17 அக்டோபர் 2020

மலாயா தமிழர்கள்: வால்டோர் தோட்டம் செபராங் பிறை - 1844

வால்டோர் தோட்டம் (Valdor Estate). 1842-ஆம் ஆண்டில் மலாயாவில் பிரெஞ்சுக்காரர்கள் அமைத்த முதல் கரும்புத் தோட்டம். டோனடியூ (Donnadieu) என்பவர் அமைத்தது.

வால்டோர் (val d'or) ஒரு பிரெஞ்சு சொல். தங்கப் பள்ளத்தாக்கு என்று பொருள். 1840-ஆம் ஆண்டுகளில் மலாயா வந்த பிரெஞ்சு தோட்டக்காரர்களின் முதல் தலைமுறைத் தோட்டம். இவர்கள் கரும்பு உற்பத்தியில் காட்டிய ஈடுபாடுகள்  மலாயாவில் ஆழமான தாக்கங்களை ஏற்படுத்தி உள்ளன.

Valdor Estate Tamil Women. Picture taken: 1891

டோனடியூ எனும் அந்தப் பிரெஞ்சுக்காரர் முதன்முதலில் 1842-ஆம் ஆண்டில், ஒரு கரும்பு தோட்டத்தை நிறுவினார். பின்னர் லியோபோல்ட் சேசெரியாவ் (Léopold Chasseriau) எனும் இரண்டாவது பிரெஞ்சுக்காரர் அவருடன் இணைந்து கொண்டார். இருப்பினும் 1843-ஆம் ஆண்டு டோனடியூ, கடல் கொள்ளையர்களால் கொலை செய்யப் பட்டார்.

1844-ஆம் ஆண்டு தமிழகத்தில் இருந்து 1800 தமிழர்கள் மலாயாவுக்கு கொண்டு வரப்பட்டார்கள். அவர்களில் 60 பேர் வால்டோர் கரும்புத் தோட்டத்திற்குப் போய் இருக்கிறார்கள்.

1844-ஆம் ஆண்டு வால்டோர் தோட்டத்தில் டோனடியூ; லியோபோல்ட் சேசெரியாவ்; இருவரும் அழகான மாளிகையைக் கட்டி இருக்கிறார்கள். அந்த மாளிகையில் தமிழர்கள் சேவகம் செய்து இருக்கிறார்கள்.

1890-ஆம் ஆண்டு ஜூல்ஸ் கிளெய்ன் (Jules Claine) எனும் பிரெஞ்சுக்காரர் அந்த மாளிகைக்கு வந்து இருக்கிறார். படம் எடுத்து இருக்கிறார். அந்தப் படத்தைத் தான் நீங்கள் பார்க்கிறீர்கள்.


(Julies Claine left Paris in May 1890, and arrived in Singapore a month later. Then he went to Penang Island and arranged a trip to Sumatra. He arrived at the Deli. Then he contacted the Dutch authorities at that time to get a picture of the life of the local community.)

1844-ஆம் ஆண்டு மலாயாவில் குடியேறியவர்களை வந்தேறிகள் என்று எப்படி அழைக்க முடியும்? வரலாறு பொய் சொல்லாது. இனியாவது வந்தேறிகள் எனும் சொல்லைப் பயன்படுத்தும் போது நன்றாக யோசித்துவிட்டுப் பயன்படுத்தட்டும்.


(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
17.10.2020

References:

1. French planter at Bukit Tambun photo by Jules Claine, 1890s. Jacques de Morgan
Bibliothèque Nationale de France / Gallica collection.

2. Maxime Pilon, Danièle Weiler (2011). The French in Singapore: An Illustrated History (1819). Editions Didier Millet.

3. The New Malaysian Sugar Plantation Industry: P. P. Courtenay, Vol. 69, No. 4 (October 1984), pp. 317.

4. Fonds Jules Claine: https://mediatheque.epernay.fr/Default/fonds-jules-claine.aspx

Notes:

1. Joseph Donadieu may have been the first French planter to settle in Malaysia. We could have talked about Chasseriau and his sons, or Hardouin, who both succeeded very well in their business and left behind a small agricultural dynasty.

2. In 1841, Joseph Donadieu arrived from the Ile de France (now Mauritius) and obtained a concession from the British authorities in Province Wellesley, just opposite the island of Penang. His intention was originally only to come to Penang to recruit coolies, but he was “so struck by the possibilities of the place, its soil, its climate, its workforce..." that he decided to settle down; and therefore he acquired an estate in Jawi.

3. Joseph Donadieu is considered to be the first to plant sugar in Province Wellesley. He had to clear the forest, recruit labor (Chinese and, already, Tamil), plant, and then try to generate profits.

4. French planters of the 19th century did not yet cultivate rubber trees (whose market only developed toward the end of the century) but rather at first sugar cane, before diversifying their production: tapioca, coconut, rice, fruit and even various flower essences. Two years after his arrival, Donadieu was already well established.

 

16 அக்டோபர் 2020

மலாயா தமிழர்கள்: ஈப்போ ஈயச் சுரங்கம் 1885

மலாயா ரப்பர் தோட்டங்களில் மட்டும் மலாயா தமிழர்கள் வேலை செய்யவில்லை. பல நூறு பல ஆயிரம் தமிழர்கள், மலாயா ஈயச் சுரங்கங்களில் வேலை செய்து இருக்கிறார்கள். பலருக்கும் தெரியாத அரிய தகவல்.

Malaya Tamils did not only worked in Malaya rubber plantations; but hundreds and maybe thousands worked in the tin mines in this country. This is a rare information unknown to many.

Indians - Tambun Ipoh Tin Mines 1885

1830 – 1840-ஆம் ஆண்டுகளில் ஈப்போவில் ஈய உற்பத்தி அபரிமிதமான வளர்ச்சி. அந்தி மந்தாரத்துக் காளான்கள் போல நிறைய ஈயச் சுரங்கங்கள் தோன்றின. அந்தச் சுரங்களுக்கு ஆயிரக் கணக்கில் சீனர்கள் கொண்டு வரப் பட்டனர். சீனர்களுடன் தமிழர்களும் கொண்டு வரப் பட்டனர்.

During the 1830s and 1840s there was an excessive tin production in Ipoh. Lots of tin mines appeared like twilight mushrooms. Thousands of Chinese were brought to the mines. Tamils were brought along with the Chinese.

