23 ஜூலை 2018

மணிப்பூர் தமிழர்கள்

இந்தியாவின் வடகிழக்கில் ஏழு மாநிலங்கள். அருணாச்சலப் பிரதேசம், அசாம், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, திரிப்புரா, மணிப்பூர். இவற்றை ஏழு சகோதரிகள் (செவன் சிஸ்டர்ஸ்) மாநிலங்கள் என்று அழைக்கிறார்கள். 


இந்த மாநிலங்களில் பர்மா எல்லையில் மிக ஒட்டி இருப்பது மணிப்பூர். இந்த மணிப்பூரில் தான் இப்போது 17,000 தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களைத் தான் மணிப்பூர் தமிழர்கள் என்று அழைக்கிறோம்.

இத்தனை ஆயிரம் தமிழர்கள் எப்படி அங்கே போனார்கள். ஏன் போனார்கள். எதற்குப் போனார்கள். ஒரு பெரிய வரலாறே இருக்கிறது. அது ஒரு சோகமான வரலாறு. தொடர்ந்து படியுங்கள்.

பர்மா தமிழர்கள் செல்வச் செழிப்பில் கொழித்தவர்கள். மற்ற மற்ற பர்மிய இனங்கள் மலைத்துப் போகும் அளவிற்கு மலை மலையாய்ச் சொத்துகளைக் குவித்தவர்கள். விருந்தோம்பலில் சிகரம் பார்த்தவர்கள். 


ஐம்பது அறுபது கோயில்களைக் கட்டிப் போட்டு அழகு பார்த்தவர்கள். அறுபது எழுபது தமிழ்ப்பள்ளிகளைக் கட்டிப் போட்டு தமிழுக்கு உச்சம் பார்த்தவர்கள். ஊரும் உலகமும் வியக்கும் வண்ணம் வாழ்ந்தவர்கள்.

ஆனால் ஒரே ஒரு நாளில் நடுத்தெருவிற்குத் தள்ளப் பட்டவர்கள்.

அறுபது வருடங்களுக்கு முன்பு நடந்தது. பர்மாவில் இராணுவ ஆட்சி. ஆயிரக் கணக்கான தமிழர்கள் தமிழ்நாட்டிற்கு நாடு கடத்தப் பட்டார்கள். தெரிந்த விசயம்.

தாய் மண்ணில் பிச்சைக்காரர்களாகப் போய் நின்றார்கள். அவர்கள் தான் பராசக்தி படக் கதையின் நிஜமான நிழல் பிம்பங்கள். வேதனை விளிம்புகளில் வேர் அறுக்கப்பட்ட விழுதுகள். விரக்தியின் உச்சத்தில் தற்கொலை செய்து கொண்டவர்கள் பலர். வேறு மாநிலங்களுக்கு ஓடிப் போனவர்கள் பலர்.


அவர்களில் சிலருக்குச் சென்னை வாழ்க்கை பிடிக்கவில்லை. செத்தாலும் நாங்கள் பர்மாவிலேயே செத்துப் போகிறோம் என்று சொல்லி பர்மாவிற்கே திரும்பிப் போனார்கள். வங்காள தேசம் வழியாகப் போனவர்கள் காடு மேடுகளையும் ஆறு மலைகளையும் கடந்து மணிப்பூர் - பர்மா எல்லை வரை சென்றார்கள்.

அதற்கு மேல் அவர்களால் போக முடியவில்லை. பர்மிய குடி நுழைவுத் துறையினர் அவர்களை எல்லையிலேயே தடுத்து நிறுத்தி விட்டார்கள். பர்மாவிற்குள் விடவில்லை.

மணிப்பூர் - பர்மா எல்லைக் கிராமம் மோரே. அந்த இடத்தில் அப்படியே தங்கி விட்டார்கள். அவர்கள் தான் மணிப்பூர் தமிழர்கள். அங்கே தங்கிய தமிழர்களின் சந்ததிகள் தான் மணிப்பூரில் இன்றும் வாழ்ந்து வருகிறார்கள். ஒரு மினி தமிழகத்தையே உருவாக்கி இருக்கிறார்கள். 



மணிப்பூர் பகுதிகளுக்கு  நிறைய பேர் வருவது இல்லை. ஏதோ அந்த மாநிலம் அண்டை நாடான சீனாவில் இருப்பது போல பலருக்கும் ஒரு பயம். சரி.

இந்த மணிப்பூர் தமிழர்களின் வரலாற்றைப் பற்றி கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம். மணிப்பூருக்குத் தமிழர்கள் வந்த கதை சோகம் கலந்த வியப்பான கதை.

நவீன வசதிகள் வந்துவிட்ட இன்றைய நாளில்கூட மோரே கிராமத்தைச் சென்று அடைவது அப்படி ஒன்றும் சாதாரண விசயம் அல்ல. ஆனால் 1960 - 1970-களில் எப்படி எல்லாம் தமிழர்கள் சிரமப்பட்டு மோரேவை சென்று அடைந்து இருப்பார்கள். நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது.

பிரிட்டனைச் சூரியன் அஸ்தமிக்காத நாடு என்று வெள்ளைக்காரர்கள் பெருமையாகச் சொல்லிக் கொள்வார்கள். கொடிகட்டி பறந்த நாடு. இப்போது கொஞ்சம் மங்கி விட்டது. 



ஒரு காலக் கட்டத்தில் தென் ஆப்பிரிக்கா, இலங்கை, மலாயா, சிங்கப்பூர், பிஜி, மொரிஷியஸ், ரீ-யூனியன் தீவுகள், பர்மா போன்ற நாடுகளுக்குத் தமிழர்கள் புலம் பெயர்ந்தார்கள்.

அந்த நாடுகளில் இருந்த கரும்பு, தேயிலை, ரப்பர் தோட்டங்களில் பலர் வேலை செய்தனர். சிலர் வியாபாரம் செய்தனர். சிறு சிறு குழுக்களாக; குடும்பம் குடும்பங்களாகத் தமிழர்கள் பல ஆண்டுகள் அங்கேயே தங்கினார்கள். சிறுகச் சிறுகப் பணம் சேர்த்தார்கள். சொத்துக்களை வாங்கிப் போட்டார்கள்.



ஒரு கட்டத்தில் இந்த நாடுகள் காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டுச் சுதந்திரம் பெற்றன. இரண்டு மூன்று தலைமுறைகளாக வாழ்ந்து வந்த தமிழர்களுக்குப் பல நாடுகள் குடியுரிமை வழங்கி சிறப்பு செய்தன.

ஆனால் சில வக்கிரப்புத்தி பிடித்த நாடுகளும் இருக்கவே செய்தன. தமிழர்களை அந்நியராக நினைத்தன. தங்கள் வாய்ப்புகளைப் பறிக்க வந்த சண்டாளர்களாகக் கருதின. அவர்களைத் துன்புறுத்தி நாடு கடத்தின. அதில் ஸ்ரீலங்கா, பர்மா போன்றவை தனித்துவம் பெற்ற அரக்க புத்திகள்.

பர்மாவில் 1962-ஆம் ஆண்டு இராணுவப் புரட்சி. அதிகாரத்திற்கு வந்தவர்கள் தமிழர்களை நசுக்கிப் போட்டு விரட்டத் தொடங்கினார்கள். உழைத்துச் சம்பாதித்த தமிழர்களின் கோடிக் கோடியான சொத்துக்கள் பறிமுதல் செய்யப் பட்டன.  



தமிழர்கள் வலுக்கட்டாயமாக கப்பலில் ஏற்றப் பட்டனர். இந்தியாவிற்கு மறு ஏற்றுமதி செய்யப் பட்டனர். மூன்று இலட்சத்திற்கும் அதிகமான தமிழர்களுக்கு மன உளைச்சல்கள்; அலைக்கழிப்புகள்; அங்கலாய்ப்புகள்.

அந்த வகையில் தமிழ்நாட்டில் நிறைய பர்மா தமிழர் காலனிகள் தோற்றுவிக்கப் பட்டன. அவற்றில் ஒன்று தான் இன்றைய பர்மா பஜார். தாய்நாட்டிற்குத் திரும்பி வந்தவர்களில் சிலருக்குத் தங்களின் பழைய வாழ்விடம், சொத்துக்களை மறக்க முடியவில்லை.

