03 நவம்பர் 2020

இலங்கை தமிழர்களின் இரத்தக் கண்ணீர்

தமிழ் மலர் - 03.11.2020

மலாயா கித்தா காட்டுத் தமிழர்களின் கண்ணீர் வற்றிப் போய் விட்டது. ஆனால் இலங்கைத் தமிழர்களின் கண்ணீர் இன்னும் வற்றவில்லை. மலைக்காட்டில் சுரந்து வாறுகாலில் வழிந்து இன்றும் கடல் தேடிப் போய்க் கொண்டு இருக்கிறது. அதைப் பார்த்து இந்தியப் பெருங்கடலும் வாய்விட்டு அழுகிறது.

ஒரு பக்கம் சிங்களக் குண்டுகளுக்குப் பலியாகியாகிப் போன ஓர் இனம் இன்றும் அங்கே கண்ணீர் வடிக்கிறது. இன்னொரு பக்கம் ரப்பர் காடுகளில் பலியாகி வரும் இன்னொரு தமிழர் இனம். இடுப்பு உடைந்து கண்ணீர் வடித்துக் கொண்டு இருக்கிறது. அந்த இனம் தான் இலங்கை ரப்பர் தோட்டத்து தமிழர் இனம்.

1870-ஆம் ஆண்டுகளில் தமிழ்நாட்டில் இருந்து பல்லாயிரம் தமிழர்கள் இலங்கையின் பல மாவட்டங்களுக்குக் கொண்டு செல்லப் பட்டார்கள். கொழும்பு, கம்பா (Gampaha), களுத்துறை (Kalutara), கண்டி (Kandy), மாத்தளை (Matale), காலி (Galle), மாதாரா (Matara), குருநாகலா (Kurunegala), ரத்னபுரா (Rathnapura) மற்றும் கெகல்லே (Kegalle) போன்ற மாவட்டங்கள். அங்கே ரப்பர் தோட்டத் தொழிலாளர்களாகப் பிழிந்து எடுக்கப் பட்டார்கள்.

இலங்கை மலையகத் தமிழர்கள் வியர்வை சிந்தி இரத்தம் வடித்துச் சம்பாதித்துக் கொடுத்த காசைக் கொண்டு ஆங்கிலேயர்கள் சொகுசாக வாழ்ந்தார்கள். சிங்களப் பேராண்மைத் தலைகளும் சுகபோகமாக வாழ்ந்தன. இன்றும் வாழ்ந்தும் வருகின்றன.

ஆனாலும் பாருங்கள், இலங்கை ரப்பர் காடுகளில் இடுப்பு உடைந்து போன தமிழர்கள் இன்றும் இன்னும் எழுந்து நிற்க முடியாமல் தள்ளாடிக் கொண்டு நிற்கின்றார்கள். ரப்பர் உளிக் காயங்கள் ஆறவில்லை. இரத்தம் வடிந்து கொண்டு இருக்கிறது.

தமிழர்கள் வாங்கி வந்த வரமா இல்லை சாபக் கேடா தெரியவில்லை. உலகம் முழுமைக்கும் வாழும் தமிழர்களின் நிலைமை ஒரே சாரலில் ஒரே தூரலில் பயணிக்கின்றது. மாற்றம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. வேதனை. வேதனை.

அக்கரை பக்கம் ஒரு நாட்டை எடுத்துக் கொண்டால் உருப்படியாக ஒரு தமிழ்த் தலைவர் இருப்பதாகத் தெரியவில்லை. பக்கத்து மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் தான் சீப் மினிஸ்டராக வாயாங் காட்டிக் கொண்டு வருகிறார்கள். போகிறார்கள்.

இந்தக் கரையைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். அந்த ராசன் வந்தான். இந்த ராசன் வந்தான். கடல் கடந்து வந்தான். கட்டுச் சோறு கட்டி வந்தான். அதை நட்டான். இதைப் பிடுங்கினான் என்று பெருமை பேசுவதிலேயே ஒரு சிலருக்குப் பொழுது போகிறது. காலம் கழிகிறது. பெண்டாட்டி பிள்ளைகளுக்குச் சோறு போட வக்கில்லை. பெருமை பேசுவதில் மட்டும் குறைச்சல் இல்லை. திருத்த முடியாத வெட்டிச் சாம்பிராணிகள். அன்திருத்தபள்ஸ்.  

அதிலும் சிலர் சொந்த பாக்கெட்டுகளை நிரப்பிக் கொள்வதிலேயே ரொம்ப தெளிவாய்க் கவனமாய் இருக்கிறார்கள். இந்தச் சூட்சமம் தெரியாமல் அவர்களின் பின்னால் ஒரு சில ஜால்ரா கூட்டங்கள். உண்மையைச் சொன்னால் நமக்கே ஆப்பு வைக்கின்றன சில வாட்ஸ் அப் விளக்கெண்ணெய்கள். வயிற்றெரிச்சலில் மேலும் ஒரு செருகல்.

1903-ஆம் ஆண்டு அக்கரையில் இருந்து இக்கரைக்கு ஒரு குடும்பம் கப்பலேறி பினாங்கிற்கு வந்தது. அந்தக் குடும்பம் சார்ந்த ஒருவருக்கு இந்த நாட்டின் ஆகப் பெரிய பதவி கிடைத்தது. இத்தனைக்கும் அவர், தான் ஓர் இந்தியன் என்று கைநாட்டுப் போட்டுத் தான் மேல்படிப்பு படிக்கப் போனார்.

கடைசியில் என்ன ஆச்சு தெரியுங்களா. என் இனம் சார்ந்தவர்களின் உரிமைகளை எல்லாம் நசுக்கிப் பொசுக்கி நாசம் செய்து விட்டார். இப்போது தன் சுயநலத்துக்காக ஒரு நாட்டின் தலையெழுத்தையே கேள்விக் குறியாக மாற்றியும் வருகிறார். யாராக இருந்தாலும் எவராக இருந்தாலும் கடைசி காலத்தில் நல்ல பெயரோடு போக வேண்டும். நாலு பேர் நாலு வார்த்தை புகழ வேண்டும். பெயர் நாறி வரலாறு சிரிக்கிற மாதிரி போகக் கூடாது.

