தமிழ் மலர் - 29.10.2020
அசாம் பழைமை வாய்ந்த நாடு. அந்நியர் தலையீடுகள் இல்லாமல் தனிமையில் ஆட்சி செய்த நாடு. மகாபாரதம், காளிகா புராணம் (Kalika Purana), யோங்கினி தந்திரம் போன்ற புராணங்களில் சொல்லப்படும் நாடு. திபெத்தியம்; பர்மியம்; இந்தியம்; ஆரியம் ஆகிய பண்பாடுகளின் சங்கமத்தில் உருவான நாடு. இந்தியப் பேரேடுகளில் இன்றும் பெருமையாகப் பேசப்படும் நாடு.
13-ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் வட கிழக்குப் பகுதியில் அகோம் பேரரசு (Ahom kingdom) எனும் பெரும் பேரரசு இருந்தது. தொடக்கக் காலத்தில் கச்சாரி தனவம் அரசு (Kachari Danava dynasty); நரகா அரசு (Naraka); பாகுமா அரசு (Bhauma dynasty); அசுரா அரசு (Asura Kingdom); காமரூபா அரசு (Kamarupa); தாவகா அரசு (Davaka). இப்படி நிறைய அரசுகள் அசாம் நாட்டை ஆட்சி செய்து உள்ளன.
ஆகக் கடைசியாக 1228-ஆம் ஆண்டு தொடங்கி 1826-ஆம் ஆண்டு வரை அகோம் பேரரசு ஆட்சி செய்தது. இந்தக் காலக் கட்டத்தில் மொகலாயர்களும் ஆட்சி செய்து இருக்கிறார்கள். டில்லி சுல்தானகமும் ஆட்சி செய்து இருக்கிறது.
19-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் வந்தார்கள். சும்மா சுற்றிப் பார்க்க வந்தது மாதிரி முதலில் ஒரு ‘ஷோ’ காட்டினார்கள். ஒரு சில ஆண்டுகளில் அகோம் பேரரசை அப்படி இப்படி என்று அடித்துப் பிடித்து வளைத்துப் போட்டுக் கொண்டார்கள். பாலைவனத்துக் கூடாரத்திற்குள் ஒட்டகம் தலையை விட்ட கதை மாதிரிதான். அப்புறம் அடுத்து வந்த 120 ஆண்டுகளுக்கு ஆட்சி செய்தார்கள்.
தேயிலையைப் பிழிந்தால் தேயிலைச் சாறு வரும். தெரியும் தானே. அப்புறம் அதில் கொஞ்சம் சீனி போட்டுக் குடித்தால் ஓர் ‘உம்’ வரும். அதுவும் தெரியும் தானே. அந்த மாதிரி ஆங்கிலேயர்களும் அசாம் தேயிலையை நன்றாகவே பிழிந்து பிழிந்து சாறு எடுத்து விட்டார்கள்.
சீனர்கள் கண்டுபிடித்த தேயிலைக் கலைக்கு சீனமொழியிலேயே அகராதி எழுதிய பெருமை இவர்களைத் தவிர வேறு யாருக்கும் கிடைக்காது. அந்த மாதிரி தேயிலைக்கு அகராதி எழுதி கலைக் களஞ்சியம் தயாரித்தவர்கள்.
சும்மா சொல்லக் கூடாது. அசாம் நாடு சக்கையான பின்னர்தான் அந்த நாட்டை விட்டே வெளியே போனார்கள். அந்தச் சக்கைகளில் ஒரு சக்கைதான் அசாம் நாட்டுத் தமிழர்கள். அப்படி தமிழர்களைப் பிழிந்து எடுத்து விட்டார்கள்.
இன்னும் ஒரு விசயம். 1945-ஆம் ஆண்டில் அசாம் நாட்டை விட்டு ஆங்கிலேயர்கள் போகும் போது சும்மா ஒன்றும் போகவில்லை. அசாமில் இருந்த கொஞ்ச நஞ்சத்தையும் சுரண்டிக் கொண்டு போய் விட்டார்கள்.
அதாவது பரவாயில்லை. அங்கே இருந்த மக்கள் குடுமி பிடித்துச் சண்டை போட்டுக் கொள்ளும் அளவிற்கு சூடம் சாம்பிராணி கொளுத்தி வைத்து விட்டுப் போனார்களே. அதை எங்கே கொண்டு போய்ச் சேர்ப்பதாம்.
