09 மே 2010

மலாக்கா முத்துக்கிருஷ்ணனின் பேரன் பேத்திகள்


ஞாயிறு நண்பனில் எங்களுடைய தாத்தாவின் கேள்வி பதில்களைப் படிக்கிறீர்கள். மேலே பார்க்கிறீர்களே அவர்தான் எங்களுடைய தாத்தா.  அவருக்குப் பதிலாக நாங்களும் எழுதலாம் என்று நினைக்கிறோம்.

என் பெயர் ஸ்ரீநிதா. தாத்தாவைப் போல நானும் நன்றாகப் படம் வரைவேன். எனக்குப் பிடித்தது என் பாட்டி.


வணக்கம். நான் மலாக்கா முத்துக்கிருஷ்ணனின்  பேரன்.  என் பெயர் ஹரேஷ். ருக்குமணி பாட்டி ரொம்ப பிடிக்கும். எதிர்காலத்தில் விமானியாக வேண்டும் என்பது என் ஆசை.



வணக்கம். என் பெயர் ஹர்சித்ரா. மலாக்கா முத்துக்கிருஷ்ணனின் மூத்த பேத்தி.  தாத்தாவை எல்லாருக்கும் பிடிக்கும்.  மூன்று வயதில் எனக்கு கம்யூட்டர் சொல்லிக் கொடுத்தார்.




வணக்கம். என் பெயர் ஸ்ரீலேகா. சில ஆண்டுகள் சிங்கப்பூரில் இருந்தேன். என்னுடைய தமிழ் மொழிக்கு காரணம் என்னுடைய பாட்டி எழுத்தாளர் ருக்குமணி.  இப்போது ஈப்போ கிளேபாங் தமிழ்ப் பள்ளியில் படிக்கிறேன்.  தாத்தாவை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் ஒரு ஜீனியஸ்.

(மற்ற பேரப் பிள்ளைகளின் படங்கள் அடுத்து இடம் பெறும்.  இல்லை என்றால் அவர்கள் என் மீது வழக்கு போட்டு விடுவார்கள்)

02 மே 2010

கணினியின் வழி ஜோதிடம்

கணினியின் வழி ஜோதிடம் கணிக்க முடியும் என்று சென்ற வாரம் கேள்வி பதில் அங்கத்தில் குறிப்பிட்டு இருந்தேன். அதைப் பார்த்த பின்னர் கணினியின் மூலமாக தங்களுடைய ராசி பலனைக் கணித்துக் கொடுக்குமாறு பலர் கேட்ட வண்ணம் இருக்கிறார்கள். 

கேட்பவர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறது. இதை ஓர் இலவச சேவையாகத் தான் தொடங்கினேன். ஜாதக ஏடுகள் PDF முறைமையில் 40 லிருந்து 45 பக்கங்கள் வரை தயாரித்து மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கிறோம். பிறப்பு கால கிரக நிலை, நடைமுறைக் கிரக நிலைகள், சனிப் பிரவேசம், கிரக யோகங்கள், கிரகப் பார்வையின் பலன்கள், எதிர்காலப் பலன்கள், திருமணப் பொருத்தம், மண வாழ்க்கை, நட்சத்திர பலன்கள் அனைத்தும் அந்த ஜாதகக் குறிப்புகளில் கிடைக்கின்றன.

இதற்காகக் கட்டணம் எதையும் இதுவரை கேட்கவில்லை. இருந்தாலும் ஒருவருடைய ஜாதகத்தைக் கணித்துக் கொடுக்க ஒரு மணி நேரம் பிடிக்கிறது. இதில் நம்முடைய நேரம் எவ்வளவு பிடிக்கிறது. கணினி இணையச் செலவுகள், கைப் பேசிச் செலவுகள், இதரச் செலவுகள் என்று எவ்வளவு வரும். இதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

ஜாதகக் குறிப்புகள் கேட்கும் சிலர் கிடைத்ததும் ஒரு வார்த்தை 'நன்றி' கூட சொல்லாமல் காணாமல் போய் விடுகிறார்கள். இலவசம் தானே என்கிற அலட்சியம் என்றைக்கும் யாருக்கும் இருக்கக் கூடாது. ஆக, இனிமேல் ஜாதகக் குறிப்பு கேட்பவர்கள், தயவு செய்து உங்களால் இயன்ற ஒரு சேவைக் கட்டணத்தைக் கொடுத்து உதவுங்கள். சராசரி கட்டணமாக மலேசிய ரிங்கிட் 20 சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

இலவசமாகக் கிடைக்கிறது என்று மற்றவர்களை தரம் குறைவாக நினைக்கக் கூடாது.

ஜாதகம் அனுப்பப் படும் போது அதனுடன் ஒரு நிரல் அழிவையைப் போன்ற ஒரு பின்னூட்டமும் இருக்கும். இது உங்களுக்குத் தெரியாது ஜாதகம் கிடைத்ததும் நீங்கள் என்னுடன் தொடர்பு கொண்டால் அந்தப் பின்னூட்டம் அமைதியாக இருந்துவிடும். அசட்டையாக இருந்தால் கணினியில் சில விரும்பத் தகாத பிரச்னைகளை ஏற்படுத்தி விடும்.

