20 பிப்ரவரி 2011

கோல்கொண்டா வரலாறு

வைரங்களும் வைடூரியங்களும்

கொட்டிக் கிடந்த பூமியின் கலசங்கள் தெரிகின்றன. காலப் பிரளயத்தில் கதை சொல்ல முடியாத காவியக் கலைகள் தெரிகின்றன.  அன்று ஒரு நாள் இதே நிலவில் ஆயிரம் ஆயிரம் அழகிகள் ஆடிப் பாடினார்கள்.


அதனால் ஆர்ப்பரித்துப் போன கோபுர வாசல்கள் தெரிகின்றன. நல்லவர்களும் கெட்டவர்களும் நாடி ஜோசியம் பார்த்தார்கள். அந்த நளினங்கள் தெரிகின்றன. சல்லாபங்களுக்கும் சரசங்களுக்கும் சமரசங்கள் பாடிய கருங் கோட்டைச் சுவர்களும் தெரிகின்றன. என்ன செய்வது.

அப்பேர்ப் பட்ட கோல்கொண்டாவின் இப்போதைய நிலையைப் பாருங்கள். வேதனையாக இருக்கிறது. எல்லாமே இப்போது இடிந்து போய் தெருப் புழுக்களாய்த் தெரிகின்றன. எல்லாமே எலும்பும் தோலுமாய்ச் சரித்திரம் பேசுகின்றன.

அவை எல்லாம் ஆந்திர பிரதேசத்தின் கடந்த காலத்தைப் புரட்டிப் பார்க்கின்றன. அந்தச் சுவட்டை நாமும் கொஞ்சம் விரட்டிப் பார்ப்போம்.

ஒரு காலத்தில் கோல்கொண்டாவின் புகழ் உலகம் பூராவும் பரவிக் கிடந்தது. இந்தியாவைப் பிடிக்க வந்தவர்கள் எல்லாரும் கோல்கொண்டாவின் மீது கை வைக்காமல் போனது இல்லை.


அந்த அளவிற்கு கோல்கொண்டா பிரசித்தி பெற்றது. கோல்கொண்டா என்று சிலர் கேள்வி பட்டிருக்கலாம். ஆனால், அதன் உண்மையான ரகசியங்கள் பலருக்குத் தெரியவே தெரியாது.

1960 களில் ரேடியோ மலேசியா என்று அழைக்கப் பட்ட  இன்றைய மலேசிய வானொலி எனும் மின்னல் எப்.எம். வாரத்திற்கு ஒரு முறை நேயர் விருப்பம் போடுவார்கள். அதைக் கேட்க தோட்ட மக்களே திரண்டு நிற்பார்கள். 

நான் பிறந்து வளர்ந்த மலாக்கா டுரியான் துங்கல் காடிங் தோட்டத்தைச் சொல்கிறேன். நேயர் விருப்பத்திற்கு அப்பேர்ப்பட்ட மவுசு. அதில் கோல்கொண்டா தோட்டத்தின் பெயர் வாரம் தவறாமல் வரும்.

அந்தத் தோட்டம் இப்போது அத்திம் மேடாக மாறி இருக்கலாம். இதை ஏன் சொல்ல வருகிறேன். இந்தக் கோல்கொண்டா எனும் பெயர் உலகில் பல நாடுகளில் பல இடங்களின் பெயர்களாக மாறி இன்னும் உச்சத்தில் இருக்கிறது. அதே மாதிரிதான் இங்கே மலேசியாவில் இருந்தது அந்தக் கோல்கொண்டா. 

கோல்கொண்டா அல்லது Golconda என்பது ஓர் ஆந்திரச் சொல். உருதுச் சொல் என்றும் ஒரு சிலர் சொல்கிறார்கள். அது அவர்கள் விருப்பம். ஒரு காலத்தில் சாளுக்கிய மன்னர்கள் தென் இந்தியாவை ஆண்டு வந்தார்கள். ஓர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தது.

சாளுக்கிய மன்னர்கள் தென் இந்தியாவின் வட பகுதியை ஆண்டு வந்தார்கள். சோழர்கள் தென் பகுதியை ஆண்டு வந்தார்கள். இவர்களுக்குள் அடிக்கடி சண்டை.

இந்தச் சண்டைகள் பெரிதாகிப் போய் கடைசியில் ஒரு பயங்கரமான போராக வெடித் தது. அதுதான் சாளுக்கிய-சோழப் போர். கி.பி. 950ல் நடந்தது.


இதில் சாளுக்கியர்கள் தோற்றுப் போனார்கள். இந்தச் சமயத்தில் சாளுக்கியர்களின் பிரதிநிதியாக இருந்த இரண்டாம் அம்மா என்கிற சிற்றரசன் தனக்கு என்று ஒரு தனி நாட்டை உருவாக்கிக் கொண்டான்.

ஆந்திர பிரதேசத்தில் ஹைதராபாத் நகரைச் சுற்றியுள்ள நிலப்பகுதிதான் அந்தத் தனி நாடு. மலேசியாவின் பேராக் மாநில அளவிற்குப் பெரியது.

அதற்கு காக்காத்தியா அரசு என்று பெயரையும் சூட்டினான். Kakatiya Dynasty என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். ஹைதராபாத்தைச் சுற்றிலும் உள்ள பகுதிதான் இந்தக் காக்காத்தியா அரசு.

அப்புறம் இந்த அரசு பற்பல தடைகளைத் தாண்டி நல்லபடியாக முன்னேறி வந்தது. இந்தக் காக்காத்தியா மன்னர்கள்தான் கோல்கொண்டா கோட்டையைக் கட்டினார்கள். இந்தக் கோட்டைக்குப் பின்னால் ஒரு கதையே இருக்கிறது.

கி.பி.1143 ஆம் ஆண்டு. ஓர் இடையன் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கும் போது ஓர் அழகான சிலையைக் கண்டு எடுத்தான். அந்தச் சிலையைக் கொண்டு போய் மன்னரிடம் கொடுத்தார்கள்.

அதன் அழகில் இலயித்துப் போன மன்னன் சிலை கண்டு எடுக்கப்பட்ட இடத்திற்கு கோலா கொண்டா என்று பெயரைச் சூட்டினான்.


கோலா கொண்டா என்பது ஆந்திரச் சொல். ஆடு மேய்க்கும் இடையனின் குன்று என்று அர்த்தம். அந்த இடத்தின் பழைய பெயர் மங்களவரம். இப்படித் தான் கோலா கொண்டா என்பது கோல்கொண்டா எனும் பெயர் மாறி சரித்திரம் படைத்தது.

கோல்கொண்டா கோட்டையை ஓர் அரசன் கட்டவில்லை. பலர் கட்டினர். 13ஆம் நூற் றாண்டில் கட்டப்பட்டது. மிக அற்புதமான கருங்கல் கோட்டை. தப்பு.  கருங்கல்லாலும் பளிங்குக் கற்களாலும் கட்டப்பட்ட மிகப் பிரமாண்டமான கல் ஓவியம்.


ஹைதராபாத்தில் இருந்து பதினொரு கிலோமீட்டர் தொலைவில் இன்னும் இருக்கிறது. பல போர் வெறியர்களின் தாக்குதலால் ரொம்பவும் சேதம் அடைந்து விட்டது.

இந்தக் கோட்டையைக் கட்டிய பிறகு தான் காக்காத்தியா அரசுக்கு கோல்கொண்டா சாம்ராஜ்யம் எனும் பெயரும் வந்தது. கோல்கொண்டா கோட்டை ஒரு மனோரஞ்சிதமான கோட்டை. முழுக்க முழுக்க பளிங்கு கருங்கற்களால் கட்டி இருக்கிறார்கள். ஏழு கிலோமீட்டர் சுற்றளவுக்கு சுவர்களை எழுப்பி இருக்கிறார்கள்.

கோட்டையின் உயரம் 400 அடிகள். கட்டி முடிக்க 62 ஆண்டுகள் பிடித்திருக்கின்றன. கோட்டைக்கு உள்ளே ஒரு மாநகரமே இருந்திருக்கிறது.


அரண்மனைகள், தொழில் சாலைகள், குடிநீர் விநியோகத் திட்டம், பீரங்கிகள் சார்ந்த அரண்கள், பள்ளிக்கூடங்கள், கோயில்கள், வணிகச் சந்தைகள், விளையாட்டு மைதானங்கள், புல்வெளிகள், நீர்மனைகள், நேர்த்திக் கடன் இல்லங்கள், சூதாட்ட மையங்கள், குதிரை இலயங்கள், நீதிமன்றங்கள், இத்யாதி இத்யாதி. மன்னிக்கவும்.

இப்போது உள்ள கட்டிடக் கலைஞர்கள் எல்லாம் அவர்களிடம் பாடம் படிக்க வேண்டும். இதில் ஓர் அதிசயம் என்ன தெரியுமா.

கோட்டையின் வாசல் படியில் இருந்து இரண்டு கைகளையும் தட்டினால் அந்தச் சத்தம் ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பாலா இசார் எனும் ஓர் உயரமான இடத்திலும் கேட்கிறது. என்னே ஒலி அலை அற்புதங்கள். நம்ப முடியவில்லை.

கோல்கொண்டா கோட்டைக்குப் போவதற்கு முன்னால்
என் மனைவியை ஆசிர்வதிக்கும் ஒரு கோயில் கணபதியார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் நானும் என் மனைவி ருக்குமணியும் போய்ப் பார்த்தோம். இப்படி எல்லாம், கோட்டைகளைக் கட்டி அழகு பார்த்து இருக்கிறார்களே என்று பிரமித்துப் போனோம்.

எங்கள் உள்ளங்களும் கூனிப் போயின.  எல்லாருடைய ஆழ்மனதிலும் உறக்கம் கொண்ட மகாமேடை அது. ஆழ்ந்து போன உலகக் கோட்டைகளில் இதற்கு முதல் இடம். சரி. விஷயத்திற்கு வருகிறேன்.

அவுரங்கசிப் எனும் மொகலாய அரசனைப் பற்றிக் கேள்வி பட்டிருப்பீர்கள். பெற்ற தந்தை ஷா ஷகானையே  கொண்டு போய் சிறையில் வைத்து வேடிக்கை பார்த்தவன்.

சொந்தச் சகோதரர்களையே காவு கொடுத்தவன். அவன் தான் ஆகக் கடைசியாகக் கோல்கொண்டா கோட்டையைத் துவம்சம் செய்தவன். கதை பிறகு வருகிறது.

காக்காத்தியா அரசு போன பிறகு பாமினி ஆளுமை வந்தது. பாமினியர்களில் ஒரு பகுதியினர் இஸ்லாம் சமயத்தைத் தழுவியர்கள். அவர்கள்தான் காக்காத்தியா அரசைக் கைப்பற்றி கோல்கொண்டா சாம்ராஜ்யத்திற்கு புத்துயிர் கொடுத்தவர்கள்.

கோல்கொண்டா கோட்டையைச் žரமைப்புச் செய்தவர்களும் கூட. இவர்களைக் குதுப் அரசர்கள் என்றும் சொல்வார்கள். அந்த வரிசையில் நான்காவதாக வந்தவர் குலி குதுப் ஷா வலி என்பவர்.

