07 ஏப்ரல் 2010

கணினியும் நீங்களும் - பகுதி 39

(மலேசிய நண்பன் - 29.11.2009 ஞாயிறு நாளிதழில் வெளியானது)

மா.மணிவண்ணன், கம்பார், பேராக்
கே: இணையம் என்றால் என்ன. இணையப் பக்கம் என்றால் என்ன. இரண்டும் ஒன்றுதானே?

ப:
இரண்டும் ஒன்றல்ல. இணையத்தின் மூலமாகப் பிறந்ததுதான் இணையத் தளம். இணையம் என்பது Internet எனும் ஒரு தொழில்நுட்பம். World Wide Web என்று சொல்லப்படும் வையக விரிவு வலையைத்தான் நாம் பொதுவாக இணையம் என்று சொல்கிறோம். இணையம் என்பது ஒரு தொழில்நுட்பப் பொருள்.

இணையத்தின் பயன்பாடுகள்தான் இணையப் பக்கம், இணையத்தளம், மின்னஞ்சல் எல்லாம். இணையத்தின் உள்ளே நுழைந்ததும் நீங்கள் பார்க்கும் அகப்பக்கங்களை இணையப் பக்கங்கள் என்று சொல்கிறோம். ஓர் இணையத் தளத்தில் பல இணையப் பக்கங்கள் இருக்கும். ஆக, எல்லாவற்றையும் ஒட்டு மொத்தமாக இணையம்  என்கிறோம். 

சமுராய்  asksamurai@gmail.com
கே: என்னுடைய கைப்பேசியில் Anti Virus எனும் நச்சு நிரல் கொல்லியைப் பயன் படுத்த விரும்புகிறேன். எப்படி பயன் படுத்துவது? எங்கே இருந்து பதிவு இறக்கம் செய்வது என்று ஒன்றுமே தெரியவில்லை. உதவி செய்யுங்கள்.

ப:
ஜப்பானில் உள்ள பழைய சமுராய் கத்தியின் பெயரை வைத்துக் கொண்டு கேள்வி கேட்கிறீர்கள். கணினிக்கு நச்சு நிரல் கொல்லியைப் பயன் படுத்தும் காலம் போய் இப்போது கைப்பேசிக்கும் வந்துவிட்டது. அந்த அளவிற்குத் தொழில் நுட்பம் முன்னேறி விட்டது.

எதிர்காலத்தில் ரேடியோ டெலிவிஷன்களுக்கும் வைரஸ் வரலாம் என்று சொல்கிறார்கள். சவர்க்காரம் போடாமல் துணி துவைக்கும் மெஷின் வந்துவிட்டது. அதற்கும் வைரஸ் வந்துவிட்டதாம்.  என்ன கூத்து பாருங்கள். கைப்பேசிகளுக்கு நச்சு நிரல் கொல்லி Anti Virus இலவசமாகக் கிடைக்கும் இடங்களைச் சொல்கிறேன். போய் பதிவு இறக்கம் செய்து கொள்ளுங்கள்.

1. http://www.avg.com/us.68361free
2. http://www.avira.com/en/downloads/antivir_for_mobile.html


இனிமேல் உண்மையான பெயரைச் சொல்லுங்கள். இல்லை என்றால் அதே சமுராய் கத்தியைத் தூக்கிக் கொண்டு உங்களைத் தேடி வருவேன்.

க.ரவி, லூயி மூடா, பகாவ், நெகிரி செம்பிலான்
கே: விண்டோஸ் Vista பற்றி சொல்ல முடியுமா?

ப:
மைக்ரோசாப்ட் நிறுவனத்தினர் உருவாக்கிய ஒர் அடிப்படைச் செயலி (Operating System).  இதன் பழைய பெயர்  Longhorn. 2007ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30ஆம் தேதி உலகம் முழுமையும் வெளியிடப்பட்டது. இதற்கு முன்னதாக விண்டோஸ் XP இருந்தது. விண்டோஸ் விஸ்த்தாவில் பல புதிய மாற்றங்கள், புதிய செயல் பாடுகளைச் சேர்த்திருக்கிறார்கள்.

நிறைய பாது காப்பு முறைகளையும் இணைத்திருக்கிறார்கள். ஏற்கனவே இருந்த XP அடிப்படைச் செயலியில் அழிவிகள் (Virus) சுலபமாக நுழைந்து கணினியைச் செயலிழக்கச்செய்தன. அதைக் கருத்தில் கொண்டு புதிய பாது காப்பு அணுகுமுறைகள் இந்த விண்டோஸ் விஸ்த்தாவில் இணைக்கப் பட்டுள்ளன. அடுத்ததாக விண்டோஸ் 7 எனும் புதிய செயலி 2010 ஆண்டு வாக்கில் வெளி வந்தது.

பாரதி  barat82@gmail.com
கே: கணினியில் செருகி இருக்கும் USB ஐ பிடுங்கி எடுக்க கணினித் திரையில் கீழே உள்ள சின்னத்தை கிளிக் செய்கிறோம். அதன் பிறகு Safely Remove Hardware என்பதைத் தட்டி வெளியாக்குகிறோம். இதைத் தவிர்க்க வேறு சுருக்கு வழி இருக்கிறதா?

ப:
USB என்பதைத் தமிழில் நேரியல் பாட்டை என்கிறோம். Flash Drive, Pen Drive, Thumb Drive என்று பல பெயர்களில் உள்ளன. ஐ பாட், டிஜிட்டல் கேமரா, கைப்பேசி போன்ற சாதனங்கள் யு.எஸ்.பி யைப் பயன் படுத்துகின்றன. இவற்றைக் கணினியில் இருந்து கழற்ற வேண்டும் எனில் திரையின் கீழே இருக்கும் Safely Remove Hardware பகுதிக்குப் போய் அதைத் தட்டி யு.எஸ்.பி யை வெளியாக்குகிறோம். இதைச் சுலபமாக வெளியாக்க வழி இருக்கிறது. USB Ejector எனும் நிரலி இலவசமாகக் கிடைக்கிறது.

http://quick.mixnmojo.com/usbdiskejector எனும் இடத்தில் அந்த நிரலி கிடைக்கிறது. அதைக் கணினியில் பதித்துக் கொள்ள வேண்டும். பதித்ததும் ஒரு சின்னம் திரையில் வந்து உட்கார்ந்து கொள்ளும். அதைச் சொடுக்கினால் கணினிக்குள் செருகப் பட்டிருக்கும் எல்லா USB களையும் காட்டும். எந்த USB ஐ வெளியாக வேண்டுமோ அதை இரண்டு முறை சொடுக்கினால் போதும். சரி. அந்த நிரலியைப் பதிவிறக்கம் செய்து பயன் படுத்திப் பாருங்கள்.

