27 நவம்பர் 2018

மலேசியா 1MBD மோசடி - 10

தமிழ்மலர் - 27.11.2018 - செவ்வாய்க்கிழமை

உலக வரலாற்றில் ஆயிரக்கணக்கான நம்பிக்கை மோசடிகள்; தில்லுமுல்லுகள்; நயவஞ்சகத் தில்லாலங்கடிகள். அவற்றில் மலேசியாவைப் பெரிதும் பாதித்தது 1எம்.டி.பி. எனும் மகா மோசடி. 




வரலாறு மறையும் வரையில் மறைக்க முடியாத மறக்க முடியாத சில மோசடிகளும் உள்ளன. உலகை உலுக்கிய சில செப்படி வித்தைகள் வருகின்றன. அவற்றில் போன்சி என்பது அமெரிக்காவை உலுக்கிய ஒரு மெகா மோசடி வலைப்பின்னல்.

PONZI SCANDAL

1919-ஆம் ஆண்டில் நடந்தது. சார்லஸ் போன்சி என்பவர் இத்தாலிய நாட்டைச் சேர்ந்தவர். அவருடைய நாட்டின் பண மதிப்பு அமெரிக்காவை விட குறைவாக இருந்தது. அதை உணர்ந்த அவர் அவருடைய நாட்டில் இருந்து குறைந்த விலைக்குத் தபால் தலைகளை வாங்கி வந்து அமெரிக்காவில் அதிக விலைக்கு விற்று லாபம் சம்பாதித்தார்.

கடைசியில் இந்தத் திட்டம் ஒரு மோசடித் திட்டம் என்று கண்டுபிடிக்கப் பட்டது. 20 மில்லியன் டாலர் மோசடி. அப்போதைக்கு பெரிய காசு. சார்லஸ் போன்சிக்கு ஐந்து ஆண்டு சிறைவாசம்.




போன்சி திட்டம் என்பது ஒரு திட்டத்தில் புதிது புதிதாக உறுப்பினர்களைச் சேர்ப்பது. அவர்களிடம் இருந்து கிடைக்கும் பணத்தைக் கொண்டு முதன்முதலில் சேர்ந்த சில பழைய உறுப்பினர்களுக்கு அதிகமாக வட்டிப் பணத்தை அள்ளிக் கொடுப்பது. ஆசையைக் கிள்ளி விடுவது. ஒரு மாதத்திற்கு 15 – 20 விழுக்காடு வட்டி என்றால் யாருக்குத் தான் ஆசை வராதுங்க.

பணம் கொட்டோ கொட்டுனு கொட்டுது என்று பழையவர்கள் புதியவர்களிடம் சொல்ல புதுசு புதுசாக ஆட்கள் ஆயிரக் கணக்கில் வந்து சேர்வார்கள். கையில் இருக்கிற காசு; கடன் வாங்கிய காசை எல்லாம் கொண்டு வந்து கொட்டுவார்கள். பற்றாக் குறைக்கு இருக்கிற நகை நட்டுகளையும் பாசாக் கடையில் அடகு வைத்து அந்தக் காசையும் கொண்டு வந்து முதலீடு செய்வார்கள்.

திட்டத்தை உருவாக்கியவர்களும் சும்மா இருக்க மாட்டார்கள். சொகுசு ஓட்டல்களில் கவர்ச்சிகரமான காந்தரூப விளக்கக் கூட்டங்களை நடத்தி விளம்பரம் தேடிக் கொள்வார்கள். முன்பின் பார்க்காத சாப்பாடுகள் எல்லாம் வந்து சேரும். முன்பின் தெரியாதவர்கள் எல்லாம் அறிமுகம் ஆவார்கள். 




திட்டத்தை நடத்துபவர்கள் பால் வடியும் முகத்துடன் பச்சை பிள்ளை மாதிரி பந்தா காட்டுவார்கள். கூடப் பிறந்த அண்ணன் தம்பி மாதிரி உறவாடுவார்கள். அழகு அழகாய் அன்பளிப்பு செய்வார்கள். ஏமாந்த குடும்பச் சோணகிரிகளை இழுக்கும் வரை இழுத்துக் கதைகள் பேசுவார்கள். அதில் ஏமாந்து போனவர்களும் இருக்கிறார்கள். சும்மா ஒன்றும் சொல்லவில்லை. இவை எல்லாம் நடந்த உண்மைகள்.