இந்தப் பாமினியர்கள் ஆட்சி செய்யும் போது மேலே மொகலாய சாம்ராஜ்யம் கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்தது. எந்த நேரத்திலும் மொகலாயர்கள் படை எடுப்பார்கள்.

அந்த அச்சத்தில் பாமினியர்கள் கோல்கொண்டா கோட்டையை மேலும் வலுப் படுத்தினார்கள். 1687 வரை கோல்கொண்டா சாம்ராஜ்யம் பாமினியர்கள் கைவசம் இருந்தது.

அந்தக் காலக் கட்டத்தில் கர்நாடகம், மகாராஷ்டிரா மாநிலங்களும் பாமினியர்களிடம்தான் இருந்தது. பாமினியர்கள் செல்வாக்குடன் வாழ்ந்த காலத்தில் மேலே அக்பர், ஜஹாங்கிர், ஷா ஷகான் போன்றவர்கள் டில்லியை ஆட்சி செய்து வந்தனர்.

இவர்கள் மூவருமே அதிகமாக வெளிநாட்டுப் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. விட்டுக் கொடுத்துப் போகும் மனப்பான்மை கொண்டவர்கள். அமைதியைக் கடை பிடித்தவர்கள். அதனால் பாமினியர்கள் நிம்மதியாகக் காலம் தள்ளினர்.

அவுரங்கசிப் பற்றி பீடிகை போட்டேன் அல்லவா. இந்தக் கட்டத்தில் அவர் வருகிறார். 1687ல் தன் படைகளைத் திரட்டிக் கொண்டு கீழே இறங்கி வந்தான். தன்னுடைய சாம்ராஜ்யத்தைப் பெரிதாக ஆக்க வேண்டும் எனும் வெறி. 

கோல்கொண்டாவைத் தாக்கினான். அவ்வளவு சுலபத்தில் விழவில்லை. ஒன்பது மாதங்கள் கோல்கொண்டா தாக்குப் பிடித்தது. அப்புறம் விழுந்தது.

1707ல் அவுரங்சிப் இறந்து போனான். ஏற்கனவே வெறி பிடித்துப் போய் ஷா ஷகானைச் சிறையில் அடைத்தான். ஷா ஷகான் ஒழுங்காக நாட்டை நடத்தவில்லை. இருக்கிற செல்வத்தை எல்லாம் கொண்டு போய் தாஜ் மகாலில் கொட்டினார். கஜானா காலி ஆகிறது எனும் ஆதங்கம்.

இதில் யார் அடுத்த மொகலாய அரசனாக வருவது எனும் போட்டி வேறு. இருந்த சகோதரர்களை எல்லாம் ஒரு வழி பண்ணிவிட்டு ஆட்சியைக் கைப்பற்றினான். அந்த வேகத்தில்தான் கோல்கொண்டாவிற்கு வந்தான்.

ஒன்பது மாதங்கள் வரை கோல்கொண்டா கோட்டையை முற்றுகை இட்டு தாக்குதல் மேல் தாக்குதல் நடத்தினான். அதோடு பாமினியர்களின் ஆட்சியும் ஒரு முடிவுக்கு வந்தது.

அவுரங்சிப் இறந்த பிறகு மொகலாய சாம்ராஜ்யமும் பலம் இல்லாமல் போனது. அவருக்குப் பிறகு பகதூர் ஷா என்பவர் வந்தார். சரியாக ஆட்சியை நடத்த முடியவில்லை. சன்னம் சன்னமாக மொகலாய சாம்ரஜ்யம் தேய்ந்து போனது. சரி. கீழே கோல்கொண்டாவிற்கு வருவோம்.

அவுரங்சிப் இறந்த கையோடு ஹைதராபாத்தில் இருந்த நிஜாம் தலை தூக்கினார். கோல்கொண்டாவைச் சுதந்திரப் பிரகடனம் செய்தார். இந்தக் கட்டத்தில் ஆங்கிலேயர்கள் இந்தியாவில் நுழைந்து விட்டார்கள்.

Divide and Rule எனும் மகா பெரிய தத்துவத்தைக் கண்டுபிடித்தவர்களும் அவர்களே. அதற்காக நோபல் பரிசுகளில் ஒரு பத்துப் பதினைந்து கொடுத்திருக்கலாம். என்ன செய்வது. அல்பிரட் நோபல் அப்போது பிறக்கவில்லையே. இருந்தாலும் உலகத்தில முக்கால்வாசியை அடித்துப் பிடித்து வாங்கிவிட்டார்களே. அதுவரை பாராட்ட வேண்டும்.

ஹைதராபாத் நிஜாம் இருக்கிறாரே இவர் பக்கா சந்தர்ப்பவாதி. வெள்ளைக்கார்கள், மராட்டியர்களுடன் சேர்ந்து கொண்டு திராவிட வீரன் திப்பு சுல்தானை ஒழித்துக் கட்டினார்.

அப்புறம் இந்தியா சுதந்திரம் அடையும் வரையில் கோல்கொண்டாவின் ராஜாவாகவும் இருந்தார். 

உலகத்திலேயே அதிகமாக வைரங்கள் தோண்டி எடுக்கப்பட்டது இந்தக் கோல்கொண்டாவில்தான். நுர் உல் அயின் வைரம், கோகினூர் வைரம், Hope வைரம், Regent வைரம் போன்ற உலகப் புகழ் பெற்றவை எல்லாம் இங்கே இருந்து போனவைதான். வரலாற்று ஏடுகளில் கோல்கொண்டா எப்போதும் நிலைத்து நிற்கும்.

கோல்கொண்டா மாபெரும் சாம்ராஜ்யமாக இருந்த போது இவை எல்லாம் தெரிந்த உண்மைகள். இப்போது இவை எதுவுமே தெரியவில்லை. மறைந்து விட்டன. ஏன்? காலம் செய்யும் கோலம்!  

14 பிப்ரவரி 2011

கறுப்புக் கன்னியின் கண்ணீர்க் கதை

காவேரி ஆறு கர்நாடகாவில் பிறக்கிறது. தமிழ்நாட்டில் தவழ்ந்து வருகிறது. வங்காள விரிகுடாவில் தத்துவம் பேசுகிறது. படர்ந்து வரும் பாதையில் பல கோடி உயிர்களின் கண்ணீரைத் துடைக்கிறது. பல கோடி பயிர்களின் தாகத்தைத் தீர்க்கிறது. பல கோடி வீடுகளில் அடுப்பு எரிய உதவுகிறது. பல கோடி நிலத்தில் பச்சைப் பாசிகளை உயிர்ப்பிக்கிறது.



அதனால் பாருங்கள், அங்கே  காய்ந்து போன அதன் கரிசல் காடுகளும் பாசுரம் பாடுகின்றன. நினைத்துப் பார்க்கும் போது நெஞ்சம் எல்லாம் நனைந்தும் போகிறது. 

அப்படி நனையும் அந்த நெஞ்சத்தில் இந்தக் காவேரி ஆறு யாருக்குச் சொந்தம் என்று நடக்கும் பங்காளிச் சண்டையினால் கானல் நீராகிப் போகிறது. எப்போது மொழி வாரியாக கர்நாடகத்தைப் பிரித்தார்களோ அப்போதே மதம் பிடித்த யானைக்கு வதம் செய்யும் தலைக்கனம் தலை தெறித்துப் போனது. பரவாயில்லை. அந்த உரிமைப் போராட்டம் பனிவனமாக மாறட்டும். வேண்டிக் கொள்வோம்.


நமக்குள் ஒற்றுமை இல்லை என்றால் மூன்றாம் வீட்டுக்காரன் நாட்டாமை செய்வான் என்று மலேசிய அறிஞர் காதர் இப்ராஹிம் அடிக்கடி சொல்வார். அவர் சொல்வது இப்போது நினைவிற்கு வருகிறது.

ஆக, ஒற்றுமை பந்தத்தை நிறுத்தி வைத்து அவர்களாகவே அந்தப் பிரச்னையைத் தீர்த்துக் கொள்ளட்டும். ஆனால், காவேரிக் கன்னி எனும் புனித ஜென்மத்தின் பெருமை காலாகாலத்திற்கும் நிலைத்து நிற்க வேண்டும். அதுதான் நம்முடைய ஆசை.

காவேரிக் கரைகளாக மாறிப் போகின்றன

அதே போலத்தான் அமெரிக்காவில் ஒரு கறுப்பினச் சிறுமி இருந்தாள். ஆறு வயதில் அப்பா அம்மா பிரிந்து போகிறார்கள். உறவினர்கள் அவளை ஓரம் கட்டுகிறார்கள்.


ஒன்பதாவது வயதில் பெண்மை பாழாகிப் போகிறது. படுக்க பாயில்லை. உட்கார இடமில்லை. படிக்க வசதியில்லை. வயிற்றுக்குச் சோறு வசதி இல்லை. வேதனையின் வீதிகளில் ஓடும்போது வயது பதின்நான்கு. அந்த வயதில் அந்தச் சிறுமி ஒரு குழந்தைக்குத் தாயாகிறாள்.

அவளே ஒரு குழந்தை. அவளுக்குள் ஒரு குழந்தை. அந்தக் குழந்தைக்குள் ஒரு குழந்தை. என்ன கொடுமை சார் இது. அவளுடைய இளமையே போராட்டம். அதன் எல்லைக்கே போகிறாள்.


கடைசியில், அந்தப் போராட்டமே காவேரிக் கரைகளாக மாறிப் போகின்றன. தன் இலட்சியத்தின் இலக்கை அடைகிறாள். அந்த இலட்சிய வேட்கை வெற்றி வாகை சூடுகிறது.  புகழ் மழையில் நனைந்து செல்வக் களஞ்சியமாகிறாள்.

அப்புறம் என்ன. உலகக் கோடீஸ்வரியாக ஆகிறாள். தன் சந்ததியினர் பிறந்த ஆப்ரிக்க மண்ணில்
இப்போது கோடிக் கோடியாகக் கொட்டி ஏழை பாழைகளுக்கு புண்ணியம் செய்து வருகிறாள்.


காவேரி ஆறு எப்படி தான் பிறந்த மண்ணுக்கு மாசு மருவற்ற  மகிமையைச் சேர்க்கிறதோ அதே போல இந்த மனித ஜென்மமும் பல கோடி மக்களை வாட்டி வதைக்கும் வறுமைப் பிசாசை விரட்டி வருகிறது. அவளுடைய பெருமை ஊழியூழி காலத்திற்கும் நிலைத்து நிற்கும். சந்தேகம் வேண்டாம்.

யார் அந்த கறுப்பு அழகி. யார் அந்த கறுப்புக் காவேரி. அவர் தான் உலகப் புகழ்பெற்ற Oprah Winfrey. நமக்கு எல்லாம் கலர் கலராய்க் கதை சொல்லும் ஓபரா வின்பரே எனும் கறுப்பு தேவதை. பெரியவர் சாலமன் பாப்பையாவிற்கும் அரட்டை அரங்க விசுவிற்கும் அழகாக பாலம் போட்டுக் காட்டியவர். இது கதையல்ல நிஜம்.