குமாரி. ஜானகி மலர், அவுலோங், தைப்பிங், பேராக்
கே: என்னுடைய கணினியில் தமிழைப் பயன்படுத்த விரும்புகிறேன். முரசு அஞ்சல் எங்கே எப்படி கிடைக்கும்?

ப:
தங்களுடைய கணினியில் தமிழைப் பயன்படுத்த விரும்புகிறீர்கள். பாராட்டுகள். முரசு அஞ்சல் செயலி Software மலேசியாவில் உருவாக்கப்பட்டது. உலகம் முழுமையும் உள்ள தமிழர்கள் விரும்பித் தங்கள் கணினிகளில் பதித்துக் கொள்கிறார்கள். பயன்படுத்த சுலபமானது. இணைமதி, இணைக்கதிர் எழுத்துருகள் மிக அழகாக இருக்கின்றன என்பது கூடுதல் சன்மானம்.

அண்மையில் நான் தமிழ்நாட்டுக்குப் போயிருந்த போது அங்கே உள்ள பல கணினி மையங்கள், முரசு அஞ்சலைப் பயன்படுத்துவதைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன். மலேசியத் தமிழர்கள் தயாரித்த பொருள். கேட்டதற்கு இதுவரை வெளி வந்துள்ள தமிழ்ச் செயலிகளில் முரசு அஞ்சல் எளிதானது என்றார்கள்.

அந்தச் செயலியைப் பெற்றுக் கொள்ள முரசு நிறுவனத்துக்கு கடிதம் எழுதலாம். கட்டணம் உண்டு. தவிர www.murasu.com எனும் இணைய மையத்திற்குச் சென்றும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கணினியில் பதித்துக் கொள்வதும் (Installing) சுலபம். எப்படி பயன்படுத்துவது என்பது பற்றி விளக்கம் கொடுத்திருப்பார்கள்.

கணினியும் நீங்களும் - பகுதி 38

(மலேசிய நண்பன் ஞாயிறு நாளிதழில் கணினியும் நீங்களும் கேள்வி பதில் பகுதியை நடத்தி வருகிறேன். அந்தப் பகுதியின் பழைய கேள்வி பதில்களைக் கட்டம் கட்டமாக இந்த வலைப்பூவில் பிரசுரித்து வருகிறேன். பழைய எல்லாப் பகுதிகளும் வெளி வந்த பின்னர், ஞாயிற்றுக் கிழமைகளில் பிரசுக்கப் படும் அதே பகுதி அதே தினத்தில் இந்த வலைப் பதிவிலும் பிரசுரிக்கப் படும். உலகில் உள்ள அனைத்துத் தமிழர்களும் படிக்க வேண்டும்.பயன் அடைய வேண்டும்.நீங்கள் மின்னஞ்சல் வழியாகக் கேள்விகள் கேட்கலாம். உங்கள் கேள்விகள் நாளிதழிலும் வெளிவரும். இணையத்திலும் வரும். இந்த வலைப்பூவைப் படித்த கோவையைச் சேர்ந்த துரை.வேலுமணி, குவாயித்திலிருந்து விஷ்ணு என்பவர்கள் கேள்வி கேட்டார்கள்.மின்னஞ்சல் வழி பதில் வருகிறது.)

ஜெகதம்பாள் பரமசிவம் jega_param67@gmail.com
கே: இணையத்தில் உலா வரும் போது சில சமயங்களில் Apache எனும் சொல் வருகிறது. இது அமெரிக்காவில் வாழும் சிவப்பு இந்தியர்களைக் குறிக்கும் சொல் அல்லவா. அப்படி இருக்கும் போது எப்படி கணினி உலகத்தில் நுழைந்தது?

ப:
அமெரிக்காவில் உள்ள சிவப்பு இந்தியர்களைக் குறிக்கும் சொல்தான் Apache. நீங்கள் சொல்வது சரி. இருந்தாலும் அந்த அமெரிக்க இனத்தவருக்கும் இந்த 'அப்பாச்சி' மென் பொருளுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. இந்தச்  சொல் கணினி உலகிற்கு வந்த விதம் மிகவும் சுவையான விஷயம். 'அப்பாச்சி' என்பது இணையத் தளங்களை இயக்க உதவும் ஒரு வகையான மென்பொருள். வியாபார நோக்கம் இல்லாத Open Source மென்பொருள்.

1990 களில் வலைத்தளங்களை இயக்கும் புதுமையான மென்பொருள் ஒன்றை ராபர்ட் மென் கூல் என்பவர் எழுதினார். இவர் ஓர் அமெரிக்கர். நண்பர்கள் சிலரும் அவருக்கு உதவி செய்தார்கள். தொடக்கத்தில் நிறைய பிழைகள் ஏற்பட்டன. அந்தப் பிழைகளைக் களைந்து சரி செய்வதை Patching என்று அழைத்தார்கள். பிழைகள் தொடர்ந்து வந்தன. அதனால் அந்த மென் பொருளுக்கு A Patchy Server என்று கிண்டலாக ஒரு பெயரை வைத்தார்கள்.

அதுவே நாளடைவில் மருவி 'அப்பாச்சி' என்று பெயர் பெற்றது. தற்சமயம் இந்த 'அப்பாச்சி' தான் விவரங்களைச் சேமித்து வைக்கும் தலை சிறந்த புள்ளியியல் மென்பொருளாக விளங்குகிறது. உலகின் தலை சிறந்த கணினி நிபுணர்கள் எல்லாம் இதற்கு பாது காப்பு அளித்து வருகின்றனர். கணினி அழிவிகளைத் தயாரிப்பவர்கள் கூட இந்த 'அப்பாச்சி' யைத் தொந்தரவு செய்வது இல்லை. அவ்வளவு மரியாதை.

சந்தோஷம் பாண்டியன், தைப்பிங் (குறும் செய்தி 5.12.2009)
கே: கணினியில் 'ஜாவா' மொழி என்று சொல்கிறார்களே. அப்படி என்றால் ஜாவா நாட்டில் இருந்து இந்த மொழி வந்ததா?

