10 செப்டம்பர் 2020

கலிங்கா பேரரசு இந்தோனேசியா

இந்தோனேசியா, மத்திய ஜாவா, பெக்காலோங்கான் (Pekalongan) நகரம், ஜெப்பாரா (Jepara Regency) மாநிலம்; கெலிங் (Keling) துணை மாநிலம். இங்கே தான் 6-ஆம்; 7-ஆம் நூற்றாண்டுகளில் புகழ் பெற்ற கலிங்கா பேரரசு, 200 ஆண்டுகள் ஆட்சி செய்தது. கி.பி. 650-ஆம் ஆண்டில் இருந்து கி.பி. 850-ஆம் ஆண்டு வரை ஆட்சி.  

மேலை நாட்டவரும் இந்தோனேசியர்களும் கலிங்கா பேரரசு (Kalingga Kingdom) என்று அழைக்கிறார்கள். தமிழர்கள் இந்தோனேசியக் கலிங்கப் பேரரசு என்று அழைக்கிறார்கள்.

இந்தோனேசியாவை ஆட்சி செய்த கூத்தாய் பேரரசு (Kutai Kingdom); தர்மநகரா பேரரசு (Tarumanagara Kingdom); மேடாங் பேரரசு (Medang Kingdom); சைலேந்திரா பேரரசு (Shailendra Kingdom); ஸ்ரீ விஜய பேரரசு (Srivijaya Kingdom); மஜபாகித் பேரரசு ஆகியவற்றின் முன்னோடிப் பேரரசு இந்தக் கலிங்கப் பேரரசு. [#1]

[#1]. Kalingga Kingdom was the earliest Hindu-Buddhist kingdom in Central Java, and together with Kutai and Tarumanagara are the oldest kingdoms in Indonesian history. Kalingga existed between the 6th and 7th centuries, and it was one of the earliest Hindu-Buddhist kingdoms established in Java.

[#1]. Source: Chang Chi-yun. "Eastern Asia in the Sui and T'and Period". Historical Atlas of China. Vol. 1. Taipei: Chinese Culture University Press, 1980. p. 49

கலிங்கப் பேரரசின் ஆட்சி காலத்தில் ஜாவாவின் கிழக்குப் பகுதியில் மேடாங் பேரரசு உருவானது. காலப் போக்கில் இந்த இரு பேரரசுகளும் ஒன்றாக இணைந்தன. மேடாங் பேரரசு என்பது புதிய தோற்றம்.

தொடக்கக் காலத்தில் கலிங்கப் பேரரசு இந்து மதம் சார்ந்த அரசாக இருந்தது. புத்த மதம் பரவியது. அதனால் இந்தப் பேரரசு புத்தம் சார்ந்த பேரரசாக மாற்றம் கண்டது.

கலிங்கா பேரரசு என்பதில் கலிங்கம் எனும் வேர்ச் சொல் உள்ளது. அதில் இருந்து தான், இந்தோனேசியாவில் இப்போது இருக்கும் கெலிங் துணை மாநிலத்திற்கும் பெயர் வந்தது. கலிங்கா எனும் சொல்லில் அழகு பார்க்கிறார்கள்.

கலிங்கப் பேரரசின் இரகசியங்கள் சீன நாட்டு வரலாற்றுப் பதிவுகளில் உள்ளன. கி.பி. 618-ஆம் ஆண்டில் இருந்து கி.பி. 907-ஆம் ஆண்டு வரை 289 ஆண்டுகளுக்குச் சீனாவை தாங் வம்சாவழியினர் (Tang Dynasty) ஆட்சி செய்தனர்.

கி.பி. 664-ஆம் ஆண்டு உய்நிங் (Huining) எனும் சீன புத்த துறவி இந்தோனேசியாவின் கலிங்க நாட்டில் மூன்று ஆண்டு காலம் தங்கி இருக்கிறார்.

அவர் கலிங்க நாட்டில் இருந்த போது அதே கலிங்க நாட்டுப் புத்த துறவி ஜனபத்ரா (Jana Patra) என்பவருடன் புத்த ஆகம நூல்களை (Buddhist Hinayana scriptures) மொழிபெயர்ப்பு செய்து இருக்கிறார். [#2]

[#2]. In 664 a Chinese Buddhist monk named Huining had arrived in Heling and stayed there for about three years. During his stay, and with the assistance of Jnanabhadra, a Heling monk, he translated numerous Buddhist Hinayana scriptures

[#2]. Source: Drs. R. Soekmono (1973). Pengantar Sejarah Kebudayaan Indonesia 2, 2nd ed. Yogyakarta: Penerbit Kanisius. p. 37.

கி.பி. 674-ஆம் ஆண்டு கலிங்க நாட்டை சீமா (Queen Shima) எனும் ராணியார் ஆட்சி செய்தார். இவர் திருடு; கொள்ளைகளுக்கு எதிராக மிகக் கடுமையான சட்டங்களை இயற்றியவர்.

கி.பி. 742-ஆம் ஆண்டில் இருந்து 755-ஆம் ஆண்டுகளில் சைலேந்திரா பேரரசு ஜாவா தீவில் கால் பதித்து வளர்ச்சி கண்டது. அந்தத் தாக்கத்தில் கலிங்கப் பேரரசு சன்னம் சன்னமாய்ச் சிதைந்தும் போனது.

கலிங்கா பேரரசு காலத்துக் கல்வெட்டுகள்.

(Tukmas 1)# துக்மாஸ் கல்வெட்டு (Tukmas inscription) 7-ஆம் நூற்றாண்டு - பல்லவ சமஸ்கிருத எழுத்துகள். கண்டு எடுக்கப்பட்ட இடம்: மெராப்பி எரிமலையின் அடிவாரம்

(Tukmas 1)# Tukmas inscription was discovered on the western slope of Mount Merapi, at Dusun Dakawu, Lebak village

(Sojomerto 2)# சொஜோ மெர்தோ கல்வெட்டு (Sojomerto inscription) 7-ஆம் நூற்றாண்டு - காவி பழைய மலாய் எழுத்துகள். கண்டு எடுக்கப்பட்ட இடம்: மத்திய ஜாவா.

(Sojomerto 2)# Sojomerto inscription, discovered in Sojomerto village, Kecamatan Reban, Batang Regency, Central Java. It is written in Kavi script in Old Malay language

கலிங்கர்கள் கட்டிய கோயில்கள்: தியாங் பள்ளத்தாக்கு (Dieng Plateau) கோயில்கள்; கெடோங் சொங்கோ (Gedong Songo) கோயில்கள். இந்து கோயில்கள்.