சூரியனையே திரைத்துணி போட்டு மூடி கின்னஸ் சாதனை படைத்தவர்கள் ஆயிற்றே. அப்படிப்பட்ட சகலகலா வல்லவர்களை மலாயா தமிழர்களும் மறக்க மாட்டார்கள். அசாம் தமிழர்களும் மறக்க மாட்டார்கள். விடுங்கள்.
அசாம் ஆங்கிலேயர்களின் பிடியில் சிக்கியதும் அதன் பழங்காலத்துக் கலாசாரப் பண்புகள் சன்னம் சன்னமாய்ப் பாதிக்கப் பட்டன. அதற்குக் காரணம் அசாம் தேயிலைத் தோட்டங்கள் தான். ராபர்ட் புருஸ் (Robert Bruce) எனும் ஆங்கிலேயர். இவர் மூலமாக 1820-ஆம் ஆண்டுகளில் தேயிலைத் தோட்டங்கள் அசாம் நாட்டில் தோன்றின.
அசாம் இப்போது இந்தியாவின் ஒரு மாநிலம் தான். இருந்தாலும் பல ஆயிரம் ஆண்டுகளாக அது ஒரு பெரிய நாடாக தனித்து நின்று ஆட்சி செய்து வந்தது. தனியாக இயங்கிய ஒரு நாடு. ஆகவே தான் அதை நாடு என்று அழைக்கிறோம்.
இந்தியாவில் இருந்து நிறைய தொழிலாளர்கள் அசாம் தேயிலைத் தோட்டங்களுக்குச் சென்றார்கள். அதில் தமிழ்நாட்டுத் தொழிலாளர்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள். சில பல ஆயிரம் தமிழர்கள்.
அதற்குப் பின்னர் மணிப்பூர் தமிழர்களும் அசாம் தேயிலைத் தோட்டங்களுக்குச் சென்றார்கள். மணிப்பூர் தமிழர்களைப் பற்றி நேற்றைய கட்டுரையில் சொல்லி இருக்கிறேன்.
இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் மிசோரம் (Mizoram); நாகலாந்து (Nagaland); திரிப்புரா (Sikkim Tripura); மணிப்பூர் (Manipur); அருணாச்சலப் பிரதேசம் (Arunachal Pradesh); அசாம் (Assam); மேகாலயா (Meghalaya) ஆகிய ஏழு மாநிலங்கள் உள்ளன.
இந்த மாநிலங்களில் பர்மா எல்லையில் மிக ஒட்டி இருப்பது மணிப்பூர். இந்த மணிப்பூரில், மோரே கிராமத்தில் இப்போது 17,000 தமிழர்கள் வாழ்கிறார்கள். இவர்களைத் தான் மணிப்பூர் தமிழர்கள் என்று அழைக்கிறார்கள். இவர்களில் 3000 பேர் அசாம் தேயிலைத் தோட்டங்களில் இப்போது வேலை செய்து வருகிறார்கள்.
மோரே என்பது ஒரு சிறு கிராமப்புற நகரம். அங்கே தங்கிய தமிழர்கள் காலப் போக்கில் தங்களின் உறவினர்களையும் நண்பர்களையும் அழைத்துக் கொண்டார்கள். அப்போது அந்தக் கிராமத்தில் குக்கீஸ் என்கிற பழங்குடி இனத்தவர் வாழ்ந்து வந்தார்கள்.
தொடக்கத்தில் தமிழர்களுக்கும் குக்கீஸ் பழங்குடிகளுக்கும் சலசலப்புகள். 1990-களில் மணிப்பூர் பூர்வீக இனக் குழுக்களின் ஆயுதப் போராட்டங்கள். இடையில் சிக்கிய தமிழர்கள் பலர் கொலை செய்யப் பட்டார்கள்.
அசாம் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்த தமிழர்களும் பழி வாங்கப் பட்டார்கள். அவர்களில் சிலர் மீண்டும் தமிழ்நாட்டுக்கே அகதிகளாகப் போய்ச் சேர்ந்தார்கள்.