ப:
கணினியும் மனிதனும் உறவாடிக்  கொள்ள உதவும் மொழி தான் கணினி மொழி. ஜாவா எனும் கணினி மொழியைத் தயாரித்தவர்கள் காலம் நேரம் பார்க்காமல் காப்பி குடித்தார்கள். அந்தக் காப்பியைத் தயாரிக்கக் காப்பிக் கொட்டைகள் ஜாவா எனும் இந்தோனேசியத் தீவில் இருந்து வந்தன. ஒரு கட்டத்தில் அவர்கள் ஜாவா காப்பிக்கு அடிமையாகும் நிலையும் இருந்தது.

அப்புறம் அந்தக் கணினி மொழிக்குப் பெயர் வைக்கும் நேரம் வந்தது. என்ன பெயர் வைப்பது என்பதில் எல்லாருக்கும் ஒரு குழப்பம். அதனால் அவ்வளவு காலம் அவர்களுக்கு உதவி செய்த அந்தக் காப்பிக் கொட்டையின் பெயரையே வைக்காலாமே என்ற ஓர் எண்ணம். சரி, அப்படியே ஜாவா என்று வைத்தும் விட்டார்கள். கணினி மொழிகளில் Amiga, Basic, C, C++, Cobra, Delphi, Fotran, Maya, Modula, Pascal என்று பல இருக்கின்றன. நீங்கள் பயன்படுத்தும் விண்டோஸை 'சி' மொழியில் எழுதி இருக்கிறார்கள். இப்போது ஜாவா மொழி கொடி கட்டிப் பறக்கின்றது. எனக்கும் பிடித்த மொழி. படித்து முடிக்க மூன்று வருடங்கள் பிடிக்கும். ஆக, ஜாவா கணினி மொழிக்கும் ஜாவா தீவிற்கும் விட்ட குறை தொட்ட குறை இருக்கிறது.

சுந்தரராஜன் பெருமாள்  sundrajan12@gmail.com
கே: மேசைக் கணினியைப் பயன் படுத்துபவர்கள் பலர் மடிக் கணினியையும் பயன் படுத்துகிறார்கள். இரண்டையும் ஒரே சமயத்தில் பயன் படுத்த முடியுமா? எப்படி சார் முடியும்?

ப:
எல்லாம் வேலைச் சுமைதான். அவர் அவர்களுக்கு அவர் அவர்களுடைய வேலை முக்கியம். வீட்டில் இருக்கும் போது மேசைக் கணினியைப் பயன் படுத்துவார்கள். வெளியே போகும் போது மடிக் கணினியைக் கூடவே எடுத்துச் செல்வார்கள். மடிக்கணினி இன்றைய காலத்தில் மிகவும் அத்தியாவசியமான பொருளாகி விட்டது. பண வசதி இருந்தால் இரண்டு என்ன மூன்று நான்கு கணினிகளைக் கூட வாங்கி வைத்துக் கொள்ளலாம்.

மேசைக் கணினியைப் பிறந்த வீட்டுக் கணினி என்றும் மடிக் கணினியை புகுந்த வீட்டுக் கணினி என்றும் உவமானம் சொல்வது உண்டு.  பெண்களுக்கு மட்டும் பிறந்த வீடு, புகுந்த வீடு என்று இருக்கிறது. அதற்காக ஆண்களுக்கு சின்ன வீடு, பெரிய வீடு இருக்கக் கூடாதா என்று கேட்டாலும் கேட்கலாம். பெரிய பெரிய பிரச்னைகளுக்கு எல்லாம் சூடம் கொளுத்திச் சாம்பிராணி போடக் கூடாது. தப்பு அய்யா தப்பு.

குமாரி லெட்சுமி வீரராகு, சித்தியவான் (குறும் செய்தி 3.12.2009)
கே: Hard Disk என்பதை வன்தட்டு என்கிறோம். முதன் முதலில் கண்டுபிடிக்கப் பட்ட வன்தட்டுகளைப் பற்றி ஏதாவது தகவல் சொல்லுங்கள்?

ப:
நம் கணினியில் உள்ள வன்தட்டில் தான் செய்திகள் படங்கள் தகவல்கள் எல்லாமே பதிவு செய்யப் படுகின்றன. இங்குதான் கணினியின் Operating System அமர்ந்து கொண்டு கணினியை இயக்குகிறது. 1956ல் தான் வன்தட்டைக் கண்டுபிடித்தார்கள். IBM நிறுவனம் கண்டுபிடித்தது. அதன் கொள் அளவு 5 MB. அதன் பெயர் RAMAC 305. இரண்டு பெரிய குளிர்சாதனப் பெட்டிகளைச் சேர்த்து வைத்தால் எப்படி இருக்கும். அவ்வளவு பெரியது.  அப்போதைக்கு அது பெரிய விஷயம். அதன் விலை 50,000 அமெரிக்க டாலர்கள்.

இப்போது நாம் 1 Terra Byte வன்தட்டுகளைப் பயன் படுத்துகிறோம். இது அப்போது இருந்திருந்தால் இதன் விலை என்ன தெரியுமா. மயக்கம் போட்டு விழ வேண்டாம். 35 கோடி மலேசிய ரிங்கிட். அதாவது பினாங்கு பாலத்தைப் பாதி கட்டி முடித்து விடலாம். இப்போது Rapidshare, Hot File, Uploading, Mega Upload போன்றவை Petabytes பரிமாறிக் கணினிகளைப் பயன் படுத்துகின்றன.

Intel நிறுவனத்தை உருவாக்கியவர் கார்டன் மூர் என்பவர். அவர் கண்டுபிடித்த கோட்பாடு ஒன்று உள்ளது. அதன் பெயர் Moore's Law. 'ஒவ்வொரு 18 மாதங்களுக்கும் ஒரு முறை, கணினியை இயக்கும் சாதனங்களின் விலை இரண்டு மடங்கு குறையும். அதே சமயத்தில் அதன் செயல் திறன்கள் அல்லது ஆற்றல்கள் இரண்டு மடங்காக அதிகரிக்கும்.'  இது தான் அவர் சொன்னது.

அதே போலத் தான் நடந்தும் கொண்டிருக்கிறது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் 35 கோடி ரிங்கிட்டிற்கு விலை போன வன்தட்டு இன்று முன்னூறு வெள்ளிக்கு விற்கப் படுகிறது. இது எங்கு போய் முடியுமோ தெரியவில்லை.