என்ன மலைக்கிறீர்கள். உலகப் பிரசித்தி பெற்ற The Oprah Winfrey Show எனும் மக்கள் அரங்கத்தை நடத்தி வரும் ஓபரா வின்பரேதான் அந்தக் காவேரிக் கன்னி.

ஆச்சரியமாக இருக்கிறதா! படியுங்கள். லியோனி, விசு, சாலமான் பாப்பையா, நடிகை லெட்சுமி போன்றவர்கள் நடத்தி வரும் விவாதக் களங்களுக்கு மூல வடிவம் கொடுத்தவர் 
ஓபரா வின்பரே என்று சொன்னாலும் அது மிகையில்லை.


ஓபரா வின்பரேயின் இளமை கால வாழ்க்கையைப் புரட்டிப் பார்த்தால் வேதனைகளும் விரக்திகளும் கரைகளை உடைத்துக் கொண்டு வந்து வெளியே கொட்டும். அந்த மாதிரியான பலப்பல கொடுமைகள்.

ஓடினாள் ஓடினாள் வாழ்க்கையின் எல்லைக்கே ஓடினாள்

பராசக்தியில் நடிகர் திலகம் பேசுவாரே ஒரு வசனம். 'ஓடினாள் ஓடினாள் வாழ்க்கையின் எல்லைக்கே ஓடினாள்' என்று. அதே அதே! அந்த மாதிரிதான் இந்த ஓபரா வின்பரேயின் வாழ்க்கையிலும்.


ஓபரா வின்பரே சாமான்ய வாழ்க்கையின் விளிம்பிற்கே ஓடியவள்.

வேதனைகளைச் சாதனைகளாக மாற்றிய அந்தக் கறுப்புத் திலகத்தை உலகமே வியந்து பார்க்கிறது. ஒரு காலத்தில் பசியின் கொடுமையால் வாடியவளுக்கு ஒரு வேளை சோறு போடாமல் விரட்டி அடித்த கழிசடைகள்  எல்லாம் இப்போது 'அன்பே சிவம் வின்பரே சிவம்' என்று பித்துப் பிடித்து அலைகின்றன. ’எனக்கு ஓர் உண்மை தெரிஞ்சாகணும்’ என்று சொல்லி வானத்தையும் பூமியையும் இப்போது மாறி மாறிப் பார்க்கின்றன.

அமெரிக்காவில் அடிமைத் தொழிலை ஆப்ரகாம் லிங்கன் அழித்து விட்டாலும் அவர்களின் உரிமைகள் இன்று வரை மறைக்கப்பட்டு வருவது உண்மை. கறுப்பர்கள் இன்னும் ஓரங் கட்டப் பட்டு வருகிறார்கள். இது அங்கே மட்டும் இல்லை.


இந்த ஓரங்கட்டும் விவகாரம் இருக்கிறதே அது பல இடங்களில் பலப்பல கோணங்களில் இன்னும் பேரம் பேசப்பட்டு வருகிறது. ஆப்ரிக்கக் காடுகளில் சிவனே என்று இருந்தவர்களைப் பிடித்து இழுத்து வந்து அடிமைகள் ஆக்கினார்கள். கசக்கிப் பிழிந்தார்கள். உழைப்பை உறிஞ்சி எடுத்துக் கொண்டார்கள். அப்புறம் கரும்புச் சக்கையாகத் துப்பி விட்டார்கள்.

'கறுப்பர்களுக்கும் நாய்களுக்கும் உள்ளே அனுமதி இல்லை' என்று நாடக அரங்குகளில் எழுதி வைத்தார்கள். எப்பேர்பட்ட நன்றி கெட்டத்தனம். குடிக்கிற தண்ணீர் தொண்டைக்குள்ளே இருக்கிற வரைக்கும்தான் நன்றிக்கடன், நினைப்புக்கடன், வாழ்த்துக்கடன் எல்லாம்.


அது உள்ளே இறங்கிடுச்சா... அவ்வளவுதான். ஒரு கிராம் நன்றியை ஒரு வெள்ளிக்கு விற்கவும் தயங்க மாட்டாத பச்சோந்திகள் உலவுகின்ற சமுதாய அமைப்பில் நல்ல மனிதர்களும்  வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

பச்சோந்தியம் வேறு மனிதயம் வேறு. தப்பாகப் புரிந்து கொள்ள வேண்டாம்.

பதினெட்டு சுற்றுப் பட்டியைக் கூப்பிடு

வெள்ளைக்காரர்கள் வாழும் ஒரு பகுதியில் ஒரு கறுப்பர் குடியேறி விட்டால் அவரை எப்படியாவது விரட்டிவிட வேண்டும் என்று திட்டம் போடுவார்கள்.


கொஞ்சம் கொஞ்சமாகத் தொல்லை கொடுப்பார்கள். அந்தத் தொல்லைகளை எல்லாம் தாண்டி ஒரு கறுப்பர், ஒரே ஒரு கறுப்பர் மட்டும் பேர் போட்டு விட்டால் போதும். பதினெட்டு சுற்றுப்பட்டியைக் கூப்பிட்டு பஞ்சாயத்து பேச மாட்டார்கள். அவர்களுக்கு அது பிடிக்காத விஷயம்.

அங்கிருக்கும் வெள்ளைக்காரர்கள் ஒட்டு மொத்தமாக ஒருவர் பின் ஒருவராக வெளியேறி விடுவார்கள். அதற்கு அப்புறம் அந்த இடம் சேரிப் பகுதியாக மாறும்.

நாய்களும் பூனைகளும் நலம் விசாரிக்கும் கழிசைப் பேட்டையாக மாறும். தொடர்ந்து நாலாந்தர குடிமக்கள் வாழும்  புறம் போக்காக மாறும். இதைத்தான் slumps என்று சொல்கிறார்கள்.


அமெரிக்காவில் இன ஒதுக்கல் இன்னும் புழக்கத்தில் இருக்கிறது. அடியோடு அழிக்க முடியவில்லை. இனக் களைவும் நிறக் களைவும் நேர்க் கோட்டில் நின்று குசலம் விசாரிக்கின்றன. கறுப்பு வெள்ளை என்று நிறத்தைப் பார்க்கிறார்கள்.

எத்தனையோ கறுப்பினத் தலைவர்கள் வந்து பேரணி நடத்தினார்கள். போராட்டம் செய்தார்கள். இருந்தும் இன நிற பாகுபாடு புகைந்து கொண்டுதான் இருக்கிறது. துவானமும் விடவில்லை. தூறலும் நிற்கவில்லை.


இந்த அமெரிக்கர்கள் மட்டும் எங்கே இருந்து வந்தார்கள். பூமியைப் பிளந்து கொண்டு 'குபுக்' என்று ஒன்றும் வெளியே வரவில்லை. இவர்களும் இராக்காலத்தில் முளைத்த காளான்கள் தான்.

சாதி சனம் சீர்செனத்தி

முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னால் பிரிட்டிஷார் அமெரிக்காவில் குடியேறினார்கள். சுண்டல் மூலம் சுரண்டல்தான். வேறென்ன. அதன் பின்னர் ஐரோப்பாவிலுள்ள அத்தனை நாடுகளிலிருந்தும் மக்கள் குடியேறினார்கள். இத்தாலி, பிரான்ஸ், பெல்ஜியம், ஜெர்மனி, ஸ்பெயின், ரஷ்யா என்று எல்லா நாடுகளும் அடக்கம்.


இத்தாலியர் ஜெர்மனியரைக் கல்யாணம் செய்வது. ரஷ்யர் இத்தாலியரைக் கல்யாணம் செய்வது. இத்தாலியர் பிரிட்டிஷ்காரரைக் கல்யாணம் செய்வது. டச்சுக்காரர் போலந்துக்காரரைக் கல்யாணம் செய்வது. சாதி சனம் பார்ப்பது இல்லை. சீர்செனத்தி பார்ப்பது இல்லை. வரதட்சணை என்ற பேரில் மாப்பிள்ளையை வெட்கம் கெட்டு விற்பதுவும் இல்லை.

இப்படியே கல்யாணம் செய்து செய்து ஒரு கலப்படம் உருவானது. இவர்கள் அனைவரும் ஒரே சமயத்தைச் சார்ந்தவர்களாக இருந்ததால் பிரச்னை பெரிதாக இல்லாமல் போய் விட்டது. இப்படி ஒரு கலப்படத்தில் உருவானவர்கள்தான் இந்த அமெரிக்கர்கள். ஆனால், இவர்கள் விஷயத்தில் நினைப்பு பிழைப்பைக் கெடுக்கவில்லை.

ஏனென்றால், புதிய இரத்தத்தின் வழி புதிய சமுதாயம் உருவாகிப் போனது. கலப்பட இரத்தம் கலங்கம் இல்லாமல் கலந்து விட்டது. அதனால், நல்ல சிந்தனையாளர்களும் அடிப்படைவாதிகளும் தோன்றப் புதிய பாதை பிறந்தது. இருந்தாலும் என்ன செய்வது. 'நான் தான் எல்லாத்திலும் ஒசத்தி' என்கிற மனப்பான்மை உச்சந் தலையில் குச்சுப்புடி ஆடுதே!

Talk Show என்பதைத்தான் மக்கள் அரங்கம், அரட்டை அரங்கம், விவாத அரங்கம், பேச்சரங்கம் என்று பலப்பல கோணங்களில் ஆஸ்ட்ரோவில் அரங்கேற்றி வருகிறார்கள். விசு, பெரியவர் சாலமன் பாப்பையா, லியோனி போன்றவர்கள் சபை கூட்டுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னாலேயே, அமெரிக்காவில் ஓபரா வின்பரே சரணம் பாடிவிட்டார்.


இன்றைய நிலையில் பேச்சரங்கம் மூலமாக தொலைக்காட்சி உலகின் முடிசூடா மகாராணியாக வலம் வருகிறார் ஓபரா வின்பரே. அவரை மிஞ்ச யாரும் இன்னும் பிறக்கவில்லை. அதே சாயலில் வருவதுதான் நடிகை லெட்சுமியின் 'அச்சமில்லை அச்சமில்லை' நிகழ்ச்சியும்! ஓபரா வின்பரேயின் இந்தச் சாதனை பல சோதனைகளுக்குப் பின்னால் பரிணமித்த அவதாரமாகும்.

விசுவாசமிக்க பிரஜை

Oprah Gail Winfrey என்பவர் 1954 ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் 29 ஆம் தேதி பிறந்தார். அப்பா வெர்மன் வின்பரேக்கு வயது 21. இராணுவத்தில் இருந்தார். அம்மா வெர்னித்தா லீக்கு வயது பதினெட்டு. அவர்கள் முறைப்படி திருமணம் செய்து கொள்ளவில்லை. அதனால் பிரச்னை ஏற்பட்டது. பெற்றோர் பிரிந்து போயினர்.

ஓபரா வின்பரே பாட்டி வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆறு வருடங்கள் பாட்டியின் பராமரிப்பில் இருந்தார். பாட்டியுடன் இருக்கும் காலத்தில் எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டார். வாசிக்கும் பழக்கம் வாரிசாக வந்து அமைந்தது. பேச்சாற்றலும் உடன் சேர்ந்து கொண்டது.