முதன்முதலில் சேர்ந்தவர்களுக்கு வட்டிப் பணத்தை அள்ளி அள்ளிக் கொடுப்பார்கள். அந்த மயக்கத்தில் அண்ணன் தம்பி அக்கா தங்கச்சி பேரன் பேத்திகளிடம் இருக்கிற  காசை எல்லாம் இவர்கள் பிடுங்கிக் கொண்டு வந்து முதலை வாயில் போடுவார்கள்.

புதிதாய் வந்த உறுப்பினர்களிடம் இருந்து பணம் வரும் வரையில் அந்தத் திட்டம் வெகு ஜோராய்ப் போய்க் கொண்டு இருக்கும். ஒரு கட்டத்தில் புதிதாக யாரும் வந்து சேர மாட்டார்கள். அல்லது பெரிய அளவில் பணம் வந்து கிடைக்காமல் போகலாம். 




அப்போது தான் உரிமையாளருக்குத் திண்டாட்டம். வேறுவழி இல்லாமல் கிடைத்த பணத்தை அப்படியே சுருட்டிக் கொண்டு வெளிநாட்டிற்குக் கம்பி நீட்டி விடுவது வழக்கம். இது தான் போன்சி திட்டம். பெரும்பாலும் இரண்டு மூன்று வருடங்களில் கனக் கச்சிதாமாகக் காரியங்களை முடித்துக் கொள்வார்கள்.

அதிக வட்டிக்கு ஆசைப் படுவது. கவர்ச்சிகரமான திட்டங்களை நம்புவது. அதிக லாபத்தை நம்பி ஏமாந்து போவது. மலேசியாவில் இந்த மாதிரி நிறையவே நடந்து இருக்கிறது.

ஏமாளிகள் இருக்கும் வரையில் ஏமாற்றுக்காரர்கள் இருக்கவே செய்வார்கள். மலேசியாவில் போரெக்ஸ் முதலீட்டுத் திட்டம்; ஜெனிபா தங்கத் திட்டம்; சுவீஷ் கேஷ் திட்டம்; நியூலைட்; அரோவானா; சன்சைன் எம்பையர்; இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.




அடுத்து வருவது என்ரோன் மோசடி.

2. Enron


அமெரிக்காவில் 1995-ஆம் ஆண்டு நடந்த 74 பில்லியன் டாலர் மோசடி. இது பங்கு பத்திரங்கள் விற்பனையில் ஏற்பட்ட மோசடி.

அடுத்து வருவது வோர்ல்ட் காம் மோசடி.

3. Worldcom

7 பில்லியன் டாலர் மோசடி. 2001-ஆம் ஆண்டில் அமெரிக்காவில் நடந்தது. வோர்ல்ட் காம் நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பைப் பல மடங்குகள் உயர்த்திக் காட்டி நிறுவனத்தைத் திவாலாக்கிய மோசடி.

அடுத்து வருவது மார்டோப் மோசடி.

4. Bernard Madoff

2008-ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடந்தது. 64 பில்லியன் டாலர் மோசடி. இதுவும் போன்சி மோசடி போல கூப்பன்கள் விற்பதில் ஏற்பட்ட ஒரு தில்லுமுல்லு. அந்த மோசடிக்குக் காரணகர்த்தாவாக இருந்தவர் பெர்டார்ட் மார்டோப். அவருக்கு 150 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டது. 




அடுத்து வருவது லேமன் பிரதர்ஸ் மோசடி.

5. Lehman Brothers

2008-ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடந்த மகா மோசடி. பல வங்கிகளை ஏமாற்றிய 600 பில்லியன் டாலர்கள் மோசடி. அத்தனை மோசடிகளும் அமெரிக்காவில் நடந்தவை. அந்த வரிசையில் நம் நாட்டு 1எம்.டி.பி.யும் வருகிறது. இதுவே நம் நாட்டில் நடந்த மிக மோசமான மோசடி.

இப்படி நிறைய பண மோசடிகள் நடந்து உள்ளன. மோசடிகள் நடக்கின்றன என்று தெரிந்தும் பணத்தாசையால் பலியானவர்கள் பல ஆயிரங்கள்.

