப்பிய நாடுகளைப் பாருங்கள். பிறந்த குழந்தையே பெற்றவர்களுக்கு ஒரு சுமையாகிப் போகிறதாம். இப்படியும் ஒரு நவீனக் கலாசாரம். அதைப் பற்றி என்ன சொல்லப் போகிறீர்கள்.

வந்தார்கள் வென்றார்கள் சென்றார்கள் என்பதை எல்லாம் வேண்டும் என்றால் வரலாற்றில் படிக்கலாம். வீரவசனம் பேசிக் கொள்ளலாம். இப்போதைக்கு அப்படி எல்லாம் இல்லீங்க. வந்தார்கள் பார்த்தார்கள் படுத்தார்கள் என்பதுதான் அங்கே நடக்கிற கசுமாலக் கூத்துகள். காடு மேடு தெரியாமல் சகட்டு மேனிக்கு கூடு கட்டி வாழ்கிறார்களாம்.

புருசன் பெண்சாதி ஆகமாலேயே பிள்ளையைப் பெற்றுக் கொள்கிறார்கள். அது புது பேசனாம். என்ன பேசனோ என்ன சட்டியோ என்ன இழவோ. கண்கூசும் கண்ராவிச் செய்திகள்.

அதைப் பற்றி கருத்து சொல்ல என் மனசுக்கும் பக்குவம் இல்லை. வேண்டாம். நிறுத்திக் கொள்வோம். ரொம்ப பேசினால் சண்டைக்கு வருவார்கள்.

இந்தியாவின் சில இடங்களில், பெண் குழந்தை பிறந்தவுடன் அந்தக் குழந்தையின் பிறந்த ஈரம் காய்வதற்குள் அரிச்சுவடி தெரியாமல் அதன் முகவரியைச் சுத்தமாகத் துவைத்துத் துடைத்துக் காயப் போட்டு விடுகிறார்கள்.

இங்கே மலேசியாவில் மட்டும் என்னவாம். கொஞ்சம் வேறு மாதிரி. வந்ததும் தெரியாமல்; போட்டுத் தளுவதும் தெரியாமல் போய்க் கொண்டே இருக்கிறார்கள். இதில் என்ன சிறப்பு என்றால் இங்கே ஆண் குழந்தை பெண் குழந்தை என்கிற பேதம் இல்லை. இரண்டும் ஒரே கேஸ்.

ஆக, இங்கே மட்டும் என்ன ஒசத்தி என்று கேட்க வேண்டாம். அது ஒன்றுதான் பாக்கி. குழந்தைகளைப் பெற்று வீசி எறியும் கலாசாரத்திற்கு மலேசியா மட்டும் விதிவிலக்கு அல்ல. ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். ஒன்றாக ஊறிய மட்டைகள் நன்றாகத்தான் ஊறிப் போய் இருக்கும்.

குப்பைத் தொட்டிகளில், பேரங்காடிகள், கோயில் குளங்களில் இருந்து சிசுக்கள் மீட்கப் படும் அவல நிலைகளை அடிக்கடி பார்த்துக் கொண்டுதானே வருகிறோம். எல்லாரையும் சொல்லவில்லை. ஈவு இரக்கத்தில் ஈரப் பசை இல்லாமல் போகும் ஒரு சில மனிதப் பிண்டங்களைத்தான் சொல்கின்றேன்.

அண்மையில் தேசிய சேவைக்குப் போன ஒரு பதின்ம வயதுப் பெண் பிள்ளை. குளியல் அறையிலேயே ஒரு குழந்தையைப் பெற்று எடுத்து இருக்கிறாள். ஒட்டு மொத்த மலேசியர்களும் மயக்கம் போட்டு விழாதக் குறைதான். மன்னிக்கவும்.

மலேசிய அரசியல்வாதிகள் அடிக்கடி சொல்லும் ’மலேசியா போலே’ எனும் வாசகம் வேறு நேரம் காலம் தெரியாமல் வந்து கதவைத் தட்டுகிறது. விடுங்கள்.

இதற்கு எல்லாம் காரணம் என்ன. கணவனை விட்டுப் பிரிந்த பெண்களுக்குப் பிறந்த குழந்தைகள்; திருமணம் செய்யாமலே பிறந்த குழந்தைகள்; கணவன் இருந்தும் அவனுக்குத் தெரியாமல் பிறந்த குழந்தைகள்; கருவைக் கலைத்த பின்னர் பிறந்த குழந்தைகள்; பதின்ம வயதில் பக்குவப் படாத ஆசைகள்; வயதுக்கு மீறி வரைமுறை இல்லாத வாலிபக் கோளாறுகள்.

அப்புறம் இதை எல்லாம் தாண்டிய நிலையில், கல்யாணம் ஆகாமலேயே பிறந்த குழந்தைகள். ஆக இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

குழந்தையைப் பெற்று எடுத்தவர்களுக்கு அந்தக் குழந்தை வேண்டாம் என்கிற ஓர் இக்கட்டான நிலைமை எப்படியோ வந்து விடலாம். அல்லது அவர்களுடைய ஆசாபாசங்களுக்கு அந்தக் குழந்தைகள் இடைஞ்சலாகிப் போகலாம்.

அந்த மாதிரியான இரக்கம் இல்லாத செயல்களைத் தடுத்து நிறுத்த மருத்துவமனைகள், ஆதரவற்றோர் இல்லங்கள், சுகாதார மையங்கள் போன்ற இடங்களில் குழந்தைத் தொட்டில்கள் வைக்கப் படுகின்றன.