விளக்கம்
0 அல்லது 1 = 1 Bit
8Bits = 1 Byte(B)
1000(B) Bytes = 1 Kilo Byte(KB)
1000(KB) Kilo Bytes = 1 Mega Byte(MB)
1000(MB) Mega Bytes = 1 Giga Byte(GB)
1000(GB) Giga Bytes = 1 Terra Byte(TB)
இப்போது 2009 ஆண்டில் நாம் 'தெரா
பைட்'டில் இருக்கிறோம்.

குணசேகரன் சின்னையா   gunasinnma@yahoo.com

கே:
Key Board எனும் தட்டச்சு பலகை கெட்டுப் போனால் மலிவான விலையில் வாங்கிக் கொள்ளலாம். அதனால் குழந்தைகள் கணினியைப் பயன் படுத்திக் கொண்டிருக்கும் போது சாப்பாடு கொடுக்கலாம். குழந்தை கள் விளையாட்டுத் தனமாக அதை உடைத்து விட்டால் பரவாயில்லை. தப்பில்லை என்கிறீர்கள். ஒரு பொருள் மலிவாகக் கிடைக்கிறது என்பதற்காக அதைச் சேதப் படுத்திப் புதிதாக வாங்க வேண்டுமா?  உங்கள் கருத்து சரிதானா?

ப:
உங்கள் ஆதங்கம் தெரிகிறது. ஒரு மருமகள் தன் மாமியாரைச் சொந்தத் தாயைப் போல மதித்து மரியாதையாக நடத்தி வந்தாள். மாமியாருக்கு ஒரு நாள் நல்ல காய்ச்சல். இரண்டு மூன்று நாளைக்கு கஞ்சி சாப்பிட வேண்டும் என்று டாக்டர் கண்டிப்பாகச் சொல்லி விட்டார். இந்தக் கட்டத்தில் மாமியாருக்கும் மருமகளுக்கும் சின்ன சலசலப்பு.

மாமியாரைப் பார்த்து 'அத்தை... மத்தவங்க மாதிரி நான் இல்லை. கடைசி வரை உங்களை உட்கார வச்சு கஞ்சி ஊத்துவேன்' என்று மருமகள் சொன்னார். அத்துடன் மாமியார் கப்சிப். உள்ளுக்குள் ஒரு பயம். மருமகள் தனக்கு இனிமேல் சோறு போடாமல் வெறும் கஞ்சியை ஊற்றியே சாகடிக்கப் போகிறாள் என்கிற பயம்தான்.
நாளடைவில் அந்தப் பயமே அவரைப் படுத்த படுக்கையாக ஆக்கியும் விட்டது. மாமியாருக்குப் பன்றிக் காய்ச்சல் வர வேண்டும் என்று வேண்டிக் கொள்ளும் சில மருமகள்கள் இருக்கிற காலத்தில் இந்த மருமகள் ரொம்பவும் நல்லவர்.
ஆக மருமகள் சொல்ல வந்தது வேறு. மாமியார் நினைத்துக் கொண்டது வேறு. அதே மாதிரி நான் சொல்ல வந்தது வேறு. நீங்கள் எடுத்துக் கொண்டது வேறு. என்ன பண்றது. வடிவேலு கணக்கில் புலம்பல்தான் வருகிறது. ஹய்யோ... ஹய்யோ!

கணினியும் நீங்களும் - பகுதி 37

(மலேசிய நண்பன் ஞாயிறு நாளிதழில் கணினியும் நீங்களும் கேள்வி பதில் பகுதியை நடத்தி வருகிறேன். அந்தப் பகுதியின் பழைய கேள்வி பதில்களைக் கட்டம் கட்டமாக இந்த வலைப்பூவில் பிரசுரித்து வருகிறேன். பழைய எல்லாப் பகுதிகளும் வெளி வந்த பின்னர், ஞாயிற்றுக் கிழமைகளில் பிரசுக்கப் படும் அதே பகுதி அதே தினத்தில் இந்த வலைப் பதிவிலும் பிரசுரிக்கப் படும். உலகில் உள்ள அனைத்துத் தமிழர்களும் படிக்க வேண்டும்.பயன் அடைய வேண்டும்.நீங்கள் மின்னஞ்சல் வழியாகக் கேள்விகள் கேட்கலாம். உங்கள் கேள்விகள் நாளிதழிலும் வெளிவரும். இணையத்திலும் வரும். இந்த வலைப்பூவைப் படித்த கோவையைச் சேர்ந்த துரை.வேலுமணி, குவாயித்திலிருந்து விஷ்ணு என்பவர்கள் கேள்வி கேட்டார்கள்.மின்னஞ்சல் வழி பதில் வருகிறது.)

ஜேம்ஸ் வசந்தன் jamesvasanthan@gmail.com

கே: நான் Acer
மடிக்கணினியைப் பயன் படுத்துகிறேன். அதனுடைய திரையில் அழுக்கு படிகிறது. எப்படி சுத்தம் செய்வது. ஷாம்பு போட்டு துடைக்கலாம் என்று என் நண்பர் சொல்கிறார்?

ப:
மனிதர்கள் குளிக்கத் தலைக்குப் ஷாம்பு போடுகிறார்கள். அதைப் போட்டு கணினியைக் கழுவலாம் என்று உங்கள் நண்பர் சொல்கிறார். கொஞ்சம் வித்தியாசமான புரட்சிகரமான சிந்தனை. முடிந்தால் துணி துவைக்கிற மிஷ’னில் போட்டு துவைத்து எடுங்கள். வெளியே இருக்கும் கொடிக் கம்பியில் காயப் போடுங்கள் என்று சொன்னாலும் சொல்வார். அப்படியே நீங்கள் செய்தாலும் செய்வீர்.

கணினியின் LED திரை மிக மிக நுட்பமானது. அதைச் சுத்தம் செய்ய சவர்க்காரம் ஷாம்பு எல்லாம் பயன் படுத்தக் கூடாது. வெது வெதுப்பான நீர் போதும். லேசான துணியைக் கொண்டு துடைத்து எடுக்க வேண்டும். குளிர்ந்த நீரைப் பயன் படுத்தக் கூடாது. தினசரி செய்தாலும் நல்லதுதான்.