24 ஏப்ரல் 2010

கணினியும் நீங்களும் - பகுதி 44

(மலேசிய நண்பன் ஞாயிறு நாளிதழில் வெளியான கணினியும் நீங்களும் கேள்வி பதில் பகுதியைக் கட்டம் கட்டமாக இந்த வலைப் பூவில் பிரசுரித்து வருகிறேன். பழைய எல்லாப் பகுதிகளும் வெளி வந்த பின்னர், ஞாயிற்றுக் கிழமைகளில் பிரசுக்கப் படும் அதே பகுதி அதே தினத்தில் இந்த வலைப் பதிவிலும் பிரசுரிக்கப் படும். உலகில் உள்ள அனைத்துத் தமிழர்களும் படிக்க வேண்டும். பயன் அடைய வேண்டும். நீங்கள் மின்னஞ்சல் வழியாகக் கேள்விகள் கேட்கலாம். உங்கள் கேள்விகள் நாளிதழிலும் வெளிவரும். இணையத்திலும் வரும். (மலேசிய நண்பன் - 04.01.2010 ஞாயிறு நாளிதழில் வெளியானது)

குமாரி.ஷர்மிளா, குவாந்தான்
(குறும் செய்தி 8.12.2009)
கே: சார், நான் ஒரு பள்ளி மாணவி. எனக்கு ஒரு பெரிய பிரச்னை. Bit Defender 9 Internet Security பயன் படுத்தினேன். அது காலாவதி ஆகிவிட்டது. அதனால் என்னுடைய மடிக்கணினி அடிக்கடி தானாக சொந்தமாக நிறுத்திக் கொள்கிறது. வேலை எதுவும் செய்ய முடியவில்லை. உதவி செய்யுங்கள்?

ப: இந்தக் கேள்வி கிடைத்து ஒரு மாதத்திற்கும் மேல் ஆகிறது. உடனடி பதில் வேண்டும் என்றால் மின்னஞ்சல் வழி கேளுங்கள். Bit Defender 9 Internet Security என்பது ஓர் இணையப் பாது காப்பு நிரலி. இது ஒரு Shareware எனும் 'பகிர்வு மென்பொருள்'. அவர்கள் கொடுக்கும் போது Trial Version எனும் 'வெள்ளோட்டப் பதிப்பு' முறையில் கொடுப்பார்கள்.

ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின்னர் நீங்கள் அதை வாங்க வேண்டும். இல்லை என்றால் அந்தப் பதிப்புகள் பல பிரச்னைகளைக் கொடுக்கும். சோழியன் குடுமி சும்மா ஆடாது என்பார்கள். அந்த மாதிரி அதைக் கணினியில் இருந்து அகற்றுவதும் சிரமம். முதலில் நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்.

http://www.bitdefender.com/files/KnowledgeBase/file/BitDefender_Uninstall_Tool.EXE எனும்

இணையத் தளத்தில் Bit Defender Uninstall Tool எனும் நிரலியைப் பதிவு இறக்கம் செய்து கொள்ளுங்கள். அதைப் பயன் படுத்தி Bit Defender இணையப் பாதுகாப்பு நிரலியைக் கணினியிலிருந்து முதலில் சுத்தமாக அகற்றி விடுங்கள். இல்லை என்றால் அதன் அசடுகள் கணினிக்குள் மறைந்து கிடக்கும். காலப் போக்கில் பல பிரச்னைகளைக் கொடுக்கும். சரியா.

அதன் பிறகு AVG Anti-Virus Free Edition 9.0.730 எனும் நச்சுத் தடுப்பு நிரலியை உங்கள் கணினிக்குள் பதித்துக் கொள்ளுங்கள். இது www.avg.com எனும் முகவரியில் இலவசமாகக் கிடைக்கிறது. எந்த ஒரு நிரலியாக இருந்தாலும் சரி, அதில் இலகுவான uninstall எனும் 'பதிப்பு அகற்றல்' வசதிகள், user-friendly எனும் 'இணக்கப் போக்கு'த் தன்மைகள் இருக்க வேண்டும். இல்லை என்றால் பயனீட்டாளர்களுக்குத் தான் சிரமம்.

எம்.அன்பரசன், ஈப்போ
(குறும் செய்தி 18.11.2009)
கே: சார், நான் ஒரு நோக்கியா கைப்பேசியை நண்பரிடம் இருந்து RM850க்கு வாங்கினேன். அந்தக் கைப்பேசி நவம்பர் 2009ல் வெளி வந்ததாக நண்பர் சொன்னார். கடைக்காரரிடம் கேட்டுப் பார்த்ததில் அக்டோபர் 2009ல் வெளி வந்தது என்று கடைக்காரர் சொல்கிறார். என் நண்பர் என்னை ஏமாற்றி விட்டதாக நினைக்கிறேன்? இரண்டாம் தாரமாக வாங்கியது தப்பாகி விட்டது.

ப: தரம் என்பது தாரமாகி விட்டது. பரவாயில்லை. விலைவாசி மலைவாசியாக மாறிவிட்ட காலம். உங்கள் நண்பரை நம்பித் தானே கொடுக்கல் வாங்கலில் இறங்கினீர்கள். ஒன்பதாவது மாதத்திற்கும் பத்தாவது மாதத்திற்கும் முப்பது நாள்தானே வித்தியாசம். அப்படி என்ன இதில் தலை போகிற விஷயம் இருக்கிறது.

விட்டுக் கொடுத்துப் போங்கள். யாரிடமிருந்து எந்த ஒரு பொருளை வாங்கினாலும் அது எப்போது தயாரிக்கப் பட்டது, என்ன விலை போன்ற விவரங்களை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். இல்லை என்றால் மின்னல் மின்னும். இடி இடிக்கும்.