Gopeng Malaysia 1885

ஜேம்ஸ் பர்ச் (J.W.W Birch) பேராக் மாநிலத்தின் முதல் பிரிட்டிஷ் ஆளுநர். 1875-ஆம் ஆண்டு பேராக் மாநில வருவாயை அதிகரிக்க ஈயச் சுரங்க முதலாளிகளிடம் வரி வசூல் செய்வதை நிறுத்தினார். அதனால் ஈயத் தொழில் வளர்ச்சி கண்டது. இவர் அதே 1875-ஆம் ஆண்டு பாசீர் சாலாக் எனும் இடத்தில் கொலை செய்யப்பட்டார். பலருக்கும் தெரியும். இதனால் ‘பேராக் போர்’ தொடங்கியது. (Khoo & Lubis 2005)

J.W.W Birch was appointed the first British Resident in Perak in 1875. He then planned
to get rid of the tax upon the tin miners to increase state revenue. (Khoo & Lubis 2005). In November 1875, Birch was murdered in Pasir Salak, Perak and this incident was reffered to by British as the ‘Perak War’.

Pontoon Bridge at Enggor, Kuala Kangsar 1885

ஈப்போ, கோப்பேங், துரோனோ, கோலாகங்சார், தைப்பிங் போன்ற பகுதிகளில் தமிழர்களின் ஈயச் சுரங்க ஈடுபாடுகள் நிறையவே இருந்து உள்ளன. ஆக ரப்பர் தோட்டங்கள் ஒரு புறம் இருந்தாலும், ஈயச் சுரங்கங்களிலும் தமிழர்களின் ஈடுபாடுகள் இருந்து உள்ளன.

Tamils involved in many tin mining activities in Ipoh, Gopeng, Tronoh, Kuala Kangsar and Taiping. Not only they involved in rubber plantation activities but in tin minings too.

Railway Bridge at Enggor, Kuala Kangsar 1885

இந்தப் படம் ஈப்போ தம்பூன் புறநகர்ப் பகுதியில் 1885-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட படம். வேட்டி, தலைப்பாகையோடு ஈயச் சுரங்கங்களில் வேலை செய்வதைக் காணலாம். கிளீங்கிரோத் (Charles J. Kleingrothe) என்பவர் எடுத்த படம்.

This picture was taken in 1885 in the suburbs of Ipoh Tambun. It can be seen as they are working with dhotis and turbans in the tin mines. Photo by Charles J. Kleingrothe.

Tin mine at Tronoh, Ipoh 1885

1880-ஆம் ஆண்டுகளில் கிந்தா பள்ளத்தாக்கில் ஈயம் விளையாடும் நிறுவனங்களில் புகழ்பெற்று விளங்கியவை பிரெஞ்சு சொசைட்டி டெஸ் ஈட்டென்ஸ் டி கிண்டா நிறுவனம் (French Société des Etains de Kinta). அடுத்து கோப்பெங் ஈயச் சுரங்க நிறுவனம் (Gopeng Tin Mining Company). இந்த நிறுவனங்களில் தமிழர்கள் குத்தகைத் தொழிலாளர்களாக வேலை செய்து இருக்கிறார்கள். (Yip, YH 1969)

The French Société des Etains de Kinta was one of the most famous tin companies in the Kintaa Valley in the 1880s. Next is the Gopeng Tin Mining Company. Tamil people were employed as contract laborers in these companies. (Yip, YH 1969)

Indians at a Washer Tin Mine Tronoh 1885

Source: Leiden University Library, KITLV, Image 79992 Collection page Southeast Asian & Caribbean Images (KITLV)

1880-ஆம் ஆண்டுகளில் மலாயா ரப்பர் தோட்டங்களிலும்; மலாயா ஈயச் சுரங்கங்களிலும் வேலை செய்தவர்கள் மலாயா தமிழர்கள் (இந்தியர்கள்). அவர்களின் உழைப்பின் மூலமாக கிடைத்த வருமானத்தில் வாழ்ந்ததை மறக்கலாமா. அவர்களை வந்தேறிகள் என்று அழைக்கலாமா? அப்படி அழைப்பதற்கு மனசு வரலாமா?

Since 1880s Indians had worked in Malayan in rubber estates and tin mines. Many had enjoyed their lives on their hard earned sweat money. Can you forget them. Can you call them Pendatang? Can one has a heart to call them in such a contemptuous manner?

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
16.10.2020


Puddling and Washing Installations at a Tin Mine Tronoh 1885

References:

Photographer: Kleingrothe, C.J. (Kleingrothe, Carl Josef, 1864-1925) / Medan

Description: Nederlands: Tinmijn te Tambun bij Ipoh. English: Tin mine at Tambun in Ipoh, Malaysia.

Collection: Leiden University Library. Royal Netherlands Institute of Southeast Asian and Caribbean Studies  

Accession number: KITLV 79981

This file originates from the image database media-kitlv.nl of the Royal Netherlands Institute of Southeast Asian and Caribbean Studies (KITLV). KITLV donated this image to Wikimedia Commons in collaboration with Leiden University Library.

1. Lubis, AR, Wade, M & Nasution, KS 2010, Perak postcards 1890s-1940s, Areca Books,
Penang.

2. Yip, YH 1969, The development of the tin mining industry of Malaya, Kuala Lumpur:
University of Malaya Press.

3. Penzer, NM 1921, The tin resources of the British Empire, London: W. Rider

4. C. G. Warnford-Lock, Mining in Malaya for Gold and Tin (London: Crowther and  
Goodman, 1907)

5. (Wong Lin Ken, The Malayan Tin Industry 1914 with special reference to the states of Perak, Selangor, Negri Sembilan and Pahang, Tucson: The University of Arizona Press, 1965: 146)

Notes:

Charles J. Kleingrothe, known as C. J. Kleingrothe (Krefeld, 1864 - 1925) was a German photographer who since 1889 had a studio in Medan, Sumatra. He partnered with the Swedish photographer H. Stafhell for ten years and photographed the landscapes and architecture as well as portraits in Indonesia and Malaya.

 

15 அக்டோபர் 2020

மலாயா தமிழர்கள்: மலாயாவுக்கு கப்பலேறிய சோகக்கதை

தமிழ் மலர் - 13.10.2020

இந்தியாவின் வரலாற்றைப் பாருங்கள். எத்தனை எத்தனையோ படையெடுப்புகள். எத்தனை எத்தனையோ போர்க் கோளங்கள். எத்தனை எத்தனையோ ருத்ரதாண்டவங்கள். பற்பல வரலாற்று வடுக்கள். அலெக்சாண்டர் வந்தார். அப்புறம் பாபர் வந்தார். அப்புறம் கஜினி முகமது வந்தார். அப்புறம் நாடிர் ஷா வந்தார். இவர்களுக்கு முன்னதாகக் கிரேக்கர்களும் வந்து போய் விட்டார்கள்.