இந்தோனேசியாவின் கலிங்கா பேரரசு என்பது இக்கரையில் வாழும் இந்தியர்களுக்கு ஒரு வரலாற்றுப் பிரசாதம். வந்தேறிகள் என்பதைப் புறம் தள்ளும் ஒரு வரலாற்று வரப்பிரசாதம்.

யார் வந்தேறிகள். 1500 ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு நாட்டை ஆட்சி செய்தவர்கள் வந்தேறிகளா? அந்த நாட்டில் இருந்து புலம் பெயர்ந்தவர்கள் வந்தேறிகளா?

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
10.09.2020



09 செப்டம்பர் 2020

மஜபாகித் மகாராணியார் சுகிதா - 1

 தமிழ் மலர் - 09.09.2020

இந்தோனேசிய வரலாற்றில் இந்திய வம்சாவழிப் பெண்கள் மாபெரும் பெருமைகளைப் படைத்து இருக்கிறார்கள். மாபெரும் வரலாறுகளைப் படைத்து இருக்கிறார்கள். மாபெரும் மகாராணிகளாய் இமயம் பார்த்து இருக்கிறார்கள். பெண்மையின் உச்சங்கள். இதிகாசங்கள் போற்றும் சத்தியச் சீலங்கள்.  

இந்திய வம்சாவழியைப் பின்னணியாகக் கொண்ட இந்தோனேசியாவை ஆட்சி செய்த மகாராணியார்களின் பட்டியல் வருகிறது. அதில் மிக முக்கியமானவர்கள்:

1. சீமா சத்தியா மகாராணியார் (Queen Shima Satya); கலிங்கப் பேரரசு (கி.பி. 674)

2. பிரேமதா வர்த்தனி மகாராணியார் (Pramodhawardani); சைலேந்திரா பேரரசு கி.பி. 833 - கி.பி. 856)

2. இசையானா துங்கா விஜயா மகாராணியார் (Isyana Tunggawijaya); மேடாங் பேரரசு (கி.பி. 947)

3. ஆர்ஜெயா ஜெயகீர்த்தனா மகாராணியார் (Arjaya jayaketana); பாலி பேரரசு (கி.பி. 1200)

4. திரிபுவன விஜயதுங்கா தேவி மகாராணியார் (Tribhuwana Wijayatunggadewi); மஜபாகித் பேரரசு (கி.பி. 1328 - 1350)

5. சுகிதா மகாராணியார் (Suhita); மஜபாகித் பேரரசு (கி.பி. 1429 - 1447)

6. ரத்னா காஞ்சனா மகாராணியார் (Queen Kalinyamat); கல்யாணமதா சிற்றரசு (கி.பி. 1549)

இவர்களில் மகாராணியார் சீமா சத்தியா பற்றி ஏற்கனவே தெரிந்து கொண்டோம். இன்றைக்கு மகாராணியார் சுகிதா (Suhita) பற்றி தெரிந்து கொள்வோம்.

மகாராணியார் சுகிதாவிற்கு சொகித்தா (Soheeta) என்று மற்றொரு பெயர் உண்டு. சீனர்கள் இவரை சு கிங் தா (Su King Ta) என்று அழைத்து இருக்கிறார்கள். இவரின் பூர்வீகம் இந்தோனேசியா, ஜாவா தீவு.

இவருடைய கணவரின் பெயர் பரமேஸ்வரா இரத்தின பங்கஜன் (Parameswara Ratnapangkaja). இந்த பரமேஸ்வரா இரத்தின பங்கஜன் என்பவர் வேறு. மலாக்காவை ஆட்சி செய்த பரமேஸ்வரா மகா ராஜா என்பவர் வேறு.

சுகிதா மகாராணியார்

இந்தோனேசிய வரலாற்றில் இந்திய வம்சாவழி அரசர்கள் பலருக்கு பரமேஸ்வரா எனும் பெயர் சூட்டப்பட்டு இருந்தது. பெருமைக்கு உரிய அரச விருதுப் பெயராகக் கருதப் பட்டது. அன்றையக் காலக் கட்டத்தில் பரமேஸ்வரா என்று பெயரைக் கொண்டவர்கள் பெரும்பாலும் பல்லவ இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள்.  

சுகிதா மகாராணியாரின் ஆட்சிக் காலம் கி.பி. 1427 - கி.பி. 1447. இருபது ஆண்டுகள். கி.பி. 1427-ஆம் ஆண்டில் இருந்து கி.பி. 1437-ஆம் ஆண்டு வரை தன் கணவர் இரத்தின பங்கஜனுடன் இணைந்து மஜபாகித் அரசை ஆட்சி செய்தார்.

கி.பி. 1437-ஆம் ஆண்டு அவருடைய கணவர் இரத்தின பங்கஜன் இறந்து விட்டார். அதன் பின்னர் யாருடைய துணையும் இல்லாமல் தன்னிச்சையாக நின்று மஜபாகித் பேரரசை சுகிதா ஆட்சி செய்து இருக்கிறார். இவர் காலத்தில் இரண்டு முன்று போர்கள் நடந்து உள்ளன. இவரே தன்னுடைய குதிரைப் படைகளுக்குத் தலைமை தாங்கி போர்க் களத்தில் தன் உயிரைப் பணயம் வைத்து இருக்கிறார்.

 விக்ரமவர்தனா

போர்க் களத்தில் காயங்கள் ஏற்பட்டு உள்ளன. அதனால் அவர் உடல்நிலையும் பாதிக்கப் பட்டது. கணவர் இறந்த பத்து ஆண்டுகளில் இவரும் இறந்து போனார். போர்க் களத்தில் ஏற்பட்ட காயங்களின் தாக்கம் ஒரு காரணமாக இருக்கலாம்.

சுகிதாவின் வீர தீரச் செயல்களை மையமாகக் கொண்டு 2013-ஆம் ஆண்டு, இந்தோனேசியாவில் ஒரு திரைப்படம் தயாரிக்கப் பட்டது. அதன் தலைப்பு ’பேரரசின் சிம்மாசனம்’ (The Empire's Throne). அதில் சுகிதாவின் கதாபாத்திரத்தில், இந்தோனேசியத் திரையுலகப் புகழ் லிவி செங் (Livi Zheng) நடித்து இருந்தார். அந்த அளவிற்குப் புகழ் பெற்றவர் சுகிதா மகாராணியார்.

இவருடைய கணவரின் பெயர் பரமேஸ்வரா இரத்தின பங்கஜன். ஒரு சின்ன விளக்கம். இந்தக் காலக் கட்டத்தில் மலாக்கா பரமேஸ்வரா இல்லை. அவர் இறந்து இருபது ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டன. அவருடைய பேரன் முகமட் ஷா எனும் மகா ராஜா என்பவர்தான் மலாக்காவை ஆட்சி செய்து கொண்டு இருந்தார்.

