09 ஜூலை 2021

அமெரிக்காவின் தண்டல் வேலை: மலாயாவுக்கு கோடிகளில் இழப்பு

தமிழ் மலர் - 09.07.2021

ஜப்பானியரின் மலாயா ஆக்கிரமிப்பு (1942 – 1945)
(கட்டுரைத் தொடரின் இரண்டாம் பாகம்)

1942-ஆம் ஆண்டு தொடங்கி 1945-ஆம் ஆண்டு வரை மலாயா மக்களுக்கு ஜப்பானியர்கள் இழைத்தது மாபெரும் கொடுமை. அந்த அதிகார வக்கிரமக் கொடுமையில் அப்பாவிச் செம்மறியாடுகளாய் ஆயிரக் கணக்கான உயிர்ப்பலிகள். உயிர்மை பாய்ந்த அந்த உயிர்ப்பலிகள் அனைத்தும் ஜப்பானிய ஏகாதிபத்திய வரலாற்றின் மற்றொரு பக்கம்.

’வர்றான் வர்றான் சப்பான்காரன் ஆள்பிடிக்க வர்றான்’ என்பது அந்தக் காலத்து மலாயாத் தமிழர்களின் வாய்மொழிப் பாடல். அதில் கசிந்து வழிவது எல்லாம் வரலாற்றின் வேதனை விசும்பல்கள். வரலாற்றின் வேதனை வலிகள்.

அந்த வேதனை வலிகளில் சாத்துயர் மரண ஓலங்கள் ஓங்காரமாய் ஒப்பாரி வைப்பதை இன்றும் நன்றாகவே கேட்க முடிகின்றது. ஜப்பானியர் காலத்தில் நம் இனத்தவர்கள் எப்பேர்ப்பட்ட வேதனைகளை அனுபவித்து இருப்பார்கள். நினைத்துப் பார்ப்போம்.


அந்த வேதனைகளுக்கும் அந்த விசும்பல்களுக்கும் ஜப்பானியர்கள் பின்னர் காலத்தில் போர் இழப்பீடு (நஷ்டயீடு) எனும் பெயரில் இழப்பீடு கொடுத்து இருக்கிறார்கள். 270 பில்லியன் ரிங்கிட் இழப்பீடு என்று ஊடகங்களில் பரவலாகி வருகிறது. இந்த நஷ்டயீடு எந்த அளவிற்கு உண்மை என்பதைப் பற்றி ஆராய்கிறது இந்தக் கட்டுரைத் தொடர்.

சயாம் பர்மா மரண இரயில் பாதை அமைப்பில் பாதிக்கப்பட்ட மலாயா மக்களின் குடும்பங்களுக்கு ஜப்பானிய அரசாங்கம் 270 பில்லியன் போர் இழப்பீடு வழங்கியதாகவும்; அந்தப் பணம் எங்கே போனது எனும் கேள்விகள் பரவலாகி வருகின்றன.

1967-ஆம் ஆண்டில் ஜப்பானுக்கும் மலேசியாவுக்கும் இடையே ஒரு போர் இழப்பீட்டு ஒப்பந்தம் செய்து கொள்ளப் பட்டது. அந்த ஒப்பந்தத்தின்படி  மலாயாவுக்கு கிடைத்த இழப்பீடு: 


1. ஜப்பானிய தொழிற்சாலைகள்; இயந்திரங்கள்; உபகரணங்கள்; தளவாடங்கள். (5 விழுக்காடு).

2. ஜப்பானியக் கடற்படையைச் சேர்ந்த 23 போர்க் கப்பல்கள்.

அந்தத் தளவாடப் பொருட்களை விற்ற பணம் எல்லாம் மலேசிய மக்களுக்குப் போய்ச் சேர்ந்து இருக்க வேண்டும்.

ஆனால் மலாயா பிரிட்டிஷ் அரசாங்கம் அப்படிச் செய்யவில்லை. ஜப்பான் வழங்கிய இழப்பீட்டில் பெரும் தொகையை மலாயாவில் இருந்த ரப்பர் தோட்டங்களைச் சீர் செய்யவும்; மலாயாவில் இருந்த ஈயச் சுரங்கங்களைச் செப்பனிடவும் பயன்படுத்தியது.

1951 செப்டம்பர் 8-ஆம் தேதி அமெரிக்கா, சான் பிரான்சிஸ்கோ நகரில் ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதற்குத்தான் சான் பிரான்சிஸ்கோ ஒப்பந்தம் அல்லது ஜப்பான் சமாதான ஒப்பந்தம் (Treaty of San Francisco) என்று பெயர். 48 நாடுகள் கையெழுத்து போட்டன. அந்த ஒப்பந்தத்திற்குப் பிறகு ஜப்பான் போர் இழப்பீடுகளை வழங்கத் தொடங்கியது. 


இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போடுவதற்கு மலாயா மக்களின் பிரதிநிதிகள் எவரும் அழைக்கப்படவில்லை. மலாயா காலனித்துவ ஆங்கிலேயர்களின் பிரதிநிதிகள் மட்டும் மலாயாவைப் பிரதிநிதித்துச் ‘சைன்; போட்டு வந்து விட்டார்கள்.

மலாயாவுக்கு 1967-ஆம் ஆண்டு வரையில் 2.94 பில்லியன் யென் அதாவது 90 மில்லியன் ரிங்கிட் மட்டுமே கிடைத்தது. மற்ற மற்ற நாடுகளுக்குத் தாராளமாகக் கிடைத்து இருக்கிறது.

எ.கா: சிங்கப்பூர். ஒரு குட்டி நாடு. அதற்கு 87 மில்லியன் ரிங்கிட் கிடைத்து இருக்கிறது. பர்மாவிற்கு 1500 மில்லியன் ரிங்கிட்; பிலிப்பைன்ஸிற்கு 1590 மில்லியன் ரிங்கிட்; இந்தோனேசியாவிற்கு 1910 மில்லியன் ரிங்கிட்; கொரியாவிற்கு 2160 மில்லியன் ரிங்கிட்; வியட்நாமிற்கு 420 மில்லியன் ரிங்கிட்; தாய்லாந்திற்கு 165 மில்லியன் ரிங்கிட். 


அந்த வகையில் மலாயாவுக்குத் தான் மிகக் குறைவாகக் கிடைத்து இருக்கிறது.

மலாயா மக்களின் பிரதிநிதிகள் எவரும் சான் பிரான்சிஸ்கோ மாநாட்டிற்குப் போகவில்லை. அதனால் வாலும் தெரியவில்லை. காலும் தெரியவில்லை. ஆக இழப்பீடு வழங்கப்பட்ட பின்னர் மலாயா மக்களால் கூடுதலாகக் கேட்க முடியாமல் போய் விட்டது.

நல்லவேளை. இந்தக் காலத்து அரசியல்வாதிகள் இல்லாமல் போய் விட்டார்கள். இருந்து இருந்தால் வெள்ளைக்காரர்களின் மண்டையை நல்லாவே டெட்டோல் போட்டுக் கழுவி இருப்பார்கள். ஆளாளுக்கு ஆட்டைய போட்டு அப்படியே பச்சைக் கொடியைக் காட்டி; அப்படியே பச்சைப் புனிதம் பேசி; அப்படியே நாலு பெண்டாட்டிகளுக்குப் பேரம் பேசி; ஆளாளுக்கு 25 பிள்ளைகளைப் பெற்று இருப்பார்கள்.

ஜப்பானியர்கள் மலாயாவுக்கு வழங்கிய போர் இழப்பீட்டுத் தொகை மனநிறைவு அளிப்பதாக இல்லை. அதனால் மலாயா மக்களுக்கு அப்போது இருந்தே பொதுவான இறுக்கமான மனக்கசப்புகள். ஜப்பான்காரன் எத்தனை கப்பல்களை அனுப்பினாலும் ஏற்றிச் செல்ல முடியாத அளவிற்கு மனக் கசப்புகள்.


கூட்டிக் கழித்துப் பார்த்தால், ஜப்பான்காரர்கள் மலாயா மக்களுக்கு ஒரு சிட்டிகை தான் கொடுத்து இருக்கிறார்கள். அதற்குக் காரணம் அமெரிக்கா.

அப்போதே அமெரிக்கா உலகப் போலீஸ்காரர் வேலையை ஆரம்பித்து விட்டது. அமெரிக்கா என்ன சொல்கிறதோ அதற்குத் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை இங்கிலாந்து. அந்த இங்கிலாந்திற்கு ஜால்ரா பக்க வாத்தியங்கள் மஞ்சள் கலர் ரஷ்யா; சிவப்புக் கலர் சீனா. ஆக இவர்களுக்கு அமெரிக்காதான் அசத்தல் உசுப்பல் பெரிய மண்டோர்.

ஜப்பானின் பொருளாதாரத்தைக் காக்க வேண்டும் என்று சொல்லி மலாயாவுக்குக் கிடைக்க வேண்டிய பெரிய அளவு தொகையைத் தடுத்து நிறுத்தியது. முறைப்படி மலாயாவுக்குக் கிடைத்து இருக்க வேண்டியது என்ன தெரியுங்களா?

60 மில்லியன் அமெரிக்க டாலர் கிடைத்து இருக்க வேண்டும். அதோடு 319 கப்பல்களில் இயந்திரங்கள்; உபகரணங்கள்; தளவாடங்கள் ஜப்பானில் இருந்து வந்து சேர்ந்து இருக்க வேண்டும். 60 மில்லியன் அமெரிக்க டாலர் அப்போதைய காசிற்கு ஏறக்குறைய 150 மில்லியன் ரிங்கிட். இது 1951-ஆம் ஆண்டு கணக்கு.

அதாவது ஜப்பானில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்த தளவாடப் பொருட்கள் 319 கப்பல்களில் வந்து சேர்ந்து இருக்க வேண்டும். கிடைத்து இருந்தால் மலாயாவுக்கு ஒரு பொருளாதார மலர்ச்சி கிடைத்து இருக்கலாம். ஆனால் அமெரிக்கா, கறுப்புக் கங்காணி வேலை பார்த்து மலாயாவை மொட்டை அடித்து கரும்புள்ளி செம்புள்ளி குத்தி விட்டது. 