மீண்டும் பர்மா செல்லும் முயற்சிகளில் இறங்கினார்கள். கால்நடையாகவும் போகிற வழியில் கிடைக்கிற போக்குவரத்துகளையும் பயன்படுத்திப் பர்மாவிற்குச் செல்வது என்று முடிவு செய்த்தார்கள்.

மூன்று மாதம் நடையாய் நடந்து இந்தியாவின் வடகிழக்கே இருக்கும் மணிப்பூர் மாநிலத்தின் எல்லையை அடைந்தார்கள். அங்கு இருந்து பர்மாவின் தலைநகரம் ரங்கூனுடன் இணைக்கும் பாலத்தின் வழியாக பர்மாவுக்குள் செல்ல முயற்சி செய்தார்கள். 



ஆனால் பர்மிய இராணுவம் அவர்களைப் பர்மாவிற்குள் விடவில்லை. எல்லையில் இருந்த இராணுவத்தினரும் குடிநுழைவுத் துறையினரும் அவர்களை விரட்டி அடித்தனர்.

அங்கு இருந்து திரும்பி மறுபடியும் தமிழ்நாட்டிற்குப் போக பலருக்கு விருப்பம் இல்லை. இருந்தாலும் ஒரு சிலர் தமிழ் நாட்டிற்கே திரும்பிச் சென்றார்கள். ஒரு சிலர் அந்த நுழைவு பாலத்தை ஒட்டிய மோரே என்கிற பழங்குடியினர் கிராமத்திலேயே தங்கினார்கள். அப்படியே  அவர்களின் பிழைப்பு ஓடியது. இந்த மோரே கிராமத்தின் பரப்புளவு 7.38 சதுர கி.மீ. ஒரு செருகல்.

இரண்டாம் உலகப் போர் நடந்த போது நேதாஜியின் இந்திய தேசிய இராணுவம் இந்த மோரே கிராமப்புற நகரில் தான் தங்கியது. இந்திய தேசிய இராணுவத்தில் மணிப்பூர் தமிழர்களும் இணைந்து இந்திய விடுதலைக்கு போராடினார்கள். அதை இங்குள்ள  பாட்டிகள் இன்றும் கதை கதையாய்ச் சொல்கிறார்கள்.

மோரே நகருக்கு அருகில் சூரஜ்சந்த்பூர் எனும் சிறுநகரம். இந்த இரு இடங்களிலும் இந்திய தேசியப்படை வீரர்கள் முகாம் போட்டார்கள். அப்படியே பிரிட்டிஷ் படைகளை எதிர்த்தார்கள். நாகலாந்து வரை போனார்கள். ஐ.என்.ஏ. கொடிகளை நட்டு விட்டு வந்தார்கள்.

மோரே என்பது ஒரு சிறு கிராமப்புற நகரம். அங்கே தங்கிய தமிழர்கள் காலப் போக்கில் தங்களின் உறவினர்களையும் நண்பர்களையும் அழைத்துக் கொண்டார்கள். அப்போது அந்தக் கிராமத்தில் குக்கீஸ் என்கிற பழங்குடி இனத்தவர் வாழ்ந்து வந்தார்கள்.



தொடக்கத்தில் தமிழர்களுக்கும் குக்கீஸ் பழங்குடிகளுக்கும் சலசலப்புகள். 1990-களில் மணிப்பூர் பூர்வீக இனக் குழுக்களின் ஆயுதப் போராட்டங்கள். இடையில் சிக்கிய தமிழர்கள் பலர் கொலை செய்யப் பட்டனர். மீண்டும் தமிழ்நாட்டுக்கே பலர் அகதிகளாகப் போய்ச் சேர்ந்தனர்.

இருந்தாலும் காலப் போக்கில் சமரசமானது. இரு தரப்பினரும் இப்போது இணைந்து வாழ்கின்றனர். இவர்களுடன் நேபாளிகளும், பஞ்சாபிகளும் சேர்ந்து கொண்டனர். இவர்களின் எண்ணிக்கை 200-க்கும் மேல் போகாது.

தமிழகத்தில் இருந்து வந்த தமிழர்களுக்கு ஷொலிம் பெயிட் என்பவர் உதவிக் கரமாக இருந்தார். அதற்கு அங்குள்ள தமிழர்கள் செலுத்திய மண்  வரிதான் காரணம். இந்த வரியில் குறிப்பிட்ட பங்கை அவர் எடுத்துக் கொண்டு மீதியைப் பிரிட்டிஷ் அரசுக்கு செலுத்தி வந்தார்.

இப்போதைக்கு மோரே கிராமத்தின் மக்கள் தொகை ஏறக்குறைய 35,000. இதில் தமிழர் மட்டும் 17,5000 பேர். அனைவரும் சர்வ சாதாரணமாகத் தமிழிலும் பர்மிய மொழியிலும் பேசிக் கொள்கின்றனர்.



பிரிட்டிஷ் ஆட்சியின் போது பர்மா நாடு இந்தியாவின் ஒரு மாநிலமாகத் தான் இருந்தது. 1948-க்கு முன்னால் நடந்ததைச் சொல்கிறேன். அந்தக் காலக் கட்டத்திலும் தமிழர்கள் அங்கே வாழ்ந்து இருக்கிறார்கள்.

பர்மாவின் தலைநகர் ரங்கூன் வரை போய் வியாபாரம் செய்து வந்து இருக்கிறார்கள். தடைகள் ஏதும் இல்லை. மோரே  நகரம் இந்தியா பர்மா நாடுகளுக்கு ஒரு முக்கிய நுழைவாயிலாகவும் செயல்பட்டது.

இப்போது மணிப்பூர் வழியாக பர்மாவிற்கு நூற்றுக் கணக்கான வாகனங்கள், சரக்கு லாரிகள் அன்றாடம் போய் வருகின்றன. அதே மாதிரி பர்மாவில் இருந்தும் தரைவழியாக இந்தியாவிற்கு வருகிறார்கள் போகிறார்கள். அங்கே இருந்து வருகிறவர்களின் தேவைகளை மோரே மக்கள் கவனித்துக் கொள்கிறார்கள். மோரேவில் நிறைய உணவகங்கள் இருக்கின்றன. சின்னச் சின்ன மளிகை கடைகளும் இருக்கின்றன.

1960-களில் தமிழர்கள் இங்கு குடியேறிய காலக் கட்டத்தில் மோரேவிற்கு அருகில் நாம்ப்லாங் என்று ஒரு சந்தை இருந்தது. அந்தச் சந்தையில் சிறிய அளவில் பண்டமாற்று வியாபாரம். சந்தையில் தமிழர்கள் தொழிலாளர்களாக வேலை செய்தனர். தமிழர்களின் புத்திசாலித்தனம்; கடும் உழைப்பு; இந்த இரண்டும் அவர்களுக்குப் புதிய கதவுகளைத் திறந்து விட்டன.



திருமண விசயத்தில் மணிப்பூர் தமிழர்களிடம் படு சுதந்திரம். பெண் வீட்டார்களுக்கு வரதட்சணை பிரச்சினையே இல்லை. மாப்பிள்ளை வீட்டார்தான் பெண்வீட்டாருக்குத் திருமண சீர் செய்ய வேண்டும். இன்னும் ஒரு விசயம். ரொம்பவும் முக்கியம்.

ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒருவரை ஒருவர் பிடித்து இருந்தால் மட்டுமே திருமணம். பெண் பார்க்கும் படலத்தில் ஒரு பெண்ணுக்கு ஓர் ஆணைப் பிடிக்கவில்லை என்றால் அப்போதே நறுக்கென்று பிடிக்கவில்லை என்று சொல்லி விடுவார். அதோடு அடுத்த பேச்சு இல்லை.

வந்தவர்கள் வந்தவழியைப் பார்த்துத் திரும்பிப் போக வேண்டியது தான். மணப்பெண்ணின் மனசிற்குத் தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். உலகத் தமிழர்களிடம் காணப்படும் ஒரு வித்தியாசமான அணுகுமுறை. மணிப்பூரில் வாழும் குக்கீஸ் பூர்வீகக் குடிமக்களிடம் பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்கும் பழக்கம் தொன்று தொட்டு இருக்கிறது. ஒருக்கால் அதையே மணிப்பூர் தமிழர்கள் பின்பற்றி வரலாம். சொல்ல முடியாது.