இருந்தாலும் காலப் போக்கில் சமரசமானது. தமிழர்களும் குக்கீஸ் பழங்குடிகளும் இப்போது இணைந்து வாழ்கிறார்கள்.
1950-ஆம் ஆண்டுகளில் தமிழகத்தில் இருந்து வந்த தமிழர்களுக்கு ஷொலிம் பெயிட் (Sholim Bait) என்பவர் உதவி செய்தார். அதற்கு அங்குள்ள தமிழர்கள் செலுத்திய மண் வரிதான் காரணம். அந்த வரியில் ஒரு குறிப்பிட்ட பங்கை அவர் எடுத்துக் கொண்டார். மீதியை ஆங்கிலேய அரசுக்கு செலுத்தி வந்தார்.
இப்போதைக்கு மோரே கிராமத்தின் மக்கள் தொகை ஏறக்குறைய 35,000. இதில் தமிழர் மட்டும் 17,500 பேர். தமிழர்கள் அனைவரும் தமிழிலும் பர்மிய மொழியிலும் பேசிக் கொள்கிறார்கள்.
ஆங்கிலேய ஆட்சியின் போது பர்மா நாடு இந்தியாவின் ஒரு மாநிலமாகத் தான் இருந்தது. 1948-க்கு முன்னால் நடந்ததைச் சொல்கிறேன். அந்தக் காலக் கட்டத்தில் தமிழர்களுக்குப் பிரச்சினை இல்லை. தேயிலைத் தோட்டத்தில் பிரச்சினைகளைச் சந்தித்தவர்கள் மோரே கிராமத்திற்கே திரும்பி வந்தார்கள்.
மோரே கிராமத்தில் இருந்து ரங்கூன் வரை போய் வியாபாரம் செய்தார்கள். தடைகள் ஏதும் இல்லை. அப்போதைய காலத்தில் மோரே நகரம் இந்தியா பர்மா நாடுகளுக்கு ஒரு முக்கிய நுழைவாயிலாகவும் செயல்பட்டது.
மோரேவில் இப்போது நிறைய தமிழர் உணவகங்கள் இருக்கின்றன. சின்னச் சின்ன மளிகைக் கடைகளும் இருக்கின்றன. அசாம் தேயிலை இங்கே அதிகமாக விற்பனை ஆகிறது.
1960-களில் அசாம் தேயிலைத் தோட்டங்களில் இருந்து குடியேறிய தமிழர்கள் மோரேவில் சின்னச் சின்ன வியாபாரங்கள் செய்தார்கள். மோரேவிற்கு அருகில் நாம்ப்லாங் (Namplong) என்று ஒரு சந்தை இருந்தது. அந்தச் சந்தையில் சிறிய அளவில் பண்டமாற்று வியாபாரம். சந்தையில் தமிழர்கள் சிலர் தொழிலாளர்களாக வேலை செய்தனர்.
தமிழர்களின் புத்திசாலித்தனம்; கடும் உழைப்பு; இந்த இரண்டும் அவர்களுக்குப் புதிய கதவுகளைத் திறந்து விட்டன. ஓரளவிற்கு நிம்மதியான வாழ்க்கை வாழ்கிறார்கள். அசாம் தேயிலைத் தோட்டங்களில் இருந்து வந்தவர்களைத் தான் சொல்கிறேன்.
திருமண விசயத்தில் அசாம் தேயிலைத் தோட்டத்து தமிழர்களிடம் படு சுதந்திரம். பெண் வீட்டார்களுக்கு வரதட்சணை பிரச்சினையே இல்லை. மாப்பிள்ளை வீட்டார்தான் பெண்வீட்டாருக்குத் திருமண சீர் செய்ய வேண்டும். இன்னும் ஒரு விசயம். ரொம்பவும் முக்கியம்.
ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒருவரை ஒருவர் பிடித்து இருந்தால் மட்டுமே திருமணம். பெண் பார்க்கும் படலத்தில் ஒரு பெண்ணுக்கு ஓர் ஆணைப் பிடிக்கவில்லை என்றால் அப்போதே நறுக்கென்று பிடிக்கவில்லை என்று சொல்லி விடுவார்கள். அதோடு அடுத்த பேச்சு இல்லை.