இவர்களின் இந்தப் படையெடுப்புகளுக்கும் இங்கிலாந்து நாட்டின் வெள்ளைக்காரர்களின் தலையெடுப்புக்கும் பெரிய ஒரு வேறுபாடு இருந்தது. இருக்கிறது. இதை முதலில் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மொகலாயர்கள் (Moghuls);

சூர்கள் (Sher Shah Suri);

கில்ஜிகள் (Khaljis);

துக்ளக்குகள் (Tughlaqs);

சையிதுகள் (Syeds);

லோடிகள் (Lodis);

யாதவர்கள் (Yadavas);

காகத்தியர்கள் (Kakatiyas);

பாமனிகள் (Baminis)

இப்படி பல தரப்பினர் இந்தியாவின் மீது படை எடுத்து இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் இந்தியாவிற்கு வெளியே இருந்து இந்தியாவிற்குள் நுழைந்தவர்கள்.

இவர்கள் கொள்ளை அடித்த இந்தியச் சீர்ச் செல்வங்களைப் பெரும்பாலும் இந்திய மண்ணிலேயே பயன்படுத்தி இருக்கிறார்கள். எடுத்தும் போய் இருக்கிறார்கள். இல்லை என்று சொல்லவில்லை.

சில விலை உயர்ந்த சிலைகளும் விலை மதிப்பற்ற சிம்மாசனங்களும் பாரசீகத்திற்கு நாடு கடத்தப்பட்டு இருக்கின்றன. அவற்றையும் நாம் கணக்கில் சேர்க்க வேண்டும். மறந்துவிட முடியாது.

1738-ஆம் ஆண்டில் மொகலாய மன்னர் முகமதுஷா பாரசீகத்தைச் சேர்ந்த நாதிர் ஷா என்பவரிடம் தோல்வி அடைந்தார். கோகினூர் வைரம் (Kohinoor Diamond), மயிலாசனம் (Peacock Throne) போன்றவை நஷ்டயீடாக நாதிர் ஷாவிடம் தாரை வார்க்கப் பட்டன.

அதில் கோகினூர் வைரம் மட்டும் மீண்டும் இந்தியாவிற்கே திரும்பி வந்தது. சிறிது காலத்திற்குப் பின்னர் இங்கிலாந்திற்குப் போய்ச் சேர்ந்து அங்கேயே நிரந்தரமாகிப் போனது. அது வேறு ஒரு பெரிய வேதனையான சோகக் கதை.

ஆனால் மொகலாய மயிலாசனம் போனது போனது தான். அந்த மயிலாசனத்தை உருவாக்க 1150 கிலோ தங்கம்; 230 கிலோ மரகதம், மாணிக்கம், நீலமணி, வைரக்கற்கள் பயன்படுத்தப் பட்டன. பேரரசர் ஷாஜகானுக்காக வடிவமைக்கப் பட்டது. அந்த மயிலாசனத்தின் விலை 100 கோடி ரிங்கிட் வரை வரும்.

நாதிர் ஷா அந்த மயிலாசனத்தைப் பாரசீகத்திற்கு எடுத்துச் சென்றான். அவன் மரணம் அடைந்த பின்னர் அந்த மயிலாசனத்தை அவனுடைய இராணுவத் தளபதிகள் அல்வா துண்டுகளைப் போல துண்டு துண்டுகளாக வெட்டி பங்கு போட்டுக் கொண்டதாக ஒரு பேச்சு. இல்லை அது ஈரானில்தான் இன்னும் இருக்கிறது என்று இன்னொரு தரப்பினரின் பேச்சு.

தெஹ்ரான் (National Museum, Tehran, Iran) அரும்காட்சியத்தில் இந்தியாவில் இருந்து கொள்ளை போன அதிஅற்புதமான இரத்தின நகைகள் எல்லாம் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளன. அந்த அரும்காட்சியத்தில் இந்தியாவின் மற்றும் ஒரு சிறிய மயிலாசனம் காட்சிக்கு உள்ளது.

இந்தியாவின் கோகினூர் வைரம் இப்போது லண்டன் அரும்காட்சியத்தில் (Tower Museum, London) பாதுகாப்பாக உள்ளது. இங்கிலாந்து மகாராணியின் கிரீடத்தை (Crown Jewels) அலங்கரிக்கும் வைரங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது.

இந்த மாதிரி இந்தியாவின் அரிய பெரிய பொக்கிஷங்கள், புதையல்கள், செல்வங்கள் எல்லாம் மாயமாய் மறைந்து போய் விட்டன. நல்ல வேளை. சில புதையல் பொக்கிஷங்களை இந்தியாவின் பெயரில் வெளிநாட்டு அரும்காட்சியகங்களில் காட்சிக்கு வைத்து இருக்கிறார்கள். அதுவரைக்கும் மகிழ்ச்சி அடைவோம்.

இன்னும் ஒரு விசயம். இந்தியாவில் காணாமல் போன வைரங்களைப் பற்றி ஜார்ஜ் லூகாஸ் என்பவர் இந்தியானா ஜோன்ஸ் (Indiana Jones and Temple of Doom) எனும் மர்ம நாவலை எழுதினார். அமெரிக்கா நாட்டு ஹாலிவூட் சினிமாக்காரர்கள் என்றால் சும்மாவா. அதை அப்படியே ஒரு திரில்லர் படமாக எடுத்து அதிலும் மில்லியன் கணக்கில் காசு பார்த்து விட்டார்கள். 335 மில்லியன் அமெரிக்க டாலர்கள். இது எப்படி இருக்கு?

ஆக மலேசியாவிலும் இந்தியானா ஜோன்ஸ் (Indiana Jones) போல ஒருவர் புதைபொருள் வேட்டையில் இறங்க வேண்டும்.

காணாமல் போன பரமேஸ்வராவின் கல்லறை;

நீல உத்தமனின் கல்லறை;

சங்கர விஜயதுங்க வர்மனின் கல்லறை;

பூஜாங்வெளி மர்மங்கள்;

காணாமல் போன கங்கா நகரத்தின் மர்மங்கள்;

கோத்தா கெலாங்கி இரகசியங்கள்;

இவற்றை ஆராய்ச்சிகள் பண்ண வேண்டும். மர்மக் கதைகள் எழுத வேண்டும்.