எதையுமே சரியாக சட்டென்று புரிந்து கொள்ளும் கற்பூர புத்தி ஓபராவுக்கு இருந்தது. அவரை மேலும் படிக்க வைக்க பாட்டிக்குச் சக்தி இல்லை. பாட்டி ஒரே ஆள்.

கிடைக்கிற சில்லறை வேலைகளைச் செய்து வயிற்றைக் கழுவிக் கொண்டிருந்தார். குடும்பத்தில் பணக்கஷ்டம். வறுமை விடாமல் விரட்டியது. ஓபராவுக்கு ஆறு வயதாகும் போது பாட்டியிடமிருந்து மறுபடியும் தாயிடமே வந்து சேர்ந்தார். பாட்டியிடம் இருக்கும் வரையில் அவருக்கு எந்தவிதப் பிரச்னையும் இல்லை.


தாயிடம் வந்த பின்னரும் பிரச்னை இல்லைதான். எப்போதும் புத்தகமும் கையுமாக இருப்பார். பாட்டியிடம் கண்டிப்பு இருந்தது. ஆனால், தாயாரிடம் கண்டிப்பு இருந்தும் கண்காணிப்பு இல்லை. அதிகச் சுதந்திரமாக இருந்தார்.

எங்கே வேண்டும் என்றாலும் போகலாம் வரலாம். கேட்க ஆள் இல்லை. காலையில் வேலைக்குப் போகும் தாயார் விளக்கு வைத்துதான் வருவார். அதுவரை ஓபரா சொந்தக்காரர்கள் வீடுகளில்தான் விசுவாசமிக்க பிரஜையாக வாழ்ந்தார்.

அப்பொழுது எல்லாம் சேரிப் பகுதிகளில் கறுப்பர்கள் ஏனோ தானோ என்று வாழ்ந்து கொண்டு இருந்தார்கள். கொலை, கொள்ளை, திருடு, பாலியல் வன்முறைகள் போன்றவை சகட்டு மேனிக்கு துளிர்விட்ட காலக் கட்டம். வெள்ளைக்காரப் போலீஸ்காரர்களும் கண்டு கொள்வது இல்லை. 'அடிச்சிகிட்டு சாவுங்கடா' என்று இரண்டு கண்களையுமே மூடிக் கொண்டார்கள்.

ஓபராவுக்கு ஒன்பது வயதாகும்போது ஒரு சம்பவம். வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம். ஒருநாள் ஓபராவின் சொந்தக்காரர்களில் ஒருவர் அவரை வீட்டிற்குக் கூட்டிச் செல்கிறார். 'இங்கேயே இருந்துவிடு. நீ பெரிய மனுஷியானதும் உன்னைக் கல்யாணம் செய்து கொள்கிறேன்' என்கிறார். விவரம் தெரியாத ஓபரா விழிக்கிறார். மிரள்கிறார்.

ஆசை ஆசையாய் மிட்டாய் பிஸ்கட்

விசயம் புரிகிற வயசா அது. ஆசை ஆசையாய் மிட்டாய் பிஸ்கட் ஐஸ்கிரீம் கிடைக்கிறது. அப்புறம் என்ன. பதிலுக்கு ஓபராவின் உடலும் தானம் செய்யப் படுகிறது. அந்த உறவினர் மற்ற மற்ற உறவினர்களிடம் சொல்லப் போய், அங்கே பலருக்கும் கன்னிகா குளியல்.

பல மாதங்களாக இது நடந்து வந்து இருக்கிறது. இந்த விஷயங்கள் அனைத்தும் ஓபரா சொன்னவைதான். எதையும் மறைக்காமல் சொல்லி வருகிறார். உண்மையை உள்ளபடியாக சொல்லி வரும் அரிசந்திரவர்த்தினி.

அவரே இதை எல்லாம் சொல்லி இருப்பதால் தான் உயிரோடு இருக்கும் அவரைப் பற்றி விலாவாரியாக எழுத முடிகிறது. இல்லை என்றால் நடப்பதே வேறு. மான நஷ்டயீடு கேட்டு வழக்குப் போட்டு ஏழேழு ஜென்மங்களுக்கு நம்மை திவாலாக்கி இருப்பார்.

அப்புறம் நாமும் நந்தவனத்து ஆண்டியாகி குயவனைத் தேடிப் போனாலும் போக வேண்டி இருக்கும். இந்தப் பாதிப்புகளினால் தான் அவர் வெகு நாட்களாக கல்யாணமே செய்து கொள்ளாமல் வாழ்ந்தார்.

தனக்கு என்ன நடந்து வருகிறது என்பதை கூட அறிந்து கொள்ள முடியாத அப்பாவிப் பருவம். நடந்த கொடுமைகளை வெளியே சொல்ல முடியாமல் முட்டி முடங்கிப் போனார். தனக்கு ஏற்பட்ட அவலங்களை இப்போதைய காலங்களில் பத்திரிகைகளில் எழுதி வருகிறார். விழிப்புணர்வு அரங்குகளில் சொல்லி வருகிறார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் விவரிக்கிறார். ஊடகங்களில் வெளியிட்டு வருகிறார். நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் கறுப்பினப் பெண்கள் கிள்ளுக் கீரைகளாகவே கருதப் பட்டார்கள். கறுப்பினப் பெண்கள் என்றால் அவ்வளவு இளக்காரம். அந்த அளவுக்கு இந்தப் பக்கம் இல்லையே. அதுவரையில் நாம் ஒருவகையில் புண்ணியம் செய்தவர்கள்.

சாதனைகள் கோலத்தில் சோதனைகள்

அவர் மீதான பாலியல் பலாத்காரங்கள் ஐந்து வருடங்களுக்கு தொடர்ந்து வந்து இருக்கிறது. அதனால் பதின்நான்கு வயதில் ஒரு குழந்தைக்கு தாயாகி நின்றாள்.

அந்தக் குழந்தையும் பிறந்த சில நாட்களிலேயே இறந்து போனது. ஒரு குழந்தைக்கு ஒரு குழந்தை பிறந்தது சாதனையா சோதனையா. கின்னஸ் புத்தகத்தைப் பார்த்தால் சீனாவில் எட்டு வயது சிறுமிக்கு குழந்தை பிறந்து இருப்பதாக செய்தி இருக்கிறது.

ரஷ்யாவில் ஏழு வயது சிறுமிக்கு குழந்தை பிறந்து இருப்பதாக செய்தி இருக்கிறது. இப்படி நிறைய உண்டு. சாதனைகள் கோலத்தில் சோதனைகள் நடந்தும் இருக்கின்றன.

பதின்நான்கு வயது பெண்ணுக்கு கொஞ்சம்கூட பொருந்தி வராத அவலமான கோலங்கள். தும்மல், விம்மல், விரக்தி, வேதனை, ஆத்திரம்  என்று எல்லாமே அவரை விரட்டி விரட்டிப் பிடித்தன. புரட்டிப் புரட்டி போட்டன. அவை அனைத்தும் அவருடைய வாழ்க்கையின் கறுப்பு நாட்கள்.

இதை ஒரே ஒரு வரியில் நாம் சுலபமாகச் சொல்லிவிடலாம். ரொம்ப சுலபம். ஆனால், அந்த எழுத்துகளின் பின்னாலே தெரிகிற வலி இருக்கிறதே அதை வார்த்தைகளால் சொல்ல முடியாது.

கம்பரைக் கூப்பிட்டு 'ஒபேராயணம்' என்று ஓர் இராமாயணத்தை எழுதிக் கொடுங்கள் என்று கேட்கலாம். அவர்கூட சற்று யோசிப்பார். 

ஓபேராவின் மனதில் ரணங்கள் புண்களாகிக் கடைசியில் ஆழமான தளும்புகளாகின. இந்தக் கட்டத்தில் அவருடைய தந்தை வருகிறார். கவலையின் தளும்புகளை மறைக்க ஓபேராவின் தந்தை பெரும் முயற்சி எடுத்துக் கொண்டார். தன் மகளைத் தண்டிக்காமல் கண்டிப்போடு வளர்த்தார். படிப்பின் அவசியத்தை மகளுக்கு நன்கு உணர்த்தினார்.

படிப்புதான் மனிதனின் ஜீவநாடி என்பதை வலியுறுத்தினார். ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒன்றைப் புதிதாகப் படிக்க வேண்டும். அதே போல ஒவ்வொரு வாரமும் ஒரு புத்தகத்தைப் படித்து முடிக்க வேண்டும்.

வார இறுதியில் அந்தப் புத்தகத்தின் விவரத்தை தந்தையிடம் கொடுக்க வேண்டும். இந்தப் பழக்கம் ஓபேராவின் வாசிக்கும் திறமையை அதிகரித்தது. அது மட்டுமல்ல. அவருடைய வாழ்க்கையில் பல பெரிய மாற்றங்களையும் ஏற்படுத்தியது.

இயற்கையிலேயே ஓபேரா படிப்பில் கெட்டிக்காரர். உள்ளூர் பேச்சுப் போட்டிகளில் கலந்து கொண்டு தன் திறமையை வெளியுலகிற்கு காட்டினார். பால்நிலா காயத் தொடங்கியது. பாட்டுப் போட்டி, நடிப்பு என்று எதையுமே விட்டு வைக்கவில்லை. அவரிடம் அருமையான பேச்சுக்கலை இருந்தது. அதுதான் அவருடைய துருப்புச் சீட்டு.

அதை வைத்துக் கொண்டு ஒரு தனியார் வானொலி நிலையத்தில் பகுதி நேர அறிவிப்பாளராகச் சேர்ந்தார். வேலை செய்து கொண்டே ஒளிபரப்புத் துறையில் மேல்படிப்பு படித்தார். பக்க பலமாக தந்தை இருந்தார்.

முக்கியமான திருப்புமுனை

1973 ஆம் ஆண்டு ஒர் உள்ளூர் தொலைக்காட்சியில் 'மக்கள் அனைவரும் பேசுகிறார்கள்' எனும் நிகழ்ச்சியை நடத்தினார். People Are Talking எனும் அந்த நிகழ்ச்சிக்கு மக்களின் பேராதரவு கிடைத்தது.

பின்னர் அந்த நிகழ்ச்சி தேசிய ரீதியில் ஒளிபரப்பானது. தொடர்ந்து ஐந்தாண்டுகள் நடத்தி அமெரிக்க மக்களின் மனதில் சம்மணம் போட்டு அமர்ந்து கொண்டார். எல்லாவற்றிற்கும் அவருடைய பேச்சுத் திறமைதான் காரணம்.

ரசிகர்களிடம் கேள்வி கேட்டு அதே அந்த ரசிகர்களிடமிருந்தே பதிலை வரவழைப்பதில் ஓபேரா பலே கில்லாடி. அது ஒரு தனிக்கலை. 1984 ஆம் ஆண்டு ஓபேராவின் வாழ்க்கையில் முக்கியமான திருப்புமுனை.

நம் தொலைக்காட்சியில் சன் டிவி, ஜெயா டிவி, மக்கள் டிவி, ராஜ் டிவி என்று இருக்கிறதே, அதைப் போல அமெரிக்காவில் WLS எனும் ஒளிபரப்பு ஒன்று இருக்கிறது. அது அப்போதைய காலத்தில் ரசிகர்கள் கணக்கெடுப்பில் அடி பாதாளத்தில் இருந்தது.

