21 மார்ச் 2021

மலாயா தமிழர்கள்: செலின்சிங் தோட்டம் தைப்பிங் 1888

பேராக், தைப்பிங் செலின்சிங் தோட்டம் 1880-ஆம் ஆண்டுகளில் தோற்றுவிக்கப்பட்ட தோட்டம். 1877-ஆம் ஆண்டு கோலாகங்சாரில் முதல் ரப்பர் கன்று பயிர் செய்யப்பட்டது.

அதன் பின்னர் அடுத்து வந்த 10 ஆண்டுகளில் மலாயா முழுமைக்கும் ரப்பர் உற்பத்தி விரிவு செய்யப்பட்டது. தைப்பிங் சுற்று வட்டாரங்களில் நிறைய ரப்பர் தோட்டங்கள் தோற்றுவிக்கப்ப்ட்டன.


அந்த வகையில் உருவானது தான் செலின்சிங் ரப்பர் தோட்டம். அந்தக் காலக் கட்டத்தில் ஒரு முறையான பால்மரம் சீவும் முறை அமல்படுத்தப்படவில்லை. எப்படி சீவுவது என்று தெரியாத நிலை. உயரமான மூங்கில்களை மரத்திற்கு மரம் ஏற்றி வைத்து; அந்த மூங்கில்களில் ஏறி மரம் சீவி இருக்கிறார்கள்.


இந்த மாதிரி பால்மரம் சீவுவதை ரம்போங் (Rambong) என்று அழைத்து இருக்கிறார்கள். இந்த ரம்போங் முறை பிரேசில் நாட்டில் இருந்து இலங்கைக்கு புலம் செய்யப்பட்டது. அங்கு இருந்து மலாயாவுக்கு வந்தது.
 
நீங்கள் பார்க்கும் படம் இலங்கையில் எடுத்த படம் என்று ’சிலோன் பிலாண்டர்ஸ்’ இணையத்தில் சொல்லப் படுகிறது. அது தவறு. அந்தப் படம் பேராக் தைப்பிங் செலின்சிங் தோட்டத்தில் எடுக்கப்பட்ட படமாகும்.

ஒரு காலக் கட்டத்தில் இலங்கை ரப்பர் தோட்ட உரிமையாளர்கள் தான் மலாயாவிலும் ரப்பர் தோட்டங்களை வாங்கினார்கள். இங்கே மலாயாவில் எடுத்த படங்களை இலங்கையில் எடுத்த படங்கள் என்று பொதுவாக எழுதி வைத்துச் சென்று இருக்கிறார்கள். அப்படிப்பட்ட படங்களில் இடம் சுற்றுச் சூழல்; பட அமைப்பு; பட மாந்தர்களின் செயல் பாணி முறைகளையும் நன்கு சோதித்துப் பார்த்த பின்னர்தான் நாம் முடிவிற்கு வர வேண்டும்.


தலையில் ஒரு முண்டாசு; இடுப்பில் ஒரு கோவணம். இவைதான் பால்மரக் காட்டினிலே அப்போதைய மலாயா தமிழர்களின் அடையாளங்கள். பொதுவாக சட்டை அணிவது இல்லை. கொசுக்கடி குளவிக்கடி பற்றி கவலைப்படுவது இல்லை. பெண்கள் ரவிக்கை கைலிப் பாவாடை அணிவது வழக்கம்.

ஏறக்குறைய 140 ஆண்டுகளுக்கு முன்னதாகவே தமிழர்கள் அந்த இடங்களுக்குப் புலம் பெயர்ந்து விட்டார்கள். காடுகளை வெட்டி கால்வாய்களை வெட்டி சாலைகள் அமைத்து இருக்கிறார்கள். மற்றும் ஒரு படத்தில் அவர்கள் வேலைக் களத்திற்கு படகில் ஏறிச் செல்வதையும் காணலாம். 


இப்படி எல்லாம் உழைத்துப் போட்ட இனத்திற்கு பெண்டாத்தாங் என்று பெயர் வைத்து இருக்கிறார்கள். அவர்கள் அமைத்துக் கொடுத்த கட்டமைப்பில் சுகபோகங்களை அனுபவிப்பது வேறு சுக்கிரத் தனமான கதை. ஆனால் நன்றி மறந்து நன்றி கெட்டத் தனமாய் நடந்து கொள்வது வக்கிரத் தனமான கதை.


இந்தத் தோட்டம் தைப்பிங் நகரில் இருந்து 12 மைல் தொலைவில் இருந்தது. அந்தச் சமயத்தில் தைப்பிங் நகரம் பேராக் மாநிலத்தின் தலைநகரமாக விளங்கியது. இன்னும் இருக்கிறது. தோட்டத்தின் அசல் உரிமையாளர்கள் கிரஹாம் கிளார்க், மற்றும் சி. ஜே. பேலேவ்.


இலங்கை கொழும்புவைச் சேர்ந்த செலின்சிங் ரப்பர் கம்பெனி லிமிடெட் நிறுவனத்திடம் இருந்து ரூ. 1,000,000 மூலதனத்தில் 1907 ஜூலை மாதம் வாங்கப்பட்டது. ரூ. 690,000 முன்பணமாக வழங்கப்பட்டது. எனினும் அதற்கு முன்னதாகவே 1880-ஆம் ஆண்டுகளில் ரம்போங் முறையில் ரப்பர் உற்பத்தி செய்யப்பட்டது.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
21.03.2021


Selinsing Rubber Estate was originated in the 1880's. Located some 12 miles from Taiping, the former capital town of Perak state. In 1877 the first rubber tree was planted in Kuala Kangsar. That was history.

Subsequently, rubber cultivation expanded throughout Malaya over the next 10 years. A lot of rubber plantations were formed and established in the Taiping area.

That's how the Selinsing Rubber Estate came to existence. At those time, a formal rubber tapping system was not implemented. Bamboo poles were lodged beside trees. The tappers climbed the bamboo stairs and tapped trees.


This type of tapping is called Rambong tree tapping. This rambong system was first introduced to Sri Lanka from Brazil and then to Malaya.

The Ceylon Planters website says that the photograph shown in this aticle as of a Sri Lankan photograph. By right the photograph was taken at the Perak Selinsing Rubber Estate in 1880's.

At one time it was the British rubber plantation owners at Sri Lanka as well bought the rubber plantations in Malaya. The pictures taken in Malaya are generally sourced as pictures taken in Sri Lanka. We must come to a determined conclusion only after thoroughly examining the base condition of the image characters and the environmental situation of the picture.

Tamils migrated to those places in Taiping vicinity about some 140 years ago. They cut down dense forests and cut canals and paved roads. And in one picture you can see them boarding a boat to work.

A question? Can you refer those people who had sacrificed their lives in such harsh tormenting conditions and extreme inhuman environments as Pendatang. Certain group of people are enjoying life in a comfort zone on the structures those people have set up. That is a different story. But forgetting gratitude and behaving ungratefully is totally a perversive story. Isn't it. This is my personal opinion, which other people might not agree with.

Sources:

1. Twentieth century impressions of British Malaya: its history, people, commerce, industries, and resources. Author: Wright, Arnold Publication Info: London, Durban, Colombo, Perth (W. A.), Singapore, Hongkong, and Shanghai: Lloyd's Greater Britain Publishing Company, limited, 1908, pg 404

2. https://www.ceylonplanters.lk/history/ceylon-rubber-industry/

3. Kernial Singh Sandhu. (1969). Indian in Malaysia immigration and settlement 1784-1957. Singapore: Cambridge University Press.

5. New Mandala. asiapacific.anu. edu.au/ newmandala /2013/ 02/20/aliens-in-the-land-indian-migrant-workers-in-malaysia/

6. N. Gangulee, Indians in the Empire Overseas: A Survey The New India Publishing House Ltd, London,1947, p 175 26Ibid., p 199

7. Tinker, Hugh. The New System of Slavery: The Export of Indian Labour Overseas (1830 – 1920) Oxford University Press, London 1974, p 208.

8. Marilyn Gracey Augustine, In Search of a better destiny – Emigration of Tamils to Malayan Peninsula (1786-1910), 2008.

Notes:

The original owners, by the Selinsing Rubber Companv, Ltd., which was floated in Colombo with an authorised capital of Rs. 1,000,000. SELINSING ESTATE. Selinsing rubber estate, situated 12 miles from the capital of Perak. was in July, 1907, acquired from Messrs. WT. F. Dew, G. Graham Clarke, and C. J. Baylev, Of this sum Rs. 690,000 have been fully paid up.

The property embraces 1,460 acres. Para rubber has been planted on 793 acres and further clearings are contemplated for next year. The trees vary in age from nine vears to as many months. There are 1,400 Para trees between nine and ten years of age on the roadside, and six acres nine years old. Small areas have also been planted with Rambong rubber and coconuts.



 

15 மார்ச் 2021

தாய்மை போற்றிய வீ.கே.கல்யாணசுந்தரம் - 2

உழைப்பு. உழைப்பு. உழைப்பு. இதைப் பகலில் கண்ணால் பார்க்க வேண்டும். இரவில் மனதால் நினைக்க வேண்டும். உழைப்பு உயர்வுக்கு ஓர் அழைப்பு. அந்த உழைப்பு இல்லை என்றால் உயர்வும் இல்லை. உயர்வுக்கு உயிர்ப்பும் இல்லை. இப்படிச் சொன்னவர் வி.கே.கே. எனும் ஓர் உழைப்பின் சிகரம்.

திருவாரூர் மண்ணிலே பிறந்து, மலை நாட்டில் கால் பதித்து, உழைப்பால் உயர்ந்த ஓர் இமயத்தின் உயிர் வாசகம். உழைப்பின் தத்துவத்திற்கு உன்னதம் பேசிய ஓர் உயிர்மை வாசகம். அதுவே வீ.கே.கல்யாணசுந்தரம் எனும் உழைப்பு நாடியின் தாரக மந்திரம்.

அந்த வாசகத்தின் பாரிஜாதத்தில் மற்றும் ஒரு தேவலோக மெய்மைச் சாரலும் பனித்துச் செல்கின்றது. வாழ்க்கை எனும் பாதையில் மேடுகள் உண்டு. பள்ளங்கள் உண்டு. ஏற்றங்கள் உண்டு. இறக்கங்கள் உண்டு. திருப்பங்களும் உண்டு.