அப்புறம் என்ன. அவரும் ஹாலிவூட் மாதிரி கோடீஸ்வரராக ஆகிவிடலாம். ஒன் மினிட் பிளீஸ். இந்த வேலையை நான் செய்யலாம் என்று நினைக்கிறேன். ஆனால் என்ன. வயது கொஞ்சம் ஓடிப் போச்சு. பிரச்சினை இல்லை. சமாளித்து விடலாம். அடடடா... மலாயா தமிழர்கள் வரலாறு ஹாலிவூட் வரை போய் விட்டது. மன்னிக்கவும்.

இந்தியாவிற்கு வந்த வெள்ளைக்காரர்கள் இந்தியச் செல்வங்களை எல்லாம் அவர்களின் நாட்டிற்குக் கப்பல் கப்பலாய்க் கட்டிக் கொண்டு போனார்கள். இங்கே தான் இடிக்கிறது. மறுபடியும் மன்னிக்கவும். சுருட்டிக் கொண்டு போனார்கள்.

ஆங்கிலேயர்களின் முதல் நோக்கம் வியாபாரம். இரண்டாவதாக வருவது அதிகாரம் ஆதிக்கம். அப்புறம் மூன்றாவதாக வருவது சுரண்டல். அதாவது ’சுண்டலைக் காட்டி சுரண்டல் செய்வது’ என்று சொல்வார்களே. அதே அதே...  அந்த மாதிரியான சுரண்டல்.

இந்தியாவின் உயிர்நாடி என்பது கிராமப் புறங்களைச் சார்ந்த பொருளாதாரம். அந்தப் பொருளாதாரம் வெள்ளைக்காரர்களின் படிப்படியான சுரண்டல்களினால் நனைந்து நலிந்து நசிந்து போனது. திட்டமிட்ட நகர்வுகளின் மூலமாக சிதைந்தும் போனது.

ஒரு காலக் கட்டத்தில் குடிசைத் தொழில் தான் இந்தியப் பொருளாதாரத்தின் ஆணிவேராக விளங்கியது. கையால் நிலத்தை உழுவது; கையால் நூல் நூற்பது; கையால் துணிமணிகளை நெய்வது; அப்படித்தான் ஒவ்வோர் இந்தியக் குடும்பமும் காலம் காலமாகத் தன்னிறைவு கொண்ட வாழ்க்கையில் நிறைந்து வாழ்ந்தது.

கடைசியில் வெள்ளைக்காரர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா. பல கோடி இந்திய மக்களுக்குச் சோறு போட்ட கைராட்டினத்திற்குத் தடை போட்டார்கள். இந்திய நூல் ஆலைகளை முடக்கிப் போட்டார்கள். இந்திய நெசவாளர்களை ஒட்டு மொத்தமாக நடுத் தெருவிற்கே கொண்டு வந்து நன்றாகவே அலைய விட்டார்கள்.

அது மட்டும் அல்ல. அன்றைய காலக் கட்டத்தில் இந்திய நாட்டில் சாதிக் கொடுமைகள் நிறையவே தலைகாட்டி நின்றன. மதத்தின் பெயரால் நிறையவே ஒதுக்கல்கள். சறுக்கல்கள். ஏற்ற இறக்கங்கள்.

ஒரு கட்டத்தில் இந்திய நாடே சிதறிப் போய்க் கிடந்தது. ஆக எந்த ஒரு செலவும் இல்லாமல் பிரித்தாளும் சூழ்ச்சியை வெள்ளைக்காரர்கள் நன்றாகப் பயன்படுத்திக் கொண்டார்கள்.

அதையும் தாண்டிய நிலையில் கிராமங்களில் வாழ்ந்த மக்கள் சுத்த வெள்ளந்திகளாகவே வாழ்ந்தார்கள். தங்களின் கிராமத்தை விட்டு வெளியே என்ன நடக்க்கிறது என்பது தெரியாமலேயே வாழ்ந்தார்கள். வெளியுலகத்தைப் பற்றி அவர்கள் கவலைப் படவில்லை.

வெளியுலகச் செய்திகள் என்பது அவர்களுக்குத் தேவை இல்லாத செய்திகள்; தங்களுக்குச் சோறு போடாத செய்திகள். அதுவே அவர்களின் அப்போதைய பொதுவான கருத்து. அவர்களின் கிராமத்தில் நடப்பது தான் அவர்களின் முக்கியமான செய்தி.

இராமன் ஆண்டால் என்ன. இராவணன் ஆண்டால் என்ன. அவர்களுக்கு அது எல்லாம் கவலை இல்லை. அவர்களுக்கு அவர்களின் கிராமம் இருக்கிறது. அந்தக் கிராமத்தில் வயல் புல்வெளிகள் இருக்கின்றன. அந்த வயல்களும் அந்தப் புல்வெளிகளும் அவர்களுக்குச் சோறு போடுகின்றன. அது போதும் அவர்களுக்கு. அப்படித்தான் கிராம மக்கள் நினைத்தார்கள். அப்படித்தான் அவர்களின் வாழ்க்கையும் ஓடிக் கொண்டு இருந்தது. அப்படியே வாழ்ந்தும் வந்தார்கள்.

இடை இடையில் கொடிய பஞ்சங்கள் வந்து போயின. பஞ்சத்தில் வறுமையும் வெறுமையும் சேர்ந்து கொண்டன. அம்மை, காலரா, மலேரியா போன்ற கொடும் நோய்களும் வந்தன. ஏராளமான உயிர்களைப் பறித்துச் சென்றன. இருந்த போதிலும் கிராம மக்களின் அடிப்படைச் சிந்தனையில் மாற்றங்கள் ஏற்படவில்லை.

ஆக இப்படிப்பட்ட சிந்தனைப் போக்கைப் பார்த்த ஆங்கிலேயர்கள் அதையே தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார்கள். ஒருவரின் பாதகமே மற்றவருக்குச் சாதகமாக அமைகின்றது. அதற்கு இது நல்ல ஓர் எடுத்துக்காட்டு.

பேரும் புகழும் பெற்ற இந்திய நாட்டை பிச்சைக்கார நாடாக மாற்றுவதில் ஆங்கிலேயர்கள் வெற்றியும் கண்டார்கள். இப்படிச் சொல்வதற்கு மன்னிக்கவும். இந்தியா என்பது ஒரு புண்ணியமான பச்சை மண். அந்தப் பச்சை மண்ணை ஒரு கரிசல் காடாக மாற்றிப் போட்டார்களே. வேறு எப்படிங்க சொல்வது.

நிலப் பிரபுக்களும் நிலச் சுவான்தாரர்களும் வெள்ளைக்காரர்களுக்குக் காக்காய் பிடிப்பவர்களாக மாறிப் போனார்கள். வெள்ளைக்காரர்கள் பிய்த்துப் போட்ட அல்வா துண்டுகளைப் பொறுக்கித் தின்றே பணக்காரர்கள் ஆனார்கள்.