சீக்கிரமாகப் பணக்காரன் ஆகலாம்; சீக்கிரமாகப் பங்களா வாங்கலாம்; மாதத்திற்கு 15 – 20 விழுக்காடு வட்டி கிடைக்கிறது என்று யாராவது சொன்னால் அதன் பின்னால் ஏதோ ஒரு கொக்குப்பிடி இருக்கிறது என்பதை மறக்க வேண்டாம். கேப்பையில் நெய் வடிகிறது என்றால் கேட்பாருக்குப் புத்தி எங்கேங்க போச்சு?




நம் நாட்டைப் பொருத்த வரையில் 1எம்.டி.பி. பண மோசடியில் ஒன்றாம் நம்பராக இருப்பவர் பிளேபாய் ஜோலோ. இந்த மன்மத ராசாவைத் தெரியவே தெரியாது என்று சொல்லி வந்தவர் முன்னாள் பிரதமர் நஜீப். ஆனால் சில நாட்களுக்கு முன்னர் 1எம்.டி.பி.யை ஜோலோ ஏமாற்றி விட்டார் என்று பகிரங்கமாகவே உண்மையை ஒப்புக் கொண்டார்.

அதே சமயத்தில் அமெரிக்காவின் கோல்ட்மேன் சாஸ் முதலீட்டு வங்கி; அந்த வங்கியின் வழக்கறிஞர்கள்; அந்த வங்கியின் கணக்காய்வாளர்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்து மலேசிய நாட்டிற்கு துரோகம் செய்து விட்டார்கள் என்றும் குற்றம் சாட்டி இருக்கிறார்.

உண்மை நிலையில் இருந்து நஜீப் தப்பிக்கவே பார்க்கிறார். அவருக்குத் தெரியாமல் தவறு நடந்து இருக்கிறது எனும் பல்லவிக்கு மீண்டும் மீண்டும் சுதி சேர்க்கிறார் என்றுதான் பலரும் கருதுகிறார்கள்.

சர்வாக் ரிப்போர்ட்; தி எட்ஜ் எனும் ஊடகங்கள் தான் 1எம்.டி.பி. மோசடிகளை முதன்முதலில் அம்பலப்படுத்தின. தி எட்ஜ் பத்திரிகையின் தலைவர் தோங் கூய் ஓங் இரு தினங்களுக்கு முன்னால் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்.




நஜீப் சொல்வது தவறு. அவர் தான் ஜோலோவைக் காட்டிக் கொடுக்க தடை விதித்தார் என்று சொல்கிறார். ’2015 மார்ச் மாதம் 6-ஆம் தேதி பிரதமர் நஜீப்பை ஜாலான் டூத்தாவில் உள்ள அவருடைய இல்லத்தில் சந்தித்தேன். பாலிங் நாடாளுமன்ற உறுப்பினரும் தாபோங் ஹாஜி தலைவருமான அப்துல் அஜீஸ் அப்துல் ரஹீம் தான் அந்தச் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்தார்.

1எம்.டி.பி.யின் வரலாற்றைப் புரட்டிப் பாருங்கள். 1எம்.டி.பி.யை நஜீப் தான் 2009-ஆம் ஆண்டில் தொடக்கி வைத்தார். சவூதி அராபியாவில் இருந்த பெட்ரோ சவூதி நிறுவனத்துடன் கூட்டு வணிகம் செய்ய 100 கோடி ரிங்கிட்டை முதலீடு செய்தார். 2011-ஆம் ஆண்டில் அந்தத் தொகை 180 கோடியாக உயர்ந்தது.

2009-ஆம் ஆண்டில் இருந்து 2013-ஆம் ஆண்டு வரையில் கூட்டு வணிகம் பற்றிய தகவல்கள் மறைக்கப்பட்டு வந்தன. 1எம்.டி.பி.யின் கடன் தொகை 3800 கோடியாக உயர்ந்தது. அதில் கோல்ட்மேன் சாஸ் முதலீட்டு வங்கி திரட்டிக் கொடுத்த 272 கோடி ரிங்கிட் அடக்கம். 1எம்.டி.பி.யின் கடன் தொகை உயர்ந்து கொண்டே போகிறது என்று நஜீப்பிடம் சொன்னேன் என்கிறார் பத்திரிகையாளர் தோங் கூய் ஓங்.