இருந்தாலும் மலாயா பிரிட்டிஷ் அரசாங்கம் விடவில்லை. மலாயா மக்களுக்காகப் போராடி இருக்கிறது. கூடுதலாக இழப்பீடு கேட்டு இருக்கிறது. ஜப்பானில் இருந்த ஜப்பானிய சொத்துகளைப் பங்கு கேட்டு இருக்கிறது. ஜப்பானிய மத்திய வங்கியில் சேமிப்பில் வைத்து இருந்த தங்கப் பாளங்களையும் கேட்டு இருக்கிறது. ஆனால் அமெரிக்கா மறுத்து விட்டது.

’பசிபிக் பெருங்கடலில், ஹவாய் பேர்ல் துறைமுகத்தில் எங்களுக்கு ரொம்பவும் இழப்பு. தங்கப் பாளங்கள் எங்களுக்கு வேண்டும்’ என்று மலாயா மக்களுக்கு அமெரிக்கா பை பை சொல்லி விட்டது. கடைசியில் மலாயாவுக்கு ஒரே ஒரு போர்க் கப்பல் மட்டுமே கிடைத்தது. மலாயாவை ஆட்சி செய்த வெள்ளைக்காரர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

அதன் விளைவு. சயாம் பர்மா மரண இரயில் பாதை நிர்மாணிப்புச் சேவையில் பாதிக்கப்பட்ட மலாயா மக்களுக்கு, அப்போதைய காலத்தில் இழப்பீடு கொடுக்க முடியாத நிலை.

இது இப்படி இருக்க அதே 1960-ஆம் ஆண்டுகளில் ’இரத்தக் காசு’ (blood debt) வேண்டும் என்று இந்தோனேசியா, பர்மா நாடுகள் ஜப்பானை நெருக்கின. போர் இழப்பீடு வழங்கப்பட்ட பின்னர் இந்த நெருக்குதல். இந்தோனேசியா 9 பில்லியன் ரிங்கிட் இரத்தக் காசு கேட்டது. பர்மா 5 பில்லியன் ரிங்கிட் இரத்தக் காசு கேட்டது. கிடைத்தும் விட்டது. வாய் உள்ள பிள்ளை பிழைத்துக் கொள்ளும். சரி.

1957-ஆம் ஆண்டு மலாயாவுக்கு சுதந்திரம் கிடைத்தது. அந்தக் கட்டத்தில் ஜப்பானிய பிரதமர் நோபுசுகே கிஷி (Nobusuke Kishi) மலாயாவுக்கு வருகை புரிந்தார். அப்போது துங்கு அவர்கள் மலாயாவின் பிரதமர். சயாம் பர்மா மரண இரயில் பாதையைப் பற்றி பேசி கூடுதலாகப் பணம் கேட்கச் சொன்னார்கள். 


மலாயா சீனர்களின் வணிகச் சம்மேளனம் நெருக்குதல் கொடுத்தது. 50 மில்லியன் இரத்தக் காசு வேண்டும் என்று நெருக்குதல் கொடுத்தது. இருப்பினும் துங்கு அவர்கள் ஜப்பானுடன் நெருக்கமாக உறவு வைத்துக் கொள்ள விரும்பினார்.

பணத்தைக் கேட்டு வாங்குவதால் போன உயிர்கள் திரும்பி வரப் போவது இல்லை என்று சமாதானம் சொன்னார். இப்போது ஜப்பானை ’கச்சாவ்’ பண்ண வேண்டாம் என்றும் சொல்லி விட்டார். அந்தக் கட்டத்தில் ஜப்பானின் தொழிநுடபச் செயல்பாடுகள் மலாயாவுக்கு அதிகமாகத் தேவைப் பட்டன.

மலாயா மக்களின் வேதனைக் குரல் கேட்டு ஜப்பான் வருந்தியது, நல்லிணக்கத்தின் அடையாளமாக இன்னும் கொஞ்சம் கூடுதலாக இழப்பீடு கொடுக்க அதுவாகவே முன் வந்தது.

1960-ஆம் ஆண்டுகளின் நடுப்பகுதியில், மலேசியாவுக்கு 25 மில்லியன் ரிங்கிட் ரொக்கமாகக் கொடுக்க ஜப்பான் முன்வந்தது. மேலும் 25 மில்லியன் ரிங்கிட் சேவைத் துறைகளின் வழியாக வழங்கப்படும் என்றும் ஓர் உடன்படிக்கை செய்து கொண்டது.

அப்போது துங்கு அவர்கள்தான் பிரதமராக இருந்தார். இந்தப் பணப் போக்குவரத்து நல்ல முறையில் நடந்து முடிய நான்கு ஆண்டுகள் பிடித்தன. ஆக துங்கு காலத்திலேயே 50 மில்லியன் ரிங்கிட் வாங்கியாச்சு.

1970-ஆண்டுகளில் மலேசியாவில் ஜப்பானின் தொழில்துறை முதலீடுகள் துரித வளர்ச்சி அடைந்தன. அதே சமயத்தில் அவர்களின் ஆதிக்கத் தன்மையும் சுரண்டலும் கூடவே பயணித்தன. அவை மலேசிய மக்களுக்கு ஒரு கலக்கத்தை ஏற்படுத்தின. மலேசிய மக்கள் அச்சம் அடையத் தொடங்கினார்கள். பழையபடி ஜப்பானிய ஆதிக்கம் வந்து விடுமோ என்று பயந்தார்கள்.

அந்த நேரத்தில், மலேசியாவில் உள்ள ஜப்பானிய வணிகர்களும் உள்ளூர் மக்களுடன் பழகுவதில் பாரபட்சம் காட்டினார்கள். ஆங்காங்கே அவர்களின் முரட்டுத் தனமான போக்குகள். மலேசிய மக்களை தரம் குறைவாகப் பார்த்தார்கள்.

அந்த நேரத்தில் மலேசியாவில் இருந்த ஜப்பானிய வணிகர்களும் உள்ளூர் மக்களுடன் பழகுவதில் முரட்டுத் தனம் காட்டினார்கள். அவர்கள் உள்ளூர் மக்களைத் தரம் குறைவாகப் பார்ப்பது போல் தோன்றியது.

கூட்டிக் கழித்துப் பார்த்தால் ஜப்பான் மலேசியாவுக்குக் கொடுத்ததைவிட அதிகமாகவே சுரண்டிக் கொண்டு இருந்தது. இந்தக் கையில் பத்தைக் கொடுத்து அந்தக் கையில் முப்பதை வாங்கிக் கொண்டு இருந்தது.

1971-ஆம் ஆண்டு துன் ரசாக் பிரதமரானதும் இதே ஆதங்கத்தை வெளிப்படையாக்வே சொன்னார். இருந்தாலும் ஜப்பானைப் பகைத்துக் கொள்ள விரும்பவில்லை. சரி.

1960-ஆம் ஆண்டுகளின் நடுப்பகுதியில், நல்லிணக்கத்தின் அடையாளமாக இன்னும் கொஞ்சம் கூடுதலாக 25 மில்லியன் ரிங்கிட் கொடுக்க ஜப்பான் முன்வந்தது என்று சொன்னேன். அந்தப் பணத்தில் ஒரு காசுகூட சயாம் இரயில் பாதையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்படவில்லை.

துன் மகாதீர் காலத்தில் என்ன நடந்தது என்பதைப் பின்னர் சொல்கிறேன். அதற்கு முன்னர் ஒரு சின்ன செருகல்.

1992-ஆம் ஆண்டில், நெகிரி செம்பிலானைச் சேர்ந்த சூன் கியான் செங் (Soon Kian Seng) என்பவர் 238 குடும்பங்களைப் பிரதிநிதித்து ஜப்பானிய அரசாங்கத்தின் மீது ஒரு கோரிக்கை வைத்தார். சயாம் இரயில் பாதையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக அந்தக் கோரிக்கை.

200 மில்லியன் அமெரிக்க டாலர் (800 மில்லிய ரிங்கிட்) இழப்பீட்டை ஜப்பான் வழங்க வேண்டும்; அவர்களுக்காக மலேசியாவில் ஒரு நினைவுச் சின்னத்தைக் கட்டித் தர வேண்டும் எனும் கோரிக்கை. அந்தக் கோரிக்கை, கோலாலம்பூரில் இருந்த ஜப்பானிய தூதரகம்; ஐக்கிய நாட்டுச் சபை; ஆகிய அமைப்புகளிடம் வழங்கப் பட்டது.

ஜப்பானியத் தூதரகத்தைச் சேர்ந்த மிச்சியோ ஹரடா (Michio Harada} அந்தக் கோரிக்கையை வாங்கிக் கொண்டு தோக்கியோவிற்கு அனுப்பி வைக்கிறேன் என்று சொன்னார். அம்புட்டுத்தான். கடிதத்தைக் கொண்டு சென்ற கப்பல் கொரியாவில் மூச்சு திணறி மூழ்கி விட்டதாம். கப்பலை இன்னும் தேடிக் கொண்டு இருக்கிறார்கள்.

ஐக்கிய நாட்டுச் சபை அதற்கும் ஒரு படி மேலே ஏறிப் போய் ‘ஐயா சாமி... எங்களுக்கும் இரண்டாம் உலகப் போருக்கும் சம்பந்தமே இல்லீங்கோ… அப்படி ஒரு போர் நடக்கவே இல்லீங்கோ’ என்று இருகரம் கூப்பிக் கையை விரித்து விட்டது. அதன் பிறகுதான் முன்னாள் பேராக் மந்திரி பெசார் நிஜார் ஜமாலுடீன் வந்தார்.

1967-ஆம் ஆண்டில் ஜப்பானும் மலேசியாவும் ஒரு போர் இழப்பீட்டு ஒப்பந்தம் செய்து கொண்டன. அதில் மலேசியாவுக்கு 270 பில்லியன் ரிங்கிட் போர் நஷ்டயீடு வழங்கப் பட்டதாக 2013-ஆம் ஆண்டில் நிஜார் ஜமாலுடீன் அறிவித்தார். அன்றைக்கு அவர் மூடிய அமேசான் புகைச்சல் இன்றும் புகைகிறது. சரி.