வசதி படைத்தவர்களும் வாய்ச் சொல் வீரர்களும் வசதி மேல் வசதி அடைந்தார்கள். ஆனால் ஏழை எளியவர்கள் மட்டும் ஏழ்மைக் கோட்டைத் தாண்ட முடியாமல் பஞ்சப் பாமர ஜீவன்களாகிப் போனார்கள்.

அந்தத் தாக்கத்தில்; அந்த மன வேதனையில்; அந்த ஆதங்கத்தில் தான் அப்படிச் சொல்கிறேன். தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். இன்றைக்கு இந்தியா ஒரு வல்லரசு. உலகப் போலீஸ்காரர் அமெரிக்காவே ஓரக் கண்ணால் பார்க்கிறார். இருந்தாலும் இந்தியாவில் ஊழல் பெருச்சாளிகள் சொகுசு காணும் வரையில் வல்லரசு என்பது கனவு அல்ல. அது வெறும் நனவு.

இந்திய கிராமத்து மக்கள் வேறு வழி தெரியாமல் அவர்கள் பிறந்த மண்ணிலேயே அடிமைகளாக மாறத் தொடங்கினார்கள். வாழ்ந்தாக வேண்டும் எனும் கட்டாயம். அதனால் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் புலம் பெயரத் தொடங்கினார்கள். அந்தக் காரணத்தினால் தான் ஆயிரக் கணக்கான; இலட்சக் கணக்கான தென் இந்தியர்கள் மலாயாவுக்கு வேலை தேடி வந்தார்கள்.  

பட்டினி, வறுமை, சாதியக் கொடுமைகளினால் சுயமரியாதை இழந்து தவித்து நின்ற தமிழர்கள் பலருக்கு அதுவே வரப்பிரசாதமாக அமைந்தது. தங்களின் தலைவிதியை வெள்ளைக்கார எசமானர்களிடம் ஒப்படைத்து விட்டு கப்பலேறி வந்தார்கள். தமிழ்நாட்டில் ஒன்பது இடங்களில் இருந்து தொழிலாளர்கள் கொண்டு வரப் பட்டார்கள். அந்த இடங்கள்:

1. இராமநாதபுரம் 2. சேலம் 3. தஞ்சாவூர் 4. செங்கல்பட்டு 5. வட ஆற்காடு 6. தென் ஆற்காடு 7. திருச்சி 8. மதுரை 9. திருநெல்வேலி

(4. Hugh Tinker - Hansib 1991)

கேரளாவில் மூன்று இடங்களில் இருந்து தொழிலாளர்கள் கொண்டுவரப் பட்டார்கள். அந்த இடங்கள்: 1. மலபார் 2. கண்ணூர் 3. கன்னியாகுமரி

ஆந்திராவில் ஆறு இடங்களில் இருந்து தொழிலாளர்கள் கொண்டுவரப் பட்டார்கள். அந்த இடங்கள்: 1. குண்டூர் 2. விசாகப்பட்டினம் 3. நெல்லூர் 4. கஞ்சம் 5. கிழக்கு கோதாவரி 6. மேற்கு கோதாவரி

(5. Rajeswary Ampalavanar)

மலாயாவுக்குக் கொண்டு வரப்பட்ட தென் இந்தியர்கள் ஒரு வகையில் கொத்தடிமைகளாகவே நடத்தப் பட்டார்கள். முதலில் ஒப்பந்தக் கூலிகளாகத் தான் கொண்டு வரப் பட்டார்கள். பின்னர் கங்காணி முறையில் கொண்டு வரப் பட்டார்கள். சொல்லி இருக்கிறேன். ஒப்பந்தக் கூலி முறை 1858-ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட முறை.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
13.10.2020

சான்றுகள்

1. Abraham Eraly (2015). The Age of Wrath: A History of the Delhi Sultanate. Penguin Books. p. 178. ISBN 978-93-5118-658-8.

2. Muhammad Baqir. The Peacock Throne: Romance and Reality. Journal of the Research Society of Pakistan, 3 (1966), pp. 27-32.

3. Varma, Nitin (2016). Coolies of Capitalism: Assam Tea and the Making of Coolie Labour. De Gruyter Oldenbourg. ISBN 978-3-11-046115-2.

4. Hugh Tinker - Hansib 1991 - Foreign workers. A New System of Slavery: The Export of Indian Labour Overseas 1830-1920

5. Rajeswary Ampalavanar: The Indian Minority & Political Change in Malaya 1945-1957, Oxford University Press, 1981


 

14 அக்டோபர் 2020

மலாயா தமிழர்கள்: பத்து காஜா தமிழ்ப் பெண்மணி 1889

கிளீங்கிரோத் (Charles J. Kleingrothe) என்பவர் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த புகைப்படக்காரர். பிறப்பு: 1864; இறப்பு: 1925. இவர் இந்தோனேசியா, மேடான் (Medan, Sumatra) எனும் இடத்தில் நீண்ட காலம் வாழ்ந்தவர். அங்கேயே 1889-ஆம் ஆண்டு ஒரு புகைப்பட நிறுவனத்தையும் நடத்தி வந்தார். அவருடைய வணிகத் தோழர் ஹெர்மன் ஸ்டாபெல் (Herman Stafhell).

இந்தோனேசியாவில் பாத்தேக் மக்களை நூற்றுக் கணக்கான படங்கள் எடுத்து இருக்கிறார்கள். கிளீங்கிரோத் 1889-ஆம் ஆண்டில் இருந்து 1891-ஆம் ஆண்டு வரையில் மலாயாவில் பயணம் மேற்கொண்டார்.

ஜொகூர் பாரு; கோலாலம்பூர்; மலாக்கா; பினாங்கு; பேராக்; சிரம்பான் ஆகிய இடங்களில் எடுத்த படங்களில் 34 படங்கள் அரிய பொக்கிஷங்களாகக் கருதப் ப்படுகின்றன. இந்தப் படங்கள் இப்போது நெதர்லாந்து, லைடன் பல்கலைக்கழக நூலகத்தில் (Leiden University Library) பாதுகாப்பாக உள்ளன.

Kuala Kangsar Road 1889

இவர் பேராக் மாநிலத்தில் 13 படங்கள் எடுத்து இருக்கிறார். அவற்றில் இரு படங்கள் பத்து காஜாவில் எடுக்கப் பட்டவை. அவற்றில் ஒரு படத்தில் ஒரு தமிழ்ப் பெண்மணி காட்சிப் படுத்தப் படுகிறார். வருடத்தைக் கவனியுங்கள். 1889-ஆம் ஆண்டு. ஒரு குடையுடன் காட்சி அளிக்கிறார்.