இலங்கையின் ரப்பர் வரலாறு 1876-ஆம் ஆண்டில் தொடங்குகிறது. முதன்முதலில் கம்பஹா, ஹெனரத்கோடா தாவரவியல் பூங்காவில் (Henerathgoda Botanical Gardens, Gampaha) 1,919 ரப்பர் கன்றுகள் நடப்பட்டன.

அந்தக் கன்றுகள் தான் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியின் ஆணிவேராய் ஆழமாய்ப் பதிந்து நிற்கின்றன. ஐந்தாண்டுகளுக்குப் பின்னர் 1881-ஆம் ஆண்டில் ரப்பர் பால் உற்பத்தி தொடங்கியது. மலேசியாவில் சுங்கை பூலோவில் இருப்பதைப் போல இலங்கையிலும் ஒரு ரப்பர் ஆராய்ச்சி நிறுவனம் உள்ளது. உலகின் மிக மிகப் பழமையான ரப்பர் ஆராய்ச்சி நிறுவனம். நம்முடைய மலேசிய நிறுவனத்தை விட இலங்கையில் உள்ளது மிகப் பழைமையானது.

ரப்பர் மூலமாக இலங்கைக்கு மூன்றாவது பெரிய ஏற்றுமதி வருமானம் கிடைக்கிறது. 300,000 பேருக்கு வேலை வாய்ப்புகள். சரி. அதற்கு முன்னர் இலங்கை மலையகத் தமிழர்கள் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.

இந்தியத் துணைக் கண்டத்தில் சேர சோழ பாண்டிய மன்னர்கள் கோலோச்சிய காலம் ஒன்று இருந்தது. அப்போது உலகத்தில் ஏறக்குறைய கால்வாசி பகுதி தமிழர்களின் ஆதிக்கப் பதிவுகளாக அழகு செய்தன. தமிழர்களின் ஆட்சி தென்பகுதிச் சீனாவில் தொடங்கி இந்தோனேசியாவில் இடைப்பட்டு பாரசீகத்தின் கிழக்குப் பகுதி வரை நீண்டு போய் நின்றது. உலக வரலாற்றில் அது ஒரு கனாக்காலம்.

மகா அலெக்சாண்டர் கி.மு. 326இல் இந்தியாவிற்குள் காலடி வைக்கும் போது சிந்துவெளி நாகரிகம் சிதைந்து கொண்டு இருந்தது.

(சான்று: http://amarnathkk-narean.blogspot.my/2011/12/blog-post.html)

ஆரியர்களின் நெருக்குதல்களினால் நசிந்தே போனது. கீழே இறங்கி வந்த தமிழர்கள், தென்னிந்தியாவில் ஐக்கியமாகிப் போனார்கள். மூலைக்கு ஒன்றாய்ப் பிரிந்து வீடுகள், குடிசைகள், குடில்களைக் கட்டிக் கொண்டார்கள்.

அப்புறம் அவர்களுக்குள் போட்டிப் பொறாமைகள். சண்டைச் சச்சரவுகள். இத்யாதி இத்யாதிகள். தமிழ்ச் சங்கம் சிரிக்கும் படியாகச் சண்டை போட்டு மண்டைகளை உடைத்துக் கொண்டார்கள். தொப்புள் கொடி உறவுகள் கழற்றி வீசப் பட்டன. அப்போது இந்தச் சாதி கீதி எல்லாம் இல்லைலீங்க. ஆரியம் வந்த பிறகு தானே சாதிச் சடங்குகளுக்கு குட முடக்கு; தெப்பக்குள தரிசனங்கள் எல்லாம் வந்தன. ஜெகஜோதியாய் ஜொலித்தன.

இன்றைய வரைக்கும் தொப்புள் கொடி சண்டைகளுக்கு குறைச்சல் இல்லை. தொடர்கிறது. இத்தனைக்கும் இந்தத் தமிழர்கள், தெலுங்கர்கள், மலையாளிகள், கன்னடர்கள், கொடவர்கள், துலுவர்கள், இலங்கைத் தமிழர்கள், இலங்கை மலையகத் தமிழர்கள். இவர்கள் எல்லாம் யாருங்க?

உண்மையிலேயே அண்ணன் தம்பிகள். சத்தியமாகச் சொல்கிறேன். தாமரைக் கொடி உறவுகள். ஆனால் சண்டை போடும் போது மட்டும் பாருங்கள். தொப்புள் கொடியைக் கழற்றித் தோளில் மாட்டிக் கொண்டு சண்டை போடுகிறார்கள். என்னத்தைச் சொல்ல. மனதிற்கு கஷ்டமாக இருக்கிறது.

அக்கரையைப் பாருங்கள். அந்தப் பக்கம் முல்லைப் பெரியாற்றைக் கட்டிக் கொண்டு கேரளா அழுகிறது. இந்தப் பக்கம் காவேரியைப் பிடித்துக் கொண்டு கர்நாடகா ஒப்பாரி வைக்கிறது. இன்னொரு பக்கம் திருப்பதியைக் கட்டிக் கொண்டு ஆந்திரா பட்டாசைக் கொளுத்திப் போடுகிறது.

கீழே ஒரு சிம்பன்சி கூட்டம். ஒன்றும் சொல்கிற மாதிரி இல்லை. டிங்கிரி இல்லாத நேரத்தில் துங்கம். மகிந்தம் இல்லாத நேரத்தில் மைத்திரியம். அந்த மூன்றும் இல்லாத நேரத்தில் கோத்தம் கோதுமை மாவு. அவற்றுக்குள் செம காம்பினேசன்.