அதே பாவனையில் வெற்றி தோல்விகளும் உண்டு. அதுதான் வாழ்க்கை. அந்த மாற்றங்களும்; அந்த மேடு பள்ளங்களும்; அந்தத் திருப்பங்களும் இல்லை என்றால் அது வாழ்க்கை அல்ல. வெறுமையின் பாலைவனக் கோடுகள். வேறு வார்த்தை இல்லை.

வறுமையான குடும்பத்தில் பிறந்து; வறுமையின் கீறல் வடுக்களைப் பார்த்து; வறுமையின் சிகப்பு நிறத்தில் வாடி வதங்கியவர் வீ.கே.கல்யாணசுந்தரம். துன்பத்தின் நெருடல்களைத் துய்த்துப் பார்த்தவர் வீ.கே.கல்யாணசுந்தரம்.

வறுமையின் அந்திவானத்தில் நீறுபூத்த நீர்க் கனலாய் வாழ்ந்து காட்டியவர் வீ.கே.கல்யாணசுந்தரம். நேற்றைய கட்டுரையில் சொல்லி இருக்கிறேன்.

வீ.கே.கே. உறவினர் வழி ஓர் அன்பர். பெயர் அருணாசலம் அவரிடம் தான் வீ.கே.கே. முதலில் வேலைக்குச் சேர்ந்தார். இடுப்பு உடைந்து போகும் கொத்தடிமை போல கூலி வேலை.

மாட்டுக் கொட்டகையில் மாடுகளைச் சீராட்டிப் பாராட்டிக் கவனித்துக் கொள்ளும் வேலை. நாலுகால் ஜீவன்களுடன் நாலு வேளையும் கட்டிப் புரண்டு போராடிய வேலை. அப்படியே மாட்டு வண்டி ஓட்டுவதையும் கற்றுக் கொண்டார். சில மாதங்கள் கழித்து மாட்டுக் கொட்டகையில் இருந்து பதவி உயர்வு. மாமாவின் கடை வேலைகளுக்கு மாறி வந்தார்.

அங்கே புன்னகைத் தோற்றத்தில் புன்முறுவல்கள். நன்சொற்களில் நளினத் தென்றல்கள். கடைக்கு வந்த வாடிக்கையாளர்களுடன் இனிய முகத்துடன் இனிதாகப் பேசி இனிதான நட்பை வளர்த்துக் கொண்டார்.

அப்படியே வியாபார நுணுக்கங்களையும் கற்றுக் கொண்டார். கெட்டிக்காரப் பையன். மன்னிக்கவும். ஒரு பெரியவரைப் பையன் என்று சொன்னதற்காக… அவரின் அப்போதைய நிலையில் அப்படித்தான் சொல்லத் தோன்றுகிறது.

மாட்டு வண்டியில் சாமான் சரக்குகளை ஏற்றிக் கொண்டு கிராமம் கிராமாய்ப் போய் சில்லறை வியாபாரம் செய்து வந்தார். முன்பு காலத்தில் போக்குவரத்து என்றால் மாட்டுவண்டிகள் தான்.

பக்கத்து ஊருக்குப் போவது என்றாலும் மாட்டு வண்டிதான். பத்ராவதிக்குப் போவது என்றாலும் மாட்டு வண்டிதான். இப்போது போல வீட்டுக்கு ஒரு கார் எல்லாம் இல்லை. ஒரு நூறு வருசத்துக்கு முன்னால் நடந்ததைச் சொல்கிறேன்.

வீ.கே.கே. ஒரு வெற்றிகரமான வியாபாரியாக மாறுவதற்கு மாட்டு வண்டிகள்தான் அடித்தளம் போட்டுக் கொடுத்தன. ஏழு வருடங்கள் அருணாசலம் கடையில் வேலை செய்தார். சொற்ப சம்பளம். மூன்று வேளை உணவு. தங்குவதற்கு ஒரு சின்ன அறை. அவ்வளவுதான். மற்றபடி மூன்று ஸ்டார் ஓட்டல் வசதி எல்லாம் இல்லை. அது ஒரு கனவு வாழ்க்கை.

1930-ஆம் ஆண்டில் மளிகைக் கடையில் வேலைக்குச் சேர்ந்தார். அப்போது அவருக்கு வயது 10. அதில் இருந்து 1937-ஆம் ஆண்டு வரை, அதாவது 17 வயது வரை அந்த ஒரே கடையில் தான் வேலை.

காலை ஆறு மணிக்குக் கடையைத் திறந்து ராத்திரி எட்டு மணிக்கு அடைக்க வேண்டும். ஒரு நாள் அல்ல. இரண்டு நாள் அல்ல. ஏழு வருசங்கள் கஷ்டப்பட்டு இருக்கிறார்.

அந்த ஏழு வருடங்களில் ஒரே ஒரு முறை தான் சொந்த ஊருக்குத் திரும்பிப் போய் இருக்கிறார். அப்படித் திரும்பிப் போன போது அவருடைய தாயார் மீனாட்சி அம்மாள் மிகவும் பூரித்துக் கலங்கிப் போய் இருக்கிறார்.

பத்து வயதில் கண்காணா இடத்துக்கு அனுப்பிய பையனை 17 வயதில் மீண்டும் பார்த்தால் எந்தத் தாய்தான் மனம் கலங்க மாட்டார். சொல்லுங்கள்.

வீ.கே.கே.வுக்கு பிடித்தமான உணவு வாத்து முட்டை அவியல். தந்தையார் பக்கத்துக் கட்டைக்குப் போய் வாத்து முட்டைகளை வாங்கி வருவார். வறுவல், பொறியல், அவியல் என்று தாயார் சமைத்துக் கொடுப்பார். வீ.கே.கே. மனதாரச் சாப்பிட்டுவிட்டுப் போவார்.

மளிகைக் கடையில் வேலை செய்யும் போது அவருக்கான ஊதியம் மாதாமாதம் வரவில் வைக்கப்படும். ஒவ்வோர் ஆண்டும் தந்தையார் புலியூருக்குப் போவார். வீ.கே.கே. சம்பளத்தில் ஒரு பகுதியைப் பெற்றுச் செல்வார். வீ.கே.கே.வின் உழைப்பில் குடும்பத்திற்கு ஒரு பெரிய உதவி.

பாருங்கள். பள்ளிக்கூடம் போக ஆசை. படிக்க வேண்டும் எனும் ஆசை. ஆனால் படிக்க முடியவில்லை. குடும்பத்தின் வறுமை வேறு மாதிரியாக எழுதிச் சென்றுள்ளது. பால்ய வயதிலேயே குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்கிற பொறுப்பு.

இது ஒரு வகையில் அவருடைய வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை என்றே சொல்ல வேண்டும். அவர் படிப்பைத் தொடர்ந்து இருந்தால் அங்கே ஏதோ ஒரு வேலை செய்து அவர் வாழ்க்கை அப்படியே அங்கேயே சமைந்து போய் இருக்கும்.

தான் உண்டு தன் வேலை உண்டு எனும் பழைய பல்லவியிலேயே அனுபல்லவியைச் சேர்த்து இருப்பார். சாமான்ய மனிதராகவே வாழ்ந்து மறைந்து போய் இருப்பார்.

வீ.கே.கே. எனும் மந்திர எழுத்துகள்  மகிமை பாடி இருக்கா. ஒன்றை மட்டும் மறந்துவிட வேண்டாம். எழுதிச் செல்லும் விதியின் கைகள் எழுதியே செல்லும். அதை யாராலும் மாற்ற முடியாது. இந்த நேரத்தில் இது நடக்கும் என்பது ஒவ்வோரு மனிதருக்கும் எழுதி வைக்கப்பட்ட சாசனம்.

ஆக அதை மாற்ற முடியாது. ஆனால் திருத்தங்கள் செய்யலாம். அந்தத் திருத்தங்களைத் தான் வீ.கே.கே. அவர்களும் செய்து இருக்கிறார். வீ.கே.கே. என்பவர் மலாயாவுக்குப் போக வேண்டும் என்று விதி எழுதிச் சென்று விட்டது.

புலியூர் மளிகைக் கடையில் வாடிக்கையாளர்களுடன் வி.கே.கே. பயணித்துக் கொண்டு இருக்கும் போது அங்கே பெற்றோர் வீட்டில் பணப் பிரச்சினை. அல்லும் பகலும் வாடிக்கையான பிரச்சினை. வறுமையின் நிறம் சிகப்பு என்று சொல்வார்கள்.

அந்த நிறத்தை வீ.கே.கே. சின்ன வயதிலேயே நன்றாகப் பார்த்துப் பழகி விட்டார். சிகப்பு நிற வாழ்க்கையில் வாழ்ந்து அந்த நிறத்திற்குள் ஆழமாய் ஐக்கியமாகி விட்டார் என்றும் சொல்லலாம். தப்பு இல்லை. அப்படித்தான் அவர் வாழ்க்கைச் சுவடுகள் வரலாறு பேசுகின்றன.

ஒரு கட்டத்தில் தாயாருக்குக் காலரா நோய். கிராமத்து நாட்டு வைத்தியம் செய்து பார்த்தார்கள். ஒன்றும் நடக்கவில்லை. சில நாட்கள் போராட்டம். காலத்தின் கொடுமை. மீனாட்சி அம்மாள் இறந்து போனார்.

அந்தச் செய்தி வி.கே.கே. அவர்களுக்கு மிகத் தாமதமாகவே வந்து சேர்ந்தது. தாயாரின் இறுதிச் சடங்கில்கூட அவரால் கலந்து கொள்ள முடியவில்லை. என்னே துர்பாக்கியம்.

தாயாரின் இறப்பு அவரைப் பெரிதும் பாதித்து விட்டது. பெற்ற தாய்க்கு மருத்துவம் செய்ய முடியவில்லையே; உதவி செய்ய முடியவில்லையே எனும் மன வேதனை; மனக்குமுறல். மனத்தின் கொப்பளிப்பு. அவை அவரை நீண்ட காலம் வாட்டி வதைத்தன. அவரே பலரிடம் சொல்லி இருக்கிறார்.

அப்போதே மனதில் ஒரு புள்ளி வைத்தார். தன்னுடைய வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை என்று ஏற்பட்டால் தாயாரின் பெயரில் ஒரு மருத்துவமனை கட்ட வேண்டும். அதன் மூலம் இல்லாதவர்களுக்கு இயன்ற வரை உதவிகள் செய்ய வேண்டும் என்று நினைத்தார். நினைத்தது போல செய்தும் காட்டினார்.