கஜா மாடா

மஜபாகித் அரசர்களில் சுகிதா ஆறாவது ஆட்சியாளர். இவரின் தந்தையார் விக்ரமவர்தனா (Wikramawardhana). மஜபாகித் பேரரசின் ஐந்தாவது ஆட்சியாளர்.

மஜபாகித் பேரரசர்கள் பட்டியல்

1. ராடன் விஜயன் ஜெயவர்தனா (Raden Vijaya Jayawardhana 1293 – 1309)

2. ஜெயநகரன் (Jayanegara 1309 — 1328)

3. திரிபுவன விஜயதுங்கா தேவி ஸ்ரீ கீதாஜா (Tribhuwana Wijayatunggadewi Sri Gitarja 1328 — 1350)

4. ஹாயாம் ஊரூக் ஸ்ரீ ராஜாசா நகரன் (Hayam Wuruk Sri Rajasanagara 1350 — 1389)

5. விக்ரமவர்தனா (Wikramawardhana 1389 – 1429)

6. சுகிதா (Suhita Soheeta 1429 – 1447)

7. கீர்த்த விஜயா (Kretawijaya 1447 – 1451)

8. ராஜசவர்த்தனா (Rajasawardhana 1451 – 1453)

9. பூர்வ வைசேஷா கிருஷ்வ வைசேஷா (Purwawisesha Girishawardhana 1456 – 1466)

10. சிங்க விக்ரம வர்த்தனா (Singha Wikrama Wardhana Sura Prabhawa Brawijaya IV 1466 – 1468)

11. கீர்த்தபூமி (Kertabhumi – 1468 – 1478)

12. கிரிந்திர வர்த்தனா (Girindrawardhana 1478 – 1489)

13. பிரபு உத்திரன் (Prabu Udara 1489 – 1517)

சுகிதாவின் தந்தையார் விக்ரமவர்தனா ஆட்சிக் காலத்தில் தான் சிங்கப்பூர் மீதான் மஜபாகித் படையெடுப்பு நடந்தது.[#1] 1398-ஆம் ஆண்டு. அப்போது சிங்கப்பூரை பரமேஸ்வரா ஆட்சி செய்து கொண்டு இருந்தார். அதாவது மலாக்காவைத் தோற்றுவித்த பரமேஸ்வரா.

[#1]. The kings of Singapore. (1948, February 26). The Straits Times, p. 4.

[#1]. https://eresources.nlb.gov.sg/newspapers/Digitised/Article/straitstimes19480226-1.2.30

சுகிதா தாயாரின் பெயர் பிரே மஜபாகித் (Bhre Majapahit). [#2] இவரைப் பற்றிய தெளிவான விவரங்கள் கிடைக்கவில்லை. மஜபாகித் வரலாற்றில் பிரே மஜபாகித் என்பவர் மிக முக்கியம் இல்லாதவராக இருக்கலாம். அதனால் வரலாற்று ஆசிரியர்கள் அவருக்கு முக்கியத்துவம் வழங்காமல் போய் இருக்கலாம். என் தனிப்பட்ட கருத்து.

[#2]. Coedes, George (1968). The Indianized states of Southeast Asia. University of Hawaii Press. Page: 242.

1404-ஆம் ஆண்டில் இருந்து 1406-ஆம் ஆண்டு வரையில் மஜபாகித் பேரரசில் ஓர் உள்நாட்டுப் போர். அதற்கு பரேகிரே உள்நாட்டுப் போர் (Paregreg civil war) என்று பெயர். மஜபாகித் பேரரசில் அப்போது இரு கோஷ்டிகள் இருந்தன.

ஒன்று மேற்குப் பிரிவு வலது சாரி மஜபாகித். மற்றொன்று கிழக்குப் பகுதி இடது சாரி மஜபாகித். எப்படி இரு பிரிவுகள் என்பது ஒரு பெரிய கதை. ஒரு குழப்படியான கதை.

சுகிதாவின் தந்தையார் விக்ரமவர்தனா வலது சாரி தலைவர். அப்போது அந்தக் கட்டத்தில் அவர் மஜபாகித் அரசராக இருந்தார். நினைவில் கொள்வோம். இடது சாரி பிரிவிற்கு பிரபு வீரபூமி (Bhre Wirabhumi) என்பவர் தலைவர். இவர் மகாராணியார் சுகிதாவின் தாய்வழி தாத்தா.

Bhre என்றால் பிரபு என்று பொருள். ஆண் பெண் இரு பாலருக்கும் பயன்படுத்தப்பட்ட பெருமைப் பெயர். வீரபூமி இருக்கிறாரே இவர், கிழக்கு ஜாவாவில் மதுரா அரசைத் தோற்றுவித்த ஆரிய வீரராஜாவின் வழித்தொன்றல் ஆகும். சரி.

1290-ஆம் ஆண்டுகளில் கிழக்கு ஜாவாவில் சிங்காசாரி எனும் ஓர் அரசு இருந்தது. அது ஒரு பேரரசு. அதன் பேரரசர் கருத்தநாகரன் (Kertanegara). அந்தச் சிங்காசாரி அரசின் கீழ் கெடிரி எனும் ஒரு சிற்றரசு (Kediri Kingdom) இருந்தது. கெடிரியின் அரசராக ஜெயகாதவாங்கன் (Jayakatwang) என்பவர் இருந்தார்.

அதே காலக் கட்டத்தில் இந்தோனேசியாவின் மதுரா தீவை ஆரியா வீரராஜன் (Arya Viraraja) என்பவர் ஆட்சி செய்து வந்தார். மதுரா தீவு என்பது ஜாவா தீவின் வட கிழக்குக் கரை ஓரத்தில் இருந்தது. இன்னும் இருக்கிறது.

கெடிரி சிற்றரசின் அரசராக இருந்த ஜெயகாதவாங்கன், மதுரா தீவின் ஆரிய வீரராஜனுடன் இணைந்து இரகசியமாக ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டார். அதாவது சிங்காசாரி அரசிற்கு எதிராகக் கிளர்ச்சிகள் செய்ய வேண்டும். செய்து எப்படியாவது சிங்காசாரி அரசைக் கைப்பற்ற வேண்டும் எனும் ஒப்பந்தம்.

Monumental sculpture found in Tulungagung Regency,
East Java has been identified as of Suhita

அதன் பின்னர் சிங்காசாரி அரசின் மீது  தாக்குதல்கள். கெடிரி அரசு வடக்கில் இருந்தும்; தெற்கில் இருந்தும் ஒரே சமயத்தில் சிங்காசாரியைத் தாக்கியது. மதுரா அரசு கிழக்கில் இருந்து தாக்கியது. மூன்று பக்கங்களில் இருந்து தாக்குதல்கள்.