அடுத்து ‘கிழக்கை நோக்கி’ (Look East Policy) எனும் துன் மகாதீரின் தடாலடிப் பார்வை வருகிறது. ஜப்பானைப் பாருங்கள். ஜப்பானை நேசியுங்கள். ஜப்பானைக் கட்டிப் பிடியுங்கள் எனும் பிரசாரம். அதன் பாவனையில் ஜப்பானின் நிதியுதவிகள் கிடைத்தன.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
09.07.2021

(பின்குறிப்பு)

இந்தக் கட்டுரையில் உள்ள புள்ளி விவரங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் கட்டுரையாளரின் பெயரைக் குறிப்பிடுங்கள். அதுதான் நீங்கள் காட்டும் ஒரு நன்றிக்கடன். மிகவும் சிரமப்பட்டு எழுதப்பட்ட கட்டுரை.

சான்றுகள்:

1. PRESS RELEASE UNITED NATIONS COMPENSATION COMMISSION PAYS OUT US$270 MILLION" (PDF). United Nations Compensation Commission. 23 July 2019.

2. RESOLUTION 687 (1991)" (PDF). U.S. Department of the Treasury. 9 April 1991. Archived (PDF)

3. Japan's Records on War Reparations, The Association for Advancement of Unbiased View of History

4. War Responsibility, Postwar Compensation, and Peace Movements and Education in Japan

பின்னூட்டங்கள்

Sathya Raman: வணக்கம் சார். இரண்டு கட்டுரைகளுமே பல ஆதாரங்களோடு சிரமப்பட்டு எழுதியவை என்று குறிப்பிட்டு இருந்தது எவ்வளவு உண்மை என்று இந்தக் கட்டுரையைப் படித்து முடித்த போது உணர முடிந்தது.

சயாம், பர்மா ரயில்வே பாதை நிர்மாணிப்பில் பாதிக்கப் பட்டவர்களுக்காக எந்தவொரு இழப்பீடும் கொடுக்காமல் போனது கொடூரத்தின் உச்சம்.

இந்த நிர்மாணிப்புப் பணியில் கலந்து பாதிக்கப்பட்ட மற்ற நாடுகள் இழப்பீட்டை பெற்ற போது மலேசிய ஊழியர்களுக்கு மட்டும் அந்த உதவிகளை உதறி தள்ளிய புண்ணியவான்கள் இந்த நாட்டு அன்றைய அரசியல் வாதிகளாகத்தான் இருக்கும்.

மற்ற நாடுகள் போராடி இழப்பீடுகளைக் கோரி அவற்றைப் பெற்றிருப்பதை தெரிந்தும் மலேசியா அந்த உரிமையை விட்டுக் கொடுத்தது கண்டிக்கத் தக்கது.

அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரிட்டிஷ் ஆகிய நாடுகளின் குறுக்கீடு இருந்த போது இந்த நாட்டு ஊழியர்களின் உதிரம் சிந்திய உழைப்பிற்காக அன்றைய அதிகாரத்தில் உள்ளவர்கள் அக்கறையோடு இழப்பீடுகளைப் பெற்றுக் கொடுத்திருக்க வேண்டுமே ஒழிய வேஷம் போட்டு இருக்கக் கூடாது.

அன்றே இந்த அதி மேதாவிகளின் பிரித்தாளும் போக்கும், தமிழர்களுக்கு எதிராக திட்டமிட்டு செய்த சதியும் புரியவே செய்கிறது. அன்றே நம்மைக் கழுதைகளாக எண்ணிய களவாணிப் பயல்களை நினைக்கையில் கோபம் கோபுர உச்சிக்கு செல்கிறது.

ஆக, நமக்கு எதிரான சுரண்டல்களை அறுபதிலேயே ஆரம்பித்து விட்டார்கள் போலிருக்கிறது. வேதனை மிகுந்த பதிவுகள் சார். பிரிட்டிஷ்காரர்கள் மலேசியாவில் ஆண்ட போது ஜப்பான்காரர்களின் ஆதிக்கம் என்பது எனக்கு புது தகவல்.

நீங்கள் இதற்கு முந்தைய பதிவில் எழுதியதைப் போல் நம்மை வந்தேறிகளாக அடையாளப் படுத்திய முதல் பெருமை துங்குதான் என்பது இப்போது நிதானமாக, நூதனமாகப் புரிகிறது.

தண்ணீர் வெந்நீரானாலும் மாறவே மாறாது. அப்படித் தான் இந்த நன்றி கெட்ட நாடும். இதயத்தை வெம்ப வைத்த பதிவுகள், மனதையும் வியர்க்கவே வைத்தது சார். எல்லா கொம்பன்களும் சுயநலவாதிகளாகவே அன்றே அவதரித்து விட்டார்களே என்பதும் வேதனைக்குரியது

Muthukrishnan Ipoh >>> Sathya Raman
மிக நீளமான பதிவு. சில நாட்களாக அன்பர்களின் பின்னூட்டங்களுக்குப் பதில் தரவில்லை. நேரப் பற்றாக்குறைதான். பின்னர் பதில் தர முயற்சி செய்கிறேன். வலைத்தளத்தில் தங்களின் கருத்துகள் கண்டிப்பாக இடம் பெறும்.

Parthiban Apparu: துரோகம்... இந்திய மக்களுக்கு விளைத்த துரோகம் நமக்காக யார் வாதாடுவது? வருத்தம்…

Bobby Sinthuja: ஐயா அருமையான தகவல்...

Kumar Murugiah Kumar's: பதிவு சிறப்பு ஐயா, வாழ்த்துகள் ஐயா!

Banu Linda: புதைந்து போன உண்மைகளைத் தோண்டி எடுத்து மக்களின் முன் வைக்கிறீர்கள்... நன்றி ஐயா..



 

270 பில்லியன் ரிங்கிட் போர் இழப்பீடு உண்மையா?

தமிழ் மலர் - 08.07.2021

ஜப்பானியரின் மலாயா ஆக்கிரமிப்பு (1942 – 1945)
(கட்டுரைத் தொடரின் முதல் பாகம்)

1945 ஆகஸ்டு 15-ஆம் தேதி. ஜப்பான் நாட்டின் வெறியாட்டம் ஒரு முடிவுக்கு வந்தது. ஜப்பான் கைப்பற்றிய நாடுகளுக்கு இழப்பீடு தர வேண்டும் என முடிவு செய்யப் பட்டது. அந்த வகையில் அமெரிக்கா கலிபோர்னியா, சான் பிரான்சிஸ்கோ நகரில் ஒரு மாநாடு கூட்டப்பட்டது. அந்த மாநாட்டில் ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது.

சான் பிரான்சிஸ்கோ ஒப்பந்தம் என்று பெயர். இதை ஜப்பான் சமாதான ஒப்பந்தம் என்றும் அழைப்பார்கள். இந்த ஒப்பந்தம் செப்டம்பர் 8, 1951-ஆம் தேதி, 48 நாடுகளால் கையெழுத்திடப்பட்டது. 


இந்த ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு ஜப்பான், போர் இழப்பீடுகளை வழங்கத் தொடங்கியது. மலாயாவுக்கும் இழப்பீடு வழங்கப் பட்டது. ஏன் என்றால் ஜப்பானின் அடாவடித்தனத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளில் மலாயாவும் ஒன்றாகும்.

(சான்று: The Treaty of San Francisco - Treaty of Peace with Japan. It was signed by 49 nations on 8 September 1951, in San Francisco, California, U.S. at the War Memorial Opera House.)

மலாயாவுக்குப் போர் இழப்பீடு வழங்குவதற்கு ஜப்பான் சம்மதிக்கும் போது என்ன என்ன நடந்தன என்பதைப் பார்ப்போம். பணம், பொருட்கள், நிலம் போன்ற பல்வேறு வடிவங்களில் மலாயாவுக்கு இழப்பீடு வழங்கப் பட்டது. 


1946-ஆம் ஆண்டின் பிற்பகுதியில், மலாயா, சிங்கப்பூர் நிலப் பகுதிகளை ஆட்சி செய்த  பிரிட்டிஷ் காலனித்துவ அரசாங்கம் ’போர் சேதக் கோரிக்கை ஆணையம்’ (War Damage Claims Commission) எனும் ஆணயத்தை அமைத்தது.

அந்த ஆணையம் ஜப்பானிய ஆக்கிரமிப்பினால் மலாயாவுக்கு ஏற்பட்ட மொத்த இழப்பு எவ்வளவு என்பதற்கான தகவல்களைச் சேகரித்தது. மலாயா மக்கள் சார்ந்த இழப்பீட்டுக் கோரிக்கையில் அடங்கியவை:

1. போரினால் ஏற்படும் நேரடிச் சேதங்கள்.

2. மலாயாவில் இருந்த ஜப்பானியத் தொழிற்சாலைகள்; சுரங்கங்கள்; கட்டுமானப் பொருட்கள்; உபகரணங்கள் போன்ற தொழில் மற்றும் வணிகத் தளவாடங்கள்.

3. மலாயாவில் சீன மக்களிடம் திணிக்கப்பட்ட கட்டாயப் பங்களிப்புகள்; ஜப்பானிய இராணுவத்திற்கு வழங்கப்பட்ட கடன் நீட்டிப்பு; மற்றும் இரயில் கட்டுமானச் சேவைச் செலவு.

ஜப்பானிய இராணுவத்தினர் பயன்படுத்திய
கொரிய நாட்டுக் கேளிக்கைப் பெண்கள்

 
1947-ஆம் ஆண்டில் இருந்து 1950-ஆம் ஆண்டு வரை மூன்று ஆண்டுகளுக்குத் தகவல் சேகரிப்பு. கடைசியில் மொத்த நஷ்டயீடு 67.25 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என முடிவு செய்யப் பட்டது. இது மலாயா சிங்கப்பூர் போர் சேதக் கோரிக்கை ஆணையம் வழங்கிய நஷ்டயீடு கணக்கு.

இருப்பினும், உண்மையான மொத்த நஷ்டயீடு கோரிக்கை அதை விட அதிகமாக இருக்கலாம். ஏனெனில் பிரிட்டிஷ் அரசாங்கம் ஒரு சமநிலையான அளவிற்கு மட்டுமே இழப்பீடு கோரிக்கையை முன்வைத்தது.

இதில் வட போர்னியோவின் இழப்பீட்டுக் கோரிக்கை இருக்கிறதே அது மலாயா இழப்பீட்டுக் கோரிக்கையை விட உயர்ந்து இருந்ததாகவும் சொல்லப் படுகிறது.