அப்புறம் இன்னும் ஒரு நல்ல விசயம். காதலர்கள் வீட்டை விட்டு  ஓடிவிட்டால் பிரச்சினை ஒன்றும் பெரிதாக வரப்போவது இல்லை. நிறைய குடும்பங்களில் நடந்து இருக்கிறது. இரு தரப்பும் ஒன்றாகச் சேர்ந்து பேச்சு வார்த்தை நடத்துவார்கள். 



பின்னர் காதலர்கள் இருவரையும் அழைத்து வந்து திருமணத்தை நடத்தி வைப்பார்கள். ஆனால் ஒரே ஒரு கன்டிசன். புருசன்காரனிடம் சண்டை போட்டுக் கொண்டால் திரும்பி அப்பா அம்மா விட்டிற்குப் போக முடியாது. கதவைச் சாத்தி விடுவார்கள். நல்ல பழக்கம்.

முடிந்தால் நீங்களும் போய்ப் பாருங்களேன். போன வாக்கில் ஒரு பெண்ணைக் காதல் பண்ணி அப்படியே கொஞ்ச நாளைக்குத் தலைமறைவாக இருந்து விடுங்கள். பெண்ணின் அப்பா அம்மா தேடி வருவார்கள். நல்லபடியாக அழைத்து வந்து கல்யாணம் செய்து வைப்பார்கள்.

22 ஜூலை 2018

தமிழகப் பெண்களின் போராட்டம் - 1

*தமிழர்களைப் பார்ப்பதும் தீட்டு. பழகுவதும் தீட்டு. அவர்களைத் தொடுவதும் தீட்டு. இப்படி ஒரு தீண்டாமைக் கொடுமை முன்பு காலத்தில் இருந்தது. எங்கே? உலகத்திற்கு உத்தமம் பேசிய நம்ப இந்தியாவில் தான். இப்போது அந்தக் கொடுமை இல்லை.* 



இருந்தாலும் அங்கே இங்கே என்று சில பல இடங்களில் அரசல் புரசலாகத் தேய்த்து வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. அதையும் பார்த்து ஊரும் உலகமும் புன்னகை பூத்துக் கொண்டுதான் போகிறது.

அந்தச் செயல்களுக்கு அரச மரியாதை அளித்த மன்னர்கள் இருந்தார்கள். அரசு முத்திரை குத்திய ஜமீன்தாரர்கள் இருந்தார்கள். பட்டுப் பீதாம்பரம் வீசிய பசப்புச் செம்மல்கள் இருந்தார்கள். சாமியின் பெயரைச் சொல்லி தமிழ்ப் பெண்களைக் கெடுத்து வந்த பெரிய மனிதர்களும் இருந்தார்கள். மன்னிக்கவும்… இருந்தன. சின்ன ஒரு மரியாதை கொடுப்போம்.




அந்த மாதிரி வக்கிரம் படைத்தவர்களைப் பற்றி இங்கே எழுதுவதற்கு மனசு வரவில்லை. என்ன செய்வது. தமிழர்களின் வரலாற்றைத் தமிழர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இல்லீங்களா. ஆக எழுதியே ஆக வேண்டும். ஒரு கட்டாய நிலை. அதனால் எழுத வேண்டி இருக்கிறது.

ஒரு காலத்தில் தமிழ் மண்ணில் வாழ்ந்து மறைந்த ஒவ்வொரு தமிழர்ப் பிரிவினர் மீதும் ஒரு வகையான அடக்கு முறை திணிக்கப் பட்டது. உயர்ச் சாதி என்று சொல்லிக் கொண்டவர்கள் போட்ட அத்துமீறிய சடங்குச் சம்பிரதாயங்கள். ஏராளம் ஏராளம்.

அந்த உயர்ச் சாதியினரிடம் தமிழர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும். எந்த மாதிரியான ஆடைகளை உடுத்த வேண்டும். அவர்களுக்கு எப்படி மரியாதைகள் செய்ய வேண்டும். எவ்வளவு தூரம் தள்ளி நிற்க வேண்டும். இவை எல்லாம் தமிழர்கள் மீது சொல்லாமல் எழுதி வைத்த ஒடுக்கு முறைத் திணிப்புகள். 



ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்னால் வரையில் தமிழர்களைச் சாதி சாதியாகப் பிரித்து வைத்து இருந்தார்கள். அவன் அந்த சாதி. இவன் இந்த சாதி. நான் பெரியவன். நீ சின்னவன் என்று சூடம் கொழுத்தி சாம்பிராணி வேறு போட்டுக் காட்டினார்கள்.

’சாதி என்பதைச் சாக்கடையில் வீசு’ என்று சொன்னவர்களுக்குச் சவுக்கடி கொடுத்தார்கள். சவர்க்காரத் தொட்டிகளில் போட்டு அமுக்கிக் குளம் குட்டைகளில் தூக்கி வீசியும் இருக்கிறார்கள்.

சரி. இந்தச் சாதிச் சடங்குகள் எப்படி வந்தன. அதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். ஆரியர்கள் இந்தியாவிற்குள் காலடி வைத்த காலக் கட்டத்தில் இருந்து அந்தச் சடங்குச் சம்பிரதாயங்கள் தொடங்குகின்றன.

ஆரியர்கள் யார்? அவர்கள் எங்கு இருந்து வந்தார்கள். தொடர்ந்து படியுங்கள். சுருக்கமாகச் சொல்கிறேன்.



ஆரியர் எனும் சொல் ஈரானிய மொழிச் சொல். ஆர்ய (Arya) எனும் அடிச் சொல்லில் இருந்து மருவி வந்தது.

(சான்று: https://ta.wikipedia.org/s/o2d)

இந்தச் சொல்லை ரிக் வேத நூலிலும் பார்க்க முடியும். 3500 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே ஆர்யா எனும் சொல் பயன்பாட்டில் இருந்து வந்து இருக்கிறது.

தவிர இந்த ஆர்ய எனும் சொல் அய்ரிய (Ayrya) எனும் ஈரானிய மொழிச் சொல்லுடன் இணைந்த சொல்லாகும். இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனி நாசிகளின் இனவாதக் கொள்கையில் ஒரு வெறுப்புக்குரிய சொல்லாகவும் மாறியது.

(Gershevitch, Ilya (1968). "Old Iranian Literature". Handbuch der Orientalistik, Literatur I. Leiden: Brill. பக். 1–31) 



ஆரியர்கள் என்பவர்கள் துருக்கி, ஈராக், ஈரான் நாடுகளில் இருந்து பஞ்சம் பிழைக்க இந்தியாவிற்குள் நாடோடிகளாகப் புலம் பெயர்ந்தவர்கள். இவர்களின் பூர்வீகம் ரஷ்யா. அங்கு இருந்த சைபீரியா பனிப் பிரதேசங்களில் நாடோடிகளாக வாழ்ந்து வந்தார்கள். சைபீரியா பூர்வீக மக்களினால் விரட்டப் பட்டவர்கள்.

(Aryans originated in the southwestern steppes of present-day Russia or Scandinavia, or at least that in those countries the original Aryan ethnicity had been preserved.)

ஜெர்மனிக்கு புலம் பெயர்ந்து அப்படியே ஐரோப்பாவில் வலது காலை எடுத்து வைத்து ஈரானில் இடது காலை வைத்தார்கள். கடைசியில் இரண்டு கால்களையும் சேர்த்து வைத்து இந்தியாவிற்குள் குதித்துத் தஞ்சம் அடைந்தார்கள்.

(சான்று: https://en.wikipedia.org/wiki/Aryan_race#19th-century_physical_anthropology

இந்தியாவிற்குள் நுழைந்து ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்தார்கள். கடைசியில் சிந்து சமவெளியின் சிந்து பைரவிகள் பாடிய அப்பாவித் திராவிட மக்களையும் கடித்துக் குதறிப் போட்டார்கள். சங்கீத அரகோணத்தில் காம்போதிகளாக மாற்றிக் காட்டினார்கள் என்று கூட சொல்லலாம். தப்பில்லை.