அப்போது சிங்காசாரி அரசின் பேரரசர் கருத்தநாகரன். சொல்லி இருக்கிறேன். இவருடைய மருமகன் ராடன் விஜயன் (Raden Vijaya). ஒரு பெரிய போர்ப் படையுடன் ராடன் விஜயன் போர் முனைக்கு அனுப்பி வைக்கப் பட்டார். ராடன் விஜயனின் அசல் பெயர் சங்கர ராம விஜயன் (Nararya Sanggramawijaya).

வடக்கில் இருந்த வந்த கெடிரியின் தாக்குதலை ஓரளவிற்குக் கட்டுப்படுத்த முடிந்தது. ஆனாலும் தெற்கில் இருந்து வந்த தாக்குதலை ஒன்றும் செய்ய முடியவில்லை. சிங்காசாரி நகர் வீழ்ந்தது. பேரரசர் கர்த்தநாகரன் பிடிபட்டார். நரபலி எனும் பெயரில் கொலை செய்யப் பட்டார்.

அத்துடன் சிங்காசாரி எனும் மாபெரும் அரசு இந்தோனேசிய வரலாற்றில் இருந்து அழிந்து போனது. கருத்தநாகரனின் மருமகன் ராடன் விஜயன் என்று சொல்லி இருக்கிறேன். இந்த ராடன் விஜயனின் தந்தையார் பெயர் ராக்கையன் ஜெயதர்மா (Rakeyan Jayadarma).

இந்த ராக்கையன் ஜெயதர்மா என்பவர் மேற்கு ஜாவாவில் இருந்த (Sunda Kingdom) சுந்தா பேரரசைச் சேர்ந்தவர். சுந்தா பேரரசு கி.பி. 669-ஆம் ஆண்டில் இருந்து கி.பி. 1579 வரை மேற்கு ஜாவாவில் கோலோச்சிய மற்றொரு மாபெரும் இந்தியர் வம்சாவழி அரசு.

ராடன் விஜயனின் தாயார் தியா லெம்பு தாழ் (Dyah Lembu Tal). இவர் சிங்காசாரி அரசைச் சார்ந்தவர். இவருடைய தந்தையாரின் பெயர் பத்திர நரசிங்கமூர்த்தி (Bhatara Narasinghamurti).

ஒரு கட்டத்தில் ராடன் விஜயனின் தந்தையார் ராக்கையன் ஜெயதர்மா, விசம் வைத்துக் கொல்லப் பட்டார். அதனால் ராடன் விஜயனின் தாயார் தன் மகன் விஜயனை அழைத்துக் கொண்டு அவரின் பிறப்பிடமான சிங்காசாரி அரசிற்கே திரும்பி வந்து விட்டார்.

அதன் பின்னர் கருத்தநாகரனின் மகளை ராடன் விஜயன் திருமணம் செய்து கொண்டார். கருத்தநாகரனின் மகளின் பெயர் காயத்திரி ராஜபத்தினி (Gayatri Rajapatni).

(Ricklefs, Merle Calvin (1993). A history of modern Indonesia since c. 1300 (2nd ed.). Stanford University Press / Macmillans.)

சிங்காசாரி அரசு வீழ்ந்ததும் சிங்காசாரி அரசர் கருத்தநாகரன் கொல்லப் பட்டார். சரி. மாமனார் கருத்தநாகரனின் இறப்பிற்கு இழப்பீடாக அவருடைய மருமகன் ராடன் விஜயனுக்கு, ஜாவா காட்டுப் பகுதியில் சின்னதாக ஒரு நிலப் பகுதி வழங்கப் பட்டது. அந்த நிலம் கிழக்கு ஜாவாவில் துரோவுலான் (Trowulan) மாவட்டத்தில் இருந்தது.

ராடன் விஜயன் அந்தக் காடுகளை அழித்து ஒரு புதுக் குடியிருப்பாக மாற்றினார். இந்தக் காட்டுப் பகுதி தான் மஜபாகித் எனும் பெயர் பெற்றது. 1293-ஆம் ஆண்டில் சிங்காசாரி அரசுடன் போர் செய்து அந்த அரசைக் கைப்பற்றினார். ராடன் விஜயன் கைப்பற்றிய சிங்காசாரி அரசு தான் பின்னர் மஜபாகித் என பெயர் பெற்றது. ராடன் விஜயன் 1309-ஆம் ஆண்டில் காலமானார்.

அதன் பின்னர்தான் மஜபாகித் ஆட்சியில் குழப்பங்கள். அரசுரிமைப் போராட்டங்கள். ஓர் உண்மையைச் சொல்லலாம். இந்தோனேசியாவில் இந்தியர்களின் ஆளுமை அழிந்து போனதற்கு என்ன காரணம் தெரியுங்களா?

அரசியல், அதிகாரம், அகம்பாவம், ஆணவம், ஆளுமை, இறுமாப்பு, தலைக் கனம், மமதை. ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு செத்துப் போனது தான் மிச்சம். (தொடரும்)   

(தொடரும்)

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
09.09.2020




தர்மநகரா பல்கலைக்கழகம் இந்தோனேசியா

இந்தோனேசியாவை ஆட்சி செய்த அரசுகளில் மிக முக்கியமானது தர்மநகரா பேரரசு (Tarumanagara Kingdom). 5-ஆம் நூற்றாண்டில் ஜாவா தீவில் ஜகார்த்தா நகரை மையமாகக் கொண்ட அரசு. இந்த அரசை தோற்றுவித்தவர் பூர்ணவர்மன் (Purnawarman). ஆட்சிக்காலம் கி.பி. 358 - 669. இந்தோனேசியாவில் தோன்றிய மூன்றாவது பேரரசு.

இந்தப் பேரரசின் நினைவாக இந்தோனேசியாவில் ஒரு பல்கலைக்கழகத்தை உருவாக்கி இருக்கிறார்கள். 1959-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அதன் பெயர் தர்மநகரா பல்கலைக்கழகம் (Tarumanagara University - Universitas Tarumanagara (UNTAR). 2017-ஆம் ஆண்டு மிகச் சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாகத் தேர்வு செய்யப்பட்டது.

In 2017 UNTAR received an accreditation A (Excellent) from the Government's National Accreditation Board (BAN-PT).

தர்மநகரா பல்கலைக்கழகம் (Tarumanagara University), இந்தோனேசியாவில் பழைமை வாய்ந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். 2014-ஆம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி 14,785 மாணவர்கள் பல்வேறு துறைகளில் பயின்று வருகிறார்கள்.