அந்த நிலையத்தில் AM Chicago எனும் நிகழ்ச்சியைத் தொடங்கினார். அது ஒரு நேர்காணல் நிகழ்ச்சி. தனது சுவாரஸ்யமான பேச்சால் ரசிகர்களைக் கட்டிப் போட்டார்.

அந்த நிகழ்ச்சி தொடங்கிய ஒரு வருடத்தில் அரைமணி நேரமாக இருந்தது ஒரு மணி நேரத்திற்கு நீட்டிக்கப் பட்டது. சாதனை தானே!

சிறுமிகளுக்கான பாலியல்
கொடுமைகள் விழிப்புணர்வு


அந்த நிகழ்ச்சி தான் இன்றுவரை உலகத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் முதல் இடத்தில் இருக்கும் 'ஓபேரா வின்பரே ஷோ". இந்த நிகழ்ச்சிக்கு நிறைய விருதுகள் கிடைத்தன. இன்றும் அந்த நிகழ்ச்சியைப் பார்க்கலாம். 25 வருடங்களாகப் போய்க் கொண்டிருக்கிறது.

அடுத்தடுத்து ரசிகப் பட்டாளம் பெருகியது. பெண் ரசிகைகள் ஏராளம். முதிர்ச்சியும் பக்குவமும் அதிகரிக்க திரைப்படத் தயாரிப்புத் தொழிலில் இறங்கினார். ஹார்ப்போ என்பது அவருடைய நிறுவனம். பணம் கொட்டத் தொடங்கியது.

2003 ஆம் ஆண்டு உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெற்றார். ஒரு விஷயம். இந்தப் பட்டியலில் இடம் பெற்ற முதல் ஆப்ரிக்க அமெரிக்கப் பெண்ணும் ஓபேராதான். 'போர்ப்ஸ்' எனும் பத்திரிகை இந்தப் பட்டியலைத் தயாரித்து வருகிறது.

கிடைக்கும் பணத்தை அர்த்தமுள்ள வகைகளில் செலவு செய்து வருகிறார். பாலியல் கொடுமைகளை எதிர்த்து முழுமூச்சுடன்  போராடி வருகிறார்.

'சிறுமிகளுக்கான பாலியல் கொடுமைகள் விழிப்புணர்வு' அமைப்பைத் தொடங்கி அல்லும் பகலும் உழைத்து வருகிறார். அந்த அமைப்பிற்கான எல்லா செலவுகளையும் இவரே பார்த்துக் கொள்கிறார்.

அவருக்கு கிடைக்கும் வருமானம் நூறு டாலர் என்றால் அதில் 82 டாலர்களைத் தான தர்மங்களுக்குச் செலவு செய்து விடுகிறார். உலகிலேயே வருமானவரி மிக மிகக் குறைவாகக் கட்டும் ஒரே கோடீஸ்வரர் ஓபேராதான். ஏனென்றால், அவருடைய தான தர்மங்களினால் அதிகப்படியான வரிவிலக்கு கிடைக்கிறது.

ஆப்ரிக்காவில் எயிட்ஸ் நோயினால் பாதிக்கப் பட்டவர்களைக் காப்பாற்ற ஓர் அறக்கட்டளையை உருவாக்கி இருக்கிறார். பல நூறு கோடி டாலர்களை அங்கே கொண்டு போய் கொட்டுகிறார். 'என் சந்ததியினர் எங்கே இருந்து வந்தார்களோ அங்கேயே இந்தப் பணம் போகட்டும்' என்று சொல்கிறார்.

சுனாமி பேரிடர் மறுவாழ்வு மையம்


தங்களின் வாழ்வை மற்றவர்களுக்காக அர்ப்பணம் செய்தவர்களுக்கு 'Use Your Life Award' எனும் விருதை ஆண்டுதோறும் வழங்கி வருகிறார். அது ஒரு பிருமாண்டமான நிகழ்ச்சி.

தென் ஆப்ரிக்காவில் ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கு ஓர் ஆசிரமத்தை உருவாக்கி தன் செலவிலேயே பார்த்துக் கொள்கிறார். 

ஒபேரா வின்பரே லீடர்ஷ’ப் அகாடமி எனும் கல்வி நிறுவனத்தைத் தோற்றுவித்து ஆப்ரிக்க பெண்களுக்கு தலைமைத்துவ பயிற்சி அளித்து வருகிறார்.

ஆண்டு தோறும் கல்லூரிகளில் படிக்க வசதியில்லாத ஆப்ரிக்க மாணவர்கள் நூறு பேரை அமெரிக்காவிற்கு கொண்டு வந்து படிக்க வைக்கிறார். நூறு கோடி டாலர்

செலவில் தென் ஆப்ரிக்காவில் புற்று நோய்க்கான ஓர் இலவச மருத்துவமனையைக் கட்டி பராமரித்து வருகிறார். அதில் ஆயிரம் படுக்கைகள் உள்ளன.

காம்பியா நாட்டில் ஏழைகளுக்கான இலவச சிகிச்சை மையத்தைக் கட்டியிருக்கிறார். நிர்வாகச் செலவுக்கான பணத்தை அரசாங்கத்திடமே கொடுக்கிறார்.

சுனாமி பேரிடர் மறுவாழ்வு மையம் ஒன்றை ஸ்ரீலங்காவில் கட்டி பல கோடி செலவு செய்து வருகிறார்.

பாப்புவா நியூகினி நாட்டில் உள்ள பூர்வீகக் குடிமக்களைக் காப்பாற்ற 15 கோடி செலவில் இலவசமாக ஆயிரம் வீடுகளைக் கட்டிக் கொடுத்திருக்கிறார்.

நேப்பாளத்தில் 20 கோடி டாலர் செலவில் இலவச மருத்துவமனையைக் கட்டி அமெரிக்க டாக்டர்களை அங்கே அனுப்பி வைத்திருக்கிறார். எல்லா செலவுகளையும் இவரே ஏற்றுக் கொள்கிறார்.

எதியோப்பியாவில் 'Poverty Eradication Programme' எனும் வறுமை ஒழிப்பு அறக்கட்டளையை உருவாக்கி பல ஆயிரம் உயிர்களுக்கு உயிர்பிச்சை கொடுத்து வருகிறார்.

சூடான் நாட்டில் தொலைதூர கிராமங்களில் வாழும் மக்களுக்கு நல்லபடியான போக்குவரத்து கிடைக்க வேண்டும் என்று 65 பேருந்துகளை வாங்கி அனுப்பி இருக்கிறார்.

இன்னும் பட்டியல் நீள்கிறது. இப்போது சொல்லுங்கள் இந்த மனுஷி ஒரு மனிதப் பிறவியா இல்லை தெய்வப் பிறவியா. பணத்தைப் பார்த்து பல்லைக் காட்டும்
உலகில் இந்தக் காவேரிக் கன்னி ஓர் உயர்ந்த இடத்தில் போய் உட்கார்ந்திருக்கிறார்.
இவர் நீண்ட காலம் உயிர்வாழ வேண்டும்!
ஆண்டவன் அருள் புரியட்டும்!   

13 பிப்ரவரி 2011

கணினியும் நீங்களும் - 88

(இந்தக் கேள்வி பதில் அங்கம் இன்று 14.02.2011 மலேசிய நண்பன் நாளிதழில் பிரசுரிக்கப் பட்டது.)

சரவணன் சாரா <sarasarawanan55@yahoo.co.uk>
கே: ஆங்கில-தமிழ் Google அகராதி மிகவும் அருமையான சுலபமான  அகராதி என்று சொல்கிறார்கள். எப்படி பதிவு இறக்கம் செய்வது?

ப: நீங்கள் சொல்வது சரி. உலகத்திலேயே மிகச் சிறந்த ஆங்கில-தமிழ் அகராதி என்றால் இப்போதைக்கு கூகிள் தமிழ் அகராதி தான். இது Online Dictionary. அதாவது நேரடி இணைய அகராதி.நேரடி இணையம் என்றால் இணையத்தில் நேரடியாகப் பங்கு பெறுதல்.

ஆங்கிலத்தில் Online என்கிறோம்.  பதிவிறக்கம் செய்ய அவர்கள் இன்னும் அனுமதிக்கவில்லை. ஆனால், நீங்கள் நேரடியாகப் பயன்படுத்திக் கொள்ளலாமே.  அதன் இணைய முகவரி: http://www.google.com/dictionary.  'தமிழ்' என்பதைத் தேர்வு செய்து அதில் தட்டச்சு செய்யுங்கள்.

தாண்ணா ஸ்ரீ <tankanna33@yahoo.com>
கே: Anti Virus எனும் தடுப்பு நச்சு நிரலி பயன் படுத்தாமல் இணையத்தில் இருந்தேன். இப்போது என் கணினியை வைரஸ் தாக்கி விட்டது. கணினி அப்படியே நின்று விடுகிறது. கணினிக்கு ஆபத்து வந்துவிட்டது. என்ன செய்வது?


ப: சவர்க்காரம் போட்டு குளிக்காமல் இருந்தால் சொறி சிரங்கு வராமல் வேறு என்னய்யா வரும். இப்போது உடல் பூரா கொப்புளங்கள் வந்து விட்டன. தோல் வியாதி வந்த பிறகு என்ன செய்வது என்று கேட்கிறீர்கள். வேறு வழி இல்லை. தோலை உரித்து விடுவது தான் நல்லது. தப்பாக நினைக்க வேண்டாம்.

கணினியை Format எனும் சுத்திகரிப்பு செய்யச் சொல்கிறேன். தடுப்பு நச்சு நிரலி இல்லாமல் இணையத்தில் தாராளமாக நுழையலாம். வரலாம். பிறகு தடுப்பு நச்சு நிரலியைப் பதிப்பு செய்யலாம். ஆனால் நச்சு நிரலிகள் கணினிக்குள் இருக்கவே செய்யும். அதனால் தான் சுத்திகரிப்பு செய்யச் சொல்கிறேன்.

உதயக்குமார்  <uthayakumar15@gmail.com>
கே: மலேசியாவில் தலைசிறந்த அல்லது முன்னோடியான வலைப்பதிவர் என்று யாரை அழைக்கலாம்?
ப:
வலைப்பதிவர் என்றால் யார் என்று முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். நாளிதழ்கள், வார இதழ்கள், மாத இதழ்கள் ஆகியவற்றில் எழுதுபவர்களை எழுத்தாளர்கள் என்று பொதுவாக நாம் அழைத்து வருகிறோம். அதே போல தங்கள் எழுத்துக்களை இணையத்தில் பதிவு ஏற்றம் செய்பவர்களை வலைப் பதிவர்கள் என்கிறோம். இந்த இரு பிரிவினருமே எழுத்தாளர்கள் தான்.

கே.பாலமுருகன்
இதில் இணையத்தில் நிறைய எழுதுபவர்களைத் 'தலைசிறந்த' என்று சொல்லலாமா. இல்லை தரமான எழுத்துக்களை எழுதுபவர்களைத் 'தலைசிறந்த' என்று சொல்லலாமா. வாசகர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். 