ஜப்பானிய அரசாங்கத்தைச் சும்மா சொல்லக் கூடாது. இழப்பீடு கோரிக்கையின்படி போர்க் கப்பல்கள், தொழிற்சாலைகள், இயந்திரங்கள்; தளவாட உபகரணங்கள் போன்றவற்றை வழங்கி ஈடு செய்தது. யாருக்கு? மலாயா அரசாங்கத்திற்கு!


ஆனால்... ஆனால்... அங்கே ஒரு பிடி இருந்தது. ஜப்பான் கொடுத்த எல்லாவற்றையும் அப்படியே எடுத்து அப்படியே மலாயாவுக்கு கொடுத்துவிட முடியாத நிலை. மலாயா பிரிட்டிஷ் அரசாங்கம் நினைத்தாலும் நடக்காத காரியம். என்ன தெரியுங்களா?

இரண்டாம் உலகப் போரின் போது நேச நாடுகளின் (Allied Powers) ஒரு பகுதியாக பிரிட்டன் இருந்தது.

நாஜி ஜெர்மனி, ஜப்பான்; இத்தாலி போன்ற நாடுகளைத் தோற்கடிக்க அமெரிக்கா, சோவியத் யூனியன், பிரிட்டன்; சீனா ஆகிய நாடுகள் ஒரு கூட்டணி அமைப்பை உருவாக்கின.

ஆகவே, ஜப்பான் இழப்பீடாக வழங்கும் சொத்துக்களை அந்த நேசக் கூட்டணி நாடுகளிடையே பிரிட்டன் விவாதிக்க வேண்டி இருந்தது. அந்த நாடுகளைக் கேட்டுத்தான் முடிவு செய்ய முடியும்.

ஆக அந்த நேச நாடுகள் எல்லாம் ஒன்றுகூடி மலாயாவுக்கு ஒதுக்கிய இழப்பீடு என்ன தெரியுங்களா? வேதனையாக இருக்கிறது. 


மலாயாவுக்கு கிடைக்க வேண்டிய இழப்பீடு:

(1) அமெரிக்க டாலர் 85.7 மில்லியன் (350 மில்லியன் ரிங்கிட்).

(2) இயந்திரத் தளவாடங்கள் 809.

(3) ஒரு பெரிய போர்க் கப்பல்.

தவிர மேலே சொன்ன இயந்திரச் தளவாடங்கள்; போர்க் கப்பல்; இவற்றைத் தனியார் நிறுவனங்களுக்கும் அரசு நிறுவனங்களுக்கும் விற்றால் கிடைக்கும் பணம் மலாயா அரசாங்கத்திற்குப் போய்ச் சேர வேண்டும். ஆனால் எல்லாமே தலைகீழாக மாறிப் போனது. மலாயாவுக்கு கிடைத்த இழப்பீடு:

1. ஜப்பானில் இருந்து கொண்டு வரப்பட்ட தொழிற்சாலை பொருட்கள்கள்; இயந்திரங்கள்; உபகரணங்கள்; தளவாடங்கள். (5 விழுக்காடு). 5 %. நூறு விழுக்காட்டில் ஐந்தே ஐந்து விழுக்காடுதான் வழங்கப் பட்டது.

2. ஜப்பானிய கடற்படையைச் சேர்ந்த 23 சின்னப் போர்க் கப்பல்கள். ஒரு பெரிய கப்பலைக் கேட்டு இருந்தார்கள். அமெரிக்கா ஒத்துக் கொள்ளவில்லை. சின்ன நாட்டிற்கு சின்ன கப்பல்கள் போதும் என்று சொல்லி விட்டது.

முறைப்படி இழப்பீடுப் பணம் எல்லாம் மலேசிய மக்களுக்குப் போய்ச் சேர்ந்து இருக்க வேண்டும். ஜப்பானிய தொழிற்சாலைகள்; இயந்திரங்கள்; உபகரணங்கள்; தளவாடங்கள் போன்றவற்றை விற்ற பணம் மலேசிய மக்களுக்குப் போய்ச் சேர்ந்து இருக்க வேண்டும். 23 போர்க் கப்பல்களை விற்ற பணம் மலேசிய மக்களுக்குப் போய்ச் சேர்ந்து இருக்க வேண்டும்.

ஆனால் மலாயா பிரிட்டிஷ் அரசாங்கம் அப்படிச் செய்யவே இல்லை. பெரும் தொகையைத் தன்னுடைய காலனித்து நிர்வாகச் செயல்களுக்குப் பயன்படுத்திக் கொண்டது.

ஒன்றே ஒன்று உருப்படியாகச் செய்தது. அந்தக் காலக் கட்டத்தில் தோற்றுவிக்கப்பட்ட அரச மலாயா தொண்டர் கடற்படைக்கு (Malayan Royal Naval Volunteer Reserve) ஒரே ஒரு போர்க் கப்பலை வழங்கியது தான் உலக மகா சாதனைச் சேவை.

ஜப்பான் வழங்கிய இழப்பீட்டில் பெரும் தொகை மலாயாவில் இருந்த ரப்பர் தோட்டங்களைச் சீர் செய்யவும்; மலாயாவில் இருந்த ஈயச் சுரங்கங்களைச் செப்பனிடவும் பயன்படுத்தப் பட்டன.

ஜப்பானியர் காலத்தில் ஆங்கிலேய ரப்பர் தோட்டங்கள் பெரிதும் சேதம் அடைந்து விட்டதாகவும் அந்தத் தோட்டங்களை மறுபடியும் சீர் செய்ய வேண்டும் என்று சொல்லி பெருவாரியான பணம் செலவு செய்யப் பட்டது.

இந்த விசயம் துங்கு அவர்களுக்கும் தெரியும். ஜப்பான் வழங்கிய நஷடயீட்டுத் தொகை எப்படிச் செலவாகி இருக்கிறது கவனித்தீர்களா?

ஜப்பானின் இழப்பீட்டுத் தொகை கிடைப்பதற்கு முன்னதாகவே பிரிட்டிஷார்; மலாயா கூட்டாட்சி சட்டமன்றம், சிங்கப்பூர் சட்டமன்றம் ஆகியவற்றில் ஒரு சட்டத்தைத் தங்களுக்குச் சாதகமாகக் கொண்டு வந்தார்கள்.

அந்தச் சட்டத்தின்படி பிரிட்டிஷார் தங்கள் விருப்பபடி இழப்பீட்டுத் தொகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு செருகல்.

மலாயா வரலாற்றில் ஜப்பானியரின் மலாயா ஆக்கிரமிப்பு என்பது மறக்க முடியாத ஓர் இருண்ட இதிகாசம். மலாயாத் தமிழர்களின் நெஞ்சங்களைக் கீறிப் பார்த்த வேதனைச் சித்தாந்தம். மலாயா தமிழர்களின் நெஞ்சங்களைப் பிளந்து பார்த்த மரணத்தின் வேதாந்தம். இதிகாசம்; சித்தாந்தம்; வேதாந்தம்; இந்த மூன்றுமே மௌன மொழிகளின் வக்கர ராகங்கள்.

மலாயாவில் ஜப்பானியரின் ஆக்கிரமிப்பினால் கொடூரமான சித்திரவதைகள். அதனால் நூறாயிரக் கணக்கான மரணங்கள். கால் போய் கண்கள் போய் உயிர் பிழைத்தவர்கள் பல இலட்சங்கள். அந்தக் காயங்களும்; அந்தக் காயங்களின் வடுக்களும் காலா காலத்திற்கு மறக்க முடியாத மரண ஓலங்கள்.

ஆசிய நாடுகளின் மீது ஜப்பானியர் நடத்திய ஆக்கிரமிப்பினால் இருபது முப்பது நாடுகள் பாதிப்பு அடைந்து உள்ளன. அந்த நாடுகளில் மலாயா நாடும் ஒன்றாகும். அதில் சயாம் மரண இரயில் பாதை உருவாக்கப் பட்டதும் ஓர் அத்தியாயம்.  

அந்த அத்தியாயத்தில் மலாயாவைச் சேர்ந்த பல்லாயிரம் தமிழர்கள், சீனர்கள், மலாய்க்காரர்கள், இதர இனத்தவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். பாதிக்கப்பட்ட அவர்களின் குடும்பங்களுக்கு ஜப்பானிய அரசாங்கம் 270 பில்லியன் போர் நஷ்டயீடு வழங்கியதாகவும்; அந்தத் தொகை மர்மமாய்க் காணாமல் போய் விட்டதாகவும், ஊடகங்களில் பற்பல பதிவுகள்.

270 பில்லியன் நஷ்டயீடு வழங்கப் பட்டதாக முதன்முதலில் சொன்னவர் முன்னாள் பேராக் மந்திரி பெசார் நிஜார் ஜமாலுடீன். 1967-ஆம் ஆண்டில் ஜப்பானும் மலேசியாவும் ஒரு போர் நஷ்டயீட்டு ஒப்பந்தம் செய்து கொண்டது. அதில் மலேசியாவுக்கு 270 பில்லியன் ரிங்கிட் போர் நஷ்டயீடு வழங்கப் பட்டதாக 2013-ஆம் ஆண்டில் நிஜார் ஜமாலுடீன் அறிவித்தார்.

அவரின் கணக்குப்படி அப்படி அந்த நிதி வழங்கப்பட்டு இருந்தால் ஜப்பான் நாடு இந்நேரம் திவாலாகி இருக்கலாம் என்பது சிலரின் கருத்து. ஏன் என்றால் 270 பில்லியன் ரிங்கிட் என்பது சாதாரண காசு அல்ல. மலேசிய நாட்டின் ஆறு மாத கால மொத்த வருமானம்.

(The sum of RM207 billion as compensation agreed upon in 1967 between Japan and Malaysia would have bankrupted Japan. At the historical exchange rate the RM207 billion would have worth 24 billion Pound Sterling. At current exchange rate it is worth 42 billion Pound. A mind boggling figure.)

ஜப்பான் நாட்டைப் பொருத்த வரையில் போர் இழப்பீடுகள் வழங்க வேண்டிய நாடுகளில் மலேசியா (மலாயா) மட்டும் அல்ல. மேலும் பல நாடுகள் இருந்தன. ஏறக்குறைய 30 நாடுகள். 20,700 கோடி ரிங்கிட் தொகையை மலாயாவுக்கு மட்டும் வழங்க ஜப்பான் ஏற்றுக் கொண்டு இருக்குமா?