கணினி என்பது மனிதன் கண்டுபிடித்த ஒரு நுட்பமான பொருள். பாவம் அது. கஞ்சிக் குடிக்க காசு கேட்பதும் இல்லை. வெளியே போய் வியர்வை சிந்தி வெட்டி முறிக்கிற வேலை செய்வதும் இல்லை. சரியா. அதனால் அதற்குச் சவர்க்காரம் போட்டு குளிப்பாட்ட வேண்டிய அவசியமும் இல்லை. சாதாரண சுடுநீரே போதும்.


கிருஷ்ணமூர்த்தி krishnacsb@gmail.com
கே: நம்முடைய 'சிடி' யில் கீறல்கள் விழுந்து பழுதடைந்து போனால் அதிலுள்ள தகவல்களை மீட்க முடியுமா?

ப:
முடியும். CDDVD Recovery, Badcopypro, CD Check  போன்ற நிரலிகள் உள்ளன. 'சிடி' களில் கீறல் விழுந்தால் அதைப் பயன் படுத்த முடியாதே என்ற அச்சம் வேண்டாம். நான் பயன் படுத்தியதில் ஓரளவுக்குத் திருப்தி. எல்லாத் தகவல்களையும் மீட்க முடியும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. ரொம்ப மோசமாகக் கீறல்கள் இருந்தால் கொஞ்சம் சிரமம் தான். கீழே காணும் இணையத் தளங்களுக்குப் போய் அந்த நிரலிகளை இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். கெட்டுப் போன சிடி களிலிருந்து உங்களுடைய தகவல்பொக்கிஷங்களை மீட்டுக் கொள்ளுங்கள்.
 http://diskinternals.com/cddvdrecoverry/
 www.jusoft.com/badcopy/ udfrecover.asp
 www.softwarepatch.com/software/cdrecovery.html


எஸ்.கிருஷ்ணன்  krishnan.singai@gmail.com
கே: Tarzan கணினி விளையாட்டு கிடைக்குமா. நம்முடைய குழந்தைகள் ஆசைப் படுகிறார்கள். ஓர் இடத்தைச் சொல்லுங்கள்?

ப: பிள்ளைகளுக்கு டார்சன் விளையாட்டுகள் என்றால் ரொம்பப் பிடிக்கும். இடத்தைச் சொல்கிறேன். போய் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். மிகவும் அருமையான விளையாட்டு. முன்பு 30 அமெரிக்க டாலர் கொடுத்து வாங்க வேண்டும். இப்போது இலவசமாகக் கிடைக்கிறது. மலேசியாவிலிருந்து ஒரே சமயத்தில் இருபது பேர் மட்டுமே பதிவிறக்கம் செய்ய முடியும். இடம் கிடைக்கவில்லை என்றால் ஒரு மணி நேரம் பொறுத்து மறுபடி முயற்சி செய்யுங்கள். கண்டிப்பாகக் கிடைக்கும். பதிவிறக்கம் செய்தவர்கள் எனக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.

http://rapidshare.com/files/229652768/Pc_Games-Tarzan_Game.zip  அல்லது
http://files-express.com/download.php?file=Tarazan.rar


சுகுமாறன் நாயர்   ncsukumaran@yahoo.com
கே: என்னுடைய கைப்பேசியில் சில Ringtone களைப் போட்டு இருக்கிறேன். சாதாரண எம்.பி3 பாடல்களை ரிங் டோன்களாக மாற்ற விரும்புகிறேன். அதற்குப் பொருத்தமான இலவசமான நிரலி கிடைக்குமா?

ப:
MP3 பாடல்களைக் கைப்பேசியில் அழைப்பு மணிகளாக மாற்ற நிரலிகள் உள்ளன. எல்லா இளைஞர்களூக்கும் உள்ள ஆசைதான் உங்களுக்கும்.
http://rapidshare.com/files/47456944/MAGIX.Ringtone.Maker.2.0.1.3.Silver.rar
அல்லது
http://rs296.rapidshare.com/files/318151880/Ace.Mobile.Software.Ringtones.Maker.v1.2.0.0.rar
எனும் இடத்தில் கிடைக்கும். போய் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

வாசகர்கள் பல விதமான கணினிப் பிரச்னைகளைக் கொண்டு வருகிறார்கள். பலவகையான இலவச நிரலிகள், உதவிகளைக் கேட்கிறார்கள். சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, தூங்கிக் கொண்டிருக்கும் போது அழைப்புகள் வரும். ஒரு வாரத்தில் கணினி தொடர்பாக நாற்பது ஐம்பது அவசர அழைப்புகள் வரும். சந்தோஷம். இந்த இடத்தில் நான் ஒன்றைச் சொல்ல ஆசைப் படுகிறேன்.

உதவி பெற்றவர்கள் நன்றி சொல்லக் கற்றுக் கொள்ள வேண்டும். உதவி கிடைத்த பிறகு நீ யாரோ நான் யாரோ எனும் போக்கை மாற்ற வேண்டும். மனித நேயம் மறையவில்லை என்று மற்றவர்கள் சொல்ல வேண்டும்.

05 ஏப்ரல் 2010

கணினியும் நீங்களும் - பகுதி 36

(மலேசிய நண்பன் - 15.11.2009 ஞாயிறு நாளிதழில் வெளியானது)
மலேசிய நண்பன் ஞாயிறு நாளிதழில் வெளியான கேள்வி பதில் பகுதியைக் கட்டம் கட்டமாகப் பிரசுரித்து வருகிறேன். பழைய எல்லாப் பகுதிகளும் வெளி வந்ததும் பின்னர் மலேசியாவில் ஞாயிற்றுக் கிழமைகளில் பிரசுக்கப் படும் அதே பகுதி அதே தினத்தில் இந்த வலைப் பதிவிலும் பிரசுரிக்கப் படும். உலகில் உள்ள அனைத்துத் தமிழர்களும் படிக்க வேண்டும். பயன் அடைய வேண்டும். இந்தக் கேள்வி பதில் அங்கத்தை நான் மலேசியாவில் நடத்தி வருகிறேன்.

விஜயா சுப்பிரமணியம்  svijiya@yahoo.com


கே: சார், ஒருவர் எனக்கு அடிக்கடி தேவை இல்லாத மின்னஞ்சல்கள் அனுப்பி வருகிறார். யார் எவர் என்று தெரியவில்லை. தப்பாக எழுதுவது இல்லை. இருந்தாலும் சில சமயங்களில் அளவுக்கு அதிகமாகப் போய் விடுவதும் உண்டு. அமெரிக்காவில் இருப்பதாகச் சொல்கிறார். அவருடைய மின்னஞ்சல் முகவரியை அனுப்பி இருக்கிறேன். உண்மையிலேயே அமெரிக்காவில் தான் இருக்கிறாரா என்று கண்டுபிடித்துச் சொல்ல முடியுமா? உதவி செய்யுங்கள் அய்யா.