மலேசியத் தமிழ் இணைய உலகில் முடிசூடா மூர்த்திகள் என்றால் டாக்டர் ஜெயபாரதி,  முனைவர் ரெ.கார்த்திகேசு, முரசு அஞ்சல் முத்து, சுப.சற்குணன், கே.பாலமுருகன், குமரன் மாரிமுத்து, விக்னேஸ்வரன் ஆகியவர்களைக் குறிப்பிடலாம். இவர்களுக்கு அப்பால் நிற்பவர் கி.லோகநாதன் எனும் தமிழ் இணைய முன்னோடி.

சுப.சற்குணன் தனித்துவம் வாய்ந்தவராக விளங்குகின்றார். நல்ல ஒரு மாபெரும் தமிழ்த் தொண்டர். திருத்தமிழ், திருமன்றில், வலைப்பதிவுகளை நடத்தி வருகிறார். பல வலைப்பதிவர் கலந்துரையாடல்களை நடத்திய பெருமையும் அவருக்குச் சேரும்.

கரிகாற் சோழன் விருதைப் பெற்று சாதனை படைத்த கே.பாலமுருகன் 'நகர்ந்து கொண்டிருக்கும் வாசல்கள்' எனும் நாவல் மூலம் மலேசியர்களின் கவனத்தை ஈர்த்தவர். இவரும் தலை சிறந்த வலைப்பதிவர் தான்.

மலேசியாவில் முதல் தமிழ் வலைப்பதிவாளர் எனும் பெருமை குளுவாங் வாசுதேவனைச் சாரும். இவரை ஒரு முன்னோடி வலைப்பதிவாளர் என்று சொல்வதில் தப்பு இல்லை. சுபாஷ’னி, ந.பச்சைபாலன், ஏ.தேவராஜன், பாலகோபாலன் நம்பியார், சி.ம. இளந்தமிழ், கு.தீபன், பீட்டர் ஜான்சன், சிவனேஸ், தமிழினியன், ஏ.எஸ்.பிரான்சிஸ், கோ.புண்ணியவான், நவீன் போன்றவர்களின்  பட்டியல் நீள்கிறது. இதில் பலரின் பெயர்கள் விடுபட்டுப் போய் இருக்கலாம். பொறுத்து அருளுங்கள்.

தமிழன், சுங்கைவே, சிலாங்கூர்
கே: கூகிள் தேடல் இயந்திரத்தில் Google எனும் அவர்களுடைய சின்னத்திற்குப் பதிலாக என்னுடைய பெயரை வரவழைக்க வேண்டும். உங்களால் முடியும் என்று என் நண்பரிடம் சவால் விட்டிருக்கிறேன். தன்மானப் பிரச்னை. உங்களுடைய கணினிப் புலமையையும் காட்ட வேண்டும். தயவு செய்து காப்பாற்றுங்கள்.  இல்லை என்றால் தூக்குப் போட்டுக் கொள்கிற நிலைமை வரலாம்.

ப:
ஐயா... சாமி. கை எடுத்து கும்பிடுறேன். அப்படி எல்லாம் ஒன்றும் செய்து விட வேண்டாம் என்று கெஞ்சுவேன் என்று நினைத்தீர்களா. அதுதான் இல்லை. தூக்குப் போட்டுக் கொள்வது என்றால் தாராளமாக தூக்குப் போட்டுக் கொள்ளுங்கள். யார் வேண்டாம் என்று சொன்னது. முடிந்தால் நன்றாகத் தொங்குவதற்கு ஒரு நல்ல கயிறாக வாங்கித் தருகிறேன். ஏன்யா எதற்கு எதற்கு உயிரைக் கொடுக்க வேண்டும் என்பதற்கு ஒரு விவஸ்தை வேண்டாம்.   தெரியாமல் தான் கேட்கிறேன். உங்கள் உயிர் என்ன சுண்டக் காயா இல்லை வெண்டிக்காயா?



தூக்குப் போட்டுச் சாகிற அளவுக்கு அப்படி என்னய்யா ஒரு பெரிய தன்மானப் பிரச்னை. வருகின்ற காலத்தில் இந்த மாதிரியான சவால் எல்லாம் வேண்டாம். உலகத்திலேயே மதிக்க முடியாதது உயிர். அதிலும் பெரியது மனித உயிர். ஆண்டவன் கொடுத்ததை ஆண்டவன் தான் எடுத்துக் கொள்வான். ஆக, ஆண்டவனை மிஞ்சி எதையும் செய்ய வேண்டாம். உருப்படியாக எதையாவது செய்யப் பாருங்கள். சரியா. இந்தா பிடியுங்கள் பதிலை.

இமயமலையின் ஆங்கிலப் பெயர் Mount Everest. அந்தப் பெயருக்குப் பதிலாகத் தமிழன் என்று பெயர் வைக்கச் சொல்கிறீர்கள். ஆனால், அந்தப் பெயரை உலக மக்கள் பயன் படுத்த மாட்டார்கள். நீங்கள் ஒருவர் மட்டும் தான் பயன்படுத்த வேண்டும். சரிதானே! முதலில் உங்கள் கணினியில் Firefox உலவியை நிறுவி இருக்க வேண்டும். அதன் பின்னர் https://addons.mozilla.org/en-US/firefox/addon/greasemonkey/ எனும் இடத்திற்குப் போய் 'கிரீஸ் மங்கி' எனும் லிபி (Script) கூடுதல் இணைப்பைச் சேர்க்க வேண்டும்.

அதன் பிறகு, File, Edit, View, History, Bookmarks, Tools, Help என்பதில் Tools  என்பதைத் தேர்வு செய்யுங்கள். அதில் Grease Monkey என்று ஓர் பட்டை இருக்கும். அதைத் தேர்வு செய்யுங்கள். உங்கள் தமிழன் என்கிற பெயரைத் தட்டச்சு செய்யுங்கள். அடுத்து பயர்பாக்ஸ் உலவியை அடைத்து விட்டு மறுபடியும் திறக்கவும். உங்கள் விருப்பப்படி பெயர் மாறி இருக்கும்.
பிரச்னை என்றால் http://tamilcomputerinfo.blogspot.com/2011/01/blog-post_26.html எனும் இடத்தில் விவரங்கள் கிடைக்கும்.

பாலு மணிக்கண்டன் <manikandan_9842@yahoo.com>
கே: 'மலேசியத் தமிழ் வலைப் பதிவர்கள் களஞ்சியம்' எனும் ஒரு தொகுப்பு வெளிவரப் போகிறதாகக் கேள்வி பட்டேன். உண்மையா?
: இன்னும் வெளிவரவில்லை. மலேசியாவில் உள்ள தமிழ் எழுத்தாளர்களைப் பற்றிய தொகுப்புகள் நிறைய உள்ளன. ஆனால், மலேசியத் தமிழ் வலைப் பதிவர்களைப் பற்றிய விவரத் தொகுப்புகள் அடங்கிய  ஒரு நூல் வடிவத் தொகுப்பு இன்னும் உருவாகப் படவில்லை.



இணையத்தில் நூற்றுக்கணக்கான மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள் எழுதி வருகிறார்கள். அவர்களைப் பற்றி எதிர்காலச் சந்ததியினர் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு நல்லதொகுப்பின் மூலம் அந்த மாய உலகின் மாமேதைகள் வெளிச்சத்திற்கு வர வேண்டும்.

மலேசியத் தமிழ் வலைப் பதிவர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். உங்களுடைய வலைப்பதிவு விவரங்களை mybloggerstamil@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'மலேசியத் தமிழ் வலைப் பதிவர்கள் களஞ்சியம்' உருவாக்கம் பெறுவதற்கு உதவியாக இருக்கும்.

சங்கீதா மோகன், ஜொகூர் பாரு
கே: சார், பேராசிரியர் ரெ.கார்த்திகேசு அவர்களின் இணையத்தள முகவரி என்ன? அவர் ஒரு வலைப்பதிவரா?



ப: சீனிக்கும் உப்புக்கும் விளம்பரம் இல்லை. அது போல மலேசியத் தமிழ் எழுத்துலக ஜாம்பவான் ரெ.காவிற்கும் விளம்பரம் தேவை இல்லை. 'மலேசியாவிலிருந்து ரெ.கா' எனும் இணையத் தளத்தை நடத்தி வருகிறார். முகவரி:http://reka.anjal.net/ அழகு அழகான, அற்புதமான எழுத்துப் படிவங்கள். காலா காலத்திற்கும் கதை சொல்லும் பரிமாணங்கள்.

தர்மசீலன் முனியாண்டி, கிள்ளான்
கே: ஒரு எஸ்.எம்.எஸ் ஜோக் சொல்லுங்கள்?
ப:
அண்மையில் எனக்கு வந்த ஜோக்.
காதலன்: ஓடிப் போய் கல்யாணம் பண்ணிக்கலாமா?
காதலி: செருப்பு பிஞ்சிடும் தலைவா
காதலன்: பிஞ்சிப் போனா பரவாயில்ல... கையில எடுத்துக்கிட்டு ஓடலாம் கண்ணே...!


வ.சுப்பிரமணியம், சிரம்பான்
கே: முரசு அஞ்சல் தற்போதைய பதிப்பை வாங்கலாம் என்று உத்தேசித்து உள்ளேன். இந்த முரசு ABOBE IN DESIGN எனும் கிராபிக் மென்பொருளில் பயன்படுத்தித் தட்டச்சு செய்ய முடியுமா?


ப: முடியும். மலேசிய நாளிதழ்கள் தயாரிப்பில் Page Maker பயன்படுத்துகிறார்கள். அதில் முரசு நன்றாக வேலை செய்கிறது. அடோபே நிறுவனம் இப்போது 'பேஜ் மேக்கர்' ஐ வெளியிடுவது இல்லை. 2005 ஆம் ஆண்டிலேயே நிறுத்தி விட்டார்கள். அதனால் அந்த நிரலிக்கு அடோபேயின் புது சேர்ப்புகள் எனும் updates கிடைக்காது. அதற்குப் பதிலாக 'இன் டிசைன்' வெளிவருகிறது. அதற்கு மாறிக் கொள்ளுங்கள்.

11 பிப்ரவரி 2011

பாதை மாறிய பழமொழிகள்

சேலை கட்டும் பெண்ணை நம்பாதே என்று ஒரு பழமொழி இருக்கிறது. கேள்வி பட்டிருப்பீர்கள். உண்மையிலேயே இது ஒரு பழமொழியாக இருக்குமா என்று கூட சந்தேகமாக இருக்கின்றது. ஒட்டு மொத்த பெண்மைக்கும் இழுக்குச் சேர்க்கும் மொழி. தவறிப் பிறந்த தப்பான  மொழி.

உலகத்தில் உள்ள எல்லா இந்தியப் பெண்களுமே சேலை கட்டினார்கள். கட்டுகிறார்கள். கட்டி வருகிறார்கள். எதிர்காலத்தில் கட்டியும் வருவார்கள். அது ஒரு பாரம்பரிய பண்பாடு.