அங்கு வாழ்ந்த வெள்ளந்திகளைத் தொழிலுக்கு ஏற்றவாறு பிரித்தும் வைத்தார்கள். அந்தப் பிரிவினைக் கோலம் தமிழ்நாட்டில் இருந்து கப்பலேறி இப்போது இங்கேயும்கூட ஒலித்துக் கொண்டு இருக்கிறது. 



இங்கே கொஞ்சம் பரவாயில்லை. இருந்தாலும் சமயங்களில் சில சங்கங்கள் சாதிக்குச் சுண்ணாம்பு அடித்து அழகு பார்க்கிறார்கள். மலேசியாவில் அது ஒரு மௌனராகம். விடுங்கள்.

ஒரு காலக் கட்டத்தில் தமிழர்கள் மீது எண்ணற்ற அடக்கு முறைகள். எல்லாம் தமிழகத்தில் நடந்தவைதான். அந்த மாதிரியான சாதியக் கொடுமைத் தடங்களில் ஒன்றுதான் 18-19-ஆம் நூற்றாண்டுகளில் நடந்த தோள் சீலைப் போராட்டம்.

தமிழ்ப் பெண்கள் ரவிக்கை அணியக் கூடாது. திறந்த மார்புடன் நடக்க வேண்டும். சுத்தமான முகாரிகள் வாசித்த ஓர் அடக்குமுறை.

அன்றைய கேரளப் பகுதியான தென் திருவிதாங்கூர், தமிழக எல்லைப் புறங்கள், கன்னியாகுமரி பகுதிகளில் அந்தப் போராட்டங்கள் நடைபெற்றன. அங்கு வாழ்ந்த தமிழர்கள் ஆதிக்க வர்க்கத்தினரின் கடுமையான ஒடுக்கு முறையில் தனித்துப் பிரித்து வைக்கப் பட்டனர்.

சாமான்யத் தமிழர்கள் எத்தனை அடி தூரத்தில் நின்று பேச வேண்டும் என்று கணக்கு வேறு போட்டு வைத்து இருந்தார்கள். பாருங்கள். தீண்டாமை தீச்சுவாலையை எப்படி எல்லாம் போற்றி போற்றி வளர்த்து இருக்கிறார்கள்.

தமிழர்களில் ஒரு பிரிவினர் கண்ணில்படக் கூடாத சாதி மக்கள் என்றும் தூற்றப் பட்டு இருக்கிறார்கள். நாம் பிறந்து வளர்ந்த இந்தப் பூமியில் எங்கேயும் இப்படி ஒரு கொடுமை நடந்து இருக்குமா. சொல்லுங்கள்.

ஆனால், இந்தியத் தாய் மண்ணில் அப்படி நடந்து இருக்கிறது. ஆக, நிர்ணயிக்கப்பட்ட இந்தத் தீட்டுத் தூரத்தை எவரேனும் மீறினால் அவர்களுக்குக் கடுமையான தண்டனையும் கொடுக்கப் பட்டது. 



அப்பேர்ப்பட்ட ஹிட்லர்கூட வேண்டாதவர்களை விசம் கொடுத்துதான் கொலை செய்தான். ஆனால் இத்தனை அடி தூரத்தில் நின்றுதான் பேச வேண்டும் என்று சட்டம் போட்டது இல்லை. ஆனால் தமிழ்நாட்டில் நடந்து இருக்கிறது.

ஒரு காலக் கட்டத்தில் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களின் சில பகுதிகள் திருவாங்கூர் சமஸ்தானத்து ஆட்சியின் கீழ் இருந்தன. அங்கு சாணார் எனும் ஒரு தமிழ்ப் பிரிவினர் இருந்தனர். அந்தப் பிரிவைச் சேர்ந்த பெண்கள் மேலாடை அணிவதற்குத் தடை விதிக்கப் பட்டது.

இவர்கள் மார்பகத்தைத் திறந்து போடுவதுதான் உத்தமம், உயர் சாதியினருக்குத் தரும் மரியாதை என்று திருவாங்கூர் நாடு ஒரு சட்டத்தையும் போட்டது.

சாணார், பள்ளவர், ஈழவர், முக்குவர், புலையர் போன்ற பிரிவினர் தமிழர்ச் சமூகத்தில் இருந்து ஒதுக்கி வைக்கப் பட்டார்கள். அந்த வகையில் 18 சாதிகளைச் சேர்ந்த பெண்கள் மேலாடை அணியத் தடை விதிக்கப்பட்டது.

அணியக் கூடாது என்று சொன்னால்தான் சரியாக இருக்கும். மேலாடை அணிவது பெரும் குற்றம். திறந்த மேனியோடுதான் நடமாட முடியும். மனுதர்மம் அப்படிச் சொல்வதாக ஒரு சாணக்கியச் சட்டத்தை எடுத்துக்காட்டி அதைச் சம்பிரதாயச் சட்டமாக மாற்றிகயும் காட்டினார்கள்.

தமிழர்ச் சமூகத்துப் பெண்கள் தங்கள் மார்பகத்தை எப்பொழுதும் திறந்து காட்டி மரியாதை செய்ய வேண்டும் என்று உயர்ச் சாதியினர் பிடிவாதமாக இருந்தனர். அந்த வகையில் குழந்தையில் இருந்து இறக்கும் கட்டத்தில் இருக்கும் பாட்டிமார்கள் வரை அந்த மரியாதைக்கு கட்டுப்பட்டாக வேண்டும்.

ஒரு பெண் எவனுடைய மனைவியாகவும் இருக்கலாம். எவனுடைய மகளாகவும் இருக்கலாம். எவனுடைய சகோதரியாகவும் இருக்கலாம். எவனுடைய அம்மாவாகவும் இருக்கலாம். இல்லை பாட்டியாககூட இருக்கலாம். பிரச்சினை இல்லை… 



ஆனால் மார்பகத்தைக் காட்டிக் கொண்டு தான் போக வேண்டும்… வர வேண்டும். மார்பகத்தை மூடி வைக்கக் கூடாது. என்னே ஒரு மனுதர்மச் சட்டம்.

இந்த அசிங்கத்தை இந்த அவமானத்தை இந்த அவலத்தை இந்த அடக்குமுறையை எதிர்த்தப் பல தமிழ்ப் பெண்கள் கிருத்துவ மதத்திற்கு மதம் மாறினார்கள். தங்களின் மார்பகத்தை அடுத்தவரின் பார்வையில் இருந்து மறைக்கப் பெரிதும் போராடி வந்தார்கள்.

பாவம் அந்தப் பெண்கள். மேலாடை அணியாமல் கூனிக் குறுகி வாழ்ந்து வந்தார்கள். அந்த அடக்கு முறையை எதிர்த்துப் போராட்டம் செய்தார்கள்.

அந்தப் போராட்டம் தான் தோள் சீலைப் போராட்டம். பல பத்து ஆண்டுகள் போராட்டம் செய்தார்கள். கடைசியில் வெற்றியும் பெற்றார்கள்.

இந்தத் தோள் சீலைப் போராட்டத்தைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது ஒவ்வொரு தமிழரின் கடமையாகும். இப்படி எல்லாம் நடந்து இருக்கின்றது இப்படி எல்லாம் தமிழர்கள் அவதிப்பட்டு இருக்கின்றார்கள் என்பதை நம் பிள்ளைகளும் தெரிந்து கொள்ள வேண்டும்.

அப்படி அறிந்து தெரிந்து கொள்வது தான் பாதிக்கப்பட்ட நம் தமிழ்ப் பெண்களுக்கு நாம் செய்யும் ஒரு கைமாறு ஆகும்.

18-19-ஆம் நூற்றாண்டுகளில் திருவிதாங்கூர் நாட்டில் தீண்டாமை, காணாமை, நடவாமை போன்ற கோட்பாடுகள் ஆழமாகப் பதிந்து இருந்தன. சமூகத்தில் ஒதுக்கி வைக்கப்பட்ட ஒருவன் ஓர் ஆரியனிடம் இருந்து 36 அடி தொலைவில் நிற்க வேண்டும்.

புலையர் இனத்தைச் சார்ந்த ஒருவன் ஓர் ஆரியனிடம் இருந்து 96 அடி தள்ளி நிற்க வேண்டும். புலையன் ஒருவன் நாயர் இனத்தைச் சேர்ந்தவனிடம் இருந்து 60 அடி அப்பால் நிற்க வேண்டும்.