நோக்கியா கைப்பேசிகள் தயாரிக்கப் பட்ட திகதியைக் கண்டுபிடிக்க ஒரு வழி இருக்கிறது. *#92702689# என்று தட்டுங்கள். அந்தக் கைப்பேசி எப்போது தயாரிக்கப் பட்டது, எப்போது வாங்கப் பட்டது போன்ற விவரங்கள் இருக்கும். பின்னர் கைப்பேசியை முழுமையாக அடைத்து விட்டு வெளியேறுங்கள். தவறுகள் இருக்கலாம். அமைதியாக, சமாதானமாகப் பேசுங்கள். சச்சரவுகள் வேண்டாம். சண்டை போட்டதாகக் கேள்வி பட்டால்...

ரகுநாதன், பெட்டாலிங் ஜெயா
(குறும் செய்தி 21.11.2009)
கே: தமிழில் Key Board மென்பொருள் கோலாலம்பூரில் எங்கே கிடைக்கும்?

ப: இப்போது தமிழில் தட்டச்சு வெளி வருவது மிகவும் குறைவு. ஏனென்றால், இப்போது வரும் கணினிகள் மிகவும் நவீனமாகி விட்டன. அதனால் Phonetics எனும் 'ஒலியியல் முறை'யைப் பயன் படுத்தித் தமிழில் தட்டச்சு செய்யலாம்.

அஞ்சல் முரசை எப்படி பயன் படுத்துகிறீர்களோ அதே மாதிரி. தனியாகத் தமிழ்த் தட்டச்சுப் பலகையை வாங்க வேண்டிய அவசியம் இல்லை. இப்போது வருபவை எல்லாம் Phonetic Key Boards எனும் 'ஒலியியல் விசைப் பலகைகள்' ஆகும்.

இருந்தாலும் http://www.brothersoft.com/tamil-keyboard-54576.html எனும் இடத்தில் தமிழ் தட்டச்சுப் பலகையை இலவசமாகக் கொடுக்கிறார்கள். போய் பதிவு இறக்கம் செய்து கொள்ளுங்கள். இது ஒரு On Screen Keyboard. அப்படி என்றால் தட்டச்சுப் பலகை கணினியில் தெரியும் என்று அர்த்தம். தமிழில் 'திரை விசைப் பலகை' என்று சொல்லலாம்.

இதே போல ஓர் ஆங்கிலத் தட்டச்சுப் பலகை உங்கள் கணினியிலும் உள்ளது. Start >> Run >> osk என்று தட்டுங்கள். அந்தத் தட்டச்சுப் பலகை முகப்புத் திரையில் வந்து உட்கார்ந்து கொள்ளும். மேலே காணும் தமிழ்க் கணினிச் சொற்களை அடியேன் உருவாக்கினேன். செரிவுகளும் சரிவுகளும் இருக்கலாம். சரி செய்வது உங்கள் கடமை.


சுகுமாறன் sugu_1305@yahoo.com
கே: என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கான Password ஐ மறந்து விட்டேன். எப்படி மீட்பது? உதவி செய்யுங்கள் ஐயா.

ப: Password எனும் ஏழு எட்டு எழுத்துகளைக் கொண்ட 'கடவுச் சொல்'லை மறந்து விடும் அளவிற்கு அப்படி என்ன பெரிய வேலை. இந்தக் காலத்தில் எதற்கு எடுத்தாலும் மறதி மறதி என்று சொல்லி... ரொம்ப பேர் மனைவி மக்களைகூட மறந்து விட்டு அலைகிறார்கள்.

அந்த மாதிரியான மறதி யாருக்கும் வரக் கூடாது. இனிமேல் கவனமாக எழுதி வைத்துக் கொள்ளுங்கள். சரியா. http://www.snapfiles.com/get/mpw.html எனும் இடத்தில் Mail Password Recovery எனும் நிரலி இருக்கிறது. அதைப் பயன் படுத்தி உங்களுடைய சங்கேதச் சொல்லை மீட்டுக் கொள்ளுங்கள். தவிர
http://www.download3k.com/Internet/Email/Download-Email-Password-Recovery-pop3.html

எனும் இடத்திலும் ஒரு நிரலியும் இலவசமாகக் கிடைக்கிறது. அதற்காக இதைப் பயன் படுத்தி அடுத்தவருடைய மின்னஞ்சல்களைப் படிக்க வேண்டாம். அடுத்தவர் மின்னஞ்சல் கடிதங்களைப் படிப்பது இருக்கிறதே அது ரொம்பவும் தப்பு.

தர்ஷ்னி பாலகோபாலன், ஜெராண்டுட், பகாங்
கே: Spyware என்றால் என்ன? எப்படி கட்டுப்படுத்துவது?

ப: Spyware என்பது ஒற்றன் மென்பொருள். இதுவும் ஒரு சின்ன நிரலிதான். உங்களின் அனுமதி இல்லாமல் உங்களின் கணினிக்குள் உட்கார்ந்து கொண்டு உங்களைக் கண்காணிக்கும் ஓர் ஒற்றன் நிரலி. நீங்கள் எந்த வலைத் தளங்களுக்குப் போகிறீர்கள், அங்கே என்ன செய்கிறீர்கள் எனும் ரகசியங்களைச் சத்தம் இல்லாமல் தன் எஜமானனுக்கு அனுப்பி வைக்கும்.