நம்முடைய பாட்டி சேலை கட்டினார். அம்மா சேலை கட்டினார். மனைவி சேலை கட்டுகிறார். அப்புறம் நமக்குப் பிறந்த மகளும் சேலை கட்டுகிறார். ஏன் பேத்தியும் சேலை கட்டுகிறார்.  ஆக, சேலை கட்டிய இவர்களை எல்லாம் நம்பக் கூடாது என்று சொன்னால் அது எப்படி சரியாக வரும். சொல்லுங்கள்.

அந்தப் பழமொழியின் படி பார்த்தால் சேலை கட்டும் பெண்ணை நம்பக் கூடாது. ஆனால், ஜ“ன்ஸ் போட்ட பெண்ணை நம்பலாம். சிலுவார் போட்ட பெண்ணை நம்பலாம். சுடிதார் போட்ட பெண்ணை நம்பலாம். மெக்சி போட்ட பெண்ணை நம்பலாம். சரிதானே. அந்தப் பழமொழியைத் தூக்கி  நாடு கடத்த வேண்டும் என்று தயவு செய்து சொல்ல வேண்டாம். 

பழமொழி என்னவோ சரிதான். இருந்தாலும் பழமொழியின் அர்த்தத்தை எடுத்துக் கொண்ட விதம் இருக்கிறதே அங்கே தான் தப்பு நடக்கிறது. ஆக, அதைப் பாதை மாறிய பழமொழிகளின் பட்டியலில் சேர்க்கலாம்.

'சேலை கட்டும்' என்பதைப் பிரித்தால் 'சேல் + ஐ அகட்டும்' என்று வரும். இதில் 'ஐ' எனும் எழுத்தும் 'அ' எனும் எழுத்தும் மறைந்து நிற்கும் மாயைகள். சேல் என்றால் கண் விழி. அகட்டும் என்றால் அலைய விடும் என்று அர்த்தம்.

அதாவது அடிக்கடி கண்விழிகளை அப்படி இப்படி அலை பாய விடும் பெண்ணை நம்பாதே. அந்த மாதிரி ஓர் எண்ணத்துடன் சொல்லப்பட்ட பழமொழி.  ஆனால் என்ன ஆயிற்று. அதை  அநியாயமாக திருப்பிப் போட்டு கழிசடையாக ஆக்கி விட்டார்கள். சேல் அகட்டும் பெண்ணை நம்பாதே என்பதுதான் சரி.

அண்மையில் நான் தமிழ் நாட்டில் தர்மபுரி, பூதனல்லி கிராமத்திற்குப்  போய் இருந்தேன். அது என்னுடைய மூதாதையர்கள் பிறந்த சல்லிக் கிராமம்.  அங்கே இந்தப் பழமொழியைப்  பற்றி விசாரித்தேன்.

ஒரு முதியவர் விளக்கம் சொன்னார். நம் வீட்டிற்கு கூலி வேலை செய்ய சில பெண்கள் வருவார்கள். திரும்பிப் போகும் போது அவர்கள் கட்டி இருக்கும் சேலையைக் கவனிக்க வேண்டும்.


அவர்களின் சேலை அகன்று இருந்தால் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். ஏன் என்றால் வீட்டில் இருக்கின்ற வெள்ளி வெண்கலச் சாமான்களை மறைத்து எடுத்துப் போய் விடுவார்கள். அதற்காகத் தான் அந்தப் பழமொழி வந்தது என்றார். அது அவருடைய கருத்து.

தமிழ் மொழியில் ஆயிரக் கணக்கான பழமொழிகள் உள்ளன. காலப் போக்கில் அவற்றின் அர்த்தங்கள் சிதைந்து போய் விட்டன. அந்த வகையில் அன்றாட வழக்கில் நாம் பயன்படுத்தும் பழமொழிகளில் பல பாதை தவறிப் போய் பாதாளத்தில்  விழுந்து விட்டன.


இன்னொரு பழமொழி வருகிறது. மருமகள்கள் சிலருக்குப் பிடித்த பழமொழியாகக் கூட இருக்கலாம். சிலரைத் தான் சொல்கிறேன். எல்லாரையும் சொல்லவில்லை.

வர வர மாமியார் கழுதை போல் ஆனாள் எனும் பழமொழி. ஒரு மாமியார் எப்படி ஐயா கழுதையாக  ஆக முடியும். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். மாமியார் கழுதை ஆகிறார் என்றால் அவருடைய புருஷன் என்ன ஆவான். அவருடைய மகன் என்ன ஆவான். அவனைக் கட்டி இருக்கிற பெண் என்ன ஆவாள். அவர்களுக்குப் பிறக்கின்ற குழந்தை கள் என்ன ஆவார்கள்.

ஆக மொத்தம் எல்லாருமே கழுதை ஆகி விடுவார்கள் இல்லையா. அடுப்பில் அரிசி வேகாது. அப்புறம் வீட்டில் ஒரு கழுதை கூட்டமே இருக்கும். கடுதாசி காகிதங்கள் தான் சாப்பாடு. சரிதானே. எதையும் சொவதற்கு முன்னால் கொஞ்சம் யோசிக்க முடியும்.


கண்ணுக்கு மை அழகு, கவிதைக்கு பொய் அழகு என்று வைரமுத்து சொல்கிறார் என்றும் சொல்லலாம். தப்பில்லை. நன்றாக ஆராய்ந்து பாருங்கள். எங்கேயோ தப்பு நடந்து இருப்பது தெரிய வரும். இந்த இடத்தில் கயிதை எனும் சொல்  கழுதையாக மாறி போய் இருக்கிறது. அவ்வளவுதான்.

கயிதை என்றால் ஊமத்தங்காய். வர வர மாமியார் கயிதை போல் ஆனாள் என்பதே சரி. சரியா. இந்தக் கயிதை எனும் சொல்லும் தமிழ்ச் சொல் வழக்கில் இருந்து மறைந்து விட்டது.

ஊமத்தம் பூ ஆரம்பத்தில் பார்க்க ரொம்ப ரொம்ப அழகாக இருக்கும். கடைசியில் அது காயாக மாறும். அப்புறம் அதன் தோல் முழுவதும் முள்ளாகி விடும். ஊமத்தங்காய் கடுமையான விஷம் கொண்டது. சில மாமியார்களும் இப்படித் தான் மாறிப் போவார்கள் என்பதைக் குறிக்க அந்தப் பழமொழியைச் சொன்னார்கள்.

ஆனால் என்ன ஆனது. எந்த மருமகளோ தெரியவில்லை. மாமியாரைப் பிடிக்காமல் கயிதை என்பதை கழுதையாக மாற்றிப் போட்டு கவிதை பாடி இருக்கிறார். ஓர் உலக மகா பிரச்னை உருவாகி  இருக்கிறது.

அடுத்து ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி எனும் பழமொழி வருகிறது. ஐந்து என்பதை ஐந்து பெண் பிள்ளைகளைக் குறிப்பிடுவதாகச் சொல்கிறார்கள். அது தவறு. பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்று சொல்வார்கள். 

அப்படி என்றால் என்ன பதினாறு பிள்ளைகளையா பெற்று வாழச் சொல்கிறார்கள். இல்லையே. பதினாறு பிள்ளைகளைப் பெற்ற பிறகு அதில் என்ன ஐயா பெரிய வாழ்வு, சின்ன வாழ்வு வேண்டிக் கிடக்கிறது.

இருக்கின்ற இரண்டு மூன்றை வைத்துக் கொண்டே சமாளிக்க முடியாமல் அவனவன் தடுமாறிக் கொண்டு இருக்கிறான்.  இதில் பதினாறு ரொம்ப முக்கியம். போதும்டா  சாமி. ஆக, ஐந்து என்பது இங்கே பிள்ளைகளைச் சொல்லவில்லை.

ஐந்து விதமான விஷயங்களைச் சொல்கிறார்கள். 1.ஆடம்பரமாய் வாழும் தாய் 2.பொறுப்பு இல்லாமல் போகும் தகப்பன் 3.ஒழுக்கம் தவறும் மனைவி 4.துரோகம் செய்யும் உடன் பிறப்பு 5.பிடிவாதம் பிடிக்கும் பிள்ளை. இந்த ஐந்தும் கொண்ட எந்தக் குடும்பமும் முன்னுக்கு வராது என்பதைச் சொல்லவே அந்தப் பழமொழி வந்தது. 

ஆவதும் பெண்ணலே அழிவதும் பெண்ணாலே எனும் பழமொழி இருக்கிறதே இதில் இரு விஷயங்கள் மிக நயனமாக மிக நளினமாக மறைக்கப் பட்டுள்ளன. இது ஒரு வஞ்சகமான பழமொழி என்று கூட சொல்லலாம்.

ஒரு நாய்க்கும் ஒரு மனிதனுக்கும் கல்யாணம். சேலை கட்டிய நாய்.

' நல்லது ஆவதும் பெண்ணாலே கெட்டது அழிவதும் பெண்ணாலே ' என்று இருந்த பழமொழியை ஆவதும் பெண்ணலே அழிவதும் பெண்ணாலே என்று சுருக்கி இருக்கிறார்கள். அவ்வளவு தான்.

இந்தப் பழமொழி பெண்களை அதிகமாகப் பாதிக்கவில்லை. இந்திய புராணங்கள், இதிகாசங்களில் அசுரர்களைப் பற்றி படித்து இருப்பீர்கள். இந்த அசுரர்களுக்கு வாழ்வு அளித்தது பெண் தெய்வங்கள். அவர்களை அழித்ததும் பெண் தெய்வங்கள் தான்.  அந்த வகையில் இந்தப் பழமொழி வந்திருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது.

ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தான் பிள்ளை தானே வளரும் என்பது இன்னும் ஒரு  பழமொழி. ஊரான் பிள்ளை என்றால் ஊரில் உள்ள பிள்ளைகள் என்று அர்த்தம் ஆகாது. உங்களுடைய மனைவியைத் தான் ஊரான் பிள்ளை என்று சொல்ல வருகிறார்கள்.

மனைவி வயிற்றில் பிள்ளையைச் சுமக்கும் போது அந்த மனைவியைக் கணவன் நல்ல முறையில் பார்த்துக் கொள்ள வேண்டும். அவளுக்கு வேண்டியதை வாங்கிக் கொடுக்க வேண்டும்.

அவள் விருப்பப் படும் உணவுப் பொருட்களை வாங்கிக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் அவளுடைய வயிற்றில் வளரும் உங்கள் பிள்ளை நன்றாக ஆரோக்கியமாகப் பிறக்கும் என்று சொல்ல வந்தார்கள். ஆனால், அந்தப் பழமொழியைத் தவறாகப் புரிந்து கொண்டு ஊரான் பிள்ளை என்றால் ஊரில் உள்ள பிள்ளைகள் என்று தவறாகச் சொல்கிறார்கள்.

அரசனை நம்பி புருஷனைக் கைவிட்ட மாதிரி எனும் ஒரு பழமொழி வருகிறது. இந்த இடத்தில் ஒரு மனைவி தன் புருஷனை விட்டு விட்டு அரசனைத் தேடிக் கொண்டு போவதாகப் பழமொழியின் அர்த்தம் போகிறது. அதன் அர்த்தம் அது இல்லீங்க. அரசன் என்றால் இங்கே அரச மரத்தைக் குறிக்கிறது.