தர்மநகரா பல்கலைக்கழகம் நான்கு வளாகங்களைக் கொண்டு உள்ளது. வளாகம் I (பிரதான வளாகம்); வளாகம் II; இவை இரண்டும் மேற்கு ஜகார்த்தா பெருநகரப் பகுதியில் உள்ளது. மூன்றாம் வளாகம் தெற்கு ஜகார்த்தாவில் உள்ளது.

தற்போது கட்டுமானத்தில் வளாகம் IV உள்ளது. 130 ஹெக்டேர் பரப்பளவு. இதற்காக ஜகார்த்தா மாநகரின் புறநகர்ப் பகுதியில் ஒரு நகரத்தையே உருவாக்கி இருக்கிறார்கள். அதன் பெயர் தர்மநகரா நகரம் (Tarumanagara City).

ஜகார்த்தாவில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில், கரவாச்சி எனும் இடத்தில் அந்தச் செயற்கை நகரம் உருவாக்கப்பட்டு வருகிறது.

தர்மநகரா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பூர்ண ஈரவான் (Prof. Dr. Ir. Agustinus Purna Irawan).

There are eight faculties and a post-graduate program in the university.

Faculty of Economics
Faculty of Law
Faculty of Engineering
Faculty of Medicine
Faculty of Psychology
Faculty of Arts and Design
Faculty of Information Technology
Faculty of Communications Science

தர்மநகரா பேரரசின் நினைவாக இந்தப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டு உள்ளது. ஜகார்த்தா மாநகரை மையமாகக் கொண்டது. அதனால் அதே இடத்தில் இந்தப் பல்கலைகழகத்தையும் கட்டி இருக்கிறார்கள்.

இனவாதமும் மதவாதமும் பிடிவாதமாக இருந்தால் தீவிரவாதம் தலைவிரித்தாடும். இதை ஒவ்வோர் அரசாங்கமும் தெரிந்து கொள்ள வேண்டும். தனிநபர் பெருமைக்காகவும்; தனிநபர் குடும்பச் சுகத்திற்காகவும் நாட்டு ஒற்றுமையைச் சீர்குலைப்பதால் ஒரு நாடு முன்னேற்றம் அடையாது.

இந்தோனேசியர்கள் வரலாற்றை வரலாறாகப் பார்க்கிறார்கள். அந்த  வரலாற்றில் உள்ள இந்திய ஆளுமைகளைப் போற்றுகிறார்கள். மரியாதை செய்கிறார்கள். வாழ்க தர்மநகரா பேரரசு. வளர்க தர்மநகரா பல்கலைக்கழகம்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
09.09.2020

சான்றுகள்:

1. https://en.wikipedia.org/wiki/Tarumanagara_University

2. http://untar.ac.id/pages/index

3. http://untar.ac.id/pages/sambutanrektor



08 செப்டம்பர் 2020

மஜபாகித் பேரரசு - 3

தமிழ் மலர் - 08.09.2020

இந்தோனேசியர்கள் தங்களின் பூர்வீக ஜாவா தீவை உணர்வு பூர்வமாகப் பூமி ஜாவா (Bhumi Jawa) என்றும்; ஜாவா மண்டலம் (Mandala Jawa) என்றும் அழைக்கிறார்கள். தவிர மஜபாகித் பேரரசை வில்வதீக்தா (Wilwatikta) என்றும் அழைக்கிறார்கள். வில்வதீக்தா என்பது ஒரு சமஸ்கிருதச் சொல்.

ராடன் விஜயன் (Raden Wijaya) என்பவர் தான் மஜபாகித் பேரரரசை உருவாக்கியவர். இவருடைய அசல் பெயர் நாராரியா சங்கரமா விஜயா (Nararya Sangramawijaya). சிங்காசாரி அரசின் இளவரசர் மகிசா செண்பகா (Mahisa Campaka) என்பவரின் மகன்.

1289-ஆம் ஆண்டு சிங்காசாரி அரசின் ஒரு பகுதியாக கெடிரி சிற்றரசு (Kediri) இருந்தது. அதன் அரசர் ஜெயகாதவாங்கன் (Jayakatwang). இவர் சிங்காசாரி அரசிற்கு எதிராகக் கலகம் செய்தார். அதில் சிங்காசாரி அரசர் கருத்தநாகரன் கொல்லப் பட்டார்.

அதனால் 1292-ஆம் ஆண்டு ராடன் விஜயன், அருகாமையில் இருந்த மதுரா, சும்நாப் (Sumenep, Madura) எனும் இடத்திற்குத் தப்பிச் சென்றார். அப்போது மதுராவை ஆரிய வீரராஜா (Aria Wiraraja) என்பவர் ஆட்சி செய்து வந்தார். இந்த ஆரிய வீரராஜாவுடன் ராடன் விஜயன் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டார்.

அதாவது, கெடிரி சிற்றரசின் அரசர் ஜெயகாதவாங்கன் (Jayakatwang) என்பவரைப் பழி வாங்க ஆரிய வீரராஜா உதவிகள் செய்ய வேண்டும் எனும் ஒப்பந்தம். அதற்கு ஆரிய வீரராஜா சம்மதித்தார். இதில் இன்னும் ஒரு விசயம். என்ன தெரியுங்களா.

ராடன் விஜயனின் மாமனார் கருத்தநாகரன் கொலை செய்யப் படுவதற்குக் காரணமாக இருந்த ஜெயகாதவாங்கனுக்கு உதவியாக இருந்தவர் தான் இந்த ஆரிய வீரராஜா.

உண்மை விவரங்கள் தெரியாமலேயே ஆரிய வீரராஜாவிடம் உதவிகள் கேட்கப் பட்டது. இருந்தாலும் ஆரிய வீரராஜா உதவிகள் செய்தார். கெடிரி சிற்றரசிற்கு எதிராகப் போர் நடந்தது. அதில் ராடன் விஜயன் வெற்றி பெற்றார்.

மதுரா அரசர் ஆரிய வீரராஜாவிற்கு ஒரு மகன் இருந்தார். அவருடைய பெயர் ரங்கா லாவன் (Ranggalawe). இவர் தான் ராடன் விஜயனின் படைகளுக்குச் சேனாதிபதியாக இருந்தவர். இதன் பின்னர் கெடிரி சிற்றரசு தோற்கடிக்கப்பட்டது. அந்தச் சுவட்டில் 1293-ஆம் ஆண்டு, மஜபாகித் அரசு என்று ஒரு புதிய அரசு உருவானது.