இதன் செயல் இருக்கிறதே அது மறைந்து ஒளிந்து மற்றவர் அழகைப் படிப்பதற்குச் சமம். தேவைதானா? ஆக,கண்ட கண்ட இணையத் தளங்களுக்குப் போய் கண்டதை எல்லாம் பதிவிறக்கம் செய்ய வேண்டாம்.


வாணி கோகிலா , Johor Bahru
கே: சார் Opera எனும் உலவி இருக்கிறதாமே. அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

ப:
நல்ல கேள்வி. இணையத்தில் உள்ள தளங்களைப் படிக்க ஒரு Browser தேவை. இந்த Browser என்பதும் ஒரு நிரலிதான். தமிழில் உலவி என்கிறோம். Internet Explorer எனும் இணைய நிரலியை மைக்ராசாப்ட் நிறுவனம் விற்பனை செய்கிறது. பணம் கொடுத்து விண்டோஸ் வாங்கினால் 'இண்டர்னட் எக்ஸ்புளரர்' கிடைக்கும். அதற்குப் பதிலாக வந்தது 'பயர் பாக்ஸ்'. Fire Fox என்பது இலவச நிரலி. மிக மிக அருமையானது.

உலத்தில் உள்ள தலை சிறந்த கணினி வித்துவான்கள் அனைவரும் சேர்ந்து உருவாக்கியது. இதனிடம் 'இண்டர்னட் எக்ஸ்புளரர்' சற்று தள்ளியே நிற்க வேண்டும். அதே போல உருவானது தான் Opera எனும் உலவி. இதற்கும் நிறைய சிறப்புகள் உள்ளன. கொஞ்ச நாளில் 'இண்டர்னட் எக்ஸ்புளரர்' ஐ தள்ளிவிட்டு இரண்டாவது இடத்திற்கு வந்தாலும் வரலாம். www.opera.org எனும் இடத்தில் இலவசமாகக் கிடைக்கிறது.

12 ஏப்ரல் 2010

கணினியும் நீங்களும் - பகுதி 43

மலேசிய நண்பன் ஞாயிறு நாளிதழில் வெளியான கணினியும் நீங்களும் கேள்வி பதில் பகுதியைக் கட்டம் கட்டமாக இந்த வலைப் பூவில் பிரசுரித்து வருகிறேன். பழைய எல்லாப் பகுதிகளும் வெளி வந்த பின்னர், ஞாயிற்றுக் கிழமைகளில் பிரசுக்கப் படும் அதே பகுதி அதே தினத்தில் இந்த வலைப் பதிவிலும் பிரசுரிக்கப் படும். உலகில் உள்ள அனைத்துத் தமிழர்களும் படிக்க வேண்டும். பயன் அடைய வேண்டும். நீங்கள் மின்னஞ்சல் வழியாகக் கேள்விகள் கேட்கலாம். உங்கள் கேள்விகள் நாளிதழிலும் வெளிவரும். இணையத்திலும் வரும். (மலேசிய நண்பன் - 27.12.2009 ஞாயிறு நாளிதழில் வெளியானது)
ராஜன் ராஜன்   rjn_rajen@yahoo.com
கே: பில் கேட்ஸ் அவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு கடிதம் அனுப்பினேன். போய்ச் சேரவில்லை. நீங்கள் கொடுத்த மின்னஞ்சல் முகவரி சரியானது தானா? உறுதி செய்யுங்கள்.

ப: அண்ணன் பில் கேட்ஸ் அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி இருக்கிறீர்கள். அதுவரை உங்களைப்  பாராட்ட வேண்டும். அவரிடமிருந்து பதில் கிடைக்கவில்லை என்கிறீர்கள். அவருடைய மின்னஞ்சல் முகவரி bgates@microsoft.com  என்பதைச் சரியாக எழுதினீர்களா. அவரிடம் பணம் கேட்டால் சில சமயங்களில் கிடைக்கும். அவர் முன்பு போல இல்லை. எல்லாவற்றையும் பார்த்து செய்கிறார். மற்றபடி அவருடைய மகளைத் திருமணம் செய்து கொள்ள நாள் ஒன்றுக்கு நூறு பேர் விண்ணப்பம் செய்கிறார்களாம். அவர்களில் நீங்கள் ஒருவரா என்று தெரிய வில்லை. பராவாயில்லை. அவரிடம் கேட்டுச் சொல்கிறேன்.
கௌசல்யா, ஜொகூர் பாரு  (குறும் செய்தி 21.10.2009)

கே: உங்களுடைய கணினியும் நீங்களும் தொகுப்பை வாராவாரம் படிக்கிறோம். படித்ததைப் பத்திரமாக வெட்டி வைக்கிறோம். எங்கள் மகளுக்கு தேவைப் படும். உங்களைத் திட்டித் தீர்க்கும் சில ஆசாமிகளைப் பொருட் படுத்த வேண்டாம். எங்கள் குடும்பத்தாரின் வாழ்த்து கள்.

ப:
நீண்ட கடிதம். நெஞ்சைத் தொட்டு விட்டீர்கள். ஆறுதலான வார்த்தைகளுக்கு நன்றி. பொது வாழ்க்கைக்கு வந்து விட்டால் இது எல்லாம் சகஜம். பழுத்த மரம் கல்லடி படுகிறது என்பார்கள். யாரும் மரத்தை சும்மா அடிக்கவில்லை. பழத்தைத் தான் அடிக்கிறார்கள். சாப்பிடுகிறார்கள். விட்டு விடுங்கள். நல்லதைப் பார்ப்போம். நல்லதைப் பேசுவோம். 