இதில் ஏழரை நாட்டுப் பகவானும் அடிக்கடி குசலம் விசாரிக்கப் போய் வருகிறாராம். சும்மா ஒன்றும் சொல்லவில்லை. நம்பிக்கையான சிலோன் சிட்டுக்குருவி சொல்லி விட்டுப்போனது.

உலகத்தின் கால்வாசி பகுதியில் இறக்கை கட்டிப் பறந்த தமிழர்களுக்கு இப்போது சொந்தம் என்று சொல்லிக் கொள்ள ஒன்றுமே இல்லை.

தமிழ்நாட்டைச் சேர்க்க வேண்டாம். கொஞ்ச நாட்களுக்கு முன்னர் வரையில் அது ஒரு தனியார் சொத்து. இப்ப கொஞ்சம் பரவாயில்லை. ஆக தமிழ்நாட்டைத் தமிழர்கள் ஆட்சி செய்த காலம் எல்லாம் மலையேறி விட்டது. தமிழர்கள் யாராவது ஒருவர் முதலமைச்சர் ஆக முடியுமா. என்னைக் கேட்டால் இப்போதைக்கு நோ சான்ஸ்.

150 வருடங்களுக்கு முன்னால் தமிழர்கள் பஞ்சம் பார்க்கப் புறப்பட்டவர்கள். போன இடங்களில் எல்லாம் அந்த இடங்களைப் பொன் களஞ்சியங்களாக மாற்றி அமைத்தார்கள். அவர்களின் எச்சங்கள் இன்னமும் நீறுபூத்த நெருப்பாய்த் தகித்து நிற்கின்றன.

என்னே தமிழர்கள் வாங்கி வந்த வரம். இதற்கு எல்லாம் வரலாற்றுச் சான்றுகள் தேவையா. தேவையே இல்லீங்க. இருக்கிற வயிற்றெரிச்சல் ஒன்றே போதும். எனக்குள் எங்கோ இருந்து நீண்ட ஒரு பெருமூச்சு கேட்கிறது.

நம்முடைய இலங்கை மலையகத் தமிழர்களின் கதைக்கு வருவோம். இலங்கையில் வாழும் தமிழர்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். இலங்கைத் தமிழர்கள் ஒரு வகை. இந்தியத் தமிழர்கள் மற்றொரு வகை.

இந்தியத் தமிழர்கள் என்பவர்கள் இலங்கை மலையகத் தமிழர்கள். இவர்கள் ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்தில் இலங்கையில் இருந்த காபி, தேயிலை தோட்டங்களில் வேலை செய்யத் தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்டவர்கள். இவர்கள் தான் சஞ்சிக் கூலிகளின் விஷ்ணு பிரம்மாக்கள். அதனால் அவர்களைப் பற்றி கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

மலாயாத் தமிழர்களைவிட இலங்கையின் மலையகத் தமிழர்கள் மிக மிக மோசமாக நடத்தப் பட்டவர்கள். பெரும் அவதிக்கு உள்ளானவர்கள். அந்தக் கொத்தடிமைக் கொடுமை இன்னும் அங்கே தொடர்கின்றது. அவர்களும் உரிமைப் போராட்டங்கள் செய்து வருகிறார்கள்.

இலங்கை மலையகத் தமிழர்களும் தமிழ்நாட்டில் இருந்து கப்பல் ஏறிப் போனவர்கள் தான். அதாவது தூத்துக்குடியில் இருந்து போனவர்கள்.

(http://tamil.thehindu.com/opinion/columns/நம்முடைய-மறதியின்-வரலாறு/)

இலங்கைத் தமிழர் (Sri Lankan Tamils) என்பவர்கள் இலங்கையைத் தங்களின் மரபுவழிப் பிறப்பிடமாகக் கொண்டு வாழும் தமிழர்கள். இவர்களை இலங்கையின் வம்சாவளித் தமிழர் என அழைப்பதும் உண்டு.

இவர்கள் சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் சுய விருப்பத்தின் பேரில் இலங்கைக்குச் சென்றவர்கள். இலங்கையின் வடக்கு கிழக்கு மாநிலங்களில் பெரும்பான்மையினராக வாழ்ந்து வருகிறார்கள். பிற பகுதிகளில் சிறுபான்மை.

(https://en.wikipedia.org/wiki/Sri_Lankan_Tamils)

19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இலங்கையை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்தனர். அப்போது அங்கே நிறைய தேயிலை, ரப்பர், காப்பி தோட்டங்கள். அந்தத் தோட்டங்களில் வேலை செய்வதற்கு ஆட்கள் தேவைப் பட்டார்கள்.

அதனால் தமிழ்நாட்டில் இருந்து தமிழ்த் தொழிலாளர்கள் அழைத்து வரப்பட்டார்கள். இவர்களைத் தான் மலையகத் தமிழர் என்று அழைக்கிறோம். இருந்தாலும் இவர்களில் தெலுங்கர், மலையாளி இனத்தவரும் இருந்தார்கள். இன்னும் இருக்கின்றார்கள்.

தமிழர்களுடன் இணைந்து வாழ்ந்த தெலுங்கர், மலையாளிகளும் இப்போது தமிழ் பேசுபவர்களாகவே மாறி விட்டார்கள். இவர்களுக்குள் கொடுக்கல் வாங்கல் சாதாரணமாகி விட்டது. அதனால் ஒரு புதியத் தமிழர்ச் சமூகமே அங்கே உருவாகி இருக்கிறது. இலங்கை ரப்பர் தோட்டங்களில் தமிழர்களின் வாழ்வியல் அமைப்பு எப்படி என்பதை நாளைய கட்டுரையில் பார்ப்போம்.

Maana Mackeen
: சில திருத்தங்கள்:

Gampaha - கம்பஹா.

Matara - மாத்தறை.

Kurunegala - குருணாக்கல்.

Ratnapura - இரத்தினபுரி.