புலையன் இனத்தைச் சேர்ந்த ஒருவனை அப்படியே அந்த மேல்சாதிக்காரனைப் பார்க்க நேர்ந்தால் அந்த மேல்சாதிக்காரன் தீட்டுப் பட்டவனாகக் கருதப் படுவான். அப்படித் தீட்டுப் பட்டவன் ஆற்றில் அல்லது குளத்தில் மூழ்கி நீராட வேண்டும். தன்னைச் சுத்தப் படுத்திக் கொள்ள வேண்டும்.

அடுத்து ஒரு வேதனையான செய்தி. திருவிதாங்கூர்ப் பகுதிகளில் வாழ்ந்த சாணார் சமூக மக்களின் உழைப்பு அதிகார வர்க்கத்தினரால் மிகக் கொடுமையாகச் சுரண்டப் பட்டது. அவர்களுக்குக் கூலி மறுக்கப்பட்டது. அடிமைகளை விடக் கேவலமாக நடத்தப் பட்டனர். அரசுக்கும் ஆதிக்கச் சாதிகளுக்கும் அடங்க மறுத்தவர்களுக்கு கடுமையான தண்டனைகள்.

அது மட்டும் இல்லை. உழைக்கின்ற சாணார் சமூக மக்கள் குடை பிடிக்கக் கூடாது. செருப்பு அணியக் கூடாது. மாடி வீடு கட்டக் கூடாது. தங்க நகைகள் அணியக் கூடாது. பெண்கள் தங்களுடைய மார்புகளை மேலாடைகளால் மறைக்கக் கூடாது. முழங்காலுக்குக் கீழே உடை உடுத்தி மறைக்கக் கூடாது. பசு மாடுகளை வளர்க்கக் கூடாது. இப்படி ஏகப்பட்ட கூடாதுகள். இந்தக் கூடாதுகளைப் பற்றி நாளைய கட்டுரையில் கூடுதலாகத் தெரிந்து கொள்வோம்.

(பாகம் 2-இல் தொடரும்)

18 ஜூலை 2018

இணையத் தளங்கள் தயாரிப்பு

அன்பர்களே வணக்கம். இணையத் தளங்கள் தயாரிப்பது முன்பு ஒரு பொழுது போக்காக இருந்தது. ஆனால் இப்போது அதுவே பகுதிநேர பணியாக மாறி உள்ளது. இப்போது தயாரித்து வழங்கப்படும் இணையத் தளங்கள் மிக நவீன இணையப் பயன்பாடுகளுடன் செயல் படுகின்றன. 


அந்த இணையத் தளங்களில் பற்பல தொடர்புச் செயல்பாடுகள் உள்ளன.

தங்களில் எவருக்கும் இணையத் தளம் தேவைப் பட்டால் அல்லது உங்களுக்குத் தெரிந்தவர்கள் எவருக்கும் தேவைப் பட்டால் தயக்கமின்றி தொடர்பு கொள்ளவும்.

தற்சமயம் மாண்புமிகு குலா அவர்களின் அதிகாரப்பூர்வ இணையத் தளம் தயாரிப்பு நிலையில் உள்ளது.

http://www.ybkulasegaran.org/yb/

இதுவரையில் தயாரிக்கப்பட்ட மற்ற இணையத் தளங்களின் இணைய முகவரிகள்... உங்களின் பார்வைக்கு...

www.smeassist.net

www.data-matriq.com

www.cbn.edu.my

www.i-riang.academy

www.dataqarma.com

www.prospere-solutions.com

www.fsh-logistics.com

www.nsmovertransport.com

இந்தக் கணினிப் பயன்பாட்டு முயற்சிகளுக்குத் தங்களின் ஆதரவைப் பெரிதும் எதிர்பார்க்கின்றேன். நன்றி.

தொடர்பு கொள்ள : www.prospere-solutions.com/web999

 

26 மே 2018

கவிக்கோ அப்துல் ரகுமான்

மனிதம் பாதி மகத்துவம் பாதி என்று சொல்வார்கள். ஆனால் அந்த இரண்டுமே கலந்து செய்த ஒரு கலவை தான் கவிக்கோ. வைகை நதிக் கரையில் மலர்ந்து தமிழ்ப் பொய்கையில் அலர்ந்து தமிழ் மொழியின் ஊற்றில் ஊறித் திளைத்த ஓர் அனிச்ச மலர். 
 

அவர் மனிதத்தில் மகத்துவம் பார்த்த ஒரு மாபெரும் கவிச் சான்றோன்.. அந்த கவிக் கடலை உலகத் தமிழர்கள் இழந்து விட்டார்கள். அவர் இப்போது நம்மிடம் இல்லை.

தமிழர்களைப் பார்த்து அவர் ஒருமுறை வேதனைப்பட்டு எழுதினார். என் நினைவுகளில் இன்றும் நிழலாடுகிறது. அவர் சொன்னார்

உன் சிலம்பம் அதிகாரம் செய்தது அன்று –
இன்றோ அதிகாரக் கால்களில் சிலம்பாகிக் கிடக்கிறாயே

எப்பேர்ப்பட்ட சொல்லாடல்.



2017 ஜூன் மாதம் 2-ஆம் தேதி சென்னை பனையூரில் உள்ள அவருடைய வீட்டில் கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு நினைவு இழந்த நிலையில் அமரர் ஆனார். தமிழ் உலகம் ஓர் அரிய அழகிய அருமையான படைப்பாளனை இழந்து விட்டது.

அதற்கு முன்னர் ஈராண்டுகளுக்கு முன்னால் 2015 ஜனவரி 24-ஆம் தேதி கவிக்கோ அவர்களை உலகத் தமிழ்க் கவிஞர்கள் பெருவிழாவில் சந்தித்தேன். ஈப்போவில் நடைபெற்ற நிகழ்ச்சி. அவருடன் நீண்ட நேரம் உரையாடினேன்.

அந்த நினைவுகள் மனதிற்குள் இன்றும் பசுமை படர்ந்து பாசுரம் பாடுகின்றன. பட்டம் பதவி புகழ் அனைத்திற்கும் அப்பாற்பட்ட மனிதராகத் தெரிந்தார். பேச்சில் அழுத்தமான தாக்கங்கள். சொற்களில் தமிழின் வேர்த் தன்மைகள். சொல் உச்சரிப்பில் தமிழின் தொன்மைகள். பேசினால் பேசிக் கொண்டே இருக்கலாம் போலத் தோன்றியது.



என்னைப் புகழ்ந்து ஒரு கவிதையையும் எழுதிக் கொடுத்தார். மறக்க முடியவில்லை. மாபெரும் கவிதை அரசனின் கவிநயங்கள் என் உள்ளக் கிடக்கையில் இன்றும் அமிழ்ந்து ஆர்ப்பரிக்கின்றன.

வார்த்தைகளை ஒடுக்கி மடக்கி எழுதினால் அது கவிதை என்பார்கள். ஆனால் கவிக்கோ அப்படி அல்ல. ஒரு வாசகனின் மனதைச் சொடுக்கி முடுக்கி எழுதத் தெரிந்த வசீகரக் கலைஞன்.

வயதைப் பார்க்காதீர்கள். அந்த வயதிற்குப் பின்னால் நீண்டு நெளிந்து நளினம் காட்டும் ஓர் அரிய தமிழ் ஞானத்தின் அசைவுகளை அசை போட்டுப் பாருங்கள். அது போதும்.

இவருடைய தந்தையும் தாத்தாவும் சிறந்த உருது மொழிக் கவிஞர்கள். கல்லூரியில் கவிக்கோ தமிழைச் சிறப்புப் பாடமாக எடுத்துப் பயின்றார். இலக்கண, இலக்கியங்களை கற்றார். கவிதைகள் எழுதத் தொடங்கினார்.



தமிழ், ஆங்கிலம், அரபி, உருது, பாரசீகம், இந்தி ஆகிய பல மொழிகளிலும் புலமை பெற்ற இவர் சமஸ்கிருதமும் பயின்றவர்.

கவிக்கோ அப்துல் ரகுமான் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓர் அழகிய கவிஞர். ஓர் அருமையான தமிழ்ப் பேராசிரியர். கவிக்கோ என்பது கவியின் கோமகன். ஓர் அற்புதமான கவி மகன்.