1800-ஆம் ஆண்டுகளில் மலாயா தமிழர்கள், மலாயா நாடு முழுவதும் பரவி இருந்து உள்ளனர். மலாயாவின் கட்டமைப்புப் பணிகளில் சிறப்பான சேவைகள் செய்து உள்ளனர். அவர்களின் அர்ப்பணிப்புகளும் சேவைகளும் காலத்தால் மறக்க முடியாத வரலாற்றுத் தடங்கள். அவற்றுக்கு 1800-ஆம் ஆண்டுகளில் எடுக்கப்பட்ட கறுப்பு வெள்ளை புகைப்படங்கள் சாட்சிகளாக அமைகின்றன. 

Padang Rengkas Taiping Rail Road 1890s

1903-ஆண்டு குடியேறிய வம்சாவளியினர். நாட்டின் உயர்ந்த பதவியை வகித்தவர். இந்த நாட்டு தமிழர்களைப் பார்த்து வந்தேறிகள் என்று சில பல முறை சொல்லி இருக்கிறார். அது தவறு என்பதைச் சுட்டிக் காட்டவே மலாயா தமிழர்களின் 1800-ஆம் ஆண்டுப் படங்கள் இங்கு தொடர்ச்சியாகப் பதிவு செய்யப் படுகின்றன. நன்றி.

(மலாக்கா முத்துகிருஷ்ணன்)
14.10.2020

References:

Photographer: Kleingrothe, C.J. (Kleingrothe, Carl Josef, 1864-1925) / Medan
Description: Nederlands: Weg te Batu Gadja bij Ipoh.
English: Road at Batu Gajah in Ipoh, Malaysia.
Source: Leiden University Library, KITLV, Image 79992 Collection page Southeast Asian & Caribbean Images (KITLV)

2. https://rkd.nl/nl/explore/artists/376523

Padang Rengkas Taiping Rail Road Maintanence Indians 1890s

Notes:

Charles J. Kleingrothe, known as C. J. Kleingrothe (Krefeld, 1864 - 1925) was a German photographer who since 1889 had a studio in Medan, Sumatra. He partnered with the Swedish photographer H. Stafhell for ten years and photographed the landscapes and architecture as well as portraits in Indonesia and Malaya.

In 1901, the partnership ended and in 1902 Kleingrothe opened a studio on Kesawan street in downtown Medan and photographed agricultural subjects including tobacco, coffee, tea, rubber and palm oil cultivation, administration and transport.



 

13 அக்டோபர் 2020

மலாயா தமிழர்கள்: மலாயாவுக்கு ஏன் வந்தார்கள்?

தமிழ் மலர் - 12.10.2020

மலாயா தமிழர்கள் மலாயாவுக்கு ஏன் கொண்டு வரப் பட்டார்கள்? எப்படி கொண்டு வரப் பட்டார்கள்? எப்போது கொண்டு வரப் பட்டார்கள்? எங்கே இருந்து கொண்டு வரப் பட்டார்கள்? இந்த நான்கு கேள்விகளையும் நன்கு ஆராய்ந்து பார்த்தால் மலாயா தமிழர்களின் வரலாறு கண்ணீர் வடிக்கும். அந்த வரலாற்றுடன் சேர்ந்து மலேசியத் தமிழர்களும் கண்ணீர் வடிப்பார்கள்.

16-ஆம் நூற்றாண்டில் பிரித்தானிய கிழக்கிந்திய (Company rule in India - Company Raj) கம்பெனியின் மூலமாக ஆங்கிலேயர்கள் தமிழகத்தில் முதன் முதலில் கால் பதித்தார்கள். வலது காலை எடுத்து வைத்தார்களா அல்லது இடது காலை எடுத்து வைத்தார்களா தெரியவில்லை. அன்றைக்குப் பிடித்தது ஏழரை நாட்டு உறவு. இன்னும் விட்டுப் போகவில்லை.

வர்த்தகம் செய்ய வந்தவர்கள் தான். வர்த்தகம் எனும் பெயரில் சென்னையில் புனித ஜார்ஜ் கோட்டையைக் கட்டினார்கள். அப்படியே மெல்ல மெல்ல உள்ளூர் அரசியல் விவகாரங்களில் தலையிட்டார்கள். 18-ஆம் நூற்றாண்டில் கர்நாடகப் போர்கள். ஆங்கிலேயர்களுக்கு வெற்றி. கை ஓங்கியது.

ஆற்காடு நவாப், பிரஞ்சுப் படைகளை வென்றார்கள். அவர்களின் ஆதிக்கத்தில் இருந்த பல பகுதிகள் ஆங்கிலேயர்கள் வசம் வந்தன. ஹைதர் அலி; திப்பு சுல்தானை வீழ்த்தினார்கள். கட்டபொம்மன், மருது பாண்டியர்,  பாளையக்காரர்களை வீழ்த்தினார்கள். அதன் பின்னர் சென்னை மாநிலத்தில் கம்பெனி ஆட்சி வலுப்பெற்றது.

1858-ஆம் ஆண்டில் அந்தக் கம்பெனி கலைக்கப் பட்டது. இங்கிலாந்து அரசு தனது நேரடி ஆட்சியின் கீழ் இந்தியாவைக் கொண்டு வந்தது.

ஆங்கிலேயர்கள் தமிழகத்தை ஆட்சி செய்யும் போது விவசாய நிலங்களுக்கு வரி மேல் வரி விதித்தார்கள். அந்த வரி ஆங்கிலேயக்குச் சிறந்த ஒரு வருமானமாக இருந்தது.

அந்த வகையில் ஆங்கிலேயர்கள் பல இடங்களைப் பல மன்னர்களிடம் இருந்து பற்பல மோடி மஸ்தான் சால்சாப்பு வித்தைகளைக் காட்டி அபகரித்துக் கொண்டார்கள். அதுவே தமிழக வரலாற்றில் ஒரு கறுப்பு அத்தியாயம்.

கிழக்கிந்தியக் கம்பெனியார் வருவதற்கு முன்னர் தமிழகத்தில் ஒவ்வோர் இடத்திற்கும் ஒரு வகையான வரி அமைப்பு இருந்தது. அந்த அமைப்பு சோழர், பாண்டியர், விஜயநகர அரசர்கள் காலத்து வரிகள்.