உண்மைத் தகவல் தெரியாமல் நாம் ஒரு முடிவிற்கு வரக் கூடாது. வாட்ஸ் அப் ஊடகத்திலும் பேஸ்புக் ஊடகத்திலும் வரும் தகவல்கள் எல்லாம் உண்மையும் அல்ல. பொய்யும் அல்ல.

(According to Article 14 of the Treaty of Peace with Japan (1951): "Japan should pay reparations to the Allied Powers for the damage and suffering caused by it during the war.)

1950-ஆம் ஆண்டு அப்போதைய பிரிட்டிஷ் காலனித்துவ அரசாங்கம் ஜப்பானிடம் 67.25 மில்லியன் போர் நஷ்டயீடு கேட்டது. ஆனால் 1950-ஆம் ஆண்டில் கிடைத்த நஷ்டயீடு இவைதான்:

1. ஜப்பானின் தொழிற்சாலை ஆலைகள், இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களில் 5% விழுக்காடு (5% of Japan’s factory plants, machinery, and equipment)

2. ஜப்பானிய கடல் படையைச் சேர்ந்த 23 போர்க் கப்பல்கள் (23 fleets of Japanese warships)

மலாயாவை ஆட்சி செய்த அப்போதைய பிரிட்டிஷ் அரசாங்கம் ஜப்பானிய அரசாங்கத்திடம் இருந்து எப்போது எவ்வளவு நஷ்டயீடு பெற்றது என்பதும் ஒரு வரலாறு. அதைப் பார்ப்பதற்கு முன்னர் ஒரு சின்ன தகவலைப் பார்ப்போம்.

மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு ஜப்பான் வழங்கிய போர் இழப்பீடுகளின் விளக்கம். அப்போதைய யென் நாணயத்தில் (in yen, at the time of payment) இழப்பீடு வழங்கப்பட்ட போது எவ்வளவு தொகை; எவ்வளவு தளவாடப் பொருட்கள் வழங்கப்பட்டன என்பதையும் பார்ப்போம்.

முதலில் மைக்ரோனேசியா நாடுகள். பசிபிக் பெருங்கடலில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட சிறு தீவுகளை உள்ளடக்கிய பகுதிக்கு மைக்ரோனேசியா என்று பெயர்.
குவாம் தீவு;

கிரிபட்டி தீவு;

மார்சல் தீவுகள்;

கரோலின் தீவுகள்;

கில்பர்ட் தீவுகள்;

மரியானா தீவுகள்;

மார்ஷல் தீவுகள்;

நவூரு தீவு;

வேக் தீவு;

(1960-ஆம் ஆண்டுகளில் ஜப்பானிய யென் கணக்கில் மலேசிய ரிங்கிட் நாணய மாற்றம்: 1 பில்லியன் யென் = 30 மில்லியன் ரிங்கிட்). போர் நஷ்டயீடு பட்டியல்:

1. மைக்ரோனேசியா (Micronesia) - (ஆண்டு 1950) - 18 பில்லியன் யென் - (540 மில்லியன் ரிங்கிட்)

2. மியன்மார் - (ஆண்டு 1954 - 1963) - 50.4 பில்லியன் யென் - (1500 மில்லியன் ரிங்கிட்)

3. பிலிப்பைன்ஸ் - (ஆண்டு 1956; 1967) - 53 பில்லியன் யென் - (1590 மில்லியன் ரிங்கிட்)

4. இந்தோனேசியா - (ஆண்டு 1958) - 63.7 பில்லியன் யென் (1910 மில்லியன் ரிங்கிட்)

5. லாவோஸ் (ஆண்டு 1958) - 1 பில்லியன் யென் - (30 மில்லியன் ரிங்கிட்)

6. கம்போடியா (ஆண்டு 1959) - (1 பில்லியன் யென் - (30 மில்லியன் ரிங்கிட்)

7. வியட்நாம் (ஆண்டு 1960) - (14.04 பில்லியன் யென் - (420 மில்லியன் ரிங்கிட்)

8. கொரியா (ஆண்டு 1965) - (72 பில்லியன் யென் - (2160 மில்லியன் ரிங்கிட்)

9. மலேசியா (ஆண்டு 1967) - (2.94 பில்லியன் யென் - (90 மில்லியன் ரிங்கிட்)

10. தாய்லாந்து (ஆண்டு 1967) - (5.4 பில்லியன் யென் - (165 மில்லியன் ரிங்கிட்)

11. தைவான் (ஆண்டு 1967) - (58 பில்லியன் யென் - (175 மில்லியன் ரிங்கிட்)

12. சிங்கப்பூர் (ஆண்டு 1967) - (2.9 பில்லியன் யென் - (87 மில்லியன் ரிங்கிட்)

13. ஹாலந்து (ஆண்டு 1956) - (3.6 பில்லியன் யென் - (110 மில்லியன் ரிங்கிட்)

14. சுவிட்சர்லாந்து - Switzerland - (ஆண்டு 1955) - (33 மில்லியன் ரிங்கிட்)   

15. டென்மார்க் - (ஆண்டு 1955) - (215 மில்லியன் ரிங்கிட்)

16. சுவீடன் - (ஆண்டு 1958) - (150 மில்லியன் ரிங்கிட்)   

17. ஸ்பெயின் - (ஆண்டு 1957) - (155 மில்லியன் ரிங்கிட்)

இழப்பீடுகளுக்கான கொடுப்பனவுகள் 1955-இல் தொடங்கி 23 ஆண்டுகள் நீடித்தது. 1977-ஆம் ஆண்டு வரையில் சன்னம் சன்னமாகக் கொடுக்கப் பட்டது. மலேசியாவிற்கு எவ்வளவு பணம் எந்த ஆண்டில் கொடுக்கப்பட்டது என்பதைக் கவனியுங்கள்.

நாளைய கட்டுரையில் இன்னும் சில அதிர்ச்சியான தகவல்கள் வருகின்றன. படிக்கத் தவற வேண்டாம்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
08.07.2021

(பின்குறிப்பு)

இந்தக் கட்டுரையில் உள்ள புள்ளி விவரங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் கட்டுரையாளரின் பெயரைக் குறிப்பிடுங்கள். அதுதான் நீங்கள் காட்டும் ஒரு நன்றிக்கடன். மிகவும் சிரமப்பட்டு எழுதப்பட்ட கட்டுரை.

சான்றுகள்:

1. PRESS RELEASE UNITED NATIONS COMPENSATION COMMISSION PAYS OUT US$270 MILLION" (PDF). United Nations Compensation Commission. 23 July 2019.

2. RESOLUTION 687 (1991)" (PDF). U.S. Department of the Treasury. 9 April 1991. Archived (PDF)

3. San Francisco Peace Conference 8 Sep 1951

4. Japan's Records on War Reparations, The Association for Advancement of Unbiased View of History

5. War Responsibility, Postwar Compensation, and Peace Movements and Education in Japan

பின்னூட்டங்கள்

மகாலிங்கம் படவேட்டான் பினாங்கு: நன்றி வாழ்த்துகள் ஐயா.. விரிவான கட்டுரை.. சிரமம் எடுத்து தயார் செய்து பதிவு செய்ததற்கு.. மனமார்ந்த வாழ்த்துக்கள்.. ஆனால், சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் ஏறக்குறைய ஒரே தொகையாக உள்ளதே ஐயா..
ஏன்?

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: சிங்கப்பூர் துறைமுகத்தை விரிவுபடுத்த பணம் தேவைபட்டது. மேஜிக் வேலை..

குமரன் மாரிமுத்து: அருமை ஐயா. தகவல்களைத் தேடி எடுப்பதில் நீங்கள் பலே பாண்டியா சார்...

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: மாணவர் ஒருவர் தன் ஆசிரியருக்கு வழங்கும் பாராட்டு... நன்றி தம்பி.

டாக்டர் சுபாஷினி: அருமை. மிக விரிவான தகவல் தொகுப்பு. தமிழ் மரபு அறக்கட்டளை காலாண்டிதழில் இணைக்கின்றோம்.

கரு. ராஜா: கட்டுரையைப் படித்தேன். ஜப்பானில் இருந்து கிடைத்த நஷ்டயீட்டை நான் ஒரு பைசா கூட சாப்பிட்டுப் பார்க்கவில்லை. சயாமுக்கு கம்பி சடக்குப் போடப் போன என் தந்தை சயாமில் மரணம் அடைந்தார். இதனால் நான் சிறு வயதில் தந்தையை இழந்தேன்.

இராதா பச்சையப்பன்: வேதனையாக தான் இருக்கு. கட்டுரையை நானும் படித்து வேதனை பட்டேன். பணம் எத்தனைப் பேர்களின் கையில் போனது என்று தெரியவில்லை. என் குடும்பத்தில் இருவர் பிறந்து அப்பாவை பார்க்கவே இல்லையே 😭.

செல்லையா செல்லம்: அருமையான கட்டுரை  நான் அதிகமாக. வாசிப்பது உங்கள் கட்டுரைகளே  நன்றி   நன்றி நன்றி

கணேசன் சண்முகம்: அருமையான கட்டுரை. சரியான விளக்கம். வாழ்த்துகள் ஐயா

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்:
எழுதிய கட்டுரைகளில் சற்று சிரமத்தைக் கொடுத்தது. ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு கொண்டு வர... சமாளித்து விட்டேன்.

இராதா பச்சையப்பன்: இன்றைய கட்டுரையை படித்தேன். சயாமுக்கு  மனைவி, பிள்ளைகளை, பெற்றோரை, உடன் பிறந்தோரை, குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் பலர் தன் நாட்டுக்கு திரும்பாது...  ஜப்பானிலேயே  இறந்தவர்களும் உண்டு. 
 
உடல் ஊனமுற்று திரும்பியவர்களும் உண்டு.  இவர்களுக்கான  இழைப்பீட்டுப் பணத்தை, பாதிக்கப் பட்டவர்களுக்கு கொடுக்காமல், அப்போது ஜப்பான் காலத்தில் அழிந்த தோட்டம் மற்றும் சில இடங்களைப் புதிப்பித்ததாகக் கூறுபவர்களுக்கு மனசாட்சி என்று ஒன்று இல்லையா, 
 
உயிர் இழந்தவர்கள் குடும்பத்திற்கு  இதுதான் பதிலாக, பெட்டி சாக்கு போக்கு சொல்வதில் நம் அரசாங்க அதிகாரிகள் கைதேர்ந்தவர்கள்.  
 