அதன் பின்னர் கருத்தநாகரன் தலைநகரத்தின் பெயரும் மஜபாகித் என்று மாற்றம் செய்யப் பட்டது. அந்தக் காலத்தில் ஒரு நாட்டின் தலைநகரத்தின் பெயரிலேயே அந்த நாட்டின் பெயரும் அழைக்கப் பட்டது.

அது ஒரு மரபு. ஆக மஜபாகித் மன்னரால் ஆளப்பட்ட அந்த நாடு முழுமையும் மஜபாகித் என்று வாகை சூடியது. சரிங்களா. இதற்கும் சான்றுகள் உள்ளன.

முதல் சான்று:
(Mahandis Y. Thamrin, National Geographic Indonesia. September 2012).

இரண்டாம் சான்று:
(The Brunei Museum journal, Volume 4, Issue 1 – Page 192)

மஜபாகித் பேரரசராக ராடன் விஜயன் முடிசூட்டிக் கொண்டார். தன்னுடைய பெயரை கிரிதராஜாசா ஜெயவர்த்தனா (Kritarajasa Jayavardhana) என்று மாற்றிக் கொண்டார்.

பின்னர் கர்த்தநாகரனின் மகள்கள் மற்ற மூவரையும் ராடன் விஜயன் மணந்து கொண்டார்.

1. மூத்த மகள் பரமேஸ்வரி  திரிபுவனேஸ்வரி (Paramesvari Tribhuwaneswari). இந்தத் திருமணத்தில் அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான். அவனுடைய பெயர் கலா கீமது (Kala Gemet). இவர் கெடிரி சிற்றரசின் இளவரசராக நியமிக்கப் பட்டார்.

2. பிரஜன பரமிதா (Prajnaparamita);

3. நரேந்திர துகிதா (Narendraduhita)  

ராடன் விஜயன் ஏற்கனவே சிங்காசாரி அரசர் கருத்தநாகரன் மகள் காயத்திரி ராஜபத்தினி (Gayatri Rajapatni) என்பவரை திருமணம் செய்து இருந்தார். சிங்காசாரி வீழ்ச்சிக்கு முன்னரே அந்தத் திருமணம் நடைபெற்று விட்டது. இவர் தான் அந்த 4 சகோதரிகளில் ஆக இளையவர்.

அர்ச உரிமைகளில் பிரச்சினைகள் வந்துவிடக் கூடாது என்பதற்காகத் தான் நான்கு சகோதரிகளையும் ராடன் விஜயன் திருமணம் செய்து கொண்டார்.

(According to George Coedes, prior to the fall of Singhasari, Raden Wijaya was married to Gayatri Rajapatni, the daughter of Kertanegara. However, during the formation of the new kingdom Majapahit, he married the four daughters of Kritanagara, and the eldest, Queen Paramesvari Tribhuvana, bore him a son. This son, Kala Gemet, was crowned Prince of Kediri in 1295.)

Source: Coedes, George (1968). The Indianized states of Southeast Asia. University of Hawaii Press. Page: 201.

அடுத்து சுமத்திரா மலாய் இளவரசி இந்திரேஸ்வரி (Indreswari) என்பவரையும் மணந்து கொண்டார். ஆக, ராடன் விஜயனுக்கு மொத்தம் ஐந்து மனைவிகள்.

(Raden Wijaya also took Indreswari also known as Dara Petak, supposedly a princess of Malayu Dharmasraya Kingdom brought by Kebo Anabrang to Majapahit court from Sumatra through Kertanegara's Pamalayu expedition.)

மஜபாகித் தோற்றுவிக்கப் பட்ட காலத்தில் ராடன் விஜயன் பற்பல கலகங்களைச் சந்தித்தார். இருந்தாலும் மஜபாகித் அரசை மிக உறுதியாக நிறுவிக் கொண்டார். இப்படித் தான் மஜபாகித் அரசு உருவானது.
 
ஐந்தாவது மனைவி இந்திரேஸ்வரி மூலமாக ராடன் விஜயனுக்கு ஒரே ஒரு மகன். காயத்திரி ராஜபத்தினி மூலமாக இரண்டு மகள்கள். திரிபுவனா விஜயதுங்கா தேவி; ராஜா தேவி. அவரது முதல் மனைவி பரமேஸ்வரி  திரிபுவனேஸ்வரி உட்பட மற்ற மனைவிகளுக்கு குழந்தைகள் இல்லை.

ராடன் விஜயனின் மரணத்திற்குப் பிறகு, அவருடைய மகன் ஜெயநகரா (Jayanegara) மஜபாகித் அரசர் பதவியை ஏற்றுக் கொண்டார். மஜபாகித் பேரரசின் இரண்டாவது அரசர். சரி.

இந்தோனேசியாவில் கி.பி. 1811 முதல் கி.பி. 1816 வரை, ஜாவாவில் ஆங்கிலேயர்களின் ஆட்சி. அதாவது ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியாரின் (British East India Company) ஆட்சி.

அதன் ஆளுநராக ஸ்டாம்போர்ட் ராபிள்ஸ் இருந்தார். அவருடைய ஆட்சியின் காலத்தில் தான் ஜாவா துரோவுலான் (Trowulan) பகுதியில் மஜாபாகித் சிதைவுகள் கண்டுபிடிக்கப் பட்டன.

லயங்களின் சிதைவுகள் பரவிக் கிடந்ததாக ஸ்டாம்போர்ட் ராபிள்ஸ் கூறி இருக்கிறார் (ruins of temples.... scattered about the country for many miles).

துரோவுலான் நிலப் பகுதி ஜாவாவின் வரலாற்று அருமைகளுக்குப் பெருமை சேர்க்கிறது என்று புகழாரம் செய்தும் இருக்கிறார்.

மஜபாகித்தின் சிதைவு வடிவங்கள்; கலைநயப் படிமங்கள் மிகக் குறைந்த அளவில் தான் கிடைத்து இருக்கின்றன. எரிமலை வெடிப்பினாலும்; வெள்ளப் பெருக்கினாலும் மஜபாகித் பேரரசின் பொக்கிஷங்கள் சிதைந்து போய் விட்டன.

மண்ணுக்குள் பல மீட்டர்கள் ஆழத்தில் அந்தச் சிதைவுகள் இன்னும் உள்ளன. இருப்பினும் இந்தோனேசிய மக்கள் மஜாபாகித்தை மறக்கவில்லை. சான்றுகளை இன்னும் தேடிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

மஜபாகித் சொல்வனம் என்பது பொன் முட்டைகள் கொடுக்கும் ஒரு தங்கப் பறவையாகப் பார்க்கிறார்கள். ஏன் தெரியுங்களா.