ப: தொல்லைகள் காலை வணக்கம் சொல்லுவதும் இல்லை. தொந்தரவுகள் மாலை வணக்கம் சொல்லுவதும் இல்லை. இரண்டுமே ஒரே குட்டையில் ஊறிய ஜடாமுனிகள். நமக்கு வரும் மின்னஞ்சல்களினால் தொல்லைகள் தொந்தரவுகள் வருகின்றன என்றால் ஆரம்பத்திலேயே அவற்றைக் கிள்ளி வீசி விடுவது நல்லது. ஆறப் போட்டால் ஆழமான காயங்கள்தான் மிஞ்சும்.

உங்கள் கேள்விக்கு வருகிறேன். ஏன் அவரைப் பற்றிய பெரிய பெரிய ஆராய்ச்சி எல்லாம் நடத்த வேண்டும். தலை போகிற விஷயம் எதுவும் இல்லையே. மின்னஞ்சல் அனுப்புவர்கள் எல்லாரும் நல்லவர்களாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கக் கூடாது. நல்ல எண்ணங்களும் உண்டு. நாசம் நினைக்கும் வக்கிர புத்திகளும் உண்டு. அவருடைய மின்னஞ்சல் இனி தொடர்ந்து வருவதும் போவதும் உங்கள் கைகளில்தான் இருக்கிறது. பார்த்துப் பழகுங்கள். வேண்டாம் என்றால் நிறுத்தி விடுங்கள். உங்கள் மின்னஞ்சல் பகுதியில் Settings >> Filter என்ற இடத்திற்குப் போகவும். அவருடைய மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்து தடுத்து விடலாம்.

நீங்கள் கொடுத்த மின்னஞ்சல் முகவரியைப் பாதுகாப்புக் காரணங்களுக்காக இங்கே இடம் பெறவில்லை. சரி. அவர் இருக்கும் இடத்தைத் தெரிந்து கொண்டு என்ன செய்யப் போகிறீர்கள் என்றுதான் தெரியவில்லை. இருந்தாலும் சொல்கிறேன். IP Locator எனும் நிரலியைப் பயன் படுத்தி அவர் எங்கே இருக்கிறார் என்பது கண்டுபிடித்தாகி விட்டது.

இவர் அந்த மின்னஞ்சல் முகவரியைப் பாகிஸ்தான் நாட்டில் பதிவு செய்திருக்கிறார். கடைசியாக தமிழ்நாட்டில் உள்ள கோயம்புத்தூரிலிருந்து மின்னஞ்சல் அனுப்பி இருக்கிறார். NASA வின் துணைக் கோள நிரலியைப் பயன்படுத்தி அவர் வீட்டு முகவரியையும் கண்டுபிடிக்க முடியும். அவர் வீட்டின் கூரை என்ன நிறம் என்பதையும் சொல்ல முடியும். மின்னஞ்சல் விஷயங்களில் எச்சரிக்கையாக இருங்கள்.

அசோக் முகிலன்  ashok_mugilan@gmail.com

கே:விண்டோஸ் 7 வந்துவிட்டது. இதைப் பற்றிய உங்கள் கருத்து என்ன? விண்டோஸ் 7ஐப் பயன் படுத்துவதால் பிரச்னை இல்லையே?

ப: மைக்ராசாப்ட் நிறுவனம் கடந்த அக்டோபர் மாதம் 22ஆம் தேதி உலகம் முழுமையும் விண்டோஸ் 7ஐ அறிமுகம் செய்தது. புதிய வேடிக்கை அம்சங்கள், எளிமையான இயக்கம், கூடுதல் பாதுகாப்பு போன்றவை இணைக்கப்பட்டுள்ளன. கணினியைத் திறக்கும் நேரம் மிகவும் குறைவு என்பது விண்டோஸ் 7 ன் சிறப்பு அம்சம்.

உலகில் 80 இலட்சம் பேர் சோதனை செய்து அவர்களின் கருத்துகளுக்கு ஏற்ப வெளியீடு செய்யப்பட்டது. பழைய விஸ்தாவின் தொண தொணப்பு முணுமுணுப்பு இல்லை. இந்தியாவில் பெங்களூர் அனைத்துலக விமான நிலையத்தில்தான் முதன்முதலில் சோதனை செய்து பார்த்தார்கள். விண்டோஸ் 7ல் மொத்தம் ஆறு வகைகள் உள்ளன. அவையாவன: 1. Starter  2. Home Premium  3. Home Basic  4. Professional  5. Enterprise  6. Utimate.

இதில் Home Premium விலை 463 ரிங்கிட். Professional விலை 500 ரிங்கிட். Ultimate விலை 760 ரிங்கிட். இவற்றில் முதல் மூன்று Starter, Home Premium, Home Basic வகைகளில் சில சிறப்பான அம்சங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன. விலை கூடுதலாக உள்ள மற்ற மூன்று Professional, Enterprise, Utimate வகைகளில் எல்லா சிறப்பு அம்சங்களும் உள்ளன.

பில் கேட்ஸ் நன்றாகவே தன் வியாபார தந்திரத்தைக் கையாண்டுள்ளார். அவருக்குப் பாராட்டுகள். விண்டோஸ் விஸ்தாவின் குளறுபடிகளினால் ஏமாந்து போன வாடிக்கையாளர்கள் விண்டோஸ் 7ஐ வரவேற்பார்கள். பொறுத்து இருந்து பார்ப்போம்.


லஹ்சிமி சாந்தி lakshmi_shanthi2003@yahoo.com

கே: நான் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறேன். என்னுடைய வேலைகள்
பெரும்பாலும் கணினி மூலமாக நடைபெறுகிறது. Mouse எனும் சுழலியை அதிக நேரம் பயன்படுத்துவதால் கைகளில் வலி ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க உங்கள் ஆலோசனை என்ன?