Kegalle - கேகாலை.

கப்பலேறிய இடம் தூத்துக்குடி அல்ல. தனுஷ்கோடி, ராமேஸ்வரம்.

"ராமானுஜம்" கப்பல் பெயர்.


(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
03.11.2020

சான்றுகள்:

1. Dean, Warren. (1997) Struggle for Rubber: A Study in Environmental History. Cambridge University Press.

2. Gampaha Botanical Garden - BGCI". Botanic Gardens Conservation International.

3. Trading rubber for over 100 years - http://www.ft.lk/ft-lite/Trading-rubber-for-over-100-years/6-668921

4. The History of Rubber in Ceylon - http://www.paofceylon.org/default.htm



 

மித்ராவின் 10 கோடி ரிங்கிட் என்னவானது?

தமிழ் மலர்  - 03.11.2020

இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டுக்கு உதவும் வகையில் 2020 பட்ஜெட்டில் மித்ராவிற்கு ஒதுக்கப்பட்ட 10 கோடி வெள்ளி என்னவானது? இந்தப் பணம் யாருக்கு பகிர்ந்து அளிக்கப் பட்டது என்ற விவரத்தைத் தெரிவிக்கும்படி பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வி. சிவக்குமார் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

ஒவ்வோர் ஆண்டும் பட்ஜெட்டில் இந்திய சமுதாயத்திற்கு உதவும் வகையில் மித்ராவுக்கு 10 கோடி வெள்ளி ஒதுக்கப் படுகிறது. தே.மு. ஆட்சிக் காலத்தில் ‘செடிக்’ என்ற பெயரில் இது செயல் பட்டது. பக்காத்தான் ஆட்சியில் செடிக், மித்ராவாக பெயர் மாற்றம் கண்டது.

2020-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டிலும் அப்போது நிதியமைச்சராக இருந்த லிம் குவான் எங் 10 கோடி வெள்ளியை அறிவித்தார்.

பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் இவ்வாண்டு பிப்ரவரியில் கவிழ்ந்தது. அப்போது பிரதமர் துறை அமைச்சின் கீழ் ஒற்றுமைத் துறை அமைச்சராக இருந்த பொன். வேதமூர்த்தி தலைமையில் மித்ரா செயல்பட்டது.

இப்போது பெரிக்காத்தான் அரசாங்கத்தின் சார்பில் ஒற்றுமைத் துறை அமைச்சராக டத்தோ ஹலிமா பதவி வகிக்கிறார். அவர் 2020 பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட மித்ராவின் 10 கோடி வெள்ளி என்னவானது?

இந்தப் பணம் யாருக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டது என்ற விவரத்தைத் தெரிவிக்க வேண்டும் என சிவகுமார் கேட்டுக் கொண்டார்.

மேலும் வரும் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்படவிருக்கும் 2021-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் மித்ராவின் தொகை 10 கோடி வெள்ளியில் இருந்து 20 கோடியாக உயர்த்தப்படுமா என்றும் கேள்வி எழுப்பியதாக சிவகுமார் குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் ஹலிமா, பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியில் மித்ராவின் 3 கோடியே 50 லட்சம் வெள்ளி பகிர்ந்தளிக்கப் பட்டிருக்கிறது. நான் பதவியேற்ற போது, 6 கோடியே 50 லட்சம் வெள்ளி மித்ராவில் இருந்தது என்றார்.

மித்ராவின் பணம் யார், யாருக்கு வழங்கப்பட்டது என்று எழுத்துப் பூர்வமான பட்டியலை வழங்குவதாகக் குறிப்பிட்டார்.

அந்தப் பட்டியல் இன்று தமக்குக் கிடைக்கும் என நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் கூட்டத்தில் சிவகுமார் குறிப்பிட்டார்.

புதிய பட்ஜெட்டில் மித்ராவுக்கு கூடுதல் நிதியை ஒதுக்குமாறு பரிந்துரை செய்திருக்கிறேன். பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் போதுதான் எவ்வளவு தொகை ஒதுக்கப் படுகிறது என்பது தெரிய வரும் என அமைச்சர் பதில் அளித்திருப்பதாக சிவகுமார் சுட்டிக் காட்டினார்.

இதனிடையே இந்திய சமுதாயத்திற்கு ஒதுக்கப்பட்ட மித்ராவின் நிதி முழுமையாக சமுதாயத்திற்கு சேர வேண்டும். கடந்த காலங்களில் பணம் மீண்டும் அரசாங்கத்திடமே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த நிலை இனியும் தொடரக் கூடாது. தேவைப்படும் அமைப்புகளுக்கு இந்த நிதி சென்று அடைய வேண்டும் என்றார் அவர்.



 

சுரினாம் தமிழர்களின் சோக வரலாறு

தமிழ் மலர் - 01.11.2020

1873-ஆம் ஆண்டு. ஜுன் மாதம். 5-ஆம் தேதி. லல்லா ரூக் (Lalla Rookh) எனும் பெயரில் ஒரு கப்பல். தென் அமெரிக்காவின் வட பகுதியில் பரமரிபோ (Paramaribo) எனும் துறைமுகத்தில் கரை தட்டுகிறது. அந்தக் கப்பலில் 399 இந்தியர்கள். அவர்களில் 122 பேர் தமிழர்கள். இந்த நூறு தமிழர்களின் வரலாற்றில் இருந்துதான் சுரினாம் தமிழர்களின் வரலாறும் தொடங்குகிறது.

சுரினாம் நாடு. உலகின் எங்கோ ஒரு மூலையில் உள்ளது. தென் அமெரிக்காவின் வடகிழக்குப் பகுதியில் தன்னந்தனியாகக் கடல் காற்றைச் சுவாசிக்கும் அழகிய நாடு.