நீங்கள் இந்தக் குறும்  செய்தியை அனுப்பியது தீபாவளி நேரத்தில். இப்போதுதான் பதில் வருகிறது. திட்டவில்லை என்பதற்காக முதல் மரியாதை. பதில் கிடைக்காதவர்கள்  பொறுத்துக் கொள்ளுங்கள்.

திருமதி.செல்வமணி, ஜாலான் பாராட், பெட்டாலிங் ஜெயா

கே: Cannot delete file: Access is denied. Make sure the disk is not full or write-protected and that the file is not currently in use எனும் எச்சரிக்கை என் கணினியில் வந்து கொண்டே இருக்கிறது. பெரும் தொல்லையாக இருக்கிறது. என்ன செய்வது? உதவி செய்யுங்கள். பெரும் புண்ணியமாக இருக்கும்.

ப:
கணினி பயன் படுத்துபவர்களுக்கு இது ஒரு தொல்லைக் கொடுக்கும் எச்சரிக்கை. முக்கிய கோப்புகளைத் திறக்கும் போது இந்தப் பிரச்னை வந்தால் மிகவும் சிரமம். கவலைப் படாதீர்கள். யாம் இருக்க பயம் ஏன்? அதற்கு வழி இருக்கிறது. http://ccollomb.free.fr/unlocker/ எனும் இணையத் தளத்திற்குச் சென்று UNLOCKER எனும் நிரலியைப் பதிவிறக்கம் செய்யுங்கள். பின்னர் அதைக் கணினிக்குள் Install எனும் பதிப்பு செய்யவும். அதன் பிறகு அந்த எச்சரிக்கை கணினியின் ஆயுசு பூராவும்  வராது.

அருண் செல்வராஜா  arjunselvaraja@ymail.com
கே: இணையத்தை முழுமையாக அழிக்க முடியுமா அல்லது தடை செய்ய முடியுமா?

ப:
முடியவே முடியாது. உலகின் மிகப் பெரிய தேடல் இயந்திரமான Google ஐ நிறுத்த சீனா என்ன என்னவோ செய்து பார்த்தது. ஒன்றும் நடக்கவில்லை. அதனால் இப்போது அந்த இரண்டிற்கும் ஒரு பயங்கரமான பனிப் போர் நடந்து கொண்டு இருக்கிறது. இணையத்தை பல அமைப்புகள், வர்த்தக நிறுவனங்கள், அரசாங்கங்கள் கூட்டாக நிர்வாகம் செய்கின்றன. இணையத்தில் நகல் பராமரிப்பு என்று உள்ளது. ஒருவருடைய சேவையைத் தடை செய்தால் அதே சேவை வேறு ஓர் இடத்தில் இருந்து தொடங்கும். உலகத்தில் முக்கால் வாசி நில நடுக்கம் ஏற்பட்டாலும் இணையத்தை அழிக்க முடியாது.

இளமதி மரியா, Selayang, Kuala Lumpur
கே: Win RAR, Win Zip போன்றவற்றைக் காசு கொடுத்து வாங்க வேண்டி உள்ளது. இலவசமாகக் கிடைக்கும் நிரலி உள்ளதா?

ப:
கோப்புகளைச் சுருக்கி விரிக்க உதவும் நிரலிதான் 'ஜிப்' நிரலி. Win RAR, Win Zip போன்றவை நல்ல 'ஜிப்' நிரலிகள். இருந்தாலும் பணம் கொடுத்து வாங்க வேண்டும். 7Zip எனும் நிரலி ஒன்று இருக்கிறது. இலவசமாகக் கிடைக்கும். http://www.7zip.org எனும் இடத்தில் கிடைக்கிறது.
  
குமாரி. ராஜாத்தி, பெக்கான் பாரு, கோப்பேங்
கே: என்னுடைய கணினி ஆமை போல நகர ஆரம்பிக்கிறது. மனதிற்கு கஷ்டமாக இருக்கிறது. வர வர பயன்படுத்த வெறுப்பாக இருக்கிறது. கணினியை On  செய்து விட்டு பாத்ரூம் போய் குளித்துவிட்டு வரும் வரையில் திரையில் எதுவும் வராது. நான் பயன்படுத்துவது விண்டோஸ் XP. என்ன செய்யலாம்?


ப: இதற்கு நிறைய காரணங்களைச் சொல்லலாம். நீங்கள் மட்டும் அந்தக் கணினியைப் பயன்படுத்துகிறீர்களா இல்லை வீட்டில் உள்ள மற்றவர்களும் பயன்படுத்துகிறார்களா என்பது தெரியவில்லை. சரி, எப்படி இருப்பினும் உடனடியாகச் செய்யக்கூடிய நிவாரணங்களைச் சொல்கிறேன். தேவையில்லாத ஆவணங்கள், படங்கள், வீடியோ படங்கள், கோப்புகள், பாடல் கோப்புகள், பாடல் காட்சிகள், நிரலிகள் போன்றவை உங்கள் Hard Disc எனும் தட்டகத்தை அடைத்துக் கொண்டிருக்கலாம். கணினியால் மூச்சுவிட முடியாத நிலைமைகூட வந்திருக்கலாம். தேவையில்லாத Programs எனப்படும் நிரலிகளை அகற்றிவிடுங்கள். உங்களுக்குத் தெரியாமல் யாராவது பெரிய விளையாட்டு நிரலிகளைப் போட்டு வைத்திருக்கலாம்.  Control Panelக்குப் போய் அங்கே Add or Remove Programs எனும் பகுதியில் இந்த விளையாட்டுகளை அப்புறப்படுத்தி விடுங்கள். இது மிகவும் முக்கியம். 