ப: நல்ல கேள்வி. Mouse எனும் சுழலி மனித வாழ்வில் கலந்துவிட்ட ஒரு சாதனம். கணினி இன்றியமையாத ஒரு பொருளாகி விட்டது. தொடர்ந்து பல மணி நேரம் சுழலியைப் பயன் படுத்தக் கூடாது. கைகளில் உள்ள மணிக்கட்டுகளில் எலும்பு தேய்மானம் ஏற்படுவதாக மருத்துவர்கள் சொல்கிறார்கள். இதை ஆங்கிலத்தில் Musculo Skeletal Injury என்று அழைக்கிறார்கள். சுழலியைப் பிடித்துப் பயன் படுத்துவதில் சில வழிகள் உள்ளன.

1. சுழலியைப் பிடித்திருக்கும் முறையில் பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

2. சுழலியை இறுக்கிப் பிடிக்க வேண்டாம். மெதுவாகப் பிடித்துப் பழகுங்கள்.

3. சுழலியைப் பிடிக்கும் போது மணிக்கட்டுத் தசையை அதிகமாக அசைக்க வேண்டாம். முழங்கை தசைதான் மையமாக இருக்க வேண்டும். மணிக்கட்டை நேராக நடுவாக வைத்துக் கொள்ளுங்கள்.

4. நாற்காலியில் நன்றாகச் சாய்ந்து உட்கார்ந்து கொள்ளுங்கள். கைகள் தளர்வாக இருக்க வேண்டும். சுழலி இரண்டு அங்குலம் தட்டச்சுப் பலகைக்கு கீழாக இருக்க வேண்டும்.

5. சிறிய அளவிலான சுழலிகளைப் பயன் படுத்த வேண்டாம். சுழலி கொஞ்சம் பெரிதாக இருக்க வேண்டும்.

6. நாகரிகம் என்ற பெயரில் விதம் விதமான சுழலிகள் எல்லாம் வருகின்றன. அவை பிரச்னைகளைத் தான் கொடுக்கும். சில நிறுவனங்கள் மருத்துவ ரீதியாக ஆராய்ச்சி செய்து பெரிய அளவிலான சுழலிகளைத் தயாரிக்கிறார்கள். இவை மணிக் கட்டிற்கு வேலையை குறைத்து நன்மை செய்கின்றன.

கணினியும் நீங்களும் - பகுதி 35

(மலேசிய நண்பன் - 8.11.2009 ஞாயிறு நாளிதழில் வெளியானது)
மலேசிய நண்பன் ஞாயிறு நாளிதழில் வெளியான கேள்வி பதில் பகுதியைக் கட்டம் கட்டமாகப் பிரசுரித்து வருகிறேன். பழைய எல்லாப் பகுதிகளும் வெளி வந்ததும் பின்னர் மலேசியாவில் ஞாயிற்றுக் கிழமைகளில் பிரசுக்கப் படும் அதே பகுதி , அதே தினத்தில் இந்த வலைப் பதிவிலும் பிரசுரிக்கப் படும். உலகில் உள்ள அனைத்துத் தமிழர்களும் படிக்கலாம்.

மா.தர்மசீலன், ஜெலாப்பாங், ஈப்போ
கே: நான் அண்மையில் Acer மடிக்கணினியை RM2600 கொடுத்து வாங்கினேன். அதில் விண்டோஸ் விஸ்த்தாவைப் பதித்துக் கொடுத்தார்கள். எனக்கு விஸ்த்தா பிடிக்கவில்லை. பழைய எக்ஸ்.பிக்கு போக விரும்புகிறேன். நான் என் கணினியை எடுத்து வந்தால் மாற்றிக் கொடுப்பீர்களா?

ப:
சளி காய்ச்சல் வரும் அளவிற்கு என்னைப்  புகழ்ந்து தள்ளி இருக்கிறீர்கள். இது மழைக்காலம் வேறு. வருவதற்கு முன்னால் என் கைப்பேசி எண்களுக்கு அழைத்துவிட்டு வாருங்கள். இந்த இடத்தில் என் அனுபவத்தைக் கண்டிப்பாகச் சொல்ல வேண்டும்.

எந்தக் கணினியாக இருந்தாலும் சரி.  பழுது பார்த்து விடலாம். அதற்கு என்று பழைய பழைய கணினிகளை எல்லாம் தூக்கிக் கொண்டு வந்தால் என்ன செய்வது.  ரொம்ப ரொம்பப் பழசான, பத்து வருஷத்திற்கு முன்னால் வந்த கணினிகளைத் தூக்கிக் கொண்டு வந்து 'ரிப்பேர்' செய்யுங்கள் என்கிறார்கள். தவிர்க்கப் பார்த்தால் 'வேலைத் தெரியாத வெள்ளைக்கு வெற்றிலை பாக்கு முக்கியம்' என்று மௌன கீதங்கள் வேறு.

1997ல் செய்யப்பட்ட  கணினியைத் தூக்கிக் கொண்டு ஒருவர் என் வீட்டிற்கு வந்தார். 'இது எங்கள் பரம்பரைச் சொத்து. நீங்கள்தான் உயிர் கொடுக்க வேண்டும்' என்றார். கணினியைப் பார்த்ததும் எனக்குத் தெரிந்து விட்டது. காட்டிற்குப் போக வேண்டியது வீட்டிற்கு வந்திருக்கிறது என்று. இருந்தாலும் அவர் மனசு நோகக்கூடாது என்பதற்காகக் கழற்றிப் பார்த்தேன். என்ன செய்வது. சொல்லுங்கள்.

பாவம் அந்தக் கணினி. சாவதற்கு முன்னால் ரொம்ப நாளாய் வாழ்வே மாயம் பாடி இருக்கிறது. யாருக்கும் கேட்கவில்லை. உள்ளே இருந்த கொஞ்ச நஞ்சத்தையும் கரையான் சாப்பிட்டு ஏப்பம் விட்டிருக்கிறது. இது அவருக்கும் தெரியாது. சொன்னாலும் புரியாது. அதற்குப் போய் உயிர் கொடு என்றால் எப்படி அய்யா கொடுப்பது. பார்த்தால் இவரைத் தான் கழற்றி 'ரிப்பேர்' செய்ய வேண்டும் போல இருந்தது.

தாத்தாப் பாட்டிகளைத் தூக்கி வந்து அவர்களை அசின் அர்ஜுன் மாதிரி மாற்றிக் கொடுங்கள் என்றால் முடியுமா. 'மேக்கப்' போட்டு செய்து விடலாம். எத்தனை நாளைக்கு. பழம் பெரும் கணினிகளுக்குப் பொருத்தமான உதிரிப் பாகங்கள் இப்போது கிடைப்பது கஷ்டம். அந்த மாதிரி உதிரிப் பாகங்கள் தயாரிப்பதை நிறுத்தி விட்டார்கள். 