Karnataaka Kurumbar Indentured Labourers in Suriname

வடக்கில் அட்லாண்டிக் பெருங்கடல். கிழக்கில் பிரெஞ்சு கயானா (French Guiana). மேற்கில் கயானா (Guyana). தெற்கில் பிரேசில் நாடு (Brazil). பரப்பளவு 165,000 சதுர கி.மீ. (64,000 சதுர மைல்). சுரினாம் ஒரு சின்ன நாடு. பெரிய நாடு என்று சொல்ல முடியாது. மலேசியாவின் சபா மாநிலத்தையும் பகாங் மாநிலத்தையும் இணைத்தால் எவ்வளவு பரப்பு. அந்தப் பரப்புதான் சுரினாம் நாட்டின் பரப்பளவு.

முதலில் டச்சு கயானா (Dutch Guiana) என்று அழைக்கப் பட்டது. தென் அமெரிக்காவின் லத்தீன் அமெரிக்கா நாடுகளில் சற்றே அதிகமாகக் கனி வளம் கொண்ட நாடு. அப்போது அது ஒரு டச்சு காலனி. அழகான தாவரங்கள். அழகான விலங்கினங்கள். ஒரு பெருங்கடலுக்கு அருகில் அமைந்து இருப்பதால் சற்று மாறுபட்ட இயற்கை அமைப்புகள்.

தொடக்கக் காலத்தில் சுரினாம் நாடு ஆங்கிலேயர்களுக்குச் சொந்தமான நிலப் பகுதியாக இருந்தது. இருந்தாலும் டச்சுக்காரர்கள் ஆங்கிலேயருடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டு, தங்கள் காலனியாக மாற்றிக் கொண்டார்கள். 1975ஆம் ஆண்டு இந்த நாடு டச்சுக்காரர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்றது.

4000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சுரினாம் நாட்டில் அராவாக்ஸ் (Arawaks), கரிப்ஸ் (Caribs); வயானா (Wayana) போன்ற பழங்குடி மக்கள் குடியேறி விட்டார்கள். 16-ஆம் நூற்றாண்டில் தான் ஐரோப்பியர்கள் வலது காலை எடுத்து வைத்தார்கள். அப்படியே அந்த நாட்டைச் சுரண்டி எடுத்து விட்டார்கள்.

மன்னிக்கவும். மஞ்சள் தூள், உப்பு, சுண்ணாம்பு மூன்றையும் குழைத்து நெற்றியின் மீது ஒட்டிக் கொண்டார்கள். பணத் தலைவலி போவதற்கு சுரினாம் நாட்டில் ஐரோப்பியர்கள் கண்டுபிடித்த பாட்டி வைத்தியம்.

2012-ஆம் ஆண்டு கணக்கெடுப்பு. சுரினாமின் மக்கள் தொகை 148,443. இவர்களில் இந்தோ - சுரினாமிய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் மொத்த மக்கள் தொகையில் 28 விழுக்காடினர். இவர்கள் அனைவரையும் இந்துஸ்தானியர்கள் என்று அழைக்கிறார்கள்.


Courtesy of Suriname Tamils & Indians Diaspora Sangam - Facebook Image

சுரினாம் நாடு மலேசியாவில் இருந்து 17,406 கி.மீ. தொலைவில் உள்ளது. சென்னையில் இருந்து 14,824 கி.மீ. எவ்வளவு தூரம். சும்மா ஒரு கற்பனை செய்து பார்த்தாலே மயக்கமே மரி.

இங்கே மலேசியாவில் ’மரி’ என்றால் வருகிறது என்று பொருள். அங்கே சூரினாம் நாட்டில் ’மரி’ என்றால் மாரியம்மன் தெய்வம். சூரினாம் நாட்டிற்குப் போன தமிழர்கள் தங்களுடன் மாரியம்மன் குல தெய்வத்தையும் கூடவே அழைத்துச் சென்று விட்டார்கள்.

’லல்லா ரூக்’ என்றால் சிவப்பு கன்னங்கள் என்று பொருள். ஆனால் அந்தச் சிவப்பு கன்னங்களில் பயணம் செய்தவர்களில் சிலரும் பலரும் கறுப்பு சாக்லேட் கலர் மனிதர்கள். நம்ப தமிழர் இனத்தவர்கள் தான். 147 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த கதையைச் சொல்கிறேன்.

இப்போது அந்த சூரினாம் நாட்டில் தமிழர்களின் ஐந்தாம் தலைமுறையினர் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் (Suriname Tamils).

சுரினாம் கரும்பு தோட்டங்களுக்குச் சென்ற தமிழர்கள் அந்த நாட்டின் கரும்புக் காடுகளில் தங்களின் மொழியில் ஒரு பகுதியைத் தொலைத்து விட்டார்கள். தங்களின் கலைக் கலாசாரங்களில் ஒரு பகுதியை மறந்து விட்டார்கள். தங்களின் பண்பாட்டின் ஒரு பகுதியையும் மறந்து விட்டார்கள். ஆனால் சமயத்தையும் வழிபாடுகளையும் மறக்கவில்லை.

அண்மைய காலங்களில் தமிழ் மொழியின் மீதான விழிப்புணர்வு ஏற்பட்டு உள்ளது. அங்குள்ள கோயில்களிலும் பொது மண்டபங்களிலும் தமிழ் மொழி கற்றுத் தரப் படுகிறது. இந்து சமய வகுப்புகளும் நடைபெறுகின்றன.

இங்கு மலேசியாவில் தமிழர்கள் எப்படி ஒதுக்கப் படுகிறார்களோ; அதே போல அங்கேயும் ஓரம் கட்டப் படுகிறார்கள். உண்மை. இருப்பினும் இன விழிப்புணர்வு ஏற்பட்டு உள்ளது. மாற்றங்களும் மறுமலர்ச்சியும் மலர்ந்து வருகின்றன. சரி.