மஜபாகித் சின்னங்களையும் சிறப்புகளையும் பார்க்கப் பல்லாயிரம் வெளிநாட்டுச் சுற்றுப் பயணிகள் வருகிறார்கள். இலட்சக் கணக்கில் செலவு செய்கிறார்கள். அதை நம்பி பல நூறு குடும்பங்கள் வாழ்ந்து கொண்டும் இருக்கின்றன.

கம்போடிய மக்களுக்கு ஓர் அங்கோர் வாட் என்றால் துரோவுலான் மக்களுக்கு ஒரு மஜபாகித்.

மஜபாகித் தேடல்களுக்குப் பதினெட்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பாபத் தானா ஜாவி (Babad Tanah Jawi) எனும் ஒரு வரலாற்று நூல் மேலும் சான்று பகிர்கின்றது.

(Taylor, Jean Gelman (2003). Indonesia: Peoples and Histories. New Haven and London: Yale University Press. பக்: 29.)

இந்த நூல் ஜாவா மொழியில் எழுதப் பட்டது. மஜபாகித்தை மொஜொபாயிட் (Mojopait) என்று எழுதி வைத்து இருக்கிறார்கள்.

தவிர 1365-இல் ஜாவாவில் ஒரு நூல் எழுதப் பட்டது. அதன் பெயர் நகரகிரேதாகமம் (Nagarakretagama).

பாலித் தீவு. கேள்விப்பட்டு இருப்பீர்கள். இந்தோனேசியாவில் அதிகமான இந்துக்கள் வாழும் தீவு. அந்தத் தீவிற்கு அருகில் லொம்போக் தீவு இருக்கிறது. இந்தத் தீவை 1890-களில் சாகரநகர அரச வம்சாவழியினர் (Cakranegara) ஆட்சி செய்து இருக்கின்றனர். இவர்கள் பல்லவர் இனத்தைச் சேர்ந்தவர்கள்.

இந்தத் தீவின் மீது 1894-இல் டச்சுக்காரர்கள் படை எடுத்தார்கள். அப்போது தான் நகரகிரேதாகமம் எனும் கவிதை வடிவிலான நூல், டச்சுக்காரர்களின் கரங்களில் சிக்கியது. அந்த நூலில் இருந்து தான் மஜபாகித்தைப் பற்றிய பல அரிய பெரிய உண்மைகளும் தெரிய வந்தன.

(Ricklefs, Merle Calvin (1993). A history of modern Indonesia since c. 1300 (2nd Ed.). Stanford University Press / Macmillans.)  

அடுத்து இன்னும் ஒரு நூல். 1600-ஆம் ஆண்டுகளில் எழுதப்பட்டது. எந்த ஆண்டு என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லை. அதன் பெயர் பரராத்தன் (Pararaton). 32 பக்கங்கள். 1126 வரிகள்.

(J.J. Ras, 1986, Hikayat Banjar and Pararaton. A structural comparison of two chronicles. In: C.M.S. Hellwig and S.O. Robson)

இந்த நூல் மஜபாகித் பேரரசைப் பற்றியும் சிங்கசாரி பேரரசைப் பற்றியும் விரிவாகச் சொல்கின்றது. மேல் அதிக ஆய்வுகளுக்கும் வழி வகுத்துக் கொடுக்கிறது.

ராஜசா (Rajasa) எனும் அரசர் சிங்கசாரி பேரரசை 1227-ஆம் ஆண்டு எப்படி தோற்றுவித்தார் என்றும் விளக்கமாக எடுத்துக் கூறுகின்றது. ராஜசாவின் இயற்பெயர் ஸ்ரீ ரங்கா ராஜசா பத்தர அபூர்வபூமி (Sri Ranggah Rajasa Bhatara Aburwabhumi).

இருந்தாலும் இந்தோனேசிய வரலாற்றில் இவருடைய பெயர் கென் அரோக் (Ken Arok) என்று குறிப்பிடப் படுகிறது.

மஜபாகித் பேரரசின் அரசர்கள் அனைவரும் ராஜசாவின் வழித்தோன்றல்கள் ஆகும். தவிர இந்தோனேசியாவை ஆட்சி செய்த மத்தாரம் பேரரசின் மன்னர்களும் அதே இந்த ஸ்ரீ ரங்கா ராஜசாவின் வழித்தோன்றல்கள்.

(Johns, A. H. (1964). "The Role of Structural Organisation and Myth in Javanese Historiography". The Journal of Asian Studies. 24: 91.)

மஜபாகித் பேரரசு இந்தோனேசியாவின் மகா பெரிய பேரரசு. ஒரு காலத்தில் ஒட்டு மொத்த தென்கிழக்காசியத் துணைக் கண்டமே மஜபாகித் பேரரசின் கட்டுப்பாட்டில் இருந்து உள்ளது.

இந்தோனேசியா எனும் நாட்டிற்கு இன்று பெரிய ஒரு நிலப்பரப்பு இருக்கிறது. அதற்கு அன்றைய மஜாபாகித் பேரரசின் பரந்து விரிந்து நிறைந்த நிலப்பகுதிகள் தான் முக்கியக் காரணமாகும்.

அந்த அளவிற்கு மஜபாகித் பேரரசு பெரும் நிலப்பரப்பைக் கொண்டு ஆளுமை செய்து இருக்கிறது. நவீன போக்குவரத்து வசதிகளும்; தொலைத் தொடர்பு வசதிகளும் இல்லாத காலத்தில் இப்படி ஓர் ஆளுமையா? தென்கிழக்கு ஆசியாவில் இந்தியர்களின் ஆளுமைக்கு இதைவிட வேறு என்னங்க சான்று வேண்டும்.

இந்தோனேசியாவில் இந்தியர்கள் சார்ந்த நீண்ட கால வரலாற்றுச் சுவடுகள் நிறையவே உள்ளன. அந்த வரலாற்றுச் சுவடுகளை இந்தோனேசியர்கள் மறைக்கவில்லை. மறைக்க முயற்சிகள் செய்யவும் இல்லை. மனதார ஏற்றுக் கொள்கிறார்கள். முழுமனத்துடன் வாழ்த்துகின்றார்கள். வாயாரப் போற்றுகின்றார்கள். பரந்த மனம் கொண்டவர்கள்.

ஒரு காலத்தில் இந்தியர்கள் தென்கிழக்கு ஆசியாவையே கட்டிப் போட்டுத் தங்கள் கைக்குள் அடக்கி வைத்து ஆட்சி செய்து இருக்கிறார்கள். இப்போது பாருங்கள். அஞ்சுக்கும் பத்துக்கும் கெஞ்சும் நிலை. வந்தேறிகள் என்று இகழ் பாடப் படும் இனமாய் அல்லாட வேண்டிய அவலநிலை.