மதுரையில் வைகை ஆற்றின் தென்கரையில் 1937 நவம்பர் 2-ஆம் தேதி மஹி – ஜைனத் பேகம் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார்.

தம் கவிதை வெளியீடுகளின் வாயிலாகப் புதுக்கவிதைத் துறையில் ஒரு புதிய பரிமாணத்தை உருவாக்கினார். பால்வீதி என்ற கவிதைத் தொகுதி மூலம் தம்மை ஒரு சோதனைப் படைப்பாளியாகவே இனம் காட்டிக் கொண்டார்.

அந்தத் தொகுதி வெளிவந்த போது கவிதையை நேரடியாகத் தராமல் உவமைகள், உருவகங்கள், படிமங்கள், குறியீடுகள் ஆகியவற்றின் வழி ஒரு புதுமையான பதிவு முறையை அமைத்துக் கொண்டார்.

அந்த வகையில் தமிழில் கவிதைக் குறியீடுகள் பற்றி ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றவர். தமிழில் ஹைக்கூ, கஜல் ஆகிய பிறமொழி இலக்கியங்களைப் படைப்பதிலும் சரி; பரப்பியதிலும் சரி; தனித்துவம் பெற்றவர். தமிழ்க் கவிதை உலகில் மிக மிக முக்கியமானவர்.

சிலேடை வார்த்தைகளால் கேட்போரைக் கவர்வது இவருடைய தனிப் பாணி. வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணி புரிந்தவர். அறிவுமதி போன்ற இளந்தலைமுறை கவிஞர்களுக்கு ஆசானாகவும் விளங்கியவர். ஆலாபனை எனும் கவிதைத் தொகுப்புக்காகச் சாகித்ய அகாடமி விருது பெற்றவர்.

தம் தொடக்கக் கல்வியையும் உயர்நிலைப் பள்ளிக் கல்வியையும் மதுரையில் உள்ள பள்ளிகளில் பெற்றார். பின்னர் மதுரை தியாகராசர் கல்லூரியில் சேர்ந்து இடைநிலை வகுப்பில் தேறினார். தொடர்ந்து அந்தக் கல்லூரியிலேயே பயின்று இளங்கலை, முதுகலை பட்டங்களைப் பெற்றார்.

அப்பொழுது முனைவர் மா. இராசமாணிக்கனார், ஔவை துரைசாமி, அ. கி. பரந்தாமனார், அவ்வை நடராசன், அ. மு. பரமசிவானந்தம் ஆகிய தமிழ் அறிஞர்களிடம் பயின்றார்.



சென்னை தரமணியில் அமைந்து உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் அதன் இயக்குநராகப் பணியாற்றியவர் ச. வே. சுப்பிரமணியம். அவரை வழிகாட்டியாகக் கொண்டார். புதுக்கவிதையில் குறியீடு என்னும் தலைப்பில் ஆய்வு செய்தார். சென்னைப் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். சொல்லி இருக்கிறேன்.

வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் பணியாற்ற அவருக்கு 1961 ஆம் ஆண்டில் ஒரு வாய்ப்பு கிடைத்து. அங்கே சிற்றுரையாளர், விரிவுரையாளர், பேருரையாளர், பேராசிரியர் எனப் படிப்படியாக உயர்ந்தார்.

1991-ஆம் ஆண்டில் விருப்ப ஓய்வு பெற்றார். 20 ஆண்டுகள் அந்தக் கல்லூரியின் தமிழ்த் துறையின் தலைவராகவும் பணியாற்றினார்.

கவிக்கோ பிறந்த நாள் கொண்டாடுவது இல்லை. இருந்தாலும் தமிழுலகம் அவரின் வாழ்ந்த நாட்களை பிறந்த நாட்களாகக் கொண்டாடுகின்றது. என்றைக்குமே அவரை மறக்காது.

‘கல்வி’ என்ற சொல்லின் வேர் ‘கல்’. ஆக ‘கல்’ என்றால் தோண்டுதல் என்று பொருள். அதாவது அறிவு என்பது மறைந்து இருக்கும் புதையல். அதைத் தோண்டி எடுப்பது கல்வி.

மண்ணுக்குள் மறைந்து இருக்கும் நீரைப் போல அறிவு மனிதனுக்குள் மறைந்து இருக்கிறது. மண்ணைத் தோண்டத் தோண்ட நீர் ஊற்று எடுத்துப் பெருகுவது போல் கற்கக் கற்க அறிவு ஊற்று எடுத்துப் பெருகும் என்கிறார் கவிக்கோ.

கவிதைக்குப் பொய்யழகு என்கிறார் கவிஞர் வைரமுத்து. அந்த வகையில் பொய்மைக்கு அழகு சேர்க்கிறார். பொய்க்கே ஓர் அழகு. பாரட்டலாம். ஆனால் வைரமுத்து சொல்வது பொய் என்று நான் நினைக்கிறேன். தப்பாக நினைக்க வேண்டாம். ஏன் தெரியுங்களா.

நான் பார்த்த வரையில் படித்த வரையில் கவிக்கோவின் கவிதைகள் மட்டும் ஏன் உண்மைகளையே பேச வேண்டும். கவிஞர்கள் எவரும் பொய்யாக உவமானம் காட்டவில்லை. ஓர் எடுத்துக்காட்டு. அவ்வளவு தான்.

கவிதைக்குப் பொய்யழகு என்று வைரமுத்து சொன்னாலும் கவிக்கோ இல்லை என்று சொல்கிறார். கவிதைக்கு உண்மை தான் அழகு என்கிறார்.

கவிக்கோ அப்துல் ரகுமானின் ஆலாபனை கவிதைத் தொகுப்பில் ஒரு கவிதை வருகிறது. கொடுக்கிறேன் எனும் தலைப்பில் அந்தக் கவிதை.

அதற்கு முன் ஒரு செய்தி. இந்தத் கவிதைத் தொகுப்பு தான் கவிக்கோவிற்கு சாகித்ய அகாடமி விருதையும் பெற்றுத் தந்தது.

கொடுக்கிறேன் என்று நினைப்பவனே!
கொடுப்பதற்கு நீ யார்?

நீ கொடுப்பதாக நினைப்பது எல்லாம்
உனக்குக் கொடுக்கப் பட்டது அல்லவா?

உனக்கு கொடுக்கப்பட்டது எல்லாம்
உனக்காக மட்டும் கொடுக்கப் பட்டது அல்ல

உண்மையில் நீ கொடுக்கவில்லை
உன் வழியாகக் கொடுக்கப் படுகிறது

நீ ஒரு கருவியே

கலைஞர் கருணாநிதி ஒரு முறை கவிக்கோவைப் பற்றி இப்படிச் சொன்னார். கவிக்கோ ரகுமானோ கன்னித் தமிழுக்குக் கிடைத்த வெகுமானம். அவரின் நகைச்சுவையோ நமக்குக் கிடைத்த பெருமானம். அதற்கு ஏற்றால் போல ஒரு நிகழ்ச்சி.

இயக்குனர் ஒருவர் கவிஞர் வாலியிடம் கன்னம் எனும் சொல்லுக்கு ஓர் எளிமையான வார்த்தையாகப் போடுங்கள் என்றாராம். கன்னம் என்பதே எளிமையானது தான். அதற்கு ஏன் இன்னும் எளிமை. வாலி சொல்லிப் பார்த்தார். இயக்குனர் கேட்கவில்லை.

என்ன செய்வது என்று புரியாமல் கவிக்கோவிடம் போய் கவிஞர் வாலி சொல்லி இருக்கிறார். அதற்கு கவிக்கோ சிரித்துக் கொண்டே சொன்னாராம். கேட்டவன் கன்னத்தில் ஒன்று போட வேண்டியது தானே. இது எப்படி இருக்கு.

சீதையின் அழகைக் கம்பன் பக்கம் பக்கமாக உருகி வடித்தான். கம்ப ராமாயணத்தில் படித்து இருப்பீர்கள். ஆனால் கவிக்கோ இரண்டே வரிகளில் சொல்லி முடிக்கிறார். அதுவும் இராவணன் சொல்வதாக;

இருகண் படைத்தவனே இவள் அழகில் எரிந்திடுவான்
இருபது கண் படைத்த நான் என் செய்வேன்

அம்புட்டுத்தான். வேறு பேச்சே இல்லை. எப்படிப்பட்ட சிந்தனை. பக்கவாட்டுச் சிந்தனை என்று சொல்வார்களே. அது இது தான் போல இருக்கிறது. அப்படித்தான் எனக்கும் தெரிகிறது.