The Javanese were the third group indentured workers in Suriname and arrived in 1890. Slavery had been abolished in 1863 and the Indian indentured workers (who arrived in 1853) claimed their rights and the government therefore found them difficult to handle. They wanted other "quiet and obedient" workers and decided to bring workers from Java and Indonesia.


சுரினாம் தமிழர்களின் வரலாற்றைப் பார்ப்போம். தமிழர்கள் எப்படி அந்த நாட்டிற்குப் போனார்கள். போகும் வழியில் என்னென்ன நடந்தன. அதையும் பார்ப்போம். பலருக்கும் தெரியாத கதை. படியுங்கள். இந்தக் கதை நாளையும் தொடரும்.

சுரினாம் கரும்புத் தொழிலுக்குப் புகழ்பெற்றது. இப்போது அலுமினா; பாக்சைட் (Alumina; Bauxite) கனிமங்களுக்குப் பிரபலம். தங்கச் சுரங்கங்களும் உள்ளன. இருப்பினும் முதன்முதலில் ஒப்பந்தத் தொழிலாளர்களாகப் புலம்பெயர்ந்த இந்தியர்களின் வரலாறு இல்லாமல் அந்த நாட்டின் வரலாறும் முழுமை அடையாது. இவ்வளவு தூரத்திற்கு முன்னுக்கு வந்து இருக்க முடியாது.

காடாய்க் கிடந்த ஒரு கடலோர நாட்டில் கவிதைகள் பாடி உலகமே திரும்பிப் பார்க்கச் செய்தவர்கள் இந்தியர்கள். அவர்களின் வரலாற்று அலைகள் இல்லாமல் அந்த நாடும் இல்லை. சுகபோக வாழ்க்கை வாழும் மேல் தட்டு அதிகாரங்களும் இல்லை. இந்தப் பக்கம் மலையூர் மலாயாவை நினைத்துக் கொள்ளுங்கள். சரியாக வரும்.

The Mai Baap Memorial or the Suriname Memorial in Kolkata

ஒப்பந்தத் தொழிலாளர்கள் எனும் பெயரில் தான் தமிழர்கள் சுரினாம் நாடிற்குக் கொண்டு செல்லப் பட்டார்கள். பல தடவை கப்பல் பயணங்கள். அங்கு சென்ற இந்தியர்களில் தமிழர்கள் ஒரு பகுதியினர் என்பதை நினைவில் கொள்வோம்.

தமிழர்கள் மட்டும் தனியாகச் செல்லவில்லை. 5 ஆண்டுகள் வேலை செய்ய வேண்டும். அப்புறம் ஒப்பந்தம் முடிந்ததும் தமிழ்நாட்டிற்கே திரும்பி வந்து விடலாம்.  

1853- 1939 ஆம் ஆண்டுகளில் ஒட்டு மொத்தமாக 74,000 இந்தியர்கள் சுரினாமிற்குக் கொண்டு செல்லப் பட்டார்கள்.தமிழர்கள் 22 ஆயிரம் பேர்.

Indian women, and their social being in Girmit nations from 1834 to 1917

ஆக அப்படி குடியேறிய தமிழர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் இந்தியாவுக்குத் திரும்பி வந்து விட்டார்கள். அதே சமயம் சுமார் 23,000 இந்தியர்கள் (தமிழர்களும் சேர்த்து) சுரினாம் நாட்டிலேயே தங்கி விட்டார்கள். திரும்பி வரவில்லை. தமிழர்கள் ஏறக்குறைய 6.800 பேர்.

சுரினாம் நாட்டிலேயே தங்க விரும்பிய தமிழர்களுக்கு டச்சு அரசாங்கம் குடியேற்ற உரிமை வழங்கியது. தவிர 100 கில்டர் தங்கக் காசுகளையும் போனஸ் சன்மானமாக வழங்கியது.

அந்த வகையில் தமிழர்கள் தங்கள் கலாச்சாரத்தைப் பராமரித்து, சுரினாமியச் சமுதாயத்தில் தங்களைக் கட்டமைத்துக் கொண்டார்கள். அப்படியே சுரினாமிய வாழ்வியலில் ஒன்றாகக் கலந்து விட்டார்கள்.

லல்லா ரூக் கப்பல் சுரினாம் நாட்டிற்குச் சென்ற முதல் டச்சு கப்பல். கல்கத்தா; சென்னையில் இருந்து சுரினாம் நாட்டிற்கு மூன்று மாதப் பயணம். சொல்லி இருக்கிறேன். சுரினாம் ஒரு டச்சு காலனி.

Early Indian indentured arrivals in Trinidad and Tobago

முதன்முதலில் டச்சு அரசாங்கம் கல்கத்தாவில் ஒரு குடிவரவு முகவரை நியமித்தது. அனைத்துத் தொழிலாளர்களும் கல்கத்தாவின் பிரதான டெப்போவிற்கு வரவழைக்கப் பட்டனர். பாண்டிச்சேரி; சென்னையில் இருந்து தமிழர்கள் போய் இருக்கிறார்கள்.

1873 பிப்ரவரி 26-ஆம் தேதி கல்கத்தா துறைமுகத்தில் இருந்து 410 ஒப்பந்த தொழிலாளர்களுடன் கப்பல் புறப்பட்டது. 1873 ஜுன் 4-ஆம் தேதி சுரினாம் வந்து சேரும் போது 399 இந்தியர்கள் மட்டும் இருந்தார்கள். 279 ஆண்கள்; 70 பெண்கள்; 32 சிறுவர்கள்; 18 சிறுமிகள். மாறுபட்ட கடல் காற்று; வாந்திபேதி போன்ற நோய்களினால் 11 பேர் கப்பலிலேயே இறந்து விட்டார்கள்.

அப்படி சுரினாம் நாட்டிற்குக் கப்பல் ஏறியவர்கள் தான் அந்த நாட்டின் மூதாதையர்கள். உத்தர பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, பீகார் மற்றும் தமிழ்நாடு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். ஏற்கனவே ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்ட அடிமைகள் அங்கே இருந்தார்கள்.