சொல்லும் போது வேதனையாக இருக்கிறது. நினைக்கும் போது மனசு ரொம்பவுமே வெம்பிப் போகிறது. போராடுவோம். போராடிக் காட்டுவோம். வேறு வழி இல்லை.

மஜபாகித் பேரரசு இன்றும் சரி; இனி என்றும் சரி; வரலாற்றுச் சங்கீர்த்தனங்களைப் பாடிக் கொண்டே தான் இருக்கும். வாழ்க மஜபாகித். வளர்க இந்தோனேசியா வரலாறு.

(முற்றும்)

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
08.09.2020




 

சீமா சத்யா கலிங்கா மகாராணியார்

இவரின் பட்டத்துப் பெயர் ஸ்ரீ மகாராணி மகிசா சூரமருதினி சத்யா புதிகேசுவரா (Sri Maharani Mahissa Suramardini Satya Putikeswara). மிக நீண்ட பெயர். சுருக்கமாக சீமா சத்யா (Queen Shima Satya).

பெயரைப் போலவே இவருடைய ஆட்சியிலும் நீண்ட வரலாறு உள்ளது. சீமா என்றால் ஜாவானிய மொழியில் (Javanese Simo means lion) சிங்கம்.

(Shima was the queen regnant of the 7th century Kalingga kingdom on the northern coast of Central Java circa 674 CE)

கி.பி. 674-ஆம் ஆண்டில் இருந்து கி.பி 695-ஆம் ஆண்டு வரை கலிங்கத்துப் பேரரசின் முதலாவது பெண் தளபதி; முதலாவது பேரரசியார். போர் முனையில் கலிங்கத்துப் படைகளை வழி நடத்தியவர். 21 ஆண்டுகள் ஆட்சி.

ஆயிரம் ஆயிரம் ஆண்களைக் கொண்ட குதிரைப் படைக்கும் காலாட் படைக்கும் தளபதியாக முன் நின்று வாள் ஏந்தியவர். வீரப் பெண்மணிகள் ஜான்சி ராணி; ருத்ரமா தேவி; வேலுநாச்சியார்; அப்பக்கா சவதா; சென்னம்மா; ராணி மங்கம்மாள்; தாரா பாய் போன்றவர்களுக்கு முன்னோடியாக வாழ்ந்தவர் மகாராணியார் சீமா.

இந்தோனேசிய வரலாற்றில் உச்சம் பார்த்த பேரரசு ஸ்ரீ விஜய பேரரசு. அந்தப் பேரரசில் சேவை செய்த ஒரு பண்டிதரின் மகள் தான் மகாராணியார் சீமா.

கி.பி 611-ஆம் ஆண்டு முசி பன்யுவாசின் (Musi Banyuasin) எனும் இடத்தில் 1400 ஆண்டுகளுக்கு முன்னால் பிறந்து இருக்கிறார்.  

இவர் கலிங்கத்துப் பேரரசின் இளவரசர் கார்த்திகேய சிங்கா (Kartikeya Singa) என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். கார்த்திகேய சிங்காவின் தந்தையார் கலிங்கப் பேரரசின் (Kalingga Kingdom) மாமன்னர் ஆகும்.

கி.பி 648-ஆம் ஆண்டில் மாமன்னர் கார்த்திகேய சிங்காவின் தந்தையார் இறந்தார். கார்த்திகேய சிங்கா அரியணை ஏறினார்.

கலிங்கத்துப் பேரரசு இந்தோனேசியா ஜாவா தீவில் இருந்தது. ஜாவா தீவின் வடப் பகுதியில் மையம் கொண்ட பேரரசு. [#1]

[#1]. https://www.viva.co.id/berita/nasional/618022-melacak-situs-kerajaan-kalingga-yang-terlupakan

கி.பி. 650-ஆம் ஆண்டில் இருந்து கி.பி. 850-ஆம் ஆண்டு வரை 200 ஆண்டுகளாகக் கலிங்கப் பேரரசு ஜாவாவில் ஆட்சி செய்து இருக்கிறது. சீனர்கள் இந்த அரசை ஹெலிங் (Helíng) என்று அழைத்து இருக்கிறார்கள். [#2]

[#2]. Coedes, George (1968). Walter F. Vella, Ed. The Indianized States of Southeast Asia. Trans. Susan Brown Cowing. University of Hawaii Press. ISBN 978-0-8248-0368-1. Page: 52

கி.பி. 674-ஆம் ஆண்டில் சீமா சத்தியாவின் கணவர் கார்த்திகேய சிங்கா இறந்ததும், கலிங்கத்துப் பேரரரசின் தலைமைப் பதவியை சீமா சத்தியா ஏற்றுக் கொண்டார்.

எல்லா காலத்திலும் பெண்கள் ஆண்களுக்குச் சமநிகர் சமமாக ஆட்சி செய்து இருக்கிறார்கள். அந்த உண்மைகள் ஆணாதிக்கத்தின் அழுத்தங்களால் மறைக்கப்பட்டு இருக்கலாம்.

சீமா மகாராணி ஒரு நேர்மையான, நியாயமான, கண்டிப்பான ராணியாக வாழ்ந்து இருக்கிறார். நான் சொல்லவில்லை. வரலாறு சொல்கிறது.[#3]

[#3]. She introduced a law against thievery to encourage her people to be honest and uphold truth.

"Melacak Situs Kerajaan Kalingga yang Terlupakan". Viva.co.id. 24 April 2015: Dengan ditemukannya benda purbakala bersejarah tersebut terbukti bahwa ada kerajaan Kalingga yang diperintah oleh Ratu Shim. Dugaan  kuat lokasinya di daerah Keling Jepara, bukan daerah Keling Malaya.

Kerajaan Kalingga dikenal juga dengan nama kerajaan Ho-ling oleh orang-orang Tionghoa. Menurut catatan bangsa Tionghoa, Ho-ling dipercaya muncul ketika terjadi ekspansi besar oleh dinasti Syailendra.


மிகவும் புத்திசாலித்தனமான, நீதியான ராணியார். இவரின் ஆட்சியின் போது, குடிமக்கள் சட்டத்தை மிகவும் மதித்தார்கள். தரையில் விழுந்த ஒரு ஒரு மாம்பழத்தைக் கூட உரிமையாளர் அனுமதி இல்லாமல் எடுக்க மாட்டார்களாம். அப்படி கண்டிப்பாக ஆட்சி செய்து இருக்கிறார்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
07.09.2020

சான்றுகள்:

1. https://timesof.befren.com/2020/08/history-of-queen-shima-in-indonesia.html

2. https://en.wikipedia.org/wiki/Shima_(queen)

3. Masatoshi Iguchi (2017). Java Essay: The History and Culture of a Southern Country. Troubador Publishing Ltd.