நல்லபடியாக வாழ்க்கை அமைந்து ஒரு நல்ல நிலையை அடைந்ததும் திருவாரூரில் மீனாட்சி அம்மாள் எனும் பெயரில் மகப்பேறு மருத்துவமனை கட்டி இருக்கிறார். ஏழை மக்களுக்கு இலவசமாக மருத்துவ சிகிச்சைகள் நடைபெற்று வருகின்றன. ஒரு தாயாருக்கு நல்லதொரு நினைவாஞ்சலி. வாழ்த்துகிறேன்.

அதன் பின்னர் தன் வியாபாரத் திறனில் தீவிரம் காட்டினார். அந்தக் கட்டத்தில் ஜாபார் என்பவரின் நட்பு கிடைத்தது. ஜாபார் ஐயா அடிக்கடி மலாயாவுக்குப் போய் வந்து கொண்டு இருந்தார். மலாயா மண்வாசனைகளை அதிகமாகவே சுவாசித்தவர். அக்கரைச் சீமையின் வியாபார நெளிவு சுழிவுகளை நன்கு தெரிந்து கொண்டவர்.

ஒரு செருகல். தமிழ்நாட்டை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த போது நன்றாகவே சுரண்டி விட்டார்கள். புதிய விசயம் அல்ல. உலகத்திற்கே தெரிந்த விசயம். மண் வளம்; கனி வளம்; இயற்கை வளம்; உற்பத்தி வளம் என்று எல்லா வளங்களையும் அடியோடு சுரண்டி எடுத்து கப்பல் கப்பலாய் பார்சல் பண்ணி விட்டார்கள்.

இந்தப் பக்கம் தமிழ்நாட்டில் வாழ்ந்த மக்கள் ஓடாய்த் தேய்ந்து கட்டெறும்பாய் கருகிக் காய்ந்து போனதுதான் மிச்சம். அங்கே இங்கிலாந்து நாட்டில் வாழ்ந்த மக்கள் நாளும் பொழுதும் நன்றாய்ச் சாப்பிட்டு சவடால் பேசியது தான் தமிழகம் பார்த்த நன்றிக்கடன்.

அந்தக் கட்டத்தில் பஞ்சம் பிழைக்க தமிழர்கள் உலகம் முழுமைக்கும் புலம் பெயர்ந்து வந்தார்கள். ஒப்பந்தம் எனும் பெயரில் சஞ்சி கூலிகளாக ஏற்றுமதி செய்யப் பட்டார்கள்.

கரிபியன் கரும்புத் தோட்டங்கள்; இலங்கைத் தேயிலைத் தோட்டங்கள்; மலாயா ரப்பர் தோட்டங்கள்; இந்தோனேசியா மிளகுத் தோட்டங்கள்; தென் ஆப்பிரிக்கா காபித் தோட்டங்கள்; இப்படி ஆயிரக் கணக்கான தோட்டங்கள் பூஞ்சைக் காளான்கள் போல பூத்துக் குலுங்கத் தொடங்கின. தமிழர்களும் புலம் பெயர்ந்தார்கள். புலனங்களை அமைத்துக் கொண்டார்கள்.

அவர்களில் சிலர் வியாபாரம் செய்வதற்குப் பர்மா, சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, இலங்கை போன்ற நாடுகளுக்கும் சென்றார்கள். பெரும்பாலோர் இளைஞர்கள். குறுகிய காலத்திற்குப் பயணங்கள். கொஞ்சம் காசு பார்த்ததும் தாயகம் திரும்பினார்கள். அப்படிப் போய் வந்தவர்களில் ஒருவர்தான் ஜாபார்.

கல்யாணசுந்தரம் கிராமம் கிராமமாக வியாபாரத்திற்குப் போய் வருவது வழக்கம். அப்படிப் போய் வந்து கொண்டு இருந்த போது தான் ஜாபாரின் நட்பு கிடைத்தது. கல்யாணசுந்தரத்தைவிட ஜாபார் எட்டு வயது மூத்தவர்.

வயது இடைவெளி இருந்தாலும் கல்யாணசுந்தரத்தின் சுறுசுறுப்பு; பேச்சுத் திறமை; பழக்க வழக்கத்தின் கவர்ச்சித் தன்மை; இவை ஜாபாரை வெகுவாகக் கவர்ந்து விட்டன. காலப் போக்கில் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள்.

மலாயாவைப் பற்றி ஜாபார் நிறைய கதைகள் சொல்வார். காசு பணம் கித்தா மரத்தில் காய்ச்சு காய்ச்சுத் தொங்குது எனும் டயலாக் வந்து போய் இருக்கலாம். சொல்ல முடியாது. அந்தக் காலத்தில் அக்கரையிலும் இக்கரையிலும் புகழ்பெற்ற டயலாக் தானே.

மலாயாவிற்குப் போகலாம். வணிக சாணக்கியத்தைப் பயன்படுத்தலாம். அதிர்ஷ்ட தேவதையைச் சந்தித்துப் பார்க்கலாம் எனும் ஆசையும் கூடவே வந்து சேர்ந்தது. அடுத்த முறை மலாயாவுக்குச் செல்லும் போது தன்னையும் அழைத்துச் செல்லுமாறு கல்யாணசுந்தரம் கேட்டுக் கொண்டார். ஜாபாரும் சம்மதித்தார்.

ஒரு வருடம் கழிந்தது. மலாயாவுக்குப் போகும் திட்டம் கிடப்பிலேயே கிடந்தது. ஒருநாள் கல்யாணசுந்தரத்திற்கும் கடை முதலாளிக்கும் ஒரு சின்ன பிரச்சினை. என்ன பிணக்கோ தெரியவில்லை. புகையத் தொடங்கியது. அன்றைக்குப் பார்த்து பக்கத்துக் கிராமத்தில் வியாபாரம்.

தன் பிரச்சினையை ஜாபாரிடம் கல்யாணசுந்தரம் சொல்வதற்கு முன்னதாக ஜாபார் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். இன்னும் நான்கு நாட்களில் பினாங்கிற்குப் போகப் போவதாகச் சொன்னார்.

கல்யாணசுந்தரத்திற்கு ஒரே அதிர்ச்சி. கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. அப்போதுதான் கடையில் நடந்த பிரச்சினையைக் கல்யாணசுந்தரம் சொன்னார். ஜாபாரும் கல்யாணசுந்தரத்தைப் பினாங்கிற்கு அழைத்துச் செல்ல சம்மதம் தெரிவித்தார்.

கடைக்கு வந்ததும் முதலாளியிடம் விசயத்தைச் சொன்னார். மலாயாவுக்குப் போகப் போவதாகச் சொன்னார். தனக்குச் சேர வேண்டிய சம்பளப் பணத்தைப் பைசல் பண்ணச் சொன்னார். மறுத்து விட்டார்கள். பற்பல சாக்குப் போக்குகள். கல்யாணசுந்தரம் அசைந்து கொடுக்கவில்லை. கடைசியில் ஊர்ப் பெரியவர் ஒருவரை வைத்துச் சமாதானம் செய்தார்கள்

கப்பல் பயண டிக்கெட்டிற்கு 28 ரூபாய் வேண்டும். ஆனால் சம்பளப் பணத்தில் 20 ரூபாய் மட்டுமே கொடுக்க முடியும் என்றார்கள். எஞ்சிய 8 ரூபாய் கொடுக்க முடியாது என்று மறுத்து விட்டார்கள். இப்படிச் செய்தால் கல்யாணசுந்தரம் பினாங்கிற்குப் போக மாட்டார்; கடையைப் பார்த்துக் கொள்வார் எனும் எதிர்பார்ப்பு.

கல்யாணசுந்தரம் பிடித்த பிடியாய் நின்றார். ‘போயே ஆக வேண்டும். என்னக்கென்று ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும். நாலு காசு பார்த்து நல்லபடியாக வாழ வேண்டும்’ என்று ஒற்றைக் காலில் நின்றார்.

வேறு வழி இல்லாமல் இருபது ரூபாயோடு கல்யாணசுந்தரத்தின் பயணம் தொடங்கியது. மிச்சம் 8 ரூபாயை ஜாபார் முன்பணமாக வழங்கினார்.

உதவி என்று வரும் போது அந்த உதவி எந்த வடிவிலும் வரலாம். எந்த மனித வடிவத்திலும் வரலாம். சொந்த பந்தங்கள் இருந்தாலும் சுயநலமே சொந்த நலமாக சுடர்விட்ட காலத்தில் ஜாபார் போன்ற நல்ல உள்ளங்களும் நாணயம் பேசி இருக்கின்றன.

அடுத்த நாள் நாகப்பட்டினத்திற்கு அவர்களின் பயணம். புலியூரில் இருந்து நாகப்பட்டினம் வெகு தொலைவில் இருந்தது. பொதுப் போக்குவரத்து குறைவு. வாடகைக் கார் வசதிகள் இல்லாத காலக் கட்டம். இரயில் வசதிகள் இருந்தாலும் புலியூரில் இருந்து இரயில் சேவைகள் இல்லை. எல்லாமே மாட்டுவண்டி ஐலசா பயணங்கள் தான்.

நாகப்பட்டினத்தில் இருந்து பினாங்கிற்கு வந்த கதையை நாளைய கட்டுரையில் பார்ப்போம். அதன் பின்னர் தான் சிலீம் ரீவர் கதை தொட்டு வரும்.


வாட்ஸ் அப் புலன அன்பர்களின் பதிவுகள்



ராதா பச்சையப்பன்: கட்டுரையை இப்போது தான் படித்தேன். சின்ன வயதில் வீ.கே.கே.யின் வாழ்க்கையில் அதிகமாக வேதனையும், சோதனையும் நிறைந்ததாகவே இருந்தன.

ஏழு வருடங்களாக அருணாசலம் கடையில் சொற்ப சம்பளம். மூன்று வேளை உணவு. சின்ன அறை தங்குவதற்கு... 1930-ஆம் ஆண்டு மளிகைக் கடையில் வேலைக்குச்  சேர்ந்தார். அப்போது வயது 10. அதிலிருந்து 1937-ஆம் ஆண்டு வரை, அதாவது 17-வயது வரை அந்த ஒரே கடையில் வேலை செய்தார்,

காலை 6 மணி முதல்; இரவு  8 மணிக்குதான் கடையை அடைக்க வேண்டும். இப்படி  ஏழு வருடங்கள் கஷ்டப்பட்டு இருக்கிறார்.

ஏழு வருடங்களில் ஒரு முறைதான் தன் சொந்த ஊருக்கு திரும்பிப் போய் இருக்கிறார். அப்படி திரும்பிப் போன போது அவருடைய தாயார் மீனாட்சி அம்மாள் மிகவும் பூரித்துக் கலங்கிப் போய் இருக்கிறார்.