ஜப்பானில் உயிர் விட்டவர்கள் வந்து கேட்க மாட்டார்கள் என்ற நினைப்போ'? அரசன் அன்று கொள்வான். தெய்வம் நின்றுதான் கொள்ளுமாம். காலம்தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: சயாம் மரண பாதை இழப்பீட்டு நிதி... போர் இழப்பீட்டு நிதியில் ஒரு பகுதியாக வழங்கப்பட்டு விட்டது. மூன்று கட்டங்களாக ஏறக்குறைய 150 மில்லியன் ரிங்கிட் கொடுக்கப்பட்டு உள்ளது

கரு. ராஜா: ஜப்பானிலேயே இறந்தவர்கள் உண்டு என்று எழுதி இருப்பதற்கு என்ன காரணம்??? ஜப்பானில் உயிர் விட்டவர்கள் வந்து கேட்க மாட்டார்கள் என்ற நினைப்போ என்ற வாசகம் மீண்டும் வருவதற்கான காரணம் புரியவில்லை???

தனசேகரன் தேவநாதன்: சயாம் என்பதை ஜப்பான் என தவறாக பதிவிட்டுள்ளார்

இராதா பச்சையப்பன்: 🙏 தவறுக்கு வருந்துகிறேன். சயாம்  மரண பாதை இழப்பபீட்டு நிதி.  ஜப்பான் காலத்தில் என்று சொல்ல கேட்டது உண்டு. உண்மைதான்.  தவற்றைச் சுட்டிக் காட்டியதில் நன்றி🙏🌻 ஜப்பான்  என்பது தவறு.
 
மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: ஜப்பானில் உயிர் விட்டவர்கள் என்று சகோதரி பதிவிட்டதை இப்போதுதான் பார்க்கிறேன். உண்மையில் அவர் சொல்வதிலும் ஒரு குட்டி வரலாறு உள்ளது. பலருக்கும் தெரியாத ஒரு வரலாறு. எப்படி தெரியுங்களா?

1943 அக்டோபர் மாதம் 16-ஆம் தேதி சயாம் மரண இரயில் பாதை கட்டி முடிக்கப் பட்டது. கட்டி முடிந்ததும் ஆண்களில் (நன்றாக எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள்) 1500 பேர் ஜப்பான் நாட்டின் தொழிற்சாலைகள் கட்டுமானத்திற்கு அனுப்பப் பட்டார்கள். அவர்களில் தமிழர்கள் ஏறக்குறைய 250 - 300 பேர் இருக்கலாம். எஞ்சியவர்கள் இராணுவக் கைதிகள்.

அப்படி ஜப்பானுக்கு அனுப்பப்பட்ட தமிழர்களில் பாதி பேர் இரண்டாம் உலகப் போர் முடிந்ததும் திரும்பி வராமல் அங்கேயே தங்கி விட்டார்கள்.

சிலர் வியட்நாம்; கம்போடியா; தாய்லாந்து நாடுகளுக்குச் சென்று தங்கி விட்டார்கள். சிலர் அங்குள்ள பெண்களைத் திருமணம் செய்து கொண்டு அங்கு தனித்தனி  தமிழர்ச் சமுதாயங்களை உருவாக்கி இருக்கிறார்கள்.

ஜப்பானில் தங்கியவர்களில் பலர் திரும்பி வராமல் அங்கேயே இறந்து விட்டார்கள். தமிழர்கள் சிலரை ஜப்பானியப் பெண்கள் திருமணம் செய்து இருக்கிறார்கள். அந்த வகையில் அங்கேயும் ஒரு தமிழர்ச் சமுதாயம் உருவாகி உள்ளது.

இதைப் பற்றிய மேல் விவரங்களைத் தேடிக் கொண்டு இருக்கிறோம். கிடைத்ததும் ஒரு கட்டுரையாகப் பதிவு செய்வோம்.

ஆங்கிலத்தில் Blessings in Disguise என்று சொல்வது போல சகோதரி தெரியாமல் எழுதி இருந்தாலும் அதிலும் ஒரு நன்மை இருக்கவே செய்கிறது. அவர் தவறாக எழுதவில்லை என்றுகூட சொல்லலாம். 




 

07 ஜூலை 2021

புண்ணிய பூமியில் புதிதாய்ப் பூக்கும் சரஸ்வதி

கலைமகள், கலைவாணி, கலைதேவி, கல்விக்கரசி என சரஸ்வதி தேவியார் போற்றப் படுகிறார். புகழப் படுகிறார். ஆயக் கலைகள் அறுபத்து நான்கிற்கும் தலைவியாய் அரியணை உச்சத்தில் வீணை வாசிக்கிறார். அவரே கல்விக் கலையின் வற்றாத ஊற்று. கல்வி அறிவின் ஞான ஒளி. ஒரு தெய்வமாக ஒரு தேவதையாக இமயம் பார்க்கிறார்.

சரஸ்வதி தேவி.
என்னாளும் ஒரு தெய்வக் கொலுசு.
சிரம் தாழ்த்துகிறேன் தேவியே! 


அந்தத் தேவதையின் பெயரில் இமயமலைச் சாரலில் ஒரு புண்ணியபூமி. இந்தியா எனும் சொர்க்க பூமி. அங்கே ஒரு நதி. அதன் பெயர் சரஸ்வதி. அந்த நதியைப் பற்றி கொஞ்ச காலமாகப் பிரச்சினைகள்.

இந்து வேதங்களின் வழியாக ஒரு பிரச்சினை. அறிவியல் கோணங்களின் வழியாக ஒரு பிரச்சினை. சரி. அப்படி என்னதான் பிரச்சினைகள்.

சரஸ்வதி நதி முன்பு காலத்தில் அப்போது இருந்தது. ஆனால் இந்தக் காலத்தில் இப்போது இல்லை. மறைந்து விட்டது என்பது ஒரு பிரச்சினை. மற்ற ஆறுகளைப் போல சரஸ்வதி நதி தற்சமயம் எந்த இடத்திலும் பாயவில்லை. இது தொடர்பாக மர்மமான பல கருத்துகள்.

இல்லை இல்லை. சரஸ்வதி நதி இன்னும் இருக்கிறது. கற்பனைகள் செய்ய வேண்டாம். இமயமலையில் அழகாய் அருவி எடுத்து ஓடி வந்து இன்னும் பாய்ந்து கொண்டு இருக்கிறது. இல்லை என்று யார் சொன்னது. கூட்டி வாருங்கள். யார் என்று பார்த்து விடுகிறேன். இப்படி ஒரு பிரச்சினை. சரி.


சரஸ்வதி நதி இன்னும் ஓடிக் கொண்டு இருக்கிறது என்று இன்றைய வரைக்கும் பலரும் சொல்லிக் கொண்டு தான் இருக்கிறார்கள். இது உண்மையா. உண்மையில் என்னதான் நடந்தது; நடக்கிறது என்று பார்ப்போம். சரஸ்வதி நதி இருக்கிறதா இல்லையா. அதைப் பற்றி ஆராய்கிறது இன்றைய கட்டுரை.

இந்து மத வேதங்களில் மிக முக்கிய கதாபாத்திரம் போல சரஸ்வதி நதி இன்றும் இடம் பெற்று உள்ளது. மேற்கில் யமுனை நதி; கிழக்கில் சட்லெஜ் நதி; நடுவில் சரஸ்வதி நதி என பழைமையான ரிக் வேதத்தில் சொல்லப் படுகிறது.

ரிக் வேதத்தில 19 இந்திய நதிகள் ஒன்றன் பின் ஒன்றாக வர்ணிக்கப் படுகின்றன. 45 சுலோகங்களில் 72 தடவை சரஸ்வதி நதியை பற்றி சொல்லப் படுகிறது. அதில் மூன்று சுலோகங்கள் சரஸ்வதி நதிக்காக மட்டுமே உள்ளன.


மகாபாரதத்தில் உதத்திய மகரிஷியின் கதை சரஸ்வதி நதியின் மறைவை விளக்குகிறது. சட்லெஜ் நதிக்கு சுதத்ரி நதி என்றும் மற்றும் ஒரு பெயர். இந்த சட்லெஜ் நதி பல நூறு நதிகளாகப் பிரிந்து போனதைக் குறிப்பிடும் வசிஷ்டர் - விசுவாமித்திரர் கதையும் மகாபாரதத்தில் உள்ளது.

இந்திய மண்ணில் 12 ஆண்டுகள் பஞ்ச காலம். அதனால் ஆயிரக் கணக்கான ஏரிகள் வற்றிப் போனதைப் பற்றியும் மகாபாரதம் சொல்கிறது. அதே சமயத்தில் இந்திய மண்ணில் பல நூறு ஆண்டுகளாப் புவியியல் மாற்றங்கள். அதனால் சரஸ்வதி நதி வறண்டு போனது என்றும்கூட மகாபாரதம் சொல்கின்றது.

புகழ்பெற்ற வரலாற்று அறிஞர் சர்தார் கே.எம். பணிக்கர் (K. M. Panikkar). ராஜஸ்தான் பகுதியில் இருந்த பிகானீர் சிற்றரசின் (Bikaner State) வெளியுறவு அமைச்சரராக இருந்தவர். இவரின் கருத்துபடி கி.மு. 3000 வரை சரஸ்வதி நதியும் அதன் உபநதியாக இருந்த யமுனா நதியும் சட்லெஜ் நதியும் கரைபுரண்டு ஒடி இருக்கின்றன.

ஏதோ ஒரு காலக் கட்டத்தில் யமுனா நதி; கங்கை நதியினால் இழுக்கபட்டு விடுகிறது. இதன் விளைவாக திருஷ்வதி நதியும்; சரஸ்வதி நதியின் மத்திய பாகமும் வறண்டு போயின. சட்லெஜ் நதி மட்டும் மேற்கு நோக்கி வழிமாறிச் சென்றது. சரி.


திரிவேணி சங்கமம். கேள்விப்பட்டு இருப்பீர்கள். கங்கை, யமுனை நதிகளுடன் கண்ணுக்குத் தெரியாத வகையில் சரஸ்வதி நதி வந்து கலக்கிறது எனும் ஒரு நம்பிக்கை. இன்றும் இந்து மதத்தில் இருந்து வருகிறது.