Indian indentured labourers

ஒரு காலத்தில் அமெரிக்காவிற்குக் கொண்டு செல்லப்பட்ட ஆப்பிரிக்க அடிமைகளில் ஒரு பகுதியினர் சுரினாம் நாட்டிற்கும் கொண்டு செல்லப் பட்டார்கள். 1650-ஆம் ஆண்டுகளிலேயே ஆப்பிரிக்க அடிமைகளின் புலம்பெயர்வு நடந்து உள்ளது.

காபி, கோகோ, பருத்தி, கரும்புத் தோட்டங்கள் உருவாக்கப் பட்டன. பல இலட்சம் ஆப்பிரிக்கர்கள் அங்கு வேலை செய்தார்கள். 1863-ஆம் ஆண்டு டச்சு அரசாங்கம் அடிமைத்தனத்தை அகற்றியது.

கரும்புத் தோட்டங்களில் வேலை செய்ய ஆட்கள் கிடைக்கவில்லை. அதனால் ஒப்பந்தக் கூலிகளாகத் தமிழர்களும்; பஞ்சாபியர்களும்; ஹரியானா பீகார் மக்களும் கொண்டு செல்லப் பட்டார்கள்.

Hindu Temple in Suriname.
Indians in Suriname are 1,35,000 making 27.4% of its population.

இந்தியத் தொழிலாளர்கள் சுரினாம்  துறைமுகத்தில் இறங்குவதைக் கண்டதும்  "ஜோபோ டன்பாசி" (Jobo tanbasi) என்று ஆப்பிரிக்க அடிமைகள் சத்தம் போட்டுச் சொன்னார்களாம். அதாவது "வெள்ளை மனிதர்கள் தான் இன்னும் முதலாளிகள்’ என்று பொருள்.

தொடக்கத்தில் சுரினாம் தமிழர்களின் வாழ்க்கை நிலைமை மோசமாக இருந்தது. அடிமைத்தனம் ஒழிப்பதற்கு முன்னர் இருந்ததை விட மோசமான நிலை. அதைப் பார்த்த இந்தியாவின் பிரிட்டிஷ் கவர்னர் "ஒரு புதிய அடிமை முறை" என்று சொன்னாராம். அதிகமான இறப்புகள்.

1870-ஆம் ஆண்டுகளில், இந்தியத் தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்காகப் புதிய சட்டம் இயற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து நிலைமை சீர் அடைந்தது.

தொடக்க காலத்தில், அதாவது 1880-ஆம் ஆண்டுகளில் இங்கிலாந்தின் பிரிட்டிஷ் அரசாங்கமும்; இந்தியாவின் காலனித்துவ பிரிட்டிஷ் அரசாங்கமும் சுரினாம் இந்தியர்களின் நிலைமை குறித்து கலக்கம் அடைந்தன. பிரிட்டிஷாரின் நற்பெயருக்குப் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று அஞ்சின..

Suriname’s ambassador to India Aashna Kanhai. Her greatgrandmother, a widow, went to Suriname as an indentured labourer over 150 years back to work at the sugar and coffee plantations.
Kanhai, a political appointee, is a lawyer and studied in the Netherlands.

அதனால் சுரினாம் இந்தியத் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைமையைப் பாதுகாக்கவும்; வேலை நிலைமைகளை மேம்படுத்தவும் பல சட்டங்களை இயற்றினார்கள்.

தமிழர்கள் குடியேறிய நாடுகளில் எல்லாம் இதே நிலைமை தான்.

தென் ஆப்பிரிக்காவில் கொடுமை. மடகாஸ்கர் மொரீஷியஸ் தீவுகளில் கொடுமை. மொசாம்பிக் நாட்டில் கொடுமை. ரியூனியன்; சீஷெல்ஸ் தீவுகளில் கொடுமை. தான்சானியா; உகாண்டா; சாம்பியா நாடுகளில் கொடுமை. போட்ஸ்வானா; ஜிம்பாப்வே நாடுகளில் கொடுமை.

அடுக்கிக் கொண்டே போகலாம். ஆப்பிரிக்காவில் தமிழர்கள் குடியேறிய நாடுகளைத் தான் சொல்கிறேன்.

சுரினாம் தமிழர்கள். உலகத்தின் எங்கோ ஒரு மூலையில் வாழ்ந்து கொண்டு இருப்பவர்கள். ஒப்பந்தக் கூலிகள் என்று சொல்லி அழைத்துச் செல்லப் பட்டவர்கள். ஆனால் அடிமைகளாக ஆட்டிப் படைக்கப் பட்டார்கள். அவர்களை டச்சுக்காரர்கள் எப்படி எல்லாம் வாட்டி வதைத்து இருக்கிறார்கள். வெள்ளைத் தோல்கள் எல்லாமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான்.

அப்படியே இந்தப் பக்கம் மலையூர் மலாயாவைப் பாருங்கள். ஒன்றும் சொல்கிற மாதிரி இல்லை. மலாயா தமிழர்கள் கித்தா காடுகளிலே ரொம்பவும் வேதனைகளை அனுபவித்து விட்டார்கள். உண்மை. மதிப்புமிகு மகா தலைவர் ஒருவர் நன்றாகவே பட்டர் தடவி விட்டார். அதை வக்கிரமான வெண்ணெய் என்று வேதனையோடு சொல்கிறேன்.