வீ.கே.கே. பிடித்தமான உணவு வாத்து முட்டை அவியல். தாயார் சமைத்து கொடுத்து, வீ.கே.கே. மனதாரச் சாப்பிட்டு விட்டு போவார். பூலியூர் மளிகைக் கடையில் வாடிக்கையாளருடன் வீ. கே.கே. பயணித்துக் கொண்டு இருக்கும் போது அங்கே, பெற்றோர் வீட்டில் பிரச்சனை.

அல்லும் பகலும் வாடிக்கையான பிரச்சினை. வறுமையின் நிறம் சிகப்பு என்று சொல்வார்கள். ஒரு கட்டத்தில் தாயாருக்கு காலரா நோய். மீனாச்சி அம்மாள் இறந்து போனார். வீ.கே.கே. அவர்களுக்கு மிக தாமதமாகவே செய்தி வந்து சேர்ந்தது.

தாயாரின் இறுதிச் சடங்கில் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை. என்னே துர்பாக்கியம். தாயார் இறப்பு அவரைப் பெரிதும் பாதித்து விட்டது. பெற்ற தாய்க்கு மருத்துவம் செய்ய முடியவில்லையே எனும் மனவேதனை. அந்த நினைவில் திருவாரூரில் மீனாட்சி அம்மாள் எனும் பெயரில் மகப்பேறு மருத்துவமனை கட்டி இருக்கிறார்.

ஜபார் என்பவரின் நட்பு. கிடைத்தது. ஜபார் ஐயா அடிக்கடி மலாயாவுக்குப் போய் வந்து கொண்டிருந்தார். அக்கரை சீமையில் வியாபார நெளிவு சுழிவுகளை நன்கு தெரிந்து கொண்டவர். ஜபாருடன் மலாயாவுக்குப் பயணமானார் வீ.கே.கே.

அதிலும் பல பிரச்சனைகள் வந்தன. வீ.கே.கே. வேலை செய்த கடை முதலாளி  சம்பளம் தர முடியாதுனு கூறினார். பெரியவர் ஒருவரை வைத்து சமாதானம்  செய்தார்கள்.

கப்பல் டிக்கெட்டுக்கு 28 ரூபாய். ஆனால் கடை முதலாளி சம்பளம் கொடுத்ததோ 20 ரூபாய்தான். ஜபார் ஐயா 8 ரூபாயை முன்பணமாக வழங்கினார். ஜபாரைப் போன்ற நல்ல உள்ளங்கள் இருக்கவே செய்கிறார்கள். பயணம் நாளை தொடரும். நன்றி.

விமலா நாயர்: Mr. MK. We should write our history in all language.. Tamil, English and malay.. For international level. We are losing our identity. Malai naadu.. Malaya aana unmai maraikka paattu irukirathu. You are the right person.

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: நன்றிங்க சகோதரி. முதலில் அழுத்தமான ஆழமான வரலாற்றைத் தமிழில் கொண்டு வர வேண்டும். அதன் பின்னர் மற்ற மற்ற மொழிகளில் கொண்டு போக முயற்சி செய்வோம். கண்டிப்பாகச் செய்ய வேண்டும். அடுத்த தலைமுறையினருக்கு நாம் விட்டுச் செல்லும் சீதனமாக அமையட்டும்.

குமரன் மாரிமுத்து: அருமை..... கண்கள் முன்னே  ஒரு திரைக் காவியம் போல கட்டுரை செல்கிறது ஐயா....💐💐💐

இறைவன் வேலாயுதம்:


கணேசன் உலு திராம்: Arumai arumai 👏👏👏👏👏


 

14 மார்ச் 2021

வெற்றிச் செல்வர் வீ.கே.கல்யாணசுந்தரம் - 1

அரிய உழைப்பில் அடக்கமான உணர்வுகள். உயரிய முயற்சியில் எளிமையான உயிர்ப்புகள். இறைமைத் தோரணத்தில் ஈகையின் விழுமியங்கள். வேதனைப் படிமத்தில் சோதனையின் வடிவங்கள். அவை மனிதநேயத்தில் மெழுகிய வாழ்வியல் நயனங்கள். ஒட்டுமொத்த மெய்யியல் வடிவுகளின் ஒருதலை முகவரிகள். அதில் வீ.கே.கே. எனும் அகவரியில் ஒரு வண்ணத் தூரிகை.


முழுமையான பெயர் வீரப்பத்திரன் கிருஷ்ணன் கல்யாணசுந்தரம். சுருக்கமாக வீ.கே.கல்யாணசுந்தரம். சுருக்கத்திலும் சுருக்கமாக வீ.கே.கே. தமிழ்நாட்டுப் புகழ் திருவாரூர் திருமகனார்.

அலைகடல் தாண்டி மலைநாட்டிற்கு வந்தார். அலை மோதும் திரவியங்களை அலை அலையாய்த் தேடிக் கொண்டார். அக்கரை இக்கரையில் ஆன்றோர் புகழ வாழ்ந்தும் காட்டினார். துணிவைத் துணையாய்க் கொண்டு வரலாறும் படைக்கின்றார்.

அக்கரைச் சீமையிலே அவரின் சொந்த பந்தங்கள் விலகி நின்ற ஒரு காலக் கட்டம். மாட்டுச் சாணம் வார்த்து; மாட்டுவண்டி இழுத்து மாடாய் உழைத்து வாழ்ந்தவர். மாட்டு வண்டிகளில் ஏறிச் சென்று கூலிக்கு தோள் கொடுத்த மூத்த மனிதர்.

இருந்தாலும் வாழ வேண்டும் எனும் ஒரு பிடிவாதக் கொள்கை அவரிடம் பிடிவாதமாய்ப் பற்றிக் கொண்டது. வாழ்ந்து காட்ட வேண்டும் எனும் ஒரு முரட்டுப் பரிமாணம் முறுவலித்து ஈர்த்துக் கொண்டது.

அவர் அடிக்கடிப் பேசிக் கொள்ளும் பொன் வாசகம். நாமும் தெரிந்து கொள்வோம். பூமியில் விதைக்கப்படும் எள் விதைகள் கூட எதிர்ப்பைச் சமாளித்து முளைக்கின்றன. வெட்டப் படுகின்ற முருங்கை மரங்களும் மறுகணமே நிமிர்ந்து நிற்கின்றன.

விழுங்கப்படும் சின்ன மீன்களும் அழுது புலம்பாமல் சிரித்து வாழ்கின்றன. உயிர் போகும் பாலைவனத்தில் ஒட்டகங்களும் ஓடிப் போகாமல் வாழ்ந்து காட்டுகின்றன. மழை வெள்ளத்தில் மிதந்து செல்லும் எறும்புகள் கூட துவண்டு போகாமல் நீந்திச் செல்கின்றன.

இப்படி பல கோடிக் கோடி உயிரினங்கள் வாழ முடியும் என்றால் நம்மால் மட்டும் ஏன் வாழ முடியாது? சொல்லுங்கள். நாம் வாழும் வாழ்க்கை இருக்கிறதே அது எப்படியும் வாழ்ந்து ஆக வேண்டிய ஒரு வாழ்க்கை.

ஆக அப்படி இருக்கும் போது அந்த வாழ்க்கையை ஏன் அழுது புலம்பிக் கொண்டு வாழ வேண்டும்? அதை ஏன் வெறுத்து வருத்திக் கொண்டு வாழ வேண்டும்? அதை ஏன் அழுது அரற்றிக் கொண்டு வாழ வேண்டும்?

வாழ்ந்து தான் பார்ப்போமே. வாழ்ந்து காட்டுவோமே என்று வீ.கே.கே. ஒரு துணிச்சலான முன்னெடுப்புச் செய்தார். செய்தும் காட்டினார். அவர்தான் பார்புகழும் பாமரர் வீ.கே.கல்யாணசுந்தரம்.

கடைசியில் கையில் காசு இல்லாமல் கடன் வாங்கி கப்பல் ஏறினார். பினாங்கு புறமலையில் இருந்து சிங்கப்பூர் சிராங்கூன் வரை கால் பதித்து பிருமாண்டமான ஓர் எதிர்க் காலத்தை உருவாக்கிக் கொண்டார். அவர் உருவாக்கிய அவருடைய வாழ்க்கை. இன்று எல்லோரும் பார்க்கிறார்கள். கேட்கிறார்கள். பிரமித்துப் போகிறார்கள்.

இரண்டு மூன்று வார்த்தைகளில் சொன்னால் படிப்படியாக வாழ்க்கையில் முன்னேறினார். கோடிகளை எண்ணிப் பார்த்தார். வாழ்ந்து காட்டி வரலாறு எழுதிச் சென்றார். நல்ல ஓர் எளிய மனிதர். மலாயா நாடு பார்த்த மற்றும் ஒரு தவப்புதல்வர். உழைப்பால் உயர்ந்த அரிய மனிதர். தாராளமாகச் சொல்லலாம்.

வி.கே.கல்யாணசுந்தரம். இவரின் வாழ்க்கை வறுமையில் தொடங்கினாலும், அந்த வறுமையையே மூலதனமாகக் கொண்டு சாதித்துக் காட்டி இருக்கிறார். ஒரு பெருமகனாரின் வரலாறு வருகிறது. படியுங்கள். படித்து முடிக்கும் வரையில் நிச்சயம் உங்கள் மனம் சலசலத்துக் கொண்டே இருக்கும்.  

அவர் இப்போது நம்முடம் இல்லை. இருந்தாலும் அவர் விட்டுச் சென்ற விடாமுயற்சியின் தாக்கங்கள் காலா காலத்திற்கும் அவரின் பெயரைச் சொல்லும். அந்தாதிகளாக அகரம் பாடிக் கொண்டே இருக்கும்.

இன்றைய காலக் கட்டத்தில் வி.கே.கே. எனும் இந்த மூன்றெழுத்து மந்திரச் சொல் முக்காலத்திற்கும் பேசப்படும் ஒரு வாய்ப்பாட்டுப் பொருளாய்ப் பிரபலமாகி விட்டது. அதைவிட முக்காலத்திற்கும் பேசப்படும் மெய்ப்பாட்டுப் பொருளாய்ப் புகழ்பெற்று விட்டது என்று சொல்லலாம். தவறு இல்லை.

அவரின் வாரிசுகள் வி.கே.கல்யாணசுந்தரனார் எனும் அவருடைய பெயரிலேயே ஓர் அறக்கட்டளையை உருவாக்கி பற்பல அறப்பணிகளைச் செய்து வருகிறார்கள்.