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த இடத்தில் கும்பமேளா நிகழ்த்தப் படுகிறது. மகாத்மா காந்தி போன்ற இந்தியத் தலைவர்கள் சிலரின் அஸ்தி; திரிவேணி சங்கமத்தில் கரைக்கப்பட்டு உள்ளது.

உண்மையில் திரிவேணி சங்கமம் என்றால் மூன்று நதிகள் இணையும் இடம். ஆனால் நேரடியாச் சென்று பார்த்தால் கங்கை மற்றும் யமுனை நதிகளை மட்டும்தான் அங்கு பார்க்க முடியும். 


அப்படி என்றால் மூன்றாவது நதி எங்கே? சரஸ்வதி நதி தோன்றும் இடத்தில் இருந்து சிறிது தொலைவில் நிலத்தின் அடியில் மறைந்து பாய்ந்து மீண்டும் திரிவேணி சங்கமத்தில் இணைகிறது என்பதுமே காலம் காலமாக இருந்து வரும் நம்பிக்கை.

அண்மையில் ஒரு காணொலி. சரஸ்வதி நதி மறைந்து போகும் காணொலி. மலை உச்சியில் இருந்து ஓடி வரும் ஓர் ஆற்றின் அருகே ஒருவர் நிற்கிறார். பாய்ந்து வரும் ஆறு திடீரென பூமிக்குள் மறைந்து விடுகிறது. இப்படி ஒரு வீடியோவை வாட்ஸ் அப்; யூடியூப்; பேஸ்புக் ஊடகங்களில் சிலர் பார்த்து இருக்கலாம்.

அந்தக் காணொலியைப் பார்த்தால் கொஞ்சம் வியப்பாகத் தான் இருக்கும். தவிர இந்தக் காணொலியை ஊடகங்களில் பகிர்பவர்கள், அந்த நதிதான் புராதன சரஸ்வதி நதி என்றும் ஒரு கூடுதல் தகவலையும் இணைத்து விடுகிறார்கள். 


ஆக சரஸ்வதி நதி மறையும் இடம் அதுதான் என்று இணையத்தில் காணொலிகளாய் வலம் வந்து கொண்டு இருக்கின்றன. உண்மையில் சரஸ்வதி நதி இப்படித்தான் இருக்குமா? இப்படித்தான் திடீரென்று பூமிக்குள் மறைந்து விடுமா? சரஸ்வதி நதி உண்மையாகவே இருக்கிறதா?

ஒன்றை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள். சரஸ்வதி நதி பூமிக்கு அடியில் பாய்ந்து மற்ற இரண்டு நதிகளுடன் கலக்கிறது என்கிற கருத்து; அறிவியல் சான்றுகளுடன் நிரூபிக்கப்படவில்லை.

மாறாக இமயமலையில் உற்பத்தியான சரஸ்வதி நதி ஹரியானா, ராஜஸ்தான், குஜராத் மாநிலங்கள் வழியாக பாகிஸ்தானில் நுழைந்து கடலில் கலந்ததாகச் ஆய்வாளர்கள் சிலர் தெரிவித்து இருக்கிறார்கள்.

இதற்கிடையில், சரஸ்வதி நதி இமயத்தில் தோன்றி, அரியானா, ராஜஸ்தான் மற்றும் வடக்கு குஜராத்தில் பாய்ந்து கடலில் கலந்தது உண்மை தான் என்று அண்மையில் இந்திய மத்திய அரசிடம் ஒரு வல்லுநர் குழு ஓர் அறிக்கை சமர்ப்பித்து உள்ளது.

பேராசிரியர் கே.எஸ்.வால்டியா தலைமையிலான வல்லுநர் குழு ஆறு மாதங்களாக மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் அந்த அறிக்கை சமர்ப்பிக்கப் பட்டது.

இமயத்தில் தோன்றி, கட்ச் பாலைவனம் வழியாக மேற்கு கடலில் கலக்கும் முன்பாக, பாகிஸ்தானின் சில பகுதிகளையும் சரஸ்வதி நதி கடந்து சென்று இருப்பது தெரிய வந்துள்ளது. அதன் நீளம் சுமார் 4 ஆயிரம் கி.மீ. ஆகும்.

சரஸ்வதி நதியின் ஆயிரம் கி.மீ. பகுதி தற்போதைய பாகிஸ்தானில் இருந்து உள்ளது. 3 ஆயிரம் கி.மீ. தொலைவு இந்தியாவில் இருந்து உள்ளது.

இந்த நதியின் கரையோரத்தில் ஏறக்குறைய 1,700 சிறிய பெரிய நகரங்கள்; கிராமங்கள் அமைந்து இருந்தன. அவை 5,500 ஆண்டுகளுக்கு முற்பட்டவையாக இருக்கலாம் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

சரஸ்வதி நதியின் பழைய தடத்தை மீட்டு எடுப்பதற்கான முயற்சிகள் சில ஆண்டுகளுக்கு முன்னால் நடைபெற்றன.

வீடியோவில் பாய்ந்து ஓடி வரும் நீர் திடீரென மறைவதற்கு அந்த இடத்தின் நில அமைப்பில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக இருக்கலாம். கற்கள் நிறைந்த அந்தப் பகுதியில் நீரின் வேகத்தால் கற்களுக்கு அடியில் இருந்த மண் அடுக்குகள் அரிக்கப்பட்டு இருக்கலாம்.

ஆகவே, நீரோட்டம் மறைவது போலத் தெரிந்தாலும் அது கற்களுக்கு அடியில் பாய்ந்து கொண்டு இருக்கலாம். நதி மறையும் இடத்தின் பெயர் மானா. இது ஒரு கிராமம்.

வியாச முனிவர் சொல்லச் சொல்ல விநாயகர் மகாபாரதத்தை எழுதியாகச் சொல்கிறார்கள். அதுவும் இந்த மானா கிராமத்தில் எழுதியதாகச் சொல்கிறார்கள்.

இந்த மானா கிராமம் 3200 மீட்டர் உயரத்தில் இமயமலைச் சாரலில் உள்ளது. சரஸ்வதி நதி இங்கு தான் உற்பத்தி ஆனது. அழகுநந்தா எனும் நதியின் துணை நதியே சரஸ்வதி நதி.

இருந்தாலும் தண்ணீர் மறையும் இடத்தில் பல ஆயிரம் ஆண்டுகளாக நீர் சின்னச் சின்னக் கற்களின் வழியாக பூமிக்குள் இறங்கி ஊடுருவி கீழே உள்ள பள்ளத்தாக்கில் பாய்ந்து சென்று இருக்கலாம் என்றும் சொல்கிறார்கள். அப்படித்தான் நினைத்தார்கள்.

ஆனால் அது தவறு. சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே சரஸ்வதி நதி காய்ந்து வறண்டு விட்டது. இது மட்டுமல்ல. இதைப் போல பல வீடியோக்கள் இணையத்தில் காணப் படுகின்றன. ஆனால், அவற்றில் எதிலுமே சரஸ்வதி நதி இருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. ஏனெனில் சரஸ்வதி நதி என்பதே இப்போது இல்லை.

ஒரே வார்த்தையில் இப்படிச் சொல்லலாம். சரஸ்வதி நதி மீண்டும் வருவதற்கு வாய்ப்பு இல்லை. மீண்டும் அறிவியல் புவியியல் சான்றுகளை முன்வைக்கிறேன்.

சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக இந்தியத் துணைக் கண்டத்தில் அசாதாரணமான பல நிகழ்ச்சிகள் நடந்தேறின. அதன் வட மேற்குப் பகுதி வறட்சியின் பிடியில் சிக்க ஆரம்பித்தது. மண் அரிப்பும் நில நடுக்கங்களும் சேர்ந்து கொள்ளவே அங்கு பாய்ந்த நதிகளின் பாதைகள் தாறுமாறாக திசை மாறின.

அவற்றில் ஒன்று ஒட்டு மொத்தமாய் மறைந்து போனது. அது தான் வேதங்களிலும் மகாபாரதத்திலும் வெகுவாகப் புகழப்பட்டு இருக்கும் சரஸ்வதி நதி. புவியியல் மற்றும் தட்பவெப்பவியல் ஆய்வுகள் சமீப காலங்களில் அந்த நதியின் பரிணாம வளர்ச்சியை வெகு துல்லியமாக முன்வைத்து இருக்கின்றன.

செயற்கைக் கோள் புகைப்படங்கள் சரஸ்வதி நதியின் மறைந்து போன தடத்தை அடையாளம் கண்டுபிடித்துச் சொல்லி இருக்கின்றன.

ஐஸோடோப் ஆய்வுகள், அந்தத் தார் பாலைவனத்தில் சரஸ்வதி நதியின் புராதன நீர் இன்றும் பூமியின் அடி ஆழத்தில் தேங்கிக் கிடப்பதை உறுதிப்படுத்தி இருக்கின்றன.  கி.மு.2000 ஆண்டுக்கு முன்னர் இந்தியாவில் ஒரு பெரிய பூகம்பம்.

அதனால் யமுனை நதியின் அருகில் இருந்த நிலப்பரப்பு 30 மீட்டர் உயரத்திற்கு உயர்ந்து விட்டது என்று K.S. வால்த்தியா (Valdiya, K.S.) எனும் புவியில் அறிஞர் சொல்கிறார். இதனால் யமுனை நதியின் தடம் மாறியுள்ளது என்றும் சொல்கிறார்.

மறைந்த சரஸ்வதி நதி மறைந்தது தான். இனி மீண்டும் வருவதற்கு வாய்ப்பு இல்லை. ஆனால் அந்தப் பெயரைச் சொல்லிய வண்ணம் கலைவாணி சரஸ்வதி தேவியார் நம்முடன் எப்போதும் வாழ்ந்து கொண்டு இருப்பார்.

சான்றுகள்:

1. Chatterjee, Anirban; Ray, Jyotiranjan S.; Shukla, Anil D.; Pande, Kanchan (20 November 2019). "On the existence of a perennial river in the Harappan heartland". Scientific Reports. 9 (1): 17221.