அரச மரத்தின் காற்றை ஒரு பெண் சுவாசித்து வந்தால் கர்ப்பப் பையில் உள்ள நோய்கள் தீரும். குழந்தைப் பேறும் கிடைக்கும் என்பது சித்த வைத்தியத்தில் சொல்லப் படுகிறது. ஆக, பிள்ளை வேண்டும் என்பதற்காக புருஷனைக் கண்டு கொள்ளாமல் ஒருத்தி அரச மரத்தைச் சுற்றி சுற்றி வருகிறாள்.

வயிற்றைத் தொட்டுத் தொட்டுப் பார்த்துக் கொள்கிறாள். புருஷனைச் சரியாகக் கவனிக்கவில்லை என்று வைத்துக் கொள்வோம். கடைசியில் என்ன ஆகும். 'போடி உங்க அம்மா வீட்டுக்கு' என்று புருஷன்காரன் சொல்லுவானா சொல்ல மாட்டானா.

இப்போது சொல்லுங்கள். புருஷனுக்கும் பெண்சாதிக்கும் சண்டை வருமா வராதா. வரும் ஆனால் வராது என்று மட்டும் தயவு செய்து சொல்லி விட வேண்டாம். கண்டிப்பாக வரும்.

களவும் கற்று மற எனும் ஒரு பழமொழி இருக்கிறது. அதாவது திருடுவதையும் நல்ல படியாகக் கற்றுக் கொண்டு அப்புறம் அதை மறந்து விடு என்று அந்த பழமொழி சொல்ல வருகிறது. திருடுவதைக் கற்றுக் கொண்ட ஒருவன் எப்படி ஐயா தன் தொழிலை மறப்பான்.

களவும் கற்று மற என்பது தவறு. களவும் கத்தும் மற என்பதுதான் சரியான பழமொழி. களவு என்றால் திருடு. கத்து என்றால் கயமை அல்லது பொய் பேசுவது. ஆக, திருடுவதையும் பொய் பேசுவதையும் மறந்து விடு என்று தான் அந்தப் பழமொழி சொல்ல வருகிறது. 'கத்தும்' என்ற சொல் 'கற்றும்' என்று மாறிப் போனது. பழமொழியும் தலைகீழாகிப் போனது.

ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன் எனும் பழமொழியைக் கேள்விப் பட்டிருப்பீர்கள். அந்தப் பழமொழியின் படி பார்த்தால் இரண்டாயிரம் பேரைக் கொன்றால் தான் ஒருவன் முழு வைத்தியன் ஆவான் போல இருக்கிறது. இப்படி ஆயிரம் ஆயிரமாகக் கொல்பவனாக இருந்தால் அவன் எப்படி ஐயா வைத்தியன் ஆக முடியும்.

அந்தப் பழமொழியின் உண்மையான வடிவம் இதுதான். ஆயிரம் வேரைக் கண்டவன் அரை வைத்தியன் என்று தான் சொல்ல வேண்டும். அந்தக் காலத்தில் தாவரங்களின் வேர்களைக் கொண்டு தான் வைத்தியம் செய்தார்கள் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

அதனால் பல ஆயிரம் வேர்களை ஒருவன் பார்த்து அறிய வேண்டும். அப்போதுதான் அவன் முழு வைத்தியன் ஆக முடியும் என்று பழமொழி சொல்ல வருகிறது. கடைசியாக, ஒரு பழமொழி வருகிறது.

மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கலாமா எனும் பழமொழி. மண்ணால் ஆன குதிரையை நம்பி ஆற்றில் இறங்கக் கூடாது என்று தான் பலர் நினைக்கிறார்கள். அது தவறு. ஆற்றில் நீர் வற்றிப் போகும் போது சின்ன சின்ன மணல் மேடுகளைப் பார்க்கலாம். அந்த மேடுகளைத் தான் குதிர்கள் என்று சொல்வார்கள்.

ஒருமையில் சொன்னால் குதிர். ஆக, அந்தக் குதிர்களை நம்பி ஆற்றில் இறங்கக் கூடாது. அது ஆபத்தில் கொண்டு போய் விடும். மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்கலாமா என்று தான் பழமொழி இருக்க வேண்டும். ஆனால் என்ன செய்வது. குதிர் எனும் சொல் குதிரையாக மாறிப் போய் விட்டது. மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்கலாமா என்று பழமொழி வர வேண்டும்.

08 பிப்ரவரி 2011

கணினியும் நீங்களும் - பகுதி 87


மீரா.ரத்தினவேலு, தஞ்சோங் மாலிம்
கே: என்னுடைய மகள் படிவம் 4 படிக்கிறாள். அண்மைய காலமாக அவளுடைய அறையில் தனிமையாக இருப்பதையே விரும்புகிறாள். கொஞ்சம் ஆராய்ச்சி செய்து பார்த்ததில் அவள் 'பேஸ்புக்'கில் தீவிரம் காட்டி வருகிறாள். ஒரு நாளைக்கு குறைந்தது பத்து மணி நேரம் செலவு செய்கிறாள். அதன் கடவுச் சொல்லைக் கேட்கிறோம். கொடுக்க மறுக்கிறார். 'பேஸ்புக்'கில் அவர் என்ன செய்கிறார் என்று புரியவில்லை. அவளைத் திட்டி நிலைமையை மோசமாக்க விரும்பவில்லை. அவளுடைய கணக்கில் நுழைந்து என்ன செய்கிறார் என்று பார்க்க முடியுமா?

ப: Facebook என்பது ஒரு சமூக வலைத்தளம். இதை நட்பு ஊடகம் என்றும் சொல் வார்கள். உலகில் ஏறக்குறைய 500 மில்லியன் பேர் இந்த நட்பு ஊடகத்தில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அப்பா, அம்மா, அண்ணன், அக்கா, தம்பி, தங்கச்சி எல்லோருமே 'பேஸ்புக்'கில் கணக்கைத் திறந்து அரட்டையாடல் செய்யும் அளவிற்கு நிலைமை மோசமாகி வருகிறது. மேல்நாடுகளில் 'பேஸ்புக்' காய்ச்சல் சுனாமி வேகத்தில் சுழன்று சுழன்று அடிக்கிறது.

மலேசியத் தமிழ் இளைஞர்கள் வட்டாரத்தில் 'பேஸ்புக்' காய்ச்சல் பேய்க்காய்ச்சலாக மாறி வருகிறது.

உங்கள் மகளுக்கு இப்போது 'பேஸ்புக்' காய்ச்சல் அடிக்கிறது என்பது மட்டும் உண்மை. அவருக்கு 1696 நண்பர்கள் இருக்கிறார்கள். எத்தனை ஆண்கள் எத்தனை பெண்கள் என்பதை என்னால் கணக்குப் பண்ணிப் பார்க்க முடியாது.

சொல்ல வேண்டியதைச் சொல்லித் திருத்த வேண்டியது அப்பாவாகிய உங்களுடைய கடமை. காய்ச்சல் பேய்க்காய்ச்சலாக மாறி வருவதற்குள் ஒரு நல்ல முடிவைச் செய்யுங்கள். நீங்கள் எடுக்க வேண்டிய முடிவுகளில் ஒன்று.

1. கால அட்டவணை போட்டு ஒரு நாளைக்கு இவ்வளவு நேரம் தான் இணையத்தைப் பயன்படுத்த முடியும் என்று கட்டளை போடுவது.

2. கணினியை எல்லாரும் பார்க்கும் படியாகப் பயன் படுத்த வேண்டும் என்று வலியுறுத்துவது. இதில் எதுவும் சரிபட்டு வரவில்லை என்றால்

3. இணையத்தைத் துண்டித்து விடுவது. அதற்கு அப்புறம் ஆகக் கடைசிக் கட்டமாக,

4. கணினியை முடக்கி வைத்தல் அல்லது  மின்சாரத்தைத் துண்டித்து விடுதல்.

விது ரத்னா, பங்சார்
கே: சார், அண்மையில் உங்களுடைய கணினி வாழ்க்கையில் நீங்கள் அனுபவித்த ஒரு நகைச்சுவையான நிகழ்ச்சி அல்லது ஒரு ஜோக் சொல்லுங்கள்.
ப:
தம்பி, நிறைய ஜோக்குகள் இருக்கின்றன. எதைச் சொல்வது என்று தெரியவில்லை. அண்மையில் ஸ்ரீ டமன்சாராவில் இருக்கின்ற ஒரு மளிகைக் கடையில் இருந்து ஒருவர் அழைத்தார். அப்போது கெப்போங்கில் இருந்தேன். தன்னுடைய கணினியில் யுனிகோடு எழுத்துருகளைப் பயன் படுத்த வேண்டும் என்றார். ஓய்வு இருக்கும் போது வந்து உதவி செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

நானும் அந்தப் பக்கம் போக வேண்டிய வேலை இருந்தது. அவரைப் போய்ப் பார்த்தேன். அழகான ஓர் இளைஞர். யுனிகோடு நிரலியைக் கொண்டு வந்து

இருக்கிறேன். உங்கள் கணினியில் பதித்து விட்டுப் போகிறேன் என்றேன். அதற்கு அவர் என்ன பதில் சொன்னார் தெரியுமா. 'சார், இனிமேல்தான் கணினியை வாங்க வேண்டும்' என்றார். அப்போது என் மூச்சே நின்றுவிடும் போல இருந்தது.

செந்தூரன் கீர்த்தி, பங்சார்
கே: Yahoo எனும் பெயர் எப்படி வந்தது?
ப:
யாஹூ இளைஞர்களிடம் பரவலாகக் காணப்படும் சொல். சந்தோஷம் வந்ததும் யாஹூ என்று துள்ளிக் குதிப்பார்கள். ஆனால், அந்தப் பெயர் வந்த விதமே வேடிக்கை ஆனது. ஆரம்பத்தில் அதன் பெயர் Jerry and David's Guide to the World Wide Web.

ஆனால், ஜோனாதான் ஸ்விப்ட் என்பவர் எழுதிய குலிவர் டிரெவல்ஸ் எனும் நூலில் Yet Another Hierarchical Officious Oracle"  எனும் சொல் தொடர் வருகிறது.

அந்தச் சொல்லைப் பிடித்துக் கொண்டு அதற்குப் புதிய வடிவம் கொடுத்தார்கள். அதன் சுருக்கமே 1994ல் உருவாக்கப்பட்ட Yahoo எனும் பெயர். 


ராஜசேகரன், பத்தாங் பெர்ஜுந்தை
கே: Clone PC என்றால் என்ன?
ப:
Clone PC என்றால் நகல் கணினிகள். பிரபல நிறுவனங்கள் அல்லது பிரபலம் ஆகாத நிறுவனங்கள் என பலவற்றின் கணினிப் பாகங்களை வாங்கி எல்லாம் ஒன்று  கலந்து  கொடுப்பார்கள். விலையும்  குறைவு. நான் பார்த்த வரையில் பெரும்பாலான வீடுகளில் இந்த மாதிரியான கணினிகள் நிறைய உள்ளன.

இருந்தாலும் பரவாயில்லை. பல வருடங்கள் ஆகியும் நன்றாகவே வேலை செய்கின்றன. விலையை 700-800 ரிங்கிட்டுக்குள் அடக்கி விடலாம்.