முகப்புத் திரையில் My Computer எனும் சின்னத்தில் சுழலியை வையுங்கள். வலது புற சொடுக்கு செய்யுங்கள். அதில் Manage எனும் சொல்லைச் சொடுக்குங்கள். உள்ளே போய் Disk Defragmenter என்பதைத் தட்டிவிடுங்கள். உங்கள் தட்டகத்தின் பிரிவுகள் காட்டப்படும். அவற்றை ஒவ்வொன்றாக Defragment எனும் சுத்திகரிப்பு செய்யுங்கள். அதிக நேரம் பிடிக்கலாம். எல்லாம் முடிந்த பிறகு கணினியை Restart எனும் மறு  தொடக்கம் செய்யுங்கள். இப்போது உங்கள் கணினி வேகமாக வேலை செய்யும். 

வி.முருகையா, அல்மா, புக்கிட் மெர்தாஜாம், பினாங்கு
கே: ஒரு கணினிக்கு Hard Disc முக்கியமா Processor முக்கியமா?

ப:
ஒரு திருமணத்தில் மாப்பிள்ளை முக்கியமா பெண்பிள்ளை முக்கியமா என்று கேட்பது போல இருக்கிறது. இரண்டுமே முக்கியம். Processor எனும் செயலர் அல்லது மையச் செயலகம் ஒரு கணினிக்கு மூளையைப் போன்றது. மூளை இல்லை என்றால் மனிதன் ஒரு பிணம். அதை நினைத்துக் கொள்ளுங்கள். அதைப் போலத்தான் கணினிக்குச் செயலரும். இருந்தாலும் தகவல்களைச் சேகரித்து வைக்க ஒரு வங்கி வேண்டுமே. அந்த வங்கிதான் தட்டகம். வேண்டும் என்கிற நேரத்தில் செயலர் தன் வேலைக்காரர்களை அனுப்பி, தனக்கு வேண்டிய தகவல்களைச் சேகரித்துக் கொண்டு வந்துவிடுவார். சும்மா சொல்லக்கூடாது. தட்டகமும் ஓடி ஓடித் தகவல்களை விரட்டி விரட்டிப் பிடிப்பார். அதுவும் ஒரே ஒரு வினாடியில் வேலைகளைச் செய்து முடிக்க வேண்டும். ஆக, பாரபட்சம் காட்டக்கூடாது. செயலர் இல்லை என்றால் தட்டகம் இல்லை. தட்டகம் இல்லை என்றால் செயலர் இல்லை.  

குமாரி. ஜானகி மலர், அவுலோங், தைப்பிங், பேராக்
கே: என்னுடைய கணினியில் தமிழைப் பயன்படுத்த விரும்புகிறேன். முரசு அஞ்சல் எங்கே எப்படி கிடைக்கும்?

ப:
தங்களுடைய கணினியில் தமிழைப் பயன்படுத்த விரும்புகிறீர்கள். பாராட்டுகள். முரசு அஞ்சல் செயலி Software மலேசியாவில் உருவாக்கப்பட்டது. உலகம் முழுமையும் உள்ள தமிழர்கள் விரும்பித் தங்கள் கணினிகளில் பதித்துக் கொள்கிறார்கள். பயன்படுத்த சுலபமானது. இணைமதி, இணைக்கதிர் எழுத்துருகள் மிக அழகாக இருக்கின்றன என்பது கூடுதல் சன்மானம். அண்மையில் நான் தமிழ்நாட்டுக்குப் போயிருந்த போது அங்கே உள்ள பல கணினி மையங்கள், முரசு அஞ்சலைப் பயன்படுத்துவதைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன். தமிழ்ச் செயலிகளில் முரசு அஞ்சல் எளிதானது என்றார்கள். அந்தச் செயலியைப் பெற்றுக் கொள்ள முரசு நிறுவனத்துக்கு கடிதம் எழுதலாம். கட்டணம் உண்டு. தவிர www.murasu.com எனும் இணைய மையத்திற்குச் சென்றும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கணினியில் பதித்துக் கொள்வதும் (Installing) சுலபம். எப்படி பயன்படுத்துவது என்பது பற்றி விளக்கம் கொடுத்திருப்பார்கள்.

ஆர். முத்தழகன், கம்போங் சிமி, ஈப்போ, பேராக்
கே: ஒவ்வொரு கணினியிலும் Anti Virus போட்டிருக்க வேண்டுமா?

ப:
கணினி வைரஸ் என்பதை மனிதர்களைத் தாக்கும் கிருமிகள் என்று நினைக்க வேண்டாம். அவை சின்ன மென்பொருட்கள் அல்லது சின்ன Program - நிரலிகள். இவை கணினிக்குள் நுழைந்ததும் நாம் சேகரித்து வைத்திருக்கும் செய்திகள், படங்கள், ஆவணங்கள், செயலிகள் போன்றவற்றை அழித்துவிடும். அதனால் அவற்றுக்கு தமிழில் அழிவி என்று பெயர். கணினிகள் செயல்படுவதற்கு செயலிகள் Programs தேவை. இந்தச் செயலிகளை எழுதும் கணினி நிபுணர்களே இந்த அழிவிகளையும் எழுதுகிறார்கள். தங்களுடைய திறமையைக் காட்ட வேண்டும் என்பதற்காக  மற்றவர்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்கிறார்கள். எந்த நேரத்தில் அழிவிகள் உங்கள் கணினியைத் தாக்கும் என்று தெரியாது. அதனால் உடனடியாக Anti Virus தடுப்பு நிரலியை வாங்கி கணினியில் பதித்துக் கொள்ளுங்கள். வெள்ளம் வருவதற்கு முன்பாக அணை போடுங்கள். Norton Anti Virus தடுப்பு நிரலியின் சந்தாத் தொகை ஆண்டு ஒன்றுக்கு RM120.  AVG, Avast போன்ற இலவச தடுப்பு நிரலிகளும் உள்ளன. அவற்றின் இணையத் தளங்களுக்குச் சென்று இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