வரலாற்றுக்கு வாய் இருந்தால் கண்டிப்பாக வாய்விட்டு அழும். சுரினாம் தமிழர்களின் சோக வரலாறு நாளைய கட்டுரையிலும் கண்ணீர் சிந்தும். படித்துப் பாருங்கள்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
01.11.2020

சான்றுகள்:

1. Emmer, P. C. (30 January 2006). The Dutch Slave Trade, 1500-1850. Berghahn Books. pp. 138–140.

2. Counter, S. Allen and David L. Evans, I Sought My Brother: An Afro-American Reunion, Cambridge: MIT Press, 1981

3. Dew, Edward M., The Trouble in Suriname, 1975–93, (Greenwood Press, 1994)

4. Gimlette, John, Wild Coast: Travels on South America's Untamed Edge (Profile Books, 2011)

5. McCarthy Sr., Terrence J., A Journey into Another World: Sojourn in Suriname, (Wheatmark Inc., 2010)


 

02 நவம்பர் 2020

துன் மகாதீர் மன்னிப்பு கேட்க வேண்டும்

 கோலாலம்பூர், நவ. 1 -

அண்மையில் பிரான்சில் நடந்த கொலை வெறித் தாக்குதலை ஊக்குவிக்கும் வகையில் பேசி இருக்கும் துன் மகாதீர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சுதந்திரமான பத்திரிகை மையம் (சி.ஐ.ஜே) அறிவுறுத்தி உள்ளது.

ஊடகங்களைப் பயன்படுத்தி மகாதீர் வெறுப்பையும் பயங்கரவாதத்தையும் ஊக்குவிக்கும் வகையில் பேசாமல் தமது பரந்த அனுபவத்தையும் முதிர்ச்சியையும் பயன்படுத்தி மற்றவர்களுக்கு அகிம்சையையும் சகிப்புத் தன்மையையும் போதித்து இருக்க வேண்டும் என்று அந்த மையம் குறிப்பிட்டு உள்ளது.

அவரின் கூற்றானது பல்வேறு பிரச்சினைகளை எழுப்பும் என்பதால் அதற்காக அவர் வருத்தம் தெரிவித்து, உடனடியாக மன்னிப்பைக் கோர வேண்டும் என்று அந்த அமைப்பு வலியுறுத்தி உள்ளது. உலகில் யாரும் தாங்கள் எண்ணுவதை எடுத்து உரைப்பதில் உரிமை கொண்டு இருந்தாலும், அது ஒரு வரம்புக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

மகாதீரின் கூற்றானது பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால், அம்மாதிரியாகப் பேசும் போது, வார்த்தைகளைக் கவனமாகப் பிரயோகிக்க வேண்டும் என்றும் அந்த மையம் கேட்டுக் கொண்டு உள்ளது.




01 நவம்பர் 2020

மலாயா ரந்தாவ் லின்சம் தோட்டம் 1878

Malaya Indians Linsum Estate Rantau 1878

நெகிரி செம்பிலான், ரந்தாவ் (Rantau), லின்சம் தோட்டம் (Linsum Estate). மலாயாவின் முன்னோடித் தோட்டங்களில் ஒன்றாகும். அங்கே முதன் முதலில் காபி பயிர் செய்யப்பட்டது. 1878-ஆம் ஆண்டில் லின்சம் காபி தோட்டத்திற்குத் தமிழர்கள் முதன் முதலில் கொண்டு வரப்பட்டார்கள்.

The Linsum estate, at Rantau, is the oldest estate in Negri Sambilan. Originally it was planted with coffee, but, as that product became unprofitable, the proprietors turned their attention to rubber. The first Tamils were brought to the Linsam coffee plantation in 1878.

ராத்போர்ன் அம்ப்ரோஸ் (Rathborne, Ambrose) எனும் ஆங்கிலேயர் எழுதி இருக்கும் ’மலாயா தீபகற்பத்தின் மாநிலங்களில் பதினைந்து ஆண்டுகள்’ (Camping and Tramping in Malaya: fifteen years' pioneering in the native states of the Malay peninsula) எனும் நூலில் பக்கம்: 85-இல் இந்தப் படங்கள் உள்ளன. 1898-ஆம் ஆண்டில் அந்தப் புத்தககத்தில் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்தப் படம் லின்சம் தோட்டத்தில் தான் எடுக்கப்பட்டது. 135 ஆண்டுகளுக்கு முன்னர் மலாயாவுக்கு வந்த தமிழர்கள்; மலாயா காபி தோட்டங்களில் வேலை செய்து இருக்கிறார்கள்.

இந்தக் காலக் கட்டத்திற்கு முன்பாகவே, 1840-ஆம் ஆண்டுகளில்; பினாங்கு, சிங்கப்பூர் தீவுகளில் காடுகளை அழிக்கவும்; சாலைகள் அமைக்கவும் தமிழர்கள் தமிழ்நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்டார்கள் என்பது பலருக்கும் தெரியாத விசயமாக இருக்கலாம்.

இருந்தாலும் மலாயா தமிழர்கள் என்பவர்கள் மலையூர் மலாயாவிற்கு நேற்று முந்தா நாள் வந்தவர்கள் அல்ல. மனுசர்கள் நுழைய முடியாத பாசா காடுகளின் கித்தா தோப்புகளில் வாழ்ந்தவர்கள் தான் மலாயா தமிழர்கள்.

மலைக் காடுகளை அழித்துத் திருத்திக் காபி, மிளகு, கொக்கோ, ரப்பர் தோட்டங்களைப் போட்டவர்கள். அவர்கள் உருவாக்கிக் கொடுத்த கட்டுமானத்தில் சொகுசு காண்பவர்கள் சிலரும் பலரும் இருக்கிறார்கள்.

மலாயா தமிழர்கள் நேற்று வந்த வந்தேறிகள் என்று சிலர் சொல்கிறார்கள். நன்றி மறந்தவர்களாக வாழ்லாம். ஆனால் நன்றி கெட்டவர்களாக வாழக் கூடாது.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
01.11..2020

1. Source: Camping and Tramping in Malaya: Fifteen Years' Pioneering in the Native States of the Malay Peninsula.

Author(s): Rathborne, Ambrose B.
British Library shelfmark: Digital Store 010055.ee.10
Place of publication: London (England)
Date of publication: 1898
Publisher: Swan Sonnenschein