வறுமைப் பிணிக்கு இடம் கொடுக்காமல், எதிர் நீச்சல் போட்டுத் துணிந்து நின்றால் வெற்றி நிச்சயம் என்பதற்கு ஒரு திறந்த புத்தகமாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார் வி.கே.கே. பிறர் படிக்கக் கூடிய விரிந்த வித்தகமாக வாழ்ந்திடும் வி.கே.கே. அவர்கள் நடந்து வந்த பாதையைக் கொஞ்சம் பார்ப்போம்.

கலயாணசுந்தரம் அவர்கள் 1920 பிப்ரவரி மாதம் 12-ஆம் தேதி தமிழகத்தின் திருவாரூரில் பிறந்தவர். தகப்பனார் பெயர் கிருஷ்ணன். இராமநாதபுரம் சிறுகம்பயார் பகுதியைச் சேர்ந்தவர். தாயாரின் பெயர் மீனாட்சி அம்மாள். மானா மதுரையைச் சேர்ந்தவர். பின்னர் இவர்கள் திருவாரூரில் நிரந்தரமானார்கள்.

கலயாணசுந்தரம் சின்ன வயதாகும் இருக்கும் போதே அவருடைய சகோதரிகள் காலமாகி விட்டார்கள். அவருக்கு இரு தம்பிகள். முத்தையா. சிவஞானம். வறுமையான குடும்பம். சின்ன வயதிலேயே குடும்பப் பொறுப்பை ஏற்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

கலயாணசுந்தரத்திகு ஐந்து வயதாக இருக்கும் போது குருகுலத்தில் சேர்ப்பதற்குப் பணப் பற்றாக்குறை. அந்த அளவிற்கு குடும்பத்தில் வறுமை. அதனால் தெரிந்த ஒரு குடும்பப் பெரியவரிடம் இலவசமாக வீட்டுக் கல்வி. அவரின் வீட்டில் எடுபிடி வேலைகள் செய்து கல்விக் கட்டணத்தைச் சரி செய்து கொள்ளும் இக்கட்டான நிலைமை.

அருகாமையில் வெங்கடராமன் என்பவர் ஒரு பள்ளி நடத்தி வந்தார். அந்தப் பள்ளியில் நடக்கும் பாடங்களை வெளியே நின்று வி.கே. கல்யாணசுந்தரம் ஆசை ஆசையாகப் பார்ப்பார். தன்னால் அப்படி படிக்க முடியவில்லையே எனும் ஏக்க தாபம்.

ஒருநாள் அதைப் பார்த்த வெங்கடராமன் ஆசிரியர்; விருப்பப் பட்டால் வகுப்பில் வந்து சேர்ந்து கொள்ளலாம். ஆனால் ஐந்து ரூபாய் கட்டணம் கட்ட வேண்டும் என்றார். என்ன செய்வது.

வி.கே. கல்யாணசுந்தரத்தின் தந்தையார் வீட்டில் இருந்த மாவு அரைக்கும் மரத்துக் கட்டையை விற்று வி.கே.கே.யைப் படிக்க வைத்தார். அதன் பிறகு தொடர்ந்து மாதா மாதம் ஐந்து ரூபாய் கட்டணம் கட்ட முடியவில்லை. அதோடு வி.கே.கே. கல்வியும் நின்று போனது.

இந்தத் தாக்கம் தான் வீ.கே.கே. அவர்களுக்கு கல்வியின் மீது அதிக அக்கறையை ஏற்படுத்திக் கொடுத்தது. தான் படிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. தன் பிள்ளைகளை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என்று சபதம் எடுத்துக் கொண்டார். பிள்ளைகளை நன்றாகப் படிக்க வைத்தார். பிள்ளைகள் அனைவருமே நன்றாக உயர்க்கல்வி பயின்று உள்ளார்கள்.

அவருடைய வாழ்க்கைப் பாதையில் கல்விக்காக நிறையவே செய்து உள்ளார். அனாதைக் குழந்தைகள் தங்கிப் படிப்பதற்காகக் கல்வி விடுதிகளைக் கட்டிக் கொடுத்து இருக்கிறார். பாலிடெக்னிக் பள்ளிகளை உருவாக்கிக் கொடுத்து இருக்கிறார். தொடக்கக் காலங்களில் இந்தக் கல்விவழி தான தர்மங்கள் பெரும்பாலும் தமிழகத்தையே மையம் கொண்டு இருந்தன.

வீ.கே.கே. அவர்களால் மூன்றாம் வகுப்பிற்கு மேல் படிக்க இயலவில்லை. அவ்வளவு சிரமம். ஒரு தடவை தீபாவளி நேரம். வீட்டில் தீபாவளி கொண்டாடுவதற்கு வசதிகள் இல்லை. அவருடைய மாமா அவர் வீட்டில் வந்து தீபாவளியைக் கொண்டாடலாம் என்று கல்யாணசுந்தரத்தை மட்டும் அழைத்து இருக்கிறார்.

அதற்கு வீ.கே.கே. ’என் அப்பா அம்மா என் தம்பிகளை தனியாக விட்டு விட்டு நான் மட்டும் தனியாக வந்து மகிழ்ச்சியாக இருக்க முடியாது; என்று மறுத்து விட்டார். அப்போதே அவருக்கு அவரின் குடும்பத்தின் மீது தனிப்பற்று தனிப் பாசம்.

மற்றும் ஒரு நிகழ்ச்சி. அவருக்கு ஐந்து வயது. வீட்டில் சமைப்பதற்கு அரிசி இல்லை. அவருடைய அம்மா மீனாட்சி அம்மாள் அவரைத் தன் பாட்டி வீட்டிற்கு அனுப்பி கொஞ்சம் அரிசி வாங்கி வர அனுப்பி இருக்கிறார். தாத்தா அழகு பெருமாள் உதவி செய்ய மறுத்து விட்டார்.  

தாத்தா அழகு பெருமாள் பர்மாவுக்குப் போய் வியாபாரங்கள் செய்து நன்றாகப் பணம் சம்பாதித்தவர். அப்படி இருந்தும் உதவி செய்ய மனசு வரவில்லை. இந்த மாதிரியான நிகழ்ச்சிகள் தான் வி.கே.கே. மனதில் ஆழமாய்ச் சோகமாய்ப் பதிந்து விட்டன. பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தி விட்டன. அதன் பிரதிபலிப்புதான் பின்னாட்களில் வி.கே.கே. அவர்கள் தான தர்மங்கள் செய்வதற்கு வழிகோலாக அமைந்தன.

அந்தக் காலக் கட்டத்தில் திருவாரூரில் உச்சி செட்டியார் எனும் ஒரு செல்வந்தர் இருந்தார். அவரிடம் 25 பேர் வேலை செய்து வந்தார்கள். உச்சி செட்டியார் தான் வீ.கே.கே. குடும்பத்திற்கு அவ்வப்போது உதவிகள் செய்து வந்தவர். ஆனாலும் தொடர்ந்து உதவிகளை எதிர்பார்க்க முடியவில்லை.

அந்தக் கட்டத்தில் வீ.கே.கே. அவர்களின் சொந்த பந்தங்களும் திருவாரூரில் நல்லபடியாக வணிகம் செய்து வந்தார்கள். அவர்களில் ஒருவர் வீ.கே.கே. அவர்களின் சிற்றன்னை குப்பம்மாள். இவரின் மகன் இராமநாதபுரத்திற்கு அருகில் உள்ள புலியூரில் மளிகைக் கடை வைத்து நடத்தி வந்தார். அத்துடன் அக்கம் பக்கத்தில் உள்ள கிராமங்களுக்கு மாட்டு வண்டிகளின் மூலமாகப் பொருட்களைக் கொண்டு சென்று வியாபாரம் செய்து வந்தார்.

அவருடைய கடையில் எடுபிடி வேலை செய்வதற்கு வீ.கே.கே.விற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. புலியூருக்குப் புறப்படும் நாள் வந்தது. ஆனால் வீ.கே.கே.விடம் கட்டிக் கொள்ள உருப்படியாக ஒரு வேட்டி இல்லை. தந்தையிடம் கேட்டார். அவரும் மூன்று அணா செல்வு செய்து ஒரு வேட்டி வாங்கிக் கொடுத்தார். பணத் தட்டுப்பாட்டு நேரத்தில் இது ஒரு செலவு என்றே வீ.கே.கே. நினைத்தார்.

ஆக இந்தப் புலியூர் பயணம் தான் வீ.கே.கே. வாழ்க்கையில் முதல் திருப்புமுனை. அவரின் வாழ்க்கையை மாற்றி அமைத்த முதல் துலாக்கோல்.

அப்போதைய காலக் கட்டத்தில் வியாபாரம் எல்லாமே பண்டமாற்று முறையைச் சார்ந்து இருந்தது. ஆங்கிலத்தில் பார்ட்டர் என்று சொல்வார்கள். அந்த மாதிரி வாரா வாரம் சந்தைகளில் பொருள்கள் பண்டமாற்று செய்யப் பட்டன. மளிகைக் கடை வைத்து இருந்தவர்கள்கூட தங்கள் பொருள்களை மாட்டுக் காடிகளில் ஏற்றிச் சென்று கிராமங்களில் சந்தைப் படுத்தினார்கள்.

வீ.கே.கே. மாமாவின் மகன் அருணாசலம். இவரிடம் தான் வீ.கே.கே. வேலைகுக்குச் சேர்ந்தார். ஒரே வார்த்தையில் சொன்னால் கொத்தடிமைக் கூலி வேலை. முதலில் அவர் செய்த வேலை என்ன தெரியுங்களா?

மாட்டுச் சாணம் அள்ளுதல்; மாட்டுக் கொட்டகையைச் சுத்தப் படுத்துதல்; மாடுகளைக் குளிப்பாட்டுதல்; மாடுகளுக்குப் புல் வெட்டிக் கொண்டு வந்து போடுதல்; பால் கரத்தல்; மாட்டு வண்டிச் சக்கரங்களுக்கு எண்ணெய் போடுதல்; ஆக இப்படித்தான் வீ.கே.கே. மாடுகளோடு பாச பசுமலர் போல வாழ்ந்து இருக்கிறார். இதை எழுதும் போது மனசிற்கு வேதனையாக உள்ளது.

இருந்தாலும் இப்படி கஷ்டப் பட்டவர் தான் கடைசியில் ஒரு பெரிய வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கி இருக்கிறார். கோடீஸ்வரராக கோலோச்சி இருக்கிறார். உலகத் தமிழர்கள் திரும்பிப் பார்க்கிற மாதிரி சாதனை செய்து இருக்கிறார்.

திருவாரூரில் பிறந்து திரைகடல் தாண்டி வந்து, தம் சீரிய உழைப்பால் புகழ்ச் சிங்காதனம் அடைந்தவர் அந்தப் பெரியவர். எளிமையாக வாழ்வைத் தொடங்கி, எதிர்நீச்சல் போட்டு கனகச் செல்வம் குவித்தவர்.  

ஒரு காலக் கட்டத்தில் அஞ்சு அணாவிற்கும் பத்து அணாவிற்கும் அலைமோதியவர். ஆயிரம் இலட்சம் கணக்குகளைத் தாண்டி கோடிகள் என மனத்தாலேயே கணக்குப் போடும் அளவுக்கு உழைப்பால் உயர்ந்தவர்.  

அறுபதாண்டுகள் அசராமல் உழைத்து ஆலமரம் போல விழுதுகள் பரப்பியவர். அந்த விழுதுகள் இப்போது மலேசியா, சிங்கப்பூர், தமிழகம் என மூன்று நாடுகளில் வணிக நிறுவனங்களாக உருமாற்றம் கண்டுள்ளன. தேயிலை ரப்பர்த் தோட்டங்களாக, விவசாயப் பண்ணைகளாக, விடுதிகளாக வளர்ந்து உள்ளன. இன்றும் வளர்ந்து வருகின்றன.

ஒரு நாட்டின் வரலாறு என்பது அந்த நாட்டில் வாழ்ந்த சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாறு. அதற்கு இலக்கியமாக வாழ்ந்த ஒருவரின் வாழ்க்கை ஏடுதான் வீ.கே.கே. என்பவரின் வாழ்க்கை வரலாறு. ஆக வீ.கே.கே. வரலாறு என்பது சாதனைச் சிகரங்களை எட்டியவரின் ஒரு வரலாறு.

பேராக் சிலிம் ரீவர் நகரில் அவர் முதன் முதலாக ஒரு மளிகைக்கடை திறந்தார். அதில் பற்பல சிக்கல்கள் சிரமங்கள். சோதனைகள் வேதனைகள். அவற்றை எப்படி சமாளித்தார் என்பதை நாளைய கட்டுரையில் பார்ப்போம்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
14.03.2021


மலேசியம் புலனத்தின் பின்னூட்டங்கள்


தேவிசர:
இன்றைய கட்டுரையை படித்தேன் ஐயா... திரு.வீ.கே.கே அவரின் இள வயது மிகவும் துயரம் 😢..... நாளை வாழ்க்கையில் அவர் அடைந்த வெற்றிக் கதையை எதிர்பார்த்திருக்கிறேன்...

ராதா பச்சையப்பன்: கட்டுரையைக் காலையில் படித்தேன். அக்கரைச் சீமையிலே அவரின் சொந்த பந்தங்கள் விலகி நின்ற ஒரு காலக் கட்டம். மாட்டு சாணம்  வார்த்து; மாட்டு வண்டி இழுத்து மாடாய் உழைத்து வாழ்ந்தவர்.

மாட்டு வண்டிகளில் ஏறிச் சென்று கூலிக்குத் தோள் கொடுத்த மூத்த மனிதர். அவர் அடிக்கடி பேசிக் கொள்ளும் பொன் வாசகம் நாமும் தெரிந்து கொள்வோம்.

வறுமைப் பிணிக்கு இடம் கொடுக்காமல், எதிர் நீச்சல் போட்டுத் துணிந்து நின்றால் வெற்றி நிச்சயம் என்பதற்கு ஒரு திறந்த புத்தகமாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்  வீ.கே.கே. அவர்கள்.

கல்யாண சுந்தரம் அவர்கள், 12_02_1920 தமிழகத்தில் திருவாரூரில் பிறந்தவர். சின்ன வயதிலேயே குடும்பப் பொறுப்பை ஏற்க வேண்டியது காலத்தின் கட்டாயம். ஐந்து ரூபாய் கட்டணம் கட்ட முடியாததால் வீ.கே.கே. கல்வியும் நின்று போனது.

இந்தத் தாக்கம் தான் வீ.கே.கே. அவர்களுக்கு கல்வியின் மீது அதிக அக்கறை ஏற்படுத்திக் கொடுத்தது. தான் படிக்க வில்லை என்றாலும் பரவாயில்லை, தன் பிள்ளைகளை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என்று சபதம் எடுத்துக் கொண்டார்.       

அனாதைக் குழந்தைகள் தங்கிப் படிப்பதற்காகக் கல்வி விடுதிகளைக் கட்டிக் கொடுத்து இருக்கிறார். வீ. கே.கே. மூன்றாம் வகுப்பிற்கு மேல் படிக்க இயலவில்லை. அவ்வளவு சிரமம்.

வீ.கே.கே. விடம் கட்டிக் கொள்ள உருப்படியாக ஒரு வேட்டி இல்லை. தந்தையிடம் கேட்டார். அவரும் மூன்று அணா செலவு செய்து ஒரு வேட்டி வாங்கிக் கொடுத்தார். வீ.கே.கே. மாமாவின் மகன் அருணாசலம். இவரிடம் தான் வேலைக்குச் சேர்ந்தார்.

ஒரே வார்த்தையில் சொன்னால் கொத்தடிமைக் கூலி வேலை. முதலில் அவர் செய்த வேலை என்ன தெரியுங்களா? மாட்டு சாணம் அள்ளுதல்; மாட்டுக் கொட்டகையைச் சுத்தப் படுத்தல்; மாடுகளுக்குப் புல் வெட்டிக் கொண்டு வந்து போடுதல்.

இதை எழுதும் கட்டுரை நாயகனுக்கே மனதுக்கு வேதனையாக உள்ளது என்றால் படிக்கும் வாசகர்களுக்கு சொல்லத் தேவையே இல்லை. 😭

இப்படி கஷ்டப் பட்டவர்தான் கடைசியில் ஒரு பெரிய வணிக சாம்ராஜ்யத்தை  உருவாக்கி இருக்கிறார். கோடீஸ்வரராகக் கோலோச்சி இருக்கிறார். உலகத் தமிழர்கள் திரும்பிப் பார்க்கிற மாதிரி சாதனை செய்து இருக்கிறார்.

திருவாரூரில் பிறந்து திரைகடல் தாண்டி வந்து, தம் சீரீய உழைப்பால் புகழ்ச் சிங்காதனம் அடைந்தவர் அந்தப் பெரியவர். எளிமையாக வாழ்வைத் தொடங்கி, எதிர்நீச்சல் போட்டு கனகச் செல்வம் குவித்தவர்.

ஒரு காலத்தில் அஞ்சு அணாவிற்கும், பத்து அணாவிற்கும் அலைமோதியவர்;  ஆயிரம் இலட்சம் கணக்குகளைத் தாண்டி கோடிகள் என மனத்தாலேயே கணக்குப் போடும் அளவுக்கு உழைப்பால் உயர்ந்தவர்.

அறுபதாண்டுகள் அசராமல் உழைத்து ஆலமரம் போல விழுதுகள். இப்போது மலேசியா, சிங்கப்பூர், தமிழகம் என் மூன்று நாடுகளில் வணிக நிறுவனங்களாக உருமாற்றம் கண்டுள்ளன. வீ.கே.கே. என்பவரின் வாழ்க்கை வரலாறு என்பது  சாதனைச் சிகரங்களை எட்டியவரின் ஒரு வரலாறு.

வீ.கே.கே. அவர்களின் வாழ்க்கை வரலாறில் அதிகம் வேதனைகளும், சோதனைகளுமே காண முடிகிறது. மனம் வலிக்கிறது. கண்களில் நீர் திரை போடுகிறது. நாளைய தொடரை பார்ப்போம் நன்றி 🙏🌸.

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: மிக அருமையான விமர்சனப் பின்னூட்டம். இது வரையிலும் இந்த அளவிற்கு நெடிய பின்னூட்டம் வழங்கியவர்கள் மிகவும் குறைவு. நம்முடைய வலைத்தளத்தில் பதிவு செய்ய வேண்டிய பதிவு.

ஒரு பெரியவரின் போராட்ட வாழ்க்கை. அனைவரும் தெரிந்து வைத்து இருக்க வேண்டும். 8 ரூபாய் கடன் வாங்கி ரஜுலா கப்பலேறி வந்து ஒரு பெரிய வணிக சாம்ராஜ்யத்தையே உருவாக்கி இருக்கிறார். நன்றிங்க ராதா 👍👍

குமரன் மாரிமுத்து: வறுமையை வறுத்தெடுத்து கைகுட்டையாக கைக்குள் சிறை பிடித்த தொழில் முனைவர்.💐💐💐🙏🏽

டத்தோ தெய்வீகன்: புதிதாய் நம் இளையோர் தெரிந்துகொள்ள, வீ.கே.க அவர்களின் வாழ்க்கையைப் போல, பலரின் வாழ்க்கை இலைமறைக் காயாகவே இன்னும் நம்மவர்களிடையே எவ்வளவோ இருக்க, தேவையில்லாத விஷயங்களில் நேரத்தையும், சக்தியையும் விரையமாக்கும் வினோதம்தான் என்னே!

ராதா பச்சையப்பன்:
எப்படி அண்ணா 'உங்களால் இவ்வளவு பதிவுகள் செய்ய முடிகிறது? கட்டுரை, கேள்வி, பதில், புலனத்தை அலசுவது; இடையிடையே ஏதாவது பதிவுகள். முடியவில்லை என்னால்... என் கண் பட்டு விட போகுது. அண்ணா "நீங்க நீண்ட காலம் நலமாய் வாழ வேண்டும் 🙏🙏🌸.


பேஸ்புக் பதிவுகள்


சத்யா ராமன்: வணக்கம் சார். மிக நீண்ட நெடிய கட்டுரை. இறந்த கால கஷ்டங்கள்  வேதனைகள், சோதனைகள் வீ.கே கல்யாணசுந்தரம் போன்ற கடும் உழைப்பாளிக்கு எதிர்காலத்தில் ஏற்றமிகு வளர்ச்சி, வாழ்வை ஏற்படுத்தியது என்றால் அதற்காக ஐயா அவர்கள் எப்படி எல்லாம் துயர், இடர்களை எதிர்கொண்டார்கள் என்பதை உங்களின் பதிவு புரிய வைத்தது.

வலிகள் இல்லாமல் வசந்தம் இல்லை,

வேதனை இல்லாமல் சாதனை இல்லை,

காயங்கள் இல்லாமல் காலமும் இல்லை.

இதுதான் ஒவ்வொரு தமிழரின் கடந்த காலங்கள் காட்டிய கட்டியங்கள். இதில் என்ன நெருடல் என்றால் அன்று கஷ்டப்பட்டு, நாராய் கிழிந்து, ஓடாய் தேய்ந்து உழைத்தவர்கள் எல்லாருமே பின்னாளில் ஐயா வீ.கே கல்யாணசுந்தரம் போன்று வசதி வாய்ப்புகளை வரித்துக் கொள்ளவில்லையே?

மாறாக வஞ்சகத்தையும், கீழறுப்புகளையும் எதிர்நோக்கி இளித்தவாயர்களாக ஏமாந்த மலாயா தமிழர்களில்... எத்தனை பேர் வீ.கே.கே.வாக பார்புகழ் பாராட்டும்படி தங்களின் வாழ்வாதாரத்தை வளப் படுத்தினார்கள் என்று எண்ணிக்கையை தேடினால் வருவது என்னவோ வருத்தமே..😢

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்:
நெஞ்சத்தின் ஆழ் வேதனையை கொப்பளித்து உள்ளீர்கள். சத்தியமான நியாயமான வேதனைகள். உண்மையிலேயே அந்தக் கட்டுரையை எழுதிவிட்டு நானே சன்னமாய்க் கொஞ்ச நேரம் அழுதேன். அது தெரியுங்களா.

நூற்றுக்கணக்கான கட்டுரைகள் எழுதி இருக்கிறேன். மன்னிக்கவும். இதுவரை மூவாயிரத்து முந்நூறு கட்டுரைகள் (3300). இவற்றுள் இரண்டே இரண்டு கட்டுரைகள் என்னை அழ வைத்து இருக்கின்றன. ஒன்று சிபில் கார்த்திகேசு கட்டுரை. மற்றொன்று இந்த வீ.கே.கல்யாணசுந்தரம் ஐயா கட்டுரை.

அவருக்குப் படிக்க ஆசை. ஆனால் படிக்க பணம் இல்லை. பத்து வயதில் கொத்தடிமை போல பல மாதங்கள் மாட்டுக் கொட்டகையில் வேலை பார்த்து இருக்கிறார்.

இங்கே மலாயாவுக்கு வரும் போது கூட எட்டு ரூபாய் கடன் வாங்கி வந்து இருக்கிறார். அப்படி ஒரு கடன்காரராகக் கால் பதித்த அவர் பல கோடிகளைக் கணக்குப் பார்க்காமல் விட்டுச் சென்று இருக்கிறார். பெரிய வரலாற்றுச் சாதனை.

இது ஒரு தொடர் கட்டுரை. இன்று 15.03.2021 திங்கட்கிழமை வெளிவரும் கட்டுரை மேலும் வேதனைகளைக் கொப்பளிக்கச் செய்யும். படித்துப் பாருங்கள். நன்றிங்க சத்யா.


சத்யா ராமன்: தமிழர்கள் கடந்து வந்த வரலாறுகளை வக்கணை மிகுதியோடு ஆராய்ந்தால், வலிகளும் வருடல்களுமே மிஞ்சும் என்பதை உங்களின் ஒவ்வொரு பதிவும் பதில் கூறி வந்துள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது சார்.

இன்று நம்மவர்களில் பலர் பலத் துறைகளில் வளப்பமான வளர்ச்சியைப் பெற்றிருந்தாலும் அதற்கு பின்னால் எத்தனை, எத்தனை துயரங்கள் உள்ளன என்பதையும் மறக்க மறுக்க முடியாது என்பதும் நிதர்சனமான நிஜம் சார்.


Unknown: Honorable VKK Sir is great human, he is not only great inspiration to me, my family and to all whoever connected. he has done so much to the families of workers associated with his group business. He has shown great affection to his family, family friends and to the society. வாழ்க வெற்றி செல்வர் வீ .கே .கே புகழ்!!!

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: பாலைவனத்துக் கானல் நீர் வானத்தைத் தொட்டுப் பார்க்கும். மாலைநேரத்து அந்திவானம் பூமியைத் தொட்டுப் பார்க்கும். முன்னது மாயை. பின்னது உண்மை. இப்படித்தான் மனித விழுமியங்களும் பயணித்து வருகின்றன. அன்றும் இன்றும் அதே கோலங்களில் அவதானிக்கின்றன. நன்றிங்க சகோதரி.

Kala Balasubramaniam: Thank you sir for this wonderful tribute to a legend. The story of my late grandfather Mr Vkk will bring great awareness for the Indian community. It's most inspiring for the younger generation especially the Indian youth.

We in fact have a history of not only contributing towards the nation building as the Labour force, we also played a prestigious part in business and other professional fields.

There must be more such write ups of other great Malaysian Indians in the future. Kudos to Tamil Malar and my gratitude to you for the wonderful literary work done.

Muthukrishnan Ipoh >>> Kala Balasubramaniam: நன்றிங்க. பெரியவர் வீ.கே.கே. அவர்கள் தங்களின் தாத்தா என்று அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்.

ஐயா கல்யாணசுந்தரம் அவர்கள் இந்த நாட்டில் வாழும் தமிழர்களுக்கும் இந்தியர்களுக்கும் ஓர் உந்துதல் சக்தி என்றே சொல்ல வேண்டும். உழைப்பை மூலதனமாகக் கொண்டு வாழ்க்கையில் உயர்ந்த மாபெரும் மனிதர். இவர் இன்றைய தலைமுறையினருக்கு ஓர் உந்து சக்தியாக அமைகின்றார். இந்த நாட்டில் வாழ்ந்த நம் இனத்துத் தலைவர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டியது நம்முடைய கடமை. தொடர்ந்து பயணிப்போம். நன்றிங்க சகோதரி.

Banu Linda: நம் இனத்தவர் உழைப்பாளிகள்... ஆனால் ஏமாளிகள்... சம்பாரித்த சொத்துகளை முறையாக ஆவணப்படுத்தத் தெரியாத அப்பாவி மக்கள்... மதுவுக்கு அடிமையாகி இருப்பதை எல்லாம் இழந்து ஓட்டாண்டியாக நிற்கிறோம்.

Sathya Raman >>> Banu Linda: வணக்கம் பானு. உங்கள் கூற்று ஒரளவு உண்மை. எனினும் நம்மவர்கள் பெரும் குடிகாரர்கள் என்று பட்டப் பெயர் எடுத்ததற்கு அதன் பின்புலமே. அவர்கள் அன்று மணிக் கணக்கில் உழைத்த அயராத உழைப்புதான்.

அயர்வு, உடல்வலி, சோர்வை தணிக்க அவர்கள் பட்டை தண்ணீரையும், தாலிமேராவையும் குடித்த பிறகே சற்று களைப்பு தீர தூங்கி தங்களது வாழ் நாட்களை கடந்தார்கள் என்பதே உண்மை.

சொற்ப ஊதியத்தில் உல்லாசங்களை அனுபவிக்க குடித்தார்கள் என்று அன்றைய எம் இனத்தவர்களை இழித்து பழி சுமத்துவது மனதை கனக்கச் செய்கிறது.

Banu Linda >>>
Sathya Raman மன்னிக்க வேண்டும் சத்தியா. பழிப்பதோ அல்லது பழி சொல்வதோ நோக்கம் இல்லை. ஆதங்கம் தான். நம்மவர்களை மற்ற இனத்தார் எளிதில் ஏய்த்து காரியம் சாதித்துக் கொள்வர். வெள்ளைக்காரன் முதல் சீனன் வரை பந்தாடப் பட்டவர்கள் தானே நாம். நமக்கு திறமை உண்டு. ஆனால் திறமையை சரியாக கையாள தெரியாமல் தானே உள்ளோம். இந்த வருத்தமே.

Sathya Raman >>> Banu Linda: எளிதில் ஏமாறுபவர்கள், வெந்ததை மட்டுமே உண்டு வெள்ளந்தியான உள்ளம் கொண்டவர்கள். எதையும் எதிர்த்து கேட்கத் தெரியாத பத்தாம் பசலிகள். இத்தகைய எளிய குணங்களை தங்களுக்குள் சாதகமாகிக் கொண்ட சதிக்காரர்கள் விரித்த வலையில் வீழ்ந்த நல்லவர்கள் நம்மவர்கள் என்பதுதான் இங்கே குறிப்பிட்டு சொல்ல வேண்டும் பானு.

அந்நியன் இந்த இனத்தை இளிச்சவாயார்களாக எண்ணி கொத்தடிமைகளாக வைத்து இருந்தான். சொந்த இனத்துக்காரனே நமக்கென்று உருவாக்கப்பட்ட சொத்துடைமைகளை ஏப்பம் விட்டு இந்த நாட்டில் நம்மை நாதி நாதி அற்றவர்களாக, நிர்கதியாக ஆக்கிய வரலாறும் உள்ளதே?

அடுத்தவனுக்கு தமிழன் தலை எடுப்பதில் விருப்பமில்லை. சக இனத்துக்காரனுக்கோ தமிழனை தன்மானத்தோடு வாழவைக்க வக்கு இல்லை. பிற இனத்தவர் முதுகில் குத்திய துரோகத்தைவிட சொந்தக்காரனே நேருக்கு நேர் நெஞ்சில் குத்திய துரோகத்தின் வலியும், வடுவும் என்றுமே ஆறாதது, அழியாதது.

இந்த ஆற்றாமைகளில் சிக்கி என் மனம் சிதைந்து போகிறதே தவிர யார் மீதும் தனிப்பட்ட வருத்தமோ, கோபமோ இல்லை பானு.

Nadarajah Sara >>> அன்பான பண்பான மானிடர். இரக்க குணம் கொண்ட நன்கொடை நெஞ்சர். வாழ்க அவர் புகழ்.

Parameswari Doraisamy >>> அருமை ஐயா.. தற்போது நான் தமிழ் மலர் வாங்கிப் படிக்கிறேன்.



13 மார்ச் 2021

மலாயா தமிழர்கள்: பத்தாக் ராபிட் தோட்டம் தெலுக் இந்தான் - 1898

பத்தாக் ராபிட் தோட்டம் தெலுக் இந்தான் நகரில் இருந்து மூன்று மைல் தொலைவில் இருந்தது. இன்னும் இருக்கிறது. மலாயாவில் மிகப் பழைமையான தோட்டங்களில் இதுவும் ஒன்றாகும். 1890-ஆம் ஆண்டுகளில் தோற்றுவிக்கப் பட்டது. (Batak Rabbit Estate Teluk Intan - 1898). தெலுக் இந்தான் இரயில் நிலையத்தில் இருந்து ஒன்றரை மைல் தொலைவு.

Batak Rabbit Estate is located three miles from the town of Teluk Intan. This is also one of the oldest estates in Malaya. Created in the 1890s. (Batak Rabbit Estate Teluk Intan - 1898). One and a half miles from Telugu Indan Railway Station.

இந்தத் தோட்டத்தின் அப்போதைய பரப்பளவு 1098 ஏக்கர். 1906-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதன்முதலாக ரப்பர் பயிர் செய்யப்பட்டது. 200 ஏக்கர் பச்சைக் காடுகள் அழிக்கப்பட்டு ரப்பர் பயிரிடப்பட்டது.

The area of the estate at that time was 1098 acres. The first rubber crop was planted in February 1906. 200 acres of green forests were cleared and rubber was planted.

அதற்கு முன்னர் 1890-ஆம் ஆண்டுகளில் அங்கு மணிலா நிலக்கடலை பயிர் செய்து இருக்கிறார்கள். அப்போதே அந்தக் காலக் கட்டத்திலேயே நிலக்கடலை வேர்க்கடலை பயிர் செய்வதற்காகத் தமிழர்கள் அங்கு குடிபெயர்ந்து விட்டார்கள்.

Prior to that, Manila groundnut was cultivated there in the 1890s. At that time, Tamil people migrated there to cultivate groundnuts.

இந்தத் தோட்டம் ஆற்று வண்டல் மண் நிறைந்த பகுதியாகும். அதனால் நிறைய கால்வாய்களை வெட்டி இருக்கிறார்கள். 1906-ஆம் ஆண்டில் ஏறக்குறைய 100,000 ரப்பர் கன்றுகளை தமிழர்கள் நட்டு இருக்கிறார்கள்.

The estate was covered with river sediments. As that a lot of canals were cut. In 1906; the Tamil people planted about 100,000 rubber saplings.

ரப்பரைத் தவிர மரவள்ளி; நிலக்கடலை பயிர் செய்து இருக்கிறார்கள். அகலான மண்சாலைகளை அமைத்து இருக்கிறார்கள். பேராக் ஆற்று ஓரத்தில் இந்தத் தோட்டம் அமைந்து இருந்ததால் அறுவடைப் பொருள்களை எளிதாகக் கொண்டு செல்ல முடிந்து உள்ளது.

Apart from rubber, they cultivated cassava and groundnuts. They had set up wide ditches. The estate was located on the banks of the Perak River, which made it easy to transport produce.

பத்தாக் ராபிட் தோட்டத்தில் 1906-ஆம் ஆண்டில், 35 ஒப்பந்தக் கூலி தமிழர்களும் (Indentured Tamils); ஒப்பந்தம் கையெழுத்துப் போடாத கட்டுப்பாடற்ற 70 தமிழர்களும்; வேலை செய்து இருக்கிறார்கள்.

In 1906 the labour force employed consists of thirty-five Indentured and seventy free Tamils.

இந்தத் தோட்டத்தில் மலேரியா நோயின் பாதிப்புகள் அதிகமாக இருந்தன. ஆகவே குடிநீரைக் கொதிக்க வைத்துக் குடிக்கும் முறையைத் தோட்ட நிர்வாகம் அமல்படுத்தியது. அப்போது அதன் நிர்வாகியாக வில்லியம் டன்கன் (William Duncan)  இருந்தார். இவர் ரூபானா தோட்டத்தில் நிர்வாகியாக இருந்தவர். தோட்டத்தின் உரிமையாளர்கள் பினாங்கைச் சேர்ந்த மோரிசன் அலன் நிறுவனம் (Morison Allan of Messrs. Adams & Allan Pinang) ஆகும்.

The incidence of malaria was high in this estate. Therefore, the management of the estate implemented a system of boiling the water before drinking. Its administrator at the time was William Duncan. He was the administrator of the Rubana estate. The estate wass owned by the Morison Allan of Messrs. Adams & Allan in Penang.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
13.03.2021

Sources:

1.http://archiveweb.cumbria.gov.uk/calmview/Record.aspx?src=CalmView.Catalog&id=DPEN%2F301%2F2%2F15I

2. Journal of the Malayan Branch of the Royal Asiatic Society Vol. 8, No. 1 (109), EREDIA'S DESCRIPTION OF MALACA, MERIDIONAL INDIA, AND CATHAY (April, 1930), pp. 1-288 (295 pages) Published By: Malaysian Branch of the Royal Asiatic Society

3. 1. Wright, Arnold; Twentieth century impressions of British Malaya; Page 405 - 406. Britain Publishing Company, 1908,

4. Indian Labour Immigration to Malaysia 1844 - 1941

5. Sandhu, K.S (2010), Indian in Malaya: Some Aspects of Their Immigration and Settlement (1786-1957)

 


10 மார்ச் 2021

மலாயா தமிழர்கள்: சிலாங்கூர் காஜாங் செமினி தோட்டம் 1880

காஜாங் செமினி தோட்டம் (Semenyih Estate Kajang) 1896-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. அந்த ஆண்டில் 350 தமிழர்கள் தமிழ்நாட்டில் இருந்து கொண்டு வரப் பட்டார்கள். அதற்கு முன்னர் அது ஒரு காபி தோட்டம். ஏற்கனவே 1880-ஆம் ஆண்டில் அந்தத் தோட்டத்தில் 20 தமிழர் குடும்பங்கள் இருந்தன. 140 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த நிகழ்ச்சி.

1898-ஆம் ஆண்டில் ரப்பர் கன்றுகள் நடப்பட்டன. ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் 1904-ஆம் ஆண்டில் முதல் ரப்பர் மரம் சீவப்பட்டது. வருடத்தைக் கவனியுங்கள். 1896.

இந்தத் தோட்டத்தின் பரப்பளவு 709 ஏக்கர். 1898-ஆம் ஆண்டில் 54 ஏக்கர் பரப்பளவில் ரப்பர் பயிரிடப்பட்டது. 1905-ஆம் ஆண்டில் 38 ஏக்கர். 1906-ஆம் ஆண்டில் 200 ஏக்கர். 1907-ஆம் ஆண்டில் 329 ஏக்கர்.

மேலும் 90 ஏக்கர் காடுகள் அழிக்கப் பட்டன. காஜாங் செமினி தோட்டத்திற்கு வந்த மூத்த தமிழர்கள் தான் செமினி பாசா காடுகளை அழித்தார்கள். செம்மண் சாலைகளை அமைத்தார்கள். செமினி ரப்பர் தோட்டத்தை உருவாக்கினார்கள். அந்தத் தோட்டத்தில் 1907-ஆம் ஆண்டில் மொத்தம் 81,162 மரங்கள் இருந்தன.

1906 ஜூன் மாதத்தில் 4,635 பவுண்டு ரப்பர் அறுவடை செய்யப்பட்டது. இந்த ரப்பர் இலங்கையில் விற்கப்பட்டது. அதே 1906-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் 300 ஏக்கர் பரப்பளவில் 400 பீக்கள் காபி உற்பத்தி செய்யப்பட்டது.

இந்தத் தோட்டம் இலங்கையில் இருந்த ஆசிய ரப்பர் தயாரிப்பு நிறுவனத்திற்குச் சொந்தமானது (Asiatic Rubber Produce Company, Ltd., of Ceylon).

அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள்: ஜி. எச். ஆல்ஸ்டன் (G. H. Alston); ஈ.எம். ஷாட்பாக் (E. M. Shatfock); ஆர்.எப்.எஸ். ஹார்டி (R. F. S. Hardy); சி. டி. ரோட்ச் (C. D. Rotch); செமினி தோட்ட நிர்வாகி: மிட்சல் (C. Mitchell).

முதலில் இந்தத் தோட்டம் லா பூன் டிட் (Lau Boon Tit) என்பவருக்குச் சொந்தமானது. அவரிடம் இருந்து 1906 ஜனவரியில் வாங்கப்பட்டது.

இந்தத் தோட்டம் காஜாங் இரயில் நிலையத்தில் இருந்து ஏழு மைல் தொலைவிலும்;  செமினி கிராமத்தில் இருந்து ஒரு மைல் தொலைவிலும் அமைந்து இருந்தது. இதற்கு இருபத்தி இரண்டாம் கட்டை தோட்டம் என்றும் உள்ளது. தோட்டத்திற்குள் மாட்டு வண்டிகளில் தான் செல்ல முடியும்.

1920-ஆம் ஆண்டில் 120 குடும்பங்கள் நிரந்தரமாக அங்கேயே தங்கி விட்டன. 30 குடும்பங்கள் பக்கத்துத் தோட்டங்களுக்குப் புலம் பெயர்ந்தன. ஒரு கேள்வி. 140 ஆண்டுகளுக்கு முன்னால் செமினி காட்டை அழித்துச் செப்பனிட்டவர்களை வந்தேறிகள் என்று அழைக்கலாமா? அப்படி அழைப்பதற்கு ஒரு விவஸ்தை வேண்டாமா?

மலாயா தமிழர்கள் இங்கு வந்து 100 ஆண்டுகளுக்குப் பின்னர் பக்கத்து நாட்டில் இருந்து கப்பலேறி வந்த பட்டி தொட்டி மட்டும் ஒரு நாட்டின் பெரிதான மந்திரி பதவியை எல்லாம் வகிக்க முடியும். மண்ணின் மைண்டர் ஆக முடியும்.

ஆனால் இவர்களுக்கு முன்னால் வந்த தமிழர்களுக்கு எல்லாம் வந்தேறிகள் எனும் பட்டயம். மனசாட்சி இல்லாதவர்களைப் பார்த்து மனம் மௌனமாய் அழுகின்றது.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
10.03.2021

சான்றுகள்:
Source:

1. The British and rubber in Malaya, c1890-1940; James Hagan. University of Wollongong.

2. Twentieth century impressions of British Malaya - its history, people, commerce, industries, and resources. ARNOLD WRIGHT (London). LLOYD'S GREATER BRITAIN PUBLISHING COMPANY, LTD.,
1908.

3. Sandhu. K.S (2010). Indian in Malaya: Some Aspects of Their Immigration and Settlement (1786 - 1957), Mexico City: Cambridge University Press.

4. Table - 3.2 Indian Labour Immigration to Malaysia (1844-1941)