11 ஏப்ரல் 2010

கணினியும் நீங்களும் - பகுதி 42

மலேசிய நண்பன் ஞாயிறு நாளிதழில் வெளியான கணினியும் நீங்களும் கேள்வி பதில் பகுதியைக் கட்டம் கட்டமாக இந்த வலைப் பூவில் பிரசுரித்து வருகிறேன். பழைய எல்லாப் பகுதிகளும் வெளி வந்த பின்னர், ஞாயிற்றுக் கிழமைகளில் பிரசுக்கப் படும் அதே பகுதி அதே தினத்தில் இந்த வலைப் பதிவிலும் பிரசுரிக்கப் படும். உலகில் உள்ள அனைத்துத் தமிழர்களும் படிக்க வேண்டும். பயன் அடைய வேண்டும். நீங்கள் மின்னஞ்சல் வழியாகக் கேள்விகள் கேட்கலாம். உங்கள் கேள்விகள் நாளிதழிலும் வெளிவரும். இணையத்திலும் வரும்.

(மலேசிய நண்பன் - 20.12.2009 ஞாயிறு நாளிதழில் வெளியானது)

சின் ஆறுமுகம், பாரிட் ஜாவா, பத்து பகாட், ஜொகூர்

கே: சென்ற வாரம் ஒரு வாசகர்
'This copy of Windows is not genuine. You may be a victim of software counterfeiting' என்பதைப் பற்றி ஒரு கேள்வி கேட்டு இருந்தார். WGA என்பதை எப்படி கணினியில் இருந்து நீக்குவது என்று நீங்கள் பதில் கொடுத்தீர்கள். காப்புரிமைச் சட்டத்தை மீறுவது போலத் தெரிகிறது? அந்த மாதிரி செய்யலாமா.

ப: நல்ல கேள்வி. காப்புரிமைச் சட்டத்தை மீறவில்லை என்பதை முதலில் சொல்லி விடுகிறேன். மைக்ராசாப்ட் நிறுவனத்தின் அசல் விண்டோஸ் செயலியை வாங்கி அதை நகல் எடுப்பது குற்றம். விற்பது குற்றம். வைத்து இருப்பதும் குற்றம்.

ஆனால், சாந்தரூபணி என்பவர்  மருத்துவம் படிக்கும் மாணவி. காசு கொடுத்து விண்டோஸ் அசல் செயலியை வாங்கி இருக்கிறார். அதைத் தன் கணினியில் பதித்த பிறகு அது போலியானது என்று தவறுதலாக எச்சரிக்கை செய்யப் பட்டு இருக்கிறார். இந்த இடத்தில் தொழில் நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. அதை நிவர்த்தி செய்யத் தான் வழி சொன்னேன் ஒழிய எலியைப் புலியாக்கும் ரகசியம் எதையும் சொல்ல வில்லையே.

இருந்தாலும் பாருங்கள். எலியைப் பிடிக்கப் போய் உங்களைத் தான் பிலி அடித்து விட்டது. எதற்கும் சகோதரர் பில் கேட்ஸ் அவர்களின் மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்து இருக்கிறேன். bgates@microsoft.com. பாராட்டுப் பத்திரமும் பண முடிச்சும் கிடைத்தாலும் கிடைக்கலாம்.

குமரன், பீடோர், பேராக்  (குறும் செய்தி 23.10.2009)
கே: சார், வணக்கம். Maxis Broadband பயன் படுத்துகிறேன். Dlm pc x blh guna. Sum pc cn sum cant. Y its hppn. Help pls. 10q?

ப:
தாங்கள் Maxis Broadband எனும் 'மாக்சிஸ் விரிவு அலை' இணையச் சேவையைப் பயன் படுத்துகிறீர்கள் என்பது மட்டும் தெரிகிறது. மற்றவை எனக்குத் தெரியாத வேறு உலகத்து மொழியில் எழுதி இருக்கிறீர்கள். எந்த மொழி என்று சொல்லுங்கள். அந்த மொழியை முதலில் படித்து முடித்து விடுகிறேன். அப்புறம் பதில் கொடுக்கிறேன்.

சின்னக்கண்ணன்   sanjay_dila@yahoo.com
கே: என்னுடைய கைப்பேசியில் தமிழ் எழுத்துகளை வரவழைக்க முடியுமா? முடியாதா?

ப:
அது என்ன முடியுமா? முடியாதா? தம்பி சின்னக்கண்ணன், முடியாது என்று சொல்லவே கூடாது. அது எனக்குப் பிடிக்காத விஷயம். முடியும் ஆனால் முடியாது என்றுதான் சொல்ல வேண்டும். சரியா. கைப்பேசியை எடுங்கள். Settings >> Phone Settings >> Language >> Select >> தமிழ் என்பதைத் தேர்வு செய்யுங்கள். அவ்வளவுதான். இப்போது வெளியே வாருங்கள். எல்லாம் தமிழிலேயே இருக்கும். மறுபடியும் மாற்ற வேண்டும் என்றால் அதே இடத்திற்குப் போய் ஆங்கிலத்திற்கு மாற்றிக் கொள்ளுங்கள். எனக்கு ஒரு நன்றி சொல்லுங்களேன்.