தமிழகத்தின் இன்றைய நிலையை இப்படி நாசுக்காக கவிக்கோ சொல்கிறார்.

கங்கை கொண்டவன் தான் இன்று காவிரியையும் இழந்து விட்டு கையைப் பிசைந்து நிற்கிறான்.

பாரதியாரைப் பற்றி சொல்லும் போது பாவம் பாரதி...

தெருவெங்கும் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வோம் என்ற பாரதியே
வந்து பார் இப்போது தமிழ் தெருவில் தான் நிற்கிறது

என்கிறார்.

அடுத்து நடிகர்களையும் விட்டு வைக்கவில்லை. கவிக்கோ சொல்கிறார்.

இந்த நாட்டில் நடிப்பவர்கள்தான் தலைவர்கள் ஆகிறார்கள் அல்லது
தலைவர்களாக இருப்பவர்கள் தான் நடிக்கிறார்கள்

கூத்தாடிகளின் உண்மைகளைக் கூத்து ஆடாமலேயே போட்டு உடைக்கிறார்.

சிலப்பதிகாரம் இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட காப்பியம். கோவலன் என்ற குடிமகனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டது. இன்பியலும் துன்பியலும் கலந்து எழுதப் பட்டது. இயற்றியவர் இளங்கோ அடிகள்.

அந்தச் சிலப்பதிகாரத்தை இரண்டே இரண்டு தம்மாந்துண்டு வரிகளில் எழுதியவர் கவிக்கோ.

பால் நகையாள்; வெண்முத்துப் பல் நகையாள்; கண்ணகியாள்; கால் நகையால்; வாய் நகைபோய்; கழுத்து நகை இழந்த கதை

என்று சொல்கிறார். என்னே லாவண்யம்.

கவிக்கோ அன்பரே தமிழ் இலக்கியத்தின் வறுமைக் காலத்தில் உங்களின் மௌன முகாரியைத் துறந்தீர்கள். அப்போது தான் எங்களின் மூத்த மொழிக்கும் மோகனம் பிறந்தது.

அம்மிக் கொத்த மறுத்த சிற்பியே. நீ விட்டுச் சென்ற அழகான கவிச் சிற்பங்கள் எங்களுடன் எப்போதும் கதைகள் பேசும். இன்றும் பேசும். இனி என்றும் பேசும். சொர்க்கத்தின் வாசலில் உங்களின் கவிப் புன்னகையைக் காண்கின்றோம். வாழ்த்துகிறோம் கவிப்பெருமானே.

25 மே 2018

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம்

தமிழகத்தின் தென் கோடித் துறைமுக நகரம் தூத்துக்குடி. வரலாற்றுச் சுவடுகளில் முத்துக் குளிப்புக்குப் பெயர் பெற்ற இடம். கங்கைக் கொண்டான் கல்வெட்டுக்களில் 'தூற்றிக்குடி' என்று சொல்லப் படுகிறது.
 

நீர் நிறைந்த நிலத்தைச் சார்ந்த ஒரு துறைமுகத்தில் தோன்றிய ஊர் என்பதால் அதற்குத் தூத்துக்குடி என்று பெயர் வந்தது.

இந்தத் தூத்துக்குடியில் தான் இப்போது அனல் கக்கும் அசுரத் தனங்கள் அரங்கேற்றம் கண்டு வருகின்றன. ஒரு சில தினங்களுக்கு முன்னால் அப்பாவி மக்கள் 11 பேர் அட்டகாசமாகச் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளனர். ஓர் இளம்பெண் உள்பட பத்து பேர் பலி.

ஸ்டெர்லைட் ஆலை என்று சொல்லப்படும் ஸ்டெர்லைட் இன்டஸ்ட்ரீஸ் (Sterlite Industries)  தூத்துக்குடி மாவட்டத்தில் மீளவிட்டான் எனும் இடத்தில் அமைந்துள்ள ஒரு தொழிற்சாலை. வேதாந்தா ரிசோர்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமானது.
 

இங்கு செப்புக் கம்பி; கந்தக அமிலம்; பாஸ்பரிக் அமிலம் போன்றவை உற்பத்தி செய்யப் படுகின்றன.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகக் கடந்த 23 ஆண்டுகளாக அந்தப் பகுதி மக்கள் பல போராட்டங்களை நடத்தி வந்து இருக்கிறார்கள். ஆனால் இந்த அளவுக்கு நிலைமை மோசம் அடைந்தது இல்லை. அதற்கும் காரணம் உள்ளது.

உயிர்த் தியாகம் செய்யும் அளவுக்கு அவர்கள் ஏன் அப்படி போராட வேண்டும். நிச்சயம் காரணம் இருக்கிறது. சரி. விசயத்திற்கு வருவோம்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகக் கடந்த 23 ஆண்டுகளாகப் பல போராட்டங்களை அந்தப் பகுதி மக்கள் நடத்தி வருகிறார்கள். ஆனால் இந்த அளவுக்கு நிலைமை மோசம் அடைந்தது இல்லை. அதற்கும் காரணம் உள்ளது. உயிர் தியாகம் செய்யும் அளவுக்கு அவர்கள் போராட வேண்டிய ஒரு நிலை ஏற்பட்டு உள்ளது.
 

1990-களில் மஹாராஷ்டிரா, கோவா, குஜராத் போன்ற மாநிலங்களில் ஸ்டெர்லைட் ஆலை கட்டப் படுவதற்கு அனுமதி மறுக்கப் பட்டது. 1995-ஆம் ஆண்டு தமிழகத்தின் தூத்துக்குடிக்கு ஸ்டெர்லைட் ஆலை வந்து சேர்ந்தது. ஒரு சின்ன விளக்கம்.

1992-ஆம் ஆண்டு மஹாராஷ்டிரா மாநிலத் தொழில் வளர்ச்சி நிறுவனம் இந்த ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு முதலில் கடலோர ரத்னகிரி கிராமத்தில் 500 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியது.

ஆனால் அங்கே தொழிற்சாலை கட்டக் கூடாது என்று உள்ளூர் மக்கள் போராட்டம் செய்தனர். அதன் விளைவாக மஹாராஷ்டிரா மாநில அரசு ஓர் ஆய்வுக் குழுவை அமைத்தது.

அந்தக் குழுவினர் வழங்கிய பரிந்துரையின்படி 1993-ஆம் ஆண்டு கட்டுமானப் பணிகள் நிறுத்தப் பட்டன. அதற்கு பின்னர் தான் அந்த ஸ்டெர்லைட் நிறுவனம் கொல்லைப் புறமாகத் தமிழகத்திற்குப் பொடி நடையாக வந்து சேர்ந்தது.
 

மேலே முடியாது என்று சொல்லி விட்டார்கள். ஆனால் கீழே வாங்க வாங்க என்று சொல்லி வெற்றிலை பாக்கு வைத்து வீர வரவேற்பு கொடுத்தார்கள்.

அப்போதைய தமிழக அரசு ஆலையை அமைக்க அனுமதி அளித்தது மட்டும் அல்ல அவசர அவசரமாகச் சுற்றுச் சூழல் அனுமதிச் சான்றிதழையும் வழங்கியது.

மேசைக்கு அடியில் பணப்பட்டுவாடா என்று சொல்லப் படுகிறது. இருந்தாலும் தேன் எடுப்பவன் புறங்கையை நக்காமல் இருப்பானா. சொல்லுங்கள். மலேசியாவில் நடந்தது மாதிரி தேன்கூட்டையே கபளீகரம் செய்யவில்லையே.

அப்புறம் என்ன. ஆலை கட்டுவதற்கு அவசரம் அவசரமாகக் கையொப்பங்கள். 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாசுக் கட்டுபாடு வாரியம் இந்த ஸ்டெர்லைட் நிறுவனத்திற்குத் தடையில்லா சான்றிதழையும் வழங்கியது.
 

அப்போது தமிழகத்தின் முதல்வராகச் செல்வி ஜெயலலிதா இருந்தார். அதையும் சொல்லி விடுகிறேன்.