வந்தவர்கள் வந்தவழியைப் பார்த்துத் திரும்பிப் போக வேண்டியது தான். மணப்பெண்ணின் மனசிற்குத் தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். உலகத் தமிழர்களிடம் காணப்படும் ஒரு வித்தியாசமான அணுகுமுறை.
இந்தப் பக்கம் மணிப்பூரில் வாழும் குக்கீஸ் பூர்வீகக் குடிமக்களிடம் பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்கும் பழக்கம் தொன்று தொட்டு இருக்கிறது. ஒருக்கால் அதையே மணிப்பூர் தமிழர்கள் பின்பற்றி வரலாம். சொல்ல முடியாது.
அப்புறம் இன்னும் ஒரு நல்ல விசயம். காதலர்கள் வீட்டை விட்டு ஓடிவிட்டால் பிரச்சினை ஒன்றும் பெரிதாக வரப் போவது இல்லை. நிறைய குடும்பங்களில் நடந்து இருக்கிறது. இரு தரப்பும் ஒன்றாகச் சேர்ந்து பேச்சு வார்த்தை நடத்துவார்கள்.
பின்னர் காதலர்கள் இருவரையும் அழைத்து வந்து திருமணத்தை நடத்தி வைப்பார்கள். ஆனால் ஒரே ஒரு கன்டிசன். புருசன்காரனிடம் சண்டை போட்டுக் கொண்டால் திரும்பி அப்பா அம்மா விட்டிற்குப் போக முடியாது. கதவைச் சாத்தி விடுவார்கள். நல்ல பழக்கம்.
முடிந்தால் நீங்களும் போய்ப் பாருங்களேன். போன வாக்கில் ஒரு பெண்ணைக் காதல் பண்ணி அப்படியே கொஞ்ச நாளைக்குத் தலைமறைவாக இருந்து விடுங்கள். பெண்ணின் அப்பா அம்மா தேடி வருவார்கள். நல்லபடியாக அழைத்து வந்து கல்யாணம் செய்து வைப்பார்கள்.
மணிப்பூரில் ஒரு மினி மலேசியாவை உருவாக்கி விடலாம். எப்படி வசதி? முன்பே தெரிந்து இருந்தால் முதல் ஆளாகப் போய் இருப்பேனே என்று நண்பர் ஒருவர் சொல்கிறார். நிறைய பேரன் பேத்திகளை எடுத்து இருப்பேனே. ம்ம்ம்… என்ன செய்வது என்று புலம்புகிறார்.
மணிப்பூரில் அரசு வேலை, ஆசிரியர் வேலை செய்பவர்களுக்குச் சரியான கிராக்கி. அவர்களை உள்ளூர்ப் பெண்கள் திருமணம் செய்து கொள்ள ஆசைப் படுகிறார்கள். அங்கே இருக்கும் கொஞ்ச நஞ்ச பஞ்சாபிகளும் மலையாளிகளும் தமிழ்ப் பெண்களைத் திருமணம் செய்து கொண்டு நல்லபடியாகத் தான் குடும்பம் நடத்துகிறார்கள்.
அப்புறம் என்னங்க. மலேசிய மன்மத ராசாக்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு. காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளவும். ஆனால் என்ன. மணிப்பூர்காரர்கள் உங்கள் முதுகில் டின் கட்டி அனுப்பாமல் இருந்தால் சரி. அதற்கு நான் உத்தரவாதம் கொடுக்க மாட்டேன்.
அசாம் தேயிலைத் தோட்டத் தமிழர்களின் வரலாறு உலகத் தமிழர்களின் வரலாற்றில் தனித்துவம் பெற்ற வரலாறு ஆகும். மீண்டும் ஒரு வரலாற்றுக் கட்டுரையுடன் சந்திக்கிறேன்.
(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
29.10.2020
சான்றுகள்:
1. A History of Assam under the Ahoms 1st Edition 1981 Assam Publication Board Guwahati page 327-328.
2. Bhuyan S.K. Tungkhungia Buranji or A History of Assam 1681–1826 A.D. Department of Historical and Antiquarian studies in Assam.
3. Singh, K. S (2003) People of India: Assam Vol XV Parts I and II, Anthropological Survey of India, Seagull Books, Calcutta.
4. A Case Study in Tea Plantation in Assam, India. R. K. Kar. pp. 13-24 (12 pages) - https://www.jstor.org/stable/40460788.