2. Darian, Steven G. (2001), "5.Ganga and Sarasvati: The Transformation of Myth", The Ganges in Myth and History, Motilal Banarsidass Publ., ISBN 978-81-208-1757-9

3. Giosan, Liviu; Clift, Peter D.; Macklin, Mark G.; Fuller, Dorian Q. (10 October 2013), "Sarasvati II", Current Science, 105 (7): 888–890, JSTOR 24098502

4. Kenoyer, J. M. (1997). "Early city-states in south Asia: Comparing the Harappan phase and the Early Historic period". In Nichols, D.L.; Charlton, T.H. (eds.). The Archaeology of City States: Cross-cultural approaches. Washington, DC: Smithsonian Institution. pp. 52–70.

5. Valdiya, K.S. (2017). "Prehistoric River Saraswati, Western India". Society of Earth Scientists Series. Cham: Springer International Publishing. ISBN 978-3-319-44223-5.

 

06 ஜூலை 2021

சயாம் மரண பாதையில் மலாயாவுக்கு நஷ்டயீடு RM 270 பில்லியன்?

சயாம் மரண இரயில் பாதை உருவாக்கப்பட்ட போது மலாயாவைச் சேர்ந்த பல்லாயிரம் தமிழர்கள், சீனர்கள், மலாய்க்காரர்கள், இதர இனத்தவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளார்கள்.

பாதிக்கப்பட்ட அவர்களின் குடும்பங்களுக்கு ஜப்பானிய அரசாங்கம் 270 பில்லியன் போர் நஷ்டயீடு வழங்கியதாகவும், அந்தத் தொகை மர்மமாய்க் காணாமல் போய் விட்டதாகவும், ஊடகங்களில் பற்பல பதிவுகள்.

270 பில்லியன் நஷ்டயீடு வழங்கப் பட்டதாக முதன்முதலில் சொன்னவர் முன்னாள் பேராக் மந்திரி பெசார் நிஜார் ஜமாலுடீன்.

1967-ஆம் ஆண்டில் ஜப்பானும் மலேசியாவும் ஒரு போர் நஷ்டயீட்டு ஒப்பந்தம் செய்து கொண்டது. அதில் மலேசியாவுக்கு 270 பில்லியன் ரிங்கிட் போர் நஷ்டயீடு வழங்கப் பட்டதாக 2013-ஆம் ஆண்டில் அறிவித்தார்.


அவரின் கணக்குப்படி அப்படி அந்த நிதி வழங்கப்பட்டு இருந்தால் ஜப்பான் நாடு இந்நேரம் திவாலாகி இருக்கலாம் என்பது சிலரின் கருத்து. ஏன் என்றால் 270 பில்லியன் ரிங்கிட் என்பது சாதாரண காசு அல்ல. மலேசிய நாட்டின் ஆறு மாத மொத்த வருமானம்.

(The sum of RM207 billion as compensation agreed upon in 1967 between Japan and Malaysia would have bankrupted Japan. At the historical exchange rate the RM207 billion would have worth 24 billion Pound Sterling. At current exchange rate it is worth 42 billion Pound. A mind boggling figure.)

ஜப்பான் நாடு போர் இழப்பீடுகள் வழங்க வேண்டிய நாடுகளில் மலேசியா மட்டும் அல்ல. மேலும் பல நாடுகள் இருந்தன. ஏறக்குறைய 30 நாடுகள். 20,700 கோடி ரிங்கிட் தொகையை மலாயாவுக்கு மட்டும் வழங்க ஜப்பான் ஏற்றுக் கொண்டு இருக்குமா?

உண்மைத் தகவல் தெரியாமல் நாம் ஒரு முடிவிற்கு வரக் கூடாது. வாட்ஸ் அப் ஊடகத்திலும் பேஸ்புக் ஊடகத்திலும் வரும் தகவல்கள் எல்லாம் உண்மையும் அல்ல. பொய்யும் அல்ல.

(According to Article 14 of the Treaty of Peace with Japan (1951): "Japan should pay reparations to the Allied Powers for the damage and suffering caused by it during the war.) 


1950-ஆம் ஆண்டு அப்போதைய பிரிட்டிஷ் காலனித்துவ அரசாங்கம் ஜப்பானிடம் 67.25 மில்லியன் போர் நஷ்டயீடு கேட்டது. ஆனால் 1950-ஆம் ஆண்டில் கிடைத்த நஷ்டயீடு இவைதான்:

1. ஜப்பானின் தொழிற்சாலை ஆலைகள், இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களில் 5% விழுக்காடு (5% of Japan’s factory plants, machinery, and equipment)

2. ஜப்பானிய கடல் படையைச் சேர்ந்த 23 போர்க் கப்பல்கள் (23 fleets of Japanese warships)

மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு ஜப்பான் வழங்கிய போர் இழப்பீடுகளின் விளக்கம். அப்போதைய யென் நாணயத்தில் (in yen, at the time of payment) இழப்பீடு வழங்கப்பட்ட போது:

மைக்ரோனேசியா -  Micronesia - ஆண்டு 1950 - 18 billion yen donated (680 மில்லியன் ரிங்கிட்)

மியன்மார் - Myanmar - ஆண்டு 1963 - 50.4 billion yen (US$20 million 1954, 1963)
    
பிலிப்பைன்ஸ் - Philippines - ஆண்டு 1956 - (US$525 million/52.94 billion yen 1967)
    
இந்தோனேசியா - Indonesia - ஆண்டு 1958 - (541 மில்லியன் ரிங்கிட்) - (+63.7 billion yen credit write-off)
    
லாவோஸ் - Laos - ஆண்டு 1958 - 1 billion yen grant
    
கம்போடியா - Cambodia - ஆண்டு 1959 - 1.5 billion yen grant
    
வியட்நாம் - Vietnam - ஆண்டு 1960 - US$39 million (14.04 billion yen 1959)

கொரியா - Korea - ஆண்டு 1965 - 72 billion yen (US$300 million 1965)

மலேசியா - Malaysia - ஆண்டு 1967 - (25 million Malaysian dollars / 2.94 billion yen 1967)

தாய்லாந்து - Thailand - ஆண்டு 1967 - (5.4 billion yen 1955)
    
தைவான் - Taiwan - ஆண்டு 1967 - 58 billion yen
    
சிங்கப்பூர் - Singapore - 1967 - 2.9 billion yen grant
    
ஹாலந்து - Holland - 1956 - 3.6 billion yen compensation
    
சுவிட்சர்லாந்து - Switzerland - 1955 - 1.1 billion yen compensation
    
டென்மார்க் - Denmark - 1955 - 7.23 billion yen compensation
    
சுவீடன் - Sweden - 1958 - 5 billion yen compensation
    
ஸ்பெயின் - ($5.5 million 1957)

இழப்பீடுகளுக்கான கொடுப்பனவுகள் 1955-இல் தொடங்கி 23 ஆண்டுகள் நீடித்து, 1977-ஆம் ஆண்டில் முடிந்தது. இது தொடர்பாக (3 பாகங்கள்) முழுக் கட்டுரை தமிழ் மலர் நாளிதழில் விரைவில் வெளிவருகிறது.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
06.07.2021



சான்றுகள்:

1. PRESS RELEASE UNITED NATIONS COMPENSATION COMMISSION PAYS OUT US$270 MILLION" (PDF). United Nations Compensation Commission. 23 July 2019.

2. RESOLUTION 687 (1991)" (PDF). U.S. Department of the Treasury. 9 April 1991. Archived (PDF)

தகவல்கள்:

The United States signed the peace treaty with 49 nations in 1952 and concluded 54 bilateral agreements that included those with Burma (US$20 million 1954, 1963), South Korea (US$300 million 1965), Indonesia (US$223.08 million 1958), the Philippines (US$525 million/52.94 billion yen 1967), Malaysia (25 million Malaysian dollars/2.94 billion yen 1967), Thailand (5.4 billion yen 1955), Micronesia (1969), Laos (1958), Cambodia (1959), Mongolia (1977), Spain ($5.5 million 1957), Switzerland, the Netherlands ($10 million 1956), Sweden and Denmark.

 

பெண்களின் வளர்ச்சி இமயம் பார்க்கும் முதிர்ச்சி

இன்றையக் காலக் கட்டத்தில் பெண்களின் வளர்ச்சி இமயம் பார்க்கும் மலர்ச்சி அல்ல முதிர்ச்சி. ஆண்களுக்குச் சமமாக... மன்னிக்கவும்... ஆண்களை விட அதிகமாகவே முன்னேறியும் வருகின்றார்கள்.

பெண்கள் பல்துறைகளிலும் சிறந்து விளங்குகிறார்கள். கொடி கட்டிப் பறக்கின்றார்கள். பெருமையாக உள்ளது. பெண்களால் நாட்டிற்கும் பெருமை; வீட்டிற்கும் பெருமை.
 

அது மட்டும் அல்ல. பெண்களைப் பார்த்து ஆண்களே பொறாமைப் படும் அளவிற்கு ஒரு நவீன மயத்தில் வாழ்ந்து கொண்டும் போகிறார்கள். எனக்கும் கொஞ்சம் பொறாமை தான். மன்னிக்கவும். ரொம்பவும் இல்லை.

நாட்டை ஆட்சி செய்வதற்கு ஓர் அரசர் வேண்டும். அதைப் போல ஒரு வீட்டை ஆட்சி செய்வதற்கு ஒரு பெண் வேண்டும். இதை எவராலும் மறுக்க முடியாது. பெண்கள் இல்லாமல் பெயர் போடுவது ரொம்பவுமே சிரமம். இதை ஆண்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்.

ஆக... பெண் உரிமையைக் காப்போம். பெண்ணியத்தைக் காப்போம். பெண் இனத்தைப் போற்றுவோம். ஓர் ஆணின் வெற்றிக்குப் பின் ஒரு பெண் இருக்கிறாள் என்பதை மறக்காமல் இருந்தால் சரி.

அந்த வகையில் எந்த நாடு பெண்ணின் பெருமையை உயர்த்திப் பிடிக்கின்றதோ அந்த நாடு தான், உலகில் உயர்ந்த நாடு. மனிதத்தில் உச்சம் பார்க்கும் நாடு. நான்கு மனைவிகள் வேண்டும். 25 பிள்ளைகள் வேண்டும் என்பது எல்லாம் பெண்மையைச் சிறுமைப் படுத்தும் நகர்வாகும். பெண்ணாசைப் பிடித்து பெண்மையைச் சிறுமைப் படுத்தும் போக்கு. பெண்மையைச் சுய போகத்திற்குப் பயன்படுத்தும் அணுகுமுறை.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
06.07.2021