அதற்கு அவர் ’நீங்கள் சொல்வது தப்பு. 1எம்.டி.பி. சரியாகத் தான் போய்க் கொண்டு இருக்கிறது. அங்கே பணம் எதுவும் திருடப் படவில்லை என்றார். அதற்கு நான் மறுப்பு தெரிவித்தேன். 1எம்.டி.பி.யில் திருட்டு வேலை நடக்கிறது. ஜோலோ தான் அதற்கு மூலகாரணம். 1எம்.டி.பி. லாபத்தில் போய்க் கொண்டு இருக்கிறது என்று தப்பு கணக்கு காட்டுகிறார். 1எம்.டி.பி.யின் ரொக்கப் பணம் காலியாகி விட்டது’ என்றேன்.

ஓர் அரைமணி நேத்திற்குப் பின்னர் 1எம்.டி.பி.யை நான் மூடி விடுகிறேன் என்று நஜீப் சொன்னார். ஆனால் வாங்கிய கோடிக் கோடியான பணத்தை எப்படி அடைக்கப் போகிறார் என்பதை மட்டும் சொல்லவில்லை.

இத்தனைக் குழப்படிகளுக்கும் ஜோலோ தான் காரணம். அவர் மீது விசாரணை செய்து நீதிமன்றத்தில் நிறுத்துவதே சரி என்று நஜீப்பிடம் சொன்னேன். அதைக் கேட்ட நஜீப் சற்றே கோபம் அடைந்தார். அப்புறம் அவருடைய வீட்டின் வாசல் கதவின் பக்கம் போய் நின்றார். என்னைப் பார்த்து வெளியே போகச் சொல்லி விட்டார். 




ஜோலோவின் பெயரைச் சொன்னாலே அவர் உணர்ச்சிவசப் படுகிறார் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்து போனேன் என்று தி எட்ஜ் பத்திரிகையாளர் தோங் கூய் ஓங் சொல்கிறார். அவருடைய அந்தச் செய்தி சினார் ஹரியான் மலாய் நாளிதழில் சென்ற வாரம் பிரசுரமாகி உள்ளது.

ஆக ஜோலோவிற்காக வக்காளத்து வாங்கிய நஜீப்பிற்கு எப்படி ஜோலோவை தெரியாது என்று சொல்லி இவ்வளவு நாலும் மூடி மறைத்து இருக்க வேண்டும். திருடு நடக்கிறது என்று தெரிந்தும் அந்த திருட்டை மறைக்க நஜீப் முயற்சி செய்தார் என்பதே நிதர்சனமான உண்மை என்று அந்தப் பத்திரிகையாளர் சொல்கிறார். எது உண்மை என்று முடிவு செய்வதை உங்களிடமே விட்டு விடுகிறேன்.

நாளைய கட்டுரையில் மேலும் அதிர்ச்சியான தகவல்கள் வருகின்றன. பெட்ரோ சவூதி நிறுவனத்தைப் பற்றிய தகவல்கள். ஜோலோ எப்படி பணத்தைச் சுருட்டினார் எனும் தகவல்கள். படிக்கத் தவற வேண்டாம். (தொடரும்)

மலேசியா 1MBD மோசடி - 1
மலேசியா 1MBD மோசடி - 2
மலேசியா 1MBD மோசடி - 3
மலேசியா 1MBD மோசடி - 4

மலேசியா 1MBD மோசடி - 5
மலேசியா 1MBD மோசடி - 6
மலேசியா 1MBD மோசடி - 7

மலேசியா 1MBD மோசடி - 8
மலேசியா 1MBD மோசடி - 10

சான்றுகள்

1. We showed Najib evidence against Jho Low, says The Edge owner - https://www.freemalaysiatoday.com/category/nation/2018/11/24/we-showed-najib-evidence-against-jho-low-says-the-edge-owner/

2. http://www.financetwitter.com/2018/05/this-chart-shows-how-najib-drove-the-country-to-rm1-trillion-in-debt.html - How Najib Drove The Country To RM1 Trillion In Debt

3. How PetroSaudi executives plotted what to tell Najib - http://www.theedgemarkets.com/article/cover-story-how-petrosaudi-executives-plotted-what-tell-najib

4. 1MDB scandal: A quick look at what it's all about - http://www.thejakartapost.com/seasia/2016/07/21/1mdb-scandal-a-quick-look-at-what-its-all-about.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக