தமிழ் மலர் - 11.11.2020
1729-ஆம் ஆண்டு பாண்டிச்சேரியில் இருந்து தமிழர்கள் மொரீஷியஸ் தீவிற்கு முதன்முதலாகக் கொண்டு செல்லப் பட்டார்கள். லா சிரீன் (La Sirene) என்ற கப்பலில் ஏறக்குறைய 275 தமிழர்கள் மொரீஷியஸ் தீவில் தரை இறங்கினார்கள். தமிழ் இளைஞர்கள் 108 பேர். நடுத்தர வயதினர் 95 பேர்.
வருடத்தைக் கவனியுங்கள். இன்று நேற்று நடந்தது அல்ல. 291 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தது. அந்த நாட்டிற்கு தமிழர்கள் பாய்மரக் கப்பல்களில் போய் இருக்கிறார்கள். அவர்களின் வாரிசுகளில் இப்போது ஏறக்குறைய 55000 மக்கள் வாழ்கிறார்கள். பத்துப் பதினைந்தாவது தலைமுறைத் தமிழர்கள்.
அதற்கு முன்னர் ஒரு சின்ன தகவல். கி.பி 1500-ஆம் ஆண்டுகளில் இந்தத் தீவை போர்த்துகீசியர்கள் தான் முதன்முதலில் அறிமுகம் செய்து வைத்தார்கள். அந்தக் காலத்திலேயே போர்த்துகீசியர்கள் உலகம் பூராவும் சுற்றி பல நூறு தீவைகளைக் கண்டுபிடித்து இருக்கிறார்கள். அப்படித்தான் 1511-ஆம் ஆண்டில் மலாக்காவிற்கும் வந்தார்கள். கோட்டைகள் கட்டிக் கோலோச்சி இருக்கிறார்கள்.
மலாக்கா பண்டார் ஹீலிர் பகுதியில் ஒரு போர்த்துகீசியக் குடியிருப்பு உள்ளது. அதன் பெயர் கம்போங் செயின்ட் ஜான் அல்லது கம்போங் போர்த்துகீஸ் (Kampung St. John, Kampung Portugis). அங்கு வாழும் போர்த்துகீசிய இனத்தவரை கிறிஸ்தாங் (Kristang) என்கிறார்கள். போர்த்துகீசியத்தில் உள்ளூர் இனக் கலவை.
மக்கள் தொகை ஏறக்குறைய 1500. குடும்பங்கள் 116. குடியேற்றம் நடந்து 500 ஆண்டுகளாகி விட்டன. இன்னும் அவர்கள் பெண்டாத்தாங் பார்வையில் தான் பார்க்கப் படுகிறார்கள். சரி.
மொரீஷியஸ் தீவிற்கு வருவோம். போர்த்துகீசியர்களுக்குப் பின்னர் நூறு ஆண்டுகள் கழித்து டச்சுக்காரர்கள் அந்தத் தீவிற்கு வந்தார்கள். பிறகு 1715-ஆம் ஆண்டில் பிரெஞ்சுக்காரர்கள் வந்தார்கள். துறைமுகம் கட்டுவதற்கு ஆட்கள் தேவைப்பட்டது.
அதனால் மொசாம்பிக் மற்றும் சான்சிபார் நாடுகளில் இருந்து ஆப்பிரிக்கர்கள் அடிமைகளாகக் கொண்டு போகப் பட்டார்கள். 1735-ஆம் ஆண்டில் 49,000 அடிமைகள் இருந்தார்கள். இதில் இந்தியர்களையும் (தமிழர்களையும்) சேர்த்துக் கொள்ளுங்கள்.
பாண்டிச்சேரி தமிழ்நாட்டில் இருந்ததால் பிரெஞ்சுக்காரர்களின் முதல் பார்வை தமிழர்கள் மீது தான் பாய்ந்தது. 1729-ஆம் ஆண்டில் தமிழர்கள் கொண்டு போகப் பட்டார்கள்.
மலாயாவுக்குத் தமிழர்கள் 1786-ஆம் ஆண்டில் பினாங்கில் பிரான்சிஸ் லைட் ஆளுமையின் போது வந்தார்கள். அதற்கு முன்னதாக 60 ஆண்டுகள் முன்பாகவே தமிழர்கள் மொரீஷியஸ் தீவில் குடியேறி விட்டார்கள். சரி.
நல்லபடியாகத் துறைமுகம் கட்டி முடிக்கப்பட்டது. துறைமுகத்தின் பெயர் போர்ட் லூயிஸ். அதாவது ஆப்பிரிக்காவில் தமிழர்கள் கட்டிய பிரெஞ்சுத் துறைமுகம். இந்தத் துறைமுகம் இன்றும் தமிழர்களின் காற்றைச் சுவாசித்துக் கொண்டு இருக்கிறது.
மொரீஷியஸ் பற்றிய அடிப்படையான தகவல்கள். மலேசியாவில் இருந்து 5,560 கி.மீ. தொலைவில், இந்தியப் பெரும் கடலில் மொரீஷியஸ் தீவு அமைந்து உள்ளது. பரப்பளவு 2100 சதுர கி.மீ. பினாங்கு தீவைப் போல இரு மடங்குகள்.
எண்பது இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னால், மொரீஷியஸ் கடl பகுதிக்குள் இருந்த எரிமலைகள் வெடித்தன. அதிர்வுகளினால் ஆழ்க்கடல் நிலப் பகுதிகள் மேல் எழுந்து வந்தன. அவை தான் இப்போதைய மொரீஷியஸ் தீவு.
மொரீஷியஸ் தீவைச் சுற்றிலும் 49 குட்டி குட்டித் தீவுகள். ரோட்ரிக்ஸ், செயிண்ட் பிராண்டோன், அகாலேகா ஆகியவை மிக முக்கியமானவை.
ரோட்ரிக்ஸ் (Rodrigues) தீவு 110 சதுர கி.மீ. பரப்பளவு. மொரிசியஸ் தீவின் கிழக்கே 560 கி.மீ தொலைவில் உள்ளது.
அகாலேகா (Agalega) தீவு 26 சதுர கி.மீ. பரப்பளவு. வடக்கே 935 கி.மீ தொலைவில் உள்ளது.
செயிண்ட் பிராண்டோன் (St. Brandon) தீவு 2 சதுர கி.மீ. பரப்பளவு. தென் மேற்கே 400 கி.மீ தொலைவில் உள்ளது.
மொரீஷியஸ் தீவில் ஒன்பது மாவட்டங்கள். 2019-ஆம் ஆண்டு மக்கள் தொகை 1,265,475 பேர். ஆண்களைவிட பெண்களின் எண்ணிக்கை அதிகம். 639,644 பேர் பெண்கள். 626,341 பேர் ஆண்கள். கூடுதலாக 13,303 பெண்கள். இது 2019 ஜூலை மாதப் புள்ளி விவரங்கள்.
மொரீஷியஸ் தீவுக்கு 370 ஆண்டுகள் குடியேற்ற வரலாறு. டச்சுக்காரர்கள், பிரெஞ்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் என மூவின ஐரோப்பியர்கள் அந்தத் தீவை ஆட்சி செய்து இருக்கிறார்கள். 1968-ஆம் ஆண்டு மொரீஷியஸ் தீவு சுதந்திரம் பெற்றது.
மொரீஷியஸ் ஒரு விவசாய நாடு. கரும்பையும் தேயிலையையும் நம்பி வாழ்கிறது. சுற்றுலா துறை ஓரளவுக்கு நம்பிக்கை அளிக்கிறது. இருந்தாலும் 2000-ஆம் ஆண்டுகளில் வெளிநாட்டுச் சுற்றுப் பயணிகளிடம் ஏமாற்று வேலைகள்; கூடுதல் கட்டண வசூலிப்புகள்; இரட்டை விலைகள் போன்ற பிரச்சினைகள். அதனால் சுற்றுப் பயணிகளின் வருகையும் குறைந்து போனது. இப்போது சீர் செய்யப்பட்டு வருகிறது.
சுற்றுலா துறையில் ஆப்பிரிக்க அளவில் 3-ஆவது இடத்தில் இருக்கிறது. உலகத்திலேயே அழகிய கடற்கரை கொண்ட இடம் எனும் விருதை மூன்ற முறை பெற்று இருக்கிறது. அங்கு ஓர் அழகிய எரிமலை இருக்கிறது.
அதன் பெயர் லே மோர்னே பிரபாண்ட் (Le Morne Brabant). யுனெஸ்கோ உலக பாரம்பரியத் தளமாக அங்கீகாரம் பெற்று உள்ளது.
மொரீஷியஸ் தீவில் பல இனங்கள். இந்தியர்கள், கிரியோல்கள், சீனர்கள், ஐரோப்பியர்கள், ஆப்பிரிக்க அடிமைகள். மொழிகள் என்றால் (கிரியோல் 86.5%); (போஜ்புரி 5.3%); (பிரெஞ்சு 4.1%); (ஆங்கிலம், சீனம், தமிழ் 1.4%) மொழிகள். தமிழர்களில் பெரும்பாலோர் கிரியோல் மொழி பேசுகிறார்கள். தமிழ் மொழி மிகக் குறைவு. இப்போது அண்மியில் தான் தமிழ் விழிப்புணர்வு ஏற்பட்டு உள்ளது.
மொரீஷியஸ் ஆப்பிரிக்கப் பெண்மணிஅங்கே அப்படி ஒரு பல இனச் சமுதாயம் உருவாகி விட்டது. நவீனக் காலத்தில் இன்னும் ஓர் அதிசயம். என்னவென்றால் அங்கே 66 மொழிகள் பேசப் படுகின்றன. உண்மையிலேயே அதிசயம் தான். எப்படி இத்தனை மொழிகள் வந்தன என்றும் கேட்கலாம்.
அந்தக் காலத்தில் கிழக்கிந்திய நாடுகளில் இருந்து மேற்கிந்திய நாடுகளுக்குச் செல்பவர்கள் இந்த மொரீஷியஸ் தீவைத் தாண்டித்தான் செல்ல வேண்டும். எல்லாம் பாய்மரக் கப்பல்கள் தான். முன்பு காலத்தில் மொரீஷியஸ் தீவு பலருக்கும் தெரியாமல் தனிகாட்டு ராஜாவாக இருந்தது. போர்த்துகீசியர்கள் கண்டுபிடித்ததும் மாமியார் மாமன் மச்சான் வீடாக மாறிப் போனது.
ஒரு கப்பலில் வருபவர்களில் நாலைந்து பேர் மொரீஷியஸ் தீவிற்குள் ஓடி ஒளிந்து கொள்வார்களாம். இப்படியே பல ஆயிரம் பேர். அப்படியே ஓடி ஒளிந்து; அங்கே இருந்த ஆப்பிரிக்கப் பெண்களைக் கல்யாணம் பண்ணி; அப்படியே ஒரு கிரியோல் இனத்தையும் உருவாக்கி விட்டார்கள். இது எப்படி இருக்கு என்று கேட்க வேண்டாம்.
சன்னம் சன்னமாய் உள்ளூர் மக்களோடு இணைந்து கொண்டார்கள். வாழ்ந்தும் வருகிறார்கள். கிரியோல் என்றால் ஆப்ரிக்கர்கள், இந்தியர்கள், ஐரோப்பியர்கள் கலந்ததால் உருவான ஒரு புதிய கலப்பினச் சமுதாயம். அவர்கள் பேசுவது மொரீஷியன் கிரியோல் எனும் மொழி.
இந்த மொழி பிரெஞ்சு இலக்கண அமைப்பைக் கொண்டது. ஆப்பிரிக்க மொழிச் சொற்களையும் உள்ளடக்கியது. சரி. இப்போது ஒரு முக்கியமான கட்டத்திற்கு வருகிறோம்.
தமிழர்கள் ஏன் மொரீஷியஸ் தீவுகளுக்குப் குடிபெயர்ந்தார்கள். அதற்கான காரணங்களைப் பார்ப்போம். தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழர்கள் உலகின் பல நாடுகளில் புலம் பெயர்ந்து வாழ்கிறார்கள. அவர்களை இரு வகைகளாகப் பிரித்துப் பார்க்கலாம்.
முதல் வகை: வாணிகப் புலம் பெயர்வு. கிறிஸ்து பிறப்பதற்கு முன்னரே உலக நாடுகளில் குடியேறிய தமிழர்கள். இந்தப் புலம் பெயர்வு 15-ஆம் நூற்றாண்டு வரை நடந்தது.
இரண்டாவது வகை: 18 - 19-ஆம் நூற்றாண்டுகளில் டச்சு, பிரெஞ்சு, ஆங்கிலேயக் குடியேற்ற நாடுகளில் கரும்பு காபித் தோட்டங்களுக்குக் கூலிகளாய் கொண்டு செல்லப் பட்ட தமிழர்கள். இந்த இரண்டாம் வகை குடியேற்றம் நடந்த நாடுகளில் ஒன்று தான் மொரீஷியஸ் தீவு.
தமிழ்நாட்டில் என்ன நடந்தது. வரலாறு என்ன சொல்கிறது. அதையும் கொஞ்சம் பார்க்க வேண்டும். 17-ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் நாயக்கர்களின் ஆட்சி ஒரு முடிவுக்கு வந்த காலக் கட்டம். பின்னர் பிரெஞ்சுக்காரர்கள் வந்தார்கள். அடுத்ததாக ஆங்கிலேயர்கள் வந்தார்கள்.