அப்புறம் அதன் பிறகு அங்கு என்னதான் நடக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள எவருக்கும் அக்கறை இல்லாமல் போய் விட்டது. அரசாங்கம் அடியோடு மறந்து விட்டது. மறக்கவில்லை. மறைத்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

`வேதாந்தா` உலகின் மிகப் பெரிய உலோகச் சுரங்கத் தொழில் நிறுவனம். அதன் உரிமையாளர் அனில் அகர்வால். பாட்னாவில் பிறந்தவர். பள்ளிப் படிப்பை முடித்ததும் 1972-ஆம் ஆண்டு தன் தந்தையுடன் அலுமினியத் தொழிலில் ஈடுப்பட்டார்.

அதன் பின்னர் அனில் அகர்வால் மும்பைக்குச் சென்று அங்கு வேதாந்தா எனும் நிறுவனத்தை தொடங்கினார்.
 

வேதாந்தாவின் துணை நிறுவனம் தான் இந்த ஸ்டெர்லைட். தூத்துக்குடியில் உள்ள ஆலை. ஓர் ஆண்டுக்கு 4 லட்சம் மெட்ரிக் டன் தாமிரத்தை உற்பத்தி செய்கிறது. 2017-ஆம் நிதியாண்டில் மட்டும் அதன் வர்த்தகம் 11.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள். அபரிதமான வளர்ச்சி.

வேதாந்தா நிறுவனத்திற்குப் பல நாடுகளில் தாமிரத் தாதுக்களை வெட்டி எடுக்கும் சுரங்கங்கள் இருக்கின்றன. ஆஸ்திரேலியா பாப்புவா நியூகினியிலும் சுரங்கங்கள் உள்ளன.

அங்கே இருந்து கப்பல்கள் வழியாகக் கொண்டு வரப்படும் தாமிரத் தாதுக்களில் இருந்து தாமிரத் தகடுகளை உருவாக்குவது தான் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் முக்கியத் தொழிலாகும்.

ஆனால் அந்த மாதிரி தாமிரத் தாதுக்களைத் தாமிரத் தகடுகளாக மாற்றும் போது தங்கம், சல்ப்யூரிக் அமிலம், பாஸ்பரிக் அமிலம் போன்ற ரசாயனப் பொருட்களும் கிடைக்கும். அந்த ரசாயனப் பொருட்களின் மூலமாக அதிக லாபம் கிடைக்கும் என்பது தான் வேதாந்தா நிறுவனத்தின் கணக்கு.

இந்த ஸ்டெர்லைட் ஆலை இயங்க ஆரம்பித்ததும் அந்த ஆலையில் இருந்து வெளியான நச்சுக் காற்றால் உள்ளூர் மக்கள் நேரடியாகப் பாதிக்கப் பட்டனர். அது உண்மையிலும் உண்மை.
 
அதன் விளைவாக தமிழகத்தின் சுற்றுச்சூழல் சமூக ஆர்வலர்கள் பலர் போராட்டத்தில் இறங்கினார்கள். ஏறக்குறைய 23 ஆண்டுகளாகப் பல்வேறு சட்டப் போராட்டங்களும் அமைதிப் போராட்டங்களும் அங்கே நடந்து உள்ளன.

ஸ்டெர்லைட் நிறுவனம் சூழலியல் மாசை உண்டாக்குவதாகக் குற்றம் சாட்டப் பட்டது. கம்யூனிஸ்ட் கட்சிகள் உட்பட பல தரப்புகளில் இருந்தும் வழக்குகள் பதியப் பட்டன.

1997-ஆம் ஆண்டில் இருந்து 2012-ஆம் ஆண்டு வரை அரசு ஒப்புதல்களைப் புதுப்பிக்காமல் ஆலையை நடத்தியது ஒரு பெரிய குற்றம் என்று அந்த நிறுவனத்தின் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இந்த வழக்கில் தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம் 2010-ஆம் ஆண்டு அந்த நிறுவனத்தை மூடச் சொல்லியது. இருந்தாலும் ஸ்டெர்லைட் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. வெற்றியும் பெற்றது.

நூறு கோடி அபராதம் கட்டிய பின்னர் அந்த நிறுவனம் தொடர்ந்து செயல் படலாம் என அனுமதி வழங்கப் பட்டது.

ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியாகும் அமிலங்களை முறையாகக் கையாளா விட்டால் அந்த அமிலங்கள் சுற்றுச் சூழலுக்கும்; பொது மக்களுக்கும் பெரும் ஆபத்தை உண்டாக்கும்.

ஆனாலும் எந்த ஒரு சுற்றுச்சூழல் கண்காணிப்பும் இல்லாமல்; பொறுப்பும் இல்லாமல் அந்த நிறுவனம் தன் இஷ்டத்திற்குச் செயல்பட்டு வந்தது. அதனால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

ஏன் இப்போதைக்கு இந்த திடீர் போராட்டம்? அந்த நிறுவனம் தொடங்கப்பட்ட நாளில் இருந்து அங்கு உள்ள மக்கள் அனைத்து வழிகளிலும் போராடி வருகிறார்கள்.
 

கடந்த சனிக்கிழமை நடந்த போராட்டம் அந்த நிறுவனத்தின் விரிவாக்கத்தை எதிர்த்து நடந்தது தான். அதாவது அந்தத் தொழிற்சாலையை மேலும் பெரிதாகக் கட்ட திட்டம் போட்டு இருந்தார்கள். இரண்டாவது ஆலையைக் கட்டுவதற்கு பிளேன் போட்டு செய்து கொண்டு இருந்தார்கள்.

அந்த நிறுவனத்தின் தற்போதைய உற்பத்தி திறன் ஆண்டிற்கு 4 லட்சம் டன். அதுவே இப்போதைக்கு மோசமான சூழலியல் விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் மேலும் கூடுதலாக ஓர் ஆண்டிற்கு 4 லட்சம் டன் தாமிர உற்பத்தி செய்யும் அளவுக்கு அந்தத் தொழிற்சாலையை இழுத்துக் கட்டுவது என அந்த நிறுவனம் முடிவு செய்தது.

அது நிச்சயமாக மேலும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று பொதுமக்கள் கருதுகிறார்கள். ஆக இரண்டாவது ஆலை கட்டும் பணிகளை ஸ்டெர்லைட் நிறுவனம் மேற்கொண்ட போது தான் குமரெட்டியாபுரம் கிராம மக்கள் போரட்டத்தில் இறங்கினார்கள்.
 

ஏற்கனவே செயல்பட்ட ஆலையில் 4 லட்சம் டன் தாமிரத் தகடுகள் உற்பத்தி செய்யப் பட்டன. புதிய ஆலையில் அதைவிட நான்கு மடங்கு அதிகமாக உற்பத்தி செய்ய அனுமதி வழங்கப் பட்டது. அதுவே பொதுமக்களின் வயிற்றில் புளியைக் கரைத்தது.

அதுதான் கிராம மக்கள் கொந்தளித்துப் போனதற்கு காரணம். அதனால் நடந்த போராட்டங்களின் போது தான் துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் உயிர் இழந்து உள்ளனர். இருப்பினும் போராட்டம் தொடர்ந்து நடக்கிறது.

அனுதினமும் செத்துச் செத்துப் பிழைக்கும வகையில் தூத்துக்குடி மக்களின் வாழ்க்கை அமைந்து விட்டது. எதிர்கால சந்ததியினரின் நிலைமை என்னவாகும் என்பதும் அவர்களைச் சுற்றி வரும் ஒரு மில்லியன் டாலர் கேள்வி.
 

அந்தக் கேள்விக்கு விடை காணும் வகையில் தான் தங்கள் உயிரையும் துச்சமாகக் கருதிப் போராட்டத்தில் இறங்கினார்கள். அநியாயமாகப் பலம் உயிர்களைப் பறி கொடுத்தும் இருக்கிறார்கள்.

இந்த ஸ்டெர்லெட் பிரச்சினையில் இருந்து தூத்துக்குடி மக்கள் விடுபட வேண்டும். பழைய சுமுகமான வாழ்க்கை நிலைக்கு திரும்பி வர வேண்டும் என மலேசியத் தமிழர்களாகிய நாம் வேண்டிக் கொள்கிறோம்.