ஒரு குழந்தையைக் கொலை செய்வதற்குப் பதிலாக அப்படியே அந்தக் குழந்தையைக் ’குழந்தைத் தொட்டிலில்’ விட்டுச் செல்லலாமே. அந்த உயிர் காப்பாற்றப் படலாமே.  பின்னர் தொட்டில் குழந்தை மையங்களில் சேர்க்கப் படலாம். முறையாக வளர்க்கப் படலாம். முறையாக யாரிடமாவது சேர்க்கப் படலாம்.

2011-ஆம் ஆண்டு. தமிழ்நாட்டில் ஒரு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு. பெண் குழந்தைகளின் எண்ணிக்கை கடலூர், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் மிக மிக மோசமாகக் குறைந்து வருவதைக் கண்டுபிடித்தார்கள்.

அதனால் அந்த மாவட்டங்களில் தொட்டில் குழந்தைத் திட்டம் உடனடியாக விரிவாக்கம் செய்யப்பட்டது. ஜெயலலிதாவின் உத்தரவு.

தமிழகத்தில் பெண் சிசுக்கொலை தொடக்கக் காலங்களில் நீலகிரி மாவட்டத்தில் மட்டும் தான் கொஞ்சம் அதிகமாக இருந்தது. 1980-ஆம் ஆண்டுகளில் தமிழகத்தின் தென் பகுதியான மதுரை மாவட்டம், உசிலம்பட்டி, தேனி போன்ற பகுதிகளுக்கும் கோவிட் கொரோனா மாதிரி தொற்றிக் கொண்டது. நீலகிரி குளிர்க்காற்று உசிலம்பட்டிக்கு குளிர் காய வந்து இருக்கலாம்.

அடுத்து 1990-ஆம் ஆண்டுகளில் தமிழகத்தின் வட மாவட்டங்களில் குறிப்பாக சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை மாவட்டத்திலும் இந்தக் கொடூரப் பழக்கம் வேர் விட்டுப் பரவியது.

’மனிதம்’ இல்லாத இந்தச் செயலில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தவர் மட்டுமே ஈடுபட்டு வருவது சமூக ஆய்வின் மூலமாகக் கண்டு அறியப் பட்டது. எந்தச் சமூகத்தவர் என்று கேட்க வேண்டாம்.

அதன் பின்னர், பெண்களுக்காக, பெண்களின் விழிப்பு உணர்வுகளுக்காகப் பல சமூகப் பொருளாதாரத் திட்டங்கள் உருவாக்கப் பட்டன. பெண் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு உத்தரவாதங்கள் கொடுக்கப் பட்டன. இருந்தாலும், சிசுக்கொலை, கருக்கொலைகள் குறையவே இல்லை. தொடர்ந்தன.

தமிழகத்தில் பெண் சிசுக் கொலையைத் தடுக்கும் வகையில் 1991-ஆம் ஆண்டில் தொட்டில் குழந்தை திட்டம் பல மாவட்டங்களில் தீவிரப் படுத்தப் பட்டது. தர்மபுரியில் இந்தத் திட்டத்துக்குப் பெரும் அளவில் ஆதரவு கிடைக்கவில்லை.

தொட்டில் குழந்தை திட்டம் தொடர்பாகத் தமிழ்நாடு அரசு பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளைச் செயல் படுத்தி வருகிறது. அந்தத் திட்டத்தின் கீழ் பெண் குழந்தைகளின் எண்ணிக்கையும் இப்போது அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.

தொட்டில் குழந்தை திட்டம் என்பது சிசுக் கொலையைத் தவிர்க்கும் திட்டம் என்பது எல்லாருக்கும் தெரியும். இப்போது நிலைமை மாறி வருகிறது. இரு நாட்களுக்கு ஒரு குழந்தை எனும் விகிதத்தில் தொட்டில் குழந்தைகளின் தொகை அதிகரித்து வருகிறது.

மறுபடியும் சொல்கிறேன். இரண்டு நாட்களுக்கு ஒரு குழந்தை. அப்படி என்றால் என்ன வேகத்தில் கலாசாரம் பரவிக் கொண்டு இருக்கிறது என்பதைக் கற்பனை செய்து கொள்ளுங்கள்.

குழந்தை என்றால் அதில் ஆண் குழந்தை பெண் குழந்தை என்கின்ற பேதம் வேண்டாம். கல்யாணம் பண்ணும் போது ஓர் ஆண் ஒரு பெண்ணைத் தானே தேடிப் போக வேண்டி இருக்கிறது. குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே எனும் பழமொழி ஒரு தெய்வ மொழியாக மாற வேண்டும். அதுவே நம் ஆசையும் கூட!

ஒரு கள்ளிச் செடியின் பக்கத்தில் சின்ன ஒரு புதைமேடு. அங்கே இருந்து கீச் குரல். அம்மா என்கிற அழுகைச் சத்தம். உங்களுக்கு கேட்கிறதா? இந்த மாதிரி எத்தனையோ ஆயிரம் குழந்தைகள் இன்னும் கள்ளிச் செடி புதைமேடுகளில் அழுது கொண்டு இருக்கிறார்கள். அவர்களுடன் சேர்ந்து அந்த ஆண்டவனும் அழுகிறார். நானும் அழுகிறேன்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
27.11.2020