புதிதாக வந்த ஆங்கிலேய அரசாங்கம் அந்த வரிகளை எல்லாம்  தொகுத்து ஓர் ஒழுங்கு முறைக்குக் கொண்டு வந்தது. குடிமக்கள் அரசாங்கத்திற்கு நேரடியாக வரி கட்டினால் போதும். வேறு வரிகளைக் கட்ட வேண்டாம் என்று ஒரு சட்டத்தையும் கொண்டு வந்தது.

அப்படி வந்த அந்த வரிக்குப் பெயர்தான் ரயத்துவாரி. அதாவது மக்கள் வரி. இங்கே மலேசியாவில் பொது மக்களை ராக்யாட் என்று சொல்கிறார்கள். அந்த ராக்யாட் எனும் சொல்லில் இருந்து வந்தது தான் ரயத்து எனும் சொல். தவிர மிராஸ்தாரி முறை என்கிற ஒரு நிலவரியும் தமிழகத்தில் ஏற்கனவே இருந்தது.

நாயக்கர் ஆட்சிக்காலம் முடிவுற்ற பிறகு தமிழ்நாட்டில் நூற்றுக் கணக்கான பாளையக்காரர்கள் தனித் தனியாக தனி அரசுகளை நடத்தி வந்தார்கள். அந்தப் பாளையக்காரர்களிடம் சிறுசிறு படைகளும் இருந்தன. ஆங்கிலேய அரசாங்கம் அந்தப் படைகளையும் கலைத்துப் போட்டது.

பாளையக்காரர்கள் எனும் பெயர் மாறி ஜமீன்தாரர்கள், ஜாகீர்தாரர்கள், மிட்டாதாரர்கள், பட்டக்காரர்கள் என்று பற்பல பெயர்கள் உண்டாயின. இவர்களும் சும்மா இல்லை. கணக்கு வழக்கு இல்லாத வரிகளை விதித்தார்கள்.

அந்த வரிகளைக் கட்ட முடியாதவர்கள் மீது பற்பல கொடுமைகள் நடத்தப் பட்டன. ஆக ஊருக்கு ஊர் ஒரு வரி. ஒரு குலத்துக்கு ஒரு வரி. இப்படிப்பட்ட வரிகளை எல்லாம் ஒன்று இணைத்து ரயத்து வரி என்று கொண்டு வந்தார்கள்.

தென்னிந்தியாவில் மன்னர்களின் ஆட்சியின் கீழ் இருந்து வந்த இராமநாதபுரம், புதுக்கோட்டை, மைசூர், திருவிதாங்கூர் ஆகியவை ஒன்றிணைக்கப்பட்டு சென்னை மாகாணம் என்று ஒரு தனி மாநிலம் அமைக்கப் பட்டது. இந்தக் கட்டத்தில் தான் மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழிகள் பேசும் மக்கள் வாழ்ந்த இடங்களும் சென்னை மாநிலத்தில் சேர்க்கப் பட்டன.

தமிழ்நாட்டின் கிராமப்புற விவசாயத் துறையில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. அந்த மாற்றங்களில் தொடர்ச்சியாக வந்த பஞ்சங்களையும் சேர்க்க வேண்டும்.

இதன் உச்சக் கட்டமாக 1878-ஆம் ஆண்டு தாது வருடப் பஞ்சம் (The Great Famine of 1876 – 1878 ) என்ற ஒரு கொடிய பஞ்சம் ஏற்பட்டது. தமிழ்நாட்டில் பல ஆயிரம் மக்கள் இறந்து போனார்கள்.

நிலக்கிழார்கள், லேவாதேவிக்காரர்களின் பிடிகளில் சிக்கிய சாதாரண விவசாயிகள் தங்களின் நில உரிமைகளை இழந்தார்கள். ஒரு காலத்தில் நிலச் சொந்தக்காரர்களாக இருந்தவர்கள் கடைசியில் அற்றைக் கூலிகளாக மாறினார்கள்.  தொழிலாளர்கள் சிலரும் பலரும் கொத்தடிமைகளாக மாறிப் போனார்கள். அதனால் பஞ்சம் பிழைக்க இடம் பெயர்ந்தார்கள்.

தமிழகக் கிராமப் புறங்களில் வாழ்ந்த விவசாயத் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப் பட்டார்கள். குறிப்பாகத் தலித் மக்கள். இவர்கள் அதிகமாகவே பாதிக்கப் பட்டார்கள். கிராமங்களை விட்டு எப்படியாவது வெளியேற வேண்டும். எப்படியாவது உயிர் பிழைக்க வேண்டும் எனும் உணர்வுகள் அவர்களிடம் மேலோங்கி நின்றன.

இந்தக் கட்டத்தில்தான்  ரயத்து வரி உருவாகின. மலாயாவில் ரப்பர், தேயிலை, காபித் தோட்டங்கள் உருவாகின. மியன்மாரில் ரப்பர் தோட்டங்கள்; மொரிசியஸ் தீவில் கரும்புத் தோட்டங்கள் உருவாக்கப்பட்டன. இயற்கையான காடுகளை வெட்டித் திருத்திச் செப்பனிட வேண்டி இருந்தது.

காபி, தேயிலை, ரப்பர் தோட்டங்களை உருவாக்குவது பெரிய விசயமாக இருந்தாலும் அவற்றைப் பராமரிக்கவும், அறுவடைகளைச் சேகரிக்கவும் அதிக அளவில் தொழிலாளர்கள் தேவைப் பட்டார்கள். அதனால் வேலையாட்களுக்கு கிராக்கி ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து ஆள் பிடிக்கும் வேலையும் தொடங்கியது. அப்படியே சஞ்சிக்கூலிகளின் சகாப்தமும் தொடங்கியது.  

அப்படி பயணித்த சஞ்சிக்கூலிகள்தான் அப்படியே வரலாற்றுச் சுவடுகளிலும் சங்கமித்து விட்டனர். அந்தச் சுவடுகளில் அவர்கள் விட்டுச் சென்ற சாம்பல்கள் தான் இன்றைய வரைக்கும் தத்தம் உரிமைகளுக்காகப் போராடி வருகின்றனர். போராட்டம் தொடர்கிறது.

மலேசியாவில் மட்டும் அல்ல. இந்த உலகில் எங்கு எல்லாம் தமிழர்கள் வாழ்கிறார்களோ அங்கு எல்லாம் விடியலை நோக்கி அந்த உரிமைப் போராட்டங்கள் தொடர்கின்றன. இன்னும் பல தலைமுறைகளுக்குத் தொடரவே செய்யும்.