அப்படியே கிடைத்தாலும் அதிகமான விலை. ஒரேயடியாக Mother Board எனும் தாய்ப்பலகை, CPU எனும் மத்திய செயலாக்கி போன்றவற்றை மாற்றிவிட்டால் நல்லது. பிரச்னை தீர்ந்தது. விலையும் குறைவு. புதிதாக வரும் கணினியின் உதிரிச் சாதனங்களுக்கு விலை ரொம்பவும் குறைவு. அதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இரண்டையும் மிஞ்சி மிஞ்சிப் போனால் RM400க்குள் அடக்கிவிடலாம். ஒரு புத்தம் புதிய, மிக மிக நவீனமான கணினியை RM850க்குள் செய்து முடிக்கலாம்.

செம்மதி  chemmathy@gmail.com
கே: கைப்பேசிகளை அதிக நேரம் பயன்படுத்தினால் மூளையைப் பாதிக்கும் என்று  அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்து இருக்கிறார்கள். இது எந்த அளவுக்கு உண்மை?

ப:
உண்மையிலும் உண்மை. காரணம் மின்காந்த அலைகள்தான். கைப்பேசிகள் ஒரு வகையான அலைக் கற்றைகளை வெளியிடுகின்றன. இந்த அலைக் கற்றைகளில் இருந்து கதிர்வீச்சு வெளியாகிறது. அனைத்து வகையான கதிர்வீச்சுகளும் சிறுவர்களையும் இளைஞர்களையும் அதிகம் பாதிக்கும். எக்ஸ்ரே, அணுக்கழிவுகளும் ஆபத்தானவை.

கதிர்வீச்சுகள் ஓர் அளவுக்குள் இருக்க வேண்டும். இந்த கதிர்வீச்சுகளின் அளவை Specific Absorption Rate என்று சொல்வார்கள். இதன் அளவு 0.6 அல்லது அதற்கும் குறைவாக இருக்க வேண்டும். கைப்பேசியின் கதிர்வீச்சுத் தன்மை குறைவுதான். இருந்தாலும் நீண்டகாலம் தொடர்ந்து பயன் படுத்தினால் காதுகளில் உள்ள எட்டாவது 'கிரேனியல்' நரம்பில் புற்று நோய் வர வாய்ப்பு அதிகம்.

அமெரிக்க கண்டுபிடிப்புகள் சொல்கின்றன. சிலர் இடுப்பில் கைப்பேசியை வைத்துக் கொள்வார்கள். அந்த வகையில் அங்கே இருந்து வெளியாகும் கதிர்வீச்சுகள் ஆண்களுக்கு ஆண்மைக் குறைவை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கை செய்கிறார்கள்.

சின்ன அறிவுரை. 24 மணிநேரமும் கைப்பேசியில் தொங்கிக் கொண்டு இருப்பது நன்றாக இல்லை. மற்றவர் பார்த்து மெச்ச வேண்டும் என்று பந்தா காட்டுவதும் நன்றாக இல்லை. முக்கியமான காரணங்களுக்காகக் கைபேசியைப் பயன் படுத்தினால் போதும். என்னையும் பார் என் அழகையும் பார் என்று கைப்பேசியில் தொங்கிக் கொண்டிருந்தால் ஒரு நாளைக்கு அது உங்களைத் தொங்க வைத்து விடும்.

திருமதி.சரவணா பாக்கியம், புக்கிட் மெர்தாஜாம் (குறும் செய்தி 18.11.2009)
கே: குழந்தைகள் கணினியில் விளையாடும் போது அவர்களுக்கு சோறு ஊட்டுவது நல்ல பழக்கமா?

ப:
யார் கெட்டப் பழக்கம் என்று சொன்னது. சில குழந்தை களுக்குச் சோறு சாப்பிடுவது என்றால் விஷத்தைச் சாப்பிடுகிற மாதிரி. அப்போதுதான் இல்லாத சேட்டைகள் எல்லாம் வரும். நிலாவைக் காட்டி ஏமாற்ற முடியாது. அது அந்தக் காலம். இப்போது உள்ள குழந்தைகளுக்கு 'ரிமோட் கண்டரோலர்' இல்லை என்றால் சோறு தொண்டையிலேயே நின்று கொள்ளும். கீழே இறங்காது. 

அந்த மாதிரி குழந்தை களுக்கு கணினிதான் சரியான மருந்து. ஆக, சாப்பிடாமல் இருந்தால் குழந்தைகளுக்குத் தான் அது இது என்று வரும். தூக்கிக் கொண்டு கிளினிக்கிற்கு ஓட வேண்டும். அப்புறம் டாக்டர் கட்டணம் எகிறிக் கொண்டு முறைக்கும். ஏன் அந்த அவஸ்தை. அதற்கு இப்படியாவது சாப்பிட்டு விட்டுப் போகட்டுமே. சந்தோஷப் படுவோம்.

Keyboard எனும் விசைப் பலகையில் உணவு சிந்திப் பழுதாகிப் போகுமே என்ற கவலையா. அதற்கு இப்படிப் பாருங்கள். ஒரு தடவை குழந்தையைத் தூக்கிக் கொண்டு கிளினிக்கிற்குப் போனால் குறைந்து குறைந்து முப்பது வெள்ளி வாங்கி விடுவார்கள். அதோடு விட்டால் பரவாயில்லையே. அடுத்து அடுத்து அலைய வேண்டுமே. அதற்கு ஒரு விசைப் பலைகையைப் பத்து வெள்ளிக்கு வாங்கி விடலாம்.

இந்தா அடிச்சு பிடிச்சு உடைச்சுக்கோ என்று கொடுத்தும் விடலாம். அந்த  ஒரு குழந்தையின் சந்தோஷத்தைப் பத்து வெள்ளிக்கு வாங்கிவிட முடியுமா. அதனால் குழந்தை கள் கணினியில் விளையாடும் போது அவர்களுக்கு சோறு ஊட்டுவது தப்பில்லை என்பது என் கருத்து. அதற்கு என்று வீட்டில் உள்ள சிறிசு பெரிசுகளை எல்லாம் கூப்பிட்டு, உட்கார வைத்து சோறு ஊட்டக் கூடாது. இது ரொம்ப தப்பு.