ஊர் பேர் இல்லை.   (குறும் செய்தி 1.11.2009)
கே: கணினியின் CPU வில் GHz என்று வருகிறது. அப்படி என்றால் அதன் வேகமா?

ப:
ஒரு வீட்டுக்கு சும்மா விருந்தாளியாகப் போகிறீர்கள். வீட்டுக்காரர் கதவைத் திறந்ததும் நேராக வீட்டுக்குள் நுழைகிறீர்கள்.சோபாவில் உட்காருகிறீர்கள். தொலைக் காட்சியைத் திறக்கிறீர்கள். ரிமோட் வேலை செய்ய வில்லை என்று புகார் செய் கிறீர்கள். இந்த மாதிரி நடந்து கொள்ளலாமா. உங்கள் பெயர் என்ன. எந்த ஊரில் இருக்கிறீர்கள். இதைச் சொல்லிவிட்டு தானே கேள்வி கேட்க வேண்டும். அது தானே முறை.

CPU  என்றால் Central Processing Unit. தமிழில் மையச் செயலகம் என்கிறோம். GHz என்றால் Giga Hertz. மையச் செயலகம் எவ்வளவு வேகத்தில் தகவலைப் பரிமாறுகிறது என்பதை Hertz அளவில் கணக்கு எடுக்கிறார்கள். சில கணினிகள் 1.6 GHz வேகத்தில் தகவலைப் பரிமாறிக் கொள்ளும். சில 3.5 GHz வரை போகும். விலையும் அதிகம்.


இரா.தர்மசீலன், கோப்பிசான், கோப்பேங், பேராக்
கே: SUNFOS என்றால் என்ன? அது ஒரு செயலியா?

ப:
SUN JAVAதான் நிரலி. நீங்கள் சொல்லும் SUNFOS இருக்கிறதே அது ஒரு தனியார் நிறுவனம். SUNFOS ENTERPRISE என்பது முழுப் பெயர். ஈப்போ, புந்தோங்கில் இருக்கிறது. இவர்கள் தொலைக்காட்சி, வானொலி, CD Player எனும் குறுவட்டு இயக்கி, Amplifier எனும் இடையகப் பெருக்கி போன்றவற்றைப் பழுது பார்க்கிறார்கள். ஆர்.பிரகாஷ் எனும் இளைஞர் நடத்தி வருகிறார். உதவி தேவைப் படுபவர்கள் 012-3502653 எனும் எண்களுக்கு அழைக்கலாம். நம்முடைய இளைஞர்களை நாம் தான் ஆதரிக்க வேண்டும்.


மஞ்சள் வெயில்   manja_veyil14@gmail.com
கே: சார், நீங்கள் தமிழ்ப் பள்ளிக்கூடங்களுக்கு இலவசமாக இணையத் தளம் செய்து கொடுக்கிறீர்களாமே. உண்மையா?

ப:
ஆமாம். நம்முடைய பொழுது போக்கே இணையத் தளங்கள் தயாரிப்பது. போன வருடம் மட்டும் ஐந்து பள்ளிக்கூடங்களுக்கு இலவசமாகச் செய்து கொடுத்தேன். எந்தக் கட்டணத்தையும் கேட்கவில்லை. இருந்தாலும் சில கசப்பான அனுபவங்கள். அந்த இலவசச் சேவையை மாற்றிக் கொண்டேன். எல்லாமே இலவசமாகப் போனால் அதில் ஒரு பிடிப்பு இல்லாமல் போய்விடுகிறது இல்லையா.

தமிழ்ப் பள்ளிக்கூடங்களுக்கு இணையத் தளங்கள் தயாரிக்க விரும்புகிறவர்கள் 012-5838171 எனும் எண்களுக்கு அழைத்துப் பேசலாம். அது எல்லாம் சரி. உங்கள் பெயர் என்ன உண்மையிலேயே மஞ்சள் வெயில் தானா. நல்ல அழகான பெயர். அந்தக் காலத்து 'மஞ்சள் வெயில் மாலையிலே' பாட்டு ஞாபகம் வருகிறது.

அன்பரசன், செங்காட் ஆசா, தஞ்சோங் மாலிம், பேராக்
கே: சார், என் கைப்பேசியில் ஆங்கில அகராதியை வைத்துக் கொள்ள ஆசைப் படுகிறேன். முடியுமா?

ப:
மறுபடியும் முடியுமா முடியாதா வந்து இருக்கிறது. முதலில் http://www.getjar.com/products/10603/Dictionary எனும் இணைய முகவரிக்குச் செல்லுங்கள். அடுத்து உங்கள் கைப் பேசியின் வகையைத் தேர்வு செய்யுங்கள். வகை என்றால் Model. பதிவிறக்கம் செய்வதற்கான தொடர்பு கிடைக்கும். Download என்பதைச் சொடுக்கி கணினிக்குள் சேமித்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு உங்கள் கைப்பேசிக்கு மாற்றிக் கொள்ளுங்கள்.

(Do you like this article. Please press the Thamilish and Ulavu voting buttons. Thanks.)