18-ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் ஒரு மாபெரும் சூறையாடல் நடந்தது. இந்தியாவின் அத்தனை இயற்கை வளங்களையும் செயற்கைச் செல்வங்களையும் வெள்ளைக்காரர்கள் சூறையாடிச் சென்றதுதான் அந்த வரலாற்றுச் சூறையாடல்.

அப்படித்தான் சொல்ல முடிகிறது. பாரத மாதாவின் கழுத்தை நெறித்துக் கொன்று விட்டார்கள் என்று ஒரே வார்த்தையில் சொல்லி முடித்து விடலாம். அந்த வகையில் இந்தியாவின் கிராமப் பொருளாதாரத்தை ஆங்கிலேயர்கள் சன்னம் சன்னமாய்ச் சிதைத்து விட்டார்கள். கிராமப்புற மக்களை வறுமைப் பிடியில் சிக்க வைத்து விட்டார்கள்.

அவர்களின் இயல்பான எதார்த்த வாழ்க்கையில் இருந்து விரக்தியின் வெறுமைகள் பார்த்த எல்லைக்கே விரட்டி அடிக்கப் பட்டார்கள்.

வேறு வழி தெரியாத வெள்ளந்தி மக்களும் வேறு வழி இல்லாமல் வெள்ளைக்காரர்களுக்கு அடிமையாகிப் போனார்கள். அந்தத் தாக்கத்தில் தான் உலகின் பல நாடுகளுக்கு தமிழ் மக்கள் புலம் பெயர்ந்தார்கள். அதுதான் அப்போதைக்கு தமிழக மக்களுக்கு எழுதி வைக்கப்பட்ட தலை எழுத்து. இதில் ஒரு பெரிய ஆச்சரியம் என்ன தெரியுங்களா.

17-ஆம் நூற்றாண்டில் இந்தியாவிற்குள் நுழைந்த வெள்ளைக்காரர்கள் இந்தியாவைப் பிடிக்க வேண்டும்; இந்தியாவைக் கட்டிப் போட்டு ஆட்சி செய்ய வேண்டும்; இந்தியாவைத் தங்கள் பிடிக்குள் கொண்டு வரவேண்டும் என்று நினைத்துக் கொண்டு வரவில்லை. அப்படிப்பட்ட எண்ணம் அவர்களிடம் இல்லவே இல்லை.

வந்தவர்கள் எல்லோருமே வணிகர்கள். அத்தனைப் பேரும் வணிக நோக்கத்தோடு தான் இந்தியாவிற்குள் நுழைந்தார்கள். கிடைத்ததை அள்ளிக் கொண்டு போவதே அவர்களின் தலையாய நோக்கமாக இருந்தது.

வணிகம் செய்து அதிக லாபம் சம்பாதிப்பது. கிடைத்த லாபத்தில் மேலும் மேலும் லாபம் சம்பாதிப்பது. கிடைத்த லாபத்தை மூலதனத்தில் போட்டு மேலும் மேலும் லாபம் சம்பாதிப்பது. அது தான் அவர்களின் நோக்கம். அதுவே அவர்களின் தலையாய இலட்சியம்.

இந்தியா எப்பேர்ப்பட்ட நாடு. எப்பேர்ப்பட்ட ஒரு பெரிய நாடு. ஆனால் ஒரு குட்டிநாட்டு வெள்ளைக்காரர்களிடம் அடகு போனது. வேதனையிலும் வேதனை. காலம் செய்த கோலம் என்று சொல்வார்களே. அதே தான். அந்த மாதிரி நடந்து விட்டது. எழுதும் போது மனம் வலிக்கிறது.

1786-ஆம் ஆண்டு முதன்முதலாக தமிழர்கள் பினாங்கிற்குக் கொண்டு வரப்பட்டார்கள். அது மலாயா வரலாற்றில் தமிழர்களின் மூன்றாவது இடம்பெயர்வு.  பினாங்கு காடுகளைத் துப்புரவு செய்வது; சாலைகள் அமைப்பது; வடிகால்கள் வெட்டுவது; பொது கட்டிடங்கள் கட்டுவது; பொது உள்கட்டமைப்புப் பணிகள் செய்வது; இவற்றுக்கு மலாயா தமிழர்கள் முன்னோடிகளாக விளங்கினார்கள்.

கரும்பு, காபி, கொக்கோ, கித்தா மரங்கள் பயிர் செய்வதற்காகத் தமிழர்கள் கொண்டு வரப்படவில்லை. காடுகளை வெட்டிச் சமப்படுத்தி மனிதர்களுக்கு ஏற்ற வகையில் குடியிருப்பு பகுதிகளை உருவாக்குவதற்காகத் தான் கொண்டு வரப்பட்டார்கள்.

அப்படி வந்த தமிழர்கள் தான் பினாங்கு தீவின் காடுகளை அழித்தார்கள். ரோடுகளைப் போட்டார்கள். மனிதர்கள் நடமாடும் அளவிற்கு நல்லது செய்துவிட்டுப் போய் இருக்கிறார்கள். அவர்கள் அமைத்துக் கொடுத்த சாலைகளில் தான், இப்போது பலரும் சொகுசாய்க் கார் ஓட்டி சொகுசாய் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

ஒரு நாட்டின் காடுகளை அழித்து அந்த நாட்டை ஒரு சொர்க்க பூமியாக மாற்றிய அந்த தமிழர்களைப் பார்த்து வந்தேறிகள் என்று சிலர் சொல்கிறார்கள். வெட்கமாக இருக்கிறது. அப்படிச் சொல்பவர்களுக்கு கைலாஷ் நாட்டின் அதிபர் நித்தியானந்தா மொழியில் சொன்னால் நோ சூடு. நோ சொரணை. நோ நன்றி.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
12.10.2020

Sources:

1. Chaudhuri, K. N. (1978). The Trading World of Asia and the English East India Company, 1660–1760. Cambridge, UK: Cambridge University Press. ISBN 978-0-521-21716-3.

2. Sen, Sudipta (1998). Empire of Free Trade: The East India Company and the Making of the Colonial Marketplace. Philadelphia: University of Pennsylvania Press. ISBN 978-0-8122-3426-8.

3. Williams, Roger (2015). London's Lost Global Giant: In Search of the East India Company. London: Bristol Book Publishing. ISBN 978-0-9928466-2-6.

4. Keay, John (2010). The Honourable Company: A History of the English East India Company. HarperCollins UK. ISBN 978-0-00-739554-5.

5. Farrington, Anthony, ed. (1976). The Records of the East India College, Haileybury, & other institutions. London: H.M.S.O.

6. Stern, Philip J. (2009). "History and historiography of the English East India Company: Past, present, and future!". History Compass. 7 (4): 1146–1180.