அந்தக் கட்டத்தில் தமிழ்நாட்டில் ஆற்காட்டு நவாபுகளின் ஆளுமை. வந்தவர்களும் சரி; இருந்தவர்களும் சரி; அனைவருமே தங்களின் ஆதிக்கத்தை வலுப்படுத்த அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டார்கள். அப்போது தமிழ் நாட்டில் 72 பாளையக்காரர்கள் இருந்தார்கள். அவர்களுடன் ஓய்ச்சல் ஒழிச்சல் இல்லாமல் சண்டைகள். அதில் மாட்டிக் கொண்டவர்கள் பாவம் ஏழை விவசாய மக்கள் தான்.
அதையும் தாண்டிய நிலையில் ஏழ்மையில் வறுமை. சாதியில் கொடுமைகள். நிலப்பிரபுத் தனத்தில் அதிகாரங்கள். ஜமீன்தாரர்களின் அடாவடித்தனங்கள். வட்டிக்காரர்களின் வட்டி குட்டி போடும் அட்டகாசங்கள். சுண்டல் சுவையில் சுரண்டல்கள். கூலி வேலையில் கொத்தடிமைகள். அரிச்சுவடிகள் பார்த்த அடிமைத்தனங்கள். இவற்றை எல்லாம் தாண்டிப் போய் பஞ்சம் பட்டினிச் சாவுகள். தாங்க முடியாமல் ஆளை விடுங்கடா சாமிங்களோ என்று தமிழர்கள் ஓட்டம் பிடித்தார்கள்.
திருச்சி, மதுரை, இராமநாதபுரம், தஞ்சாவூர் போன்ற தமிழக மாவட்டங்களில் இருந்தவர்கள் தான் அதிகமாகப் பாதிக்கப் பட்டார்கள். அந்த வகையில் ஆயிரக் கணக்கான விவசாயத் தமிழர்கள் பஞ்சம் பிழைக்க மற்ற மற்ற நாடுகளில் குடியேறினார்கள்.
மொரீஷியஸ் தீவில் தமிழர்களின் குடியேற்றத்தை மூன்று கட்டங்களாகப் பிரிக்கலாம். முதலாவது கட்டம்: ஒப்பந்தக் கூலி முறையில் (Indentured Labourers) தமிழர்களைக் கொண்டு போனது.
இரண்டாவது கட்டம்: மொரீஷியஸ் தீவில் கட்டடங்களைக் கட்டுவது; சாலைகள் நிர்மாணிப்பு வேலைகள். கைவினைத் தொழில்களில் தேர்ச்சி பெற்ற தமிழர்களைக் குடியேற்றுவது.
மூன்றாவது கட்டம்: யாருடைய தலையீடும் இல்லாமல் சொந்தமாகக் குடியேறியத் தமிழர்கள். இவர்கள் வியாபாரம் வணிகம் செய்வதற்காக அங்கே போனவர்கள்.
1728-ஆம் ஆண்டு பியரி பெனோயிட் டுமாஸ் (Pierre Benoit Dumas) என்பவர் மொரீஷியஸ் தீவின் ஆளுநராகப் பதவி ஏற்றார். இவர் ஏற்கனவே பாண்டிச்சேரியில் பணிபுரிந்தவர். இந்த மனிதர்தான் மொரீஷியஸ் தீவில் குடியேற்ற 275 தமிழர்களை முதன் முதலாகத் தேர்ந்து எடுத்தார். அவர்களில் 8 வயது சிறுவர்களில் இருந்து 18 வயது இளைஞர்கள் வரை 108 பேர். கைவினைத் திறன் பெற்றவர்கள் 95 பேர்.
ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்லலாம். ஆப்பிரிக்க அடிமைகளுக்குப் பின்னர் மொரீஷியஸ் தீவிற்கு வந்த முதலாவது பிற இனத்தவர் யார் என்றால் அவர்கள் தான் இந்தியாவின் இந்தியர்கள். அவர்களில் தமிழ்நாட்டுத் தமிழர்கள் தலையாயத் தலைமகன்கள்..
(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
11.11.2020
சான்றுகள்:
1. Macdonald, Fiona; et al. Mauritius: Peoples of Africa. pp. 340–341.
2. Bahadur, Gaiutra (2014). Coolie Woman: The Odyssey of Indenture. The University of Chicago.
3. Tamil-Speaking Union Act – 2008 (PDF). Ministry of Arts and Culture, Mauritius.
4. Country Profile: Mauritius, Seychelles, Economist Intelligence Unit, 2001, p. 8